Monday, April 3, 2023

அண்ணல் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்

அண்ணல் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்


இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் (ஏப்ரல் 14, 1891 - டிசம்பர் 6, 1956) அவர்களை  இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதி, இந்தியச் சுதந்திர இயக்கத்தின் முன்னணிப்  போராளிகளில் ஒருவர், முற்போக்குச் சிந்தனை கொண்டவர், தொலைநோக்கு கொண்ட ஓர் அரசியல்வாதி, வழக்கறிஞர் மற்றும் சட்ட அமைச்சர், இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கிய நிபுணர், தொழிலாளர் உரிமைகளுக்குச் சட்டங்கள் மூலம் பாதுகாப்பு கொடுத்தவர்,  பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்று அவரது பற்பல செயற்பாடுகளின் அடிப்படையில், பல கோணங்களில் அவரை நினைவு கூர்கிறோம். தாழ்த்தப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்து அதனால் அவரது வாழ்நாள் முழுவதும் பாகுபாடுகளை எதிர்கொண்ட அம்பேத்கர், பாலின வேறுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

அம்பேத்கரின் எழுத்துகள் இந்தியாவின் சமூக முன்னேற்றத்திற்கான விடியலைத் தோற்றுவித்தன.  அம்பேத்கர் எழுத்துகளின் தொகுப்பு முதன் முதலில் பகவான்தாஸ் அவர்களால் தொகுக்கப்பட்டது.   மகாராஷ்டிரா அரசு அம்பேத்கர் எழுத்துக்களை 2 தொகுதிகளாக வெளியிட்டது.  அம்பேத்கரின் எழுத்துகளைத் தொகுத்த வசந்த் மூன் அவற்றை 21 நூல்களாக வெளியிட்டார். இடையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கால் இடையூறுகள் எதிர்கொள்ளப்பட்டது. வழக்கு முடிந்த பிறகு அம்பேத்கர் எழுதியவை, அவருடைய எழுத்துகள் கிடைக்கக் கிடைக்க அவை தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு  வந்தன.  இந்தத் தொகுதிகளில் அம்பேத்கர் எழுதியவை பொருண்மை அடிப்படையிலோ, அவருடைய சிந்தனை அடிப்படையிலோ, ஆண்டுவாரியாகவோ  தொகுக்கப்படவில்லை என்பது ஒரு குறை. அதனால் அம்பேத்கர் ஒரு பொருண்மையில் சொல்லிய கருத்துகள் பல தொகுதிகளில் இடம் பெறுவதால் ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வது சற்றுக் கடினமான செயலாக இருக்கிறது.

இக்குறையைக் களையும் பொருட்டு அம்பேத்கர் எழுத்துகளில் ஒரு குறிப்பிட்ட பொருண்மையில்  உள்ளவற்றை, அதாவது ... சாதி-சாதிய ஒடுக்குமுறை, இந்தியப் பொருளாதாரம், பெண்விடுதலை, இந்தியச் சுதந்திரம், காங்கிரஸ் நடவடிக்கைகள் என்பது போன்ற ஒவ்வொரு பொருண்மையின் கீழும் பொருத்தமான அம்பேத்கரின் எழுத்துகள் தொகுக்கப்பட்டு, அத்துடன்  அவை காலவரிசையாகவும்  ஒவ்வொரு தொகுதியிலும் வரிசைப்படுத்தி வழங்கும் நோக்கில் ஜெய்பீம் ஃபவுண்ட்டேஷன் ஒரு திட்டத்தைத் தொடங்கியது.  ஜெய்பீம் ஃபவுண்ட்டேஷன் நிறுவனர் திரு. கௌதம சன்னா அவர்களால்,  ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம், ஊன்றுவோம் அம்பேத்கர் அறிவியம், விளங்க வைப்போம் விலங்கறுப்போம் என்ற கொள்கையுடன் 'அம்பேத்கரியம் 50' என்ற தலைப்பில் ஜெய்பீம் பதிப்பகம் வழியாக அம்பேத்கர் அவர்களின் எழுத்தும் பேச்சும் தொகுக்கப்பட்டுள்ளது.  தமிழில் வெளியாகியுள்ள இத்தொகுதிகள் பின்னர் ஆங்கிலத்திலும் வெளிவர இருக்கிறது.  இந்தத் தொகுதிகள் தமிழ் நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும், குறிப்பாகத் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் உள்ள நூலகங்களிலும் இடம் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அம்பேத்கரியம், அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் என 50 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. 

