Saturday, August 22, 2020

தரை மேல் பிறப்பு தண்ணீரில் பிழைப்பு

தரை மேல் பிறப்பு தண்ணீரில் பிழைப்பு 



கடலோடி, நரசய்யா, [வாசகர் வட்டப் பிரசுரம் 34] வாசகர் வட்டம். சென்னை, பக்கங்கள்: 208, 1972—நூல் மதிப்புரை

நாடுகள் குறித்து சுற்றுலாப் பயணிகள் எழுதும் மேலோட்டமான கட்டுரைகளில் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன.  "நான் எழுதுவது பிரயாணக் கட்டுரை அல்ல. பிரயாணம் எனது பொழுது போக்கு அல்ல.  அது எனது தொழில்!" என்று கூறும் எழுத்தாளர் நரசய்யாவின் 'கடலோடி' என்ற தன்வரலாறு கூறும் நூல் பல சுவையான செய்திகளையும் தகவல்களையும் உள்ளடக்கிய, ஒரு மாலுமியின் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட படிக்க வேண்டிய பயணநூல்.  
 
"எண்ண  அலை ஓடையாக ஓடி , நினைவுக் கூட்டில் கலந்து விடுவது போல உய்யக்கொண்டான் கால்வாய் நதியில்  கலந்துவிடுகிறது. திருச்சி கோர்ட் வழியாக, ஆனைக்கட்டி மைதானத்திலிருந்த நாங்கள் உய்யக்  கொண்டானில் குளிக்கச் செல்வோம்" என்ற திருச்சி நகர இளமைக்கால வாழ்வு குறித்த மலரும் நினைவுகளைக் கொண்ட முன்னுரையுடன் நூல் துவங்குகிறது.  கடலோடி நரசய்யாவை நீர் தன்னிடம் ஈர்க்க நினைத்தது குறித்த அவரது முதல் நினைவு அது.  ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப்  போராடி மீட்கப்பட்டதை, நீருடன் அவருக்கு உண்டான தனது மறக்கமுடியாத முதல் உறவாக 'கடலோடி' (Memoirs of a Sailor) என்ற தலைப்பில் எழுதிய அவரது நூலில் நினைவுகூர்கிறார் திரு. நரசய்யா. 

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரும்,  ஒரிசா  மாநிலத்தில் 1932-ல் பிறந்தவருமான  கே. ஆர். அப்பல நரசய்யா அவர்களின் பள்ளிப்படிப்பின் தொடக்கம் முதல் அவர் வாழ்வு தமிழ்மண்ணுடன் இணைந்துவிட்டது.  மதுரையிலும் திருச்சியிலும் வளர்ந்து வாழ்ந்து படித்து, பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் இந்தியக் கடற்படையில் பொறியியல்  பயிற்சியாளராக  (Artificer Apprentice)  சேர்ந்து பொறியாளர் படிப்பையும் பயிற்சியையும் பெற்றார்.  கடற்படைப் பணி ஒப்பந்தம் முடிவுற்ற  பிறகுத்தனது 30ஆவது வயதில்  கடற்படையிலிருந்து விலகி வணிகக் கப்பல்துறையில் பணிக்கமர்ந்தார்.   ஆகவே, நரசய்யா பலவகைக் கப்பல்களிலும் பயணித்து பல்வேறு நாடுகளுக்கும் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர். மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்ற பொழுது கடற்படைக்குத் திரும்பி அதில் பங்கேற்ற பிறகு விசாகப்பட்டணம் துறை முகத்தில் கப்பல், கடலியல் பொறியாளராகப் பணியாற்றியவர்.  அக்கால கட்டத்தில்,  1972 ஆம் ஆண்டில் எழுதப் பெற்று,  வாசகர் வட்டப் பிரசுரம் (எண்: 34) வெளியீடாக வெளிவந்த நூல்தான்  "கடலோடி". இன்று கடலோடி என்பது  அவர் பெயருடன் இணைந்து 'கடலோடி நரசய்யா' என்றே அறியப்படுகிறார். 
 
கடலோடி (1972), எனத் தொடங்கிய நூல்கள் எழுதும் எழுத்துப் பயணம் நரசய்யா சிறுகதைகள் (1997), தீர்க்க ரேகைகள் (2003), சொல்லொணாப்பேறு (2004), கடல்வழி வணிகம் (2005), மதராசபட்டினம் (2006), துறைமுக வெற்றிச் சாதனை (2007), ஆலவாய் (2009), கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009), செம்புலப் பெயனீர் (2011) என்று மேலும் பல நூல்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  வரலாறு, தன்வரலாறு, ஆய்வுநூல்கள், சிறுகதைகள் என்று பல இலக்கிய வகைப் பிரிவிலும் தனது இலக்கியப் பங்களிப்பிற்காகத் தமிழக அரசின் விருதுகளும் பெற்றிருக்கிறார்.  நூல்கள் தவிர்த்து  இன்றுவரை தனது 80வயதுகளிலும், பற்பல சிறுகதைகளும், நூல் மதிப்புரைக் கட்டுரைகள் எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், இந்து நாளிதழ் என்று பல இதழ்களில் எழுதி அவரது இலக்கிய வாழ்வைத்  தொடர்வது நரசய்யா  என்ற எழுத்தாளரின் சிறப்பு.    

