Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, March 7, 2025

ரிக் வேதம் கூறும் அகத்தியர்

      "பொதியில் முனிவன் புரை வரை கீறி
      மிதுனம் அடைய விரி கதிர் வேனில்
      எதிர் வரவு மாரி இயைக"
            [பரிபாடல்: 11 - வையை; நல்லந்துவனார்]

'பொதிகை முனிவனின் பெயர்கொண்ட "அகத்தியன்" என்னும் விண்மீன் (star - Canopus) தன் உயர்ந்த இடத்தைக் கடந்து மிதுன ராசியைச் சேர, விரிந்த கதிர்களையுடைய வேனிற்காலம் எதிர்கொள்ளும் கார்காலத்தில் மழை பெய்க . . . ' என்று கூறும் பரிபாடல் வரி, அகத்தியன் என்ற விண்மீனைக் குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் விளக்கம் தருகிறார்கள். பொதிகை மலையில் வாழ்ந்தாகக் குறிப்பிடப்படும் அகத்தியனையும், அகத்தியன் என்ற பெயர் கொண்ட  விண்மீனையும் இணைத்துக் கூறும் தமிழின் தொல் இலக்கிய நூலான எட்டுத்தொகையின் பரிபாடலில் இடம் பெறும் குறிப்பு  இது ஒன்றேயாகும்.   வடபால் வாழ்ந்த அகத்தியன் என்ற குறுமுனிவர் தென்வானில் விண்மீனாக இலங்குகிறார் என்பது, சிவனாரின் திருமணக் காலத்தில் உயர்ந்த தென்பகுதியைச் சமன் செய்ய அகத்தியன் தென்னகம் அனுப்பப் பட்டார் என்ற ஒரு தொன்மப் புனைவின் பின்னணி கொண்டது. இவ்வரிகள்  இடம் பெறும் பரிபாடல் காலத்தால் பிற்பட்டது.  வானியல் கணிதத்தின் அடிப்படையில்  எல்.டி.சாமிக்கண்ணு இப்பாடலில் குறிப்பிடப்படும் நாள் கி. பி. 634 ஆண்டின் ஆடித்திங்கள் நாள் என்று குறிப்பிடுகிறார்.  'பொதியில் முனிவன்' என்பதை 'அகத்தியன்' என்று உரைநூல்கள் விளக்கம் தந்தாலும்,  அகத்தியன் என்னும் பெயர் தொகை நூல் எதிலும் காணப் படாத ஒரு பெயர்.
      "அமர முனிவன் அகத்தியன்-தனாது
      கரகம் கவிழ்த்த காவிரி பாவை"
என்றும்;

      "அமர முனிவன் அகத்தியன்-தான் அது"
            [மணிமேகலை; சீத்தலைச் சாத்தனார்]
என முதன் முதலில் அகத்தியர் என்னும் பெயர் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில்தான் இடம் பெறுகிறது.

பொதியில் முனிவன் அகத்தியன் என்பதற்கு மாறாக; வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரனார்; புத்த சமயத்தவரால் வணங்கப்பெறும் தெய்வமான அவலோகிதர் என்பவர் போதலகிரியில் (பொதிகை  மலையில்) தன் மனைவி தாரையுடன் வாழ்ந்தார். அவரிடம் அகத்தியன் தமிழ் பயின்று தமிழுக்கு இலக்கணம்  எழுதினார் என்று குறிப்பிடுகிறார்.
      "ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்
      டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ்”
ஆனால், அகத்தியனுக்குத் தமிழ் கற்பித்தவர் சிவபெருமான் என்றும்,  தமிழ்க் கடவுள் முருகன் என்ற கதைகளும் தமிழரிடம் பரவலாக வழக்கத்தில் உள்ளது.

