பெண்களின் வாழ்வுக்காக, பெண்களின்
விடுதலைக்காக, பெண்களின் உயர்வுக்காக, பெண்களின்
உரிமைக்காக, பெண்களின் கல்விக்காகக் குரல் கொடுத்தவர்
பாரதியார் என்பதை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. பெண் கல்விக்காக
பாரதி "குறளும்" கொடுத்துள்ளார்.
"பெண்மை யறிவோங்கப் பீடுயுயரும்;
பெண்மைதான்
ஒண்மையுற வோங்கு முலகு"
இது பாரதியார் பெண் கல்வியை வலியுறுத்தி எழுதிய குறள்.
ஆசியராகவும் துணை ஆசிரியராகவும் சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா,
கர்மயோகி, சூரியோதயம், தர்மம்,
பாலபாரத் முதலான இதழ்களில் பாரதியாரின் இதழியல் பங்களிப்பு
இருந்தது. இவ்வரிசையில் "சக்ரவர்த்தினி" என்ற மகளிர் மாத இதழ்
தொடங்கப்பட்ட பொழுது அதற்கு ஆசிரியர் பொறுப்பேற்றார். அப்பொழுது
சுதேசமித்திரனிலும் துணையாசிரியராக இருந்தார்.
பாரதியார் முதன் முதலாக ஆசிரியர் பொறுப்பேற்றது மகளிர் இதழுக்கே.
பி. வைத்தியநாதய்யர் எனும் புத்தக விற்பனையாளர் பிரிட்டிஷ்
மகாராணியாரைச் சிறப்பிக்கும் நோக்கில் தொடங்கிய இதழ் இது. "தமிழ்நாட்டு
மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதந்தரப் பத்திரிகை" என்ற
இதழ் தொடங்கப் பட்ட நோக்கத்தைக் கொள்கை அறிவிப்பாகக் குறிப்பிட்ட
சக்ரவர்த்தினி முதல் இதழ் 1905 ஆகஸ்ட்டில் வெளியானது.
சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியராக ஓராண்டு
பணியாற்றிய பாரதியார் பின்னர் 1906 ஆகஸ்டில்
பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த இதழ்களில் . . .
"பெண்மை யறிவோங்கப் பீடுயுயரும்; பெண்மைதான்
ஒண்மையுற வோங்கு முலகு"
என்று பெண் கல்வியை வலியுறுத்தும் குறட்பாவை அவரே எழுதி
தலையங்கத்தின் மேற்புறம் அச்சிடுமாறு செய்தார்.
இந்த இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகும் பொழுது தான் எழுதிய
கட்டுரையில் (ஆகஸ்டு-1906) கீழ்வருமாறு
குறிப்பிடுகிறார் பாரதியார்.
"நமது பத்திரிகையின் முதற்பக்கத்திலே மாதந்தோறும்
எழுதப்பட்டிருக்கும் குறளை நேயர்கள் கவனித்திருப்பார்களென்றே நம்புகிறோம்.
"பெண்மை யறிவோங்கப் பீடுயுயரும்; பெண்மைதான்
ஒண்மையுற வோங்கு முலகு"
அறிவின் வளர்ச்சியினாலே பெண்மைக்குச் சிறப்புண்டாகும். பெண்மை
பெருமையுடன் கலந்தவிடத்து அந்நாடு சிறப்படைவதாகும் என்பது பொருள். இதைத்
தமிழ்நாட்டார் நன்கு மனங்கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை."
பெண் கல்வியின் முக்கியத்துவத்தைத் தமிழர்கள் கருத்தில் கொள்வதில்லை
என்ற பாரதியாரின் வருத்தம் தெளிவாகவே இவ்வரிகளில் வெளிப்படுவதைக் காணலாம்.
'செம்மை மாதர்' என்றும் 'புதுமைப் பெண்' என்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்த
கனவு கண்ட பாரதியாரின் தொடக்கக் கால இதழியல் கோட்பாடு பெண் கல்வியின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தொடங்கியதில் வியப்பில்லை அன்றோ!!
உதவிய நூல்:
'பாரதியார்'. பெ. சு. மணி. தமிழில் இதழியல்.
பதிப்பாசிரியர் இ. சுந்தரமூர்த்தி மற்றும் மா.ரா. அரசு. உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், 2011 முதல் பதிப்பு. பக்கம்: 217-218.
Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts
Friday, October 4, 2024
பெண்கல்விக்காக பாரதியின் குறள்
Subscribe to:
Comments (Atom)