Showing posts with label தமிழ்ப்புத்தாண்டு. Show all posts
Showing posts with label தமிழ்ப்புத்தாண்டு. Show all posts

Sunday, October 12, 2025

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

ஆவணியே தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதற்கு   மேலும் ஒரு சான்று மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' (பக்கம்: 242) என்ற நூலில் கிடைத்தது.




"அணியியல்" என்பது ஒரு மறைந்து போன ஒரு நூல்; இந்த நூல் தண்டியலங்காரத்திற்கு முற்பட்ட ஒரு பழைய நூல். இந்த அணியியல் நூலிலிருந்து சில சூத்திரங்களை யாப்பருங்கல உரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றனர்.

யாப்பருங்கலம், ஒழிபியலில், 'மாலைமாற்றே' என்னும் சூத்திர உரை மேற்கோள் கொடுக்கும்  பொழுது;

"இனி, இருது ஆவன:
      'காரே கூதிர் முன்பனி பின்பனி
      சீரிள வேனில் வேனி லென்றாங்
      கிருமூ வகைய பருவ மவைதாம்
      ஆவணி முதலா விவ்விரண் டாக
      மேவின திங்க ளெண்ணினர் கொளலே.'
      இந்த இருது வருணனை அணியியலுட் காண்க."
என்ற மேற்கோள் யாப்பருங்கல உரையாசிரியரால் அணியியல் நூலில் இருந்து கொடுக்கப்படுகிறது.

"ஆவணி முதலா விவ்விரண் டாக மேவின திங்க ளெண்ணினர் கொளலே" ; 
இதன் பொருள்:  ஆவணி மாதம் தொடக்கமாக ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு மாதங்களாகக் கணக்கிடப்பட்டது என்று யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிடுகிறார். (11 ஆம் நூற்றாண்டில் யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலின் உரை ஆசிரியர்)

      ஆவணி, புரட்டாசி - கார்காலம்
      ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம்
      மார்கழி, தை - முன்பனிக் காலம்
      மாசி, பங்குனி - பின்பனிக் காலம்
      சித்திரை, வைகாசி - இளவேனிற் காலம்
      ஆனி, ஆடி - முதுவேனிற் காலம்
என ஆவணி  தொடக்கமாகக் கொண்டு காலம் கணக்கிடப்பட்டது. 

பார்க்க:
மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி
பக்கம்: 242


Sunday, May 18, 2025

எது தமிழ்ப் புத்தாண்டு???

எது தமிழ்ப் புத்தாண்டு???

MJ. பிரபாகர்

தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்: நூலறிமுகம் 


தமிழர் பண்டிகைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தமிழ்ப் புத்தாண்டு.  தமிழ்ப் புத்தாண்டு எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்ற சர்ச்சை மிக நீண்ட காலமாகவே நிலவி வருகிறது.  ஒரு சாரார் சித்திரை மாதம் எனவும், ஒரு சாரார் தை மாதம் எனவும் வலியுறுத்திக் கொண்டே உள்ளார்கள். 12 கட்டுரைகளின் வழியாக அறிவியல் சார்ந்த தனது கருத்துக்களை இந்நூலில்  ஆசிரியர் பதிவு செய்து உள்ளார். 

மனிதராகிய நாம் அனைவரும் வெளி மற்றும் காலம் சார்ந்து தான் வாழ்கிறோம். இதில் வெளி என்பது வீடு, தெரு, ஊர், நாடு எனப் பல பிரிவுகளில் நாம் பகுத்து அறிகிறோம்.  காலம் என்ற அம்சத்தை அளந்து, பிரித்து அறிய உதவும் கருவியே நாட்காட்டி.

தமிழர்கள் உட்பட இந்தியப் பகுதியில் பல சமூகங்கள் சூரிய இயக்கத்தோடு சேர்ந்து இயங்கும் சூரிய - சந்திர நாட்காட்டிகளை உருவாக்கியுள்ளார்கள். தற்போது நாம் ஆங்கில நாட்காட்டியைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். 

சங்க காலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கான சான்றுகள் இல்லை. சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் தையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றுகளும் இல்லை. 

இத்தகைய கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டுமென்றால் அதற்கு நமக்கு அறிவியல் அடிப்படைத் தேவை.  இந்த நூல் அறிவியல் அடிப்படையில் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்த அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பண்டைய கால  நாட்காட்டிகளைப் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் எளிய தமிழில் நூலாசிரியர் வழங்கியுள்ளார்.

ஆவணி மாதம் தான் பழந்தமிழரின் புத்தாண்டு என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நூல் ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

வரலாற்று ஆய்வாளர் என்பவர் உண்மைக்கு மட்டுமே உண்மையானவராக இருக்க வேண்டும்.  ஏனெனில் உண்மைதான் வரலாற்றின் தாய்.  வரலாறு தான் அருஞ்செயல்களை ஆவணப்படுத்தி அடைகாக்கிறது. தெளிவின்மையின் எதிரி. கடந்த காலத்தின் சாட்சி. எதிர்காலத்தின் இயக்கு விசையும் கூட என்ற அம்பேத்கரின் கூற்றை நூலாசிரியர் அருமையாகச்  சுட்டிக்காட்டி உள்ளார். 

நூலாசிரியர் எந்த வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளச் சொல்லவில்லை. 
தை புத்தாண்டு என்று சொல்பவர்களையும் சித்திரைதான் புத்தாண்டு என்று சொல்பவர்களையும் அவர்களின் கொண்டாட்டத்தை மாற்றிக்கொள்ள எந்த வகையிலும் கூறவில்லை. 
ஆவணியே ஆதி என்று வரலாற்று ஆவணங்களான நிகண்டுகள் தெரிவிப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார். 

எனவே ஆண்டின் தொடக்கம் எது என தமிழர்கள் வரலாற்றில் மேற்கொண்ட ஆய்வு இது என்பதை ஏற்றுக் கொண்டு, ஆண்டின் தொடக்கம் குறித்த உண்மையை,  தமிழர் மரபு எது என்பதைப்  புரிந்து கொண்டாலே இந்த நூலில் நோக்கம் நிறைவேறி உள்ளதாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் தமிழகச் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்த உரைகளையும் நமக்கு ஆதாரமாக வழங்கி உள்ளார்.

தமிழ் வரலாறு பண்பாடு குறித்து ஆர்வம் உடையவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல் இது. பகுத்தறிவு சிந்தனைகளையும் நமக்கு வழங்கி உள்ளார். 

தமிழ் மொழி ஆர்வலரான முனைவர் ஜோதி எஸ்.  தேமொழி அமெரிக்க வாழ் தமிழர்.  

"தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்"
நூலாசிரியர் : முனைவர் தேமொழி
வெளியீடு :  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் -2024
விலை : ரூபாய் 250/-
தொடர்புக்கு: E Mail : mythforg@gmail.com 
நூல் கிடைக்குமிடம்: https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum

#தமிழ்ப்புத்தாண்டு, #நூலறிமுகம், #MJ. பிரபாகர், #Themozhi  


Monday, October 7, 2024

தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் நச்சினார்க்கினியர்

தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் நச்சினார்க்கினியர்



தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று, ஆட்சியில்  இருந்த திமுக அரசால் 2008 ஆம் ஆண்டு தைத் திங்கள் 23 ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை நீக்கம் செய்து சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசாணை பிறப்பித்தது.  அதன் தொடக்கமாக, தமிழர்களின் ஆண்டின் தொடக்கம் சித்திரைப் புத்தாண்டுதான் என்றும், இல்லையில்லை தைப்புத்தாண்டுதான் என்றும் தமிழர்கள் அணி பிரிந்து சர்ச்சையில் ஈடுபட்டிருப்பது வழக்கமாகிவிட்டது.  

பொ.ஆ. 9 ஆம் நூற்றாண்டு காலத்திய சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டு முதற்கொண்டு, பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்பவரால் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு வரை "ஆவணியே ஆதி" என்று நிகண்டுகள் நேரடியாக ஆண்டின் தொடக்கம் ஆவணி என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றன. இதனை எதிரொலிக்கும்  வகையில் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் தமிழரின் புத்தாண்டின் தொடக்கம் இதுதான் என்று நேரடியாகக்  குறிப்பிடும்  தகவல்கள் இல்லை என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தத் தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் வகையில் நச்சினார்க்கினியர் எழுதிய உரைகள் நமக்கு உதவுகின்றன.  

நச்சினார்க்கினியர் ஓர் அறிமுகம்:
நச்சினார்க்கினியர் பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களில் ஒருவர். அவர் உரை கூறும் திறனை மெச்சி “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்றும் பாராட்டப் படுபவர். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டவர்.  பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி முதலியவற்றிற்கு உரை வகுத்துள்ளார். பேராசிரியரால் உரையெழுதாமல் விடுபட்டுப் போயிருந்த குறுந்தொகை இருபது பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார். இவர் உரை வகுத்ததைக் குறிப்பிட்டு;  
        பாரத் தொல்காப்பியமும் பத்துப் பாட்டுங் கலியும்
        ஆரக் குறுந்தொகையுள் அயன் நான்கும் — சாரத்
        திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
        விருத்தி  நச்சினார்க்கினியமே  
என்று ஒரு வெண்பா உள்ளது.

நச்சினார்க்கினியர் பழந்தமிழ் இலக்கியங்களை மரபறிந்து, பொருள் தெளிவுடன் சுவையாக எடுத்து விளக்கியவர் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.  இவர் குறித்த விரிவான ஆய்வுநூல் ஒன்றை எழுதிய மு. அண்ணாமலை அவர்கள் நச்சினார்க்கினியர் குறித்துக் கூறுகையில், "இலக்கணம் இலக்கியம் ஆகிய இரு துறையினும் வல்லவராயினும் அவரை ஓர் இலக்கிய உரைகாரராக வைத்துக் காண்பதே பொருந்தும். ஒரு விரிவான காவியத்திற்குச் சுருக்கமாகவும், அழகாகவும், திட்பமாகவும், உரை செய்வதெப்படி என்பதற்குச் சீவக சிந்தாமணி உரை முன் மாதிரியாக அமைந்திருக்கிறது" என்று கூறுவார்.

தொல்காப்பியத்தின் ஒவ்வோர் இயல் முடிவிலும் "மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை உரை முற்றிற்று" எனக் காணப்படுகிறது. அவ்வாறே, "பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று" எனக் காணப்படுகிறது.  பத்துப்பாட்டு உரை முடிவிலும், உரைச் சிறப்புப்பாயிரங்களிலும் அவ்வாறே குறிப்பிடப்படுவதால்,  நச்சினார்க்கினியர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்மார்த்த பிராமணப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், மதுரையில் வாழ்ந்தவர் என்றும் அறியப்படுகிறது.   இவர் சிவனை வழிபடும் வைதிகராக இருப்பினும் சமயக் காழ்ப்பின்றிச் சமண காவியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதிய பண்பாளர். 'அருளொடு புணர்ந்த அகற்சி' என்ற தொல்காப்பியத் தொடருக்கு துறவு என்று பொருள் எழுதி அத்துறவுக்குப் புத்தன் துறவையே எடுத்துக்காட்டாக விளக்கியவர்.

இறையனார் களவியல் உரைகாரர், உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், பேராசிரியர்,  சேனாவரையர் முதலிய உரையாசிரியர்களை இவர் தம் உரையில் ஆங்காங்கு குறித்தும் மறுத்தும் எழுதியுள்ளார். எனவே அவர்களுக்கெல்லாம் இவர் பிந்தியவராவார். சேனாவரையர் 'எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகர பாண்டியன்' (கி.பி. 1268-1311) காலத்தில் வாழ்ந்தவர் என்று  மு. இராகவையங்கார், சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். எனவே, நச்சினார்க்கினியர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலாவது அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலாவது (1350 - 1450 இடைப்பட்ட காலம்) வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதலாம்.  

தமது உரைகளில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோளாகக் காட்டும்  நச்சினார்க்கினியர் மிகப்பரந்த நூற் புலமையுள்ளவர் என்று பாராட்டப்படுபவர். அதேவேளை, உரை  கூறுகையில் இவர் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் முறை இவரது உரை கூறும் முறையின் குறைபாடாகப்  பல தமிழறிஞர்கள் குறிப்பிடப்படுவதையும் காண முடிகிறது. கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் என்னும் ஒரு புதிய உத்தியை அதிகம் கையாண்டது இவர்தான் என்று அறியப்படுகிறது.

“சொற்கிடந்தாங்கு பொருள் கொள்ளாது  தாம் நினைத்தாங்குச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இவர் தம் உரை  உரையறங் கடந்த உரை ஆயிற்று.  பொருளறை செய்த இப்பெருங்குறை  இவ்வுரையில் இல்லாதிருப்பின்  நச்சினார்க்கினியர் உரை ஞாயிறாகப்  பெரும் புகழ் பெற்றிருப்பர்." என்று தொல்காப்பியக் கடல் என்ற நூலை எழுதிய வ.சுப மாணிக்கம் அவர்கள் கருதுகிறார்.

நச்சினார்க்கினியர் உரைகள் தரும் விளக்கம்:
தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பாவான
      “காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
      கூதிர் யாமம் என்மனார் புலவர்”     (அகத்திணையியல், நூற்பா 6)
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் ஆவணிதான் ஆண்டின் தொடக்கம் என்று விரிவாக விளக்கம் அளிக்கிறார்.  

நக்கீரர் எழுதிய சங்க இலக்கியமான நெடுநல்வாடை பாடலுக்கும்  உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர்.   இப்பாடலில் இரு இடங்களில் சித்திரை குறித்து விளக்கம் தரக் கூடிய பகுதிகள் உள்ளன.  நக்கீரர் எழுதிய பாடல் வரிகள் ஆண்டின் நாள் அல்லது மாதம் குறித்த குறிப்புகளைக் கூறவில்லை.   இருப்பினும் விரிவாக உரை எழுதும் முறையைக் கடைப்பிடித்த நச்சினார்க்கினியர், ஆண்டின் தொடக்கம் சித்திரை என்பது தமிழர் மரபாக இருந்திருக்குமாயின், இந்த இரு இடங்களிலும் அதைக்  குறிப்பிடாமல் உரை எழுதியிருக்கவும் மாட்டார்.