 


தோன்றும்போதே ஞான ஒளியிலிருந்து வெளிப்பட்டதால், “அகஸ்தி” என்னும் பெயர் சூட்டப்பெற்றாரென்று பெயர்க்காரணம் கூறப்படுகிறது.   தொல் சமஸ்கிருத இலக்கியமான ரிக் வேதத்தில் அகத்தியன் குறிப்பிடப்படுகிறார், அவர் வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் பண்பாட்டுப் பாலமாக விளங்குகிறார். தமிழும் சமஸ்கிருதமும் சங்கமிக்கும் நிலைக்கு அவர் ஓர் அடையாளக் குறியீடு என்று தமிழர்களாலும் இதுநாள் வரை அகத்தியர் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்.  அறிவியல் வளர்ந்த இக்காலத்தில், அகத்தியன் காவிரி ஆறும், தாமிரவருணி என்னும் பொருநை ஆறும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக் காரணமானவர், கடலையே குடித்தவர் என்ற இயற்கைக்கு முரணான புனைவுகளைப் புறம் தள்ளி விடலாம். அப்புனைவுகள்; அறிவியல் சாயம் பூசப்பட வேண்டியவையோ, அல்லது அவை மறைமுகக் குறியீடுகளா என்ற ஆய்வுகளுக்குக் கூடத்  தகுதி பெற்றவையோ அல்ல.  

அகத்தியன் என்னும் சித்தயோகி தமிழ் வளர்த்த சான்றோர்களில் முதன்மையானவர்; தமிழ் மொழிக்கு இலக்கணம் கண்டவர்; அகத்தியம் என்ற முதல் இலக்கண நூலின் ஆசிரியர், தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமானும் முருகப்பெருமானும் புலவர்களாக இலங்க, முதன்மைப் புலவராக இருந்து தமிழாய்ந்தவர்; அவருக்குத் தமிழின் முதல் நூலை யாத்த தொல்காப்பியர் உட்படப் பன்னிரு மாணவர்கள் இருந்தனர் என்று  தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் கருத்துகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அவ்வாறு ஆராய்வது தமிழ் ஆய்வாளர்களின் கடமையும் கூட.  தமிழறிஞர் கா. நமச்சிவாய முதலியார் போன்றோர் ஆய்வு செய்து,  நூல் எழுதி, தமிழுக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்புகளாக மேற்கூறப்படும் கருத்துகளைக் குறித்து வினாக்கள் பல எழுப்பி, அவ்வாறாகக் காட்டப்படும் தொடர்புகளை மறுத்தும் உள்ளார்கள் (அகத்தியர் ஆராய்ச்சி,  கா. நமச்சிவாய முதலியார், 1931).

அகத்தியர் என்ற பெயரில் காலந்தோறும் பலர் வாழ்ந்திருக்கக் கூடும், சங்ககாலத்துத்  தமிழ் வளர்ச்சியில் அகத்தியரின் பங்களிப்பு என்ற கருத்து  ஏற்கக் கூடிய கருத்தல்ல, அவை பிற்காலப் புனைவுகள் என்று கா. நமச்சிவாயனார் சான்றுகளுடன் மறுத்துள்ளார். உயர்வு மானப்பான்மையால் சமஸ்கிருதத்தை  உயர்த்திப் பிடிப்போரும்; தாழ்வு மனப்பான்மையும், சமயச் சார்பும் கொண்ட தமிழர்,  தமிழ் சமஸ்கிருதத்திற்கு இணையானது என்று வலியுறுத்த விரும்பி புனையப்பட்ட கருத்துகள் தமிழின் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.  இத்தகைய ஆய்வுகளைத் தமிழ் இலக்கியங்களில் மேற்கொள்ளும் பொழுது, அகத்தியர் குறித்து ரிக் வேதத்தில் காணப்படும் கருத்துகள் குறித்தும் ஆய்வுகள் தேவை. வேதத்தில் அகத்தியருக்கும் தமிழுக்கும் தொடர்பு காட்டப்படுகிறதா? தொல்காப்பியர் (திரணதூமாக்கினி என்று வடமொழி ஆர்வலர்களால் புனைபெயர் கொடுக்கப்பட்டவர்) அகத்தியரின் மாணவர் என்ற குறிப்பு வேதத்தில் உள்ளதா? அகத்தியர் குறித்து வேதம் கூறுவது என்ன? என்ற ஆய்வுகள் ஒப்பாய்வு முறியில் தேவை என்பதை மறுக்க இயலாது.

