Sunday, January 27, 2013

வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்

வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்


ஜோசப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987), என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist), உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர்.  அதன் பயனாக உலகில் உள்ள புராணக் கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் "ஒற்றைப் புராணம்" (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு.  இவர் 1949 ஆம் ஆண்டு இக்கருத்தை மையமாகக் கொண்டு "ஆயிரம் முகங்களுடைய நாயகன்" (The Hero with a Thousand Faces) என்ற நூலை எழுதினார்.  அவர் அப்புத்தகத்தில் கதைகளில்  வரும் "கதாநாயகனின் பயணம்" (Hero's Journey) எவ்வாறு ஒற்றைப் புராண விதிகளைக் கொண்டிருக்கிறது என்பதனை பயணத்தின் பல கட்டங்களையும் பட்டியலிட்டு விவரித்தார்.

"A hero ventures forth from the world of common day into a region of supernatural wonder: fabulous forces are there encountered and a decisive victory is won: the hero comes back from this mysterious adventure with the power to bestow boons on his fellow man."
- Joseph Campbell

ஒற்றைப் புராணத்தின் வாழ்க்கைப் பயண நிலைகள்:
நாயகன் தீரங்களை நிகழ்த்தும் பயணப் பாதையின் பொதுவான அடிப்படை சூத்திரம்:
பிரிவு-துவக்கம்-திரும்பி வருதல் என்ற கருவினைக் கொண்டதாகும்.
(இங்குக் குறிப்பிடப்படும் நாயகனின் வாழ்க்கைப் பயண நிலைகள், கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தின் "இலக்கியத்தின் ஊடாக வரலாற்றை அறியும் திட்டம்" (History Through Literature Project, University of California, Berkeley,  >>http://orias.berkeley.edu/hero/about.html) வழங்கும் நிலைகளை ஆதாரமாகக் கொண்டு கொடுக்கப் பட்டுள்ளது.

ஒற்றைப் புராணம் குறிப்பிடும் கதாநாயகனின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு நிலைகள்:
(1) பிறப்பு:
நாயகன் கருவில் தோன்றியது, பிறப்பு, வளர்ப்பு ஆகியவை அதிசயங்கள் நிறைந்த வகையில் இருக்கும். அவை அவனது உயர்ந்த தனித்தன்மையைக் குறிக்கும் ஒற்றைப் புராணத்திற்கு அடிப்படையாக அமையும்.

(2) சாதனை புரிய அழைப்பு:
நாயகன் சாகசப் பயணத்திற்கான சூழ்நிலை உருவாவதாலோ அல்லது தூதுவர் போன்றவராலோ அழைக்கப் படுவான். அந்த அழைப்பை நாயகன் விருப்பத்துடனோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ ஏற்றுக் கொள்வான் .

(3) உதவியாளர்கள்:
பயணத்தின் துவக்கத்தில் நாயகனின் நலம்விரும்பி தேவையான உதவிகளைப் புரிவார். இந்த உதவியைச் செய்யும் வழிகாட்டிகளாய் வருபவர்கள் பெரும்பாலும்  மந்திரவாதி, வயது முதிர்ந்த பெரியோர், வினோதமான குள்ளர்கள் மற்றும் தேவதைகள் ஆவார்கள். அத்துடன் தாயத்து, பாதுகாப்புக் கவசங்கள் போன்றவற்றையும் கொடுத்து உதவுவார்கள்.

(4) நிர்ணயித்த வரம்பை மீறுதல்:
நாயகனின் பயணம் ஓர் உச்சக்கட்ட நிலையை அடையும்பொழுது, அவன் ஒரு துன்பத்தில் உழன்று சராசரி வாழ்க்கையைவிட  வேறுபட்ட தீரச் செயல்களைப்  புரியும் நிலைக்குச் செல்ல வேண்டும். இந்த அனுபவம் வலியற்றதாக ஓர் இருண்ட குகைக்குள் நுழைந்து வருவதாகவும் இருக்கலாம், அல்லது திமிங்கிலத்தால் விழுங்கப்படும் கொடுமையைப் போன்றதாகவும் இருக்கலாம். இக்கட்டத்தின் தனிச் சிறப்பு, நாயகனின் அனுபவத்தைத் தினசரி நடவடிக்கைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாகும்.

(5) சோதனைகள்:
கனவு போன்ற சாகசம் நிறைந்த பயணத்தைத் தொடரும் கதைத் தலைவன் அப்பயணத்தில் பல சோதனைகளை அடுத்தடுத்து சந்திக்க நேரிடும். இந்தச் சோதனைகள் கொடூர அரக்கர்களை, மந்திரவாதிகளை, எதிரியின் படைகளை, அல்லது இயற்கையின் தாண்டவங்கள் போன்றவற்றை எதிர்கொள்வதாக இருக்கும். ஒவ்வொரு போராட்டத்திலிருந்தும் வெற்றிகரமாக மீண்டு வருவது கதாநாயகனின் திறமையை, போராட்டத்தின் இலக்கை அடைய அவனுக்கு உள்ளத் திறமையை நிரூபிக்கும்.

(6) உதவியாளர்கள்:
பெரும்பாலும் நாயகனின் பயணத்தில் அவனது உற்ற தோழமைகள், நட்புகள் அவனுக்கு உதவி செய்து சோதனைகளிலிருந்து அவன் மீண்டு வர உதவுவார்கள். சில கதைகளில் இவ்வாறு உதவி செய்பவர்கள் தெய்வீகத் தன்மை போன்ற சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

(7) உச்சக்கட்டம்/இறுதிப் போர்:
இறுதியான முக்கியத் தருணத்தில் நாயகன் எதிரியுடன் போரிட வேண்டியிருக்கும். இந்த எதிரி அரக்கன், மந்திரவாதி, எதிரிப்படை வீரர்கள் போன்றவர்கள். இவர்களுடன் போர் புரிந்து நாயகன் பயணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவான்.

(8) தப்பியோடுதல்:
கடமையை நிறைவேற்றிய பின்பு தனது சராசரி வாழ்விற்குத் திரும்புவதற்குக் கதாநாயகன் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் கட்டம் இது. நாயகன் எதிரியை ஆத்திரப்படுத்தியிருந்தால், எதிரியின் பொருளைக் கவர்ந்து வர நேர்ந்திருந்தால், அல்லது கொடிய அரக்கனை அழித்திருந்தால், இவ்வாறு திரும்புவது அவசரமாகத் தப்பியோடும் செயலாக இருக்கும். அவ்வாறில்லாமல் கதாநாயகன் தேடியது அவனுக்கு முழுமனதுடன் வழங்கப் பட்டிருந்தால்  இந்த ஓட்டம் ஆபத்தற்றதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

(9) திரும்புதல்:
இக்கட்டத்தில், நாயகன் மீண்டும் பயணத்தின் சோதனை எல்லையைக் கடந்து நிகழ்கால உலகிற்கு வந்து தினசரி வாழ்க்கையை வாழ வேண்டும். இது விழித்தெழுதல், மறுபிறவி எடுத்தல், உயிர்த்தெழுதல் போன்றவையாகவோ, அல்லது குகை, காடு போன்றவற்றை விட்டு வெளிவருவதாகவோ இருக்கும்.  சில நேரங்களில் கனவு போன்ற பயண உலகில் பயணிக்கும் நாயகன் நிஜ உலகின் சக்தி ஒன்றினால் பழைய வாழ்க்கைக்கு இழுத்து வரப்படுவான்.