(1) தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் ஆவணித் திங்கள் ஆண்டின் தொடக்கம் என்றும் குறிப்பிட்டதையும்;  
(2) நெடுநல்வாடை உரையில் ஆண்டின் தொடக்கம் சித்திரைத் திங்கள் என்பதைக் குறிப்பிடாமையையும் 
கவனத்தில் கொண்டால் அவர் வாழ்ந்த காலம் வரை, 15 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்களின் ஆண்டுக் கணக்கு ஆவணியில் தொடங்கியது என்று உறுதியாகக் கொள்ளலாம்.   அடுத்து தொல்காப்பிய நூற்பாவிற்கும்  நெடுநல்வாடை  பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர் வழங்கிய உரைகளைச்  சற்று விரிவாகக் காணலாம்.

(1) தொல்காப்பிய உரை:
      “காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
      கூதிர் யாமம் என்மனார் புலவர்”     – (அகத்திணையியல், நூ. 6)
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் . . .  

"இக்காலங்கட்கு விதந்து ஓர் பெயர் கூறாது வாளா கூறினார்.  அப்பெயர் உலக வழக்காய் அப்பொருள் உணர நிற்றலின்.   காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று உரை எழுதியுள்ளார்.

இதன் பொருள்; உலக வழக்காக யாவரும் அறிந்த செய்தி என்பதால் தொல்காப்பியர் சிறப்பாகப் பொருள் கூற முற்படாமல் பொதுவான வழக்காற்றை அவ்வாறே நூற்பாவாகச் சொல்லிச் சென்றுள்ளார்.  இதன் விளக்கம் யாதெனில், ஞாயிற்றின் ஆட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (ஆவணித் திங்கள்),  திங்களின் ஆட்சி வீடாகிய  கற்கடகவோரையின் இறுதி (ஆடித்திங்கள்) வந்து முடியும்வரை ஓர் ஆண்டாகும்.  இதனை முறையாக ஆறு பருவங்களாகப் பகுத்து ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்கள் உரியதாக்கினார் என்று நச்சினார்க்கினியர் மிகத் தெளிவாக விளக்கம் உரைக்கிறார்.  அத்துடன் ஞாயிற்றைக் கொண்டே காலம் வரையறுக்கப்பட்டதால்  'காலவுரிமை எய்திய ஞாயிறு' என்றும் குறிப்பிடுகிறார்.  

(2) நெடுநல்வாடை உரை:
2.1: பாண்டியன் கோட்டைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட சித்திரை நாள்:
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரைக் கணக்காயனார் மகனார் ஆன நக்கீரனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல்.  பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்து நாடாளும், அரண்மனையும்  பெருங்கோட்டையும் எவ்வாறு கட்டப்பட்டது என்று விளக்கும் பாடல் வரிகள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை நூலில் இடம்பெறுகிறது.  இப்பாடலில் 'நிழலற்ற நாளில்' அக்கோட்டையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகக் குறிப்பு உள்ளது.

          "... ... ... ...மாதிரம்
          விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
          இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு
          ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து"
              (நெடுநல்வாடை, 72-75)
"இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு ஒருதிறம் சாரா அரைநாள் " என்ற சொற்றொடர் நிழலற்றநாளை அறியும் முறையைக் குறிக்கிறது.

இப்பாடலுக்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர்;
     "திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற
     இடத்தை உடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து
     இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா
     நிழலால் தாரை போக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்
     கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச்
     சாரப் போகாத சித்திரைத் திங்களின் நடுவிற்
     பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே
     அங்குரார்ப்பணம் பண்ணி"
என்று விளக்கம் தருகிறார்.

சித்திரை மாதத்து இடைப்பத்து நாட்களில் (அதாவது சித்திரை 11 முதல் - சித்திரை 20 நாட்களுக்குள்) அப்பகுதியில் எது நிழலற்ற நாளோ அந்த ஒருநாளின் நண்பகலில்  பதினைந்தாவது  நாழிகையில் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.  நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் அந்த நிழலற்ற நாள் எந்த மாதத்தின் நாள்? பாடல் குறிப்பிடுவது ஆண்டில் இருமுறை நிகழக்கூடிய நிழலற்ற நாளைக் கொண்ட சித்திரையிலா அல்லது ஆவணியிலா, அது எந்த மாதத்தின் நிழலற்ற நாள் என்று நக்கீரரால் குறிப்பிடப் படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  அது சித்திரை மாதத்து நிழலற்ற நாள் என்று இங்குக் குறிப்பிடுபவர் உரைகாரர் நச்சினார்க்கினியர்.

நச்சினார்க்கினியர்  இந்த இடத்தில் விரிவாகச் சித்திரைத் திங்கள் குறித்து விளக்கம் தர முற்பட்டும் கூட ஆண்டின் முதல் மாதம் அது என்று விளக்கமளிக்க முயலவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.  

அவ்வாறே நெடுநல்வாடையில்  தொடர்ந்து வரும் பின்பகுதியில் சித்திரை ஆண்டின் தொடக்கம் எனக் குறிப்பிட நச்சினார்க்கினியருக்கு  மற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.  ஆனால் அப்பொழுதும் அவர் ஆண்டின் தொடக்கம் சித்திரை என்று குறிப்பிடவில்லை. இப்பகுதி பாண்டிமாதேவியின் அரண்மனையில் அவள்  மன்னனைப் பிரிந்திருக்க நேர்ந்ததை எண்ணி  வருந்தும் காட்சி.  

2.2: பாண்டிமாதேவியின் பள்ளியறைக் காட்சி:
நெடுநல்வாடையில் நூலில், பாண்டிய மன்னன் போரின் காரணமாகப் போர்க்களம் சென்று விடுகிறான். மன்னன் வருவதாகக் கூறிய  நாளும்  கடந்து குளிர் காலமும் வந்துவிட்டது. மதுரையின் அரண்மனை அந்தப்புரத்தில் அவன் நினைவாக   உறக்கம் வராது வாடுகிறாள் அரசி. பள்ளியறையின் அகன்ற பாண்டில் (வட்ட வடிவக் கட்டில்) மேல் மெல்லியதாக விரித்த ஒரு மஞ்சமும் அதன் மேலே மென்மையான அன்னத்தூவி தலையணைகளும் கொண்ட  பஞ்சணை  இருக்கிறது. பஞ்சணை மேல் முற்றுப்பெறாத கோட்டுச் சித்திரத்தை போல பாண்டிமாதேவி சாய்ந்திருக்கிறாள். மஞ்சத்தின் உறுதியான திரண்ட கட்டில் கால்களின் மேற்புறம், துணியால் கட்டிய மேல் விதானத்தில் வரையப்பட்டிருந்த திண்ணிய கொம்புகளையுடைய மேட இராசி முதலாகப் பன்னிரு இராசிகளின் படத்தில் ஞாயிற்றையும், திங்களையும்;  திங்களோடு  இணைந்து நின்ற ரோகிணி விண்மீனையும் பார்த்து நெடு மூச்சு விடுகிறாள் அரசி.  ரோகிணியைப் போன்று தன் காதலனோடு பிரிவின்றி வாழும் பேறு தனக்குக் கிட்டவில்லையே.  ரோகிணி தன் காதலனான நிலவுடன் இணைபிரியாது இருக்க நாம் மட்டும் மன்னனைப் பிரிந்து தனியே வாடுகிறோமே  என்று ஏங்குகிறாள்.  தன்மேல் கொண்ட கழிவிரக்கத்தால் கண்களில் பொங்கிய கண்ணீரை, விரலால்  சுண்டிவிட்டபடி வருந்துகிறாள்.  
          "புதுவதுஇயன்ற மெழுகுசெய் படமிசைத்
          திண்நிலைமருப்பின் ஆடுதலை ஆக
          விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
          முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
          உரோகிணி நினைவள் நோக்கிநெடுதுயிரா
          மாயித ழேந்திய மலிந்துவீ ழ‌ரிப்பனி
          செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்    
          புலம்பொடு வதியு நலங்கிள ர‌ரிவை"
                    - (நெடுநல் வாடை, 159-66)

இப்பாடலில் இடம் பெறும் "திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” (வரி 160-161) என்ற வரியையே தமிழரின் ஆண்டுக் கணக்கு சித்திரையில் தொடங்குகிறது  என்று கருதுவோர் மிக முக்கியமான சான்றாக முன்வைப்பர்.  

திண்ணிய‌ நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று விண்ணில் திரியும்,  மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமனின்ற உரோகிணியைப் போல‌ யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து நெட்டுயிர்ப்புக் கொண்டு, தன்கடைக்கண்ணில் தளும்பிய  கண்ணீரைத் தனது  சிவந்த விரலால் சுண்டிவிட்டு, மன்னனைப் பிரிந்து தனிமையில் இருப்பதற்காக பாண்டிமாதேவி வருந்தினாள் என்பது  நச்சினார்க்கினியர் தரும் உரையின் சாரம்.

தொன்று தொட்டு தமிழர்கள் பின்பற்றுவது  கதிரவனின் நகர்வை அடிப்படையாக்கக்  கொண்ட காலக் கணக்கீடு. அதனால்தான் ஆண்டு ஆறு பருவங்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாட்களில் தமிழரின் பயன்பாட்டில் உள்ளது சூரிய சித்தாந்த நாட்காட்டி.  இது வான் வெளியை 12 ஓரைகளாக அல்லது வீடுகளாகப் பிரித்துக்  கணக்கிடும் கனலி வட்டம் (அல்லது ஓரை வட்டம் அல்லது இராசிச் சக்கரம்) என்பதை அடிப்படையாகக் கொண்டது. இதில் மேஷ ஓரையில் சூரியன் தொடங்கும் காலம் ஆண்டின் தொடக்கமாக, இளவேனில் தொடங்கும் சித்திரைத் திங்களிலிருந்து ஆண்டுக் கணக்கு தொடங்குகிறது என்பதை அறிவோம்.  இந்த வரிகளுக்கு விளக்கம் அளிக்கையில் ஆண்டின் தொடக்கம் சித்திரை எனக் குறிப்பிட நச்சினார்க்கினியருக்கு மிக நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்த மற்றொரு வாய்ப்பிலும் சித்திரை ஆண்டின் தொடக்கம் என்று அவர் குறிப்பிடவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

அவர் இராசிச்  சக்கரத்தில் முதலில் இருக்கும் ஓரை மேஷம் என்பதை "திண்ணிய‌ நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக" எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.  ஆனால் தமிழர்களுக்கு ஆண்டு அங்குத் தொடங்கவில்லை.  அவர்களுக்குச் சிம்ம ஓரையில்தான், கார்காலத்தில்தான்  தொடங்கியது என்பதால் அவர் ஆண்டின் தொடக்கம் குறித்து இப்பகுதியில் குறிப்பிடவில்லை.  எல்லா ராசியிலும்  சூரியன் பயணிக்கிறது.  ஆனால் ரோகிணி விண்மீன் தன் காதலன் சந்திரனுடன்  பிரியாமல் இணைந்தே இருக்கிறது, ரோகிணி போலத் தன் காதலனான பாண்டிய மன்னனுடன் பிரியாமல் இணைந்திருக்கத் தனக்கு வாய்க்கவில்லை என்பது மட்டுமே அரசியின் ஏக்கத்திற்குக் காரணம் என்பதை நக்கீரர் பாடலில் சொல்லியுள்ளார் என்று கூறி,  அவ்வரிகளுக்கு உரை எழுதிக் கடந்து விடுகிறார் நச்சினார்க்கினியர் (இங்கு  ரோகிணி சந்திரனின் 27 மனைவியருள் அவனுக்கு விருப்பமான மனைவி, மற்ற மனைவியரைவிட  அதிக அன்புடன் அவன் ரோகிணியுடன் வாழ்ந்தான் என்ற புராணக் கதை இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது).

முடிவுரை:  
தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு  உரை எழுதிய நச்சினார்க்கினியர் மிகப்பரந்த நூற் புலமையுள்ளவர் என்றும், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு மரபறிந்து, பொருள் தெளிவுடன் உரை எழுதியவர் என்றும் பாராட்டப் பாடுபவர்.  அவர் தொல்காப்பிய உரையில் தமிழர்களின் ஆண்டுக் கணக்கின் தொடக்கம் என்பதை விளக்குகிறார்.  அவரே நெடுநல்வாடை பாடலுக்கு உரை எழுதும் பொழுது இருமுறை சித்திரை குறித்து விளக்கம் அளிக்கக் கூடிய வாய்ப்பிருந்தும், சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் குறிப்பிடவில்லை என்பதையும் ஒருங்கே இணைத்துப் பார்த்தால், தமிழரின் ஆண்டின் தொடக்கம் எது என்ற புதிரை நச்சினார்க்கினியர் விடுவித்துள்ளார் என்று தெளியலாம்.  அவருடைய உரைகள் தமிழர் ஆண்டின் தொடக்கம் எது என்பதை  ‘உறுதிப்படுத்தும் சோதனை முடிவு’ (confirmatory test result) போன்றது எனவும் கொள்ளலாம்.  இதன் மூலம் நச்சினார்க்கினியர் வாழ்ந்த காலமான 15 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆண்டின்  தொடக்கம் ஆவணியில் தொடங்குகிறது என்பதையும், இத்தகவலை பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூடாமணி நிகண்டும்  உறுதி செய்கிறது என்பதையும் அறியலாம். நிகண்டுகள் ஏன் ஆவணியை ஆண்டின் தொடக்கம் என்று கூறுகிறது என்பதற்கு தைப்புத்தாண்டு  அணியினரோ அல்லது சித்திரைப் புத்தாண்டு அணியினரோ என்றுமே   அது குறித்துப் பேச விரும்பியதில்லை.  அது ஏன் என்ற விளக்கம் நச்சினார்க்கினியர் மூலம்தான் நமக்குக் கிடைத்துள்ளது.


சான்றாதாரங்கள்:
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf

நெடுநல்வாடை - நச்சினார்க்கினியர் உரை
உ.வே. சாமிநாத அய்யர் (தொகுப்பு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0484.html




நன்றி: 
தமிழணங்கு 
அக்டோபர்,  2024



#இலக்கியம், #தமிழணங்கு, #தமிழ்ப்புத்தாண்டு, #Themozhi 




Monday, September 2, 2024

தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள்

தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள்


முன்னுரை:
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் எது என்று ஒவ்வொரு ஆண்டும் தொடரும் சர்ச்சையில் தொல்தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து சான்று காட்டும் நோக்கில் தைப் புத்தாண்டு  பிரிவினரும், சித்திரைப் புத்தாண்டு பிரிவினரும்  தத்தம் பங்கிற்கு மேற்கோள்களைக்  கொடுப்பது வழக்கம்.  உண்மையில் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில்  தமிழ் மாதங்கள் குறித்து எந்த அளவு செய்தி உள்ளது? அவற்றில் எந்த ஒரு செய்தியாவது இந்த மாதம்தான் தமிழர்களின் ஆண்டின் தொடக்கம் இதுவென்று என்று ஆணித்தரமாக அறுதியிட்டுக் கூறுகிறதா?  அதாவது தமிழ் நிகண்டுகள் "ஆவணியே ஆதி" என்று தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்தை ஆவணித் திங்கள் என்று நேரடியாக எடுத்துரைப்பது போல இலக்கியங்களில் புத்தாண்டின் தொடக்கத்தைச் சுட்டும் தகவல் உள்ளதா  என்று அறிய ஒரு விரிவான ஆய்வு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை.  

