Thursday, June 25, 2026

“விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” – நூல் அறிமுகம்

“இலக்கியத்தில் உள்ள அறிவியல் சுரங்கம்“

MJ பிரபாகர், 25/06/2026



 முனைவர் தேமொழி எழுதிய 
“விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” – நூல் அறிமுகம்


எழுத்தாளர் தேமொழி எழுதிய “விண்ணை நோக்கி ~ இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” என்ற நூல், தமிழ் இலக்கிய உலகில் பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளை வெளிக்கொணரும் ஒரு மிக முக்கியமான ஆய்வு நூலாகும்.

பண்டைய தமிழர்கள் வெறும் கற்பனையிலும் அழகியலிலும் மட்டும் திளைக்காமல், மிகச் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரிதலோடு வாழ்ந்தார்கள் என்பதை இந்நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.

23 அத்தியாயங்களை கொண்ட இந்நூல் சங்க இலக்கியங்கள் (புறநானூறு, பரிபாடல், அகநானூறு போன்றவை) மற்றும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களில் பொதிந்துள்ள வானியல், புவியியல், உயிரியல் சார்ந்த அறிவியல் உண்மைகளை இன்றைய நவீன அறிவியலோடு ஒப்பிட்டு ஆராய்கிறது. முக்கியமாக, விண்வெளி மற்றும் பிரபஞ்சம் குறித்த தமிழர்களின் பார்வையை பிரதானமாக பதிவு செய்து உள்ளார்.

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்தும், வானியல் மற்றும் கோள்களான சூரியன், சந்திரன், விண்மீன்கள் பற்றிய தமிழர்களின் துல்லியமான கணிப்பு பற்றியும், தொல்காப்பியரின் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினப் பாகுபாடு குறித்தும், நில அமைப்பைப் பொறுத்து ஐந்திணைகளாகப் பிரித்த தமிழரின் சூழலியல் அறிவு குறித்தும் விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார்.

ஆசிரியர் தேமொழி, பழந்தமிழ் பாடல்களில் மறைந்திருக்கும் நவீன அறிவியல் கூறுகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
உலகம் முதலில் பேரொலியுடன் தோன்றி, பின் பெருங்காற்று, நெருப்புக்கோளம், தொடர்மழை என மாறி, இறுதியில் நிலம் உருவானதை விளக்குகிறது. இது இன்றைய நவீன அறிவியல் கூறும் புவித் தோற்றக் கொள்கையோடு அப்படியே ஒத்துப் போவதை நூல் சுட்டிக்காட்டுகிறது.

தானாக ஒளிரும் விண்மீன்கள்: புறநானூற்றில் விண்மீன்களை ‘நாண்மீன்’ (தானாக ஒளிர்பவை – Stars) என்றும், கோள்களை ‘கோண்மீன்’ (ஒளியைப் பிரதிபலிப்பவை – Planets) என்றும் பிரித்தறிந்துள்ளனர். எந்தவொரு நவீனத் தொலைநோக்கியும் இல்லாத காலத்தில் தமிழர்கள் ஒளியின் தன்மையை உணர்ந்திருந்ததை ஆசிரியர் வியந்து பாராட்டுகிறார்.

சூரியனின் இயக்கம், காற்றோட்டத் திசை மற்றும் எவ்வித ஆதாரமும் இன்றி ஆகாயத்தில் பூமி மிதக்கும் தன்மை போன்றவற்றைச் சங்கப் புலவர்கள் அளந்தறிந்தவர்கள் போலப் பாடியுள்ளதை யும் இந்நூல் விளக்குகிறது.

நூலாசிரியர் வெறும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாமல், ஒவ்வொரு அறிவியல் கூற்றுக்கும் தகுந்த சங்கப் பாடல் வரிகளையும், அதற்கு இணையான நவீன அறிவியல் விதிகளையும் பக்கபலமாக வைத்துள்ளார். கடினமான அறிவியல் கோட்பாடுகளையும், பழந்தமிழ் இலக்கியச் சொற்களையும் சாமானிய வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் விளக்கியுள்ளார்.

மேலை நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் உயிரியல் மற்றும் வானியலில் சிறந்திருந்தனர் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது இந்நூல்.

மேலைநாட்டு அறிவியல் வரலாற்றோடு இன்னும் சற்று ஆழமான ஒப்பீட்டு ஆய்வை (Comparative Study) வழங்கியிருந்தால், இந்நூலின் தரம் சர்வதேச அளவில் இன்னும் உயர்ந்திருக்கும்.

எழுத்தாளர் தேமொழியின் “விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” என்ற நூல், ‘தமிழ் இலக்கியம் என்பது வெறும் ‘கற்பனைக் கதம்பம்’ அல்ல, அது ‘அறிவியல் சுரங்கம்’ என்பதை நிரூபிக்கும் ஒரு காலக்கண்ணாடி. தமிழ் ஆர்வலர்கள் மட்டுமன்றி, அறிவியல் மாணவர்களும் படித்துப் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு சிறந்த படைப்பு இது.


நூலின் விவரங்கள்:
நூலின் பெயர்: விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
ஆசிரியர்: முனைவர் தேமொழி
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்
விலை: ₹.180.00 மட்டுமே 
அறிமுகம் எழுதியவர்:  MJ பிரபாகர்

நன்றி : 
https://bookday.in/prof-themozhis-vinnai-nokki-ilakkiyathil-ulla-ariviyal-seithikal-tamil-book-reviewed-by-mj-prabakar/





# நூலறிமுகம், #MJ பிரபாகர், #bookday, #Themozhi, #அறிவியல், #அறிவியல்நூல்



Saturday, June 13, 2026

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் 


"திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்" என்ற கோரிக்கை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களால் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நீண்ட நெடிய கோரிக்கையாகும். 

கோரிக்கையை முன்வைத்தோர்:
பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்: 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், இலக்கிய மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திருவள்ளுவர் தினம் போன்ற முக்கிய நாட்களில் இக்கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. 

அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுகள்: 
கடந்த பல ஆண்டுகளாகவே தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இக்கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  கட்சி பாகுபாடின்றி தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் எனப் பலரும் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வக் கடிதங்கள் மூலமாகவும், அமைச்சரவை தீர்மானங்கள் மூலமாகவும் இக்கோரிக்கையை வைத்துள்ளனர். அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தில்லி நிதி ஆயோக் கூட்டத்தில், திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று மத்திய அரசை நேரிடையாக 2026இல் வலியுறுத்தியுள்ளார்.  

புகழ்முகங்கள் மற்றும் அறிஞர்கள்: 
உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து போன்ற பல இலக்கிய ஆளுமைகளும், அறிஞர்களும் பல்வேறு காலக்கட்டங்களில் பிரதமர்களுக்குக் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். 

நீதிமன்றப் பார்வை: 
தனிநபர் சிலர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்துள்ளனர். இருப்பினும், இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியாது எனக்கூறி அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தாலும், அது இந்திய அளவிலான பன்மொழி பண்பாட்டுச் சூழலால் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இருப்பினும் அதற்கான சிறப்புத் தகுதிகள் மறுக்க முடியாதவை. 