1963ஆம் ஆண்டில்  அவரது கடற்படைப் பணியிலிருந்து விலகி, புகைவண்டியில் சென்னை நோக்கித் திரும்புகையில் நரசய்யா தனது நினைவலைகளைப் பின்னோக்கிப் பயணிக்க வைப்பதில் அவரது தன்வரலாறு  முதல் அத்தியாயம் கடற்படையின் பிரிவின் நினைவாகத் தொடங்குகிறது.  கடற்படைப் பயிற்சியிலும் பணியிலும்  15 ஆண்டுகள் விருப்பும் வெறுப்புமாகக் கலவையான உணர்வுகளுடன் கலந்துவிட்ட தனது வாழ்வை,  "கடற்படை! விருப்புக்கும் வெறுப்புக்கும் மாறி மாறி இலக்கான படை.   பெருமையுடன் நான் கடற்படையில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளச் சில சமயங்களில் தயக்கம் அளித்த படை ! அதை விட்ட பின்பு, அதைப் பற்றியே நினைக்கத் தோற்றுவிக்கும் அன்பான படை !" என்று தனது கடற்படை வாழ்வைத் தன் வரலாறாக விவரிக்கிறார் நரசய்யா.  

லோனாவாலா என்ற ஊரில் கடுமையான பயிற்சி பெற்றது, தவற்றுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் தன்னை செப்பனிட்டது,  கப்பல் என்பது ஒரு  வீடு  - ஒரு குடும்பம் போன்றது என்ற கட்டுக்கோப்பைக் கற்றுக் கொண்டது, பயிற்சிக்காக இருந்த ஐரோப்பிய அதிகாரிகள் வேலை நேரத்தில் வெகு கறாராகவும் ஓய்வு நேரத்தில் பதவி வேறுபாடுகள் இன்றி அனைவரையும் மதித்து நல்ல நட்பாகவும்  பழகும் அவர்களது பண்பாடு,  இதற்கு மாறாக அதிகாரி, அதிகாரி அல்லாதோர் எனப் பதவி நிலை அடிப்படையில் தனக்குக் கீழ் பதவியில் இருப்போரிடம் நெருக்கமில்லாமல் அவர்களுக்கு மதிப்பு தராமல் எப்பொழுதும் அதிகாரத் தோரணையுடனே  நடந்து கொள்ளும் இந்திய  அதிகாரிகள் ஆகியவற்றைப் பயிற்சிக் கால அனுபவங்களாக விவரிக்கிறார். 

பயிற்சி முடிந்த பிறகு நாசகாரிக் கப்பலான  ஐ. என். எஸ் ராணா கப்பலில் தொடங்கிய அவரது  பணியும் பயிற்சி முறைகளும்  நாமும்  கடற்படையில் சேர்ந்தால் என்ன என்று நமக்கும் ஆர்வமூட்டும் வகையில் அமைந்துள்ளது.  நரசய்யாவின்  முதல் கடற்பயணத்தில் அவர்  எதிர்கொண்ட பயணப்பிணியால் ஏற்பட்ட வாட்டம், குழுவாகப் பணிபுரியும் மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டது, கடலில் விழுந்து மயிரிழையில் விபத்திலிருந்து உயிர் தப்பிய நிகழ்வு, இங்கிலாந்து ராணியின் கப்பலுக்குக் காவலாக அனுப்பப் பட்ட அவரது கப்பலின் பயணம், துறைமுகம் அடைந்தவுடன் கேளிக்கையிலும் சிற்றின்பத்திலும் நேரத்தைக் கழிக்க விரும்பும் மாலுமிகளின் மனப்பாங்கு, கள்ளக் கடத்தல் படகுகளை விரட்டிச்  சென்று பிடித்தது, புவி நடுக்காட்டைக் கப்பலில் கடக்கையில் கப்பலில்  நடக்கும் கொண்டாட்டம், 'மாலுமிகளின் சொர்க்கம்' எனக் கூறப்படும் செகல்ஸ் தீவு,   இந்தியாவின் முதல் விமானந்தாங்கிக் கப்பலான ஐ. என். எஸ். விக்ராந்த் கப்பலை  இந்தியாவிற்குக் கொண்டுவரும் பொறுப்பில் பங்கேற்றது,  பணியில் எதிர்பாரா வகையில் ஏற்பட்ட விபத்தினால் நடந்த உயிர் இழப்புகள் என்று ஒரு கடற்படை வாழ்க்கை அவர் எழுத்துமூலம் நாம் கண் முன்னே விரிகிறது. 

நூலின் முதல் ஏழு அத்தியாயங்களில்  அவரது கடற்படைப் பயிற்சி மற்றும் பணி பற்றி விவரிக்கப் படுகிறது.  அடுத்து வரும் 8ஆவது அத்தியாயம் வணிகக் கப்பல் வாழ்க்கையைக்  கூறுகிறது.  இவற்றுக்குப் பிறகு வரும் இரு அத்தியாயங்கள் இந்திய வரலாற்றில் தொன்று தொட்டு நடந்த வணிகக் கடற்பயணங்கள், அந்தக் கடல் வணிகத்தைக் காக்கும் நோக்கில் முடியாட்சி காலத்தில் நிகழ்த்தப் பட்ட கடற்படைப் போர்கள், அதன் மூலம் வணிகம் பரவல், சமயம் பரவல், இவற்றைக் காட்டும் இலக்கியம் மற்றும் தொல்லியல் தரவுகள்,  வணிகத்தில் தொன்றுதொட்டு தமிழர்கள் முன்னோடியாக இருந்த நிலை,  ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர் தங்கள்  வணிக மேம்பாட்டிற்காக இந்தியக் கப்பற் தொழிலையும்  கடல் வணிகத்தையும்  திட்டமிடப்பட்டு அழித்த வரலாறு  ஆகியவற்றை விவரிக்கிறது.  இறுதியாக வரும் 11ஆவது அத்தியாயம் நரசய்யா மீண்டும் கடற்படையில் இணைந்து  1971  டிசம்பர் மாதம்  நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்களித்த பகுதியைக் கொண்டிருக்கிறது.  இது அந்தப் போர்க்காலத்தில் இந்தியா-பாகிஸ்தான்-பங்களாதேஷ் நாடுகளின் அரசியல் நிகழ்வுகளையும் இந்திய இராணுவம் நடத்திய வெற்றிகரமான தாக்குதல்கள் குறித்த செய்திகளின் தொகுப்பாக அமைகிறது. 