கணினி காலத்தில் அதன் உதவி கொண்டு ஆய்வு செய்வது பெருமளவு  தேடலை எளிமையாக்கி, நீண்ட ஆய்வுக் காலத்தைக் குறுக்கி விடுவது ஆய்வாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.  ஆய்விற்கான தரவுத் தளங்களும்  தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கி இணையத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கருவூலங்களும் இன்றைய நிலையில், உண்மை அறிவதில் ஆர்வமும், ஆய்வுத் தேவை உள்ளவர்களுக்கும்  ஆய்வை எளிதாக்குகிறது.

ஆய்வு முறை:
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம் (http://tamilconcordance.in/) தமிழிலக்கிய ஆய்வுத் தேவைகளுக்கு மிகுந்த உதவி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இத்தளத்தில் தமிழின் பண்டைய செவ்வியல் இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் ஆகியனவற்றுக்கும் பல இலக்கண நூல்களுக்கும் தொடரடைவுகள் கிடைக்கின்றன.  

இந்த ஆய்வுக்கு உதவிய தமிழிலக்கிய இலக்கண நூல்கள் 115; அவை கீழ்க்காணும் வகையில் அடங்குபவை. இந்த 115 நூல்களே இக்கட்டுரைக்கான ஆய்வெல்லை என அறிக.
இலக்கண நூல்கள் = 8
எட்டுத்தொகை நூல்கள் = 8
பத்துப்பாட்டு நூல்கள் = 10
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் = 18
ஐம்பெருங்காப்பிய நூல்கள் = 5
ஐஞ்சிறுகாப்பிய நூல்கள் = 5
பக்தி இலக்கிய நூல்கள் = 15
சிற்றிலக்கிய நூல்கள் = 20
நீதி நூல்கள் = 21
பிற இலக்கிய நூல்கள் = 5
(குறிப்பு: மேற்காணும் 115 நூல்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் விரிவான பட்டியலைப் பிற்சேர்க்கையாகக் காண்க)
பல தமிழ் நூல்களை ஓரிடத்தில் தொகுத்து, அவற்றுக்கான தொடரடைவுகளையும் தாங்கி நிற்கும்  இத்தளத்தின் உதவியின்றி இந்த ஆய்வைச் செய்வதற்கு,  தனி மனிதர் ஒருவர் ஆண்டுக்கணக்காக ஆய்வைச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கூறினால் அது மிகைப்படுத்துதல் அல்ல.  

தமிழ் இலக்கியத் தொடரடைவு தளத்தின் உதவி கொண்டு பட்டியலில் காணப்படும் 115 நூல்கள் யாவிலும் ஒவ்வொரு தமிழ் மாதம் குறித்தும் கிடைக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.  அவை அட்டவணையாக இணைக்கப் படுகிறது. கார்த்திகை மகளிரைக் குறிக்கும் கார்த்திகை என்ற சொல்லோ, துன்பம் என்ற பொருளில் வரும் ஆனி  என்ற சொல்லோ, கண்ணாடி, சிவன், நாட்டியம் போன்ற பொருளில் இடம் பெறும் ஆடி என்ற சொல்லோ தவிர்க்கப்பட்டன.  



இந்த ஆய்வின் மூலம் சில உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன; அவை . . .
ஆய்வின் நோக்கமான,  தமிழ்ப் புத்தாண்டு எது என்று நேரடியாகக் கூறும் தகவல் ஆய்வுக்கு  உட்படுத்தப்பட்ட நூல்களில்  இடம் பெறவில்லை.  இது வரலாறு இதழ் நடத்திய ஆய்வின் முடிவையே ஒத்திருக்கிறது.  வைகாசி  மாதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை எண்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக முறை குறிப்பிடப்படுவது பங்குனி மாதம்.
தைத்திங்கள்:
சங்க இலக்கி நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் இன்று வழக்கில் இருக்கும் 12 மாதங்களின் பெயர்களில் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.  இவற்றில் தைத் திங்களின் பெயரே மிகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலினால் சங்க இலக்கியங்களில் தை மாதமே  சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது  எனலாம்.  தைமாதத்தின் தைந்நீராடல், தைந்நீராடும் நோன்பு, குளிர்ந்த குளத்து நீர், குளிர்ந்த மழை ஆகியவற்றைக் குறிப்பிட நேர்கையில்  தைத்திங்கள் குறிப்பிடப் பெறுகின்றன என்பதைக் கீழ்க்காணும் வரிகள் மூலம் அறியலாம்.

தைஇத் தண் கயம் போல - ஐங்குறுநூறு
தைஇத் திங்கள் தண் கயம் படியும் - நற்றிணை
தைஇத் திங்கள் தண் கயம் போல - புறநானூறு
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் - அகநானூறு
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண் நீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ - கலித்தொகை
தாய் அருகா நின்று தவ தை நீராடுதல் - பரிபாடல் 11/91
நீ தக்காய் தை நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் - பரிபாடல் 11/115
இன்ன பண்பின் நின் தை நீராடல் - பரிபாடல் 11/134

இது போன்றே, இரவுப்பொழுது நீண்டு உள்ள மாசி மாதம் என்றும், பங்குனி விழா குறித்தும் குறிப்பிடுகையில் சங்க இலக்கியங்களில்  தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன. தை மாதம் குறித்து சங்க இலக்கியங்கள் சிறப்புறக் குறிப்பிட்டாலும் தை ஆண்டின் முதல் மாதம் என்றோ, மக்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்ற குறிப்போ இல்லை.  மாசி பங்குனி என்று குறிப்பது போல தை மாதம் குறித்தும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

சித்திரைத் திங்கள்:
இது போன்றே சித்திரை ஆண்டின் முதல் மாதம் என்ற குறிப்பும் இந்த நூல்களில் எங்கும் இடம் பெறவில்லை.  ஒப்பிடுகையில்,  தை மாதம் சிறப்புறக் குறிப்பிடப்பட்ட அளவிற்குச் சித்திரை மாதம்  சிறப்பாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையே காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் உருவானதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில்  சித்திரை மாதத்து முழுநிலவு நாளன்று  இந்திர விழா நடை பெற்றதைக் குறிக்கிறது.  ஆண்டின் தொடக்கம் என்ற குறிப்பு அதில் இடம் பெறவில்லை.    

தமிழர்கள் ஒவ்வொரு மாதத்தின் முழுநிலவு நாள்களையும்  சிறப்பாகக் கொண்டாடி இருப்பதையும் அறிய முடிகிறது.    சித்திரை மாதத்துச் சித்திரை நாள், பங்குனி உத்தரம், தைப்பூசம் போன்ற முழுநிலவு நாட்களின் நிலவொளியை மிக விரும்பிய  தமிழர்கள்  ஏதோ ஒரு காரணத்தை முன்னிறுத்தி விழா நாட்களாக அந்நாட்களை  மாற்றிக் கொண்டுள்ளார்கள்.  

எனவே, சித்திரை விழாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டின் தொடக்கம் எனக் கூற விரும்பினால் அந்தத் தகுதி  பங்குனி விழாவிற்கும் இருக்கிறது.  "பங்குனி விழவின் உறந்தையொடு" (நற்றிணை  234/7) சங்க கால நற்றிணை பாடலிலேயே பங்குனி விழா இடம் பெற்று விடுகிறது.

ஆவணித்திங்கள்:
நிகண்டுகளில் "ஆவணியே ஆதி" என்ற குறிப்பு போல ஆவணி ஆண்டின் தொடக்கம் என்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இந்த நூல்களில் தகவல் இல்லை.  

"ஆவணித் திங்கள் நள்ளிருள் பக்கத்து அட்டமி தனில் அரும் கற்பின் - (குசேலோபாக்கியானம்:3 676/2)  என்று கண்ணன் பிறந்த நாளைக் குறிப்பிடும் முகமாக குசேலோபாக்கியானம் ஆவணியைக் குறிப்பிடுகிறது.  

மேலும், "அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம்" (நந்திக் கலம்பகம்: 2 101/1) என்றவாறு ஆனி, ஆடி, ஆவணி என வரிசையாகக் குறிப்பிடும் முறை நந்திக் கலம்பகம் நூலில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.

"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (சம்பந்தர் -  கோளறு பதிகம்)
என்று சம்பந்தர் தேவாரத்தில் வார நாட்களை ஞாயிறு முதல் சனி வரை வரிசைப் படுத்திக் காட்டுவது போல தமிழ் மாதங்கள் வரிசைப்படுத்திக் காட்டுவதை இந்த இலக்கியங்களில் காண இயலவில்லை.  

கல்வெட்டுச் செய்தி:
இலக்கியங்கள் போலவே கல்வெட்டுகளிலும் புத்தாண்டு குறித்த தகவல்  இல்லை.  சோழர் காலக் கல்வெட்டு உத்தராயணத் துவக்கம் தை முதல்நாள் என்று குறிப்பிடுகிறது என்பதை அறிய முடிகிறது (திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள், முதலாம் இராஜராஜரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு).  

"ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை."  என்று தொல்லியல் ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

முடிவுரை:
ஆண்டின் தொடக்கம் எது என நிகண்டுகள் ஆவணப்படுத்தியது போல   இலக்கியங்களில் காணப்படாத நிலை தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம்  இருந்ததில்லை என்பதைத்தான் காட்டுகிறது.  சித்திரை ஆண்டின் புத்தாண்டு என்றும், வடமொழிப் பெயர்களுடைய 60 ஆண்டு காலக்கணக்கும் தமிழகத்தில் விஜய நகர ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டவை என்பதைக்  காலக்கோட்டில் கல்வெட்டுகளை  வரிசைப்படுத்தும் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.  ஆனால் இலக்கியத் தரவுகள் மூலம் தமிழர் எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கில் கொண்டார்கள் என்பதையோ, புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தது என்பதையோ கூற இயலாது.
 
_________________________________________________

பிற்சேர்க்கை:
ஆய்வுக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழிலக்கிய இலக்கண நூல்கள் பின்வருமாறு:
இலக்கண நூல்கள் : (இலக்கண நூல்கள் 8)
1. தொல்காப்பியம், 2. இறையனார் அகப்பொருள், 3. புறப்பொருள் வெண்பாமாலை, 4. நன்னூல், 5. நேமிநாதம், 6. நம்பி அகப்பொருள், 7. காக்கை பாடினியம், 8.  மறைந்துபோன இலக்கண நூல்கள் - தொகுப்பு.

சங்க இலக்கியம் — எட்டுத்தொகை : (எட்டுத்தொகை நூல்கள் 8)
1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல்,  6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு.

சங்க இலக்கியம் — பத்துப்பாட்டு : (பத்துப்பாட்டு நூல்கள் 10)
1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை , 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக்காஞ்சி, 7. நெடுநல்வாடை, 8. குறிஞ்சிப்பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம்.

சங்கம் மருவிய காலம் — பதினெண்கீழ்க்கணக்கு : (பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 18)
1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னா நாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார்நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. ஐந்திணை எழுபது, 9. திணைமொழி ஐம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. திருக்குறள், 12. திரிகடுகம், 13. ஆசாரக்கோவை, 14. பழமொழி நானூறு, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை.

ஐம்பெருங்காப்பியங்கள் : (ஐம்பெருங்காப்பிய நூல்கள் 5)
1. சிலப்பதிகாரம், 2. மணிமேகலை, 3. சீவக சிந்தாமணி, 4. வளையாபதி, 5. குண்டலகேசி.

ஐஞ்சிறுகாப்பியங்கள் : (ஐஞ்சிறுகாப்பிய நூல்கள் 5)
1. உதயண குமார காவியம், 2. நாக குமார காவியம், 3. யசோதர காவியம், 4. சூளாமணி, 5. நீலகேசி.

பக்தி இலக்கியங்கள் : (பக்தி இலக்கிய நூல்கள் 15)
1. தேவாரம், 2. திருவாசகம், 3. திருக்கோவையார், 4. திருமுறை, 5. திருமந்திரம், 6. சைவப் பிரபந்த மாலை, 7. பெரியபுராணம், 8. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், 9. திருப்புகழ், 10. தேம்பாவணி, 11. சீறாப்புராணம், 12. திருவருட்பா, 13. தாயுமானவர் பாடல்கள், 14. இரட்சணிய யாத்திரிகம், 15. கல்லாடம்.  

சிற்றிலக்கியங்கள் : (சிற்றிலக்கிய நூல்கள் 20)
1. அபிராமி அந்தாதி, 2. அழகர் கிள்ளைவிடு தூது, 3. கச்சிக் கலம்பகம், 4. கலிங்கத்துப்பரணி, 5. காசிக் கலம்பகம், 6. காவடிச் சிந்து, 7. குசேலோபாக்கியானம், 8. குமரேச சதகம், 9. தக்கயாகப்பரணி, 10. தஞ்சைவாணன் கோவை, 11. தமிழ்விடு தூது, 12. திருக்குற்றாலக் குறவஞ்சி, 13. நந்திக் கலம்பகம், 14.நளவெண்பா, 15. பாண்டிக்கோவை, 16. பெத்லகேம் குறவஞ்சி, 17. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 18. மதுரைக் கலம்பகம், 19. முக்கூடற் பள்ளு, 20. மூவருலா.

நீதி நூல்கள் : (நீதி நூல்கள் 21)
1. ஆத்திசூடி, 2. கொன்றைவேந்தன், 3. மூதுரை, 4. நல்வழி, 5. வெற்றி வேற்கை, 6. உலக நீதி, 7. நீதிநெறி விளக்கம், 8. அறநெறிச்சாரம், 9. நீதி நூல், 10. நன்னெறி, 11. நீதி சூடாமணி, 12. சோமேசர் முதுமொழி வெண்பா, 13. விவேக சிந்தாமணி, 14. ஆத்திசூடி வெண்பா, 15. நீதி வெண்பா, 16. நன்மதி வெண்பா, 17. அருங்கலச்செப்பு, 18. முதுமொழிமேல் வைப்பு, 19. புதிய ஆத்திசூடி, 20. இளையார் ஆத்திசூடி, 21. திருக்குறள் குமரேச வெண்பா.

