Showing posts with label மின்தமிழ்மேடை. Show all posts
Showing posts with label மின்தமிழ்மேடை. Show all posts

Wednesday, May 28, 2025

அட்சய திருதியை எவருடைய பண்டிகை ?

 
ஒவ்வொரு ஆண்டும் இளவேனில்  காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை அட்சய திருதியை, வட இந்தியாவில்  இந்து மாதமான வைசாக வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் அக்ஷய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) பண்டிகை கொண்டாடப்படும்.  அதே நாளானது  தமிழகப்பகுதிகளில் சித்திரை மாதத்து  வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளாக இருக்கும். எனவே தமிழகத்தில் சித்திரை வளர்பிறை  மூன்றாம் நாள்  அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம்.
 
அட்சய  / அக்ஷய என்றால் குறைவற்ற  என்ற பொருள்; அட்சய பாத்திரம் என்பது அதே பொருளின் அடிப்படையில்  உருவான சொல்தான்.  திருதியை என்றால் 3 ம் நாள் என்பதாகும்.   இது நாட்காட்டியில் பழைய முறையில் வானியல் அடிப்படையில் நாட்களைக் கணக்கிடும் முறையில் அமைகிறது.  
வளர்பிறை (சுக்கில பட்சம்/நிலவொளி அதிகரிக்கும் நாட்கள்) மற்றும் தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்/நிலவொளி குறையும் நாட்கள்) நாட்கள் அமாவாசை (அல்லது) பௌர்ணமி அடுத்த நாள் முதலாகத் தொடக்கம் கொண்டு  கணக்கிடப்படுவது வழக்கம். 
 
இவ்வாறு தொடங்கும் வரிசையில்  மூன்றாவது நாள் திரிதியை எனக் குறிப்பிடப்படும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. "திருதியை", 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி,  12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அல்லது) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
 
அட்சய திருதியை நாளில் அசையும் அசையா சொத்துக்களில் பணம் முதலீடு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது வணிகர்கள் தொடக்கி வைத்த வணிகத் தந்திரம்.  குறிப்பாக இது  தங்க நகை  வியாபாரிகளின் முன்னெடுப்பு.  அட்சயதிருதியை நாளில் 'குன்றிமணி அளவு தங்கம் வாங்கினாலும் அது குன்று போலப் பெருகும்' என்று கூறும் வழக்காறு மக்களிடையே நிலவி வரும் காரணத்தால் கடன் வாங்கியாவது குன்றிமணி அளவு  தங்கம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை  இது மக்களிடம் வளர்த்துவிட்டது.சென்ற ஆண்டு வாங்கினோமே  அதனால்  செல்வம் கொழித்ததா என்பது ஆராயப்படுவதில்லை.  அட்சய திருதியை கொண்டாட்டம் அண்மைய வழக்கம்.  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அட்சய திருதியை என்பதை ஆன்மீகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.  குறிப்பாக 50 அல்லது 60 அகவை முதிர்ந்த பெரியோர்களைக்  கேட்டாலோ, அக்காலத்து ஏப்ரல் மே மாதங்களில் வெளியான பத்திரிக்கை செய்திகள், கதைகள் போன்றவற்றை மீள்பார்வை செய்தாலோ இந்த உண்மை தெளிவாகும்.  இது மக்களின் ஆசைக்குத் தூபம் போட்டு வணிக நோக்கில் பெரிதாக்கப்பட்ட பண்டிகை.
 
 
 

 
தீபாவளியைப்  போலவே  சமணர்களிடம் இருந்து வைதீகச் சமயத்தார் உள்வாங்கிக் கொண்டது இந்த அட்சய திருதியை பண்டிகையாகும்.  
 
சமணத்தில், அட்சய திருதியை நாள் என்பது, சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிசபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாகக் கருதப்படுகிறது.
 
'வர்சி தப' என்றும்  சமணர்கள் இவ்விழாவைக் குறிப்பிடுவது வழக்கம். ஓராண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்சி தப எனப்படும் நோன்பைக் கடைப்பிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு செய்கின்றனர். இந்நாளில் சமணர்கள் உண்ணாநோன்பு இருப்பதும் வழக்கமே.
 

 
சமண பண்டிகையான தீபாவளியை  எடுத்துக் கொண்டு அதற்கு ஒன்றுக்கும்  மேற்பட்ட  கதைகளாக நரகாசுரன் வதம்,ராமர் சீதை அயோத்தி திரும்பிய நாள், லக்ஷ்மி பூஜை  நாள் என்று பற்பல காரணங்களைக் காட்டி இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் வழக்கம் போலவே;  வைதீகச் சமயம் இந்நாளுக்கும்  ஒன்றுக்கு மேற்பட்ட பல புராணக் கட்டுக் கதைகள் கொடுத்துள்ளது; அவை
 
1.  பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
2.  ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்
3.  திரேதாயுகம் ஆரம்பமான நாள்
4.  பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்
5.  அன்னபூரணி தேவி அவதரித்த நாள்
6.  கங்கை நதி பூமியைத் தொட்ட நாள்
7.  குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
8.  வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்
9.  குசேலர் கிருஷ்ண பகவானைச் சந்தித்த நாள்
இவற்றில் இழையோடி இருக்கும் கருத்து செல்வச் செழிப்பின்  தொடக்கம் என்பதாக இருப்பதைக் காண முடிகிறது.
 
இந்துமதத்தினர் தங்கள் சமயத்தில் அட்சயதிருதியை இணைத்துக் கொண்டது போலவே புத்த சமயத்தினரும் பிழையாக அட்சயதிருதியை நாளை மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும் அட்சயபாத்திரம் கிடைத்த நாளாகக்  கூறி வருகிறார்கள்.   மணிமேகலை காப்பியம் சொல்லும் தகவலுடன் இக்கருத்து  முரண்படுகிறது.  அட்சயதிருதியைக்கும் மணிமேகலை  அமுதசுரபி  என்ற  அட்சய பாத்திரத்தைப் பெற்ற கதைக்கும் தொடர்பில்லை. 
 
மணிபல்லவம் தீவில்  (ஆபுத்திரன் பொய்கையில் எறிந்த) அமுதசுரபி  மணிமேகலைக்குக் கிடைத்த நாள்  வைகாசி விசாகம் முழு நிலவு நாளாகும். இந்த நாள் புத்த பூர்ணிமா நாள்  என்று அழைக்கப்படும். புத்தர் இவ்வுலகில் அவதரித்த திருநாளாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் இந்தப் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
அதாவது, வரும் மே 12, 2025 வைகாசி விசாகம் / புத்த பூர்ணிமா என்ற முழுநிலவு நாள், இது வட இந்திய நாட்காட்டி கணக்கு முறை; பார்க்க:https://www.drikpanchang.com/panchang/month-panchang.html?date=12/05/2025)
 
மணிபல்லவத்தீவின் 'கோமுகி' என்னும் பொய்கையிலிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் என அப்பகுதியைக்  காத்து நிற்கும் தீவதிலகை என்பவள் மணிமேகலையிடம் கூறுகிறாள்.  இதுதான் மணிமேகலை காப்பியத்தில் உள்ள தகவல்.
(ref : https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017366_மணிமேகலை.pdf)
எனவே, வைகாசி விசாக நாள் என்பது வேறு, அட்சயதிருதியை நாள் என்பது வேறு. 
 
ஒரு பண்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பண்டிகைக்கு,  நம்ப முடியாத வகையில் பல்வேறு  கதைகள் சொல்லப்பட்டால்,  அவை யாவும் அப்பண்டிகையைத்  தங்கள் வழக்கத்தில் உள்வாங்கிக் கொள்ளப் புனையப்பட்ட புனைவுகள் என்பதையும், அப்பண்டிகை  உண்மையில் வேறு ஒருவருக்குச் சொந்தம் என்பதற்கான அறிகுறி அது என்பதையும்  புரிந்து கொள்ளலாம்.  பிறகு முறையான ஆய்வை முன்னெடுப்பதன் மூலம் அப்பண்டிகை எவருடைய வழக்கம் என்பதும் தெளிவாகும்.   இது போன்ற விழாக்களும் கொண்டாட்டங்களும் பண்பாட்டுக் கலப்பின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.  

நன்றி:
தமிழணங்கு

அட்சய திருதியை
முனைவர் தேமொழி

தமிழணங்கு - ஜூன் 2025 (பக்கம்:3-6)
https://archive.org/details/thamizhanangu-june-2025/page/3/mode/2up

&
மின்தமிழ்மேடை— 30 [ஜூலை  - 2022]
&
முக்குடை - ஜூலை 2025 (பக்கம்: 21 -23)


"அட்சய திருதியை" என்ற கரும்புச்சாறு திருவிழா!
மின்தமிழ்மேடை  - 30 [ஜூலை  - 2022]
https://archive.org/details/THFi-QUARTERLY-30/page/n41/mode/2up















































































































































#தமிழணங்கு,  #மின்தமிழ்மேடை, #வரலாற்றில் பொய்கள், #Themozhi 

 

Friday, May 2, 2025

மனிதத்தின் பன்முகம்

மனிதத்தின் பன்முகம்



அடுத்து ஆட்சியைப் பிடிக்க
அரசியல்வாதிகள் போடுவர் திட்டம்
இவரது குட்டை அவர் உடைக்க
அவரது முகத்திரையை இவர் கிழிக்க
குப்பையைக் கிளறிக் கிளறி
தாங்கவியலாத முடை நாற்றம்
நிரந்தரமாக என்றுமே பட்டை நாமம்

நொந்ததே என்று தளர்பவருக்கும்
வந்திடும் ஒரு நாள் புது வாழ்வு
கடந்ததை எண்ணிக் கலங்காது
இழந்ததை எண்ணிப் புலம்பாது
வருவதை எதிர்கொள்வோருக்கு
வாழ்வில் என்றுமே தாழ்வில்லை

வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்
கொஞ்சமேனும் கருணையற்ற பிள்ளை
நெஞ்சமதில் அன்பின்றித் துரத்தியதால்
பஞ்சைப் பராரியாய் அலையும் பெற்றோரே
நஞ்சு தோய்த்து அவர் உதிர்க்கும் இன்மொழியை
வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்