வேதக் கல்வி அனைவருக்குமானது அல்ல என்ற வழக்கிருந்த முற்காலத்தில் குறிப்பிட்ட ஒருசில சிறுபான்மையினரே அதைக் கற்றனர். அவர்களும் சமயச்சார்புத் தன்மை கொண்டவர்களாக இருந்ததால், வேதத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று கூறப்பட்டப் புனைவுகளை மறுத்து உண்மை என்னவென்று மக்களிடம் கூற அக்கறை அற்றவர்களாக இருந்தார்கள்.  மாறாக, வேதம் அனைவருக்கும் பொதுவானது என்ற கொள்கை கொண்ட பன்மொழி அறிஞர் ம.ரா.ஜம்புநாதன் (மணக்கால் ராமசாமி ஜம்புநாதன், 1896-1974) ரிக் வேதத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து தமிழில் மொழிபெயர்த்தார். அவர் மறைவிற்குப் பின்னர், அவர் மொழிபெயர்த்த ரிக்வேதம் இரு தொகுதிகளாக (தொகுதி 1- 1978; தொகுதி 2- 1980) வெளியானது.  இணையச் சேகரிப்பில் இந்நூல்களைப் படிக்கலாம் (Volume -1: https://archive.org/details/1-1-6_20210721  &  Volume -2: https://archive.org/details/2-7-10).  ரிக் வேதம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டப் பதிப்பாக 19ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே உள்ளது (Rig Veda [translation and commentary] by H. H. Wilson,1866).

ரிக் வேதம் கூறும் அகத்தியர்:
ரிக்வேதம்-தொகுப்பின் (சம்ஹிதை) 10 மண்டலங்களும், தேவர்களைத் துதிக்கும் சுமார் 10552  'ரிக்' மந்திரங்களைக் கொண்டவை. இந்த மந்திரங்கள் 'சூக்தங்கள்' என்று 1028 பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டவை.  ரிக்வேதத்தின் முதலாம் மண்டலத்தில் 165 முதல் 191வரை உள்ள 27 சூக்தங்கள் அகத்தியரால் எழுதப்பட்ட  'அகஸ்திய சூக்தங்கள்' ஆகும். இவை பெரும்பாலும் இந்திரன், மருத்துக்கள், அசுவினிகள் ஆகியவர்களைப் போற்றுபவை. இவர்களைத் தவிர்த்து அக்கினி, ஆப்பிரி, சூரியன், பிரகஸ்பதி, விசுவே தேவர்கள் போன்றவர்களும் போற்றப்படுகிறார்கள்.  

அகஸ்திய சூக்தங்களில்; கடவுளருக்கு சோமரசம் பிழிந்து கொடுத்து, யக்ஞம் செய்து அவி கொடுக்கப்படுகிறது. இந்திரனிடம் எங்களுடைய பகைவர்களை அழித்து, அவர்களுடைய  செல்‌வத்தை எங்களுக்களிக்கவும்,  நாங்கள்‌ உணவையும்‌, பலத்தையும்‌, நீண்ட ஆயுளையும்‌ அடைய உதவுங்கள் என்று வேண்டுபவையாக அமைந்துள்ளன. மருத்துக்கள், அசுவினிகள், அக்னி போன்ற பிற கடவுளர்களும் தங்கள் குதிரைகள் பூட்டிய தேர்களுடன் சென்று, வஜ்ராயுதம் கொண்டு பகைவரை அழிக்கும் வீரனான இந்திரனுடன் நட்பிலிருந்து, அவன் போரில் பகைவர்களை அழிக்க  உதவி செய்யுமாறு வேண்டப்பட்டு அவி அளிக்கப்படுகிறார்கள். உணவும், பலமும், நீண்ட ஆயுளும் தேவை என்று மீண்டும் மீண்டும் வேண்டப்படுகிறது. எதிரிகளின் கோட்டையை அழித்து தங்களுக்குச் சுகம், செல்வம் ஆகியவற்றைத் தருமாறும் வேண்டப்படுகிறது.