திருக்குறள் "உலகப் பொதுமறை" என்று அழைக்கப்படுவதற்கு அதன் உலகளாவிய, காலத்தைக் கடந்த மற்றும் மதச்சார்பற்ற கருத்துக்களே முதன்மைக் காரணமாகும். மனித சமுதாயத்தின் வாழ்வியலுக்குத் தேவையான அறங்களை எவ்வித இனம், மத, குல, தேச வேறுபாடின்றிப் பொதுவான நோக்கில் இந்நூல் வழங்குகிறது. 

திருக்குறளின் உலகளாவிய முக்கியக் கருத்துக்களின் தொகுப்பு: 
1. பிறப்புரிமைச் சமத்துவம் -
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற குறள் மூலம் திருவள்ளுவர் மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்று அறிவுறுத்தினார்.  இனம், குலம், பிறப்பிடத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதை விடவும், அவர்களின் செயல்களின் சிறப்பே அவர்களை உயர்த்துகிறது என்று சமத்துவக் கொள்கையை அன்றே வலியுறுத்தினார்.

2. பகுத்தறிவு மற்றும் அறிவியல் பார்வை -
 "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"  என்பதன் வழியாக எதைப்பற்றியும் எவர் கூறினாலும், அதை அப்படியே ஏற்காமல் அதன் உண்மையான அர்த்தத்தை ஆராய்ந்து அறிவதே உண்மையான அறிவு என்கிறார்.  இந்தச் சிந்தனை நவீனக் காலத்தின் அறிவியல் பூர்வமான மற்றும் பகுத்தறிவுப் பார்வைக்கு மிக நெருக்கமானதாகும். 

3. மதச்சார்பின்மை மற்றும் பொதுமைத் தன்மை - 
திருக்குறள் எங்கும் எந்த ஒரு குறிப்பிட்ட கடவுளின் பெயரையோ, மதக் கோட்பாட்டையோ, வழிபாட்டு முறையையோ குறிப்பிடவில்லை. கடவுளை ஒரு பொதுவான பேராற்றலாகவும், "அறவாழி அந்தணன்" (அறக்கடலாக விளங்கும் இறைவன்) என்றும் மட்டுமே உருவகப்படுத்துகிறார்.  இதனால், உலகிலுள்ள அனைத்து மதத்தினரும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் கூடத் திருக்குறளைத் தங்களுக்குரிய அறநூலாக ஏற்க முடிகிறது. 

4. உலகளாவிய நற்பண்புகள் - 
வள்ளுவர் அன்புடைமை மற்றும் ஒழுக்கம் ஆகியனவற்றை மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமாக அன்பை முன்னிறுத்துகிறார். ஒழுக்கமே ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானதாகக் கருதப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.  அத்துடன்; துன்பம் தராமை /இன்னா செய்யாமை(அகிம்சை) என்ற நல்லொழுக்கத்தை, தனக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் திரும்பத் துன்பம் செய்யாமல், அவர்களுக்கு நன்மையே செய்வதை உலகளாவிய வகையில் ஏற்கக்கூடிய நெறியாக வள்ளுவர் போதிக்கிறார். 

5. சிறந்த மேலாண்மை மற்றும் அரசியல் கோட்பாடுகள் - 
மக்களுக்கு நல்லாட்சி வழங்குதல் குறித்தும் குறள் வலியுறுத்துகிறது.  ஒரு நாட்டின் தலைவர் எப்படிக் குடிமக்களைக் காக்க வேண்டும், எப்படி வரி வசூலிக்க வேண்டும், எப்படி நீதி வழங்க வேண்டும் என்பதை 'பொருட்பாலில்' மிகத் துல்லியமாக விளக்கியுள்ளார்.  கால மேலாண்மை, சுற்றந்தழால் மற்றும் நட்பு அதிகாரங்களில் இன்றைய பெருநிறுவனங்கள் மற்றும் நவீன மேலாண்மைக் கல்வி கற்பிக்கும் திட்டமிடல், தகுதியான ஆட்களைத் தேர்ந்தெடுத்தல், காலத்தை அறிதல் போன்ற உத்திகள் திருக்குறளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. 

உலக அறிஞர்களின் பார்வையில் திருக்குறள்:
மகாத்மா காந்தி: திருக்குறள் தனது ஆன்மாவைத் தொட்ட ஓர் உன்னதமான அறநூல் என்று குறிப்பிட்டுள்ளார். 

லியோ டால்ஸ்டாய்: வன்முறையற்ற "அகிம்சை" என்ற உயர்ந்த கருத்தைத் தான் ஜெர்மன் மொழி திருக்குறள் வாயிலாகவே அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

திருக்குறள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மனிதனே மனிதனுக்குக் கூறிய உன்னத அறிவுரையாக இருப்பதால், அது இன்றுவரை உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது. 



மின்தமிழ் 
ஜூன் 13, 2026 


 #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 




Sunday, May 31, 2026

சோழ மன்னன் செய்த ஆணவக்கொலை

சோழ மன்னன் செய்த ஆணவக்கொலை

 
விசாரணைக்கு உள்ளானவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை விசாரணைக்கு உள்ளாகும் பொழுதே கைதிகள் அனுபவிப்பதும் உண்டு. 

தமிழ் இலக்கியங்கள் வழியாக சுண்ணாம்புக் காளவாயில் போடுதல், கல்லைக் கட்டி கடலில் மூழ்கடித்தல், கழுவில் ஏற்றல், மாறுகால் மாறுகை வாங்கல், யானையின் காலால் இடறப்படுதல், கசையடி, பிரம்படி, நாடுகடத்தல், தூக்கிலிடுதல் போன்ற பற்பல தண்டனைகளை நாம் அறிந்துள்ளோம். சிற்பங்களாக தொல்லியல் தரவுகளாகவும் அவை கிடைத்து வருகின்றன. தண்டனைகள் எப்படிப்பட்டவை என்பதற்கு சாக்ரடீசுக்கு  நஞ்சு அருந்துமாறு கொடுக்கப்பட்ட தண்டனை, உலகம் உருண்டை என்று சொன்னதற்காக உயிருடன் எரிக்கப்பட்ட புரூனோ என்று வரலாறு முழுவதும் உலகம் முழுவதும் மனிதக் குலத்தில் பலகாலமாகக்  கொடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது பதிவாகியுள்ளது.  

சான்றுகள் இல்லை என்றே கூறப்பட்டாலும் மக்களிடையே பலகாலம் வழங்கப்படும் கதை அம்பிகாபதி அமராவதி காதல் கதை.  இக்கதையை  அக்காலத்தில் நிலவிய ஆணவக் கொலை என்று கருதப்பட வேண்டிய நிகழ்ச்சி எனலாம்.  வரலாற்றில் அறியப்படும் கதை மாந்தர்களை ஒட்டி வழங்கும்  இக்கதையின் காலம் கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.  சோழப்பேரரசன் மகள் இளவரசி அமராவதியும், கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன் புலவர் அம்பிகாபதியும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை ஏற்காத சோழ மன்னன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை கொடுக்கிறான். காதலன் மறைந்ததை அறிந்த அமராவதியும் உயிர் நீக்கினாள் என்பது இக்காதல் காப்பியத்தின் முடிவு.