உயிர் குடிக்கும் துணிவு பெற்றது
போலி மதவாதிகளின் கூட்டம்
கடவுள் எமக்கே உடைமை என்றே
கூசாது பொய்யுரைத்துப்  போராட்டம்
மாந்தர் யாவரும் சமம் என்றாலோ
சகித்திடாது செய்வர் ஆர்ப்பாட்டம்
உண்மையை மறைத்துப் பழியுரைத்து
நன்றே நடத்திடுவர் பித்தலாட்டம்

எல்லாமே பணம் எல்லாமே பணம்
பிச்சாண்டியை மதிப்பவருண்டோ
பெருமைமிகு பெரியகோவிலில்
சொக்கரிடமும்  மீனாளிடமும் கருணை வேண்டி
சிறப்புத் தரிசனம் செய்யச் சென்றால்
சொக்கருக்கும் வேண்டுமந்தப் பணம்
காசு பணம் துட்டு மணி மணி

எண்ணிக் குமைந்து மந்தராகியவரும்
பண்பினில் சிறந்தால் மாந்தராகிவிடுவார்
அன்பில் திளைத்துப் புனிதராகியே
மன்பதை காத்திடும் தன் மனச்செல்வம்

பசிப்பிணியும் மாநிலத்தே ஒழிந்திடுக
பல்லுயிரும் இன்புறவே நல்லறம் ஓங்கிடுக
பாரெல்லாம் அன்புநெறி தழைத்திடுக
பாங்குடனே சிறந்தென்றும் வாழ்ந்திடுக

சக்தி வடிவென்றே பாடலெழுதுவார் ஒரு சிலர்
மறைப்போசைப் பாடலெழுதுவார் மறு சிலர்
பெண்ணுக்குப் பரிந்து பாடலெழுதுவார் அவர்
இது பொல்லாத உலகம் பெண்ணே
இது புரியாதென்றால் வாழ்வில்லை கண்ணே


நன்றி:
தமிழணங்கு - மே 2025
https://archive.org/details/thamizhanangu-may-2025/page/43/mode/2up

மின்தமிழ்மேடை  - 4 [ஜனவரி  - 2016]
https://archive.org/details/THFi-QUARTERLY-4/page/183/mode/2up


#தமிழணங்கு, #மின்தமிழ்மேடை, #கவிதை, #Themozhi 



Monday, November 14, 2022

அகம் புறம் வாழ்வு சிறக்க திருக்குறள் உணர்த்தும் குறிப்பறிதல் திறன்





முன்னுரை :
மக்களின் அக வாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் விளக்கிக் கூறும் சங்க இலக்கியங்களை அகம், புறம் எனப் பாகுபாடு செய்வது தமிழ் இலக்கிய மரபு. மக்களின் வாழ்வியலில் அவர்களின் காதல் வாழ்க்கையை அகம் என்றும், அவர்களின் வீரம், கொடை, புகழ் போன்றவற்றைச் சிறப்பிப்பன புறம் என்றும்,  அகம் புறம் ஆகிய இருதிணைகளும் பகுத்துக் கூறுகின்றன. இதனை;  
         'அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான், அதனாலாய பயன் தானே அறிதலின் அகம் என்றார்' (தொல். பொருள். இளம். 3) என்றும்,
         'புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் ஆகலான் அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார்' (தொல். பொருள். இளம் 3) என்றும்'
இளம்பூரணர் விளக்குவார்.

தமிழ் என்றாலே அதன் சிறப்பு அகம் என்பது தமிழறிஞர்களின் துணிபு. சங்க இலக்கியமாகிய  குறிஞ்சிப் பாட்டு "ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது" என்னும் குறிப்பைக் கொண்டுள்ளது.  இதனால், ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக் கபிலர் நூலை இயற்றினார் என்ற இக்குறிப்பே   'அகம்'  என்ற இலக்கியப் பாகுபாடு தமிழ் தவிர்த்த பிற மொழிகளில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

தமிழின் இச்சிறப்பை 'தமிழ்ச்செல்வம்' என்பார் பாவேந்தர் பாரதிதாசன். தன் மகள்  இத்தகைய தமிழ்ச்செல்வமாக சிறப்புற்று வாழ விழைகிறார் அவளைப்  பெற்றவர்.
         புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
         புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
         புலவர் கண்ட நூலின் - நல்
         திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
         செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
         செல்வம் ஆக மாட்டாயா?
அக்காலம் முதல் இக்காலம் வரை இத்தகைய அகம் புறம் திணை வேறுபாடு  தமிழுக்கே உரிய சிறப்பாகப் போற்றப்படுகிறது என்பதை இவ்வரிகள் மூலம் அறிய முடிகிறது.  

அத்துடன், அதே பாடலில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்,  அறம் எது? மறம் எது? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும் வைத்துள்ளார்.

         அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
         அறிகிலாத போது - யாம்
         அறிகிலாத போது - தமிழ்
         இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
         இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
         இயம்பிக் காட்ட மாட்டாயா?
என்று பாரதிதாசன் கூறுவது புறப்பொருள் குறித்து அறிய திருக்குறள் ஒரு சிறந்த நூல் என்பதையும் உணர்த்துகிறது.  

திருக்குறளின் முப்பால்களில் அறமும் பொருளும்  புறவாழ்வின் வாழ்வியல் விழுமியங்களின் தொகுப்பாக அமைந்தவை.  இவ்விரண்டையும் தவிர்த்து  மூன்றாவதாக வள்ளுவர் வகுத்து அளித்த காமத்துப் பால் குறள்கள் அகப்பொருள்  குறித்து  அறிய உதவும் வழிகாட்டி.

குறிப்பறிதல்:
இவ்வாறு 'அகம்' (காமத்துப்பால்) எனவும் 'புறம்' (அறத்துப்பாலும் பொருட்பாலும்) எனவும்  வகுத்துக் கொண்டாலும், இவ்விரு அகம் புறம் பிரிவுகளிலும் "குறிப்பு அறிதல்" என்ற தலைப்பில் இரு அதிகாரங்களைக் கொடுத்து அதற்கான கருத்துக்களையும் வள்ளுவர் கொடுத்துள்ளதைக் காண்கிறோம்.  
'குறிப்பு அறிதல்' என்ற 71 ஆவது அதிகாரம் பொருட்பாலின் அமைச்சியல் கீழ் இடம் பெறுகிறது.
மற்றொரு 'குறிப்பு அறிதல்' என்ற 110 ஆவது அதிகாரம் இன்பத்துப் பாலின் களவியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பறிதல் என்பது உள்ளக்குறிப்பைத் தெரிந்துகொள்வது என்ற பொருள் தரும். அதாவது, பிறர் மனத்தில் உள்ளதை அவர் கூறாமலேயே அறிந்து கொள்ளும் ஆற்றல்.  குறிப்பறிதல்.  பிறர் தம்  உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலேயே  அவருடைய மனக் குறிப்பை அறிய உதவும் கருவிகளாக முகமும் கண்ணும் வள்ளுவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டவருக்கு மற்றவர் உள்ளத்தின் அகக்குறிப்பை அறிந்துகொள்வது எளிது.

(I) பொருட்பாலின் குறிப்பு அறிதல் அதிகாரம்:
[பொருட்பால்-அமைச்சியல்-71. குறிப்பறிதல்]
  —  "குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறிதல். இஃது அமைச்சியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறியது என்னையெனின், குறிப்பறிதல் அரசர்க்கும் வேண்டுமாதலின், 'இறந்தது காத்தல்' என்னும் தந்திர உத்தியால் கூறப்பட்டது என்க. இது பெரும்பான்மையும் அரசர்க்கும் வேண்டுமாதலின், மன்னரைச் சேர்ந்தொழுகலின் பின் கூறப்பட்டது,"  என்பது மணக்குடவர் தரும் அதிகார உரை விளக்கம்.

  —  "அஃதாவது , அரசர் கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல், இது மன்னரைச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையாததாகலின் அதன் பின் வைக்கப்பட்டது, "  என்பது பரிமேலழகர் தரும்  அதிகார உரை விளக்கம்.  

  —  "ஒருவருக்கொருவர் குறிப்பறிந்து பழகுதல். அரசன் குறிப்பறிந்து அமைச்சர் பழகுதலும் அவ்வாறே ஆள்பவன் மற்றவர்களின் குறிப்பறிந்து பழகுதலும் எல்லாம் இதிலடங்கும், " என்பது தமிழண்ணல் தரும்  அதிகார உரை விளக்கம்.  

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.  பொருட்பாலின் குறிப்பு அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் 10 குறள்களில் கூறும் கருத்துக்களைக் கீழ்க் காண்பது போலத் தொகுக்கலாம்:
ஒருவர் தன் மனதில் என்ன எண்ணுகிறார் என்பதை அவரது முகமே காட்டிவிடும்.  கண்ணாடி தன் முன் நிற்பவர் உருவத்தைக் காட்டுவது போலவே, ஒருவரது உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவர் கூறுவதற்கு முன்னர் அவரது முகம் காட்டிக் கொடுக்கும்.  ஒருவர் ஒன்றும் கூறாத பொழுதே அவருடைய முகக்குறிப்பால் அவர் உள்ளத்து எண்ணங்களைப் புரிந்து கொள்ளுவது உலகின் மிகச் சிறந்த பண்பு. அவ்வாறு ஒருவர் பார்வையில் தோன்றும் வேறுபாடுகளைக் கொண்டே எதிரில் உள்ளவர்  நட்பு எண்ணம் கொண்டவரா அல்லது பகை எண்ணம் கொண்டவரா எனவும் அறிந்துவிடுவார்கள். அவ்வாறு மற்றவர் முகக்குறிப்பை அறியும் ஆற்றல் உள்ளவருக்கு அவரது கண்களே அளவிடும் கருவியாக அமையும். ஒருவர் மனதில் எழும் எண்ணங்களை தெய்வத்தால் மட்டுமே அறிய இயலும், எனவே அவ்வாறு புரிந்துகொள்ளும் திறன் கொண்ட ஒருவர் தெய்வத்திற்கு இணையானவர். அத்தகைய ஆற்றல் கொண்ட ஒருவரை எதைக் கொடுத்தும் துணையாக்கிக் கொள்ள வேண்டும்.  மற்றவர் எண்ணத்தைக் குறிப்பால் உணரக் கூடியவர்  பிறரைத் தோற்றத்தில் ஒத்து இருந்தாலும் அவர் மற்றவரைவிட அறிவால் மேம்பட்டவர்.  அத்தகைய  குறிப்பறியும் ஆற்றல் கொண்டவராக ஒருவர் இருந்தால் அவர் முன் சென்று நின்றாலே போதும், பேச வேண்டிய தேவையில்லை.   முகக் குறிப்பால் மற்றவர் எண்ணத்தை அறிய முடியாதவருக்கு அவரது கண்களால் பயனில்லை.  