(10) சஞ்சீவி/நிவாரணி:
நாயகன் பயணத்தின் போது பெற்ற பொருள், அறிவு, அனுபவம், வரம் போன்றவை தினசரி வாழ்வில் உபயோகப் படுத்தப் படும். பெரும்பாலும் இவை வாழ்க்கையின் குறைகளை நீக்கப் பயன் பட்டாலும், சில நேரங்களில் சமுதாயத்தில் கதாநாயகனின் பங்களிப்பு என்ன என்பதையும் வரையறுக்கும்.

(11) வீடு:
கதாநாயகன் தான் துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்தல். பயணத்தில் பெற்ற வரத்தை, வெற்றியை, அனுபவத்தைக் கொண்டு தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுவது பயணத்தின் இறுதிக் கட்டம்.

ஒரு சில கதைகளோ, புராணங்களோதான் குறிப்பிடப்பட்ட அனைத்துப் பயண நிலைகளையும் கொண்டிருக்கும். ஒரு சிலவற்றில் பல நிலைகள் அமையப் பெற்றிருக்கலாம், சில கதைகள் சில நிலைகளைக் கொண்டிருக்கும், மேலும் சில  ஓரிரு நிலைகளை மட்டும் விரிவாகக்  கொண்டிருக்கும்.  அத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பயண நிலைகளின்  வரிசையும் பல கதைகளில் வெவ்வேறு வகையில் மாறு பட்டிருக்கும். சிலநேரங்களில் இந்தச் சுழற்சி ஒருமுறைக்கும் மேலும் இடம் பெறக்கூடும்.

இலக்கிய அல்லது புராணக் கதாநாயகர்களின் "வாழ்க்கை சுழற்சி" அல்லது ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு "வாழ்நாள் சுழற்சி"யும் கதாநாயகனின் பயணம் என்று ஜோசப் கேம்பெல் குறிப்பிட்டதன் அடிப்படை நியதியிலேயே அமைந்திருக்கிறது என்பதனைக் கூர்ந்து கவனித்தால் புலப்படும்.  புராணங்களில், புத்தர், ஏசு, மோசெஸ் போன்றோரின் வாழ்க்கைப் பயணமும் இராமாயணமும் வாழ்க்கை சுழற்சி பயண நிலைகளைக் கொண்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொடுக்கப் படுகிறது. தற்காலக் கதைகளில்  'ஹாரி பாட்டர்' (Harry Potter), 'ஸ்டார் வார்ஸ்' (Star Wars), 'மேட்ரிக்ஸ்' (Matrix) கதைகள் மற்றும் திரைப்படங்களின் கதைகளில் இந்த வாழ்க்கை சுழற்சி தத்துவம் அடிப்படையாக இருப்பது தெரிகிறது. ஸ்டார் வார்ஸின் இயக்குநர் ஜோசப் கேம்பெல் குறிப்பிட்ட வாழ்க்கை சுழற்சி நியதியையும், மற்ற பல உலக புராணக் கதைகளின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு ஸ்டார் வார்ஸ் கதையை அமைத்ததாகக் கூறியுள்ளார்.

கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி (1899-1954) அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" கதையுடன், ஜோசப் கேம்பெல் குறிப்பிடும் ஒற்றைப் புராணக் கோட்பாட்டையும், கதாநாயகனின் பயணத்தின் நியதிகளையும் ஒப்பிட்டால் அது பொன்னியின் செல்வன் கதை ஓட்டத்துடனும் பொருந்துகிறது. பொன்னியின் செல்வன் கதையினைப் படித்திருக்காத தமிழர்கள் இருப்பது அரிது.  எனினும் படித்திராத ஒரு சிலருக்காகக் கதையின் சுருக்கம் கீழே கொடுக்கப் படுகிறது.  ஐந்து பெரும் பகுதிகளாக வந்த வரலாற்றுக் கதையை முடிந்தவரை மிகச் சுருக்கமாகக் கொடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.  பொன்னியின் செல்வன் கதை சோழப் பேரரசின், தமிழகத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மன்னர் ராஜராஜ சோழனைப் பற்றியது.  இக்கதை அவருக்கு முடிசூட்டிய பின்னணியைக் குறிப்பது என்றாலும் கதைத் தலைவன் அவர் அல்ல. அரசரின் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன்தான் கதையின் நாயகன். வந்தியத்தேவனின் பயணத்தைப் பற்றிய கதையே பொன்னியின் செல்வன்.  இனி கதையின் சுருக்கம். கதை தெரிந்தவர்கள் இப்பகுதியைத் தாண்டிச் சென்று அடுத்த ஒப்பீடு பகுதியிலிருந்து மேலே தொடரலாம்.

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்:
முதலாம் பராந்தக சோழ மன்னரின் மூத்த மகன் ராஜாதித்தன் போரில் இறந்துவிட, அவரது இரண்டாம் மகன் கண்டராதித்தன் மன்னராகிறார்.  அவர் இறக்கும் பொழுது அவரது மகன் மதுராந்தகன் சிறுவனாக இருந்ததாலும், மேலும் அவர் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தனது சகோதரன் அரிஞ்சய சோழருக்கும், அவருக்குப் பின் அரிஞ்சயரின் மகன் இரண்டாம் பராந்தகனுக்கும் (சுந்தர சோழன்) அரசுரிமை செல்லுமாறு ஏற்பாடு செய்கிறார்.  சுந்தர சோழரின் மூத்த மகன் அரசுரிமைப் பெற்று நாட்டின் வடதிசைக் காவல் பொறுப்பேற்று காஞ்சியில் இருக்கிறான். இவன் மிகச் சிறந்த வீரன், சிறுவயதிலேயே சோழ எதிரியான பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் வென்று அவனது தலையை வெட்டி கொணர்ந்ததால் புகழப் பட்டவன். சுந்தர சோழரின் மகள் குந்தவை பழையாறையிலும், அவரது கடைசி மகன் அருண்மொழி வர்மன்(பிற்கால ராஜராஜ சோழன்) இலங்கைப் போரின் பொறுப்பேற்று இலங்கையிலும் இருக்கிறார்கள்.  இந்நிலையில் சுந்தர சோழர் நோயுற்று தஞ்சை அரண்மனையில் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரின் பாதுகாப்பில் இருக்கிறார், மன்னரின் பாதுகாப்பு என்ற போர்வையில் மற்றவர் யாரும் அவரை அணுக முடியாத நிலை ஏற்படுத்தப் படுகிறது. இதனை விரும்பாத ஆதித்த கரிகாலன் தனது தந்தையைக் காஞ்சிக்கு வருமாறு தனது உற்ற தோழன், சிற்றரசர் குல வழி வந்த வல்லவரையன் வந்தியத்தேவனின் வழியாக மன்னருக்கு ஓலை கொடுத்தனுப்புகிறான்.  பழையாறையில் தங்கைக்கும் வந்தியத்தேவன் வழியாகச்  செய்தி அனுப்புகிறான். இந்தப் பயணம் ஒரு ரகசியப் பயணம். பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்த இடத்தில்தான்.

தஞ்சைக்குத் தனது ரகசியப் பயணத்தைத் துவக்கும் வந்தியத்தேவன் வழியில் தனது நண்பன் கந்தமாறனின் கடம்பூர் அரண்மனையில் தங்குகிறான்.  கந்தமாறனின் தங்கை மணிமேகலை வந்தியத்தேவன் மேல் ஒருதலைக் காதல் கொள்கிறாள். இரவில் கடம்பூர் அரண்மனையில் விருந்தினராக வந்து கூடிய சோழ சிற்றரசர்கள், பெரிய பழுவேட்டரையன் தலைமையில், கண்டராதித்தர் மகன் மதுராந்தகனுக்குத்தான் அரசுரிமை சொந்தம் எனக் கூறி அவனை அரியணை ஏற்ற மதுராந்தகனுடன் சேர்ந்து செய்யும் சதியை எதேச்சையாக வந்தியத்தேவன் காண நேர்கிறது. வந்தியத்தேவன் பயணத்தின் இடையில் சந்திக்கும் ஆழ்வார்க்கடியான் பெரிய பழுவேட்டரையரின் இளையராணியான தனது சகோதரி நந்தினியைப் பற்றி வந்தியத்தேவனுக்குக் கூறுகிறான். அவளைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத தனது  வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறான்.  தஞ்சை கோட்டைக்குச் செல்லும் வழியில் எதிர்பாரா வகையில் பல்லக்கில்  நந்தினியை சந்திக்கும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றிக் கூற, அவள் தனது முத்திரை மோதிரத்தை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மறுநாள் தனது அரண்மனையில் வந்து சந்திக்கச் சொல்லிச் செல்கிறாள்.

