நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா?
'எது தமிழ்ப் புத்தாண்டு?' தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமான முறையில் அறிவிக்கப்பட்ட தைத் திங்களின் முதல் நாளா (2008-ஆம் ஆண்டு அரசாணை) அல்லது அதுநாள் வரையில் வழக்கத்தில் இருந்துவந்த சித்திரைத் திங்களின் முதல் நாளா என்ற புத்தாண்டு குறித்த சர்ச்சைகள் தமிழகத்தில் ஒரு தொடர்கதை. ஆனால், இந்த இருநாட்களும் அல்ல, தொல் தமிழ் நாட்டில் ஆண்டின் தொடக்கமாக இருந்தது ஆவணித் திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு அசைக்கமுடியாத சான்றுகள் உள்ளன.
எனவே சித்திரை முதல் நாள் ஆண்டின் தொடக்கமாகவும், அதன் வியாழவட்ட 60 ஆண்டுகள் சுழற்சி முறைக் கணக்கிடலில் பயன் கொள்ளப்பட்ட 'வடமொழி ஆண்டுப் பெயர்கள்’ கொண்ட காலக்கணிப்பு முறை வழக்கத்திற்கு வந்தது பிற்காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். வைதீகத்தின் தாக்கம் கொண்டுவந்த விளைவே இடையில் தொடங்கிய சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கமாகும். அந்நாட்களில் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த அரச ஆதரவுடன் சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கம் தமிழகத்தில் நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம்.
தைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ அல்லது சித்திரைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ தங்கள் வாதத்தை ஆணித்தரமாக நிறுவுவதற்கென இரு பிரிவினருமே 'தைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்' என்பதற்கோ, அல்லது 'சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்' என்பதற்கோ உறுதியான சான்றுகள் எதுவுமே அளித்தது இல்லை. இந்த மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று “உறுதியாக அறுதியிட்டு நேரடியாகக் கூறாத” கல்வெட்டுப் பதிவுகள், இலக்கிய வரிகள் போன்றவற்றை எல்லாம் இயன்றவரை மேற்கோள் கொடுத்து வாதிடுவார்கள்.
சித்திரை என்பதற்கு அறிவியல் மற்றும் வானியல் அடிப்படையில் சான்று கொடுக்க முற்படுகையில், தஞ்சை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரையில் தமிழர் புத்தாண்டு என்ற உரையை பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம் வழங்கினார். இவ்வுரையில் நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமாக அமைகிறது, தமிழர் புத்தாண்டின் தொடக்கம் அறிவியல் அடிப்படையில் வானியல் நிகழ்வை அடியொற்றி அமைகிறது என்று கூறுகிறார். அந்த உரையில் நிழலற்ற நாளில் ஆண்டின் தொடக்கம் என்று அவர் விளக்கும் பகுதியின் சுருக்கம் அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு என்பது தமிழர்களுக்கு எப்பொழுது தொடங்குகிறது என்றால், வானியல் நிகழ்வுகளின்படி, அறிவியல் அடிப்படையில் வலசை போகும் சூரியனின் வடபுல நகர்வில் சித்திரைத் திங்களில் மேஷ ராசியில் சூரியன் நுழையும் பொழுது, அரைநாள் நண்பகல் பொழுதில் இரு குச்சிகளை வைத்து அவற்றின் நிழல் மூலம் காலத்தை அளவிட்ட பண்டைய நாட்களில், சூரியன் மிகச் செங்குத்தாக வான் உச்சியில் வரும்பொழுது கோலின் நிழல் சாய் கோண நிலையில் விழாமல், கோலின் அடியிலேயே விழும் நாள்தான் ஆண்டின் தொடக்கம் எனக் கொள்ளப்பட்டது. எனவே சித்திரைத் திங்களின் நிழலற்ற நாளில் இளவேனில் பருவத்துடன் தமிழர் புத்தாண்டு தொடங்குகிறது என விளக்குகிறார் (https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s).