இந்த அதிகாரத்தின் புகழ் பெற்ற குறள்;
          அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
          கடுத்தது காட்டு முகம்.

(II) இன்பத்துப் பாலின் குறிப்பு அறிதல் அதிகாரம்:
[காமத்துப்பால்-களவியல்-110. குறிப்பறிதல்]
  —  "குறிப்பறிதலாவது தலைமகள் உள்ளக் குறிப்பினைத் தலைமகன் அறிதல்,"  என்பது மணக்குடவர் தரும் அதிகார உரை விளக்கம்.

  —  "அஃதாவது, தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம். தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின், தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது,"  என்பது பரிமேலழகர் தரும்  அதிகார உரை விளக்கம்.  

  —  "தலைவியைக் கண்டு அவள் அழகால் கவரப்பட்டு அவளை வியந்து நின்ற தலைமகன் அவளுடன் நெருங்கி உரையாட, உறவாட, அவள் குறிப்பினை அறிய முற்படுகின்றான். குறிப்பறிதலாவது அவள் உள்ளக் கருத்தினை அறிதலாகும்," என்பது  சி. இலக்குவனார் தரும்  அதிகார உரை விளக்கம்.  

காமத்துப் பாலில், களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் தலைவியர் உள்ளநிலை உணர்ச்சிகள், இருவருடையே காதல் அரும்பி மலரும் வளர்ச்சியை, அதன் பின்னர் உள்ளம் இணைந்த அன்பினால்  அவர்கள் கற்பு என்ற இல்லற வாழ்வில் இணைவதை வள்ளுவர் காமத்துப்பாலில் அழகுற விவரிக்கிறார். களவியலின்  குறிப்பறிதல் அதிகாரம் தலைவன் தலைவியின் உள்ளக் கிடக்கையை எவ்வாறு அவளது செயல்கள் மூலம் குறிப்பால் அறிகிறான் என்பதை விவரிக்கும். கண்ணுடன் கண் பேசும் மொழி, வாய்ச் சொல்லின் தேவையற்ற நிலை காதலர்கள் தம் துணையின் குறிப்பறிதலின் சிறப்பு.

காமத்துப் பாலின் குறிப்பு அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் 10 குறள்களில் கூறும் கருத்துக்களைக் கீழ்க் காண்பது போலத் தொகுக்கலாம்:
காதலியின் பார்வை நோய் தருவதாகவும், அதே வேளை அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் அமைகிறது. அவளது கள்ளத்தனமான கடைக்கண் பார்வை காதலன் தன்னை நெருங்கிவிட்டதில் அவள் உள்ளம் மகிழ்வதைக் காட்டுகிறது.  காதலனின் பார்வைக்கு நாணித்  தலை கவிழ்ந்த வண்ணம் பார்க்கும் பார்வை அவள் அவன் உறவை விரும்புவதைக்  காட்டி  காதலனின் நெஞ்சில் அன்பை வளர்க்கிறது.  காதலன் பாராத பொழுது அவனை நோக்கி பின் தனக்குள் புன்னகைக்கும் அவளது இதழ்களில் அரும்பும் முறுவல் அவள் உள்ளத்தின் இசைவைக் காட்டுகிறது. காதலியின் கடைக்கண் பார்வை அவளது காதலை உறுதி செய்கிறது. அயலார் போன்ற கோபப் பார்வையும் கடுமையான மொழியும் காதலியின் காதலை மறைக்காமல், மாறாக  அவளது அன்புள்ளத்தையே வெளிப்படுத்துகிறது. காதலர்களின் அயலார் போன்ற பொய்யான நடிப்பும், பகையுணர்வற்ற கடுமையான சொல்லும் பார்வையும், அவர்கள் உள்ளத்தால் உறவாகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. காதலன் பார்க்கும் பொழுது பரிவு கொண்ட பார்வையுடன் அவள் முறுவலிக்கும்பொழுது அவள் அழகான சாயலுடன் அவனுக்குத் தோன்றுகிறாள். பொது இடத்தில் அறிமுகமற்றவர் போலப் பாசாங்கு செய்து புதியவர் ஒருவரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்வது காதல் உணர்வின் குறிப்பைக் கொடுக்கிறது. கண்களும் கருத்தும் ஒத்தவர்களாக மாறிய நிலையில்  அவர்களுக்கு இடையே உரையாடலுக்குத் தேவை இல்லாமல் போகிறது.

இவ்வாறு காதலனும் காதலியும் போலியாக பகைகொண்டவர் போலவும் புதியவர் போலவும் பொய்மையாகப் பார்த்துக் கொள்வதன் மெய்யான குறிப்பையும், அவர்களது கடுமொழியின் பின்னேயும் கடைக்கண் பார்வையின் பின்னேயும் இருக்கும் காதலின்  உண்மையான  குறிப்பையும்   உணராவிட்டால் அவர்கள் காதல் வளர வாய்ப்பில்லை.  காதலிப்பவர் காட்டும் பாசாங்கு  குறிப்பின் சரியான  உண்மையான பொருள்  அறிதலில் கவனமாக இருந்தாலே இல்லறம் வரையில் வாழ்வு உயரும். வாய்ச் சொல்லின்றி பார்வையினால் காதலரின் உள்ளக் குறிப்பு அறிதல் என்ற திறனின் தேவையை குறிப்பறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் இவ்வாறு உணர்த்துகிறார்.

இந்த அதிகாரத்தின் புகழ் பெற்ற குறள்;
          கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
          ளென்ன பயனு மில.

முடிவுரை:
அகவாழ்விற்கும் புறவாழ்விற்கும் குறிப்பறியும் ஆற்றல் பொதுவானது என்பதையும், அந்த ஆற்றல் வாழ்வை மேன்மைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை வள்ளுவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
 

குறிப்பு:  குறிப்பறிதல் என்ற அதிகாரத்தின் பெயருக்கு "நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்" (தொல்காப்பியம், களவியல்: 1042) என்ற  தொல்காப்பியரின் களவியல் நூற்பா காரணமாயிருக்கலாம் என்பர்.  தலைமக்கள் இருவரின் நோக்கங்களும் (கண்களும்) அவர் தம் கருத்துக்களை ஒன்றுபடுத்தற்கு உணர்வினைக் கூட்டியுரைக்கும் குறிப்புரைகளாகும் என்பது இதன் பொருள்.  
பரிமேலழகர் உரையில் பொருட்பாலில் உள்ள அதிகாரம் 71றும்,  காமத்துப்பாலில் உள்ள அதிகாரம் 110தும் “குறிப்பறிதல்” என்ற தலைப்பிட்ட அதிகாரங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.  
பரிமேலழகருக்கு முற்பட்ட காளிங்கர் தம் உரையில் காமத்துப்பாலில் உள்ள குறிப்பறிதல் என்பதை “குறிப்புணர்தல்” என்று கொடுத்துள்ளார்.  
அத்துடன், ‘குறிப்பறிவுறுத்தல் ’ என்ற 128வது அதிகாரம் ஒன்றும் தலைவி உடல்மொழியால் வாய்ச்சொற்கள் இல்லாமல், தம் உள்ளக் குறிப்பைத் தலைவனுக்கு அறியச் செய்வதையும் வள்ளுவர் சொல்லிச் செல்கிறார்.


பார்வை நூல் மற்றும் தளங்கள்:
திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் மூலமும் மணக்குடவர் உரையும்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0650.html

குறள் திறன்
http://kuralthiran.com/Home.aspx





















நன்றி :
மின்தமிழ்மேடை  - 31 [அக்டோபர்  - 2022]
அகம் புறம் - சிறப்பிதழ் 
https://archive.org/details/THFi-QUARTERLY-31/page/131/mode/2up

#திருக்குறள், #மின்தமிழ்மேடை, #Themozhi  

Saturday, December 5, 2020

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்


திருப்பாவை கூறும் அறிவியல் என்ற கருத்தில் ஆண்டாளின் பாடல் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்பட்டு வருவது வழக்கம். "ஆழிமழைக் கண்ணா", "அறிவியல்" என்ற ஒரு கூகுள் இணையத் தேடலில் 300க்கும் மேற்பட்ட முடிவுகள் கிடைக்கின்றன என்பதே, அது எந்த அளவு பண்டைய தமிழர் கொண்டிருந்த அறிவியல் அறிவிற்குச் சான்றாக,  பரவலாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப் படுகிறது என்பதை அறியலாம். அடுத்து வருவது அது போன்ற ஒரு பதிவில் கொடுக்கப் பட்டிருந்த விளக்கம். 

            ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
            ஆழியுள் புக்கு முகந்து கொடு, ஆர்த்து ஏறி
            ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
            பாழியந்தோள் உடைப் பற்பநாபன் கையில்
            ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
            தாழாதே சாரங்கம் உதைத்த சரமழை போல்
            வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும்
            மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் 
                      (திருப்பாவை-4)

மழைக்குத் தலைவனே! நீ சிறிதும் உன் வள்ளன்மை ஒன்றையும் மறைக்காதே! நீ கடலுள் ஆழப் புகுந்து நீரை முகந்து பெரு முழக்கோடு வானில் ஏற வேண்டும். உலகுக்குக் காரணனான உன் மேனி போல் கறுத்து, வலிய தோள்களையும் உந்தியில் தாமரையையும் உடைய வலக்கையில் உள்ள, சக்ராயுதம் போல் ஒளிவிட்டு இடக்கையிலுள்ள வலம்புரிச் சங்கு போல முழங்கி உலகிலுள்ளார் அனைவரும் வாழும்படி நோன்பு நிற்கும் நாங்களும் நீராடவும் காலம் கடத்தாமல் பெருமான் கையிலுள்ள சாரங்க வில்லில் ஏவிய அம்பு மழை போல் பெய்வாயாக. (உரை-வைணவச் செம்மல் டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்) [1] 

‘திணைமாலை நூற்றைம்பது’ என்ற நூலின் முல்லைத் திணை குறித்த  அகப் பாடல்களிலும் கடல் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மேலெழுந்து மேகமாகி, பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற கருத்து இடம் பெறுகிறது [2].   

