குறளுக்கு உரிமை கோரல்
திருக்குறளின் சிறப்பு, நூலின் ஆசிரியர் யார் என்பதையும், அவர் பற்றிய குறிப்பாக அவருடைய காலம், இடம், சமயம், இனம் என எதுகுறித்தும் எக்குறிப்பையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடாமல் இருப்பது. வள்ளுவர் என்பவர் தமிழ் அறிந்தவர் என்பதையும் அவர் மக்கள் தம் வாழ்வில் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பி அவற்றைக் குறள் வெண்பாக்களாக எழுதிவிட்டுச் சென்றார் என்பதை மட்டுமே நாம் உறுதியாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் நூலின் வழியே கிடைக்கும் குறிப்புகள் மூலம் ஏதேனும் அவர் குறித்துத் தெரிந்து கொள்ள இயலுமா என ஆராய்வது ஆய்வாளர்களின் ஆர்வம். ஆனால் அது போன்ற தேடல்களைத் தடை செய்ய இயலாது. வள்ளுவரைத் தங்கள் இனம் என்றும், தங்கள் சமயம் என்றும் என்றும் அடையாளம் காணும் முயற்சிகள் தமிழ் ஆய்வுலகின் தொடர்கதை.
வள்ளுவர் ஒரு தமிழறிந்த ஆண் புலவர் என்பதையும், அறம் மிக்க வாழ்வை அவர் வலியுறுத்தினார் என்பதையுமே நாம் அவர் குறித்து உறுதியாகக் கூறக் கூடிய கருத்துகள்.
மழை மீதும், உழவு மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தார்;
முன்னோர் வணக்கத்தை ஏற்றுக் கொண்டார்;
ஊழ் என்பதன் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்;
இல்லறத்தைப் போற்றினார் துறவறத்தையும் மதித்தார்;
ஈகைக் குணத்தைப் போற்றினார், பிச்சை எடுப்பதை வெறுத்தார்;
கொல்லாமை, ஊனுண்ணாமை ஆகிய பண்புகளைப் போற்றினார்;
வாழ்வில் கல்வி, அன்பு, நட்பு, இல்வாழ்க்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார்;
பொய், களவு, கள், கொலை, காமம் (முறையற்ற உறவு/கணிகையர் உறவு) ஆகிய ஐந்தையும் தீய ஒழுக்கங்கள் என்றார்;
சினம் கொள்ளுதல், கடுஞ்சொல் கூறல், கேடு செய்தல், பற்று கொண்டிருத்தல், சூதாடுதல் ஆகியனவற்றைக் கண்டித்தார்;
முற்பிறவி, மறுபிறவி, ஏழ்பிறப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார் என்பதை அவர் கொள்கை நோக்குகளாக அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றின் மூலம் தெளிவாக அறிய முடியும்.
வள்ளுவர் தன் சமயத்தவர் என உரிமை கொண்டாட விரும்புபவர்களுக்கு ஆணித்தரமான குறிப்பு எதையும் அவர் விட்டுச் செல்லாததுடன், அவர் எவற்றையும் பொதுச் சொல்லால் சொல்லிச் செல்வதே பலர் அவருடைய பாடல் குறிப்புகள் மூலம் தங்கள் பிரிவில் அவரை அடக்கும் முயற்சிக்கு வழிகோலிட்டு விட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. முதல் குறள் குறிப்பிடும் "ஆதிபகவன்" யார் என்பதிலேயே கேள்விகள் தொடங்கிவிடுகின்றன. இந்திய நிலப்பரப்பில் தோன்றாத ஆபிரகாமிய சமயங்களும் கூட வள்ளுவரை உரிமை கொண்டாடும் அளவிற்கு வள்ளுவர்பால் ஆர்வம் கரை புரண்டு ஓடுவது இன்றைய நிலை. இவ்வாறிருக்க, இந்திய மண்ணின் வைதீக சிரமண சமயங்கள் வள்ளுவர் கருத்துக்களின் அடிப்படையில் அவரை உரிமை கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை. குறள் சொல்லும் கருத்துக்களைச் சீர் தூக்கிப் பார்த்தால் அவர் யார் என்ற குறிப்பு கிடைக்கக் கூடும்.