நிழலற்ற நாள் என்பது பண்டைய நாட்களில் பருவ கால அளவீட்டின் பகுதியாக இருந்திருக்கக் கூடும். அதற்கான வாய்ப்புண்டு. இருப்பினும் இது ஓர் அறிவார்ந்த கணிப்பு (educated guess). இது மிகப் பொருந்தக்கூடிய ஒன்று என்றாலும், சான்றுக் குறிப்புகள் அற்ற ஒரு யூகம் என்பதில் ஐயமில்லை.
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவெனில்; நிழலற்ற நாள் என்ற வானியல் நிகழ்வு ஆண்டில் இருமுறை நிகழ்கிறது. புவிநடுக்கோட்டிற்கு (Equator) அருகில்; கடக ராசிக்கும் (tropic of cancer) மகர ராசிக்கும் (tropic of Capricorn) இடையே உள்ள வெப்ப மண்டலப் பகுதியில் (tropical region) உள்ள இடங்கள் ஆண்டிற்கு இருமுறை நிழலற்ற நாட்களை எதிர்கொள்ளும்.
1. சூரியனின் வடதிசைச் செலவில் சித்திரையில் ஒருமுறை நிழலற்ற நாளும், 2. சூரியனின் தென்திசைச் செலவில் ஆவணியில் ஒருமுறையும் நிழலற்ற நாள் நிகழ்கிறது. மக்கள் சித்திரையில் வரும் நிழலற்ற நாளைப் பேசுவதைப் போல ஆவணியில் வரும் நிழலற்ற நாளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரியவில்லை. சித்திரைப் புத்தாண்டு நிழலற்ற நாளில் என்ற கோட்பாடு ஆவணி நிழலற்ற நாளுக்கும் பொருந்துமன்றோ ?
நிழலற்ற நாள் (Zero Shadow Day) என்ற வானியல் நிகழ்வின் அறிவியல் பின்னணி:
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் புவி தன் அச்சில் தோராயமாக 23.5° சாய்வாகச் சுற்றுகிறது. துருவங்கள் மாறி மாறி சூரியனை அணுகியும் விலகியும் சாய் கோணத்தில் சுற்றுவதால் புவியில் பருவநிலை மாறுதல்கள் ஏற்படுகிறது. வானில் சூரியனின் நகர்வு நாள்தோறும் மாறும். சூரியனுடைய நகர்வின் அடிப்படையில் (சூரியனைச் சுற்றிய பூமியின் சுழற்சியின் அடிப்படையில்) பருவங்கள் இயற்கையாக அமையும். புவியின் தென் துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து சுற்றுகையில் வடதுருவப் பகுதியில் நீண்ட இரவும், புவியின் வட துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து சுற்றுகையில் தென் துருவப் பகுதியில் நீண்ட இரவும் ஏற்படும்.
புவியின் நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்கோடு (Latitude) - மகரரேகை 23.5° அளவில் உள்ள தென் மண்டலப் பகுதியும், நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்கோடு - கடக ரேகை 23.5° அளவில் உள்ள வட மண்டலப்பகுதியும் உள்ள புவியின் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள இடங்கள் ஆண்டிற்கு இரண்டு நாட்களில் சூரியனை மிகச் சரியாக அதன் வான் உச்சியில் கொண்டிருக்கும், அந்நாட்களில் அப்பகுதியில் நிழலற்ற நாள் ஏற்பாடும். கடகரேகை மகரரேகைகளுக்கு அப்பால் உள்ள வட துருவ தென் துருவப் பகுதிகளில் சூரியன் வான் உச்சியை அடையாது என்பதால் அப்பகுதிகளில் நிழலற்ற நாட்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
டிசம்பர் 22 குளிர்கால கதிர்த்திருப்ப நாள் (solstice), ஜூன் 21 கோடைக்கால கதிர்த்திருப்ப நாள். இவ்வாறு சூரியன் வட தென் திசைகளை நோக்கி மாறி மாறி நகர்வது சூரியனின் தென்திசைச் செலவு என்றும் சூரியனின் வடதிசைச் செலவு என்றும் அழைக்கப்படுகிறது.