அம்பிகாபதி-அமராவதி காதல் நாம் நன்கு அறியும் கதையாக, பாடலாக (கவிஞர் சே.ர.குமாரசாமி) , காப்பியமாக (பேராசிரியர் சுந்தர சண்முகனார்), நாடகமாக (மறைமலை அடிகள்), திரைப்படமாக (இளங்கோவன்) ஆகியோர்களால்  பல்வேறு வடிவங்களில் உயிர் பெற்றுள்ளது. இவற்றில் 'அமரன் அம்பிகாபதி' என்ற தலைப்பில் கவிஞர் சே.ர.குமாரசாமி பி. ஏ. (தேவி பதிப்பகம், 1956) எழுதியுள்ள நூலில் அம்பிகாபதியைக் குற்றவாளி என்று கூறிக் கொதித்து எழும் குலோத்துங்கச் சோழனின் ஆணையைப் பின்வரும் வரிகளில் குமாரசாமி விவரிக்கிறார்.


      "நடத்தையிலே தீயநெறி நச்சரவா யானான்!
      கடத்திச் சென்றேகுங்கள் ! காவலர்காள் ! ஓய்ந்திருக்கும்
      வாட்கு விருந்தாய் வழங்குங்கள்! போர்க்களிற்றின்
      தாட்கிடையே இன்னவனைத் தந்து நசுக்குங்கள்!  (70)
      தீங்கு புரிந்தென் திருவைக் கவர்ந்தவனை
      ஏங்குங் கடலுள் எறியுங்கள்! பண்புலவாக்
      கொச்சை வாழ்வேற்ற கொடியவனைக் கொண்டேகி
      உச்சிமலை நின்று உருட்டியுயிர் வாங்குங்கள் !
      தீராப் பசியுடைய தீய விலங்குகட்குச்
      சேரா விருந்தாய்ச் செலுத்துங்கள்! என்னாவி
      கண்டு தவழும் கரைகாணாப் பேருவகைக்
      கொண்டு மகிழ குறையெல்லாம் தான்விலகச்
      செய்க இவற்றுள் செயலொன்று!" என்றரசன்
      மெய்கனலே கொண்டெரிய மேவும் சினங்குமுற  (80)
      ஆங்கு கொதித்தெழுந்து ஆர்த்தான்! ...
                [அமரன் அம்பிகாபதி, சே.ர. குமாரசாமி]

 ஒருவரை எப்படி எல்லாம் கொல்லலாம் என்ற பட்டியல்தான் இது. வாளால் வெட்டிக் கொல்வது, யானைக் காலால் தலையை இடறுவது,  கடலில் மூழ்கடிப்பது, மலையிலிருந்து உருட்டுவது, விலங்குகளுக்கு இரையாக்குவது என்று வழக்கில் இருந்த தண்டனைகளைத் தனது பாடலில் சேர்த்துள்ளார்  குமாரசாமி.  குற்றம் புரிந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் கொடிய தண்டனையை வழங்குவதை ஏற்காத மனித நேயம் இக்காலத்தின் வளர்ச்சி. மரண தண்டனையைப் பெரும்பாலான நாடுகள் நீக்கிவிட்டன. சித்திரவதைகளையும் கட்டுக்குள் கொண்டு வருகின்றன. விஷவாயுக் கூடத்தில் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட யூதர்களின் மரணத்தை இன்றைய உலகில் ஒருவர் கூட ஏற்கமாட்டார்கள்.

      யாயும் ஞாயும் யாரா கியரோ
      எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
      யானும் நீயும் எவ்வழி அறிதும்
      செம்புலப் பெயல்நீர் போல
      அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
                  [குறுந்தொகை 40]
என்ற பாடலை வியந்து வியந்து போற்றுகிறது தமிழ் உலகம். அதே வேளையில், உயிர்களிடையே இயல்பாக எழும் காதல் உணர்வுகளுக்காக ஆணவக்  கொலைகள் இன்றும் தமிழ்நாட்டில், இந்தியாவில் நிகழ்த்தப்படுகின்றன என்ற உண்மை  நாம் எந்த அளவு மனித நேயத்தில் முன்னேறி உள்ளோம் என்று காட்டுகிறது.

 
நன்றி: தமிழணங்கு
ஜூன் 2026, பக்கம்: 3-5


#தமிழணங்கு, #சக்தி, #இலக்கியம், #அமரகாதல், #Themozhi 





Friday, May 1, 2026

புத்தரின் தாய் மாயாதேவி என்னும் "வேழத்திரு"(கஜலக்ஷ்மி)

புத்தரின் தாய் மாயாதேவி  என்னும் "வேழத்திரு"(கஜலக்ஷ்மி)



இந்தியாவில் தோன்றி இன்று உலகச் சமயமாகப் பரவியுள்ள புத்த சமயத்தின் தோற்றுநர் கௌதம புத்தரின் திருவுருவச் சிற்பங்களுக்கு இந்தியச் சிற்பவியலில் என்றும் தனி இடமும் வரலாறும் உண்டு. பிறநாடுகளில் உருவாக்கப்பட்ட புத்தரின் சிலைகளையும் படங்களையும் இணையம் வழியாக இன்று வாங்க இயலும், செயற்கை நுண்ணறிவுத் தளங்களும் அழகிய புத்தர் உருவப் படங்களை உருவாக்கித் தருகின்றன. இன்று புகழ்பெற்ற பல அயல்நாட்டு அருங்காட்சியகங்களில் எண்ணற்ற புத்தர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே புத்தருக்குத்தான் அதிகமான சிற்பங்கள் இருக்கின்றன. இந்நாட்களில் சமயச் சார்பின்றிப் பலர் இல்லங்களில் புத்தர் சிலைகள் உள்ளன.   இருப்பினும், பொது ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு./பொஆ.மு.) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவரும், இந்திய மெய்யியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியவருமான புத்தருக்கு ஓர் உருவம் கொடுக்கப்பட்டது பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே.

தொடக்கக்கால இந்தியச் சிற்பக் கலையில் (பொ. ஆ. ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்திரிக்கப்படவில்லை, மாறாக அவர் குறியீடுகளால்  மட்டுமே சித்திரிக்கப்பட்டுள்ளார். அதற்கும் முன்னரே பௌத்தச் சமயப் பொது வழிபாட்டிற்கான சைத்தியங்களும்; பௌத்தத் துறவிகள் தங்குவதற்கும், தவமியற்றுதற்கும், கற்பதற்குமான விகாரைகளும்; பரிநிர்வாணம் அடைந்த புத்தரின் நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்து வழிபடும் ஸ்தூபிகளும் இருந்தன. குறிப்பாக இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் மாமன்னர் அசோகரால் (268 - 232)  அமைக்கப்பட்டது சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபி. இது உலகப் புகழ்பெற்றவகையில், யுனெஸ்கோவால் உலகின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தருடைய எலும்புகள் வைக்கப்பட்டுள்ள காரணத்தால், உலகின் பல நாடுகளில் இருக்கும் பௌத்தர்களும் பௌத்த துறவிகளும்  வழிபட வரும் சாஞ்சி ஸ்தூபி இந்தியாவின் தொன்மையான ஒரு கல் கட்டுமானம் ஆகும். இந்த சாஞ்சி ஸ்தூபி அழகிய சிற்ப உருவங்களைக் கொண்டது. சிற்பங்கள் புத்த சமய வரலாற்றைக் கூறுவது என்றாலும் இவற்றில் புத்தர் மனித உருவில் காட்டப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெளத்த சிற்பக்கலையின் தொடக்கக் காலத்தில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காட்சிகளாகப் பெரும்பாலும் 4 காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். புத்தர் வாழ்வின் வரலாற்றுக் காட்சிகள்: (1) புத்தரின் பிறப்பு, (2) புத்தர் ஞானம் பெறல், (3) அவர் முதல் அறவுரை நிகழ்த்துதல், (4) புத்தர் பரிநிர்வாணம் அடைதல்.

