குறள் சொல்லும் கிழக்கு
இன்று கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று திசைகளை நாம் அடையாளம் காண்கிறோம். சிந்துவெளி ஆய்வாளர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் இதைச் சிந்துவெளியின் திராவிடப் பரிமாணம் என்பதற்குச் சான்றாகக் காட்டி இருப்பார். இந்த மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு என்பதற்கும் சிந்துவெளி நகர வடிவமைப்பில் இருக்கும் முக்கியமான தொடர்பினை "சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்" என்ற அவருடைய நூலில் விளக்கி இருப்பார். சிந்துவெளி நகர்கள் இருபகுதிகளை உள்ளடக்கியவை என்றும், மேற்கே உயரமான பகுதியில் கோட்டை போன்ற கட்டிடங்கள் அமைந்த நகரின் பொது நிர்வாகக் கட்டமைப்பும்; அதன் அருகில் கிழக்கே உள்ள தாழ்ந்த பகுதியில் பொதுமக்கள் வாழ்ந்த குடியிருப்புகள் இருந்தன என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இயற்கையிலேயே மேற்கில் உயர்ந்த நிலப்பகுதி இல்லாவிட்டாலும் செயற்கையாக அப்பகுதியை உயர்த்தி கோட்டை அமைத்து சிந்துவெளி மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.
"சிந்துவெளி ஒரு வன்பொருள் என்றால் சங்க இலக்கியம் அதைப் புரிந்து கொள்ள உதவும் ஒரே மென்பொருள்" என்ற கருத்தையும் முன்வைக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் "சிந்துவெளியைப் புரிந்துகொள்ள உதவும் திறவுகோல் சங்க இலக்கியம்தான்" என்று சங்க இலக்கியம் சிந்துவெளிப் பண்பாடு தொடர்பு குறித்து முடிந்த முடிவாகவும் குறிப்பிடுவார். இதற்குப் பல சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டும் ஆர். பாலகிருஷ்ணன், திசைகள் குறித்த சான்றாக சங்க இலக்கிய வரிகளையும் மேற்கோள்களாகத் தருவார்.
குறுந்தொகைப் பாடல்(337) காட்சியில், தலைவி வளர்ச்சியுறும் முலையையும், அவளுடைய தலையின் தழைத்த கூந்தல் தாழ்ந்து தொங்கும் அளவிற்கு இளமைப்பருவம் கொண்டவள் என்பதை;
"முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே"
என்ற வரிகள் கூறும். இதில் 'கிழக்கு' என்ற சொல் திசையைக் குறிக்காது. மாறாக, தரையைத் தொடுவது போல தலைவியின் கூந்தல் 'தாழ்ந்து' கீழே நீண்டு தொங்குவதைக் குறிக்கிறது. கிழக்கு என்பது இங்கு கீழ் என்ற பொருள் கொள்கிறது. (தரையின் கீழ் இருப்பதால் அச்செடி கிழங்கு எனப்படுகிறது என்று வேர்ச்சொல் ஆய்வுகள் விளக்குவது போல, கிழக்கும் அவ்வாறான அடிப்படையில் உருவான சொல்.)
சங்க இலக்கியத்தில் 'கிழக்கு என்ற சொல் மூன்று முறை இடம் பெறுகிறது. அவை கீழ் என்ற பொருளில் மட்டுமே இடம் பெறுகின்றன. மேலே காட்டப்பட்ட குறுந்தொகை பாடல் தவிர்த்து;
பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப (நற். 297/1)
(பாலானது கீழே பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்க)
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய (பதி. 36/10)
(போர்க் களத்தில் பறவை கீழே தரை இறங்கும் காட்சி)
ஆகிய பாடல்களில் வரும் 'கிழக்கு இருப்ப', 'கிழக்கு இழிய' ஆகிய சொற்களும் 'கீழே' என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தில் திசையைக் குறிப்பிடும் கிழக்கு மேற்கு என்பதற்கு, முறையே குண, குட (எடுத்துக்காட்டு: குணபுலம். குடவாயில்) என்ற சொற்களே எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கிழக்கு மேற்கு என்ற சொற்களால் திசைகள் குறிப்பிடப்படவே இல்லை. குறிப்பாக, மேற்கு என்ற சொல் சங்கப்பாடல்களில் இடம் பெறவும் இல்லை.
குண குட கடலா எல்லை (புறம். 17/2; மது. 71)
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி (நற் 153/1; நற் 346/1)
குண கடல் கொண்டு குட கடல் முற்றி (மது. 238)
போன்ற பாடல் வரிகள் மூலம் சங்கப் பாடல்களில் திசைகள் குறிப்பிடப்பட்ட முறையை அறியலாம்.
வள்ளுவரும் திருக்குறளில் கிழக்கு என்ற சொல்லை 'கீழ்' என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார்.
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை. (குறள் - 488)
பகைவர்க்கு முடிவுகாலம் வந்து அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும் என்பது காலம் அறிந்து செயல் படுவது குறித்து வள்ளுவர் வழங்கும் அறிவுரை.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 296 - 06.08.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi