Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Tuesday, December 2, 2025

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

      பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மை உண்டாகப் பெறின் (54)
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதி நிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? என்று இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் மு.வரதராசன்.

கற்பென்பது ஒருத்திக்கு  ஒருவன் என்று வாழும் இல்லற வாழ்வைக் குறிப்பதாகப் பொருள் கூறப்படும்.  ஆனால் ஆணுக்குக் கற்பு  என்ற கட்டுப்பாடு இல்லை என்பது இன்றுவரை நடைமுறை வழக்கு. கைம்பெண் ஆனவள் வேறு ஆணுடன் இல்லறம் தொடரும்  நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அவளை இறந்த கணவனுடன் சேர்த்து உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் முறை முன்னர்  இருந்தது.  ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான சட்டத்தை அவர்கள் இயற்றும் வரை இந்தியாவின் பல பகுதிகளில்  'சதி' என்ற இந்தக் காட்டுமிராண்டி சடங்கு வழக்கமாகவே இருந்தது.

சென்ற நூற்றாண்டில் பெண்ணுரிமைக்குக்  குரல் கொடுத்த புரட்சியாளர்களான பெரியார், பாரதியார் போன்றோர் பெண்களுக்கு  மட்டும் கற்பை  வலியுறுத்துவதை ஏற்றவர்கள்  இல்லை. கற்பை இருபாலருக்கும் பொதுமைப்  படுத்தினார்கள்.  
      "கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
      கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"
என்று  முழங்கினார் பாரதி. "சந்திரிகையின் கதை" என்று அவர் எழுதிய புனைகதை மூலம்  விசாலாட்சி என்ற இளம் கைம்பெண் ஒருத்திக்கு மறுமணம் குறித்தும் எழுதி இருப்பார்.

அதற்கும் முன்னர் ஆரியப் பண்பாட்டின் தாக்கமாகப் பெண்கள் கற்பு என்பது குறித்து மூளைச் சலவை செய்யப் பட்டார்கள் என்பதை  இக்கால 'இசட் தலைமுறை' (Generation Z) அறிந்திருக்க மாட்டார்கள். கற்பு என்பதை 'பதிவ்ரதாத்வம்' அல்லது பதிவிரதம்  என்று சாத்திரங்களில் விளக்கினார்கள்.  "பதிவ்ரதாத்வம் - நாரீணாம் - ஏதத் -ஏவ - ஸநாதனம்" என்று மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 249ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் கூறுகிறதாம்.

ஆண்கள் மேலோகம் செல்ல வேண்டுமானால் (உத்தம கதி அடைதல்) அவர்களுடைய ஊனக்கண்ணுக்குத் தெரியாத கடவுளை சாத்திரங்கள் கூறுவது படி  மனதில் உருவகித்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வணங்க வேண்டும்.  ஆண்கள் கவுளை வழிபடுதல், வேள்வி செய்தல், யக்ஞம், தானம்  என்ற பல செய்தே கடவுள் அருளைப் பெற வேண்டி இருக்கிறது.
 
ஆனால் பெண்களுக்கு இத்தகைய கவலையே இல்லை.  அவர்கள் தங்கள் கண்ணெதிரே காட்சி தரும் கணவனையே தெய்வம் என வழிபாடு செய்து சொர்க்கம் போகலாம்  என  கடவுளின் ஆணையான சாத்திரங்கள் கூறுகின்றனவாம். கணவனைத்  தெய்வமாக மதித்து அவனுக்குப் பணிவிடை செய்தாலே எளிதாகச் சொர்க்கம் போகலாம். அக்கணவன் கேடு கெட்டவனாக இருந்தாலும் கூட கடவுள் அவன் வழியே மனைவிக்கு அருள் தந்து அவளைக்  கடவுள் கடைத்தேற்றுவாராம். அதாவது மற்றவர்களைவிட பதிவ்ரதாஸ்தரீகளே எளிதில்  கடைத்தேறும் பாக்கியம் பெற்றவராகி யிருக்கிறவர்கள் என்று சாத்திரம் பெண்களுக்கு வழி காட்டுவதாகக் கூறப்படுகிறது.

"பெண்டிர்க்குப் பதியே தெய்வம்; வேறு புகலிடம் இல்லை" என மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 250ஆவது அத்தியாயம் 25ஆவது சுலோகம் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.  உடலை வருத்தி மிகுந்த துன்பங்களுடன் ஓர் ஆண் அல்லது கணவன் அடையும் பயனை,  கணவனை  வணங்கி பூஜை செய்வதினாலேயே பெண்ணானவள் எளிதில் அடைந்துவிடுவாள்  என்று  அதற்கு அடுத்து வரும் மகாபாரத அனுசாஸனிகபர்வம் பர்வம் 250ஆவது அத்தியாயம் 26ஆவது சுலோகமும் கூறுகிறதாம்!!!

