இன்றைய உலக மக்கள்
எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவை இல்லாத ஒரு பெண்மணி கமலா ஹாரிஸ். உலகின் முதன்மை
வல்லரசு நாடான அமெரிக்காவின் துணைத் தலைவர் பதவி என்றால் சாதாரணப் பொறுப்பா
என்ன?
இன்று அமெரிக்கத் துணைத்தலைவர் பதவியில் இருக்கும் கமலா ஹாரிஸ் பல
முதல் சாதனைகளைச் செய்து வரலாற்றில் இடம் பிடித்தவர். அவர் அமெரிக்கத்
துணைத்தலைவர் பதவியை வகிக்கும் முதல் பெண், முதல்
கறுப்பின துணைத்தலைவர் மட்டுமல்ல முதல் ஆசிய அமெரிக்கரும் ஆவார் என்பது யாவரும்
அறியப்பட்ட ஒன்று.
இப்பொழுது அடுத்த சாதனையையும் நிகழ்த்தப் போகிறார் என்பதுதான்
அமெரிக்க அரசியலைக் கவனித்து வருபவர்கள் கருதுவது. ஆம்; நடக்கும் இந்த ஜோ பைடன் ஆட்சி ஜனவரி 2025 இல்
முடிந்தவுடன், அடுத்த அமெரிக்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட
மிக ஒளிமயமான வாய்ப்பும் அவருக்கு வந்திருக்கிறது. அவ்வாறு அமெரிக்கத்
தலைவர் பொறுப்பேற்றால் அவர்தான் உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் முதல் பெண்
தலைவராகவும், முதல் ஆசிய அமெரிக்கப் பின்புலம் கொண்ட
தலைவராகவும் இருப்பார்.
மக்கள்கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுத்
தேர்தலில் முன்னாள் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்கொள்வதற்குப்
போதுமான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். இந்நாள் அமெரிக்கத் தலைவர் ஜோ
பைடன் முதற்கொண்டு, முன்னாள் அமெரிக்கத் தலைவர்கள் பராக்
ஒபாமா, பில் கிளிண்டன், ஜிம்மி
கார்ட்டர் ஆகியோர் கமலா ஹாரிசை மக்கள்கட்சி வேட்பாளராக ஆதரித்து அறிக்கை
வெளியிட்டுள்ளார்கள். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி, குறிப்பாக
தமிழின வழி வந்தவர் என்பதில் உலகத் தமிழர் அனைவருமே அவர் அமெரிக்கத் தலைவராவதை மிக
ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள்.
கமலா ஹாரிஸ் யார்?
விரைவில் 60 வயது என்ற எல்லையை எட்டவிருக்கும்
கமலா தேவி ஹாரிஸ் அக்டோபர் 20, 1964 இல் கலிபோர்னியா
மாநிலத்தின் ஓக்லாண்ட் நகரில் பிறந்தவர். ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன்,
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக
இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர். அங்கு ஜமைக்காவில் பிறந்த டொனால்ட்
ஹாரிசை சந்தித்து அவரை மணந்து கொண்டார். சியாமளா மார்பகப் புற்றுநோய்
ஆராய்ச்சியாளராகவும், கமலா ஹாரிசின் தந்தை டொனால்ட் ஹாரிஸ்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணி புரிந்தனர்.
இருவரும் சமூகநீதி செயற்பாட்டாளராகவும் தொண்டாற்றியவர்கள், மக்கள் உரிமைக்காகக் குரல் எழுப்பித் தொடர்ந்து பல போராட்டங்களுக்காகக்
களம் இறங்கியவர்கள். அதனால் இளம்பருவத்திலேயே கமலா ஹாரிஸ் பல சிவில்
உரிமைகள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார்.
கமலா ஹாரிசிற்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் மணவிலக்கு
பெற்றுக் கொண்டனர். கனடாவின் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீலுக்கு தயார் தன்
குழந்தைகளுடன் புலம் பெயர்ந்த பொழுது கமலா ஹாரிசிற்கு வயது 12. அவர் கியூபெக்கில் இருந்த காலத்தில், பிரெஞ்சு
மொழியைப் பேசக் கற்றுக்கொண்டார். அப்பகுதி சிறுவர்களை புல்வெளியில் விளையாட
அனுமதிக்காத கட்டிட உரிமையாளருக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தி வளரும் வயதிலேயே
தனது அரசியல் உள்ளுணர்வை வெளிப்படுத்தினார். கமலா அவரது தங்கை மாயா ஆகிய
இருவரையும் இந்து மத நம்பிக்கைகளுடன் அவர்களது தாயார் வளர்த்தார். அவர்களை
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று இந்தியப்
பாரம்பரிய உறவுகளைப் பேணுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.