1. புத்தரின் பிறப்பு:
மகப்பேற்றுக்காகப் புத்தரின் தாய் மாயாதேவி தனது தந்தையின் நாட்டிற்குச் செல்லும் வழியில் லும்பினி (நேபாளத்தில் உள்ளது) என்ற இடத்துப் பூங்காவில் புத்தர் என்று அறியப்படும் சித்தார்த்த கௌதமர் என்ற குழந்தையைப் பெற்றெடுக்கிறார். மாயாதேவி சால் மரத்தின் கிளையை வலது கரத்தால் பிடித்திருக்க அவர் அருகே அவரது சகோதரியும் தோழிகளும் இருக்க, அவரது வயிற்றுப்பகுதியின் வலது புறத்திலிருந்து புத்தர் பிறப்பதாகவும் இந்திரன் அக்குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொள்வதாகவும் இக்காட்சி பிற்காலச் சிற்பங்களில் காட்டப்படும்.

2. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெறல்:
உலக வாழ்வின் உண்மையை அறிந்து  கொள்ள விரும்பி அரச வாழ்வைத் துறந்த சித்தார்த்தர், பல ஆண்டுகள் உண்மையைத் தேடி அலைந்து திரிந்த பின்னர் கயாவில் உள்ள ஓர் அரச மரத்தடியில் உண்ணா நோன்பை மேற்கொண்டு கடுந்தவம் செய்து ஞானம் பெறும் காட்சி.

3. புத்தர் சாரநாத்தில் நிகழ்த்திய முதல் உரை:
ஞானம் பெற்ற புத்தர் தனது ஐந்து சீடர்களுக்கு வாரணாசியிலுள்ள சாரநாத் மான்கள் பூங்காவில் தனது முதல் அறவுரையை வழங்கும் காட்சி.

4. புத்தரின் பரிநிர்வாணம் (மறைவு):
தனது 80ஆவது வயதில், உணவு ஒவ்வாமை காரணமாக குஷிநகரின் ஒரு மரத்தடியில் வடக்கு நோக்கித் தலைவைத்துப் படுத்திருந்த புத்தர் மறைந்த பின் அவருடைய மாணாக்கர்கள் துயர் தாளாமல் சோகத்தில் துவண்டு அரற்றும் காட்சி.

புத்தரின் வரலாற்றைக் குறிக்கும் இந்த அடிப்படை நான்கு காட்சிகள் சிற்பங்களில் பெரும்பான்மையாக வடிக்கப்பட்டாலும், பின்னர் ஆறு எட்டு என்று வாழக்கைநிலைக் காட்சிகளின் எண்ணிக்கை வளர்ந்தது [1].

புத்தரின் தொடக்கக்காலக் குறியீட்டுச் சித்திரிப்புகள்:
பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் பௌத்தச் சிற்பக் காட்சிகளில் மனித உருவில் புத்தரைக் காட்சிப்படுத்துவது அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமையாது என்ற கோணத்தில் இக்காட்சிகளில் குறியீட்டால் (aniconic symbol) மட்டுமே புத்தர் குறிக்கப்பட்டார். ஒரு காலியான இருக்கை அல்லது அரியணை புத்தரின் குறியீடாகக் கொள்ளப்பட்டது. அரியணையின்கீழ் பாதச்சுவடுகளும் இருப்பதுண்டு.  

மேற்காணும் புத்தரின் வாழ்க்கையைக் குறிக்கும் முதன்மையான நான்கு நிலைகளும் அசோகர் உருவாக்கிய சாஞ்சி  ஸ்தூபி  தோரணவாயில்களில் குறியீடுகளாகப் புத்தரைக் காட்டும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.  புத்தர் வாழ்வைக் குறிக்கும் சிற்பங்களில் 1. யானைகள் நீராட்டும் புத்தரின் தாய் மாயாதேவி புத்தரின் பிறப்பின் குறியீடாகவும்,  2. புத்தர் கயாவில் ஞானம் பெறும் காட்சியில் போதி மரம் குறியீடாகவும், 3. சாரநாத்தில் முதல் உரை வழங்கிய காட்சியில் தர்மச்சக்கரம் குறியீடாகவும், 4. பரிநிர்வாணம் பெற்ற காட்சியில் ஸ்தூபி குறியீடாகவும் காட்டப்பட்டுள்ளது.

இக்குறியீடுகள் தவிர்த்து, அவரது பிச்சை ஏற்கும் திருவோடு புத்தரின் குறியீடாகவும், அவர் சித்தார்த்தர் என்ற இளவரசராக அரண்மனையை விட்டுக் குதிரைமீது வெளியேறுகையில் அமர்ந்திருப்பவர் இல்லாது வெண்கொற்றக்குடை தாங்கிச் செல்லும் குதிரை ஒன்று (சித்தார்த்தரின் குதிரை கந்தகா) புத்தரின் குறியீடாகவும், வனவாசம் பாதச் சுவடுகள் குறியீடாகவும் சாஞ்சி ஸ்தூபி கிழக்கு வாயில் அபிநிஷ்கர்மானா புடைப்புச் சிற்பத் தொகுப்பில் காணப்பெறுகிறது.


புத்தர் பிறப்பைக் குறிக்கத் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் புத்தரின் தாய் மாயாதேவி மீது அவருக்கு இருபுறமும் நிற்கும் இரு யானைகள் குடத்தின் வழியாக நீர்  ஊற்றுவது போலக்  காட்டப்படும் என்கிறார்கள்  பௌத்த சிற்ப ஆய்வாளர்கள். [1]   யானைகள்  நீராட்டும் பெண்மணியின் இவ்வுருவம் வைதீகம், சமணம் போன்ற பிற சமயங்களிலும் உள்வாங்கப்பட்டு பிற்காலத்தில் கஜலக்ஷ்மி என்று மாற்றப்பட்டது.


புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல், முதல் உரை நிகழ்த்துதல், இறப்பு ஆகிய நான்கு வாழ்க்கை நிகழ்வுகளிலும் புத்தர் குறியீடாகக் காட்டப்பட்ட நிலையையும்;  பிற்காலத்து கனிஷ்கர் கால மகாயானப் புத்த சமயத்திற்குப் பிறகு புத்தர் உருவத் தோற்றம் சித்திரிக்கப்பட்டதையும் ஒப்பீட்டுப் படங்களின் மூலம் அறியலாம். உத்திரப்பிரதேசம் மதுரா பகுதியில் பொ.ஆ. ஒன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சக அரசு காலத்தில் வடிக்கப்பட்ட தோரணவாயில் சிற்பங்களில் புத்தரின் நான்கு வாழ்க்கை நிலைக் காட்சியிலும் அவர்;  முறையே திருவோடு, போதிமரம், தர்மச்சக்கரம், ஸ்தூபி எனக் குறியீடுகளாகக் காட்டப்பட்டுள்ளார். பிற்காலக் காந்தாரப்பகுதிச் சிற்பங்களில் இதே காட்சிகளில் புத்தருக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டர் படையெடுப்பிற்குப் பின்னர் வடமேற்கு  இந்தியப் பகுதியில் தோன்றிய சிற்பக்கலை காந்தாரச் சிற்பக்கலை என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் புத்தரால் போதிக்கப்பட்ட அறவழியும் அசோகரால் பரப்பப் பட்டதுமான புத்த சமயம் ஹினயானம் (தேரவாத பௌத்தப் பிரிவு) பின்பற்றப்பட்டது. பின்னர், மகாயானம் என்ற புதிய பிரிவு புத்த சமயத்தில் தோன்றுகிறது. மௌரியர், சாகர், பார்த்தியர் என்ற பல அரசுகளின் ஆட்சியின்கீழ் தொடர்ந்த காந்தாரம் ஒன்றாம் நூற்றாண்டில் குஷாணப் பேரரசின் ஆட்சியின்கீழ் வருகிறது. மகாயானப் பிரிவைப் பின்பற்றியவரும் குஷாண அரசர்களில் புகழ்பெற்றவருமான கனிஷ்கர் (பொ.ஆ. 78 -102) புத்த சமயத்தைப் பெரிதும் ஆதரித்தவர். இவர் நான்காம் பெளத்த மகாசங்கத்தைக் கூட்டி இரு பிரிவுகளையும் இணைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார். கனிஷ்கர் காலத்தில்தான் மகாயானப் புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது. இக்காலத்திலிருந்து புத்தர் கடவுளாக வணங்கப்பட்டார். சடங்குகளும், மலர் தூவுதல், தூபம் காட்டி வழிபடும் முறைகளும், புத்த வழிபாடுகளில் இடம் பெறத் துவங்குகின்றன. காந்தாரப் பகுதியில் கனிஷ்கரின் காலம் தொடங்கும்வரை புத்த வடிவங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை.

பௌத்த மூலநூல்கள் எதிலும் புத்தரின் உருவச் சித்திரிப்பு பற்றிய குறிப்புகள் இல்லை என்பதையும் புத்தரின் திருவுருவத் தோற்றம் உருவாக்கப்பட்ட வரலாறு இந்தியச் சிற்பவியல் ஆய்வில் மிக முக்கியமான இடம் பெற்ற ஆய்வு என்பதையும் ஆனந்த குமாரசுவாமி அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அறிய முடியும். வழிபாட்டிற்காக முதன் முதலில் உருவம் கொடுக்கப்பட்டவர் புத்தர்.  ஆரம்பக்கால இந்தியப் புத்தர் உருவங்கள், அவற்றின் காலம் எதுவாக இருந்தாலும் காந்தாரப் புத்தச் சிற்ப வகைகளை ஒத்திருக்கும் என்கிறார் ஆனந்த குமாரசுவாமி. வடமேற்கு இந்தியாவின் காந்தாரம் பகுதியில் உருவாக்கப்பட்ட காந்தாரச் சிற்பங்களில் பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்துதான் புத்தரின் உருவங்கள் கிடைக்கப்பெறுகின்றன. காந்தாரத்தின் கிரேக்க-பௌத்த கலை (Greco-Buddhist art) அல்லது ஹெலனிஸ்டிக் கலை (Hellenistic art/கிரேக்க கலை) பாணிகளில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற புத்த வடிவங்களைக் காந்தாரப் பகுதியில் காணமுடிகிறது. ஹெலினிஸ்டிக் அப்பல்லோவின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு கிரேக்கக் கலைஞர்கள் புத்தரின் முதல் வடிவங்களை இந்தியப் புரவலர்களுக்காக உருவாக்கினார்கள் [2].

வழிபாட்டிற்காக உருவம் கொடுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் சமயப் பூசல்கள் காரணமாக அவமதிக்கப்படுவதும் சிதைக்கப்படுவதும் பிற்காலக் கதை.


அடிக்குறிப்புகள்:
1.The Origin of the Buddha Image, Ananda K. Coomar-aswamy, The Art Bulletin, Vol. 9, No. 4 (Jun., 1927), pp.287-329 (44 pages), https://www.jstor.org/stable/3046550 &https:/|doi.org/10.2307/3046550

2. The Art of Gandhara in the Metropolitan Museumof Art, Kurt A. Behrendt, Metropolitan Museum of Art (NewYork, N.Y.), 2007 https://resources.metmuseum.org/resources/metpublications/pdf/The_Art_of_Gandhara_in_The Metropoli-tan_Museum_of_Art.pdf


#பௌத்தம், #Themozhi 


Monday, April 27, 2026

அம்பிகாபதி காதல் காப்பியம் வழங்கும் அஷ்டோத்திர சத நாமாவளி

அம்பிகாபதி காதல் காப்பியம் வழங்கும் அஷ்டோத்திர சத நாமாவளி


இந்திய ஆன்மீகவியலில் 108 என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அது ஒரு புனிதமான எண்ணாகக் கருதப்பட்டு அதற்காகப் பற்பல விளக்கங்களும் கொடுக்கப்படுவதுண்டு. இக்காலத்தில் இந்த எண்ணுக்கான காரணத்தை அறிவியலுடன் வானியலுடன் இணைக்கும் முயற்சியும் இந்த விளக்கங்களில் காணப்படும்.  நூற்றெட்டு என்ற எண்ணுக்கான முக்கியத்துவம் இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் என இந்திய மண்ணின் சமயங்கள் அனைத்திலுமே இருக்கிறது.  ஒளவையார் அருளிய ஆத்திசூடியும் 108 அறிவுரைகளை  வழங்குவதைக் காணலாம். திருக்குறளிலும் காமத்துப்பால் அதிகாரங்கள் 25 என்பதைக் கணக்கில் கொள்ளாவிட்டால் அறம், பொருள் அதிகாரங்களின் எண்ணிக்கை 108 என்பது தற்செயலான ஒற்றுமை எனக் கருத இயலாது.