இந்தத் தொகுப்பில் அம்பேத்கர் கடிதங்கள் சிலவற்றை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  அவற்றில் குறிப்பாக இந்திய விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தான்- இந்தியா பிரிவினைக் காலத்தில், பாகிஸ்தான் பகுதியில் சிக்கிக் கொண்ட பட்டியலின மக்கள் அங்கிருந்து வெளியேறுவது  தடுக்கப்படுகிறது.  இது அண்ணல் அம்பேத்கர் கவனத்திற்கு வருகிறது. அவர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் கவனத்திற்கு, பட்டியலின மக்கள் நிலைமையைக் கொண்டுசென்று தக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கிறார். அதற்குப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களும் தக்க நடவடிக்கைகள் எடுத்து ஆவண செய்வதாகக் கூறிப் பதிலளிக்கிறார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த இரண்டு கடிதங்களும் இங்கே கொடுக்கப்படுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~





புது தில்லி, டிசம்பர் 18, 1947.

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு வரும் பட்டியலின சாதியினரிடமிருந்தும்,  அவ்வாறு இந்தியாவுக்கு வரவிடாமல் பாகிஸ்தான் அரசால் அடைத்து வைக்கப்பட்டுத் தடுக்கப்பட்டவர்களிடம் இருந்தும் எனக்குப்  புகார்கள் பல வந்துள்ளன. அதனால் அவர்களின் துன்பங்களை  உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரவேண்டிய நேரம் வந்துவிட்டதை  உணர்கிறேன்.  அங்கு என்ன நடக்கிறது அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில்,  அவர்களின் துன்பங்களுக்கான காரணங்களையும் அவற்றை நீக்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் கீழே குறிப்பிடுகிறேன்.

I.
(1)   பட்டியலின மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் அரசு எல்லா வழிகளிலும் தடுத்து வருகிறது.  பட்டியலினத்தவர் குற்றேவலர்களாக பாகிஸ்தானில் தங்கியிருந்து,  நிலமற்ற உழைப்பாளர்களாகிய அவர்கள் அங்குள்ள  நிலவுடைமையாளர்களுக்குப் பணிசெய்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதே  இதன் பின்னணியில் உள்ள காரணமென எனக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக அவர்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதில் தீவிரமாக உள்ள பாகிஸ்தான் அரசு, துப்புரவுத் தொழிலாளர்களை இன்றியமையாத பணி  செய்வோர் என்று அறிவித்து, அவர்கள் ஒருமாத மாத முன்னறிவிப்பு தராமல் பணியில் இருந்து அவர்களை விடுவிக்கத் தயாராக இல்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

(2)   இராணுவ வெளியேற்றும் அமைப்பு என அறியப்படும் எம். இ. ஓ. அமைப்பு வெளியேற விரும்பும்  பட்டியலின மக்களுக்கு சிறிது பயன் தரும் வகையில்  ஓரளவு உதவி வருகிறது.  இருப்பினும் பாகிஸ்தான் அரசு, வெளியேற விரும்பும்  பட்டியலின மக்களுடன் எம். இ. ஓ. அமைப்பு நேரடித் தொடர்பில் இருப்பதை அனுமதிக்கவில்லை என்றும் நான் அறிகிறேன். இதன் விளைவாக, பட்டியலின மக்களை வெளியேற்றும் பணி மிகத் தொய்வடைந்த நிலையிலும், சில இடங்களில்  முற்றிலும் தடைப்பட்டும் உள்ளது.  மேலும், எம். இ. ஓ. அமைப்பும் விரைவில் மூடப்படவிருப்பதாகவும் எனக்குத் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. இது மட்டும் நேர்ந்தால்,  பட்டியலின மக்களை  பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றுவது முற்றிலும் நடக்க இயலாமல் போகும்.  
(3)   தேவையான செயல்பாடுகள்:
(i) வெளியேற விரும்பும்  பட்டியலின மக்களுக்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும்;  
(ii) எம்.இ.ஓ. அமைப்பினர் வெளியேற விரும்பும்  பட்டியலின மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதை அனுமதிக்க வேண்டும்;
(iii) அனைத்துப் பட்டியலின மக்களும் வெளியேறும் வரை எம்.இ.ஓ. செயல்பட வேண்டும்.
 