கல்வியும் சட்டத் தொழிலும்:
கமலா ஹாரிஸ் கியூபெக்கில் உள்ள வெஸ்ட்மவுண்ட் உயர்நிலைப் பள்ளியில்
பயின்றார். தன் தோழர் ஒருவருடன் ஒரு நடனக் குழுவை நிறுவினார். பாப்டிஸ்ட்
பாடகர் குழுவிலும் பாடினார். உயர் கல்விக்காக மீண்டும் அமெரிக்கா திரும்பிய கமலா
ஹாரிஸ் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள ஹொவர்ட்
பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு லிபரல் ஆர்ட்ஸ் மாணவர் கவுன்சிலுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். இளங்கலை படிக்கும் பொழுது விவாதக் குழுவில் பங்கேற்றார்.
ஹாரிஸ் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்து
1989 இல் தனது J.D. வழக்கறிஞர்
பட்டத்தைப் பெற்றார்.
கமலா ஹாரிஸ் கலிபோர்னியா சட்ட அமைப்பின் மூலம் படிப்படியாக பொது
வாழ்வில் உயர்ந்தவர். 1990 இல் கலிபோர்னியாவின் ஸ்டேட்
பாரில் அனுமதி பெற்ற பிறகு, கமலா ஹாரிஸ் அலமேடா கவுண்டியில்
ஒரு துணை மாவட்ட வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1998 இல் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் தொழில் குற்றவியல்
பிரிவின் நிர்வாக வழக்கறிஞரானார். தொடர்ந்து, 2000 இல்,
அவர் அதன் சமூகம் மற்றும் சுற்றுப்புறப் பிரிவின் தலைவராக
நியமிக்கப்பட்டார், அந்த நேரத்தில் அவர் மாநிலத்தின் முதல்
குழந்தைகள் நீதிப் பணியகத்தை நிறுவினார். 2003 இல், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞரானார். 2010 இல் கலிஃபோர்னியா அரசின் தலைமை வழக்கறிஞரானார் (அட்டர்னி ஜெனரல்).
டக்ளஸ் எம்ஹாஃப் என்ற வழக்கறிஞரை 2014 ஆம்
ஆண்டு மணந்தார், டக்ளஸ் எம்ஹாஃப் அவர்களின் முதல்
திருமணத்தில் அவருக்குப் பிறந்த இரு பிள்ளைகளின் மாற்றாந் தாயும் ஆவார்.
"ஸ்மார்ட் ஆன் க்ரைம்: எ கேரியர் ப்ராசிகியூட்டர்ஸ் ப்ளான் டு மேக் அஸ்
சேஃபர்" மற்றும் "தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்: ஆன் அமெரிக்கன் ஜர்னி"
என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
அரசியல் நுழைவு:
கமலா ஹாரிஸ் பொதுச் சேவையில் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கையைக் கொண்டவர்.
சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் பதவியை வகித்த முதல் பெண்மணி மற்றும் முதல்
ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்த
முதல் பெண்மணி, முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல்
தெற்காசியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கலிபோர்னியாவில் இருந்து
தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க செனட்டரான கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது
ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்க செனட்டர் ஆவார்.
சட்டமன்றத்தில் மதிப்பு மிக்க பொறுப்புகளை வகித்தவர். உள்நாட்டுப்
பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரக் குழு, புலனாய்வுத்
தேர்வுக் குழு, நீதித்துறைக்கான குழு மற்றும் நிதிநிலை
அறிக்கை குழு ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.
2019இல் அடுத்த அமெரிக்கத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை அவர்
அறிவித்தார், ஆனால் அந்த ஆண்டு இறுதிக்குள் போட்டியிலிருந்து
விலகினார். ஆனால், ஆகஸ்ட் 2020 இல்,
மக்கள் கட்சியின் அமெரிக்கத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு
செய்யப்பட்ட ஜோ பைடன் கமலா ஹாரிசை, தனது துணைத் தலைவர் என
அறிவித்தார். இதன் மூலம் பெரிய கட்சியால் தேசிய அலுவலகத்திற்குப்
பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் மற்றும் தெற்காசிய வம்சாவளியைச்
சேர்ந்தவராகவும் அறியப்பட்டார்.