பிற இலக்கியங்கள் : (பிற இலக்கிய நூல்கள் 5)
1. கம்பராமாயணம், 2. முத்தொள்ளாயிரம், 3. பெருங்கதை, 4. வில்லி பாரதம், 5. பாரதியார் கவிதைகள்.


ஆய்வுக்கு உதவிய தளம்:
முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம் 
   http://tamilconcordance.in/


சான்றாதாரங்கள்:
எதுதான் தமிழ்ப்புத்தாண்டு? ஆசிரியர் குழு, வரலாறு. இதழ் 86
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ]
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1094

சித்திரையில்தான் புத்தாண்டு,  எஸ். இராமச்சந்திரன். தினமணிi 24-1-2008 பக்கம் 8.  
http://www.sishri.org/puthandu.html

தமிழகத்தின் ஆண்டுக் கணக்கு முறை. திரு. க. த. திருநாவுக்கரசு. ஆய்வுக் கோவை, டாக்டர் வ. சுப. மாணிக்கம், 1971, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 376-381.
https://ta.wikisource.org/s/1lwe




நன்றி: 
தமிழணங்கு
செப்டெம்பர், 2024




#இலக்கியம், #தமிழணங்கு, #தமிழ்ப்புத்தாண்டு, #Themozhi 



Monday, July 8, 2024

நச்சினார்க்கினியர் குறிப்பிடும் நிழலற்ற நாள்

நச்சினார்க்கினியர் குறிப்பிடும் நிழலற்ற நாள்


தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இருந்து நாடாளும், அரண்மனையும்  பெருங்கோட்டையும் எவ்வாறு கட்டப்பட்டது என்று விளக்கும் பாடல் வரிகள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை நூலில் இடம்பெறுகிறது.  இப்பாடலில் 'நிழலற்ற நாளில்' அக்கோட்டையின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதாகக் குறிப்பு உள்ளது.

     "... ... ... ...மாதிரம்
     விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
     இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு
     ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து"
              (நெடுநல்வாடை, 72-75)
"இரு கோல் குறிநிலை" என்ற சொற்றொடர் நிழலற்றநாளை அறியும் முறையைக் குறிக்கிறது

இப்பாடலுக்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர்;
     "திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற
     இடத்தை உடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து
     இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா
     நிழலால் தாரை போக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்
     கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச்
     சாரப் போகாத சித்திரைத் திங்களின் நடுவிற்
     பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே
     அங்குரார்ப்பணம் பண்ணி"
என்று விளக்கம் தருகிறார்.

சித்திரை மாதத்து இடைப்பத்து நாட்களில் (அதாவது சித்திரை 11 முதல் - சித்திரை 20 நாட்களுக்குள்) அப்பகுதியில் எது நிழலற்ற நாளோ அந்த ஒருநாளின் நண்பகலில்  பதினைந்தாவது  நாழிகையில் அடிக்கல் நாட்டுவிழா நடை பெற்றதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.

"இரு கோல் குறிநிலை" என்ற சொற்றொடருக்கு  விளக்கம் தரும் முனைவர் பாண்டியராஜா, இரு கோல் கொண்ட ஒரு வட்டவடிவமான கருவி காலம் காட்ட உதவியுள்ளது. இந்த  வட்டமான கருவியின் விட்டத்தில், அதன் விளிம்புகளில் எதிர் எதிராக இரு கோல்கள் நடப்பட்டு, அக்கோல்கள் வடக்கு தெற்காக இருக்குமாறு தரையில் வைக்கப்படும்.  சூரியன் நகர்விற்கு ஏற்ப கோல்களின் நிழல் நகரும், உச்சி வெயில் நேரம் அவற்றின்  நிழல்கள் ஒரு ஒழுங்கில் அமையும் நேரம் நண்பகல் என்று குறிப்பிடுகிறார். மேலும், இந்த வானியல் கருவி சிந்துவெளியில் கிடைத்த ஒரு நேரம் காட்டும் தொல்லியல் சான்று போன்ற அமைப்பில் இருந்திருக்கக் கூடும் என்று விளக்கமளிக்கிறார்.  


ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள், 15 நாழிகை என்பது 15 X 24 = 360 நிமிடங்கள் அல்லது இன்றைய கணக்கில் 6 மணி நேரங்கள்.  எனவே பொழுது புலர்ந்ததில் இருந்து 15 ஆம் நாழிகை என்றால்; காலை 6 மணியில் இருந்து, 6 மணி  நேரம் கடந்த பிறகு, அதாவது நண்பகல் 12 மணிக்கு சூரியனின் நிழல் தரையில் விழாத நிழலற்ற நாளின் நண்பகலில் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது.  

இந்த விளக்க உரையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருத்துகள்:  
நிழலற்ற நாள் நிகழ்வது சூரியன் நகர்விற்கு ஏற்ப இடத்திற்கேற்றபடி மாறும். சூரியன்  வடதிசைச் செலவு மற்றும்  தென்திசைச் செலவில், என்று சூரியன் நம் தலை உச்சிக்கு நேர்  மேலே வருகிறதோ, அந்த இடத்தில் அன்று நிழலற்றநாள்  ஏற்படும். கடகரேகை, மகர ரேகைக்கு இடைப்பட்ட வெப்ப மண்டலப்பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிழலற்றநாள் ஏற்படும்.  
எனவே, நிழலற்ற நாள் ஆண்டின் இரு நாட்களில் தமிழகத்தின் பகுதிகளில் நிகழும். 
ஒன்று சூரியன் வடதிசைச் செலவாகக் கடக ரேகை நோக்கி நகரும் பொழுது சித்திரை மாதத்தில் ஒரு முறை (ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 25 தேதி வரை; குமரி- திருவேங்கடம் எல்லைக்குள்).  
மற்றொன்று, சூரியன் தென் திசைச் செலவாக மகர ரேகையை நோக்கி தமிழகத்தைக் கடக்கும் பொழுது ஆவணி மாதத்தில் ஒரு முறை (ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை;  குமரி- திருவேங்கடம் எல்லைக்குள்).  



நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் அந்த நிழலற்ற நாள் எந்த மாதத்தின் நாள்? பாடல் குறிப்பிடுவது சித்திரையா அல்லது ஆவணியா எந்த மாதத்தின் நிழலற்ற நாள் என்று நக்கீரரால் குறிப்பிடப் படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  
அது சித்திரை மாதத்து நிழலற்ற நாள் என்று இங்குக் குறிப்பிடுபவர் உரைகாரர் நச்சினார்க்கினியர். 

அவரது சித்திரை மாதம் என்ற அந்தத் தேர்வுக்குக் காரணம் வழக்கமாக கட்டுமானங்கள் தொடங்கப்படும் காலம் என்ற மரபாகக் கூட இருக்கலாம்.  மழையற்ற நாளில் கட்டுமானங்கள் தொடங்கப்பட  வாய்ப்புண்டு.  ஆவணியில் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதால் தவிர்க்கப் பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.  எப்படி இருப்பினும் சித்திரைத் திங்களின் நிழலற்ற நாள்  என்பது நச்சினார்க்கினியர் கருத்து, நக்கீரர் கூற்று அல்ல.

அடுத்த கட்டமாக, நச்சினார்க்கினியர் "சித்திரைத் திங்களின் நடுவிற் பத்தினின்ற யாதோர் நாளில்"  என்று குறிப்பிடுகிறார். அதன்படி கணக்கிட்டோம் என்றால், சித்திரையின் முதல் பத்து நாட்களையும், இறுதி பத்து நாட்களையும் தவிர்த்துவிட்டு, இடையில் உள்ள பத்து நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சித்திரை 11இல் இருந்து சித்திரை 20 நாட்களுக்குள் ஏதோ ஒரு நாள் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆண்ட மதுரையில் நிழலற்ற நாள் அமைய வேண்டும்.

நச்சினார்க்கினியர் விளக்கத்தின் அடிப்படையில் சித்திரை 15 இல் இருந்து  ± 5 நாட்களில்  தமிழகப் பகுதியில் நிழலற்ற நாள். இன்றைய தமிழக நிலப்பரப்பில், குமரி- திருவேங்கடம் எல்லைக்குள்,  ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 25 தேதி வரை, 16 நாட்களுக்கு ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு இடத்திலும் நிழலற்ற நாள் ஏற்படும்.  இது  நச்சினார்க்கினியர் கூறுவது போல 10 நாட்கள் நிழலற்ற நாள் என்பதில் இருந்து மாறுபடுகிறது, அரை மாதத்திற்கு, அல்லது சற்றொப்ப 15 நாட்கள் போல தமிழகத்தில் நிழலற்ற நாள்கள் ஏற்படுகின்றன.


மேலும், இன்றைய நாளில் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 25 தேதி வரை நிழலற்ற நாட்கள் என்பது வானியல் படி மிகத் துல்லியமான கணிப்பு.  எனவே, நச்சினார்க்கினியர் கூறுவது போல சித்திரை 11 ஆம் நாள் நிழலற்ற நாள் தொடங்குகிறது என்றால், இன்றைய கிரிகாரியன் நாட்காட்டிப்படி  மார்ச் மாத இறுதியில் சித்திரை தொடங்கியிருக்க வேண்டும்.   அவ்வாறு தொடங்கியிருந்தால் தான் ஏப்ரல் 9 அன்று அது சித்திரை 11 என்று இருக்க முடியும். அதுவும் வேறுபடுகிறது.  அவர் காலத்துடன் அல்லது அவர் சொல்லும் கணக்குடன் ஒப்பிட்டால் இன்றைய நாளில் சித்திரை தொடக்கம் சற்றொப்ப 14 நாட்கள் தள்ளிப் போய்விட்டது எனலாம்.

தமிழகத்தின் தெற்கு எல்லை குமரி முனையில் ஏப்ரல் 9 ஆம் தேதி நிழலற்ற நாள் தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு இடமாக நிழலற்ற நாள் ஏற்படுகிறது.  ஆனால், ஏப்ரல் 9 என்ற தொடக்கம் பங்குனி மாதத்தின் 27 ஆம் நாள்.  அது நச்சினார்க்கினியர் கூறுவது போல சித்திரைத் திங்கள் 11 ஆம் நாள் அல்ல.  

பருவகால முந்துநிலை (precession of the equinoxes) என்பதைக் கணக்கில் கொள்ளாத காரணத்தால் தமிழ் நாட்காட்டியில் கணக்கிடப்படும் நாட்கள் பருவகாலத்துடன் இணைந்து செல்லாமல் விலகிச் செல்கின்றன.  அதற்கு நச்சினார்க்கினியர் உரையும் ஒரு சான்றாக அமைகிறது.  அவர் உரை எழுதிய காலத்தில் இருந்து சித்திரை மாதத்தின் தொடக்கம் தோராயமாக 14 நாட்கள் விலகிவிட்டது.



சான்றாதாரம் :
1. நெடுநல்வாடை, நக்கீரர், வரிகள் 72-75
2. பத்துப்பாட்டு நெடுநல்வாடை, நச்சினார்க்கினியர் உரை, ப. 385.
3. இரு கோல் குறிநிலை,  முனைவர் ப.பாண்டியராஜா, ஜூன் 8, 2013, தினமணி
4. மனையுறை புறாக்கள் (நெடுநல்வாடை - விளக்கவுரை), புலவர் கா. கோவிந்தன், எழிலகம், 1991
5. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும், நா. பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், 1992

உதவிய தளம்:
ZERO SHADOW DAY, ASI - POEC, Astronomical Society of India
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/



நன்றி:  தமிழணங்கு
 ஜூலை, 2024


#தமிழ்ப்புத்தாண்டு , #தமிழணங்கு,  #Themozhi  


Monday, June 3, 2024

இளங்கோவடிகளின் பார்வையில் பருவங்கள் தோறும் மதுரை மாநகர்

இளங்கோவடிகளின் பார்வையில் பருவங்கள் தோறும் மதுரை மாநகர்



பழந்தமிழகத்தில் பருவகால மாற்றங்கள் எவ்வாறு இருந்தன என்பதை இலக்கியங்கள் மூலம் நம்மால் அறியமுடியும்.  குறிப்பாக ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கார், கூதிர், முன்பனி,  பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய ஆறு வகைப் பருவங்களில்  மதுரை மாநகரில் வாழ்ந்த இளம்பெண்கள் செயல்பாடுகளை விவரிக்கின்றார்.  

மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின்  நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும்  நினைவு கூர்வதாக சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125),   பகுதியில் காட்டப்பட்டுள்ளது.

அந்தி சாயும் வேளையில், மென்மையான மயக்கும் மாலை ஒளியில்,  மதுரை மகளிர் தங்களது அன்புக்குரியவர் பாராட்டும் வகையில் ஒப்பனை செய்து கொண்டு நிலாமுற்றத்தின் பூப்பஞ்சணை இருக்கைகளில் அவர்களுடன் இனிமையுடன் அமர்ந்திருப்பர்.
 