(4)   இதுவரை, மேற்கு பஞ்சாப் பகுதிக்குப் பட்டியலினப் பிரிவில் இருந்து ஒரே ஒரு ஒரு அதிகாரியை மட்டுமே நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் நியமித்துள்ளது.  ஆனால், பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களான வடமேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து மற்றும் பவல்பூர் போன்ற எஞ்சியுள்ள பகுதிகளுக்கு அவற்றுக்கென எந்த அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. இப்பகுதிகளுக்கு விரைவில் அதிகாரிகள்  நியமிக்கப்பட  அமைச்சரகம் உத்தரவிட்டு, சிறப்பு அதிகாரிகளை பாகிஸ்தான் பகுதியில் களப்பயணம் மேற்கொள்ளச் செய்து அதன் மூலம் வெளியேற விரும்பும்  பட்டியலின மக்களுக்குத் தடை செய்யப்படும் பகுதிகள் கண்டறியப்பட வேண்டும்.


II.
பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கிழக்கு பஞ்சாப் பகுதிக்கு வந்துள்ள பட்டியலின மக்கள் குறித்து,  அவர்களிடம்  இருந்தும் புகார்கள் கிடைத்துள்ளன.   அவை பாகிஸ்தானில் இருந்து வெளியேறத் தடை செய்யப்பட்டுள்ள  பட்டியலின மக்கள் அனுப்பிய புகார்களையும்விட அதிக எண்ணிக்கையில் உள்ளன.  அவற்றை நான் கீழே பட்டியலிட்டுள்ளேன்:  
(i)
(1)   கிழக்கு பஞ்சாப் பகுதிக்கு வந்துள்ள பட்டியலினப் பிரிவு அகதிகள்  இந்திய அரசு ஏற்படுத்தியுள்ள அகதிகள் முகாம்களில் குடியிருக்கவில்லை.  அகதிகள் முகாமிற்குப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் சாதி இந்து அகதிகளுக்கும் பட்டியலின அகதிகளுக்கும் இடையில் பேதம் காட்டுவதே  இதற்குக்  காரணம்.

(2)   அகதிகள் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் மட்டுமே உணவு, உடை போன்ற நிவாரணங்களைப்  பெறலாம் என்று நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறை ஒரு விதி ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேற்கூறப்பட்ட காரணத்திற்காகப் பட்டியலின மக்கள் அகதிகள் முகாமில் தங்காத காரணத்தால், அந்த அகதிகளுக்கு  எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை. இது மிகத் துயரமானது.

(3)   இந்தப் பாகுபாட்டைத் தடுக்க இயலாது என்பதால், முகாம்களில் வாழும் அகதிகளுக்கு இணையாக அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களைப் போன்று அதே அளவு நிவாரணங்களை அகதி முகாமில் குடியிருக்காத பட்டியலின அகதிகளும் அவர்களுக்குரிய உதவிகளைப் பெறும் வகையில் விதியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது.

(ii)
(1) கிழக்கு பஞ்சாப் அரசு நிலங்களை ஒதுக்குவதில்  பட்டியலின மக்களின்  நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  முற்றிலுமாக சாதி இந்துக்களின் கைகளில் கிழக்கு பஞ்சாப்பின் நிர்வாகம் இருப்பதால், பட்டியலின அகதிகளின் மறுவாழ்வில் தனிப்பட்ட அக்கறை செலுத்துவோரும்  எவருமில்லை, அதற்குப் பொறுப்பேற்கும் வகையில் இந்திய அரசு ஏற்படுத்திய நிறுவனங்களும் ஏதுமில்லை, குறிப்பாக இக் கடமையை கிழக்கு பஞ்சாப் அரசாங்கத்தின் கவனத்திற்கு பட்டியலின மக்களின் நலன்கள் குறித்துக் கொண்டு செல்வதும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

(2) ஆகவே, இந்திய அரசு கிழக்கு பஞ்சாப்பில் ஏராளமான அதிகாரிகளை நியமித்து அவர்களின் சிறப்புப் பொறுப்பாக,  நில ஒதுக்கீடு நியாயமான முறையில் செய்யப்படுவதையும், பட்டியலின அகதிகள் அவர்களுக்குரிய முறையான பங்கைப் பெறுவதையும் மேற்பார்வை செய்வது இன்றியமையாதது.