அந்த முத்திரை மோதிரத்தைத் தஞ்சைக் கோட்டைக்குள் நுழைய வந்தியத்தேவன் பயன்படுத்திக் கொள்கிறான். பலத்த பாதுகாப்பினால்  சிற்றரசர்கள் சதியைத் தஞ்சையில் உள்ள மன்னரிடம் வந்தியத்தேவனால் தெரிவிக்க வழியில்லாது போகிறது. ஓலையைச்  சேர்ப்பித்துவிட்டு, நந்தினியைச் சந்தித்து அவள் மாளிகையில் உள்ள இருண்ட கருவூலத்தின் சுரங்க வழியாக வெளியேறி, பழுவேட்டரையரால் கொலைக்குற்றம் சுமத்தப் பட்டு, தஞ்சை வீரர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறான். திரும்பும் வழியில், ஆதித்த கரிகாலன் ஆணைப்படி இளவரசி குந்தவையை பழையாறையில் சந்திக்கும் பொழுது அவளிடம் சிற்றரசர்களின் சதியைக் கூறி எச்சரிக்கிறான். சதியை முறியடிக்க எண்ணிய குந்தவை உடனே இலங்கை சென்று அருண்மொழிவர்மனைக் கையோடு அழைத்து வரச் சொல்லி வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்தனுப்புகிறாள். கோடிக்கரை வழியாகப் படகில் இலங்கை செல்லப் படகோட்டி பூங்குழலி வந்தியத்தேவனுக்கு உதவுகிறாள்.

பழுவேட்டரையரின் முத்திரை மோதிரத்தை வைத்திருந்த வந்தியத்தேவனை இலங்கையில் கோட்டை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.  சோழ ஒற்றனான ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்து அருண்மொழிவர்மன்  இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அருண்மொழி வர்மனின் நட்பைப் பெற்று இளவரசரை அழைத்து வரும் பொழுது, கப்பலைப் புயல் தாக்கி அது கடலில் மூழ்குகிறது.  தத்தளிக்கும் இளவரசனையும், வந்தியத்தேவனையும்  பூங்குழலி படகில் ஏற்றிச் சென்று கரை சேர்க்கிறாள். நோயுற்ற அருண்மொழிவர்மனின் பாதுகாப்பினைக் கருதி நாகை சூடாமணி விகாரத்தில் சேர்ப்பிக்க பூங்குழலி மூலம் ஏற்பாடு செய்த பின்பு, வந்தியத்தேவன் பழையாறைக்கு விரைகிறான்.

இதற்கிடையில்  நந்தினி சோழ குலத்தை வேரறுக்கத் திட்டமிடுகிறாள். இவள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் மகள், ஆனால் இந்த உண்மை வெளியுலகம் அறியாதது.  சோழ அமைச்சர் அநிருத்த பிரமராயரின் சீடன் மற்றும் ஒற்றனான ஆழ்வார்க்கடியானின் தங்கையாகத் தத்தெடுக்கப்பட்டு அவன் குடும்பத்தில் வளர்க்கப் பட்டவள் நந்தினி. தனது தந்தையைக் கொன்ற ஆதித்த கரிகாலனைப் பழிவாங்குவது அவள் திட்டம்.  எனவே கிழவரான சோழ நாட்டின் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரை மணந்து, தஞ்சையில் அரச குடும்பத்துடன் இருந்து கொண்டே, பாண்டிய நாட்டு சதிகாரர்களுடன் கூடி திட்டம் தீட்டுகிறாள்.  நந்தினி  சோழ அரச நிர்வாகத்தைப் பங்கிடும் காரணம் என்று கூறி ஆதித்த கரிகாலனை கடம்பூர் அரண்மனைக்கு வரவழைக்கிறாள். சதிக்கூட்டத்தினால் ஒரே நாளில் கடம்பூரில் ஆதித்த கரிகாலனையும், நாகையில் இருந்து தஞ்சை திரும்பும் அருண்மொழி வர்மனையும், தஞ்சையில் சுந்தர சோழரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டப் படுகிறது. மூவரும் இறந்து மதுராந்தகன் ஆட்சிக்கு வந்தபின்பு கலகமேற்படுத்தி வீரபாண்டியனின் வாரிசின் மூலம் சோழ நாட்டைக் கைப்பற்றுவது சதிகாரர்களின் திட்டம்.

பழையாறையில் வந்தியத்தேவன் குந்தவையை சந்திக்கும் பொழுது, அவள் ஆதித்த கரிகாலனின் கடம்பூர்ப் பயணத்தை நிறுத்தவோ, இயலாது போனால் அவனுக்கு பாதுகாப்பாக உடனிருக்கவோ வந்தியத்தேவனை வேண்டுகிறாள்.  கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் மெய்க்காவலனாக வந்தியத்தேவன் உடனிருந்தும், அவனையும் மீறி சதிகாரர்களால் ஆதித்த கரிகாலன் குத்திக் கொல்லப்பட்டு அப்பழி வந்தியத்தேவன் மீதே விழுகிறது.  ஆனால் அருண்மொழி வர்மனும், சுந்தரசோழரும் எதிர்பாராத விதத்தில் உயிர் தப்புகிறார்கள்.  கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பொழுது அங்கிருந்து வந்தியத்தேவன் தப்பி ஓடுகிறான்.  வழியில் கூர்வாளால் எதிர்பாராதவிதமாகத் தவறாகத் தாக்கப் பட்டு மீண்டும் பூங்குழலியாலும், ஆழ்வார்க்கடியானாலும் காப்பாற்றப் படுகிறான்.  பிறகு குற்றமற்றவன் என்ற உண்மை அறிந்து வந்தியத்தேவன் விடுதலை செய்யப் படுகிறான்.

ஆதித்த கரிகாலன் மரணத்தால் அருண்மொழிவர்மனுக்கு வாரிசுப் பட்டம் சூட்ட ஏற்பாடு நடக்கிறது.  அருண்மொழிவர்மனோ வாரிசு முறைப்படி மதுராந்தகனைச் சேர வேண்டும் என்று விட்டுக் கொடுத்து மதுராந்தகனை அரசனாக்குகிறான். வந்தியத்தேவன் குந்தவையின் காதலைப் பெறுகிறான். அவனை நினைத்து ஒருதலைக் காதலில் மதிகலங்கி இறக்கும் தறுவாயில் உள்ள மணிமேகலையைக் கடம்பூரில் சந்திக்கிறான்.  மணிமேகலை வந்தியத்தேவனின் மடியில் உயிர்விடுகிறாள் (பொன்னியின் செல்வன் கதை >> http://ta.wikisource.org/s/ep, பொன்னியின் செல்வன் கதையின் சுருக்கப் பட்ட பதிப்பு >> http://poniyinselvan.blogspot.com/ ஆகியவற்றைப் படிக்க விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று படிக்கலாம்).