"கார்காலம்" (ஆவணி - புரட்டாசி மாதங்களில்) . . .
மகளிர் இடையில் பூப்போட்ட செந்நிறப் பட்டாடை அணிந்து, கூந்தலை முடித்து அதைக் குடச மலரால் அலங்கரித்து, சிறுமலைக்காட்டில் மலர்ந்த செங்கூதாளப் பூ, மணம் வீசும் அன்றலர்ந்த குறிஞ்சி மலர் ஆகியவற்றால் அலங்கரித்திருப்பர். செஞ்சாந்து  பூசிய  மார்பில் செங்கோட்டு வேரிப் பூச்சரம் அணிந்து, சிந்தூர மணப்பொடி பூசி நறுமண மூட்டிய உடலில் பவளக் கோவை அணிகலன் பூட்டியிருப்பர். மழைதரும் மேகத்திற்கு அரசனான, வச்சிரப் படையினைக் கொண்ட இந்திரனுக்கு ஆரவாரம் மிக்க மதுரையின் செவ்வணியை விளக்கமாகக் காட்டுமாறு, கார்காலத்தை ஆளும் அரசன் வாடைக் காற்றோடு வரும் கார்காலத்தில் மட்டுமின்றி ;

"கூதிர் காலம்"  (ஐப்பசி - கார்த்திகை மாதங்களில்) . . .
கட்டிடக்கலை பயின்ற வல்லுநர்களால் சிறப்பாகக் கட்டப்பட்ட, மேகம் தவழும் வகையில் உயர்ந்து நிற்கும் மாடத்தில், அழகிய மகளிர், அகிற் புகை தரும் விறகில் தீமூட்டிக் குளிர் காய்ந்தவாறு, மணக்கும் சந்தனம் பூசிய மார்பினையுடைய காதலரோடு இணைந்து இருக்கும் பொழுது, அவர்கள் குளிர் காற்றைத் தவிர்க்க சாளரங்களை அடைக்கும் கூதிர் காலமும் ;

"முன்பனிக் காலம்" (மார்கழி - தை மாதங்களில்) . . .
செல்வச் சிறப்பு மிக்க இல்லங்களின் நிலா முற்றங்களில் மகளிரும் ஆடவரும் இளம் வெய்யிலில் வெயில் காய விரும்புவர், தெற்கில் மகர ரேகையில் இருந்து வடதிசைச் செலவாக ஞாயிறு வடதிசை நோக்கி நகரத் தொடங்கும்  அக்காலத்தில், வானில் வெண்மேகங்கள் மிகக் குறைவாகக் காணப்படும் முன்பனிக் காலத்தில் மட்டுமின்றி ;

"பின்பனிக் காலம்" (மாசி - பங்குனி மாதங்களில்) . . .
மிகப் பெரிய கடலின் வழியே கப்பல் கூட்டத்தால் தொண்டி துறைமுகம் வழியாகக் கொண்டுவரப்பட்ட அகிலும் பட்டுத் துகிலும் சந்தனமும் வாசம் மிக்க பொருட்களும் கருப்பூரமும் சுமந்து வந்த கொண்டல் என்னும் கீழ் காற்றோடு பாண்டிய மன்னனின் கூடல் நகரில் நுழைந்து, காமனது விழாவினைக் கொண்டாடும் பின்பனிக் காலமாகிய பங்குனித் திங்கள் நாட்களில்;

"இளவேனில் காலம்" (சித்திரை - வைகாசி மாதங்களில்) . . .
குருக்கத்தி கொடிகளில் மலர்கள் மாலை போன்று மலரும் வகையில் அக்கொடிகள் வளரவும், காடுகளிலும் பூங்காக்களிலும் நறுமணமிக்க மலர்கள் பூக்கவும், பாண்டிய மன்னனின் பொதிகை மலையின் தென்றல் மதுரை மாநகர் நுழையவும்,  தன் துணையைக் கூடி மகிழவும் செய்யும் இனிமையான இளவேனில் அரசன் எங்குள்ளான் என்று வியக்க நேரும்.  பூங்கொடி போன்ற மகளிர், தம்மையுடைய காதலர்களோடு இளவேனில் பருவ காலத்தின் வரவை விரும்பி மகிழ்ந்து அதனால் வருத்தம் நீங்கிய காலத்தே;

"முதுவேனில் காலம்" (ஆனி - ஆடி மாதங்களில்) . . .
கன்றுகள் விரும்பிய பிடியின் கூட்டத்தோடு அவற்றைக் காக்கும் களிறுகள் நடுங்கும்படி,  வெயில் நிலைபெற்ற மலைசார்ந்த இடங்களில் காட்டுத்தீ தோன்றி பரவச் செய்த மேற்கிலிருந்து வீசிய காற்று கோடைக் காலத்தில் புகும் பொழுது  மதுரை மாநகரை ஆட்சி செய்து கொண்டிருந்த வேனில் அரசன், தென்திசைச் செலவாக  மகர ரேகையை நோக்கி முன்னேறி மதுரையை விட்டு வேறிடம் செல்ல நகர்ந்து கொண்டிருக்கும் வெயிலின் கடைசி நாள் அது.

இவ்வாறு  ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு பருவ காலத்திலும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மாநகரில் ஆடிமாத இறுதியில், கோடைக் காலம் முடியும் தறுவாயில், புறஞ்சேரியில் மாதரியின் இல்லத்தில் கண்ணகியை விட்டுவிட்டு கோவலன் மதுரை மாநகருக்குள் நுழைகிறான்.



சான்றாதாரம்:
சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம்: 4. ஊர் காண் காதை
https://www.tamilvu.org/library/l3100/html/l3100016.htm


நன்றி:  தமிழணங்கு
ஜூன் 2024


#தமிழ்ப்புத்தாண்டு , #தமிழணங்கு, #சிலப்பதிகாரம், #Themozhi  



Monday, May 6, 2024

தொடராண்டு சுழற்சியாண்டுக் கணக்குகளின் நிறை குறைகள்

தொடராண்டு சுழற்சியாண்டுக் கணக்குகளின் நிறை குறைகள்


இன்றைய நாட்களில்,  வைதீக சமயத்தினர் (அல்லது இந்து சமயத்தினர்) பின்பற்றும் நாட்காட்டிக் காலக் கணக்கு (அல்லது பஞ்சாங்கம்) சக ஆண்டின் அடிப்படையில் அமைவது. சக ஆண்டுக் கணக்கு முறையானது அதைத் தோற்றுவித்தவராகக் கருதப்படும்  சாலிவாகனரின் பெயரினை ஒட்டி சாலிவாகன  சகாப்தம் (சக + அப்தம்) / சக ஆண்டு என்றும் குறிப்பிடப்படும்.   'சாலிவாகனன்'  என்பவர் பண்டைய இந்திய நிலத்தில் தக்காணப் பகுதியில் ஆட்சி புரிந்த  'சாதவாகனர்'  என்ற அரச மரபின் (தொன்மங்களில் இவர்கள் ஆந்திரர் எனவும் அழைக்கப்பட்டவர்) புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர்.   இன்றும் தக்காணப் பகுதியில் ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் வழக்கில் உள்ள இந்த 'சக சம்வத்' தொடராண்டு முறையில் 60 ஆண்டுகள் சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெயரும் உண்டு.  

தமிழர்களின் புத்தாண்டு என்று கொண்டாடப்படும் ஆண்டுகள் (சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடியும் ஓராண்டுக் காலம்)  ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் என்று அறுபது ஆண்டுகளின் வடமொழிப் பெயர்கள்  கொடுக்கப்பட்டுள்ளது.  இவை அறுபது ஆண்டுகள் வட்டம்  அல்லது சம்வத்சரம் என்று குறிப்பிடப்படும். இதுவும்  சாலிவாகன சக ஆண்டுகளின் முறையைப் பின்பற்றி அமையும் அதே சுழற்சி முறைக் கணக்குதான்.  இது வியாழன் கோளின் நகர்வின் அடிப்படையில் அமைவதால் வியாழ வட்டம் என்றும்  குறிப்பிடப்படும். வியாழவட்டம் (60 year Jovian Cycle) சனிக் கோளுடன் இணைத்தவகையில் கணக்கிடப்படும்.  ஒரு முழு வியாழவட்டமானது  வியாழன் கோளின் ஐந்து சுற்றுகளைக் கணக்கில் கொண்டது. வியாழன் 12 ஓரைகள்(இராசிகள்) கொண்ட ஒரு கனலி வட்டத்தை (இராசிச் சக்கரத்தின் 12 இராசிகளை)  கடந்து முடிக்க, அதாவது கதிரவனை ஒரு முழுச் சுற்று சுற்றி முடிக்க 12 ஆண்டுகள் எடுக்கும். இதுபோன்று வியாழன் சூரியனை ஐந்து முழுச்சுற்றுகளைச் சுற்றி முடிக்கும் காலம் வியாழ வட்டக் கணக்கில் 60 ஆண்டுகள் கால அளவு கொண்டது (5 × 12).  

சாலிவாகன சக ஆண்டு முறைக் கணக்கிடல் நர்மதை தப்தி ஆறுகள், விந்திய சாத்பூரா மலைகளுக்குத் தெற்கில் உள்ள  தக்காணப் பகுதியில் சுமார் 2000 ஆண்டுகளாக வழக்கத்தில் பின்பற்றப்படுவது. இந்தக் காலக் கணக்கிடல் முறையில் கதிர்வழி (சௌரமானம்/solar) நாட்காட்டியையும், மதிவழி (சந்திரமானம்/lunar)  நாட்காட்டியையும் இணைத்து கதிர்-மதி வழி முறையில்  (lunisolar calendar) காலம் கணக்கிடுகிறார்கள்.  ஆதலால் சூரியன் மேஷ ஓரையில் நுழையும் காலத்தில் அமாவாசை / புதுநிலவு நாளில் ஆண்டுக் கணக்கைத் தொடங்குவார்கள்.

இவர்களுக்குத் தெற்கே உள்ள தமிழக மலையாள மக்கள் சூரிய நாட்காட்டியை (solar calendar) மட்டுமே கணக்கில் கொள்வதால் மேஷ ஓரையில் சூரியன் நுழையும் நாளை  மட்டுமே புத்தாண்டு எனக் கணக்கிடுவார்.  ஆகவே சூரிய நாட்காட்டி  கணக்கிடும் முறை கொண்ட தமிழ் மக்களுக்குப் பொங்கல், ஆடி புதுவெள்ளம் போன்ற பண்டிகை நாட்கள் மாறவே மாறாமல்  எல்லா ஆண்டுகளும் தமிழ் மாதங்களின் அதே நாட்களில்தான் வரும். இடைக்காலத்தில் தமிழுடனும் தமிழகத்துடனும் கொண்டிருந்த உறவைத் துண்டித்துக் கொண்டு சேர நாடு மலையாள மொழியுடன் கேரளப் பகுதியாகத் தனித்து இயங்கும் பொழுது அவர்களும் கொல்லம் ஆண்டு என்ற 'தொடராண்டு' முறைக்கு மாறிவிட்டனர்.  

ஆனால் சோதனையாகத் தமிழ் மக்கள் தொடராண்டுக் கணக்கு முறையைப் பரவலாகப் பயன் படுத்தும் வழக்கமே இல்லாது இருந்தார்கள்.  தமிழகத்தின் கல்வெட்டுகள் ஒரு சில 'கலியாண்டு' அல்லது 'கலியூழி' (இந்த நடப்பு ஆண்டு- கலி 5125 ஆம் ஆண்டு) என்ற தொடராண்டு காலக் கணக்கைப்  பின்பற்றி இருந்தாலும்,  ஏனோ இந்தத் தொடராண்டு முறை  கணக்கிடல் தமிழகப் பகுதியில் பரவலாக இல்லாது போயிற்று.  தமிழக மன்னர்கள் சோழர்களும் பாண்டியர்களும் பெரும்பாலும் தாங்கள் வெட்டும் கல்வெட்டுகளில் உள்ள காலக் கணக்குச் செய்தியை இந்த மன்னனின் இத்தனையாவது ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் முறையைப் பின்பற்றினர்.

ஒரு காலத்தில் மேற்குலகிலும் ஐரோப்பாவில் இது போன்ற ஆட்சி முறைக் குறிப்பிடும் வழக்கம் ஜூலியன் காலக் கணக்கில் இருந்தாலும்,  அவர்கள் வெகு விரைவில் அம்முறையைக்  கைவிட்டு, கிபி 525 ஆம் ஆண்டு முதல்,  கிறிஸ்துவுக்கு  முன், கிறிஸ்துவுக்குப்  பின் என்ற ஒரு முறையான தொடராண்டுக்  கணக்கினை ஏற்றுக் கொண்டனர்.  இதற்குக் காரணம், ஆள்பவரின் ஆட்சி ஆண்டைக் கொண்டு கணக்கிடும் முறையில், ஒரே ஆண்டில் ஒரு மன்னரின் ஆட்சி முடிந்து மற்றொருவர் ஆட்சி தொடங்கினால்  கணக்கில் குழப்பம் ஏற்படுவது காரணமாக இருந்ததுதான்.  எனவே காலக்கோட்டில் அமையும் தொடராண்டு முறை உலகில் பல பகுதிகளில் வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  

இந்தியாவிலும் விக்கிரம ஆண்டு தொடராண்டு முறை  வட இந்தியாவிலும், முன்னர் குறிப்பிட்ட  சக ஆண்டு தொடராண்டு முறை  தக்காணப் பகுதியிலும், ஏறத்தாழ  2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துவிட்டது. நடக்கும் இந்த ஆண்டில் விக்கிரம ஆண்டு-2081, சக ஆண்டு-1946  என்ற ஆண்டுகளின் கணக்கு எண்ணிக்கை இதைத்தான் காட்டுகிறது.  சூரிய நகர்வுகளைக் கொண்டு காலம் கணிக்கும் கதிர்வழி நாட்காட்டி முறை கொண்ட ஒரிசா(1431), வங்காளம்(1431), அஸ்ஸாம் (1431), மலையாளம் (கொல்லம் -1199) ஆகிய பகுதிகளும் இடையில் தொடராண்டு முறையில் காலத்தைக் கணக்கிடத் தொடங்கி விட்டனர்.  

இன்றைய தமிழ் மக்கள் தமிழ் ஆண்டுகள் என்ற பெயருடன் வழக்கத்தில் வைத்திருக்கும் இந்த 60 ஆண்டுக் கணக்கு முறையில் ஆண்டுகள்  பிரபவ, விபவ, சுக்ல . . . என்று தொடங்கி . . . ரக்தாட்சி, குரோதன, அட்சய என்று முடியும்.    அறுபது ஆண்டுகள் நிறைவுற்று ஒரு முழுச் சுழற்சி முடிந்தவுடன் மீண்டும் பிரபவ, விபவ, சுக்ல . . .  என்று கணக்கிடப்படும்.  வராகமிகிரர் (பொ.ஆண்டு  505 - 587) இயற்றிய 'பிருகத் சங்கிதை'யில்  குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்த 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் குறிப்பிடப் படுபவற்றில்  எதுவுமே தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பதையும் தமிழர்களும்  ஒப்புக் கொள்கிறார்கள்.  அதனால் இந்த 60 வடமொழிப்  பெயர்களையும் கைவிடாமல், தமிழ்ப்படுத்தியாவது தங்கள் வாழ்வில் இணைத்து தமிழாண்டுகள்  என்று கூறிவிட உறுதி பூண்டுள்ளார்கள் என்பது எந்த அளவில் தமிழ் மக்கள் சமயத்திற்கு முதன்மை நிலை அளித்து, தாய்மொழிக்கு அதற்கு அடுத்த நிலையைக்  கொடுத்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.  கோவிலில் தங்களுக்குப் புரியாத வடமொழியில்  வழிபாட்டினை மேற்கொள்வதற்கும், திருமணங்களில் வடமொழி மந்திரங்கள் கூறி வாழ்க்கையைத் தொடங்குவதற்கும்  இணையானது இம்முறை என்பதால் இது குறித்து ஆராய்வது எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விளைவையும் கொண்டுவரப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.  