இந்த நூலில் நமக்கு,  நாசகாரி கப்பல், விமானந்தாங்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் என்று கப்பல்கள் குறித்தும்;  
கப்பலின் இடது பக்கம் 'போர்ட்' (Port), வலது பக்கம் 'ஸ்டார் போர்ட்' (Star Board) என்பது போன்ற அடிப்படைத் தகவல்களும்; 
பயணப்பிணி வரவழைக்கும் நேரத்தில் அலை மேலும் கீழும் கப்பலை ஆட்டுவிப்பதற்கு  ரோலிங்(Rolling), பிட்ச்சிங் (Pitching), என்ற ஆட்டங்களும்,  இவையிரண்டும் ஒருசேர நிகழும் 'கார்க் ஸ்க்ரூ மோஷன்' என்பது போன்ற செய்திகளும்; 
விமானந்தாங்கிக் கப்பலில் விமானம் புறப்படும் செயல்முறை விளக்கம் என்ற கப்பல்கள் குறித்த அரிய அறிவியல் தொழில்நுட்பத்  தகவல்கள் மட்டுமல்ல;   
இவற்றுக்குச் சற்றும் சளைக்காமல், கடற்படையில் சுயநலமற்ற பணியாளர்கள், அங்கு வசதிகள் குறைவாக இருந்தாலும் குடும்பம் போலப் பழகும் முறை.  இதற்கு மாறாக வணிகக் கப்பல்கள் வசதி நிறைந்திருந்தாலும் மனதிற்கு ஒவ்வாத சூழ்நிலை, பணம் ஈட்டுவதே குறியாக உடன் உள்ள மக்களிடம்  ஆர்வம் காட்டாத ஊழியர்கள் என்று கடலில் பயணிக்கும்  மனிதர்களுக்குள் உள்ள வேறுபாடுகளையும் வாழ்க்கை முறைகளையும் நூல் முழுவதும் குறிப்பிட்டுச் செல்கிறார். 

நரசய்யா தனது தந்தையின் கடிதம் கூறும் அறிவுரையாக  "வீட்டில் நான்கு சுவர்களுக்கு இடையில் வாழ்வதில் நிறைவு பெற்றுவிடுபவர்கள் வாழும் வாழ்க்கை பெயருக்கேற்றதல்ல.  தரைப்பகுதிகளில் தங்களைப் பூட்டிக் கொண்டுவிட்ட எந்த ஒரு நாடோ, கூட்டமோ, சமூகமோ, தனி மனிதனோ வளர்ந்ததேயில்லை"  என்று கூறும் வரிகள், ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்துகொண்டு தங்களைத் தாங்களே உயர்வாய் தற்பெருமை பேசிக் கொண்டிருப்போருக்குப் புரியாமல் போகலாம்.    ஆனால், பரந்து விரிந்த உலகில் பயணித்த எவரும், அல்லது அக்கறையுடன் உலக சமூகங்களை ஆராய்ந்து குறுகிய மனப்பான்மையைக் கைவிட்ட எவருக்கும் இந்த வரிகளின் உண்மை புரியும். இதை உண்மை  என்று அவரது பயண அனுபவங்கள் நிறுவுகின்றன. 
 
நரசய்யாவிற்குள் பன்முகத்தன்மை கொண்ட பல நரசய்யாக்கள்  இருக்கிறார்கள் என்பதை நூலின் மூலம் அறிய முடிகிறது.  
நரசய்யாவிற்குள் ஓர் ஓவியர்  இருக்கிறார்;  
ஓய்வு நேரங்களில் சுற்றுலாக்கள் சென்று இயற்கை எழிலைக்  கண்டு  களிக்கும்  ஓர்  இயற்கை ஆர்வலர் இருக்கிறார்; 
"செல்லும் கணமெல்லாம் செல்லரித்துச் செல்லுமிந்த நில்லாத வாழ்வதனை நிலையில்லா உடலதனை" .. என்று எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுதே தத்துவக் கவிதை எழுதிய  கவிஞர் ஒளிந்திருக்கிறார்;  
நூல்களைத் தேடித் தேடிப் படிக்கும் ஒரு நூலார்வலர் இருக்கிறார்; 
அருங்காட்சியகங்களைக் கண்டு களிக்கும் ஆர்வலர் இருக்கிறார்; 
தமிழர்களின் தொன்மையான வணிக வரலாறு, தமிழ் இலக்கியங்களின் வழி அறியக்கூடிய கடற்பயணச்  செய்திகள் ஆகியவற்றை ஆராயும் ஆர்வத்தைக் கொண்ட வரலாற்று ஆய்வாளர் இருக்கிறார் (நரசய்யாவிற்கு அவ்வாறு  வரலற்று ஆர்வத்தைத்  தோற்றுவித்தவர் சந்திரா என்ற ஒரு நண்பர் என்பதையும் நூலின் மூலம் அறிய முடிகிறது);  
அயல்நாடுகளில் வணிகர்களையும் அவர்களிடம் பொருள் வாங்க ஆர்வம் கொண்ட பயணிகளின் மனநிலை, அயல்நாட்டுத் திரைப்படங்களில் பாலுணர்வுக்  காட்சிகள் இயல்பாகவும் விரசமின்றியும் அமைத்திருப்பது, அயர்லாந்தின் சமயச் சண்டைகள்,  ஜப்பான் மக்களின் பணி நேர்மை,  மாறாக ஒரு சிகரெட் பாக்கெட்டிற்கே விலைபோகும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கும் ஒரு சமூக ஆர்வலரும் இருக்கிறார்; 
இவற்றுக்கும் மேலாக, இந்த அனுபவங்களையெல்லாம் சுவையாகத் தன் வரலாற்றில் பதிந்துவிட்ட ஓர் எழுத்தாளராகவும் அவர் இருப்பதால் அவர் பணி-பயண அனுபவங்களை நம்மால் அறிய  முடிகிறது.   கடற்படையின் நிர்வாகத்தையும், கப்பலின் நிர்வாகத்தையும், கப்பல்களின் அமைப்பையும், பணி முறைகளையும், கடற்படைப் பயிற்சி முறைகளையும் ஒரு கதை போலச் சொல்லிச் செல்லும் பாங்கு அவரது நூலுடன் நம்மை இணைத்துவிடுகிறது.  