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் நவம்பர் 2020 இல் நடந்த தேர்தலில் வென்றனர். இருவரும் சிறப்பாக அமெரிக்க ஆட்சியை வழி
நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் துணைத் தலைவராக, 2021ஆம்
ஆண்டு முதல் தற்போது வரை இப்பதவிக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
இப்பொழுது அடுத்து வரும் 2024 தேர்தலுக்குப்
பிறகு அடுத்த அமெரிக்கத் தலைவர் என்ற எல்லையைத் தொடவிருக்கிறார். அமெரிக்கத்
தலைவர் தேர்தலில் ஜோ பைடன் விலக்கிக் கொண்டு கமலா ஹாரிசை பரிந்துரைத்தார்.
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணைத்
தலைவராக பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களில் அமெரிக்காவைப்
பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், உலகளாவிய கூட்டணிகளை
வலுப்படுத்த உதவுவதற்காக 150 க்கும் மேற்பட்ட உலக
தலைவர்களைச் சந்தித்துள்ளார் என்பது அயல்நாட்டு உறவைத் திறமையுடன் கையாளக்
கூடியவர் என்பதைக் காட்டுகிறது.
கமலா ஹாரிஸ் அமெரிக்கத் தலைவரானால் சிறுபான்மையினர், மகளிர் மற்றும் தெற்காசியர்களுக்கு அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில்
பிரதிநிதித்துவம் கிடைக்கும். சட்ட அமலாக்கம், சட்டமன்றப்
பணி மற்றும் நிர்வாகத் தலைமை ஆகியவற்றில் விரிவான அனுபவத்தையும், சிக்கலான தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளைக் கையாளவும் நன்கு பயிற்சி
கொண்டவராகவும் உள்ளவர் கமலா ஹாரிஸ். சமூக நீதி, பொருளாதார
சமத்துவம், சுகாதாரம், உள்ளூர் வேலைகள்
மற்றும் பொருளாதார வாய்ப்புகள் உருவாக்குதல், அயல்நாட்டினர்
குடியேற்றம், வாக்களிக்கும் உரிமைகள், இனப்பெருக்க
உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்நாட்டுப்
பாதுகாப்பு, துப்பாக்கி வன்முறை தடுப்பு, புலனாய்வு மற்றும் குற்றவியல் நீதி சீர்திருத்தம் போன்ற முக்கிய
பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருபவர் என்பதால் இவற்றில் வரவேற்கத் தக்க
மாறுதல்களும் முன்னெடுப்புகளும் ஏற்படும்.
அமெரிக்கக் கனவு:
எந்த நிலையில் பிறந்த எவரும் கடின உழைப்பு முயற்சிகள் மூலம்
சமுதாயத்தின் ஓர் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பது அமெரிக்கக் கனவு என்று
சொல்லப்படுகிறது. அமெரிக்கா கட்டி எழுப்பப்பட்டதற்கு, வளர்ந்ததற்குக்
காரணம், இந்த அடிப்படை நம்பிக்கைக்கு எந்த
இடையூறும் தடங்கலும் இதுவரை நிகழாததால்தான். 'உன் உயர்வு
இருப்பது உன் கையில். . . உன் முயற்சியி. . . '
என்பது அமெரிக்க மக்களின் வாழ்வியல் கோட்பாடு. அதற்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்வது அயல் நாட்டிலிருந்து குடியேறிய புலம்
பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்களும், முன்னர் ஒடுக்கப்பட்ட
மக்களின் வழித்தோன்றல்களும் டொனால்ட் டிரம்ப் போன்ற பரம்பரை வெள்ளையின,
செல்வந்தர் குடும்பங்களில் பிறந்தவர்களுக்கு நிகராக உயர்
பதவிகளையும், அதிகாரம் மிக்க தலைமைப் பொறுப்புகளை அடையும்
நிலை. முன்னர் பராக் ஒபாமா, இன்று கமலா ஹாரிஸ்
அமெரிக்கக் கனவை வென்றெடுக்கும் எளிய பின்னணி கொண்டவர்களாக உலகிற்கு அமெரிக்காவின்
பெருமையை உணர்த்தி வருகிறார்கள்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கமலா ஹாரிஸ் என்ற தமிழ்மகள் அமெரிக்கத்
தலைவராவது தமிழர்களின் பெருமை.
"சக்தி" பெண்ணிதழ்
செப்டம்பர் 2024
ஆற்றலின் மறுபெயர் கமலா ஹாரிஸ்
https://archive.org/details/sakthi-sep-2024/page/77/mode/2up
#சக்தி, #வரலாறு, #அமெரிக்கா, #Themozhi