சூரியனின் தென்திசைச் செலவு/தட்சிணாயனம் (ஜூன் 21 — டிசம்பர் 22);
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் காலத்தினைத் தென்திசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். தென்திசைச் செலவு ஆடித் திங்களில் தொடங்கி மார்கழியில் முடிகிறது.
சூரியனின் வடதிசைச் செலவு/உத்தராயணம் (டிசம்பர் 22 — ஜூன் 21);
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத்தினை வடதிசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். வடதிசைச் செலவு தைத்திங்களில் தொடங்கி ஆனியில் முடிகிறது. சூரியனின் வடதிசைச் செலவு தொடக்க நாளில் தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
நிழலற்ற நாள் என்பது நிழல் காண இயலா நாள் ஆகும். அது சூரியன் நாம் இருக்கும் பகுதிக்கு மேல் நேர் செங்குத்தாக வான் உச்சியில் உள்ள நாள். அன்று நண்பகலில் நம் நிழல் நாம் பார்க்க இயலாதவாறு நம் காலடியிலேயே விழுவதால் நிழலற்ற நாள் என்ற பெயர் பெற்றது. சூரிய நகர்வினால் பிற நாட்களின் நண்பகலில் நம் நிழல் சாய்கோணத்தில் விழுவதால் நண்பகலில் நம்மால் நம் நிழலைக் காண இயலும். நிழலற்ற நாள் என்ற வானியல் நிகழ்வு புவியின் வெப்பமண்டலப் பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிகழ்வதன் காரணம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கிலும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் வலசை போவதால்தான். புவியின் நிலநடுக்கோட்டில் இருந்து துருவங்களுக்கு உள்ள சூரியனின் சாய்வுக் கோணம் அளவிடப்படும். இந்தச் சாய்வுக் கோணத்தின் பாகை அளவும், நாம் இருக்கும் பகுதியின் கிடைக்கோடு இருக்கும் பாகை அளவும் சமமாக இருக்கும் நாளில் சூரியன் நம் தலைக்கு மேல் வான் உச்சியில் இருக்கும்.
இந்த ஆண்டின் முதல் நிழலற்றநாளாக, ஏப்ரல் 25, 2023ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 25ம் நாளில் ஆண்டின் முதல் நிழலற்ற நாளை எதிர்கொண்ட இதே பகுதிகளில் அடுத்த நிழலற்ற நாள் ஆகஸ்ட் 17 ஆம் நாள் ஏற்படும். இந்த ஏப்ரல் 25 மற்றும் ஆகஸ்ட் 17, 2023 நிழலற்ற நாட்கள் சென்னை, பெங்களூரு, மங்களூரு பகுதிகளை ஒட்டி அவற்றுக்கு அருகில் நிகழும் நிழலற்ற நாட்கள். இப்பகுதிகள் சற்றொப்ப ஒரே கிடைக்கோட்டில் அமைந்துள்ள இடங்கள். சூரியனின் தொடர்ச்சியான நகர்வினால் நிழலற்ற நாட்கள் என்பது இந்தியாவின் வெவ்வேறு பகுதிக்கும் மாறுபடும் என்பதைக் கொடுக்கப்பட்டுள்ள படங்கள் தெளிவாக விளக்கும். எடுத்துக் காட்டாக; மதுரையில் - ஏப்ரல் 15, ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களிலும்; கோயம்புத்தூரில் - ஏப்ரல் 18, ஆகஸ்ட் 24 ஆகிய நாட்களிலும் நிழலற்ற நாட்கள் ஏற்படும்.
இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பில் நிழலற்ற நாட்கள் சூரியன் அப்பகுதிகளின் உச்சிக்கு வரும் நாளுக்கேற்ற வகையில் மாறுபடும். இவ்வாறு நிழலற்ற நாட்கள் தமிழகப் பகுதியில் நிகழும் நாட்கள் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 வரை ; ஆகஸ்ட் 16 முதல் செப்டெம்பர் 1 வரை.