உலகின் பற்பல நாடுகள் குறித்தும்,  அவற்றின் துறைமுகங்களைப்  பற்றிய செய்திகளையும்,  அந்நாடுகளின் மக்களையும், அவர்களது பண்பாட்டையும் இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிவது மனநிறைவு தருவதாக அமைகிறது.   கடற்படை, கடற்பயணங்கள் போன்ற செய்திகள் அடங்கிய நூல்கள் தமிழில் குறைவாகவே உள்ள நிலையில் அவற்றை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 



நூல்:
கடலோடி, நரசய்யா, [வாசகர் வட்டப் பிரசுரம் 34] வாசகர் வட்டம்.சென்னை, பக்கங்கள் -208, 1972.
தமிழிணையம் - மின்னூலகம்  
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM8l0xy#book1/


நன்றி: சிறகு 
ஆகஸ்ட் 22, 2020


#நூல் மதிப்புரை, #சிறகு, #Themozhi 




Saturday, August 8, 2020

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் 


எதையும் யாரும் எந்தக் காரணமும் இல்லாமல் சொல்லவும் மாட்டார்கள் செய்யவும் மாட்டார்கள். எந்த ஒரு செய்தியும் யாருக்காக, ஏன், எதற்காக உருவாக்கப்படுகிறது?  சற்றே சிந்திப்போம். எனது இந்தக் கட்டுரையின் அடிப்படையும் அது போன்ற ஒரு செய்தி பரப்புவதுதான். அது வள்ளுவர் சொன்ன "மெய்ப்பொருள் காண்பது அறிவு"  என்பதை மீண்டும் வலியுறுத்துவது. 

வள்ளுவர் சொன்ன வழியில் செல்லாதவர்கள், புத்தர் சொன்னதைப் புரிந்து கொள்ளாதவர்கள், பெரியார் அறிவுரையைப் பெரிது படுத்தாதவர்கள் இந்தச்  செய்தி தரும் கட்டுரையால் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்லை.  இருந்தாலும் ஊதும் சங்கை  ஊதி வைக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. பொழுது விடியும்  போது விடியட்டும். 

அண்மையில் ஒரு சமூக வலைத்தளச்  செய்தி கவனத்தைக் கவர்ந்தது.  இந்தோனேசியா நாட்டுப் பணத்தாளில் பிள்ளையார் படம் உள்ளதைப் பார்த்து இந்தோனேசியா அமைச்சரை  ஒருவர் கேட்டாராம். இஸ்லாமியர் பெரும்பாலோர் வாழும் உங்கள் நாட்டின் பணத்தில் ஏன் இந்துக் கடவுள் பிள்ளையாரின் படம் இருக்கிறது என்று. அதற்கு அந்த இந்தோனேசியா அமைச்சர் சொன்னாராம்.  

"நாங்கள் எங்கள் மதத்தைத்தான்  மாற்றிக்கொண்டோம், எங்கள் மூதாதையர்களை அல்ல"

"we have changed our religion but not our ancestors"

ஆகா, இந்த உரையாடல் சொல்வது என்ன  ஒரு போற்றப்பட வேண்டிய கருத்து என்று தோன்றுகிறதா? இதன் பின்புலத்தில் ஓர் அரசியலே உண்டு என்பதை எவரும் அக்கறை எடுத்து  ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.  இது ஒரு திரிப்பு, அதற்கு ஒரு மறைமுக நோக்கமும் உண்டு. 

Rp20,000 issued on 23 Janaury 1998
Source - http://banknoteasia.blogspot.com/2009/02/withdrawal-of-indonesian-banknotes-1998.html

திரிப்பு:  இந்தச் செய்தி உண்மை அல்ல ஒரு மேற்கோள் ஒன்றைத் தனது மனம் போனபடி திரிப்பது 

நோக்கம்:  இப்பொழுது இந்தச் செய்தி பரப்புவதன் நோக்கம் ஆர் எஸ் எஸ் அஜெண்டா - அயோத்தி இராமர் ஆலயம் நிகழ்வின் தொடர்பாக அதை எதிர்க்கும் இஸ்லாமியரை, அல்லது  சமயச்சார்பற்றவரைக் கருத்தில் கொண்டு பரப்பப்படுவது.  