திணைமாலை நூற்றைம்பது:
எளிய வழியில் அகப் பாடல்கள் கூறும் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் குறித்து அறிய ‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் பாடல்கள் உதவுகின்றன. மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘ஏலாதி’ நூல் இயற்றிய அதே கணிமேதாவியார் இயற்றிய நூல் இது. இவர் கி.பி.5 - ஆம் நூற்றாண்டினர் [3].  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்ற செய்தியையும் ஏலாதி நூலின் முகவுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்நூலில், அகத்திணை ஒழுக்கம் குறித்த வெண்பாக்கள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தொடுத்துள்ள மையால் ‘திணைமாலை’ என்றும், நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும் இந்நூல் பெயர் பெற்றது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் என மொத்தம் 150 பாடல்கள் இருக்க வேண்டிய நிலைக்கு மாறாக, இந்நூலில் குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளதால் மொத்தம் 153 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியிலே காணப்பெறும் பாயிரச் செய்யுள் ஒன்றையும் கணக்கில் கொண்டால் இந்நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டதாகும். 

முல்லைத் திணைக்குரியதாக இந்த நூலில் இடம்பெறும்  31 பாடல்களின்  7 பாடல்களில் (பாடல் எண்கள்: 93, 95, 100, 104, 105, 109,114) மழை உருவாகும் அறிவியல் உண்மை இடம் பெறுகின்றது.  அதாவது, முல்லைத் திணைக்கான 31 பாடல்களைக் கணக்கில் கொண்டால், சற்றொப்ப ஐந்து பாடல்களுக்கு ஒரு பாடல் என்ற கணக்கில் மழை தோன்றும் அறிவியல் உண்மை விரவிக் கிடக்கக் காணலாம்.  இங்கு அப்பாடல்கள் திணைமாலை நூற்றைம்பது நூலில் இடம் பெரும் அதே வரிசையில் கொடுக்கப்படுகிறது [2]. 

(1)
            கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ
            இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பொருங் கடல்-
            தன்போல் முழங்கி......  (பாடல்:  93) 

விளக்கவுரை: கருமையான கடலிலிருந்து நிறைய நீரினை அருந்திய வெண்மையான தலையைக் கொண்ட முகில்கள், பெரிய கடலினில் புகுந்து மாமர வடிவுகொண்ட சூரபன்மனைக் கொன்ற முருகனின் வேலினைப் போன்று மின்னும் மின்னல்களுடன், அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் பொருமும் கடல்தனைப்  போல இடிகளை முழக்கி ஆரவாரிக்கின்றன. 

(2)
            மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி,
            கான் ஓக்கம் கொண்டு, அழகா-காண், மடவாய்!......  (பாடல்:  95) 

விளக்கவுரை: மேல்முகமாக வெப்பத்தைக் கொண்ட கதிரவன் முகந்து உட்கொண்டதால் நீர் நிறைந்த முகிலானது, கீழுள்ள புவியை நோக்கி மழையாகப் பெய்த படியினாலே, முல்லை நிலத்தின் காடுகளெல்லாம்  தழைத்தோங்கி அழகாக மாறியுள்ளதைக் காண்பாயாக  பெண்ணே!. 

(3)
            ...... ...... ...... ......  மாக் கடல்
            கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும்
            கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது ......  (பாடல்:  100) 

விளக்கவுரை: பெருங்கடலினைக்  கண்டு தன்னை நிரப்பிக் கொள்ளும்படி கடல்நீரைக் குடித்து, மழைபொழியத் தாழ்ந்து, நிறம் கருத்து,  எட்டுத் திக்குகளிலும் முகிற் கூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. கார்காலம் துவங்கிவிட்டது. ஆனால், கொடுத்த உறுதிமொழியின்படி தலைவனின் தேர் இங்கு வரவில்லை. 

(4)
            ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை,
            இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின்
            ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல்.......  (பாடல்:  104) 

விளக்கவுரை: ஐந்து நிறங்களையுடைய வானவில்லை வரைந்து வைத்து, நான்கு திக்குகளுக்கும் கடல் நீரைக் கொண்டு சென்று கொடுக்க விரும்பிய, ஈச்சம் பழத்தின் நிறங்கொண்ட மேகம், நீரை அள்ளிக் குடித்து பெரிய மேகமானது. பழைமையான உருவாகிய வானின் நீல நிறத்தைப் போன்று அதனுடன் ஒன்றாகப் பரவி,  இடிகளைக் கொண்டதாக மழையாகப் பொழிகின்ற வான் வெளியின் தன்மை போல,... 
(குறிப்பு: இப்பாடலில் வானவில்லிற்கு ஐந்து நிறம் என்று கூறுவதைக் காணலாம், ஒரு வேளை புலவர் கணிமேதாவியாருக்கு 'நிறக்குருடு' (Red-green color blindness ) என்று கூறப்படும் பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது) 

(5)
            எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்,
            கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண்........  (பாடல்:  105) 

விளக்கவுரை:  பகற் பொழுதினைத் தரும் கதிரவனின் கதிர்களால் குடிக்கப்பட்ட நீரைக் கொண்ட மேகம் அதை மழையாக வழங்கியதாலே,  முல்லை நிலத்தில் வளர்ந்த நெடிய கொடிகள் மரங்களிற் படர்ந்து கொண்டிருப்பதைக் காண்பாயாக!! 

(6)
            என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார்........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  எனது உயிர் போன்ற இனிய தோழியே! பெரிய கடலின்  நீரை அருந்தி மழை மேகங்கள் உருவாகின. 

(7)
            பாத்துப் படுகடன் மாந்திய பல்கொண்மூக்
            காத்துக் கனை துளி சிந்தாமைப் - பூத்துக்
            குருந்தே!.........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  ஒலிக்கின்ற கடலின் நீரைக்  குடித்துப் பல முகில்களில் பகுத்தெடுத்து, அந்த நீரைப் பாதுகாத்துக் கொண்டு வந்து, செறிவான மழைத்துளிகளை முகில்கள் நன்கு  சிதறி பெய்யாத போதும், செழித்துப் பூத்துள்ள குருந்த மரமே!

முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது கார் என்பதால், திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்திணைப் பாடல்களில் மழைகுறித்து பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும்,  மேற்காட்டிய ஏழு திணைமாலை நூற்றைம்பது பாடல்களில் கடல்நீர் கதிரின் வெப்பத்தால் முகிலாக  மாறி மழையாகப் பொழிவது விளக்கமாகவும், சிலபாடல்களில் அவை நன்கு அறியப்பட்ட உண்மை என்பதால் ஓரிரு வரிகளில் சுருக்கமாகக் கொடுக்கப்படுவதையும் காண முடிகிறது. இதன் மூலம்  கி.பி.5 - ஆம் நூற்றாண்டில்  மழை பொழியும் அறிவியல் அடிப்படையைத் தமிழர் பலர் நன்கு அறிந்திருந்தனர் என்பது இதனால் தெளிவாகிறது.  

"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு" என்று திருப்பாவையில் மழை குறித்து ஆண்டாள் குறிப்பிட்டது  கணிமேதாவியாருக்கும் பிற்பட்ட காலம்.  ஆழ்வார்களின் காலம் என்பது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்தவர்  மு.இராகவையங்கார்.   'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற ஒரு குறிப்பு (திருப்பாவை 13:3-5) கொண்டு, ஆராய்ந்த மு. இராகவையங்கார் கி.பி. 716 ஆம் ஆண்டு திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள் என்று கூறுகின்றார்[4].  ஆகவே அதற்கும் முன்னர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே மழை குறித்த அறிவியல் தமிழகத்தில் அறியப்பட்டிருக்கிறது என்பதைத் திணைமாலை நூற்றைம்பது மூலம் அறிய முடிகிறது.  தமிழிலக்கியங்களைக் கற்றுத் துறைபோகிய  அறிஞர்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும்  மழை அறிவியல் குறித்து மேலும்  பல மேற்கோள்களைக்  காட்ட வாய்ப்பிருக்கலாம். 

எல்லாவற்றுக்கும் மேலாக, மழை தோன்றும் முறையை, அதன் அறிவியல் பின்புலத்தை, ஐந்தாம் நூற்றாண்டிலேயே (அதாவது, இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எனக் கொள்க) அறிந்திருந்த தமிழக மக்களின் வழிவந்தோர்,  இன்று வருணபகவான் மழை தருவார் என்று நீர் நிரம்பிய பெரிய பெரிய அண்டாவிற்குள் அமர்ந்து பஜனை பாடுவதையும்,  கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பதையும், பெண்ணை ஆடையின்றி தீவட்டியுடன்  ஊர்சுற்ற வைக்கும் சடங்கு செய்வதையும், இடி மின்னல் என்றால் அர்ஜுனன் தேர் ஓடுகிறது என்று 'அர்ஜுனா' 'அர்ஜுனா' என்று கன்னத்தில் அடித்துக் கொள்வதைச் செய்யும் மூடநம்பிக்கை கூட்டத்தினராக மாறியதைக் கண்டு நாம் தலைத் தலையாக அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 



உதவிய தளங்கள்: 
[1] ஆண்டாளின் மழை அறிவியல்! – https://minnambalam.com/k/2017/04/26/ad3

[2] கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

[3] தமிழ் இலக்கிய வரலாறு, ரா. சீனிவாசன், 3-சங்கம் மருவிய காலம், எட்டாம் பதிப்பு : 1997
https://ta.wikisource.org/s/99ul

[4] ஆண்டாள், முனைவர் சி. பாலசுப்பிரமணியன், முதற் பதிப்பு : மார்ச், 1994. பக்கம் 34 
https://ta.wikisource.org/s/1321


நன்றி: சிறகு 
 (டிசம்பர் 5, 2020)

மின்தமிழ்மேடை  - 24 [ஜனவரி  - 2021]