அகஸ்திய சூக்தங்களில்; 179 ஆவது  சூக்தத்தில் அகத்தியரின் மனைவியான உலோபாமுத்திரை என்பவள் பற்றிய குறிப்பு வருகிறது.  ஒரு மாணவன் பற்றிய குறிப்பு ஒன்றும் வருகிறது.  அதனால் ரிக்வேத விளக்கம் எழுதியோர் அகஸ்தியர் ஒரு வேதப் பள்ளிக்கூடம் நடத்தியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். மனைவியிடமும், அவளின் இல்லற நாட்டம் குறித்தும் அக்கறை அற்றவராக இருக்கிறார் அகஸ்தியர். அவரிடம் அவள்  நான் பல ஆண்டுகளாக அல்லும் பகலும் உங்கள் தேவை அறிந்து பணிவிடை செய்து வந்திருக்கிறேன், அதனால் களைத்துவிட்டேன்.  இப்பொழுது முதுமை நெருங்குவதால் என் அழகு பொலிவிழக்கிறது. ஆதலால்,  கணவர் தன் மனைவியோடும், மனைவி தன் கணவரோடும் இணையலாம் என்று அகஸ்தியரை அழைக்கிறாள்.  அகஸ்தியரும் நாம் நம்முடைய விருப்பங்களையெல்லாம் அனுபவிப்போம். நாம் இருவரும் இணைந்து இயங்கினால் வெற்றி அடையலாம். எனக்கும் காமம் தோன்றுகிறது. உலோபாமுத்திரையே என்னிடம் வருக, என்று அழைத்து அவளுடன் உறவு கொள்கிறார்.

அப்பொழுது அங்கிருந்த அகஸ்தியரின் மாணவன்,  இவர்கள் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தவன்,  உண்மையாகவே மனிதன் பல காமங்களின் வசத்தில் இருக்கிறான் என்று சொல்லிக் கொள்கிறான். அகஸ்தியன் தனக்கு மக்கட் செல்வங்கள் விரும்பி மனையுடன் இணைகிறான் (உழுபடைகளால் உழுது, விதைத்து, விளைவித்து என்று பாடலில் அது குறிப்பிடப்படுகிறது), அதன் விளைவாக இரண்டு வர்ணங்களைப் பெறுகிறான். (மக்கட் செல்வத்தை? அடைந்தான் எனக் கொள்ளலாம்). அசுவினிகள் மீது பாடப்படும் 184ஆவது சூக்தத்தின் 6ஆம் மந்திரத்தில் அகஸ்தியருக்கு மக்கட்பேறு வரம் அளிக்குமாறு வேண்டப்படுகிறது. சூரியன் மீது பாடப்படும் 191ஆவது சூக்தத்தில் அகஸ்தியரை கொட்டிய தேளினால் உடலில் ஏறிய நஞ்சை நீக்குமாறு வேண்டப்படுகிறது.

மனிதர்களின் தலைவர்களில் தலைவனானவன் அகஸ்தியன் (இவ்வாறாக அகஸ்தியனே தன்னைக் குறித்துக் கூறிக்கொள்வது).  இந்த  அகஸ்திய சூக்தங்கள் பகுதி தவிர்த்து, ரிக்வேதத்தின் மேலும் பிற பகுதிகளிலும் அகஸ்தியர் பற்றிய குறிப்புகள் உள்ளன. அகஸ்தியரின் தாய் அஸமாதி என்பவர். மித்திரா வருணர்களின்‌ புதல்வன்‌ அகஸ்தியர்.  அகத்தியனும் வசிட்டனும் ஒரே விதமாகப் பிறந்த உடன் பிறப்புகள்.  மித்திரா,  வருணர்கள்‌ ஆகியோர் அவர்களின்  ரேதஸை கும்பத்தினுள்‌ பொழிந்தார்கள்‌. அக்கும்பத்திலிருந்து 'மானன்'‌ என்னும் அகஸ்தியனும் ‌வசிட்டனும்‌ தோன்றுகிறார்கள். அகஸ்தியன்  குறித்து ரிக் வேதத்தில் கிடைக்கும் அதிகம் பேசப்படாத மற்ற தகவல்கள்; அகஸ்தியனின் புதல்வன் திருளஹச்யுதன்,  அகஸ்தியனின் பேரன் இத்மவாஹன் (திருளஹச்யுதனுடைய புதல்வன்). அகஸ்தியருடைய சகோதரியும் அவளுக்குப் புதல்வர்களும் இருப்பதாகவும் குறிப்பு உள்ளது.  

