Tuesday, August 19, 2025

வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும்

வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும் 



ஔவையின் தனிப்பாடல் ஒன்று 'நான்கு கோடி பாடல்' என்று அறியப்படுகிறது. அரசன் இட்ட கட்டளைப்படி ஓர் இரவுக்குள் நான்கு கோடிப் பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ மன்னனின் அவைக்களப் புலவர்கள் கலங்கியதாகவும், அப்பொழுது, ஔவையார் நான்கு வரிகளைக் கொண்ட இப்பாடலைச் சொல்லி, இப்பாடல் சொல்லும் வாழ்வியல் நெறி ஒவ்வொன்றும் கோடிப் பொன்னுக்குச் சமம் என்று கூறியதாகவும் அக்கதை அறியப்படுகிறது. 

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
          மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில் 
          உண்ணாமை கோடி பெறும்; 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
          கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
          கோடாமை கோடி பெறும்.
(ஒளவையார் தனிப் பாடல்:42)

இப்பாடலில் ஒளவையார் வாழ்வியல் நெறிகளாக நான்கு செயல்களைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்குச் சமம் எனக் கூறுகிறார். அவை முறையே; 
தன்னை மதிக்காதவர்களின் வீட்டுக்குச் சென்று அவ்வீட்டு வாசலை மிதிக்காமல் இருப்பது.
உண்ண வருமாறு வருந்தி அழைக்காதவர்களின் வீட்டில் உண்ணாமல் இருப்பது.
கோடி கொடுத்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்திருப்பது.
எத்தனை கோடி கொடுத்தாலும், தான் சொன்ன சொல் தவறாமல் இருப்பது. 
'மிதியாமை', 'உண்ணாமை' ஆகிய அறிவுரைகள் செய்யாதீர் என்று எதிர்மறை கருத்துகளாகவும், நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்! சொன்ன சொல் தவறாமல் வாழ்! என்பன உடன்பாட்டுக் கருத்துகளாகவும் அமைந்துள்ளன. 
இந்த வரிகள், ஒருவரது குடிப்பிறப்பும், நற்பண்புகளும் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பதை உணர்த்துகின்றன. 

வாழ்வியல் நெறிகளை வகுத்தளித்த வள்ளுவர் ஔவையார் போல எவையெவை கோடி மதிப்புப் பெறுபவை  என்று  கூறுகிறார் என்று அறிய விரும்பி  திருக்குறளை ஆராய்ந்தால் வள்ளுவத்தில் 10 குறள்கள் கோடி பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் இரண்டு குறள்கள்   (குறள்கள் - 554,  559) கோடி என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் மன்னனின் வளைந்த செங்கோல் (கோல்கோடி)  என்ற கொடுங்கோன்மை ஆட்சியைக் குறிப்பிடுகின்றன, இவற்றில் கோடி  என்பது வளைந்த என்ற பொருள் தருபவை. இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டால் எட்டு குறள்கள்  பின்வரும் கருத்துகளைச் சொல்கின்றன:
1. அறிவற்றவரின் தீங்கு விளைவிக்கும் நட்பை விட, அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகை அதைவிடக் கோடி மடங்கு மேலானது (816); 
2. சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பால் விளையும் தீங்கை விடப் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துகோடி மடங்கு நன்மையானது (817); 
3. தவறாக வழிநடத்தும் அமைச்சரை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலானது (639); 
4. இரக்கச்சிந்தையுடன் ஒருவர் பொருளுதவி செய்ய முன்வந்தாலும் அவரிடமும் சென்று இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும் (1061); 
5. கொடுத்து உதவும் பண்பில்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் இருந்தாலும் அதனால் எவருக்கும் பயனில்லை (1005); 
6. பலகோடிப் பொருள் கொடுத்தாலும் நற்பண்பு நிறைந்த குடியில் பிறந்தவர் தன் குடிப்பெருமையைக் குலைக்கும் செயலைச் செய்ய மாட்டார் (954); 
7. ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றிக் கோடிக்கும் மேலான எண்ணங்களுடன் மனக் கோட்டைகள் கட்டுவார்கள் (337);  
8. ஒருவர் முயன்று கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்தாலும் அவரிடம் எது தங்குமோ அதன் பயனை மட்டுமே அவரால் துய்க்க இயலும் (377). 

கோடி என்ற சொல் இடம் பெறும்  குறள்களும் அவற்றுக்கு மு. வரதராசனார் வழங்கிய தெளிவுரையையும்  அடுத்துக் காணலாம்: 
         1.  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
          ஏதின்மை கோடி உறும்.    (குறள் - 816)
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். 

          2. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
          பத்தடுத்த கோடி உறும்.   (குறள் - 817)
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

          3. பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
          எழுபது கோடி உறும்.   (குறள் - 639)  
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.  

          4. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
          இரவாமை கோடி உறும்.   (குறள் - 1061)
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும். 

          5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
          கோடியுண் டாயினும் இல்.    (குறள் - 1005)
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

          6. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
          குன்றுவ செய்தல் இலர்.   (குறள் - 954)
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. 

          7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
          கோடியும் அல்ல பல.   (குறள் - 337)
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள். 

          8. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
          தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (குறள் - 377)
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் என்று ஔவையும்; அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் என்று வள்ளுவரும் நற்குடி பிறந்தவர் சிறப்பைப் பாராட்டுகிறார்கள்.  


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 297 &  298  -  13.08.2025 & 20.08.2025]  


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #முக்குடை, #Themozhi 

"வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும்"  - என்ற இக்கட்டுரை "முக்குடை" மலரின் செப்டெம்பர் இதழில் வெளியாகி உள்ளது.  மறு பதிவிட்ட இதழாசிரியருக்கு என் மகிழ்ச்சியையும்  பணிவும் அன்பும் நிறைந்த என்  நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 






-------------------------------------------