#மின்தமிழ்மேடை, #சிறகு, #இலக்கியம், #அறிவியல், #Themozhi 




Saturday, July 18, 2020

மீக்கூறல்

மீக்கூறல்


“மீக்கூறல்” என்றால் புகழ்ந்து கூறுதல் என்பது அதன் பொருள். சங்க இலக்கியங்களில் காணப்பெறும் இச்சொல் இந்நாட்களில் வழக்கில் இருப்பதாக அறிய முடியவில்லை. மீக்கூறல் என்றால் அகராதி என்ன பொருள் தருகிறது என்று பார்ப்போமெனில் ஒருவரைப் பற்றி உயர்வாகக் கூறுதல் என்று, அதாவது பாராட்டுதல், அல்லது அவர் பெருமையை வியந்து கூறல் என்ற பொருள் இருப்பதை அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றிலும் திருக்குறளிலும் இடம் பெறும் இச்சொல்லை இடத்திற்கு ஏற்ப என்ன பொருளில் கூறப்படுகிறது என்ற மீள்பார்வை செய்வதன் மூலமாக, இச்சொல் [1] ஒருவர் அடைந்துள்ள உயர்நிலையை உள்ளவாறே உயர்த்திப் பேசல் என்ற பொருளில் வருகிறதா, அல்லது [2] தகுதி இல்லாதவரை மிகைப்படுத்திப் போற்றும் பொருளில் வருகிறதா என ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

“மீ” என்ற ஓரெழுத்து ஒருமொழி ஓர் உயர்நிலையைக் குறிப்பது. ஆகவே, மீ + கூறுதல் = உயர்வாகக் கூறுதல், புகழப்படுதல், போற்றுதல். மீக்கூறு (புகழ்), மீக்கூறல் (புகழ்தல்), மீக்கூற்றம் (புகழ்ச் சொல்), மீக்கூற்று (புகழ்), மீக்கூறுவோர் (புகழ்வோர்), மீக்கூறும் (புகழும், புகழப்படும்), மீக்கூறுதல் (உயர்வாகக் கூறுதல்) என்ற பொருளில் அமைகின்றது. ஆக, அகராதி தரும் விளக்கப்படி,

“மீக்கூறல்” என்ற சொல்லிற்குக் கொண்டாடல், புகழ்தல், வியத்தல் ஆகிய பொருளையும்,

“மீக்கூறு” என்பதற்குப் புகழ், புகழ்ச்சி, மீக்கூற்றம் ஆகிய பொருள்களையும் (கழகத் தமிழ் அகராதி- ப.765) கொள்ளலாம்.

வள்ளுவர் தமது இறைமாட்சி அதிகாரத்தில், குடிமக்கள் அணுகுவதற்கு எளியவராகவும் இன்சொல் கூறுபவராகவும் உள்ள மன்னரின் ஆட்சியை மக்கள் புகழ்ந்து கூறுவார்கள் என்று கூறுகிறார்.

     காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
     மீக்கூறும் மன்னன் நிலம்
(வள்ளுவர் அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:386)

இங்கு, புகழப்படும் சிறப்பைப் பெறுவார் மன்னவர் என்று உயர்வாகப் பேசப்படும் ஒரு நிலையை மீக்கூறும் என்ற சொல் குறிப்பது தெளிவாகிறது. இது உண்மையாக அப்பண்பு பெற்றிருக்கும் ஒருவர் மக்களிடம் பெறும் பாராட்டு. அது உள்நோக்கத்துடன் தகுதி அற்ற ஒருவர் குறித்துக் கூறும் பொய்யுரை அன்று.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் குறித்த செப்பேட்டுக் குறிப்புகளும் தொல்லியல் தடயங்களாக நமக்குக் கிடைக்கிறது. அவைமட்டுமன்றி, சங்கப் பாடல்களில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பாடல்களுக்கும் பாட்டுடைத்தலைவனாக (மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை) இலக்கியங்கள் வழியும் இவனை நாம் அறிகிறோம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த வீரனும் அரசனும் மட்டுமல்ல ஒரு சிறந்த புலவனும் கூட என்று காட்டும் புறப்பாடல் ஒன்று உண்டு (புறநானூறு – பாடல்: 72. இனியோனின் வஞ்சினம்!).

இந்த நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வழி வந்தவன். இவன் மிகச் சிறுவயதிலேயே அரச பொறுப்பை ஏற்கும் சூழல் உருவாகிறது. வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பகைவர் கூட்டம் அவன் நாட்டைக் கைப்பற்றப் படை எடுக்கிறது. ஓரிருவர் அல்ல. பெருவேந்தர்களான சோழர், சேரர், பல குறுநில மன்னர்கள் உட்பட எழுவர் புதிதாய் முடிசூட்டப்பட்ட இளைஞன் மீது கூட்டமாகப் போர் தொடுக்கிறார்கள். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். அப்பொழுது அவன் அவர்களை வெல்வேன், இல்லாவிட்டால் என் மக்கள் என்னைக் கொடுங்கோலன் எனத் தூற்றட்டும் என்று வஞ்சினம் கூறுகிறான். நாடு மீக் கூறுநர் நகுதக் கனரே. அதாவது, நெடுஞ்செழியனின் இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் நகைப்பிற்குரியவர்கள், இவன் இளையவன் என்று எனது மனம் வருந்துமாறு இழிவாகப் பேசும் இப்பகைவர்களை வெல்வேன், அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன் என்கிறான்.

     “நகுதக் கனரே, நாடு 'மீக் கூறுநர்';
     இளையன் இவன் என உளையக் கூறி”
(தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், புறநானூறு – பாடல்: 72. இனியோனின் வஞ்சினம்!)

தலையாலங்கானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் போரில் வெற்றி வாகை சூடியதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றும் சிறப்பிக்கப்பட்டான். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுடன் போரில் ஈடுபட்ட சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை தோல்வியடைந்து பாண்டியனால் சிறை செய்யப்பட்டான். இவை இரண்டும் ஒரே போரா அல்லது வெவ்வேறு போர்களா என்பது தெரியவில்லை. பின்னர் துணிவுடன் அந்தச் சிறைக்காவலை வென்று, தப்பித்து தனது நாட்டிற்குச் சென்று மீண்டும் மக்கள் புகழ ஆட்சி செய்தான். இந்த நிகழ்வும் மற்ற ஒரு புறப்பாடலில் (புறநானூறு – பாடல்: 17. யானையும் வேந்தனும்!) குறுங்கோழியூர் கிழார் என்ற புலவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேரன் தப்பிச் சென்றதைக் குழியில் விழுந்த யானை தனது முயற்சியால் தப்பி தனது இனத்தைச் சேர்வதுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார் புலவர். அப்பாடலிலும் ‘மீக்கூறல்’ என்ற சொல் வருவதைக் காண முடிகிறது.

     நீடுகுழி அகப்பட்ட
     பீடுஉடைய எறுழ்முன்பின்
     கோடுமுற்றிய கொல்களிறு
     நிலைகலங்கக் குழிகொன்று
     கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
     நீபட்ட அருமுன்பின்
     பெருந்தளர்ச்சி பலர்உவப்பப்
     பிறிதுசென்று மலர்தாயத்துப்
     பலர்நாப்பண் 'மீக்கூறலின்'
     உண்டாகிய உயர்மண்ணும்
(குறுங்கோழியூர் கிழார், புறநானூறு – பாடல்: 17. யானையும் வேந்தனும்!)

பெரிய குழி இருப்பதை அறியாது அதில் விழுந்த யானை, தனது வலிமையான தந்தத்தால் அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல, உனது வலிமையாலும் துணிவாலும் பகைவரின் சிறையிலிருந்து தப்பி வந்த நிகழ்வு உன் சுற்றத்தாரால் புகழ்ந்து கூறப்படுகிறது என்பதை ‘தாயத்துப் பலர்நாப்பண் மீக்கூறலின்’ என்று கூறிப் பாராட்டுகிறார் புலவர்.

புலவர் மார்க்கண்டேயனார் எழுதிய புறநானூற்றுப் பாடலில் (புறநானூறு – பாடல்: 365. நிலமகள் அழுத காஞ்சி!) இவ்வுலகில் போற்றத்தக்க அருஞ்செயல்கள் பல செய்து புகழ் ஈட்டி வாழ்ந்த மன்னர்கள் பலரும் மறைந்துவிடத் தான் மட்டும் இன்னமும் இறவாமல் இருக்கின்றோமே என்று நிலமகள் வருந்துவதாகக் கருத்து புனையப்படும் பாடலில்,

     பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
     முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
     விலைநலப் பெண்டிரிற் பலர்'மீக் கூற'
     உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்
     நிலமகள் அழுத காஞ்சியும்
     உண்டென
(மார்க்கண்டேயனார்; புறநானூறு – பாடல்: 365. நிலமகள் அழுத காஞ்சி!)
இங்கு மீக்கூறல் புகழ் என்ற பொருளில் காட்டப்படுகிறது.

அடுத்துக் காட்டப்படும் இரு பாடல்களும் அவ்வாறே இறந்த மன்னரின் புகழ் குறித்து புலவர்கள் இருவர் வருந்திப் பாடும் புறநானூற்றுப் பாடல்களே. முதலில், தனது மக்களுடன் மனவேற்றுமை கொண்டு அவர்களுடன் போர்தொடுக்க முற்பட்டு, பின்னர் அதைக் கைவிட்டு வடக்கிருந்து உயிர்துறந்த கோப்பெருஞ்சோழன் பற்றிய பாடல் ஒன்று.

கோப்பெருஞ்சோழனின் மறைவு குறித்து வருந்தும் புலவர் பொத்தியார் எழுதிய பாடலில் (புறநானூறு – பாடல்: 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!).

     பலர்க்கு நிழலாகி, உலகம் 'மீக் கூறி'த்
     தலைப்போகு அன்மையிற் சிறுவழி மடங்கி
     நிலைபெறு நடுகல் ஆகிய …
(புலவர் பொத்தியார், புறநானூறு – பாடல்: 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!)

பலருக்கு நல்வாழ்வு தந்து ஆதரித்து, உலகத்தார் உனது செயலைப் போற்றிப் புகழுமாறு நீ செய்து வந்த மக்கள் பணியை முற்றிலும் செய்து முடிக்க வழியின்றி வடக்கிருந்து உயிர் துறந்து இவ்வாறு சிறிய இடத்தில் ஒரு நடுகல்லாக உனது வாழ்வை முடித்துக் கொண்டாயே மன்னா, என்று கையறு நிலையில் புலவர் பொத்தியார் புலம்புகிறார். மன்னரின் சிறப்பை மக்கள் போற்றுவதை மீக்கூறல் என்கிறார் புலவர்.