இந்திய வழிபாட்டு முறையில் அஷ்டோத்திர சத நாமாவளி என்பவை கடவுளரின் நூற்றெட்டு பெயர்களைக் கொண்டு போற்றும் ஒரு தொகுப்பாகும். இவை நூற்றெட்டுக் கடவுள் போற்றிகள் அல்லது 108 போற்றிகள் என்று தமிழில் குறிப்பிடப்படுவது வழக்கம்.   நாம ஆவளி என்பதற்குப் பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கடவுள் வழிபாட்டின் பொழுது இப்பெயர்களைக் கூறி பூசை செய்ய ஏதுவாக  நாம ஆவளி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக நாமறிந்த கடவுளர் அனைவருக்கும் அஷ்டோத்திர சத நாமாவளி என்னும் நூற்றெட்டுக் கடவுள் போற்றிகள் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக; முருகப் பெருமானை 108 திருநாமங்களால் போற்றி பாடுவது முருகன் அஷ்டோத்திர சத நாமாவளி எனப்படும்.  
    ஓம் ஸ்கந்தாய நம
    ஓம் குஹாய நம
    ஓம் ஷண்முகாய நம
என்ற முறையில் 'ஓம்' என்று தொடங்கி 'நம', 'நமக' என்று முடியும் வகையில் ஒவ்வொரு போற்றியும் அமையும். இணையத்தேடலில் எண்ணற்ற கடவுளர் மேல் பாடப்பட்ட எண்ணற்ற போற்றிகள் கிடைக்கின்றன.


புதுவையில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர் சுந்தர சண்முகனார், அவர் எழுதிய 'அம்பிகாபதி காதல் காப்பியம்' என்ற நூலின் 28ஆவது காதையான 'கடவுள் வழிபாட்டுக் காதை' பகுதியில் நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர்கள் கொண்ட போற்றி ஒன்று  எழுதியுள்ளார்.  புலவர் கம்பரின் மகன் அம்பிகாபதி  தன்னுடைய மகள் அமராவதியைக் காதலிப்பது அறிந்து வெகுண்டு சூழ்ச்சியாக அவனை ஒழிக்கத் திட்டமிடுகிறான் சோழ மன்னன் குலோத்துங்கன். அம்பிகாபதி  அகப்பாடல்கள் (காதல் பாடல்கள்) கலக்காமல் கடவுளை வாழ்த்தி கடவுள் மீது நூறு பாடல்களைப்  பாடினால் அமராவதியைத் திருமணம் செய்து கொள்ளலாம், தவறினால் மரணதண்டனை என்று சொல்கிறான். அதற்கு அம்பிகாபதியும் உடன்படுகிறான்.



ஆனால் அரசன் செய்யும் சூழ்ச்சியால் அம்பிகாபதி அம்பிகையின் மீது பாடிய பாடல்களின் தொகுப்பில்   ஒரு காதல் பாடலும் நுழைக்கப்படுகிறது. அம்பிகாபதி தோல்வியடைந்ததாகக் கூறி அவனைச் சிறையில் அடைத்துக் கொலை செய்யப்பட வேண்டிய நாளும் குறிக்கப்படுகிறது.  மகனின் உயிருக்காகக் கம்பர் வைக்கும் கோரிக்கை மன்னனால் மறுக்கப்படுகிறது. மன்னன் மனம் மாற வேண்டும் அம்பிகாபதி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகக் கம்பர் ஒரு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து கடவுளிடம் வேண்டுவதாகக் கடவுள் வழிபாட்டுக் காதை பகுதியில் ஒரு காட்சியை அமைக்கிறார் சுந்தர சண்முகனார். இக்காதையில் நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகள் மற்றும் குரவையாடல் (குரவைக்கூத்து) ஆகியன இடம் பெறுகின்றது.

இந்த நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகளில்  எந்த ஒரு கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவான  கடவுளின் பண்புகளைப் போற்றி பாடும் வகையில் அமைத்துள்ளார்.  மேலும் அவை தமிழிலக்கியங்களான கம்பராமாயணம், திருக்குறள், திருவாய்மொழி, தேவாரம், திருவாசகம், திருவருட்பா நூல்களில் இடம்பெறும் புகழ் பெற்ற வரிகளை நினைவூட்டும் விதமாக அவற்றை எடுத்தாண்டுள்ளார் என்பதால் இப்பகுதி சிறப்பாக அமைந்துள்ளது. அவை கீழே ஒப்பிட்டுக்  காட்டும் வகையில் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்மிகம் என்பதை வடமொழியுடன் இணைத்தே வாழ்வில் கடைப்பிடிக்கும் தமிழர்கள் இந்த நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகளைச் சிறப்பு என்று கருதினாலும் வழிப்பாட்டில் நடைமுறைப் படுத்த விரும்ப மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.  


     உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
     நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா
     அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
     தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே
         — கம்பராமாயணம்

உலகம் யாவையும் உளவாக்கினோய் போற்றி
உலகம் யாவும் நிலைநிறுத்துவோய் போற்றி (13-14)
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]

திருக்குறள் கடவுள் வாழ்த்து ஒன்று முதல் ஒன்பது குறட்பாக்கள்;

ஆதி பகவனாம் ஐயா போற்றி
வாலறி வுடைய வள்ளால் போற்றி
மலர்மிசை ஏகிய மாண்பினோய் போற்றி
வேண்டுதல் வேண்டாமை யிலாதோய் போற்றி
இருவினை சேரா இறைவா போற்றி
பொறிவாயில் ஐந்தவித்த புலவனே போற்றி
தனக்குவமை யில்லாத் தண்ணியோய் போற்றி
அறவாழி அந்தண அண்ணலே போற்றி
எண்குணம் இயைந்த ஏந்தலே போற்றி (15-23)
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]

     உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
     மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
     அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
     துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
         — நம்மாழ்வார் திருவாய்மொழி 1

உயர்வற உயர்நலம் உடையோய் போற்றி
மயர்வற மதிநலம் அருள்வோய் போற்றி (35-36)
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]

     மாசில் வீணையும் மாலை மதியமும்
     வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
     மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
     ஈசன் எந்தை இணையடி நீழலே
         — திருநாவுக்கரசர் தேவாரம்
               5.090: ஐந்தாம்-திருமுறை

மாசில் வீணைநேர் மாண்பினோய் வணக்கம்
மாலை மதிய மானோய் வணக்கம்
வீசு தென்றலாய் விளங்குவோய் வணக்கம்
வீங்கிள வேனிலாய் விளைந்தோய் வணக்கம்
வண்டறை பொய்கையாய் வயங்குவோய் வணக்கம்
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]

அடுத்துள்ள திருவாசகம்  திருவருட்பா பாடல்களின் கருத்துகள் தொடர்ச்சியாக இல்லாது கடவுள் வழிபாட்டுக் காதையில் ஆங்காங்கே விரவிக் காணப்படுகிறது;
 
     வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
     ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
     கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
     வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
         — மாணிக்கவாசகர், திருவாசகம்

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
     குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
     உகந்ததண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
     மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
     ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே.
           — இராமலிங்க அடிகள், திருவருட்பா (4091)

______________________________


அம்பிகாபதி காதல் காப்பியம்; 28. கடவுள் வழிபாட்டுக் காதை , அடிகள் 13-120 இல் இடம்பெறும் நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகள்  
     —  பேராசிரியர் சுந்தர சண்முகனார்

உலகம் யாவையும் உளவாக்கினோய் போற்றி (13)
உலகம் யாவும் நிலைநிறுத்துவோய் போற்றி
ஆதி பகவனாம் ஐயா போற்றி
வாலறி வுடைய வள்ளால் போற்றி
மலர்மிசை ஏகிய மாண்பினோய் போற்றி
வேண்டுதல் வேண்டாமை யிலாதோய் போற்றி
இருவினை சேரா இறைவா போற்றி