(3) இதற்காக நியமிக்கப்பட்ட நபர்களின் நான் பட்டியலை மாண்புமிகு திரு. நியோகி   அவர்களிடம்  வழங்கியுள்ளேன், நான் அறிந்தவரை, இவர்கள் இந்தப் பணியைச் செய்வதற்கு மிகவும் தகுதியானவர்கள்.

(4)   (அ) கிழக்கு பஞ்சாப்பில் வாழும் பட்டியல் இனத்தவர்களை அவர்களின் சொந்த வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அங்கு ஆதிக்க நிலையில் இருக்கும் சீக்கியர்களும் ஜாட்களும் கட்டாயப்படுத்தி அவர்களின் வீடு அல்லது நிலங்கள் போன்ற சொத்துக்களைத் தங்கள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள் என்பது ஒரு கொடுமையான உண்மை. கிழக்கு பஞ்சாப்பின் நீதித்துறையிலும் காவல்துறையிலும் சீக்கியர்களும் ஜாட்களும் நிறைந்திருக்கிறார்கள் என்ற எளிய காரணத்தால் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடிய அடக்குமுறையில் இருந்து அவர்களுக்குத் தீர்வு கிடைப்பதில்லை. சீக்கியர்களும் ஜாட்களும் செய்யும் குற்றங்களை இயற்கையாகவே அவர்களது உறவும் சுற்றமும் பொருட்படுத்தாது அவர்களைப் பாதுகாப்பதால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை.  

(ஆ)   எனவே, கிழக்கு பஞ்சாப் அரசு பட்டியலினப் பிரிவில் இருந்து குறைந்தது 300 நபர்களைத்    தங்களின் காவல்துறையின் ஊர்க்காவல் பணிக்கு அமர்த்துவதற்குக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பது முற்றிலும் இன்றியமையாததாகும். அண்மைய நாளிதழ்களில் கிழக்கு பஞ்சாப் அரசு  பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேரை தங்கள் காவல்துறையில் பணிக்கமர்த்தியதாக செய்தி வெளியானது. விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் எல்லையோரக் காவல் பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் ஊர்க்காவல் பணிக்காக அல்லவென்றும் தெரிய வந்தது. பட்டியலின மக்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் பிரிவினரைக் கிழக்கு பஞ்சாப் ஊர்க்காவல் படையில் பணிக்கமர்த்த வேண்டும். கிழக்கு பஞ்சாப்பின் ஊர்க்காவல் பணியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்பது எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(5)   (அ) கிழக்கு பஞ்சாப்பின் நில வருவாய் அமைப்பு கிராமத்தில் வசிப்பவர்களை ஜமீன்தார்கள் மற்றும் கமினாக்கள் இரண்டு வகுப்புகளாகப் பிரித்துள்ளது.  கிராம எல்லைக்குள் சொந்தமாக நிலம் வைத்திருக்கக் கூடிய நிலவுடைமை உரிமை பெற்றுள்ள குடும்பங்கள் ஜமீன்தார் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். தாங்கள் வாழும் ஊரில் சொந்தமாக நிலத்தை வாங்கவோ வைத்திருக்கவோ உரிமையற்றவர்கள் கமினாக்கள் பிரிவினர். அவர்கள் வீடுகளும் ஜமீன்தார்களின் நிலத்தில் அமைந்தவை.  அதனால் ஜமீன்தார்கள் ஒன்றிணைந்தால் கமினாக்களை அவர்கள் வாழும்  வீட்டை விட்டும் கிராமத்தை விட்டும் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியும். இந்த நடைமுறை ஒவ்வொரு கிராமத்திலும் கமினாக்களை ஜமீன்தார்கள் தயவில் வாழ வைக்கிறது. கிழக்கு பஞ்சாப்பின் அனைத்துக் கிராமங்களிலும் வாழும் பட்டியலின மக்கள் கமினாக்கள் பிரிவில் அடங்குவர். ஆகவே, அவர்கள் கிராமத்தின் ஜமீன்தார்களின் அடிமையாக வாழ்கின்றனர்.

     (ஆ) எனவே, கிழக்கு பஞ்சாப் அரசு அவர்களின் நில வருவாய் முறையை மாற்றுவதன் மூலம்,  ரயத்துவாரி முறைபோன்ற ஒரு முறையை  நடைமுறைப் படுத்துவதன் மூலம்  இந்தப் பேதத்தை  முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது. அந்த நிலை ஏற்படுமானால்  நிலவுடைமை  பொறுத்த அளவில் அனைத்துக் கிராம மக்களும் சமமான நிலை ஏற்படும்.