ஜனவரி 23, 2018 தான் "we have changed our religion but not our ancestors"  என்பதன் தொடக்கம் என்பதை இணையத் தேடல் காட்டுகிறது. 

we have changed our religion but not our ancestors

இதை முதன் முதல் சுஷ்மா சுவராஜ் ஓர் உரையில் குறிப்பிட்டார்.   அது இந்திய அரசின் தளத்திலேயே உள்ளது.  அது இங்குக் கொடுக்கப்படுகிறது. 
English Translation of External Affairs Minister's Address during India-ASEAN Youth Awards Event (January 23, 2018)

https://mea.gov.in/Speeches-Statements.htm?dtl/29380
23 JANUARY 2018.  Last Updated at 11:37 PM | SOURCE: PTI
Ramayana, Buddhism connect India and ASEAN: Swaraj
 
https://static.toiimg.com/photo/msid-62624739/62624739.jpg?resizemode=4&width=400

[...] 
I remember once, when Atal Ji was the Foreign Minister, he went to Indonesia on a visit. There he saw that some people on the roadside were making idols and to him it seemed that the idols were of Hanuman Ji. He says that he got curious and got down from his car and asked them about what they were making? Those people replied that they were making idols of Hanuman Ji. Atal Ji again asked, yours is a Muslim majority country and even you seems to be a Muslim to me? They said, yes sir. So Atal Ji again asked, so why are you making idols of Hanuman Ji to which they replied, sir we have changed our religion but not our ancestors.

Recently I was visiting Indonesia as I had a joint commission meeting there with the Foreign Minister Ratno. All of them expressed there that religion and culture are two separate things. Our religion is Islam but our culture is still that old one. So we are not only linked culturally but we are still connected.
[...] 
Note: Swaraj  narrated an incident about the Indian influence in Southeast Asia.

இதை எந்த ஓர் இந்தோனேசியா அமைச்சரும் எவரிடமும் சொன்னதாக அதில்  குறிப்பில்லை.  
வாஜ்பேயிடம்  யாரோ தெருவில் ஒரு பொம்மை விற்பவர் கூறியதாக சுஷ்மா அதில் குறிப்பிடுகிறார்.  அவர் இந்தோனேசியா சென்ற பொழுது அங்குச் சமயமும் பண்பாடும் அவர்களைப் பொறுத்தவரையில் வேறு வேறு என்ற கொள்கை உடையவராய் இந்தோனேசியர் இருப்பதாக சுஷ்மா உணர்ந்தும்  இருக்கிறார்.  இதுதான் அவர் சொன்ன செய்தி.  

இந்த நிகழ்விற்குப் பிறகு இது முன்னணி ஊடகச் செய்தியாகவும் வந்தது. 

சான்றுகள்:
The News Scroll 23 January 2018
https://www.outlookindia.com/newsscroll/ramayana-buddhism-connect-india-and-asean-swaraj/1237142

Ramayana, Buddhism connect India and ASEAN: Swaraj
January 23, 2018
https://www.business-standard.com/article/pti-stories/ramayana-buddhism-connect-india-and-asean-swaraj-118012301631_1.html

Culture, religion, education bind India and ASEAN: Sushma Swaraj
https://5thvoice.news/legalnews_student_youth/OTA3/Culture-religion-education-bind-India-and-ASEAN-Sushma-Swaraj#
25 Jan 2018

இப்பொழுது மக்கள் கற்பனையில் இந்த அனுமார் பிள்ளையார் ஆகிவிட்டார்;  செய்தியும்  திரிக்கப்படுகிறது.  இதன் வழியாக அயோத்தி நடவடிக்கையை எதிர்க்கக் கூடிய இஸ்லாமியருக்கு மறைமுகச் செய்தி சொல்லப்படுகிறது. 

அந்தச் செய்தி.. எதிர்க்காதீர்கள் இஸ்லாமியரே  இராமன் உங்கள் மூதாதையர்.  உங்கள் நாட்டின் பண்பாட்டை மதியுங்கள். 

மற்றொரு கோணம் பாகிஸ்தானைத் தாக்குவது.  இஸ்லாத்துக்கு மாறியவர்களே இராமர் உங்கள் முன்னோர்களில் ஒருவர். இந்தோனேசியாவைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்ற புத்தி புகட்டுகிறார்களாம். 

இப்படித்தான் உண்மையா பொய்யா எனப் புரியாதவாறு வதந்தி உருவாக்குவது.  இந்தப் படத்துடன் செய்தி தயாரித்தவர் உண்மையை  அறிவார்.  இந்தப் புனைவு சமூக வலைத்தளங்களில் கீழுள்ளவாறு பரவுகிறது.  

A Pakistani politician once asked a Muslim minister of Indonesia why a Muslim majority nation is having Hindu Gods such as Ganesha and Saraswati on its currency notes. The answer can be written in letters of gold: "We  have changed our religion but not our ancestors."

மற்றொன்று; 

There is an interesting story about it. Somebody asked a senior Muslim Minister of Indonesia as to how a Muslim majority nation is having a Hindu God on its currency. The answer that came can be written in letters of gold "we have changed our religion but not our ancestors "

சான்றுகள்: 
https://twitter.com/byrakeshsimha/status/1176073210174951425?lang=en
https://twitter.com/chopsyturvey/status/1173762690403074048?lang=en
https://www.facebook.com/gatik-media-company-129467287763935/
https://www.facebook.com/permalink.php?id=2111828272450358&story_fbid=2165487400417778

இதைத் தலைப்பாகக் கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஒன்றும் அயோத்தி இஸ்லாமியர் இராமரை தங்கள் மூதாதையர் என்று கூறி அயோத்தியில் இராமர் கோயிலுக்கு ஆதரவு தருவதாகக் கூறுகிறது  (‘We can change religion, not our ancestor Ram’ Oct 27, 2019
https://timesofindia.indiatimes.com/city/varanasi/we-can-change-religion-not-our-ancestor-ram/articleshow/71779814.cms)

இவை போன்ற செய்திகள்  யாருக்காக, ஏன், எதற்காக உருவாக்கப்பட்டது என்று புரிகிறதா?   தெரிகிறதா?