வைதீக சிரமண சமயங்களும் தமிழ் மண்ணுக்குப் புறச் சமயங்களே என்பதைத் தமிழர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வள்ளுவர் ஏதோ ஒரு சமயத்தில் பிறந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம் அதன் தாக்கமும் அவருக்கு இருந்திருக்கலாம். மெய்ப்பொருள் காண விழைந்த அவர் பின்னர் வேறு ஏதோ ஒரு சமயத்தையும் பின்பற்றியும் இருக்கலாம், அல்லது எந்தச் சமயமுமே எனக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கலாம். உலகைப் படைத்தவர் என்று எவரும் இல்லை (1.atheistic) என்றோ, அல்லது படைத்தவர் யார்? அப்படி என ஒருவர் உண்டா இல்லையா என்ற அக்கறை எனக்கில்லை (2.agnostic) என்ற பிரிவுகளின் கீழும் வள்ளுவர் நகர்ந்து இருக்கலாம். இந்திய மண்ணின் சமணம் பௌத்தம் எனப்படும் சிரமண சமயங்களை மெய்யியலாளர் முறையே முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்துவதைக் காண இயலுகிறது. ஆக, இறுதியில் வள்ளுவரின் கொள்கைகள் மூலம் அவர் வாழ்வின் சமய நிலைப்பாட்டைக் கண்டுணர இயலுமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
தனி வாழ்வில் அன்புடைமை, அருளுடைமை, அற வாழ்வு, பிறர்க்குத் தீங்கிழைக்காத வாழ்க்கை, நன்னெறி பின்பற்றல் ஆகிய அறப்பொருள் கருத்துக்களைக் கொண்டோ; அல்லது பொது வாழ்வில் மன்னனின் கடமை, மக்களுக்கு முறை செய்தல், பொருளாதாரக் கொள்கை, வரிவிதித்தல் போன்ற புறப்பொருள் கருத்துக்களைக் கொண்டோ வள்ளுவரை ஒரு சமயத்திற்குள் அடையாளப் படுத்தலாம் என்ற முயற்சி தெளிவான ஒரு முடிவைத் தராது. ஏன் எனில், மக்களை நோக்கிய நற்பண்புகளும், வாழ்க்கை நடைமுறைகளும் உலகின் அனைத்து மண்ணிலும் வழக்கமாகவே இருக்கும், அவை பொதுவான கருத்துகள்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)
என்பது உலகம் தழுவிய கோட்பாடு, அனைத்துச் சமயங்களும் தோன்றுகையில் இதை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டிருக்கும். சமயம் நிறுவனமயமாக்கப் பட்ட பிறகு அதன் கொள்கைகள் மாறிவிடுவதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (1062)
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (222)
என்ற இவை போன்று கடவுளைப் பொருட்படுத்தாமை, கடவுளையே கண்டிக்கும் முறை, மேலுலகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் கருத்துகள் உலகின் பல சமய நம்பிக்கைகளுக்கு அடிப்படை அல்ல. இது ஒருபுறமிருக்க, உலகின் 'அனைத்து' உயிர்களிடமும் அன்பு செலுத்துக, 'புலால் உண்ணுவதைத் தவிருங்கள்' என்று கூறும் சமயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதைத்தான் வள்ளுவரின் சமயம் எது என்ற தேடலுக்கு முனைவோர் கருத்தில் கொள்ள வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972), பரந்து கெடுக உலகியற்றியான் (1062) என்ற கூற்றுகளும்; புலால் மறுத்தல் (251-260) கருத்துகள் யாவும் வள்ளுவர் யார் என்று அறியும் நோக்கில் முன்னேற வேண்டிய திசை காட்டும் கைகாட்டிகள்.
கர்மவினை, மறுபிறவி, முக்தி, தர்மம் இவை யாவும் இந்திய மண்ணின் சமயங்களில் பொதுவாக உள்ளன. இவற்றுக்குப் பொருள் விளக்கம் தருவதில்தான் அவற்றிற்கு இடையே சிற்சில மாறுபாடுகள் உள்ளன. அது போன்றே, சொர்க்கம் நரகம் போன்றவையும் இச்சமயங்களில் உண்டு. இருப்பினும், இவற்றுக்கான விளக்கங்களும் வேறுபடும். இந்திரன் லட்சுமி போன்ற கடவுளரும் இச்சமயங்களில் உண்டு. ஆனால், அவர்களை அச்சமயத்தார் அணுகும் நோக்கமும் வேறுபடும். இந்தியச் சமயங்கள் யாவும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பல்வேறு நம்பிக்கைகளை, சடங்குகளை, வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொண்டவை என்பது சமய ஆய்வாளர்கள் கூறும் கருத்து. காலப்போக்கில் அச்சமயங்களின் பரிமாணங்களிலும் மாற்றம் ஏற்பட்டு; மக்களின் தேவையை, விருப்பத்தை உள்வாங்கித் தங்களுடையதாக்கிக் கொண்டு வளர்ந்தவை.
சொல்லப் போனால், அடிப்படையில் உலகைப் படைத்தவர் பற்றிய கருத்து, கொல்லாமை, புலால் மறுத்தல் கொள்கைகள் மட்டுமே இந்தியச் சமயங்களின் தனித்தன்மையை ஒவ்வொன்றிலும் வேறுபடுத்திக் காட்டும். இவை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளே ஆய்வாளர்களுக்கு அவர் யார் எனக் காட்டவும் கூடும். வள்ளுவர் காலத்தில் கடவுளைப் பற்றிய கருத்திலும் புலால்மறுத்தலிலும் தீவிரமாக இருந்தவை சிரமண சமயங்களான சமணமும் பௌத்தமும் என்பது வரலாறு. கொல்லாமை கருத்தில் பௌத்த சமயம், வைதீகம்-சமணம் சமயக் கொள்கைகளுக்கு இடைப்பட்ட வழியில் பயணித்தது.
தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி "THIRUKKURAL–An Abridgment of Sastras" (2017) என்ற நூலை வெளியிடுவதற்கு முன்னரே; ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற நூலை 1950இல் (சங்கத மேற்கோள்களுடன்) ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டுள்ளது; நூலின் உரையாசிரியர் பெயர் கொடுக்கப்படவில்லை, இது மடத்தின் வெளியீடு. சுருக்கமாக; திருக்குறள் வேதங்களின் சாரம் என்பதுதான் அந்த நூலின் நிலைப்பாடும். ஏன் 108 திருக்குறள்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது? இந்திய ஆன்மீகத்தில் 108 என்ற எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு, வைதீகச் சமயத்திற்கு மட்டுமல்ல சமண புத்த சமயங்களுக்கும் 108 என்ற எண் முக்கியமானதே. ஒவ்வொரு சமயமும் 108 என்பதற்கு ஒவ்வொரு காரணத்தை அடிப்படையாகக் கூறும். இந்நூலில் பெரும்பாலும் சனாதன கருத்து சாயல் கொண்ட குறள்கள் பொறுக்கி எடுக்கப்பட்டு வைதீகச் சமய தொடர்பு காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது "புலால் மறுத்தல்" என்பதற்கு இந்நூல் தரும் விளக்கத்தை மட்டும் காணலாம்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259)
[அறத்துப்பால், துறவறவியல், புலால் மறுத்தல்]
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது (மு. வரதராசன் உரை).
சனாதனத்தின் அடிப்படை செயலான வேள்வி குறித்த இக்குறளை வைதீகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் பொழுது, கொடுக்கப்படும் விளக்கமே களத்தில் எதிரணிக்குச் சார்பாக விளையாடும் ஆட்டக்காரரின் செயல்பாடு போல அமைகிறது. குறிப்பாகப் பௌத்தச் சமயத்திற்குச் சார்பாக அமைகிறது இந்நூல் தரும் விளக்கம். அந்த விளக்கத்தை அவ்வாறே இங்குக் கொடுப்பது தெளிவுதரும்.
"தமிழ்நாட்டில் பண்டை சங்கநூல்களில் புலால் உண்ணுவது ஆக்ஷேபிக்கப்படாதது மாத்திரமேயன்றி அது போற்றப்பட்டு மிருக்கிறது. பழைய தமிழ்மக்கள் புலாலருந்துவதைச் சிறப்பாகத்தான் கொண்டிருந்தார்கள். வேதங்களிலும் யாகம் முதலியவைகளில் மாம்சம் உபயோகப்படுத்தப்பட்ட தென்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதலால் திருவள்ளுவர் வைதிகக் கொள்கையினராயிருந்தாலும் முதன் முதலாக புலால் மறுத்தலைப் பிரசாரம் செய்ததற்குக் காரணம் என்னவெனின், அவர்காலத்தில் வடநாட்டிலிருந்து புத்த சமண மதப்ரசாரங்கள் தென்னாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. அப்போதிருந்த வைதிகமகான்கள் பௌத்தர்களுடைய அஹிம்ஸைக் கொள்கையைத் தங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.அதனால்தான் இக்காலத்து பிராமணர்கள் புலால் தவிர்த்திருக்கிறார்கள் போலும்.