இவ்வாறு புலவர் பொத்தியார் போன்றே மற்றொரு புலவரான பேரெயில் முறுவலார் என்பவர் மற்றொரு புறநானூற்றுப்பாடலில் (புறநானூறு – பாடல்: 239. இடுக சுடுக எதுவும் செய்க!) நம்பி நெடுஞ்செழியன் என்ற பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னர் ஒருவர் மறைந்த பிறகு பாடும் கையறு நிலைப் பாடலில், அவரும் மன்னரின் புகழைக் குறிப்பிடுகையில் மீக்கூறல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

     செற்றோரை வழிதபுத்தனன்;
     நட்டோரை உயர்புகூறினன்;
     வலியரென வழிமொழியலன்;
     மெலியரென 'மீக்கூறலன்';
     பிறரைத்தான் இரப்பறியலன்;
     இரந்தோர்க்கு மறுப்பறியலன்;
     வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
(புலவர் பேரெயில் முறுவலார்; புறநானூறு – பாடல்: 239. இடுக சுடுக எதுவும் செய்க!)

பகைவரை அவர்களின் சுற்றம் முதற்கொண்டு கிளையோடு வேரறுத்தவன், ஆனால் நண்பர்களைப் புகழ்ந்து போற்றியவன். வலிமையானவர் ஒருவர் என்று அவரிடம் பணிந்து பேசமாட்டான், ஆனால் தன்னைவிட வலிமை குறைந்த ஒருவரிடம் தனது புகழைக் கூறிக் கொண்டிருக்கவும் மாட்டான், தனக்கென்று எதையும் யாரிடம் இரந்து கேட்க மாட்டான், ஆனால் அவனிடம் இரப்போருக்கு அளிக்காமல் இருக்கவும் மாட்டான். வேந்தர்கள் கூட்டத்தில் தனது புகழை நிலைநாட்டியவன் அவன் என்று நம்பி நெடுஞ்செழியனைப் புகழ்ந்து கூடுகிறார். இத்தகைய மேன்மையான ஒருவன் மறைந்துவிட்டான் அவனைப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ எதைச் செய்தால்தான் என்ன என்று மனம் வெதும்புகிறார். இதில் மன்னன் தற்பெருமை பேசமாட்டான் என்பதைக் குறிப்பிட மீக்கூறல் செய்வது அவன் வழக்கமன்று என்று கூறுகிறார் புலவர்.

தற்புகழ்ச்சி உடையாரைப் புகழ்தல் கூடாது என்ற கருத்தை முன்வைக்க விரும்பும் முன்றுரையரையனார் எழுதிய பழமொழி நானூறு பாடல் ஒன்றும்,

     தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி
     வாயின்'மீக் கூறும்' அவர்களை ஏத்துதல்
     நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
     நாயைப் புலியாம் எனல்.
(முன்றுரையரையனார் எழுதிய பழமொழி நானூறு பாடல்)

திறமையுள்ளவர் என்று பெற்றெடுத்த தாய் தந்தையரால் நற்சான்று அளிக்கப்படும்படி நடக்காமல் தானே தன் செயல்களை வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை, மற்றவரும் அவ்வாறே போற்றுவதில் சிறப்பில்லை. அது அடுப்பருகே சோம்பி முடங்கிக் கிடக்கும் நாய் ஒன்றைப் புலி என்று புகழ்வதற்கு ஒப்பாக அமைந்துவிடும் என்று கூறுகிறது. இங்கு வாயின்மீக் கூறும் செய்யலான தற்புகழ்ச்சி விரும்பத்தக்கதல்ல, ஊக்குவிக்கக் கூடிய செயல் அல்ல எனச் சுட்டப்படுகிறது.

பெரியாழ்வார் எழுதிய “திருமாலிருஞ்சோலை எம்பெருமானை மீக்கூறல்” என்று பெருமாளைப் புகழும் காலத்தால் பிந்திய இலக்கியம் தவிர்த்து, பெரும்பாலும் மீக்கூறல் அரசன் குறித்த புகழ் என்பதுடன் மட்டும் பயனிலிருந்திருப்பதும் தெரிகிறது. பெருவீரச்செயல்காட்டிப் பகைவரோடு போர் செய்தலைக்கூறும் தும்பைத்திணைக்கு விளக்கம் கூறும் சபாபதி நாவலர் “தும்பைத்திணையாவது-ஒருவேந்தன் தன் வலியினை உலகம் மீக்கூறல் வேண்டி” மேற்செல்லும் ஒரு செயலாக விவரிக்கும் பொழுது மீக்கூறல் என்பதை அவரது திராவிடப் பிரகாசிகை (1976) நூலில் எடுத்தாள்கிறார். இலக்கிய வழக்கில் பெருமை மிக்க தக்கார் ஒருவரை ஏத்துதல், தகுதியுள்ளவரைப் போற்றுதல், பாராட்டாக உயர்த்திக்கூறல், உள்ளது உள்ளவாறாகவே உயர்வாகப் பேசுதல் என்ற பொருளில்தான் மீக்கூறல் இடம் பெறுதலைக் காண இயல்கிறது. மிகுத்துக்கூறல், மிகைப்படுத்துதல் அல்லது மிகைப்படப் பேசுதல் என்ற பொருள் கொள்ள வழியில்லை என்பதும் புரிகிறது.


நன்றி : சிறகு - ஜூலை  18, 2020

மின்தமிழ்மேடை— 22 [ஜூலை  - 2020]


#இலக்கிய நுட்பம், #இலக்கியம், #சிறகு, #Themozhi  


Saturday, April 11, 2020

குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம்


       
குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம்

அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10  குறள்கள்  கொண்ட ஒரு அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர்.  மேலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா, அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான், அறியேன், அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர் போன்ற அறிவு குறித்த 50க்கும்  மேற்பட்ட  சொற்களை (54 சொற்கள்),  100க்கும் மேற்பட்ட முறை (163 முறை) அறிவின் இன்றியமையாமை, அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைக் குறித்து அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார்.  இவற்றில் அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும் அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின் தேவை  குறித்து வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி  மேலும் பல அதிகாரங்களிலும் தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார்.

அறிவுடைமை என்பதன் விளக்கம்:
அறிவுடைமை அதிகாரம் அறிவு என்பதைக் கீழ் வருமாறு விளக்குகிறது;
பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421),
மனதை அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க உதவுவது அறிவு (422),
சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம் ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அறிவு (425),
அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை ஒட்டி நடக்கச் செய்வது அறிவு  (426),
தனது செயலினால் விளையக் கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு  (427),
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428),
எதிர்கொள்ளக்கூடிய  துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை அறியச்  செய்வது அறிவு (429),
இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு அறிவே  எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று அறிவின் சிறப்பை குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.

மேலும், அந்த அறிவை எவ்வாறு அடைவது   என்பதையும்  அறிவுடைமை அதிகாரத்தின்  இரு குறள்கள் மூலமும், மெய்யுணர்தல் அதிகாரத்தின் குறள் ஒன்றின் மூலமும்  விளக்குகிறார்.  வள்ளுவர் தரும் இந்த விளக்கங்கள் பகுத்தறிவு பாசறை கூறி வந்துள்ள  கருத்துகளாக அமைந்துள்ளன.

குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம் :
          எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 423)
எந்தவொரு பொருள் குறித்து யார் என்னதான் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்  கொண்டு விடாமல்  அது உண்மைதானா என ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின்  பொருள்.

தான் சொல்வதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை  கூறிய  சிறந்த வழிகாட்டி புத்தர். தங்கத்தின் மாற்றை உரசிப் பார்த்து ஆராய்ந்து அறிவது போல அவர் அறிவுரைகளையும் மதிப்பிட்டு,  தக்க அறிவுரையாக இருந்தால்  மட்டுமே ஏற்கச் சொன்னார்.  மற்றவர் அவர் மேல் கொண்ட அன்பினாலோ அல்லது மதிப்பினாலோ அவர் கூறியவற்றை எல்லாம் பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை.  

அவரது இந்தக் கருத்தினால் கவரப்பட்ட இக்கால மனிதர்களுள் ஒருவர்,  சமூக சீர்திருத்தவாதி பெரியார் ஈ. வெ. ராமசாமி.  அவரும் தனது சொற்களைப் பகுத்தறிந்து ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்றுதான்  வலியுறுத்தினார்.  'பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்று அறிவுரை கூறிய மற்றொருவர் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்.  'ஏன்' என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறி எதையும் கேள்வி கேட்காமல் ஏற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.  மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு எனப் பகுத்தறிவு வழிகாட்டிய இக்குறள் சென்ற 19ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மேலை நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் இங்கர்சால் அவர்களையும்  கவர்ந்த குறளும் ஆகும்.

உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவுடைமை என வள்ளுவர் அறிவுறுத்துவதால், வள்ளுவரின் கூற்றையும் மதிப்பிட்டே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும்  இதனால் அறிகிறோம். பகுத்தறிவு கருத்து கூறும் அறிவுடைமை அதிகாரத்தின் மற்றொரு குறள்;          
          எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
          நுண்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 424)
நாம் சொல்ல விரும்புவதைக் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகச் சொல்லி, பிறர் சொல்லிய கருத்தில்  அவர் நேரடியாகச் சொல்லாதவற்றின் உட்பொருளையும் (சொன்னதும் சொல்லாமல் விட்டதுமான)  நுட்பமான கருத்துகளையும் ஆராய்ந்து உணர்வது அறிவுடைமையாகும் என்று கூறுகிறது இக்குறள்.  ஆகவே,  ஒன்றைக் கூறியவரின் நோக்கத்தையும்  அவரது சொற்களின் வழியாக எடை போடுவதும்  தேவை.