     (6)   (அ) விவசாயிகளைப் பணக் கடன் கொடுப்பவரிடம் இருந்து காப்பாற்றும்  நோக்கில் நில உரிமை மாற்றச் சட்டம் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் நடைமுறையில் உள்ளது.   ஆனால், ஒரு விவசாயி என்பவர் குலம் சார்ந்தவர் தொழில் சார்ந்தவர் அல்ல என்ற வரையறை கொண்டுள்ள இந்தச் சட்டம்  தீமை நிறைந்த  ஒரு சட்டம் என்பதில் சிறிதும் ஐயம் இருக்க வழியில்லை. இந்தச் சட்டத்தின்படி, விவசாயச் சமூகமாக அரசால் அறிவிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே விவசாயியாகக் கருதப்படுவார். எந்த ஒரு  பட்டியலினத்தவரும்  நிலத்தில் உழவு செய்பவராகவும், விவசாயத் தொழிலாளியாக இருந்தாலும், பழங்கால பஞ்சாப் அரசு பட்டியலின பிரிவு மக்களை விவசாயச் சமூகமாக அறிவிக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது. இதன் விளைவாக, கிழக்கு பஞ்சாப்பில் உள்ள பட்டியலின மக்களுக்கு நிலத்தை வாங்கவோ, உடைமையாகச் சொந்தங் கொள்ளவோ வழியின்றி நிலமற்ற உழைப்பாளர்களாக இந்து, சீக்கிய மற்றும் ஜாட் நிலவுடைமையாளர்களை வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இது ஒரு கொடூரமான சட்டம், இச்சட்டம் சட்டப் புத்தகத்தில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

     (ஆ) கிழக்கு பஞ்சாப் அரசிடம் 'விவசாயி' என்ற சொல்லின் வரையறையைத் திருத்தம் செய்து அதை ஒரு தொழிலாக மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட வேண்டும், இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாகக்  கொண்டிருக்கும் எவர் ஒருவரும் சாதி  இன வேறுபாடின்றி  நிலத்தை வாங்கவும் உடைமையாகக் கொள்ளவும் உரிமை உள்ள  விவசாயியாக மாற வழி ஏற்படும்.

பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட எல்லாவற்றையும், அவற்றைக் களையும் முறைகளையும், அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தீர்வாக அமையும் என நான் கருதுவனவற்றையும் விவரித்துள்ளேன்.   இந்திய அரசின் கைகளில் சில தீர்வுகளும்  மற்றும் சில  கிழக்கு பஞ்சாப் அரசின் கைகளிலும் உள்ளன. இந்திய அரசு விரும்பினால், அத்தகைய தீர்வுகளுக்கான முயற்சியை  முன்னெடுப்பதில்  எந்தக் கேள்வியும் இருக்க வழியில்லை.   கிழக்கு பஞ்சாப் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீர்வுகள் குறித்து நடவடிக்கை எடுக்க இயலாத கையறு நிலையில் இருப்பதாக இந்திய அரசாங்கம் கருத வேண்டியதில்லை. ஏனெனில், இந்திய அரசு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான செலவுப் பொறுப்பை ஏற்பதால், அனைத்து வகுப்பு மக்களையும் நியாயமான மற்றும் சமமாக நடத்துவதற்கு இந்திய அரசு தேவையானதாகக் கருதும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு பஞ்சாப் அரசை நிர்ப்பந்திக்க அதற்குத் தார்மீக உரிமை உள்ளது. அதனால்தான், நான் இந்திய அரசின் நடவடிக்கைக்காகப் பரிந்துரை வழங்குகையில் கிழக்கு பஞ்சாப் அரசாங்கத்தின் கைகளில் உள்ள தீர்வுகள் குறித்தும் குறிப்பிடத் தயங்கவில்லை. இதுவரை, முஸ்லிம்களின் பிரச்சனையில் இந்திய அரசு அனைத்துக்  கவனத்தையும் அக்கறையையும் செலுத்தி வந்துள்ளது. பட்டியலின மக்களுக்கு எந்தப்  பிரச்சனையும் இல்லை என்பதாகவோ அல்லது சிறப்புக் கவனம் தேவைப்படாத அளவுக்கு அவை மிகவும் சிறியதாகவோ கருதப்படுகிறது. பட்டியலின பிரிவினரின் பிரச்சனையைச் சிலர் குறிப்பிட விரும்பாமலிருக்கலாம்,  பட்டியலின மக்கள் குறித்து அக்கறையுள்ள எங்களுக்கு அந்தப் பிரச்சனை உள்ளது என்பதும், அது முஸ்லிம்களின் பிரச்சனையை விட மிகவும் தீவிரமானது என்பதும் தெரியும்.

பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பட்டியலின அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இந்திய அரசு புறக்கணித்து வருவதைப்  பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பலமுறை நான் நினைத்ததுண்டு.  வெளிப்படையான சில காரணங்களுக்காக நான் அவ்வாறு செய்வதைத் தவிர்த்து வந்தேன்.  மற்ற பிரச்சனைகளில்  உங்கள் கவனம் ஆழ்ந்திருந்ததன் காரணமாக,  இந்தப் பிரச்சனையில் உங்கள் மௌனம் குறித்து நான் எந்தப் புகாரும் செய்யவில்லை. ஆனால், இந்தப் பிரச்சனையில் உங்களின் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சரிடமும், இலாகா ஒதுக்கப்படாத அமைச்சரிடமும்  இக்கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள என் பரிந்துரைகளையோ அல்லது இவற்றிலும் மேம்பட்ட நல்ல தீர்வுகளையோ  முன்னெடுக்க ஆணையிட்டு,  பட்டியலின மக்களின் துன்பங்களில் இருந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நான் அஞ்சுகிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாகக் கவனம் செலுத்தினால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

தங்கள் உண்மையுள்ள,
(கையொப்பம்)-பி.ஆர். அம்பேத்கர்.


பெறுநர்
மாண்புமிகு பண்டித ஜவஹர்லால் நேரு,
இந்தியப் பிரதமர்,
புது தில்லி.

````````````````



பிரதம மந்திரி
இந்தியா

பிரதமர்
புது தில்லி,
டிசம்பர் 25, 1947.

என் அன்பான டாக்டர் அம்பேத்கர்,

பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குப் பட்டியலின மக்களை வெளியேற்றுவது குறித்த உங்கள் டிசம்பர் 18 ஆம் தேதியிட்ட கடிதம் எனக்குக் கிடைத்தது.

பாக்கிஸ்தானிலிருந்து அவர்களின் இடம்பெயர்வுக்காக நாங்கள் எங்களால் இயன்றவரை அவர்களுக்கு உதவி வருகிறோம்.   அவர்கள் வெளியேறுவது, குறிப்பாக சிந்துவில் இருந்து,  வெளியேறுவது தடுக்கப்படுகிறது.  அங்குள்ள நம் உயரதிகாரி  தொடர்ந்து இப்பிரச்சனையை எதிர் கொள்கிறார்.

நீங்கள் குறிப்பிட்ட மற்ற பிரச்சனைகளை கிழக்கு பஞ்சாப் அரசுதான் தீர்க்க வேண்டும். பட்டியலின மக்கள் வெளியேறுவது  குறித்து நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம், மேலும் வெளியேறும்  பட்டியலின மக்களுக்கு அனைத்து உதவியும் வழங்கிட ஏற்பாடு செய்வோம்.

மிக முக்கியமாக கிழக்கு பஞ்சாப் அரசாங்கம் இது குறித்துப் பல தொல்லைகளை எதிர்கொண்டு திணறிவருவதால்  நமக்கு  கிழக்கு பஞ்சாப் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதில் சற்று சிரமங்கள் நேர்கின்றன.  இதுகுறித்து எனது தனிக்கவனத்தைச் செலுத்துவதை நான் மகிழ்ச்சியுடன் செய்வேன், அத்துடன் சிறப்பு இலாகா ஒதுக்கப்படாத  அமைச்சர்  ஒருவரிடம்  இப்பொறுப்பை ஒப்படைத்து  அக்கறையுடன் கையாள கேட்டுக் கொள்வேன்.

தங்கள் உண்மையுள்ள,
கையொப்பம்/- ஜவஹர்லால் நேரு


பெறுநர்
மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

````````````````


நன்றி: தமிழணங்கு
ஏப்ரல், 2023



#தமிழணங்கு, #Themozhi, #அம்பேத்கர்