பெரும்பாலோரால் இக்கதையில் விரும்பப்படும் பாத்திரங்கள் சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியானும், படகோட்டி பூங்குழலியும் ஆவார்கள்.  சோழப் பேரரசை சதிகாரர்களிடம் இருந்து காப்பாற்ற நடக்கும் முயற்சியில் வந்தியத்தேவன் காஞ்சியில் தொடங்கி,  பழையாறை, தஞ்சை, இலங்கை, கடம்பூர் எனச் சுற்றியலைந்தாலும், வந்தியத்தேவனுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் இவர்கள் இருவரும்தான் அவனுக்கு உதவி செய்து அவனது கடமையை நிறைவேற்ற வழி வகுப்பவர்கள்.

ஒற்றைப்புராணக் கோட்பாடு கதாநாயகன் வந்தியத்தேவனின் பயணத்துடன் ஒப்பீடு:
ஒற்றைப்புராணத்தின் கதாநாயகனின் பயணத்தின் நிலைகளாக ஜோசப் கேம்பெல் குறிப்பிடும் நிலைகளை பொன்னியின் செல்வன் கதையுடன் ஒப்பிட்டுக் கீழ்வரும் நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.  இதில் கவனம் கொள்ள வேண்டியது அனைத்து நிலைகளும் அமையத் தேவையில்லை, அத்துடன் அவை அதே வரிசையிலும் அமையத் தேவையில்லை என்ற விதி.  ஆனாலும் பொன்னியின் செல்வனின் கதையோட்டம் குறிப்பிடத் தக்க மாறுதல்களின்றி ஒற்றைப் புராணக் கதாநாயகனின் பயணநிலைகளைப் பின்பற்றுவதைக் கீழ்வரும் கதைப்பகுதியின் மேற்கோள்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.



சாதனை புரிய அழைப்பு:
ஆதித்ய கரிகாலனின் தூதுவனாக தஞ்சைப் பயணம் மேற்கொள்ளல்

உதவியாளர்கள்:
நந்தினியின் முத்திரை மோதிரத்தைப் பெற்று கோட்டைக்குள் செல்லல்

நிர்ணயித்த வரம்பை மீறுதல்:
இருண்ட கருவூல வழியாகப் பழுவேட்டரையரிடம் இருந்து தப்பி ஓடுதல்

சோதனைகள்:
இலங்கைப் பயணத்தின்பொழுது ஏற்படும் சோதனைகள், சிறை செய்யப் படுத்தல், புயலில் பாதிக்கப் படுத்தல்

உதவியாளர்கள்:
இலங்கைப் பயணத்திற்கு பூங்குழலியும், இளவரசனைச் சந்திக்க ஆழ்வார்க்கடியானும் உதவுதல்

உச்சக்கட்டம்:
புயலில் சிக்கிய மரக்கலம் மூழ்கி உயிருக்குப் போராடுதல்

தப்பியோடுதல்:
குந்தவையின் வேண்டுகோள் படி இளவரசனை அழைத்து வருதல்

திரும்புதல்:
பழையாறைக்குத் திரும்பி  குந்தவையை சந்தித்தல்

சஞ்சீவி/நிவாரணி:
குந்தவையின் காதலைப் பெறுதல்

வீடு:
கடம்பூருக்குத் திரும்பி மணிமேகலையின் மரணத் தறுவாயில் உடன் இருத்தல்

இங்குக் குறிப்பிடப்படுவது முழுக்கதைக்கும் உள்ள ஒப்பீடு. கதையை நன்கு அறிந்தவர்கள் இந்த ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறையானது  ஒருமுறைக்கும் மேலும் பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுணர முடியும்.  எடுத்துக்காட்டாக, ஆதித்த கரிகாலனின் தூதுவனாக முதல்முறையும்,   குந்தவையின் வேண்டுகோள்படி ஒருமுறை இலங்கைக்கும், பிறகு இலங்கையில் இருந்து வந்த பின்பு குந்தவையின் வேண்டுகோளை மீண்டும் ஏற்று கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் உயிர்காக்க வந்தியத்தேவன் பயணிக்கும் மற்றொருமுறையும் இதே வாழ்க்கை சுழற்சி அமைவதைத் தனித்தனியாகப் பிரித்தும் காணலாம். ஆதித்த கரிகாலனிடம் இருந்து முதலில் தஞ்சைப் பயண அழைப்பும் குந்தவையிடம் இருந்து இலங்கை செல்லவும், கடம்பூர் செல்லவும் இரு அழைப்புகள் அடுத்தடுத்து வந்தியத்தேவனுக்குக் கிடைக்கிறது.  இப்பயணங்களையும் தனித்தனியே ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறை கோட்பாட்டிற்கு உட்படுத்த முடியும்.



References:
http://www.jcf.org/new/index.php
http://en.wikipedia.org/wiki/Joseph_Campbell
http://en.wikipedia.org/wiki/The_Hero_with_a_Thousand_Faces
http://orias.berkeley.edu/hero/about.html
http://orias.berkeley.edu/hero/JourneyStages.pdf
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1b/Heroesjourney.svg
http://ed.ted.com/lessons/what-makes-a-hero-matthew-winkler
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20512092
http://www.tamilpaper.net/?p=359
http://en.wikipedia.org/wiki/Ponniyin_Selvan
http://ta.wikisource.org/s/ep
http://poniyinselvan.blogspot.com/



நன்றி: திண்ணை
ஜனவரி 27, 2013


#திண்ணை, #இலக்கியம், #Themozhi 


Friday, January 25, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3




கை வீசம்மா கை வீசு…

அன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கடைக்குப் போகலாம் கை வீசு…
மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
மெதுவாய் திங்கலாம் கை வீசு…

சொக்காய் வாங்கலாம் கை வீசு…
சொகுசாய் போடலாம் கை வீசு…
கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
கும்பிட்டு வரலாம் கை வீசு…

இன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கோட்டைக்குப் போகலாம் கை வீசு…
கொடியை ஏற்றலாம் கை வீசு…
நாட்டை ஆளலாம் கை வீசு…

படையில் சேரலாம் கை வீசு…
பகைவரை அழிக்கலாம் கை வீசு…
நாட்டைக் காக்கலாம் கை வீசு…
நல்லோர் வழி நடக்கலாம் கை வீசு…

– தேமொழி
(இன்றைய வரிகள் மட்டும்)

 

குடியரசு தின வாழ்த்துகள்…


நன்றி: வல்லமை - ஜனவரி 25, 2013 

#ஓவியம், #வல்லமை, #கவிதை, Themozhi 

 



 

Friday, January 18, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2



சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே…
         – கவிஞர் முத்துலிங்கம் 


நன்றி: வல்லமை - ஜனவரி 18, 2013 

#ஓவியம், #வல்லமை, Themozhi 

 


Monday, January 14, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1



மஞ்சுவிரட்டு

என் தூரிகையின் வண்ணச் சிதறல்களைப் பற்றிய என் எண்ணச் சிதறல்கள், ஒரு மங்கிய ஓவியம் போன்ற காலம் கடந்த தெளிவில்லாத நினைவுகள். நான் ஓவியம் வரையக் காரணமாக இருந்தவர்கள் என் மாதா, பிதா, குரு,  மாமா மற்றும் எனது கல்வி.