பொறிவாயில் ஐந்தவித்த புலவனே போற்றி
தனக்குவமை யில்லாத் தண்ணியோய் போற்றி
அறவாழி அந்தண அண்ணலே போற்றி
எண்குணம் இயைந்த ஏந்தலே போற்றி
எங்கும் மிளிர்ந்தே இருப்போய் போற்றி

எல்லாம் செய்ய வல்லோய் போற்றி
யாதும் அறிந்த எந்தாய் போற்றி
தன்வயம் உடைய தகையோய் போற்றி
தூய்மை நிறைந்த தொல்லோய் போற்றி
இயற்கை உணர்வுடை எம்பிரான் போற்றி

முற்றும் உணர்ந்த முதல்வா போற்றி
இயல்பாய்க் கட்டுகள் இரிந்தோய் போற்றி
பேரரு ளுடைய பெரியோய் போற்றி
முடிவில் ஆற்றல் உடையோய் போற்றி
வரம்பில் இன்பம் வாய்த்தோய் போற்றி

உயர்வற உயர்நலம் உடையோய் போற்றி
மயர்வற மதிநலம் அருள்வோய் போற்றி
பிறப்பினை அறுத்திடும் பெரியோய் போற்றி
ஆராத இன்பம் அருள்வோய் போற்றி
எண்ணிறந் தெல்லை யிலாதோய் போற்றி

இல்லா இடமே இல்லோய் போற்றி
தாயிற் சிறந்த தன்மையோய் வணக்கம்
மாசற்ற ஒளியாய் மலர்ந்தோய் வணக்கம்
அன்பருக் கன்பனாய் அருளுவோய் வணக்கம்
நோக்கரிய நுண்ணிய பொருளே வணக்கம்

போக்கும் வரவும் இலாதோய் வணக்கம்
அன்னையிற் சிறந்த அமிழ்தமே வணக்கம்
அனைத்து நுகர்வாயும் அமைந்தோய் வணக்கம்
பல்லுயி ரெல்லாம் பயின்றோய் வணக்கம்
வல்லிருள் ஓட்ட வல்லோய் வணக்கம்

அன்பு வலையில் அகப்படுவோய் வணக்கம்
சொற்பதங் கடந்த தொல்லோய் வணக்கம்
அணுவினுள் அணுவாய் அமைந்தோய் வணக்கம்
இயம்பரும் பெருமை இயைந்தோய் வணக்கம்
அரியதில் அரிய அருமையோய் வணக்கம்

மருவியெப் பொருளும் வளர்ப்போய் வணக்கம்
நூலுணர் வுணரா நுண்ணியோய் வணக்கம்
மேலொடு கீழாய் விரிந்தோய் வணக்கம்
தோற்றமும் முடிவும் இல்லோய் வணக்கம்
அச்சந் தவிர்க்கும் அருளோய் வணக்கம்

தொல்லைத் துன்பம் துடைப்போய் வணக்கம்
எய்ப்பினில் வைப்பாய் இருப்போய் வணக்கம்
பூவில் மணம்போல் பொலிவோய் வணக்கம்
விறகில் தீபோல் விளங்குவோய் வணக்கம்
பாலில் நெய்போல் படுவோய் வணக்கம்

ஒப்பிலா மணிபோல் உயர்ந்தோய் வணக்கம்
மணியில் ஒளியாய் மன்னியோய் வணக்கம்
மாசில் வீணைநேர் மாண்பினோய் வணக்கம்
மாலை மதிய மானோய் வணக்கம்
வீசு தென்றலாய் விளங்குவோய் வணக்கம்

வீங்கிள வேனிலாய் விளைந்தோய் வணக்கம்
வண்டறை பொய்கையாய் வயங்குவோய் வணக்கம்
அம்மை யப்பனாய் அமைந்தோய் போற்றி
அன்பில் விளைந்த அமிழ்தே போற்றி
என்பெலாம் உருக்கும் இன்பமே போற்றி

வானாகி நின்ற வலிமையோய் போற்றி
காலா யிருக்குங் கடவுளே போற்றி
நெருப்பா யுள்ள நெடியோய் போற்றி
நீரா யெங்கும் நிறைந்தோய் போற்றி
மண்ணா யமைந்த மன்னா போற்றி

ஊனாய் உயிராய் உற்றோய் போற்றி
விரிமலர்க் காவாய் விளங்குவோய் போற்றி
பயன்மர மாகிப் பழுத்தோய் போற்றி
மருந்தாம் மரமாய் மன்னினோய் போற்றி
உதவிடும் ஊருணி போன்றோய் போற்றி

கோடையைத் தணிக்கும் குளிர்மரமே போற்றி
வெய்யிலில் நிழலாய் விளங்குவோய் போற்றி
உயிருக் குயிராய் உற்றுளோய் போற்றி
உள்ளத் துள்ளே ஒளித்துளோய் போற்றி
முத்தொழில் புரியும் முதல்வா போற்றி

குறிஞ்சி மலையாய்க் குலவுவோய் வணக்கம்
முல்லைக் காடாய் முகிழ்த்தோய் வணக்கம்
மருத நாடாய் மன்னியோய் வணக்கம்
நெய்தல் நிலமாய் நிலவுவோய் வணக்கம்
கருமுகில் மழையாங் கடவுளே வணக்கம்

பரவையாங் கடலாய்ப் பரந்தோய் வணக்கம்
உருவாய் அருவாய் உற்றோய் வணக்கம்
பெறலரும் பெரும்பெயர் பெற்றோய் வணக்கம்
மணந்தரு மலராய் மலர்ந்தோய் வணக்கம்
இனிக்குங் கனியாய் இலங்குவோய் வணக்கம்

பருகும் நீராய்ப் பயப்போய் வணக்கம்
உண்ணும் உணவாய் உற்றோய் வணக்கம்
வறுமை போக்கும் வளமே வணக்கம்
வினையினை விலக்கும் விறலோய் வணக்கம்
பகையினைத் தவிர்க்கும் பண்பினோய் வணக்கம்

அனைத்து நன்மையும் ஆனோய் வணக்கம்
ஒழுங்கிலா தோரை ஒறுப்போய் வணக்கம்
அரும்பெரு மொழிகளாய் அமைந்தோய் வணக்கம்
நயந்தரு நூல்களாய் நயப்போய் வணக்கம்
பயன் தரும் பாக்களாய்ப் பயப்போய் வணக்கம்

ஏழிசை தாமாய் இலங்குவோய் வணக்கம்
இசையின் பயனாய் இயைந்தோய் வணக்கம்
ஒளிதரு ஞாயிறாய் ஒளிர்வோய் போற்றி
ஞாயிற் றொளியாய் நண்ணியோய் போற்றி
நிலவின் ஒளியாய் நிகழ்வோய் போற்றி

விண்மீன் தாமாய் விளங்குவோய் போற்றி
அளவில் கோள்களாய் ஆனோய் போற்றி
இயற்கைப் பொருளாய் இருப்போய் போற்றி
செயற்கை கடந்த செல்வா போற்றி
காலங் கடந்த கடவுளே போற்றி
புலவரைப் புரக்கும் புலவனே போற்றி (120)