முன்னோர் பண்பாட்டிற்கு  மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நல்ல உள்ளங்களே, நீவிர் வாழ்க.  ஆனால்  உங்களுக்கு ஒரு கோரிக்கை.  அத்துடன் பல சமயங்களையும் உள்ளடக்கியது இந்தியப் பண்பாடு என்பதையும்  நினைவு கூருவீர்.  ஒரு பண்பாட்டுச் சின்னத்தைச் சிதைத்த பின்னர் பண்பாடு எங்கே காக்கப்படுகிறது? எவ்வாறு காக்கப்படுகிறது?


நன்றி: சிறகு 
ஆகஸ்ட்  8, 2020



#சிறகு, #இணையம், #ஊடகம், #Themozhi 



Saturday, August 1, 2020

திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்கள்

திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்கள் 


"நாட்டுப்புறம்" என்ற சொல்லானது கல்வி வாய்ப்புகள் குறைந்த, நகர நாகரிகம் இல்லாத, கிராமியப் பகுதிகளை,  ஊரகப் பகுதியைக்  குறிக்கும். நகர்ப் புறங்களில் வாழும் கிராமியக் குணம் கொண்ட கூறுகளையும் "நாட்டுப்புறம்" என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. இலக்கிய உலகில் முன்னர் முறையாக ஆவணப்படுத்தப்படுத்துவதில் அக்கறை காட்டப்படாத ஒரு பிரிவாக விளங்கியது ஊரக மக்களின் வாழ்வியல் வாய்மொழி இலக்கியங்கள்.   பதினெட்டாம் நூற்றாண்டில் மேற்கத்திய மக்களால் இவை ஓர் ஆய்வுக்குரிய தளமாக அறியப் பட்டாலும் கூட, 1950களில் தான் தமிழக ஆய்வாளர்கள் இதில் ஆர்வம் காட்ட முற்பட்டனர். 

நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்டவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கி.வா.ஜகந்நாதன், நா.வானமாமலை, அ.மு.பரமசிவானந்தம், சோமலெ, தமிழண்ணல், செ.அன்னகாமு, மு.வை.அரவிந்தன், ஆறு.அழகப்பன், பெ.தூரன், சு.சண்முகசுந்தரம் போன்றோர் ஆவர். 

நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து நாம் அறிவது என்ன?
நாட்டுப்புறப்பாடல்கள் ஒவ்வொன்றும் அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பதிவு, அவர்களின் உணர்வின் வெளிப்பாடு.  தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் , ஒவ்வொரு  வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும் பாடல்களாக எளிய மக்களின் வாழ்வில் பரிணமித்து வந்துள்ளன.   தாலாட்டு, விளையாட்டு, பூப்புச்சடங்கு, திருமணம், இறப்பு  என ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடல்கள் உள்ளன.  நமக்கு நாமே பாடிக் கொள்ள முடியாத இரு வகைப் பாடல்கள் என  நாம் பிறந்தவுடன் பாடப்படும் தாலாட்டுப் பாடலும்,  பிறகு இறந்தவுடன் பாடப்படும் ஒப்பாரிப் பாடலும் எனலாம். 

நாட்டுப்புறப் பாடல்களின் கூறுகள் எனக் கீழ்வரும் பண்புகள் அடையாளம் காணப்படுகின்றன. 
-- பாடலை இயற்றியவர் யார் என்று தெரியாத ஒரு நிலை,  
-- காலத்திற்கேற்ப இடத்திற்கேற்பப் பாடலின் வரிகள் மாறி வரும் நிலை,
-- வாய்மொழியாகவே புழக்கத்தில் உள்ள எழுதாப் பாடல்கள், 
-- வட்டாரத்தின் பேச்சு வழக்குச் சொற்கள் நிரம்பிய பாடல்கள்,  
-- எளிமையும் இனிமையான சந்தங்களும் கொண்ட வரிகள், 
-- சூழ்நிலை தரும் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்,  
-- ஊரக மக்களின் உணர்வுகள் பாடல்களின் கருப்பொருட்களாக அமைவது,  
-- தென்காஞ்சியாக (தென்பாங்காக/தெம்மாங்காக) மனம் போன வகையில் பாடப்படுவதாக அமைவது என்ற பண்புக்  கூறுகளைக் கொண்டவை  நாட்டுப் புறப் பாடல்கள். 

காலந்தோறும் நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் தமிழ் இலக்கியங்களில் உண்டு என்பதும், சிலப்பதிகாரம் முதற்கொண்டு சிற்றிலக்கியங்கள் வரை நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தில் அமைந்தவை என்பதும்  நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் உறுதியாக முன்வைக்கும் கருத்து.  நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் இக்காலத்துத் திரையிசையிலும் உள்ளது.  நாமறிந்த புகழ்பெற்ற சில திரைப்படப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடலின் வரிகளை நேரடியாகவே எடுத்தாண்டவையாகவோ அல்லது அதன் குறிப்புகளை உள்வாங்கி  எழுதப்பட்டவையாகவோ அமைந்துள்ளன.  கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை பல திரையிசைக் கவிஞர்கள் கற்பனை வளத்துடன் தக்க வகையில் தங்களது பாடல்களில்  அக்கருத்துக்களைத்  திரையில் இடம்பெறும் சூழலுக்கு ஏற்றவாறு  எடுத்தாண்டுள்ளார்கள். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பாடல்கள்  சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து காதலனும் காதலியும் பாடும் பாடல்களின் நீளமும்  அதிகம், அதற்குக் கற்பனை மட்டும்தான் எல்லை.  காதலன் நான் இவ்வாறு உருவெடுத்து உன்னை நாடி வருவேன் எனப்பாட,  காதலி நீ இவ்வாறு உருவெடுத்து வந்தாலும்  உன்னிடம் இருந்து நான் தப்பி ஓடிவிடுவேன் எனப் பாடுவாள்.  இருவரும் இறுதியில் மனமொத்து 'உனக்கு நான், எனக்கு நீ' என்ற ஓர் உடன்பாட்டுடன் இணைந்து கொள்வார்கள் . இது 'வாது கவி' என்று அழைக்கப்படுகிறது.   ஈழப் பகுதியிலும் தென்தமிழகத்திலும் இந்த வகைப் பாடல்கள்  பாடப்படுவதாக அறிய முடிகிறது. 