எனது மிகச் சிறுவயதில், அதாவது ஐந்து வயதில் முதல் வகுப்பில் படித்த பொழுது, குழந்தைகள் தினத்திற்காக இருக்கலாம் ஆனால் சரியாக நினைவு இல்லை, ஓர் ஓவியப் போட்டி நடந்தது.  நகரம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றார்கள்.  என் பள்ளியிலும் என் ஆசிரியை எங்களைப் பேருந்தில் மற்றொரு பள்ளிக்கு ஓவியப் போட்டிக்காக அழைத்துப் போவதாகச் சொன்னார்கள். செய்தி தெரிந்த அம்மா எனக்கு எண் இரண்டை எழுதி, அதற்கு ஒரு மூக்கு(அலகு), கண், அடியில் பானை போல ஒரு பெரிய வட்டம் போட்டு, வயிறு போல வரைந்து ‘வாத்து’ வரையக் கற்றுக் கொடுத்தார்கள்.  எனவே முதலில் நான் நினைவு தெரிந்து வரைந்த உருவம் வாத்து.  பங்கேற்றதை ஊக்கப்  படுத்துவதற்காக ஒரு சான்றிதழ் கொடுத்தார்கள்.  என் அம்மா  அதைப் பலகாலம் பத்திரமாக வைத்திருந்தார்கள்.  அதன் விதி என்ன ஆயிற்று என்று நினைவில்லை. முதல் பரிசு மட்டும் வாங்கியிருந்தேன் என்றால் அம்மா என்ன செய்திருப்பார்களோ தெரியவில்லை.

பயிர்களுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல பிறகு என் சித்திரக் கலையை மதிப்பெண் போட்டு வளர்த்தவர் என் அப்பா.  கோடை விடுமுறைகளிலோ, அல்லது கண்ணைக் கவரும் அழகிய படங்கள் கிடைத்தால் அதை என் கையில் கொடுத்து வரையச் செய்து, மூலப் படத்துடன் ஒப்பிட்டு ஒரு மதிப்பெண்ணும் கொடுப்பார்.  என் தந்தையின் நண்பர் ஒருவர் பொங்கல் வாழ்த்து அனுப்பினார். அவர் சிறந்த ஓவியர்  என்பதால் தானே வரைந்த ஓவியங்களை வாழ்த்துக்களாக அனுப்புவார். அவ்வாறு அவர் அனுப்பிய பொங்கல் வாழ்த்தைப் பார்த்து வரைந்ததுதான் இந்த “மஞ்சுவிரட்டு” ஓவியம்.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது எனக்கு வண்ண ஓவியம் தீட்ட ஆசை வந்தது.  வண்ணங்களும் தூரிகைகளும் வாங்கித் தரச் சொல்லி அம்மாவை நச்சரித்தேன். அம்மா மிகவும் சிறு வயது என நினைத்திருக்கக் கூடும், வாங்கித் தரவில்லை.  ஊரிலிருந்து மாமா வந்தார். கடைத்தெருவுக்கு அழைத்துப் போய் ஏதாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்குத் திரும்பிச் செல்வது அவர் வழக்கம்.  ஆனால் அவர் ஏதாவது வேண்டுமா என்று கேட்டால், நாங்கள் அதை வாங்கிக் கொடுங்கள், இதை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கக் கூடாது என்பது அம்மாவின் கண்டிப்பான கட்டளை.  ஆனாலும் அதை மீறி, மாமாவிடம் வண்ணங்கள் வேண்டும், தூரிகை வேண்டும் என்று கேட்டதும் அவர் எதிரிலேயே அம்மாவிடம் திட்டு வாங்கினேன்.  மாமாவும் தனது தங்கையைச் சமாதானப் படுத்திவிட்டு நான் கேட்டவற்றை வாங்கிக் கொடுத்தார்.  இதனால் அவரும் என் கலை ஆர்வத்திற்குத் தன்னால் இயன்ற பங்கைச் செய்திருக்கிறார்.

பிறகு என் ஓவிய ஆசிரியர், அவர்  பெயர் கங்காதரன் ஆக இருக்கக் கூடும்.  அவர் பெயர் என்ன என்று கேட்டால்  சொல்லியதில்லை.  மாணவிகள் நாங்களாகத் துப்புத் துலக்கி மாஸ்டரின்  பெயர்  அதுவாக இருக்கக் கூடும் என முடிவு செய்தோம்.  மாமா வாங்கித் தந்த வண்ணங்களைக் கொண்டு நான் கன்னா பின்னா என்று வர்ணம் தீட்டி, என் ஓவியப் பாடத்தின் நோட்டுச் சுவடிகளை வீணடித்தாலும் நன்றாக இருக்கிறது என்று ஊக்கப்படுத்தினார்.  பென்சில் ஓவியம் வரையவே அடுத்த மாணவிகள் முகத்தைத் தூக்கிய பொழுது, நான் தேவை இல்லாமல் வர்ணங்களைக் குழப்பி வெள்ளை அடித்தது அவருக்குப் பிடித்துப் போயிருக்கக் கூடும். எப்பொழுதோ அப்பாவைச் சந்தித்த பொழுது நான் அருமையாக வரைவதாக அப்பாவிடமும் சொல்லிவைத்தார்.

பிறகு கல்லூரியில் விலங்கியல் பாடம் எடுத்தாலும் எடுத்தேன், எப்பொழுது பார்த்தாலும் ரெகார்ட் நோட்டில் வரைவது தவிர வேறு வேலையே இருந்ததில்லை.  வரையத் தெரியாதவர்களையும் ஓவியர்களாக உருவாக்கி அனுப்பியது விலங்கியல் படிப்பு.

வரைவது இருக்கட்டும் ஏதாவது பரிசு வாங்கினாயா? என்று கேட்கக் கூடாது. ஏதோ ஒன்றிரண்டு ஆறுதல் பரிசுகள் அவ்வளவே. கல்லூரியில் ஒருமுறை மூன்றாம் பரிசு, ஓவியர் ஜெயராஜ் கொடுத்த ஆறுதல் பரிசு (அவர் ஜெ…  என்று கையொப்பமிட்ட ஒரு கைக்குட்டை) வாங்கியிருக்கிறேன்.  நான் மிகவும் பெருமையாகக் கருதுவது கல்லூரி நாட்களில் தமிழக அளவில் நடந்த ஓவியப் போட்டியில் பங்கேற்று, பாரதியாரின் “காணி நிலம் வேண்டும்” கவிதைக்கும், பாரதிதாசன் கவிதை ஒன்றிற்கும் வரைந்த வண்ண ஓவியங்களைத்தான். தமிழக அரசு நடத்திய இந்தப் போட்டியில் ஆறுதல் பரிசாக நூறு ரூபாயும், ஒரு சான்றிதழும் கிடைத்தது.  ஓவியத்தைத் தொழிலாகவும், சிறப்புப் பாடமாகவும் கொண்ட ஓவியர்கள் இடையில் பொழுது போக்காக ஓவியம் வரையும் எனக்கும் கிடைத்த அந்தப் பரிசு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ஆனால், திருமணம், குழந்தைகள், பணி  என்று காலப் போக்கில் வாழ்க்கை தடம் மாறிச் சென்ற பிறகு இப்பொழுது படங்கள் அதிகம் வரைவது இல்லை.  நான் வரைந்த ஓவியங்கள் சிலவற்றைத் தேடி எடுத்து ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன்.  அந்த சேகரிப்பில் இருக்கும் ஓவியமே இந்த “மஞ்சுவிரட்டு”.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!  


நன்றி:  வல்லமை - பொங்கல் இதழ்,  ஜனவரி 14, 2013


#ஓவியம், #வல்லமை, #நினைவுகள், #Themozhi 


Sunday, January 13, 2013

பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

 பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!
 




சாம்பல் வண்ணப் புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது. அதன் மேலே சாமான்கள் வைக்கும் கேரியரில் சில ட்ரங்க் பெட்டிகள் வைத்து விழாமல் நன்கு கட்டப் பட்டிருந்தது. வலதுபக்கம் திரும்பியவுடன் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு கார் ஊருக்குள் நுழைந்தது. மரத்தடியில் கோலிக்குண்டு விளையாடிய சிறுவர்கள் ஆரவாரம் செய்த வண்ணம் அதனைத் தொடர்ந்து ஓடத் தொடங்கினர். அந்தச் சிறிய ஊருக்கு எப்பொழுதாவதுதான் நகரில் இருந்து வண்டிகள் வரும். வண்டி மரகதத்தின் மச்சுவீட்டின் முன் வந்து நின்றது. கார் சப்தம் கேட்டு சில வீடுகளின் உள்ளிருந்து ஆட்கள் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர்.