எவ்வாறு இந்த வடமொழித் தழுவல் காலக் கணக்கீட்டு முறை  தமிழக மக்களின் வாழ்வில் நுழைந்தது என்பது மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டுக் கால கட்டத்தில்  தமிழக மன்னர்கள் ஆட்சிக் காலம் தமிழகத்தில் மறைந்த பிறகு,  தமிழகப் பகுதியை ஆட்சி செய்தவர்கள் விஜய நகர நாயக்க மன்னர்களும், பின்னர் தஞ்சைப் பகுதியில் மராட்டிய மன்னர்களும் ஆவார்கள்.  இவர்கள் சக ஆண்டு கணக்கு முறையைப் பின்பற்றிய தக்காணப் பகுதியிலிருந்து வந்தவர்கள். தங்களின் இந்தக் காலக்கணக்கு முறையைத் தமிழகத்தை ஆட்சி செய்த பொழுதும் தொடர்ந்தார்கள்.

நடப்பில் உள்ள 2024 ஆம் ஆண்டை தக்காணப் பகுதியினர் கீழ்க் காணுமாறு தான் இன்றும் குறிப்பிடுகிறார்கள்.  
சக சம்வதா 1946 -  குரோதி (தெலுங்கு ஆண்டுக் கணக்கு)
சக சம்வதா 1946 -  குரோதி (கன்னட ஆண்டுக் கணக்கு)
சக சம்வதா 1946 -  குரோதி (மராத்தி  ஆண்டுக் கணக்கு)
(https://www.drikpanchang.com/panchang/hindu-panchangs.html)

ஏற்கனவே எந்த தொடராண்டு முறையும் பயன் கொள்ளாத தமிழ் மக்களின் இடையில் அரச நடவடிக்கைகளில் அந்நிய மன்னர்கள் கையாண்ட நாட்கணக்கு எளிதில் உள்வாங்கப்பட்டுள்ளது.  தமிழ் நாட்டுக் கோவில்களில் விஜயநகர மன்னர் ஆட்சிக் காலங்களில்தான் பிரபவ, விபவ, சுக்ல . . .என்று காலம் குறிக்கும் முறை கல்வெட்டுகளில்  தோன்றத் தொடங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலின் மூன்றாவது கோபுரத்தின் சுவரில் உள்ள பொ. ஆ. 1500 களில் வெட்டப்பட்ட  விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கல்வெட்டு, திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் இந்த  நாட்காட்டி கணக்குமுறை ஊடுருவலுக்குச்  சான்றுகளாக அமைகின்றன.

இத்தகைய காலக் கணக்கு முறை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் வழக்கத்தில் இல்லை.  குலசேகரன் என்ற பராக்கிரமப் பாண்டியனுடைய செங்கோட்டைச் சிவன் கோயில் கல்வெட்டில்  முதன் முதலாக இந்த அறுபதாண்டுக் காலக் கணக்கு முறை இடம் பெற்றுள்ளது எனலாம். இக் கல்வெட்டில் பொறிக்கப்பெற்ற காலம் கி. பி. 1545 ஆம் ஆண்டாகும்  (Arch. Survey Vol I, No. VI P. 103-4).  இக் கல்வெட்டில் விசுவாவசு ஆண்டு குறிப்பிடப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அறுபது ஆண்டு வட்டத்தில் முப்பத்தொன்பதாவது ஆண்டாகும், இக் கல்வெட்டுத் தென் இந்தியாவில் விசய நகரப் பேரரசு சிறப்புற்று விளங்கிய காலத்தில் பொறிக்கப் பெற்றது. அப்பேரரசு காலத்திய கல்வெட்டுக்களில் இந்த ஆண்டுக் கணக்கு முறை வழக்கத்திற்கு வந்தமை புலனாகின்றது என்கிறார் க. த. திருநாவுக்கரசு.

இந்த அறுபதாண்டு  சுழற்சிமுறைக் கணக்கை மகிழ்வுடன் ஏற்றுப் பின்பற்றத் தொடங்கிய தமிழ் மக்கள் ஏனோ அதனுடன் இணைந்து வந்த  சக ஆண்டு என்ற தொடராண்டுக் கணக்கைப் பின்பற்றவில்லை.  இந்த முடிவை அந்நிய மன்னர்களே நடைமுறைப்படுத்த விரும்பாமல்  தங்களைத்  தமிழ் மக்களுடன் இணைத்துக் கொள்ளும்  விருப்பத்தால் செய்த மாற்றமா,  அல்லது தமிழ் மக்களே  தவிர்த்ததா என்பது மேலும் ஆய்வுக்கு உரிய ஒன்று.  அதனால் 15 ஆம் நூற்றாண்டு போல சித்திரையை முதல் மாதமாகக் கொண்டு தொடங்கும் அறுபது வியாழவட்ட  ஆண்டு பெயர்கள் கொண்ட காலக் கணக்கிடும் முறை தமிழகத்தில் நிலைத்துவிட்டது.  ஆனால் இந்த வரலாற்று உண்மையைத் தமிழர்கள் ஏற்கும் மனநிலையில்  இல்லாததால், மறுதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்கள் வாழ்வில் வைதீக சமயம் கொண்டிருக்கும் தாக்கமே காரணம்.

ஒரு நிகழ்வை வரலாற்றில் பதிய வேண்டும் என்றால், இன்றும் நாம் வழக்கில் பின்பற்றும் நிலை போலவே குறைந்தது 3 குறிப்புகள் வேண்டும், அவை; நாள், மாதம், ஆண்டு.   மேற்கொண்டு கிழமை சொல்வதோ, கால மாலை என நேரம் சொல்வதெல்லாம் மேலதிகத் தகவல்.  காலப் போக்கில்  இக்குறிப்புகள் முக்கியத்துவம் இல்லாமல் ஒரு நிலையைச் சென்றடையும்.  ஆனால் இந்த ஆண்டு, இந்த மாதம், இந்த நாளில் என்பது மிக அடிப்படையான காலக்குறிப்பு.  இவையே கூட தேவை கருதிச் சுருக்கப்படுவதும் உண்டு. இந்தியா விடுதலை என்றால் ஆகஸ்ட் 15  என்ற அளவில் நின்று விடலாம். அமெரிக்கா சுதந்திரம் ஜூலை 4 என்று மட்டும் சொல்வது இதற்கு ஓர் எடுத்துக் காட்டு. மாறாக  ஆண்டை மட்டும் குறிப்பிட்டுக் கடக்கும் நிலையும் இருக்கலாம், 2004 ஆண்டு சுனாமி வந்தது என்பது போல.  ஆனால் காலக் கோட்டில் நிகழ்வை அறிந்து கொள்ள, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள,  தொடரான ஆண்டுக் கணக்கில் ஆண்டைக் குறிப்பிடுவது மிக மிக இன்றி அமையாதது.  இல்லாவிட்டால் நிகழ்வின் முக்கியத்துவம் மதிப்பிழந்து போகும். அத்துடன்,  ஒரு நிகழ்வைக் காலக் கோட்டிலும் புரிந்து கொள்ள இயலாது.  

பிற்காலத்தில் அந்நியர் ஆட்சியில் சக தொடராண்டுக் கணக்குடன் அவர்கள் இணைத்துப் பயன்படுத்திய சுழற்சி  ஆண்டையும் ஏற்றுக் கொண்டிருந்தாலாவது வரவேற்கத் தக்கதாக இருந்திருக்கும்.  ஆண்டு குறித்து இரண்டு குறிப்புகளை (ஆண்டு எண் + ஆண்டின் பெயர்) இணைத்துப் பயன்படுத்துவது துல்லியத்தை மேம்படுத்தும் ஓர் உத்தியாக இருந்திருக்கக் கூடும் (Cross checking of data validation method). ஆனால் தொடராண்டு பகுதியைக் கைவிட்டு வெறும் சுழற்சியாண்டு முறையை மட்டும் பின்பற்றியது மெச்சத் தகுந்த முறை அல்ல. அந்நியர் காலக் கணக்குமுறையைத் தத்து எடுத்தவர்கள் அதை முழுமையாக சக தொடராண்டு கணக்குடனாவது  தத்து எடுத்திருக்கலாம்.  அவ்வாறு செய்யாதது கிடைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகளை கிரிகோரியன் ஆண்டுக் கணக்கிற்கு மாற்றுவதில் சிக்கலானதாக, சுற்றுவழிக்  கணக்காக அமைந்துள்ளதால் கணக்கிடும் பிழைகளுடன் சிலர் கணக்கிடும் நிலையில் கொண்டு விடலாம். இதை எடுத்துக் காட்டுடன் விளக்கினால் இம்முறையில் உள்ள குறைபாடு  புரியும்.

எடுத்துக் காட்டாக,  நீங்கள் பிறந்தது நள ஆண்டு உங்கள் சகோதரி பிறந்தது ஆனந்த ஆண்டு என்றால் எது முன்னர் எது பின்னர்? அவர் உங்கள் அக்காவா தங்கையா? இருவருக்கும் என்ன வயது வேறுபாடு, உங்கள் வயதுதான்  என்ன என்று இந்தத் தகவலைக்  கேட்பவரால் புரிந்து கொள்ள முடியாது.  இதையே நான் பிறந்தது 1976 என் சகோதரி  பிறந்தது 1974 என்றால் எல்லா விவரமும் தானே தெரியும்.  இதே போல ஓர் ஓலைச்சுவடி  ஒன்று 'விளம்பி' ஆண்டு என்று குறிப்பிட்டு உங்களுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.    இந்தத் தகவல் மட்டுமே அது   நடப்பில் நாம் பயன்படுத்தும் கிரிகோரியன் ஆண்டில்  பின் வரும் 1478, 1538, 1598, 1658, 1718, 1778, 1838, 1898 ஆண்டுகளில்  எந்த ஆண்டில் எழுதப்பட்ட ஓலை என்று கணிக்கவே வழி வகுக்காது.  மேற்கொண்டும் சில தகவல்கள் தேவை.  விளம்பி ஆண்டு ஆடி  மாதம் 15 ஆம் தேதி என்று  மாதத்தின் எந்த  நாள் என்ற தகவல் குறிப்பிட்டாலும் கூட ஒரு பயனும் இல்லை. இதுவும் உதவாது. மேற் குறிப்பிட்ட விளம்பி  ஆண்டுகளில் அதுவும் ஏதோ ஓர் ஆடி மாதம் 15 ஆம் நாள் அவ்வளவுதான். இதற்கும் மேலாக,  கிழமையோ அல்லது அமாவாசை, பௌர்ணமி, வளர் பிறை தேய்பிறை நாட்கள் அன்றைய நட்சத்திரம்  போன்ற ஏதாவது ஒரு தகவல் இருந்தாலே அது எந்த ஆண்டுடன் பொருந்துகிறது என்று கணக்கிட உதவும்.  இவ்வாறு கொடுக்கும் தகவலையும் சரியாகக் கணக்கிட்டுச்  சரியான கிரிகோரியன் நாளைக் கண்டுபிடிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை என்பதை அண்மைய நிகழ்ச்சி ஒன்று காட்டியுள்ளது.

"பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு"  என்று ஏப்ரல் 19, 2024 அன்று வெளியான  நாளிதழ் செய்தி மூலம் இதை அறிய முடியும்.  நாளிதழ் செய்தியில் தன் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு திருக்குறள் ஓலைச்சுவடியைக்  கண்டெடுத்த ஆய்வாளர் அச்சுவடி எழுதப்பட்ட காலம் விளம்பி ஆண்டு ஆடி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ற குறிப்பும் அதில் இருப்பதைக் கண்டார். இனி பழைய விளம்பி ஆண்டு பஞ்சாங்கங்களில் (1478, 1538, 1598, 1658, 1718, 1778, 1838, 1898 ஆண்டுகளில் உள்ள விளம்பி ஆண்டுகளில்) எந்த ஆண்டின் ஆடி மாதத்தின் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது என்று பொருத்திப் பார்த்தால் போதும். ஆனால் அது எளிதான முறையாக இருக்காது.  இதை எதிர் கொண்ட ஆய்வாளர் கணக்கிட்டு அவர் கண்டெடுத்த ஓலைச் சுவடியின்  காலம் 1718ம் ஆண்டு ஜூலை 31 என்றும்,  தற்போதைய நிலையில் 306 ஆண்டு பழமையான ஓலைச் சுவடி என்றும் கூறுகிறார்.  

ஆனால், 1718 ஆம் ஆண்டு விளம்பி வருடம் ஆடி மாதம் 15 ஆம் தேதி வருவது ஒரு "புதன் கிழமையில்" என்பதை இணையவழிப் பெறக்கூடிய பஞ்சாங்கம் காட்டுகிறது (https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=27/07/1718).   மாறாக, விளம்பி ஆண்டு - ஆடி மாதம் - 15 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை என்று ஓலைச்சுவடி கூறும் நாள் பொருந்திப் போவது 1838 ஆம் ஆண்டாக அறியப்படும் விளம்பி ஆண்டின் தகவலோடுதான் (https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=29/07/1838).  1838ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள்தான்  ஞாயிற்றுக் கிழமை ஆடி 15 ஆம் நாள். அதாவது அந்த ஓலைச்சுவடி 185 ஆண்டுகள் பழமையானது.  ஆய்வாளர் குறிப்பிடுவது போல 306 ஆண்டு பழமையான ஓலைச் சுவடி அல்ல.  