தமிழ்நாடு, கேரளா பகுதிகளின் நிழலற்ற நாள்கள்:
10 ஏப்ரல் & 1 செப்டம்பர்— கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம்
11 ஏப்ரல் & 31 ஆகஸ்ட்— கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர்
12 ஏப்ரல் & 30 ஆகஸ்ட்— கொல்லம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி
13 ஏப்ரல் & 29 ஆகஸ்ட்— கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்
14 ஏப்ரல் & 28 ஆகஸ்ட்— ஆலப்புழா, சிவகாசி, விருதுநகர், பரமக்குடி
15 ஏப்ரல் & 27 ஆகஸ்ட்— கொச்சி, மதுரை, சிவகங்கை, காரைக்குடி
16 ஏப்ரல் & 26 ஆகஸ்ட்— கொடைக்கானல், திண்டுக்கல், வேதாரண்யம்
17 ஏப்ரல் & 25 ஆகஸ்ட்— திருச்சூர், பாலக்காடு, திருச்சி, நாகப்பட்டினம்
18 ஏப்ரல் & 24 ஆகஸ்ட்— கோயம்புத்தூர், கரூர், காரைக்கால், பூம்புகார்
19 ஏப்ரல் & 23 ஆகஸ்ட்— கோழிக்கோடு, ஊட்டி, ஈரோடு, சீர்காழி, சிதம்பரம்
20 ஏப்ரல் & 22 ஆகஸ்ட்— வயநாடு, முதுமலை, சேலம், நெய்வேலி, கடலூர்
21 ஏப்ரல் & 21 ஆகஸ்ட்— தர்மபுரி, விழுப்புரம், பாண்டிச்சேரி
22 ஏப்ரல் & 20 ஆகஸ்ட்— மைசூர், திருவண்ணாமலை, திண்டிவனம்
23 ஏப்ரல் & 19 ஆகஸ்ட்— ஓசூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு
24 ஏப்ரல் & 18 ஆகஸ்ட்— மங்களூர், பெங்களூரு, வேலூர், ஆற்காடு, திருவள்ளூர்
25 ஏப்ரல் & 17 ஆகஸ்ட்— உடுப்பி, சித்தூர், திருத்தணி, மீஞ்சூர், புலிகாட்
26 ஏப்ரல் & 16 ஆகஸ்ட்— திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீஹரிகோட்டா
இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் சித்திரை ஆண்டு தொடக்கம் நிழலற்ற நாளில் ஏற்படுகிறது என்ற கூற்று ஆவணியில் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கும் மாறுபாடின்றி அப்படியே பொருந்தும்.
பழந்தமிழர்கள் ஆவணியில்தான் ஆண்டைத் தொடங்கினார்கள். இன்றும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக அன்றைய சேரநாடாக இருந்த இன்றைய கேரளாவில் ஆவணியின் முதல்நாள்தான் புத்தாண்டு தொடங்குகிறது.
இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய, 4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள் அடிப்படையில் ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கான சான்றுகள் ‘ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்ற கட்டுரையில் கீழ் வருமாறு காட்டப்பட்டுள்ளது.
(1) வழக்காறு: தமிழரிடம் இருந்து பிரிந்த சென்ற பழந்தமிழ் மலையாள உறவுகள் தங்களுக்கென பொ.ஆ. 825ஆம் ஆண்டு முதல் புதியதாகக் கட்டமைத்துக்கொண்ட 'கொல்லம் ஆண்டு' என்ற வளர்ச்சி முறைக் காலக் கணக்கிடல் முறையில் ஆண்டின் தொடக்கம் ஆவணியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் வழக்கம் ஒரு சான்று. இவ்வழக்கம் பழந்தமிழர் பண்பாட்டின் எச்சம் எனலாம். கேரளத்தில் ஆகஸ்ட் 17ஆம் நாள், ஆவணித் திங்கள் முதல் நாளில்தான் புத்தாண்டு தொடங்குகிறது. இது வழக்கில் உள்ள சான்று.