சாலையின் எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த தமிழாசிரியர் தங்கமணி ஐயா காரருகில் வந்ததும் தனது மிதிவண்டியில் இருந்து கீழிறங்கினார். அதற்குள் வீட்டின் உள்ளிருந்து இரும்புக் கம்பிக் கதவுகள் போட்ட கதவைத் திறந்து கொண்டு மரகதம் வெளியில் வந்தார். வாயெல்லாம் பல்லாக “வா, செல்வி வா, வா பொங்கலுக்கு நீ வந்தா நல்லாருக்குமே, புள்ளைங்களையும் பாக்கலாமே அப்படின்னு காத்தாலேதான் நினைச்சேன், மகராசி நீயே வந்திட்டே. வருவேன்னு ஒரு கடுதாசி கூடப் போடலையே” என்றவாறு காரில் இருந்த மருமகள் செல்வியை வரவேற்று அவள் கையில் இருந்த ஒரு வயது பேத்தியை வாங்கிக் கொண்டார்.

இரண்டு வயது பெரிய பேத்தி இறங்கி ஓடி வந்து “பாட்டி, பாட்டி எனக்குக் கரும்பு கொடுங்க பாட்டி” என்று மரகதத்தின் காலைக் கட்டிக் கொண்டாள். வழியில் பொங்கலுக்காக விற்பனையில் இருந்த கரும்புகளைப் பற்றி அம்மாவையும், சித்தியையும், மாமாவையும் கேள்விகளால் குடைந்து கொண்டே வந்தவளை பாட்டி வீட்டில் கரும்பு இருக்கிறது என்று அமைதிப் படுத்த வேண்டியிருந்தது. இறங்கியவுடன் பாட்டியிடம் விண்ணப்பம் வைத்தாள். “என் ராசாத்திக்கு இல்லாத கரும்பா?” என்று பாட்டி ஆசையுடன் குழந்தையின் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தார்.

“வாங்க தம்பி, வாம்மா சுந்தரி” என்று அடுத்து இறங்கிய செல்வியின் அண்ணனையும் தங்கையையும் வரவேற்றார் மரகதம். தங்கமணி வாத்தியாரை நோக்கி, “வாத்தியாரய்யா, மருமகளும் பேத்திகளும் பொங்கல் கொண்டாட வந்திருக்காக,” என்று மகிழ்ச்சிப் பொங்கக் கூறினார். தங்கமணி ஐயா செல்வியிடம், “வாம்மா, சுகமா? சித்திரவேலு சுகமா? படிப்பு எப்படி இருக்காம்? கடுதாசி போட்டானா?” என்று அக்கறையாகக் கேட்டார். அவர் தனது கணவரின் பள்ளி ஆசிரியர் என்பதனால் செல்வியும் மாணவி போலவே, “ஆமாங்க ஐயா, நல்லாப் படிக்கிறாராம்”, என்றாள்.

“சரிம்மா நான் அப்புறம் பார்க்கிறேன், கடைவீதி வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கு,” என்றபடி தங்கமணி ஐயா மிதிவண்டியைக் கிளப்பிச் சென்றார். வழியில் மூன்றாவது வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கண்ணிற்கு மேல் கையை வைத்துக் கண்ணைக் குறுக்கி மச்சுவீட்டு விருந்தினரைப் பார்த்துக் கொண்டிருந்த சாயுபுவின் பாட்டியிடம், “பெரியம்மா , சித்திரவேலு சம்சாரமும் குழந்தைகளும் பொங்கலுக்கு வந்திருக்காங்க” என்ற பாட்டி கேட்கும் முன்பே தகவல் சொல்லியபடி விரைந்தார்.

மதிய விருந்திற்குப் பிறகு செல்வியின் அண்ணனும் தங்கையும் கிளம்பினார்கள். செல்வியின் தங்கையை அவள் மாமனார் வீட்டில் பொங்கலுக்குக் கொண்டுபோய்  விட வேண்டும். அவளது கணவரும் மேல் படிப்பிற்காகப் போயிருந்தார். திருமணமான புதுமணத் தம்பதிகள் அவர்கள். அக்கா ஊரிலிருக்கும் வரை தானும் பிறந்த வீட்டில் இருக்க விரும்புவதாகச் சொன்னவுடன் தடையேதும் சொல்லவில்லை அவள் கணவர்.

கிளம்பும் முன் அண்ணன் செல்வியிடம், “இரண்டு வாரம் கழித்து வந்து அழைச்சுக்கறேன், செல்வி” என்றார்.

“வேண்டாம் அண்ணே, அவர் படிப்பு முடிச்சு வரும் வரை இங்கேயே அத்தை கூட இருக்கப் போறேன்,” என்று இறுகிய முகத்துடன் செல்வி சொன்னாள்.

“மாப்பிள்ள வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்? என்னட்ட, மச்சான் செல்வியும் குழந்தைகளும் இங்கேயே இருக்கட்டும். அவள் பிறந்து வளர்ந்த வீடு இது. அவளுக்கு இங்கே இருக்கிறது வசதியா இருக்கும். அங்க சின்ன ஊருல செல்விக்கு என் அம்மாவைத் தவிர யாரையும் தெரியாது. குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாது போனா அவசரத்துக்கு மருத்துவ வசதி இல்ல. இங்க ஏகப்பட்ட பேர் இருக்கீங்க, சுந்தரியும் வந்திருக்கு, கல கலப்பா இருக்கும்னு சொன்னாரே செல்வி,” என்று கலங்கிய கண்களுடன் சொன்னார் அண்ணன்.

செல்வி பதிலேதும் சொல்லாமல் அமைதியாகத் தோளில் தூங்கிய குழந்தையைத் திண்ணையில் படுக்க வைத்தாள். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல இருந்தது அவள் செய்கை.

ஆனால் சுந்தரி முகத்தில் சிடுசிடுப்பு ஏறியது. அவள் சிறிது முன்கோபக்காரி, பட்டென்று மனதில் உள்ளதைப் பொரிந்து தள்ளிவிடும் குணம். “சரி, இதையே எத்தன தடவ சொல்லுவ, பொழுது சாயறதுக்குள்ள நானும் ஊர்ப் போய்ச் சேரனும். கிளம்பு சொல்றேன். வரேன் அக்கா, குழந்தைகளைப் பார்த்துக்க. அத்தையப் பார்த்துக்க. நேரம் கிடைக்கிறப்ப எனக்கும் லெட்டர் போடு. டிரைவர் வண்டிய எடுங்க, விட்டா அண்ணன் பேசிக்கிட்டே இருக்கும். போயிட்டு வரேனுங்க அத்தை,” எனப் படப் படவென்று பொரிந்து, மரகதத்திற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, சிடுசிடுப்பு மாறாமல் வண்டியில் ஏறிவிட்டாள். அண்ணனும் கண்ணைத் துடைத்துக் கொண்டு மரகதத்தை வணங்கி விட்டுக் கிளம்பினார். மரகதம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மரகதம், கார் தெருக்கோடியில் கண்ணைவிட்டு மறைந்ததும் பெருமூச்சு விட்டபடி திண்ணையிலேயே தூங்கிவிட்ட குழந்தைகள் அருகில் உட்கார்ந்த செல்வியைப் பார்த்தார். அவள் முகம் சுரத்தின்றி வெளுத்திருந்தது. கும்பகோணத்தில் வேலை பார்த்த தன் மகன் மைத்துனன் வீட்டில் தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு விட்டு மேற்படிப்பிற்குச் சென்னை சென்ற பொழுது மரகதத்திற்கு அந்த முடிவு சரியாகவே பட்டது.