Case study method என்று ஆய்வுலகம் பின்பற்றும் ஓர் ஆய்வுமுறையின் அடிப்படையில் இந்த நிகழ்வை விளக்கலாம்.  எடுத்துக் கொண்ட ஒரு விளம்பி வருடக் குறிப்பு,  அதைத் துல்லியமாக கிரிகோரியன் கணக்கில் மாற்றி சரியான  காலம் காட்ட எத்தனை இடர்ப்பாடுகளைக்  கொடுக்கிறது என்பதை இச்செய்தி காட்டுகிறது. வெறும் விளம்பி ஆண்டு, விகாரி  ஆண்டு  என்ற குறிப்புகள் 'அரைகுறையான காலக் குறிப்புகள்', அவை  காலத்தைத்  துல்லியமாகக் காலக்கோட்டில்  அறிய உதவுவதில்லை. அத்தகைய காலக் கணக்கீடும் எளிதல்ல, அவற்றால் எந்த ஒரு பயனும் இல்லை.  மேற்கொண்டு அதிகப்படியாகக்  கிடைக்கும்  தகவல் இருந்தால் அதையும் பல பஞ்சாங்கங்களுடன்  பொருத்திப் பார்த்தே குறிப்பு கொடுக்கும் காலத்தை அறிய முடியும். சுழற்சியாண்டு  காட்டும் அரைகுறை காலக்  குறிப்பையும் சரியாகக் கணக்கிடுவதும் எளிதாக இல்லை என்பதும் இச்செய்தி மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும், இன்னமும் ஏன் தமிழர்கள் இந்தத் தமிழ்ப் பின்புலம் இல்லாத வடமொழிப் பெயர் கொண்ட, பயனற்ற ஆண்டுக் கணக்கைத் தமிழாண்டுகள் என்று கூறி பெருமிதம் கொள்கிறார்கள்? தமிழுக்குத் தலைக்குனிவான நிலையை ஏற்படுத்துகிறோம் என்பதைப் புரியாதவர்களாக இருக்கிறார்கள்? என்று சிந்தித்தால்;  மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையாகும் இயல்பையும், 'மதம் ஒரு போதைப்பொருள்' (“Religion is the opium of the people") என்று பொருளாதார மேதை கார்ல்மார்க்ஸ்  கூறியதையும் ஒருங்கே இணைத்துப் பார்த்தால் தமிழர்கள் பயனற்ற அறுபது ஆண்டுக் கணக்கைக் கைவிட முடியாத, மீள முடியாத  மனநிலையில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழர்கள் தொடக்கத்தில் இருந்தே இதில் தெளிவற்ற குறிப்புகளைப் பின்பற்றியவர்களாக வரலாற்றுக் காலக் கணிப்பில்  பின்தங்கிய நிலையில் இருப்பது நம் வரலாற்றை நாம் சரியாக அறிய முடியாத நிலையில் நம்மை வைத்திருக்கிறது. மற்றவர்கள் இதுதான் நம் வரலாறு என்று எழுதும் வாய்ப்பையும் அளிக்கிறது.  காலத்தின் முக்கியத்துவம் ஏன் தமிழ்ப் பண்பாட்டில் இத்தகைய முக்கியமற்ற ஒரு நிலையில் இருந்திருக்கிறது என்பது வியப்பளிக்கும் கேள்வி. இறுதியாக 1971ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற தொடராண்டு முறை ஒன்று தமிழக அரசால் முன்மொழியப்பட்டு, 1972இல் நடைமுறைக்கும் வந்தது. தொடர்ந்து 1981இல் அரச ஆவணங்களிலும் அலுவல் முறையில் பயன்படுத்தும் அரசாணையும் வெளியானது. திருவள்ளுவர் ஆண்டு தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடராண்டு  நாட்காட்டி முறைமை என்ற தகுதியும்  பெற்றது. இருப்பினும் குதிரை ஓடிய பின்னர் இலாயம் பூட்டப் பட்டது போன்ற நிலையில்,  பழங்காலத்து வரலாறுகளை எல்லாம் தொலைத்த பிறகு, அத்துடன் இன்று உலகம் முழுவதும் பொது வழக்கத்தில் வந்துவிட்ட கிரிகோரியன் காலக்கணிப்பு பயன்பாட்டில் இருக்கும் காலத்தில் அது ஒரு பொருளற்ற முயற்சியாக அமைந்தது.  


பின்குறிப்பு:
பின்வருபவை 60 வடமொழிப் பெயர் கொண்ட “தமிழ்” ஆண்டுகள் எனப்படுவன . . .
1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய




சான்றாதாரங்கள்:
அறுபது ஆண்டுகள்
https://ta.wikipedia.org/s/73v3
 
"The effects of Samvatsaras",  Jorge Angelino (2009).

கல்வெட்டுப் பாடல்கள். மா. இலாவண்யா, வரலாறு இதழ் 87 [மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012]
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1104

தமிழகத்தின் ஆண்டுக் கணக்கு முறை, திரு. க. த. திருநாவுக்கரசு.  ஆய்வுக் கோவை, தொகுப்பாளர் டாக்டர் வ. சுப. மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலை, 1971, பக்கம்: 376 - 381.

திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள், தேமொழி, ஜூன் 12, 2021 - சிறகு.  
http://siragu.com/திருவல்லிக்கேணி-கோயில்-க/

திருக்கணித முறை தமிழ்ப் பஞ்சாங்கம்
https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர் தகவல், வெள்ளி, ஏப்ரல் 19, 2024, தினமலர்
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-theni/-306-year-old-tirukkural-footprints-discovered-by-archeologist---/3602345



நன்றி:  தமிழணங்கு
மே,  2024



#தமிழ்ப்புத்தாண்டு , #தமிழணங்கு, #Themozhi  



Monday, August 7, 2023

நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா?

நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா?



'எது தமிழ்ப் புத்தாண்டு?' தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமான முறையில் அறிவிக்கப்பட்ட  தைத் திங்களின் முதல் நாளா (2008-ஆம் ஆண்டு அரசாணை) அல்லது அதுநாள் வரையில் வழக்கத்தில் இருந்துவந்த சித்திரைத் திங்களின் முதல் நாளா  என்ற புத்தாண்டு குறித்த சர்ச்சைகள் தமிழகத்தில் ஒரு தொடர்கதை.  ஆனால், இந்த இருநாட்களும் அல்ல, தொல் தமிழ் நாட்டில் ஆண்டின் தொடக்கமாக இருந்தது ஆவணித் திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு அசைக்கமுடியாத சான்றுகள் உள்ளன.  

எனவே சித்திரை முதல் நாள் ஆண்டின் தொடக்கமாகவும், அதன் வியாழவட்ட 60  ஆண்டுகள் சுழற்சி முறைக் கணக்கிடலில் பயன் கொள்ளப்பட்ட 'வடமொழி ஆண்டுப் பெயர்கள்’ கொண்ட காலக்கணிப்பு முறை வழக்கத்திற்கு வந்தது பிற்காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  வைதீகத்தின் தாக்கம் கொண்டுவந்த விளைவே இடையில் தொடங்கிய  சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கமாகும்.  அந்நாட்களில் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த அரச ஆதரவுடன் சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கம் தமிழகத்தில் நடைமுறைக்கு  ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம்.  

தைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ அல்லது சித்திரைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ தங்கள் வாதத்தை ஆணித்தரமாக நிறுவுவதற்கென இரு  பிரிவினருமே  'தைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்' என்பதற்கோ, அல்லது 'சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்'  என்பதற்கோ உறுதியான சான்றுகள் எதுவுமே அளித்தது இல்லை.   இந்த மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று “உறுதியாக அறுதியிட்டு நேரடியாகக் கூறாத”  கல்வெட்டுப் பதிவுகள்,  இலக்கிய வரிகள் போன்றவற்றை எல்லாம் இயன்றவரை மேற்கோள் கொடுத்து  வாதிடுவார்கள்.  

சித்திரை என்பதற்கு அறிவியல் மற்றும் வானியல் அடிப்படையில் சான்று கொடுக்க முற்படுகையில், தஞ்சை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரையில் தமிழர் புத்தாண்டு என்ற உரையை பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம் வழங்கினார். இவ்வுரையில் நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமாக அமைகிறது, தமிழர் புத்தாண்டின் தொடக்கம் அறிவியல் அடிப்படையில் வானியல் நிகழ்வை அடியொற்றி அமைகிறது என்று கூறுகிறார். அந்த உரையில் நிழலற்ற நாளில் ஆண்டின் தொடக்கம் என்று அவர் விளக்கும் பகுதியின்  சுருக்கம் அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு என்பது தமிழர்களுக்கு எப்பொழுது தொடங்குகிறது என்றால், வானியல் நிகழ்வுகளின்படி,  அறிவியல் அடிப்படையில் வலசை போகும் சூரியனின் வடபுல நகர்வில் சித்திரைத் திங்களில் மேஷ ராசியில் சூரியன் நுழையும் பொழுது,  அரைநாள் நண்பகல் பொழுதில் இரு குச்சிகளை வைத்து அவற்றின் நிழல் மூலம்  காலத்தை அளவிட்ட பண்டைய நாட்களில், சூரியன் மிகச் செங்குத்தாக வான் உச்சியில் வரும்பொழுது கோலின் நிழல் சாய் கோண நிலையில் விழாமல், கோலின் அடியிலேயே விழும் நாள்தான் ஆண்டின் தொடக்கம் எனக் கொள்ளப்பட்டது. எனவே சித்திரைத் திங்களின் நிழலற்ற நாளில்  இளவேனில் பருவத்துடன் தமிழர் புத்தாண்டு தொடங்குகிறது என விளக்குகிறார் (https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s).  

நிழலற்ற நாள் என்பது பண்டைய நாட்களில் பருவ கால அளவீட்டின் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.   அதற்கான வாய்ப்புண்டு. இருப்பினும் இது ஓர் அறிவார்ந்த கணிப்பு (educated guess). இது மிகப் பொருந்தக்கூடிய ஒன்று என்றாலும், சான்றுக் குறிப்புகள் அற்ற ஒரு யூகம் என்பதில் ஐயமில்லை.
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவெனில்;  நிழலற்ற நாள்  என்ற வானியல்  நிகழ்வு ஆண்டில் இருமுறை நிகழ்கிறது. புவிநடுக்கோட்டிற்கு (Equator) அருகில்; கடக ராசிக்கும் (tropic of cancer) மகர ராசிக்கும் (tropic of Capricorn) இடையே உள்ள வெப்ப மண்டலப் பகுதியில் (tropical region) உள்ள இடங்கள் ஆண்டிற்கு  இருமுறை   நிழலற்ற நாட்களை எதிர்கொள்ளும்.

1. சூரியனின் வடதிசைச் செலவில் சித்திரையில் ஒருமுறை நிழலற்ற நாளும், 2. சூரியனின் தென்திசைச் செலவில் ஆவணியில் ஒருமுறையும் நிழலற்ற நாள்  நிகழ்கிறது. மக்கள் சித்திரையில் வரும் நிழலற்ற நாளைப் பேசுவதைப் போல ஆவணியில் வரும் நிழலற்ற நாளுக்கு  முக்கியத்துவம் தருவதாகத் தெரியவில்லை. சித்திரைப்  புத்தாண்டு நிழலற்ற நாளில் என்ற கோட்பாடு ஆவணி நிழலற்ற நாளுக்கும் பொருந்துமன்றோ ?

நிழலற்ற நாள் (Zero Shadow Day) என்ற வானியல் நிகழ்வின் அறிவியல் பின்னணி:
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் புவி தன் அச்சில் தோராயமாக 23.5° சாய்வாகச் சுற்றுகிறது.  துருவங்கள் மாறி மாறி சூரியனை அணுகியும் விலகியும் சாய் கோணத்தில் சுற்றுவதால் புவியில் பருவநிலை மாறுதல்கள் ஏற்படுகிறது. வானில் சூரியனின் நகர்வு நாள்தோறும் மாறும். சூரியனுடைய நகர்வின் அடிப்படையில் (சூரியனைச் சுற்றிய பூமியின் சுழற்சியின் அடிப்படையில்) பருவங்கள் இயற்கையாக அமையும்.  புவியின் தென் துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து சுற்றுகையில் வடதுருவப் பகுதியில் நீண்ட இரவும், புவியின் வட துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து  சுற்றுகையில் தென் துருவப் பகுதியில் நீண்ட இரவும் ஏற்படும்.

புவியின் நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்கோடு (Latitude) - மகரரேகை 23.5° அளவில் உள்ள தென் மண்டலப் பகுதியும், நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்கோடு  - கடக ரேகை   23.5° அளவில் உள்ள வட மண்டலப்பகுதியும் உள்ள புவியின் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள இடங்கள் ஆண்டிற்கு இரண்டு நாட்களில் சூரியனை மிகச் சரியாக அதன் வான் உச்சியில் கொண்டிருக்கும், அந்நாட்களில் அப்பகுதியில் நிழலற்ற நாள் ஏற்பாடும்.  கடகரேகை மகரரேகைகளுக்கு அப்பால் உள்ள வட துருவ தென் துருவப் பகுதிகளில் சூரியன் வான் உச்சியை அடையாது என்பதால் அப்பகுதிகளில்  நிழலற்ற நாட்கள் ஏற்பட வாய்ப்பில்லை.    


டிசம்பர் 22 குளிர்கால கதிர்த்திருப்ப நாள் (solstice), ஜூன் 21 கோடைக்கால கதிர்த்திருப்ப நாள். இவ்வாறு சூரியன் வட தென் திசைகளை நோக்கி மாறி மாறி நகர்வது சூரியனின் தென்திசைச் செலவு என்றும் சூரியனின் வடதிசைச் செலவு என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியனின் தென்திசைச் செலவு/தட்சிணாயனம் (ஜூன் 21 — டிசம்பர் 22);
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும்  காலத்தினைத் தென்திசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம்  ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். தென்திசைச் செலவு ஆடித் திங்களில் தொடங்கி மார்கழியில் முடிகிறது.

சூரியனின் வடதிசைச் செலவு/உத்தராயணம் (டிசம்பர் 22 — ஜூன் 21);
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத்தினை வடதிசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். வடதிசைச் செலவு தைத்திங்களில் தொடங்கி ஆனியில் முடிகிறது. சூரியனின் வடதிசைச் செலவு தொடக்க நாளில் தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
 

நிழலற்ற நாள் என்பது நிழல் காண இயலா நாள் ஆகும்.  அது சூரியன் நாம் இருக்கும்  பகுதிக்கு மேல் நேர் செங்குத்தாக  வான் உச்சியில் உள்ள நாள். அன்று நண்பகலில் நம் நிழல் நாம் பார்க்க இயலாதவாறு நம் காலடியிலேயே விழுவதால் நிழலற்ற நாள் என்ற பெயர் பெற்றது. சூரிய நகர்வினால் பிற நாட்களின் நண்பகலில் நம் நிழல்  சாய்கோணத்தில் விழுவதால் நண்பகலில் நம்மால் நம் நிழலைக் காண இயலும்.  நிழலற்ற நாள் என்ற வானியல் நிகழ்வு புவியின் வெப்பமண்டலப் பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிகழ்வதன் காரணம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கிலும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் வலசை போவதால்தான்.  புவியின் நிலநடுக்கோட்டில் இருந்து துருவங்களுக்கு உள்ள சூரியனின் சாய்வுக் கோணம் அளவிடப்படும்.  இந்தச் சாய்வுக் கோணத்தின் பாகை அளவும்,  நாம் இருக்கும்  பகுதியின் கிடைக்கோடு இருக்கும் பாகை அளவும் சமமாக இருக்கும் நாளில் சூரியன் நம் தலைக்கு மேல் வான் உச்சியில் இருக்கும்.