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
அவள்:
கோழிக் குஞ்சு ரூபங் கொண்டு 
கொத்தி விழுங்க வந்தால் 
வல்லூறு ரூபங் கொண்டு 
வானத்தில் பறப்பேனடா 

அவன்:
வல்லூறு ரூபங் கொண்டு 
வானத்தில் பறக்கு முன்னே 
பாம்பாக ரூபங் கொண்டு 
பாதை மறிப்பேனடி

அவள்:
பாம்பாக ரூபங் கொண்டு 
பாதை மறித்தாலும் 
அயிரை உருவங்கொண்டு-நான் 
அழியில் புகுந்திடுவேன்.

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
அவன்:
ஊரார் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு 
நான் வருவேன் சாமத்துலே 

அவள்:
நல்ல பாம்பு வேடம் கொண்டு 
நடுச் சாமம் வந்தாயானால் 
ஊர்க் குருவி வேடம் கொண்டு 
உயரத்தில் பறந்திடுவேன் 

அவன்:
ஊர்க் குருவி வேடம் கொண்டு 
உயரத்தில் பறந்தாயானால் 
செம்பருந்து வேடம் கொண்டு 
செந்தூக்காய் தூக்கிடுவேன் 
---தெம்மாங்கு பாடல், நாலு வேலி நிலம் - 1959 
குறிப்பு:  இப்பாடல் தெம்மாங்கு பாடல் என்றே திரையிசையிலும் பதிவாகியுள்ளது.  
____________________________________

ஒருவர் பாடும் பாட்டுக்கு 'எதிர்ப்பாட்டு' பாடுவது என்பதும்  நாட்டுப்புறப் பாடலில் ஒருவகை.     எசப்பாட்டு  பாடுவது என்றும் இவ்வழக்கம்  கூறப்படுகிறது. சில பாடல்களில் இது நீ பாடாவிட்டால் உன்னை அடிப்பேன் உதைப்பேன் என்ற வன்முறையாகவும் ஒலிக்கிறது.  

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
அவள்:
பாட்டுக்குப் பாட்டடிப்பேன் 
பதில் பாட்டு நான் படிப்பேன் 
எதிர்ப் பட்டுப் படியாட்டா 
ஏணி வைச்சுப் பல்லுடைப் பேன்

[வேறு-மற்றொரு வகை]
பாட்டுக்குப் பாட்டடிப்பேன் 
பாட்டனாரைத் தோக்கடிப்பேன் 
எதிர்ப்பாட்டுப் படிக்கலன்ன 
ஏணி வைச்சுப்  பல்லுடைப்பேன்.

இவள்:
கடலாடிச் சீமையிலே 
காசுக்கொரு விளக்கு மாறு  
எதிர்ப்பாட்டுப் படியா விட்டால் 
எடுப்பனடி விளக்கு மாத்தை.

அவள்:
பாட்டுக்குப் பாட்டறிவேன் - குட்டி
பலபாட்டு நானறிவேன்
எதிர்ப்பாட்டு பாடாவிட்டால் - நாக்கை
இழுத்துப்பிடித் தறுத்திடுவேன்.                   

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
பாட்டுக்குப் பாட்டெடுப்பேன் 
எதிர்ப் பாட்டு நான் படிப்பேன் 
இஷ்டம் போலத் துட்ட போடு ஓய்
குத்த வெச்சுப் பாட்டு கேளு ஓய்
தந்தனன தந்தனா தந்தனன தந்தனா தந்தான தந்தான நா
---பஞ்சு அருணாசலம், மண்வாசனை - 1983
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
அவன்:
வட்ட வட்டப் பாறையிலே 
வரகரிசி தீட்டடையிலே 
யாறு கொடுத்த சாயச்சீலை 
ஆலவட்டம் போடுதடி ?

[வேறு]
வட்டவட்டப் பாறையிலே - குட்டி
வரகரிசி தீட்டையிலே
ஆர்கொடுத்த சாயச்சீலை - குட்டி
ஆலவட்டம் போடுதடி?                    

அவள்:
யாருங் கொடுக்கவில்லை 
ஆலவட்டம் போடவில்லை 
கையாலே பாடுபட்டு 
காய்ச்சினேண்டி சாயச்சீலே 

[வேறு]
ஆருங் கொடுக்கவில்லை - மச்சான்
அவிசாரிநான் போகவில்லை
வன்பாடு பட்டுநானும் - மச்சான்
வாங்கினேண்டா சாயச்சீலை.             

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
அவன்:
வட்ட வட்டப்  பாறையிலே 
வந்து நிற்கும் வேளையிலே 
யார் கொடுத்த சேலையடி 
ஆல வட்டம் போடுதடி ?

அவள்:
மாமனோ மைத்துனனோ  மாமாயம் செய்பவனோ 
மைபோடத் தெரிந்தவனோ மயக்குவித்தை படித்தவனோ 
மார்போடு என்னை அணைத்து 
வாங்கித் தந்த சேலையிது 
வாங்கித் தந்த சேலையிது...
---கண்ணதாசன், பழநி - 1965  
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
மறந்திரு மறந்திருன்னு 
மனுஷரெல்லாம் சொல்லுறாக 
மல்லிகைப்பூ வாசகத்தை 
மறக்க மனங் கூடுதில்லை 

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
இஞ்சி இடுப்பழகா 
மஞ்ச சிவப்பழகா 
கள்ளச் சிரிப்பழகா 
மறக்க மனம் கூடுதில்லையே
---வாலி, தேவர் மகன் - 1992
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
ஓடுகிற தண்ணியிலே - தங்கரத்தினமே
 உரசிவிட்டேன் சந்தனத்தை - பொன்னுரத்தினமே
சந்தனத்தை நம்பியல்லோ - தங்கரத்தினமே
வெண்பிறப் பானேனடி - பொன்னுரத்தினமே.          