திருமணம் முடிந்த கையோடு அவர்கள் தனிக்குடித்தனம்தான் செய்தார்கள். மரகதத்தை அவர்களுடன் இருக்கக் கூப்பிட்ட பொழுது அவரும் ஒருவாரம் இருந்து பார்த்துவிட்டுத் திரும்பி தனது ஊருக்கே வந்து விட்டார். காலம் காலமாக இருந்த ஊர் உறவுகள் இல்லாமல் வாழ்வது அவருக்குத் தோதாக இல்லை. செல்வியும் பிறந்து வளர்ந்த இடம் பெரிய செல்வச் செழிப்புள்ள இடம். நவீன வசதிகள் அற்ற இந்தச் சிறிய ஊரிலுள்ள வீடும் சரிப்படாதுதான். மகன் எடுத்த முடிவு சரியே எனத் தோன்றியதால் அவரும் செல்வியை மகன் திரும்பி வரும் வரை இந்தச் சிறிய ஊரில் வந்து தன்னுடன் இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.

இப்பொழுது நடந்த உரையாடல்களைப் பார்த்த பொழுது செல்வி பொங்கலுக்கு ஊருக்கு வந்ததற்குப் பின்னால் வேறு ஏதோ காரணம், அண்ணனுடன் மனவருத்தம் இருப்பது மனிதர்களைப் படிக்கும் அனுபவம் உள்ள மரகதத்திற்குத் தெளிவாகப் புரிந்தது. அவரும் எதிர் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெற்றிலை போட்ட வண்ணம், “செல்வி என்னம்மா நடந்தது?” என்று கேட்டார். செல்வியும் அவர் எப்பொழுது கேட்பார் என்று காத்திருந்தவள் போல விசும்பிய வண்ணம் சொல்லத் தொடங்கினாள்.

செல்வியும் அவளது அண்ணனும் தங்கையும் சிறு வயதிலேயே தங்கள் அன்னையைப் பறிகொடுத்துவிட்டுத் தாயில்லாப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள். அவள் அப்பா குழந்தைகள் நலன் கருதி பெரும் செல்வந்தராக இருந்தும் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அனைவரையும் உயர் கல்வி படிக்க வைத்தார். அண்ணனுக்குப் படிப்பு முடிந்ததும் உள்ளூரிலேயே உறவில் ஒரு பெண்ணை மணமுடித்து வைத்து தனது குடும்ப வியாபாரத்தையும் அவரிடம் ஒப்படைத்திருந்தார். அண்ணனுக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தது. சகோதரிகளுக்குப் படிப்பு முடியவில்லை, அதனால் திருமணத்திற்குச் சிலகாலம் இருந்தது. ஆனால் அதற்காக அப்பாவின் உடல் நலம் காத்திருக்கவில்லை. விரைவில் இரத்த அழுத்தம், மாரடைப்பு என ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி அவர் வாழ்வு முடிந்தது. மகனிடம் மகள்களின் திருமணப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டார். மகனும் திருமணங்களைச் செவ்வனே நடத்தி விட்டார்.

செல்வியின் கணவன் தனது மேற்படிப்பைக் காரணம் காட்டி இரண்டு குழந்தைகளுடன் செல்வியை அவளது தாய் வீட்டில் விட்டுச் சென்றார். புதிதாகத் திருமணமாகிய சுந்தரியின் கணவருக்கு இன்னமும் படிப்பு முடிந்திருக்கவில்லை. அவரும் கல்லூரியில் இருந்ததால் அக்கா ஊரில் இருக்கும் வரை தானும் உடன் இருப்பதாகச் சொல்லி சுந்தரியும் தாய் வீட்டில் தங்கி விட்டாள். மாமனார் மறைந்து, நாத்தனார்களும் திருமணமாகிச் சென்றவுடன் நிம்மதியாக இருந்த அண்ணிக்கு ஒவ்வொருவராக மீண்டும் வீடு வந்து சேர்ந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.

மாமனாரின் நிர்வாகப் பொறுப்பில் குடும்பம் இருந்த பொழுது பதவிசாக இருந்த அண்ணியின் குணத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காண ஆரம்பித்தனர் சகோதரிகள். அவர்கள் வளர்ந்த வீட்டிலேயே அன்னியர்களாகிப் போன உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. அண்ணி ஏதாவது சுடு சொல் கூறி வம்பிற்கு இழுக்கும் பொழுது செல்வி பொருட்படுத்த மாட்டாள். அவளுக்குப் பொறுமை அதிகம். ஆனால் சுந்தரியின் குணமோ வந்த சண்டையை ஒரு கை பார்த்துவிடும் குணம். அவளும் பதிலுக்கு இடக்காகப் பதில் சொல்லுவாள். நாளுக்கு நாள் விவாதம் வளர்ந்தது. அண்ணன் என்றும் அண்ணிக்குத்தான் ஆதரவு கொடுப்பார், நியாயம் யார் பக்கத்தில் இருக்கிறது என்ற கவலை அவருக்கு இல்லை. இதனால் அண்ணியின் அட்டகாசம் அதிகமாக, அதிகமாகச் சகோதரிகள் தினசரி வாழ்க்கையில் நிம்மதியை இழந்தனர். நாளொரு சண்டையும் பொழுதொரு விவாதமும் சூடு பறக்க ஆரம்பித்தது.

அவர்கள் வீட்டின் கொட்டிலில் பசுக்கள் உண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் அண்ணி தன்னுடைய குழந்தைகளையும், குழந்தைகளுக்குத் தேவைப்படும் என்று வீட்டில் அன்று கறந்த பால் அனைத்தையும் வண்டியில் வைத்து உள்ளூரில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டார். தான் பிறந்து வளர்ந்த செல்வச் செழிப்பு நிறைந்த வீட்டில் தனது கைக்குழந்தைகளுக்குப் பால் இல்லாததைக் கண்டு செல்வி துக்கம் தாளாது அழுதாள். இதைக் கண்ட சுந்தரிக்குக் கோபம் அதிகமாகி அண்ணியுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனவருத்தம் அதிகரித்துக் குடும்ப நண்பர்களை அழைத்து முறையிட்டார்கள். அவர்களுக்கு அன்புக்கு உதாரணமாக இருந்த குடும்பத்தில் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை வேதனையைத் தந்தது. அண்ணியின் பதிலில் இது என் வீடு நான் வைப்பதே சட்டம் என்ற அகங்காரம் ஒலித்தது. இனி செல்வியின் குழந்தைகளுக்கு வெளியில் இருந்து பால் வரவழைப்பது என நடுவர்கள் ஏற்பாடு செய்ததால் தற்காலிகமாகப் பிரச்சனை ஓய்ந்தது.

அண்ணி அவர்களை வெளியேற்ற உத்தேசித்துச் சின்னப் புத்தியுடன் நடவடிக்கை எடுக்கிறார் என்பது அனைவருக்கும் புரிந்தது. வாயைத் திறந்து வெளியே போங்கள் என்று சொல்லாமல் தானே அவர்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்பது அவர் நோக்கம். செல்வி நாம் கிளம்பிவிடலாம் என்று சொன்ன பொழுது சுந்தரிக்குக் கோபம் தாளவில்லை. “பேசாமல் இரு, இது யாருடைய வீடு? வெளியில் இருந்து வந்த யாரோ நம்மை நம் பிறந்த வீட்டில் இருந்து அனுப்புவதாவது, இருந்து நியாயம் கேட்கத் துப்பில்லை உனக்கு, இந்த அண்ணன் செய்வது சரியில்லை”, என்று கொதித்தாள்.