ஆனால் இவ்விதம் அபிப்பிராயப்படுவது சரியாகத்தோன்றவில்லை. இங்கு அஹிம்ஸாதர்மத்தை உபதேசித்திருப்பது பௌத்தசமயக் கொள்கைகளை அனுசரித்து அன்று, வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் உபதேசிக்கப்பட்டிருக்கிற அஹிம்ஸாதர்மத்தை யனுசரித்தே ஆகும். அதெப்படியென்றால், வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் ஒருவன் கிரகஸ்தாச்ரமத்தை விட்டு ஸன்யாஸாச்ரமத்தை யடையும் போது உலகிவுள்ள எல்லாப்ராணிகளுக்கும் அபயப்ரதான ப்ரதிக்ஞை செய்து அஹிம்ஸா விரதத்தைக் கைகொள்ளும்படி உபதேசிக்கின்றன. பௌத்தமதமோ அம்மதத்தில் சேர்ந்தோர் எல்லாருக்குமே கொல்லாமையை உபதேசிக்கிறது. ஆனால் அந்த உபதேசம் அனுஷ்டானத்தில் விபரீதமாகவே முடிந்திருக்கிறது.... .... .... ஆதி புத்த பகவான்* மரணமடைந்ததே ஒரு சிஷ்யனுடைய வீட்டில் அவனால் பரிமாறப்பட்ட பன்றி மாம்சத்தை அதிகமாகத் தின்றுவிட்டதால் ஏற்பட்ட அதிசாரம் காரணமாகத் தான் என்று புத்தருடைய சரித்திரங்கள் கூறுகின்றன. (Vide Sacred Books of the East Vol XI page 71-73) பிறர் கொன்றதைத் தாம் சாப்பிட்டால் தவறில்லை என்ற கொள்கையை நம் நாயனார் கீழ்வரும் குறளில் பரிஹசித்திருக்கிறார் :-
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (256)
(என்ற குறளுக்குப் பொருள் விளக்கம் அளித்துவிட்டு; தொடர்ந்து.....)
நமது வேதசாஸ்திரங்களோ பொதுவாக எல்லாமக்களுக்கும் பூர்ண அஹிம்ஸாதர்மத்தை உபதேசிக்கவில்லை. நாலாவது ஆச்ரமமாகிய ஸன்யாஸாச்ரமத்திற்கு மாத்திரம் உயிருள்ள ஒரு செடியினுள்ள இலையைக்கூடக் கிள்ளக்கூடாது என பூர்ண அஹிம்ஸாதர்மம் உபதேசிக்கிறது. வர்ணாச்ரமங்களின் படிகளையனுசரித்து அஹிம்ஸா தர்மமும் படிப்படியாக கடுமையாக்கப் பட்டிருக்கிறது.... ["திருக்குறள் நூற்றெட்டு" 1950, பக்கம் 56-57] என்று தொடர்கிறார் உரைகாரர்.
(*முதல் குறள் விளக்கத்தில் 'ஆதிபகவன்' என்பதை கீதையின் கண்ணனுடன் தொடர்புப்படுத்தியவரே இங்குப் புத்தருக்கு அச்சொல்லைப் பயன்படுத்துகிறார் !!!!!)
உண்மையில் இது ஒரு மிக நல்ல வாதம், உரிமை கோரல் வழக்கைத் தெளிவாக்கிவிட்டது. வைதீகர்கள் வேள்வியில் உயிரினங்களைப் பலியிட்டனர் என்பது வேதத்தில் பதிவாகி உள்ளது என்றால்; 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்ற வகையில் உணவுக்கொள்கை வைத்திருக்கும் பௌத்தர்களை வள்ளுவர் கண்டிக்கிறார் என்றால்; இந்த வாதத்தின் முடிவாகக் கொல்லாமை, புலால் மறுத்தலை அறிவுறுத்தும் திருக்குறளை சமணக் கொள்கைகளின் தாக்கம் கொண்ட நூல் என்றுதான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 310, 311 - 12.11.2025, 19.11.2025]