இந்த ஆண்டின் முதல் நிழலற்றநாளாக, ஏப்ரல் 25, 2023ஆம் நாள்  அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.  ஏப்ரல் 25ம் நாளில் ஆண்டின் முதல் நிழலற்ற நாளை எதிர்கொண்ட இதே பகுதிகளில்  அடுத்த நிழலற்ற நாள்  ஆகஸ்ட் 17 ஆம் நாள் ஏற்படும்.  இந்த ஏப்ரல் 25 மற்றும்  ஆகஸ்ட் 17, 2023 நிழலற்ற நாட்கள்  சென்னை, பெங்களூரு, மங்களூரு பகுதிகளை ஒட்டி அவற்றுக்கு அருகில் நிகழும் நிழலற்ற நாட்கள். இப்பகுதிகள் சற்றொப்ப ஒரே கிடைக்கோட்டில் அமைந்துள்ள இடங்கள்.  சூரியனின் தொடர்ச்சியான நகர்வினால்  நிழலற்ற நாட்கள் என்பது இந்தியாவின் வெவ்வேறு பகுதிக்கும் மாறுபடும் என்பதைக் கொடுக்கப்பட்டுள்ள  படங்கள் தெளிவாக விளக்கும்.  எடுத்துக் காட்டாக; மதுரையில் - ஏப்ரல் 15, ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களிலும்; கோயம்புத்தூரில் - ஏப்ரல் 18, ஆகஸ்ட் 24 ஆகிய நாட்களிலும் நிழலற்ற நாட்கள் ஏற்படும்.  
 



இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பில்  நிழலற்ற நாட்கள் சூரியன் அப்பகுதிகளின் உச்சிக்கு வரும் நாளுக்கேற்ற வகையில் மாறுபடும். இவ்வாறு நிழலற்ற நாட்கள் தமிழகப் பகுதியில் நிகழும் நாட்கள்  ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 வரை ; ஆகஸ்ட் 16 முதல் செப்டெம்பர் 1 வரை.  
தமிழ்நாடு, கேரளா பகுதிகளின் நிழலற்ற நாள்கள்:
10 ஏப்ரல் & 1 செப்டம்பர்— கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம்
11 ஏப்ரல் & 31 ஆகஸ்ட்— கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர்
12 ஏப்ரல் & 30 ஆகஸ்ட்— கொல்லம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி
13 ஏப்ரல் & 29 ஆகஸ்ட்— கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்
14 ஏப்ரல் & 28 ஆகஸ்ட்— ஆலப்புழா, சிவகாசி, விருதுநகர், பரமக்குடி
15 ஏப்ரல் & 27 ஆகஸ்ட்— கொச்சி, மதுரை, சிவகங்கை, காரைக்குடி
16 ஏப்ரல் & 26 ஆகஸ்ட்— கொடைக்கானல், திண்டுக்கல், வேதாரண்யம்
17 ஏப்ரல் & 25 ஆகஸ்ட்— திருச்சூர், பாலக்காடு, திருச்சி, நாகப்பட்டினம்
18 ஏப்ரல் & 24 ஆகஸ்ட்— கோயம்புத்தூர், கரூர், காரைக்கால், பூம்புகார்
19 ஏப்ரல் & 23 ஆகஸ்ட்— கோழிக்கோடு, ஊட்டி, ஈரோடு, சீர்காழி, சிதம்பரம்
20 ஏப்ரல் & 22 ஆகஸ்ட்— வயநாடு, முதுமலை, சேலம், நெய்வேலி, கடலூர்
21 ஏப்ரல் & 21 ஆகஸ்ட்— தர்மபுரி, விழுப்புரம், பாண்டிச்சேரி
22 ஏப்ரல் & 20 ஆகஸ்ட்— மைசூர், திருவண்ணாமலை, திண்டிவனம்
23 ஏப்ரல் & 19 ஆகஸ்ட்— ஓசூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு
24 ஏப்ரல் & 18 ஆகஸ்ட்— மங்களூர், பெங்களூரு, வேலூர், ஆற்காடு, திருவள்ளூர்
25 ஏப்ரல் & 17 ஆகஸ்ட்— உடுப்பி, சித்தூர், திருத்தணி, மீஞ்சூர், புலிகாட்
26 ஏப்ரல் & 16 ஆகஸ்ட்— திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீஹரிகோட்டா

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் சித்திரை ஆண்டு தொடக்கம் நிழலற்ற நாளில் ஏற்படுகிறது  என்ற கூற்று ஆவணியில் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கும் மாறுபாடின்றி அப்படியே பொருந்தும்.

பழந்தமிழர்கள் ஆவணியில்தான் ஆண்டைத் தொடங்கினார்கள்.  இன்றும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக அன்றைய  சேரநாடாக இருந்த இன்றைய கேரளாவில் ஆவணியின் முதல்நாள்தான் புத்தாண்டு  தொடங்குகிறது.

இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய,  4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள் அடிப்படையில்  ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கான சான்றுகள் ‘ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்ற கட்டுரையில் கீழ் வருமாறு காட்டப்பட்டுள்ளது.
(1) வழக்காறு:  தமிழரிடம் இருந்து பிரிந்த சென்ற பழந்தமிழ் மலையாள உறவுகள் தங்களுக்கென பொ.ஆ. 825ஆம் ஆண்டு முதல் புதியதாகக்  கட்டமைத்துக்கொண்ட 'கொல்லம் ஆண்டு' என்ற வளர்ச்சி முறைக் காலக் கணக்கிடல் முறையில் ஆண்டின் தொடக்கம் ஆவணியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் வழக்கம் ஒரு சான்று. இவ்வழக்கம் பழந்தமிழர் பண்பாட்டின் எச்சம் எனலாம்.  கேரளத்தில் ஆகஸ்ட் 17ஆம் நாள், ஆவணித் திங்கள் முதல் நாளில்தான்  புத்தாண்டு தொடங்குகிறது. இது வழக்கில் உள்ள சான்று.

(2) இலக்கணம்: தொன்மையான தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் நூற்பா (அகத்திணையியல்: 6  — 10)    அகத்திணை இயலில் ஐவகை  நிலங்களுக்குரிய பொழுதுகளை வகுத்துரைக்கும் பொழுது; “காரும் மாலையும் முல்லை;  குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”  என்று கார் காலத்தினைத் தொடக்கமாகக் கொண்டு  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்   என்னும் பெரும் பொழுதுகளைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.  இத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் இதன் பொருளைத் தெளிவாக விளக்கி "காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டுமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று விளக்கம் தருகிறார். அதாவது ஆவணி முதலாக ஆடி இறுதியாக உள்ள காலம் ஓர்  ஆண்டாகும் என்று தெளிவு படுத்துகிறார். இது எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்று.

(3) இலக்கியம்:  தொல்காப்பிய நூற்பா சொல்வது போலவே சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125),      'கார்' அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் (96) என்று தொடங்கும் பாடல் பகுதியில் இளங்கோவடிகள் கார் முதலிய ஆறு வகைப் பருவங்களையும் அதே முறையில் வரிசைப்படுத்தி எழுதியுள்ளார்.  மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின்  நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும்  நினைவு கூர்வதாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்கிறார்.

(4) நிகண்டுகள் (அகராதி நூல்கள்): ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு மற்றொரு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்றை முதல் நிகண்டான, 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சேந்தன் திவாகரம் என்னும் ‘திவாகர நிகண்டு’ கொடுக்கிறது.
          “அறு வகைப் பருவமாவன
          காரே, கூதிர், முன் பனி, பின் பனி,
           (சீர்) இள வேனில், முது வேனில் (என்று ஆங்கு)
          இரு மூன்று வகைப் பருவம்; (அவை தாம்
          ‘ஆவணி முதலா’ இரண்டு இரண்டாக
          மேவின திங்கள் எண்ணினர் கொளலே).”
                    —  (6 பெயர்கள்)  [சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]
இருதிங்கள் சேர்ந்த காலப்பகுதி பருவம் எனப்படும். ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி,  இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களைக் கொண்டது ஓர் ஆண்டு என்பதாகவும், கார் பருவத்தை முதன்மையாக வைத்து அது தொடங்கும்  ஆவணி முதலாக வைத்துப்  பிற மாதங்களை எண்ணியுள்ளனர் என்பதை இப்பாடல் கூறுகிறது.  எனவே இந்த நூல் 10 ஆம் நூற்றாண்டிற்கும்  முற்பட்ட தமிழக இலக்கிய வழக்காறுகளைப் பதிவு செய்யும் ஆவணமாக இது திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது.  இதுவும் ஆண்டின்‌ தொடக்கத்தைக்‌ கார்ப்பருவத்தினை முதலாகக் கொண்டு,  ஆவணி மாதத்திலிருந்து தொடங்கினர்‌ பழந்தமிழர் என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொட்டியே அமைந்துள்ளதைக் காணலாம். ஒவ்வொரு பருவத்திற்கும்‌ இரண்டிரண்டு திங்களாகக் காலத்தைப் பகுத்த முறையை “ஆவணி முதலா இரண்டிரண்‌டாக மேவின திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே" என்றுதான் திவாகரப்‌ பாடல்‌ குறிப்பிடுகிறது.

திவாகரா நிகண்டைத் தொடர்ந்து,  அதையொட்டி விரித்து எழுதப்பட்ட பிங்கலநிகண்டும் “ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவிய திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே. (வான்வகை  சூத்திரம் 210) “  என்ற ஆண்டுப் பிறப்பு ஆவணி முதலாகத் தொடங்குகிறது  என்றே  கூறுவதுடன்  சித்திரையில், வசந்தத்தில் ஆண்டு தொடங்குவது ஆரிய சமஸ்கிருத வழக்கம் என்றும் கூறுகிறது.  இந்த வரிசையில் காலத்தால் பிற்பட்ட, 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு ஆண்டின் தொடக்கம் என்பதை,  "ஆவணியே ஆதி"  மற்று இரண்டு இரண்டு மாதம்‌  பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து  பார்த்திடின்‌ வாய்த்த பேராம்.  (சூத்திரம் 6 பெயர்கள்‌-95)  என்று அறுதியிட்டுக் கூறுகிறது. எனவே 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கம் ஆவணியில் தொடங்குகிறது என்பதற்கு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட  சான்றுகள் நிகண்டுகளிலும் இருக்கின்றன.

(5) கோயில் கல்வெட்டுகள்: திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளை  அவை வெட்டப்பட்ட  காலமான  9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம்  நூற்றாண்டுவரை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி ஆராய்ந்ததில்;  பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் கல்வெட்டுகளில்  முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.

ஆகவே மேற்குறிப்பிட்ட,
(1) பழந்தமிழர் காலக் கணக்கீட்டின் தொடர்ச்சியாகப் பண்டைய தமிழ் உறவுகளான கேரள நாட்டில் வழக்கில் இருக்கும் கொல்லம் ஆண்டு கணக்கிடல் முறை,
(2) தொல்காப்பியரின் பொருளதிகாரம் (அகத்திணையியல்: 6  — 10),
(3) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 —  125),
(4) திவாகர, பிங்கல, சூடாமணி நிகண்டுகள் தரும் செய்திகளின் ஒப்பீடு,
(5) திருவல்லிக்கேணி கோயிலின் கல்வெட்டுத் தொடர் வரிசை அறியத் தரும் செய்திகள் மூலம்  ஆவணியே தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இப்பொழுது  இந்த வரிசையில் . . .
முன்னர் கொடுக்கப்பட்ட  நிழலற்ற நாள் ஆண்டின் தொடக்கம் என்ற வானியல் மற்றும் அறிவியல் அடிப்படை விளக்கமும் பொருந்துவதைக் காணலாம்.

பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆட்சிகளும் சமயக் காட்சிகளும் மாறியதும், அவற்றின் எதிரொலியாகத் தமிழரின் காலக்கணக்கிடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதும் சான்றுகள் மூலம்  தெளிவாகிறது.  

தமிழ் நாட்டை ஆண்ட அந்நியர்களான நாயக்கர்கள் ஆட்சிக் கால கட்டத்தில் ஆரூடம் பார்க்க வழக்கிலிருந்த ஆரிய வைதீகப் பண்பாட்டின் சித்திரைத் திங்களைத் தொடக்கமாகக் கொண்ட காலக் கணக்கிடும் முறை தமிழகத்தின் கோயில் வளாக எல்லையைக்  கடந்து பொதுமக்களின் வாழ்வுமுறையில் நுழைந்துள்ளது. இம்மாற்றம் சோதிட நாட்காட்டியின் அடிப்படையில் அக்கால அரச ஆதரவுடன் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் என்பதும் தெளிவாகிறது.  தமிழகத்தில் அதுவரை வழக்கத்திலிருந்த ஆவணிப் புத்தாண்டு முறை நீக்கப்பட்டு வைதீக சித்திரைப் புத்தாண்டு வழக்க முறைக்கு புத்தாண்டு மாற்றப்பட்டது என்றுதான் தரவுகள் மூலம் முடிவெடுக்க இயலும்.  ஆகவே தரவுகளின் அடிப்படையில் பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர். ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதியாகக் கூறலாம்.  

கட்டுரைக்கு உதவியவை:
நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2023/04/ZSD_Tamil.pdf

தமிழ்நாடு-கேரளா நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2017/04/zsd_kerala_tn.jpg

நிழல் இல்லா நாள் - ஆண்ட்ராய்ட் கைபேசி செயலி
https://play.google.com/store/apps/details?id=com.alokm.zsd

The Public Outreach & Education Committee of the Astronomical Society of India (ASI - POEC)
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/

India Sunrise and Sunset Times
https://www.sunrisesunsettime.org/asia/india/

சித்திரை தமிழர் புத்தாண்டு -பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம்
https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், தேமொழி, இலக்கிய மீளாய்வு, பக்கம் 97- 112, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம், 2023.

நன்றி: 
படங்கள் உதவி — விக்கிப்பீடியா மற்றும் இந்திய வானியல் கழகத்தின் கல்வி, பொதுமக்கள் தொடர்பு குழு
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/



காணொளி:
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்
— முனைவர் தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –
திசைக்கூடல் – 339 [ஆகஸ்ட் 13, 2023]
https://youtu.be/F7Qm6Uu
------

நன்றி:  தமிழணங்கு
ஆகஸ்ட்,  2023



#தமிழணங்கு, #இலக்கியம், #தமிழ்ப்புத்தாண்டு, #Themozhi