தொடர்ந்து வந்த வாரத்தில் சுந்தரி தனது அக்காவின் பெரிய குழந்தைக்குக் கதை சொல்லிய வண்ணம் சோறு ஊட்டிய பொழுது ஒரு வாத்து கதை சொன்னாள். அப்பொழுது சிறு வயதில் தானும் தன் சகோதரியும் விளையாடிய ஆடும் மர வாத்து நினைவு வந்தது. பரணில் ஏறி அதனைத் தேடிப் பிடித்து, தூசி தட்டி, சோப்பு போட்டுக் கழுவி அக்கா மகளை அதில் ஆட வைத்து அழகு பார்த்தாள். அதன் பிறகு உணவு ஊட்டுவது ஆடும் மர வாத்தில்தான் என்றாகிப் போனது. இரண்டு நாள் கழித்துக் காலை உணவுக்குக் கிண்ணத்தில் இட்லியையும் நெய்யையும் போட்டுப் பிசைந்து எடுத்துக்கொண்டு வரும் சித்தியைப் பார்த்ததும், குழந்தை மர வாத்தைத் தேடி ஓடினாள். வழக்கமாக முற்றத்தில் வாத்து இருக்கும் இடம் காலியாக இருந்தது. வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கேட்டபொழுது அது அண்ணனின் குழந்தைகளுடன் அண்ணியின் தாய் வீட்டிற்கு அனுப்பப் பட்டது தெரிந்தது. வாத்து இல்லாமல் குழந்தை உணவு சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்து அழுதாள். செல்வி கோபம் தாளாமல் குழந்தைக்கு இரண்டு அடி கொடுத்தும் பார்த்தாள், பலனில்லை. அடிவாங்கித் தேம்பித் தேம்பி அழும் அக்காவின் குழந்தையைக் கண்டு சுந்தரிக்குக் கோபம் அதிகமானது.

“வேலை மெனக்கெட்டு நான் கழுவி சுத்தம் செய்து குழந்தைக்குக் கொடுத்தால், எப்படி அண்ணி அந்த வாத்தை அவர்கள் அம்மா வீட்டிற்கு அனுப்பப் போயிற்று”, என்று பொருமினாள். “சும்மா இரு சுந்தரி, இப்போ அது அவங்க வீட்டு வாத்து இல்லையா?” என்று செல்வி சமாதானம் செய்வதற்காகச் சொன்ன வார்த்தைகள் எதிர் விளைவைக் கொடுத்தது. சுந்தரி அழும் குழந்தையின் கையைத் தர தரவென இழுத்துக் கொண்டு கொல்லைப் புறம் சென்றாள். அண்ணன் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். “கூப்பிடு உன் மாமாவை” என்று குழந்தைக்குக் கட்டளை இட்டாள். குழந்தை குளியலறைக் கதவைத் தட்டி, “மாமா, மாமா” என்றாள். மாமாவின் குரல், “என்னடா கண்ணு, தோ மாமா வந்திட்டேண்டா ராஜாத்தி” என்று கதவின் மறுபுறம் கேட்டது. அவசர அவசரமாகத் துவட்டிக் கொண்டு வந்த மாமா குழந்தையைத் தூக்கி “என்னம்மா வேணும் பாப்பாவுக்கு,” என்று செல்லம் கொஞ்சினார். அவள், “வாத்து, வாத்து வேணும் மாமா”, என்றாள் மழலையில்.

“சித்தி கூடப் போய் வாத்து விளையாடும்மா, மாமா கடைக்குப் போகணுமில்லையா? சாயங்காலம் நான் வந்து பாப்பாக் கூட விளையாடுவேனாம்” என்று சொல்லி சுந்தரி கையில் குழந்தையைக் கொடுத்து, “நீ கொஞ்சம் வாத்து ஆட்டி விளையாட்டுக் காட்டேன் சுந்தரி”, என்றார். இதற்காகவே காத்திருந்த சுந்தரி, “ஏது வாத்து? அண்ணி அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, அதான் குழந்தை சாப்பிட மாட்டேன்னு சொல்லி அழுவுது”, என்றாள். அண்ணனுக்கும் எரிச்சல் வந்தது.

அண்ணியைக் கூப்பிட்டு, “ஏன் இப்படிச் செய்யிற, அதை என்ன உங்க அம்மா வீட்டுல இருந்து கொண்டு வந்தியா? ஏன் இப்படி விவகாரம் பண்ற?” என்று எரிந்து விழுந்தார். அண்ணிக்குத் தனது கணவர் தனக்குச் சாதகமாகப் பேசாததுடன், உன் அம்மா வீட்டுச் சொத்தா? என்று கேட்டது அவமானமாக இருந்தது. அழுது கொண்டே ஓடிப் படுக்கை அறைக் கதவை தாழிட்டுக் கொண்டு, “உங்களுக்கு நான் எதுக்கு, உங்க தங்கச்சிங்க கூடவே சந்தோஷமா இருங்க, எனக்குன்னு யார் இருக்கா? இன்னுமே உயிரோட இருக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?,” அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். ‘உயிரோடு இருக்கிறதுல’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அண்ணனுக்குப் பகீரென்றது. மூடிய கதவைப் படபட வென்று தட்டி, “ஏய் கதவைத் திற, சொல்றதக் கேளு, கதவைத் திற”, என்று கூச்சலிட்டார்.

உள்ளிருந்து, “உங்களுக்கு யார் வேணுமின்னு மொதல்ல முடிவு பண்ணுங்க, நான் வேணுமா? உங்க தங்கச்சிங்க வேணுமா? அவங்க இருக்கிற வீட்டுல நான் இனிமே இருக்க மாட்டேன், என்ன சொல்றீங்க?” என்று அண்ணியின் குரல் கேட்டது

எதிர்பாராமல் வந்த இந்த நிபந்தனையினால் அங்கு அமைதி நிலவியது. அண்ணன் செய்வதறியாது கையைப் பிசைந்தார். அமைதியைக் கிழித்துக் கொண்டு செல்வியின் குரல் கேட்டது. “அண்ணே, போதும் இதுக்கு மேலே பிரச்சனை வேண்டாம். இது உன் வீடு, உன் வாழ்க்கைதான் முக்கியம். அண்ணி, வெளிய வாங்க, நாளைக்கு நான் எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போறேன், சுந்தரி நீயும் கிளம்பு உன் மாமனார் வீட்டுக்கு,” என்று மேற்கொண்டு யாரையும் பேச விடாமல் சுந்தரியையும் இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

நடந்ததைத் தொண்டை அடைக்க அழுகையுடன் செல்வி சொல்லி முடித்ததும், மரகதம் எதிர் திண்ணையில் இருந்து எழுந்து அவளருகில் வந்து அமர்ந்து செல்வியின் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்தார்.

“சொல்லுங்க அத்தை, எங்க அம்மாவும் அப்பாவும் உயிரோட இருந்திருந்தா எனக்கும் சுந்தரிக்கும் இந்த நிலை வந்திருக்குமா, நீங்களே சொல்லுங்க”, என்று சொல்லி மீண்டும் அழுதாள் செல்வி.

“மனசு வருத்தப் படாத செல்வி, விடும்மா, காதுதான் நம்மோட பொறந்தது, காது தோடுமா நம்மோட பொறந்தது? உங்க அண்ணி யாரோ வீட்டு பொண்ணுதானே, போவுது விடு”, என்றார் மரகதம்.


நன்றி:   வல்லமை - சிறப்பிதழ்
ஜனவரி  13, 2013

#சிறுகதை, #வல்லமை, #Themozhi