அகஸ்தியன் குறித்து ரிக் வேதத்தில் இவ்வளவு குறிப்புகள் இருப்பினும்,  தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் தொல்காப்பியக் கதைகள் பற்றிய குறிப்புகள் தென்படவில்லை.  அகஸ்தியரின் மாணவர் என்று கூறப்படும் திரணதூமாக்கினி என்ற தொல்காப்பியர் பெயர் மட்டுமல்ல;  அதங்கோட்டாசான், பனம்பாரன், காக்கைபாடினியார் என்று  அகஸ்தியரின் மாணவர்களாகக் கூறப்படுபவர் எவர் பெயரும் ரிக் வேதத்து அகஸ்தியர் பற்றிய குறிப்புகளில் காணப்படவில்லை.  மற்ற மாணவர்கள் பற்றியோ, அவர்களின் எண்ணிக்கை பற்றியோ, அவர்கள் யாவரும் அகஸ்தியரிடம் தமிழ் பயின்று இலக்கண இலக்கியங்கள் எழுதியதாகவோ எந்த ஒரு குறிப்பும் இல்லை.  தமிழுக்கும் அகஸ்தியருக்கும் தொடர்பு காட்டப்படவில்லை. முருகனுக்கும் சிவனுக்கும் அகஸ்தியருக்கும் தொடர்பு காட்டப்படவில்லை.

ரிக்வேத அகஸ்திய முனிவர் என்பர்,  சப்த ரிஷி எனப்படும் ஏழு முனிவர்களுள்  (விசுவாமித்திரர், ஜமதக்னி, கௌதமர், வசிட்டர், காசியபர், பாரத்துவாசர், அத்திரி) ஒருவர் அல்லர்.  ஆனால் அவ்வாறு தொடர்ந்து எழுவரில் ஒருவர் என்று மக்கள் பிழையாகக் கூறி வருகிறார்கள்.  வானத்து விண்மீன் கூட்டத்திலும் சப்த ரிஷி மண்டலமும், அகஸ்திய விண்மீனும் வெவ்வேறு இடங்களில் இருப்பவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தென்னகம் வந்து உலகைச் சமப்படுத்தியது, விந்திய மலையை அடக்கியது, பொதிகையில் வாழ்ந்தது, ராமருக்குப்  போர் கருவிகள் அளித்தது, இராவணனை இசையில் வென்றது, அவரது இசைப்புலமை, அகத்தியர் தமிழ்நாட்டுக்குக் காவிரி, தாமிரபரணி என்ற பொருநை ஆறுகளை அளித்தது போன்ற பரவலாகப் பேசப்படும் புராணக் குறிப்புகள் எதுவும் இல்லை. இவை யாவும் நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளில் உருவாக்கப் பட்டு தமிழ் மண்ணில் நுழைந்திருக்கக் கூடும்.

புராணக் கதைகளின் தேவை, அவற்றின் தோற்றம், ரிக் வேதக் கடவுளர் வழிபாடு கைவிடப்பட்டது, அல்லது கடவுளரின் தகுதி நீக்கப்படுவது போன்ற வற்றின் சமூகப் பின்னணி விரிவான ஆராய்ச்சிக்குரியது.  இதனால், காலத்தால் முற்பட்ட சங்கப் பாடல்களில் இடம் பெறாதவரும்,  பண்டைய தமிழ் மக்கள்  அறிந்திருந்திராத அகஸ்தியர் தொல்காப்பியருக்கும் ஆசிரியர், அவர் தலைமை வகித்த சங்கங்களின் தோற்றம் என்பவை எல்லாம் எப்படிப்பட்ட புனைவு என்பதைத் தரவுகளின் அடிப்படையில் எவரும் முடிவு செய்யலாம்.  

--

நன்றி:  

தமிழணங்கு - மார்ச் 2025
"ரிக் வேதம் கூறும் அகத்தியர்"
 — தேமொழி, சான் பிரான்சிஸ்கோ
பக்கம்: 30-36
https://archive.org/details/2025_20250311_20250311_1859/page/29/mode/2up

 #தமிழணங்கு, #அகத்தியர், #வரலாறு, #Themozhi 


தமிழணங்கு, அகத்தியர், வரலாறு