(2) இலக்கணம்: தொன்மையான தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் நூற்பா (அகத்திணையியல்: 6 — 10) அகத்திணை இயலில் ஐவகை நிலங்களுக்குரிய பொழுதுகளை வகுத்துரைக்கும் பொழுது; “காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்” என்று கார் காலத்தினைத் தொடக்கமாகக் கொண்டு கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர். இத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் இதன் பொருளைத் தெளிவாக விளக்கி "காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டுமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று விளக்கம் தருகிறார். அதாவது ஆவணி முதலாக ஆடி இறுதியாக உள்ள காலம் ஓர் ஆண்டாகும் என்று தெளிவு படுத்துகிறார். இது எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்று.
(3) இலக்கியம்: தொல்காப்பிய நூற்பா சொல்வது போலவே சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125), 'கார்' அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் (96) என்று தொடங்கும் பாடல் பகுதியில் இளங்கோவடிகள் கார் முதலிய ஆறு வகைப் பருவங்களையும் அதே முறையில் வரிசைப்படுத்தி எழுதியுள்ளார். மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின் நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும் நினைவு கூர்வதாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்கிறார்.
(4) நிகண்டுகள் (அகராதி நூல்கள்): ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு மற்றொரு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்றை முதல் நிகண்டான, 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சேந்தன் திவாகரம் என்னும் ‘திவாகர நிகண்டு’ கொடுக்கிறது.
“அறு வகைப் பருவமாவன
காரே, கூதிர், முன் பனி, பின் பனி,
(சீர்) இள வேனில், முது வேனில் (என்று ஆங்கு)
இரு மூன்று வகைப் பருவம்; (அவை தாம்
‘ஆவணி முதலா’ இரண்டு இரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே).”
— (6 பெயர்கள்) [சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]
இருதிங்கள் சேர்ந்த காலப்பகுதி பருவம் எனப்படும். ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களைக் கொண்டது ஓர் ஆண்டு என்பதாகவும், கார் பருவத்தை முதன்மையாக வைத்து அது தொடங்கும் ஆவணி முதலாக வைத்துப் பிற மாதங்களை எண்ணியுள்ளனர் என்பதை இப்பாடல் கூறுகிறது. எனவே இந்த நூல் 10 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட தமிழக இலக்கிய வழக்காறுகளைப் பதிவு செய்யும் ஆவணமாக இது திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது. இதுவும் ஆண்டின் தொடக்கத்தைக் கார்ப்பருவத்தினை முதலாகக் கொண்டு, ஆவணி மாதத்திலிருந்து தொடங்கினர் பழந்தமிழர் என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொட்டியே அமைந்துள்ளதைக் காணலாம். ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்களாகக் காலத்தைப் பகுத்த முறையை “ஆவணி முதலா இரண்டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே" என்றுதான் திவாகரப் பாடல் குறிப்பிடுகிறது.
திவாகரா நிகண்டைத் தொடர்ந்து, அதையொட்டி விரித்து எழுதப்பட்ட பிங்கலநிகண்டும் “ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவிய திங்கள் எண்ணினர் கொளலே. (வான்வகை சூத்திரம் 210) “ என்ற ஆண்டுப் பிறப்பு ஆவணி முதலாகத் தொடங்குகிறது என்றே கூறுவதுடன் சித்திரையில், வசந்தத்தில் ஆண்டு தொடங்குவது ஆரிய சமஸ்கிருத வழக்கம் என்றும் கூறுகிறது. இந்த வரிசையில் காலத்தால் பிற்பட்ட, 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு ஆண்டின் தொடக்கம் என்பதை, "ஆவணியே ஆதி" மற்று இரண்டு இரண்டு மாதம் பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம். (சூத்திரம் 6 பெயர்கள்-95) என்று அறுதியிட்டுக் கூறுகிறது. எனவே 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கம் ஆவணியில் தொடங்குகிறது என்பதற்கு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் நிகண்டுகளிலும் இருக்கின்றன.
(5) கோயில் கல்வெட்டுகள்: திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளை அவை வெட்டப்பட்ட காலமான 9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டுவரை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி ஆராய்ந்ததில்; பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் கல்வெட்டுகளில் முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.