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
ஓடுகிற தண்ணியில..
உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
செவத்த மச்சான் நெத்தியிலே
---அ. மருதகாசி, பிள்ளைக் கனியமுது - 1958  

மீண்டும்,  திரையிசையில் .. .. .. 
ஓடுகிற தண்ணியில..
உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
செவத்த மச்சான் நெத்தியிலே
---வைரமுத்து,அச்சமில்லை அச்சமில்லை - 1984 
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
அவள்:
உச்சி நத்தம் பாதையிலே 
மொச்சி  கெத்து உருவையிலே 
கூப்பிட்ட சத்தமெல்லாம் 
குயிலு  சத்தமின்னிருந்தேன் 
சாமி சத்தமின்னிருந்தால் 
சன்னதிக்கே வந்திருப்பேன் 

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
அவன்:
அடி மாங்குளத்துக்   கரை மேல... ஏ...
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து...
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா

அவள்:
பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்

அவன்:
அடி என் சத்தமின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப

அவள்: 
ஒங்க சத்தமின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
---வைரமுத்து, முதல் மரியாதை - 1985
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
அவள்:
பருத்திப் புஞ்சை பொழி கெடுக 
பல நாளும் வந்தவரே 
ஒருத்தி எடுக்கயிலே 
ஓடி வந்தால் ஆகாதோ ? 

[வேறு]
பருத்தி எடுக்கயிலே 
பலநாளுங் கேட்ட மச்சான் 
ஒத்தையிலே இருக்கையிலே 
ஓடிவந்தால் ஆகாதோ ! 
 
இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
அவள்:
பருத்தி எடுக்கையிலே என்னப் 
பல நாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ...

அவன்:
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி...
---மா.ரா., ஆட்டுக்கார அலமேலு - 1977
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
அவள்:
ஆசை  வச்சேன் உன் மேலே 
அரளி வச்சேன் கொல்லையிலே 
பூவு வச்சேன் கொண்டையிலே 
பொருந்தலேயே உன் மனசு.

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
அவள்:
ஆசை வச்சேன் உன் மேல மச்சான் 
அரளி வச்சேன் கொல்லையிலே
ஆதரிச்சா நல்லதையா இல்ல 
அரளி வெதை உள்ளதையா
---வைரமுத்து, நட்பு - 1986
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
மலடன் மலடி என்று 
வையகத்தார் பேசாமல் 
பிள்ளைக் கலி தீர்க்க வந்த 
பெருமானே கண்ணுறங்கு 

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாயென்ற பெருமைதனை 
மனம் குளிர தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்குப் பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா 
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்குப்  பாரமா
---பி.கே.முத்துசாமி, தை பிறந்தால் வழி பிறக்கும் - 1958
____________________________________

நாட்டுப்புறப் பாடலில்  .. .. .. 
சின்னக் குட்டி நாத்தனாள் - ஏலங்கிடி லேலோ
சில்லறையை மாத்தினாள் - ஏலங்கிடி லேலோ
ராவெல்லாம் பேசினாள் - ஏலங்கிடி லேலோ
ரயிலுவண்டி ஏறினாள் - ஏலங்கிடி லேலோ.       

இக்கருத்து  திரையிசையில் .. .. .. 
சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!
---பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆரவல்லி - 1957   

         இதுகாறும் குறிப்பிடப்பட்டவை நாட்டுப்புறப் பாடல்களின் கூறுகளை உள்வாங்கிய "ஒரு சில"  திரையிசைப் பாடல்களின் எடுத்துக்காட்டுகளே. பொதுவாகவே, நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும்;  
தங்கரத்தினமே-பொன்னுரத்தினமே
ஞானத் தங்கமே 
தங்கமாமாவே - பொன்னுமாமாவே
அடி கண்ணம்மா, அடி முத்தம்மா, அடி  செல்லம்மா
அன்னம்மா  பொன்னம்மா, அன்னமே  பொன்னம்மா  
ஏலே தங்கையா - அடே பொன்னையா
ஏலங்கிடி லேலோ, ஏலேலக்குயிலே, ஏலேலோ - ஐலசா   
போன்ற சொல்லாடல்களைக் கொண்ட, நாட்டுப்புறப் பாடல்களின் சாயலில் எழுதப்பட்ட திரையிசைப் பாடல்களும் அதிகம்.  அதனால் அப்பாடல்களும் உணர்வுகளின் வெளிப்பாடாக மண்ணின் மணத்துடன் அமைந்தவையாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றன.  



உதவிய நூல்கள்:
1. "தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்"-1960 
நா.வானமாமலை
(https://ta.wikisource.org/s/31ha)

2. "தமிழர் நாட்டுப்பாடல்கள்" - 1976 
நா.வானமாமலை
(https://ta.wikisource.org/s/1uyt)

3. "மலையருவி" - 1958 
கி.வா.ஜகந்நாதன்
(நாடோடிப் பாடல்கள்-Mr.பர்ஸி மாக்வீன்,I,C,S.,)
(http://www.tamilvu.org/ta/library-lB200-html-lB200ind-152511)



நன்றி:  சிறகு
ஆகஸ்ட் 1, 2020



#சிறகு, #நாட்டாரியல், #Themozhi