இவ்வாறான ஒரு கருத்தை  ஒருவர் ஏன்  நம்மிடம் சொல்கிறார், அவ்வாறு அவர் சொல்ல வேண்டிய தேவை என்ன? இதனால் என்ன பயன்? யாருக்குப் பயன்? என்பது போன்ற கேள்விகள்  எல்லாம் எழுப்பி நுட்பமாக ஆராயத் தொடங்கினால் பல மூடநம்பிக்கைகளையும், அவற்றைக்  கூறுபவர்களையும் காணாமல் போக்கிவிடலாம்.  எடுத்துக் காட்டாக; இக்காலத்தில் கேட்க வேண்டிய கேள்வி, யாரோ சொன்னார்கள் என்று விளக்கேற்றி பட்டாசு வெடித்து  "கோ கொரோனா, கோ கொரோனா  கோ" என்று கைதட்டிக் கூவிக் கொண்டிருந்தால்  கொரோனா வைரஸ் மறைந்துவிடுமா? என்பதாக இருக்க வேண்டும்.  குளத்தில் போட்ட ஒரு உடைந்த சிலையை வெளியில் எடுத்துக்கொண்டு வந்து அலங்காரம் செய்து காட்சிப் படுத்தினால், நாம் அங்குப் போய் உண்டியலில் பணம் போட்டுவிட்டு வந்தோமே, அது இப்பொழுது போர்க்கால நடவடிக்கையில் கொரோனா பாதிப்பிற்கு நிதி திரட்டப்படுகையில் எந்த வகையிலாவது பரிதவிக்கும்  மக்களுக்குப் பயன்படுகிறதா?  அதனால் பயன் பெற்றவர் யார் யார்? என்று கேள்வி கேட்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதுதான் எந்த ஒரு நிகழ்வின் பின்னணியிலும்  மறைந்துள்ள நோக்கத்தை நுட்பமாகப் புரிந்து கொண்டு அறிவுடையவராக ஒருவரை மாற்றும்.  இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முனைந்த  மணக்குடவர்;  பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது என்று விளக்கமளிக்கிறார்.

பகுத்தறிவு கருத்து கூறும் மேலும் ஒரு குறள் மெய்யுணர்தல் அதிகாரத்தில் இடம் பெறுகிறது;
          எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: 355)
காட்சிப்படுத்தப்படும் ஒரு தோற்றம் கண்டு மயங்காமல், ஒரு பொருளின் உண்மையான இயல்பை அறிவதே அறிவுடைமையாகும். மாயையில் விழாமல் இருப்பது என இதற்குப் பொருள் கொள்ளலாம். இங்கு அறிவியல் நோக்கில் ஆராய்வதே உண்மையை வெளிப்படுத்தும்.  பிள்ளையார் சிலை பால் குடிப்பது, இரத்தக் கண்ணீர் விடும் மேரி மாதாவின் சிலை, வெறும் கையில் விபூதி  வரவழைப்பது என ஆன்மீகத்தின் பெயரில் மக்களை அடிமுட்டாளாக்கும் நோக்கில் செப்பிடுவித்தை மற்றும் கண்கட்டு வித்தைகள் நிகழ்த்தி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றும் உலகம் இது. இக்காலத்தில் நாசா விண்கோள் வெளிப்படுத்திய அதிசயம் என்று சமூக வலைத்தள உதவியுடன்  அறிவியல் துணை கொண்டே ஏமாற்றும் செய்திகளுக்கும் குறைவில்லை.  எப்பொருள் எத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே மெய்யுணர்தல் என்று கூறும் குறள் கருத்தே  எதிலும் உண்மைத்தன்மையை  அறிய விரும்புவோருக்கு நினைவில் நிற்க வேண்டும்.

அறிவுடைமை அதிகாரத்தில் மட்டுமின்றி மெய்யுணர்தல் (குறள் 355, 356), அருளுடைமை (குறள் 249), இகல் (குறள் 857) ஆகிய குறட்பாக்களிலும் வள்ளுவர் "மெய்ப்பொருள் அறிவது"  குறித்துக் குறிப்பிடுகிறார்.  மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய இயலாதவர்கள் அறிவு மங்கியவர்கள் என வள்ளுவர் உண்மை என்னவென்று அறிய இயலாதவரை விவரிக்கிறார் (857).   வாழ்வு குறித்த மெய்யியல் ஞானம் பெறுவதையும்  மெய்ப்பொருள் என்றுதான் குறிப்பிடுகிறார் வள்ளுவர் (குறள்கள் 249 மற்றும் 356), இதே கருத்தை 'செம்பொருள்' அறிவது என்று மற்றொரு குறளிலும் குறிப்பிடுகிறார் (358).

அறிவைப் பெறுவதற்குக் கல்வி தேவை, தோண்டத் தோண்ட மணற்கேணியில் நீர் ஊருவது போல, கற்கக் கற்க  அறியவேண்டியவற்றை அறிந்து கொள்ளும் அறிவும் பெருகும் (396) என்று கூறும் வள்ளுவர்,  அறிவுடையார் செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறத் தவறவில்லை.  அறியவேண்டியவற்றை அறிந்து,  விலக்க வேண்டியவற்றை விலக்குவது அறிவார்ந்த செயல், இவ்வாறு செய்யாவிடில் அந்த அறிவால்  பயனில்லை (175).  அற்ப எண்ணம் கொண்ட மக்களுடன் உறவு கொள்ளாமல் (சிற்றினம்  சேராமை) அவர்களின் கெடுமதியைத் தானும் தனது இயல்பாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அறிவுடைமைதான். பழகும் கூட்டத்தின் அறிவே ஒருவரிடம் தாக்கம் செலுத்தும் என்பதால் குணமற்றவர் தொடர்பை விட்டொழிப்பது  இன்றியமையாதது (சிற்றினம் சேராமை குறள்கள்:452, 454) என அறிவுடையோராக இருப்பதற்கு வள்ளுவர் அறிவுரைகள்  பல  கூறியுள்ளார்.  


உதவிய தளங்கள்:
[1] தமிழ் இலக்கியத் தொடரடைவு,  திருக்குறள் - தொடரடைவு,  முனைவர்.ப.பாண்டியராஜா.
http://tamilconcordance.in/TABLE-kuraL.html
 
[2] திருக்குறள் கலைஞர் உரை, கலைஞர் மு. கருணாநிதி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0612.html

[3] குறள் திறன்
http://kuralthiran.com/Home.aspx


நன்றி: 
சிறகு
http://siragu.com/குறள்-கூறும்-பகுத்தறிவின/

மின்தமிழ்மேடை  - 21 [ஏப்ரல்  - 2020]
https://archive.org/details/THFi-QUARTERLY-21/page/n129/mode/2up

ஏப்ரல் 11, 2020
#திருக்குறள், #சிறகு, #மின்தமிழ்மேடை, #Themozhi  

Wednesday, September 18, 2019

தோலுரித்த கலகத் திருமகன்

தோலுரித்த கலகத் திருமகன்





ஏன் ஏன் என்ற வினாக்கள் 
அறியா வயதுடன் நிற்பதல்ல 
ஏன் அவர்கள் என்றும் அப்படி 
வறுமையில் உழல வேண்டும்?
ஏன் இவர்கள் என்றும் இப்படி 
உரிமையின்றி வாழ வேண்டும்?

எல்லாமும் கடவுளால் என்ற 
ஆன்மிக விளக்கம் உதவவில்லை 
செய்த பாவம், அவர்கள் விதி
என்ற விடையில் அடங்கவில்லை 
சமயம் வகுத்த சாத்திரங்கள் எனில் 
ஆராய முற்பட்டார் அந்த கலகக்காரர் 

ஆவலுடன் உரிக்கத் துவங்கினார் 
அந்த சமய வெங்காயத்தை 
அவர் அதன் தோலை உரிக்க உரிக்க 
கண்ணீர் வழிந்தது, பெரியாருக்கல்ல 
கடவுள் பெயரில் ஸ்மிருதிகள் எழுதி 
அடக்குமுறை செய்தோருக்கு 

உள்ளே ஒன்றுமில்லை என்பது உறுதியானது
ஒரு சிலரின் ஓங்கிய வாழ்விற்குப்
பல பலவீனர்கள் கொடுத்த விலை என்ற 
வஞ்சகர் திட்டம்  வெளியானது 
சூழ்ச்சிக்கார்களின் சூது புரிந்தது 
வெளியிட்டார் வெள்ளை அறிக்கையை 

கடவுள் இல்லை, இல்லை; 
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; 
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;
கடவுளை மற ! மனிதனை நினை ! 

அடங்கிக் கிடந்த ஆண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட பிரிவினருக்குப் 
போயின; போயின பதவிகள் 
அடங்கிக் கிடந்த பெண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட ஆண்களுக்குப்
போயின; போயின  நிம்மதி 

அவர் சொல்வதைப் பின்பற்றச் 
சொன்னதில்லை பெரியார்
நானே சொன்னாலும் நம்பாதே 
என்றுதான் சிந்திக்கத் தூண்டினார்
மெய்ப்பொருள் காணச் சொன்னார் 
சூழ்ச்சியைத் தோலுரித்த கலகத் திருமகன் 

ஏன்..ஏன்..மீண்டும் மீண்டும் கேள்..கேள் கண்ணே
சிந்திப்பாய் சிந்திப்பாய் சிந்திப்பாய் பெண்ணே




நன்றி:
மின்தமிழ்மேடை  - 19 [அக்டோபர்  - 2019]
https://archive.org/details/THFi-QUARTERLY-19/page/235/mode/2up

#மின்தமிழ்மேடை, #கவிதை, #பெரியார், #Themozhi 

செப்டெம்பர்  18, 2019



Thursday, December 7, 2017

நிலவும் கதிரும் போல் நிலைத்திடும் எழுத்து



'நிலவும் கதிரும் போல் வாழ்க நின் புகழ்' எனப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் வாழ்த்தும் புறநானூற்றுப் பாடலொன்று உள்ளது.  சந்திர சூரியன் உள்ளவரை இக்கொடை  நிலைக்கட்டும் என்று கூறுவதை ‘சந்திராதித்தவரை தொடர்வதாக’ என கல்வெட்டுச் செய்திகளிலும் காணலாம்.  நிலவும் கதிரும் போல் நிலைத்திடும் எழுத்தைப் படைத்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒவ்வொரு மொழிக்கும் ஓரிருவர் தேறலாம்.  பெரும்பாலும் நிலைத்திடும் எழுத்தின் தகுதி எக்காலத்திற்கும்  பொருந்தும் அறிவுரையாகவே இருந்து வந்திருக்கிறது. அழகியல் இலக்கியங்கள் அத்தகுதி பெறுவது சொற்பம். 