ஆகவே மேற்குறிப்பிட்ட,
(1) பழந்தமிழர் காலக் கணக்கீட்டின் தொடர்ச்சியாகப் பண்டைய தமிழ் உறவுகளான கேரள நாட்டில் வழக்கில் இருக்கும் கொல்லம் ஆண்டு கணக்கிடல் முறை,
(2) தொல்காப்பியரின் பொருளதிகாரம் (அகத்திணையியல்: 6 — 10),
(3) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125),
(4) திவாகர, பிங்கல, சூடாமணி நிகண்டுகள் தரும் செய்திகளின் ஒப்பீடு,
(5) திருவல்லிக்கேணி கோயிலின் கல்வெட்டுத் தொடர் வரிசை அறியத் தரும் செய்திகள் மூலம் ஆவணியே தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
இப்பொழுது இந்த வரிசையில் . . .
முன்னர் கொடுக்கப்பட்ட நிழலற்ற நாள் ஆண்டின் தொடக்கம் என்ற வானியல் மற்றும் அறிவியல் அடிப்படை விளக்கமும் பொருந்துவதைக் காணலாம்.
பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆட்சிகளும் சமயக் காட்சிகளும் மாறியதும், அவற்றின் எதிரொலியாகத் தமிழரின் காலக்கணக்கிடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதும் சான்றுகள் மூலம் தெளிவாகிறது.
தமிழ் நாட்டை ஆண்ட அந்நியர்களான நாயக்கர்கள் ஆட்சிக் கால கட்டத்தில் ஆரூடம் பார்க்க வழக்கிலிருந்த ஆரிய வைதீகப் பண்பாட்டின் சித்திரைத் திங்களைத் தொடக்கமாகக் கொண்ட காலக் கணக்கிடும் முறை தமிழகத்தின் கோயில் வளாக எல்லையைக் கடந்து பொதுமக்களின் வாழ்வுமுறையில் நுழைந்துள்ளது. இம்மாற்றம் சோதிட நாட்காட்டியின் அடிப்படையில் அக்கால அரச ஆதரவுடன் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் என்பதும் தெளிவாகிறது. தமிழகத்தில் அதுவரை வழக்கத்திலிருந்த ஆவணிப் புத்தாண்டு முறை நீக்கப்பட்டு வைதீக சித்திரைப் புத்தாண்டு வழக்க முறைக்கு புத்தாண்டு மாற்றப்பட்டது என்றுதான் தரவுகள் மூலம் முடிவெடுக்க இயலும். ஆகவே தரவுகளின் அடிப்படையில் பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர். ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதியாகக் கூறலாம்.
கட்டுரைக்கு உதவியவை:
நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2023/04/ZSD_Tamil.pdf
தமிழ்நாடு-கேரளா நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2017/04/zsd_kerala_tn.jpg
நிழல் இல்லா நாள் - ஆண்ட்ராய்ட் கைபேசி செயலி
https://play.google.com/store/apps/details?id=com.alokm.zsd
The Public Outreach & Education Committee of the Astronomical Society of India (ASI - POEC)
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/
India Sunrise and Sunset Times
https://www.sunrisesunsettime.org/asia/india/
சித்திரை தமிழர் புத்தாண்டு -பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம்
https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், தேமொழி, இலக்கிய மீளாய்வு, பக்கம் 97- 112, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம், 2023.
நன்றி:
படங்கள் உதவி — விக்கிப்பீடியா மற்றும் இந்திய வானியல் கழகத்தின் கல்வி, பொதுமக்கள் தொடர்பு குழு
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/
காணொளி:
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்
— முனைவர் தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –
திசைக்கூடல் – 339 [ஆகஸ்ட் 13, 2023]
https://youtu.be/F7Qm6Uu
------
நன்றி: தமிழணங்கு
ஆகஸ்ட், 2023
#தமிழணங்கு, #இலக்கியம், #தமிழ்ப்புத்தாண்டு, #Themozhi