----------

நன்றி: "சக்தி" பெண்ணிதழ்
(மே 2026,  பக்கம்  9-16)
https://archive.org/details/sakthi-2026-may/page/9/mode/2up



#சக்தி, #இலக்கியம், #அமரகாதல், #Themozhi 


Sunday, April 26, 2026

என் வரிகளும் இரவல் வரிகளும் - கவிதைகள்

என் வரிகளும் இரவல் வரிகளும் - கவிதைகள்

 (இத்தளத்தில் . . . )


என் வரிகள்:
✤ அன்பு அம்மாவிற்கு . . .
https://aintinai.blogspot.com/2012/01/blog-post.html

✤   கேளடி கண்மணி . . .
https://aintinai.blogspot.com/2014/02/blog-post.html

✤ பொதுவில் வைப்போம்
https://aintinai.blogspot.com/2013/03/blog-post.html

✤ பறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்?
https://aintinai.blogspot.com/2016/03/blog-post.html

✤ அன்னை சக்தி
https://aintinai.blogspot.com/2013/10/blog-post_5.html

✤ மீனாள் ஆளும் மதுரையிலே
https://aintinai.blogspot.com/2013/10/blog-post_24.html

✤ பண்டிகை தந்ததொரு பாடம்
https://aintinai.blogspot.com/2013/10/blog-post.html

✤ பொங்கல் பள்ளு
https://aintinai.blogspot.com/2014/01/blog-post.html

✤ சரியா? தவறா?
https://aintinai.blogspot.com/2013/12/blog-post_4.html

✤ அவளா? இவளா?
https://aintinai.blogspot.com/2013/06/blog-post_19.html

✤ கவிஞர் பிறந்தார்!!!
https://aintinai.blogspot.com/2013/12/blog-post.html

✤ காத்திருக்க வேணும்!
https://aintinai.blogspot.com/2012/12/blog-post.html

✤ அன்புநெறி தழைத்திடுக
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

✤ மனச்செல்வம்
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

✤ எல்லாமே பணம்
https://aintinai.blogspot.com/2015/12/blog-post_23.html

✤ போலி மதவாதிகள்
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

✤ வாஞ்சையால் அல்ல
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

✤ என்றுமே தாழ்வில்லை
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

✤ பட்டை நாமம்
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

✤ மறைப்போசைப் பாடல்
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

✤ குட்டியானை-பாப்பாப் பாட்டு
https://aintinai.blogspot.com/2017/03/blog-post.html

✤ கை வீசம்மா கை வீசு…இன்று-பாப்பாப் பாட்டு
https://aintinai.blogspot.com/2013/01/3.html

✤ வலியற்ற வாழ்வில்லை
https://aintinai.blogspot.com/2020/11/blog-post.html

✤ "வையச்சிற்றூர்"
https://aintinai.blogspot.com/2023/10/blog-post_13.html

✤ ஓயாது உழைத்த கலைஞர்
https://aintinai.blogspot.com/2018/08/blog-post.html

✤தோலுரித்த கலகத் திருமகன்
https://aintinai.blogspot.com/2019/09/blog-post.html

✤ அமைதிச் சக்கரம் சுழலும் என்றும் . . .
https://aintinai.blogspot.com/2024/10/blog-post_49.html

✤மனிதத்தின் பன்முகம்
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

இரவல் வரிகள்:
✤ கனவிலோர் கனவு (எட்கர் ஆலன் போ)
https://aintinai.blogspot.com/2015/11/blog-post_20.html

✤ கனவு காணுங்கள் … (லாங்க்ஸ்டன் ஹியூஸ்)
https://aintinai.blogspot.com/2015/02/blog-post.html

✤ தனிமையிலே … (எட்கர் ஆலன் போ)
https://aintinai.blogspot.com/2015/11/blog-post_13.html

✤ தனிமையிலே … (மாயா ஆஞ்சலூ)
https://aintinai.blogspot.com/2015/11/blog-post.html

✤ பெண்ணின் பணி (மாயா ஆஞ்சலூ)
https://aintinai.blogspot.com/2016/03/blog-post_9.html

✤ கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?  (மாயா ஆஞ்சலூ)
https://aintinai.blogspot.com/2014/07/blog-post_2.html

✤ பிரமிப்பூட்டும் பெண்மணி (மாயா ஆஞ்சலூ)
https://aintinai.blogspot.com/2014/05/blog-post_46.html

✤ நான் எழுவேன்!!!   (மாயா ஆஞ்சலூ)
https://aintinai.blogspot.com/2014/06/blog-post_4.html

✤ விழித்தெழட்டும் என் நாடு! (இரவீந்திரநாத் தாகூர்)
https://aintinai.blogspot.com/2016/01/blog-post.html

✤ விழித்தெழுங்கள் இந்தியர்களே! (முதியவரின் நம்பிக்கை) (ஆலன் அக்டோவியன் ஹ்யூம்)
https://aintinai.blogspot.com/2015/08/blog-post.html

✤ விழித்தெழுந்த இந்தியா
https://aintinai.blogspot.com/2022/02/blog-post.html

✤ முன்னேறுவாய், உன் பின் வரும் பாரதமே!!! (குல்சார்)
https://aintinai.blogspot.com/2013/08/blog-post.html

✤ பயணம் சென்றிராத பாதை
https://aintinai.blogspot.com/2017/11/blog-post.html

✤வானத்தைவிடப் பரந்து விரிந்தது (எமிலி டிக்கின்சன்)
https://aintinai.blogspot.com/2015/12/blog-post.html

✤ இறுதிப் பயணம் … (எமிலி டிக்கின்சன்)
https://aintinai.blogspot.com/2015/12/blog-post_9.html

✤ அவள் அழும்பொழுது … (ஷெல் சில்வர்ஸ்டீன்)
https://aintinai.blogspot.com/2015/11/blog-post_18.html

✤ நடைபாதையின் முடிவில் … (ஷெல் சில்வர்ஸ்டீன்)
https://aintinai.blogspot.com/2015/11/blog-post_27.html

✤ இருக்கட்டும் விடு … (பீட்டில்ஸ் - பால் மெக்கார்ட்டினி)
https://aintinai.blogspot.com/2017/07/blog-post.html

✤ நான் யார்? (கார்ல் சாண்ட்பர்க்)
https://aintinai.blogspot.com/2015/11/blog-post_25.html

✤புலியே! புலியே! (வில்லியம் ப்ளேக்)
https://aintinai.blogspot.com/2015/09/blog-post.html

✤ நச்சு மரமொன்று (வில்லியம் ப்ளேக்)
https://aintinai.blogspot.com/2015/08/blog-post_21.html

✤ கோம்பிப் பாட்டு (ஜேம்ஸ் மெர்ரிக்)
https://aintinai.blogspot.com/2016/07/blog-post.html

✤ நாமும் பார்ப்போம்
https://aintinai.blogspot.com/2020/01/blog-post.html

✤ கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி
https://aintinai.blogspot.com/2026/03/blog-post_11.html




#பதிவுத்தொகுப்பு, #கவிதை, #Themozhi