தனது வாழ்நாளில் ஒரே ஒரு நூல் மட்டுமே எழுதி வரலாற்றில் இடம் பிடிப்பது எழுத்தை மூச்சாகக் கருதும் எந்த ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் விருப்பமே.  இத்தகைய வாழ்க்கை எழுத்தாளர் யாவருக்கும் அமைவதில்லை.  நாம் யாரென முகமறியாத வள்ளுவர் எழுதி இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த திருக்குறளை நாம் அறிவோம். இன்றும் உலகில் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது.  இன்றும் அவர் நூல் தொடர்ந்து பதிப்பில் இருக்கிறது. அக்காலத்தில் தமிழர் ஒவ்வொருவரும் தம் வீட்டில் ஒரு மலிவுவிலை திருக்குறள் கையடக்கப் பதிப்பையாவது வைத்திருப்பார்கள். இன்றும் இணையத்தில் பல வலைத்தளங்கள் திருக்குறளைத் தாங்கி இருக்கிறது. தினம் ஒரு குறள் என்ற முயற்சி நடக்கிறது.  குறள்மலை என்ற திட்டம் துவங்கி குறள்கள் அனைத்தையும் கல்வெட்டில் பொறிக்கும்  முயற்சியிலும் இக்காலத் தமிழர் ஈடுபட்டுள்ளனர்.  வடஇந்தியரும் தமிழர் ஆதரவைப் பெரும் நோக்கில் குறள் குறித்துப் பாராட்டுதல்களை மொழிகிறார்கள்.  கங்கைக் கரையில் வள்ளுவருக்கு இடமளிப்பதாக உதட்டளவில் உறுதி கூறுகிறார்கள்.  எந்த ஒரு தமிழருக்கும், பள்ளி செல்லும் சிறுவர் உட்பட ஓரிரு குறள்களை நினைவில் இருந்து கூற இயலும். 

மக்கள் மத்தியில் புகழ் பெற்ற ஓர் எழுத்தாளர்  எனில் அவர் திருக்குறளுக்கு உரை எழுதி வெளியிட்டிருப்பார், ஒரு சிலர் தாமறிந்த பிற மொழியில் மொழி பெயர்க்கவும் செய்திருப்பார்கள்.  அயல் நாட்டவர், உள்நாட்டவர், தமிழர், பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழார்வலர் எனப் பலரும் இது போன்ற முயற்சிகளை முன்னெடுத்திருப்பர். புகழ் பெற்ற எழுத்தாளர் பட்டியலில் இடம் பிடிக்க விரும்புபவர் தகுதி என்ற ஒரு எழுதப்படாத விதியாகவும் இது அமைந்து விட்டிருக்கிறது.  பல உள்நாட்டு அயல் நாட்டு தமிழ்ச் சங்கங்கள் என்றால் திருவள்ளுவர் படமின்றி இருக்காது, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, வினாடிவினா எனப் பல போட்டிகளும் உலகத்தமிழர் அரங்கில் அரங்கேறி வருகிறது. தமிழ் என்றால் அதன் அடையாளம் வள்ளுவர் என்ற நிலையை எட்டி வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துச் சென்றுள்ளார் குறள் மூலம் அறநெறி கூறிய வள்ளுவர். வள்ளுவர் யார் அவர் பின்புலம் என்ன என்று உறுதியாகக் கூற இயலாத தடுமாற்றம் நம்மிடம் இருப்பது போல, அவர் எத்தனை நூல்கள் எழுதினார் என்பதையும் நாம் உறுதியாகக் கூற இயலாது.  அவர் திருக்குறள் செய்து வரும் சாதனையுடன் சில சமய நூல்கள் மட்டுமே போட்டி போட இயலும்.
 
தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியரும், 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் என்ற புகழ் பெற்ற திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை ஒரு ஒப்பிடுதலுக்காக எடுத்துக் கொள்ளலாம்.  இவர் புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்கள் என  சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது.  ஆனால், இன்று ஒரு சராசரி இளைய தலைமுறை தமிழரிடம் கேட்டால் இவர் குறித்து ஒரு சில குறிப்புகளை அவரால் கொடுக்க இயலுமா என்பது ஐயமே. முதுமையை நோக்கிச் செல்பவர்கள் அவரை அறிந்திருந்தாலும் பெரும்பாலோரால் அவர் எழுதிய பாடல் என ஒன்றை தங்கள் நினைவில் இருந்தும் சொல்ல இயலாது, அது போல அவர் நூலில் இருந்து ஒரு பாடலை எடுத்துக் கொடுத்தால் அது அவருடையது என அடையாளம் காட்டவும் இயலாது. இத்தனைக்கும்  பிள்ளைத்தமிழ் நூல்கள் பல இயற்றிய தமிழறிஞர் என்பதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று சிறப்பிக்கப்பட்டவர். இவரை அழைப்பித்து தமது ஊரின் கோயில் மீது தலவரலாறு எழுத வைத்துப் பலரும் பெருமைப்பட்டுக் கொண்ட அளவில் வாழ்ந்தவர். அவரது தமிழ்ப்பணி பரவலாக அறியப்பட்டுப் பெயரும் புகழும் பெற்றிருந்த  தமிழறிஞர் இவர் என்பது மிக விரைவில் மறக்கப்பட்டு வருகிறது.  துணுக்குச் செய்தி அளவிற்கு அவர் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளும் நிலைக்கு அவர் வரலாறு மங்கி இருக்கிறது.

அவர் மட்டுமன்று, நாம் ஒவ்வொருவரும் அறிந்த, ஆர்வத்துடன் வாரப்பத்திரிக்கைகளில் படித்த பல வணிக எழுத்தாளர்கள், அவர்கள் நூல்களைத் தேடித்தேடி வாங்கிப் படிக்கும் அளவிற்கு நம்மைக் கவர்ந்தவர்கள், பற்பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்த எழுத்தாளர்கள் பலரும் காலப்போக்கில் காணாது போய் வருகிறார்கள். நாமறிந்த பல 20 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் வரலாறும் மங்கத் தொடங்கியுள்ளது.  அனைவரும் அவர்கள் வாழ்ந்த காலத்தின் உலகைப் படம்பிடித்து கதைகளாகவும், கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் நம் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களே. நம் இளமைக்கால வரலாற்றின் ஒரு பகுதியாக அவர்கள் எழுத்து அமைந்திருந்தது.  அவர்கள் எழுத்துகள் சில நம்மைச் செதுக்கியிருக்கும் அளவிற்கு நம் மேல் தாக்கமும் கொண்டிருக்கும். 

நம் ஒவ்வொருவருக்கும் நம்மைக் கவர்ந்த, சென்ற நூற்றாண்டில் நம் சமகாலத்தில் வாழ்ந்த எழுத்தாளர் ஒருவரை அடையாளம் காட்ட இயலும்.  மாணவப் பருவத்திலேயே எழுத்தாளராகப் புகழ் பெற்ற லக்ஷ்மி என்ற மருத்துவர் திரிபுரசுந்தரி எழுத்திற்காக வாரப்பத்திரிக்கை வெளிவந்த காலத்தில் காத்திருந்த கூட்டத்தினர் உள்ளனர்.  அவர் நூல்கள் திரைவடிவமும் பெற்று அவரைப் புகழின் உச்சியில் உயர்த்திய காலமும் உண்டு.  ஆனால் இன்றைய இலக்கிய வட்டத்தின் இளைய தலைமுறையினர் எத்தனைப் பேர் அவர் பற்றி அறிவார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.  ஆனால் அறிந்தவர் மிகக் குறைந்த அளவில் இருப்பர் என்பதை மறுப்பின்றி ஒப்புக் கொள்ளும் மனநிலையில் நம்மில் பலர் இருப்போம். 

இதே கருத்துகள் பிறமொழி எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். ஹாரி பாட்டரை விழுந்து விழுந்து படித்த சிறுவர்கள் இன்று வளர்ந்து பெரியவர் உலகில் நுழைந்து விட்டார்கள்.  அவர்கள் இளமைக்கால வாழ்வின் ஒரு பகுதியாக விளங்கிய ஜே. கே. ரௌலிங் எழுதிய எழுத்துகள் அடுத்த தலைமுறைக்கு செல்லுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது.  தினம் தினம் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இணையம் வழி எழுதத் துவங்கும்  பொழுது போட்டியில் வருங்காலத்தில் அவரும் மறைந்து போகலாம். கடந்த கால எழுத்தாளர்களை இலக்கியத்தைப் பாடமாக எடுப்பவர்கள் மட்டுமே அதிகம் அறிந்த நிலையில் இருப்பார்கள்.  

காலம் கடந்து வாழும் சாதனை படைக்கும் ஒரு எழுத்தின் இலக்கணம் என்ன என ஆராய முற்பட்டால் முதலில் தெரிவது வள்ளுவர். குறள் என்ற ஒரு இலக்கியம் இன்றும் யாவருக்கும் பொருந்தும் கருத்துகள் பலவற்றைச் சொல்லிச் செல்வதுடன், அக்கருத்துகளைப் பொன்மொழிகள் போல ஒருவர் தான் கூறும் கருத்தை வலியுறுத்த மேற்கோளாக எடுத்தாளும் எளிமையுடன், நல்வழிப்படுத்தும் அறநெறியாக இருப்பதும் காரணம் என்பது தெரியும். என்றும் வாழும் எழுத்து சுருங்கச் சொல்வதுடன், எக்கால மக்களாலும் தங்களுடன் இணைத்து அடையாளம் காணப்பட்டு, அதனால் ஏதோ ஒரு வழியில் பயன் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கத் தேவை எனவே நாம் முடிவு செய்யலாம்.


நன்றி: 
இலக்கிய வேல் - இலக்கிய மாத இதழ்
இதழ் எண் 50 - திசம்பர் 2017
பக்கம்: 32-34
https://04711850916669019454.googlegroups.com/attach/3174ddb423c42/IV-50-C.pdf?part=0.1&view=1&vt=ANaJVrGDYMUTYuE27U7_lL1aCFB3Bu8RuqFlEMjus48Ic5jdzUkZGaTYuVD6vtYaRYi5NblCAp4hpNJHDkC18xC2v8OnLZG5rqZnhUQWRR17NUrdEePUMlQ

மின்தமிழ்மேடை  - 12 [ஜனவரி  - 2018]
https://archive.org/details/THFi-QUARTERLY-12/page/n131/mode/2up


#திருக்குறள், #இலக்கிய வேல், #மின்தமிழ்மேடை,  #Themozhi