பெண்களுக்கு ஏதோ சிறப்புச் சலுகை அளிப்பது போல ஆசை வார்த்தைகள் எல்லாம் காட்டி,  மனைவியைக் கணவனுக்குக் குற்றேவல்  செய்ய வைத்து ஆண்கள்  எவ்வாறு சுகமாக வாழ்ந்திருக்கிறார்கள், அதற்குச் சாத்திரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று சிந்தித்தால் பெண்கள் ஏமாற்றப் பட்ட நிலை கண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.  



மணமான பெண்கள் கணவனையே தெய்வமாகத் தொழ வேண்டும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் பதிவிரதம் அல்லது  கற்பு. இந்நிலை மேன்மை அடையும் பொழுது மனதில் முதிர்ச்சி ஏற்படுகிறது மனம் ஒருமைப் படுகிறது. அப்போது கடவுளின் அருளால்  பெய் என்றால் மழை பெய்யக் கூடிய சக்தி கிடைக்குமாம்.  அதாவது, பெய்யெனப் பெய்யும் மழை. பெரிய யோகிக்கும் கூட பெரிய முயற்சி மூலம்தான் கிட்டும் இந்தச் சக்தி பதிவிரதைக்கு எளிதில் கிட்டிவிடுகிறதாம். அடேயப்பா ?? என்ற வியப்புதான் வருகிறது. ஏமாற்றுவதற்கும் ஓர் எல்லை இல்லையா ?  மனம் கூசாமல்  இதை எல்லாம் சாத்திரம் என்று கூறுபவர்கள் மீது மோசடி  வழக்குதான் போட வேண்டும்.

மாதம் மும்மாரிப் பெய்கிறதா என அக்காலத்துத் தெருக்கூத்து,  நாடகங்களில் அரசர் அமைச்சரைக் கேட்பதாகக் காட்சிகள் வரும். பராசக்தி படத்தில் அது ஓர் எள்ளல் காட்சியாக "மந்திரி நமது- மாநகர் தன்னில்- மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்ற வசனம்  இடம் பெறுவதை நினைவு கூரலாம்.
     "வேதமோதிய வேதியர்க்கோர்மழை,
     நீதிதவறா நெறியினர்க் கோர்மழை,
     காதல்கற்புடை மங்கையர்க்கோர் மழை,
     மாதம் மும்மழை பெய்யெனப் பெய்யுமே"
         (விவேகசிந்தாமணி பாடல்)
என மூன்று மழைகளில் ஒரு மழை பெண்களின் கற்புடன் தொடர்பு படுத்தி இருப்பதைக் காணலாம்.  நாட்டில் வறட்சி என்றால் பெண்களிடம் கற்பில்லை என்று பழி போடக்கூடிய இக்கட்டும் இதனால்  உள்ளது அல்லவா?

மழைபொழிதல் குறித்து சுற்றுச்சூழலியல், அறிவியல் பாடங்களில் அறிந்ததைப் பெண்கள் வாழ்வில்  தொடர்புப்படுத்தி தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
--


கட்டுரைக்கு உதவிய நூல்: ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற தலைப்புடன் 1950ஆம் ஆண்டு ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்ட நூல்.

நன்றி :
பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .
- முனைவர் தேமொழி  
சக்தி இதழ் [டிசம்பர் 2025]
https://archive.org/details/sakthi-202512
பக்கம்: 76-78


Tuesday, October 28, 2025

கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா

கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா

பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 (Asian Youth Games 2025)இல் இந்தியாவின் இளையோர் மகளிர் கபடி அணியின் சார்பாகப் பங்கேற்ற சென்னை கார்த்திகா சிறப்பாக விளையாடி இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், வெற்றியைப் பெற்று பதக்கத்தை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. இறுதிச் சுற்றில் ஈரானை 75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிகண்டது. 


தொடரின் தொடக்கமாக வங்காளதேசத்திற்கு எதிராக 46–18; தாய்லாந்து அணிக்கு எதிராக 70–23; இலங்கை அணிக்கு எதிராக 73–10; ஈரான் அணிக்கு எதிராக 59–26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, இந்தத் தொடரில் அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவும் ஈரானும் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் மீண்டும் விளையாடின. தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி அசைக்க முடியாத ஒரு முன்னிலையை வகித்து,75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்த ஆட்டத்தில் தனித்துத் தெரியுமாறு திறன் காட்டியவர்களுள் ஒருவர் 17 வயதான சென்னை கார்த்திகா. இதுதான் கார்த்திகா உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பெற்ற முதல் பதக்கமும் கூட. இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வெல்ல விரும்பிய இவரது கனவு இதனால் நிறைவேறியுள்ளது. இந்திய ஆண்கள் அணியும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஈரானை வென்றதால் கபடியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. இது இந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறன் குறித்த ஒளிமயமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. 

வெற்றிபெற்ற சென்னை கார்த்திகா மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்று இந்தியாவிற்காகப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. சென்ற 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம், பீகார் மாநிலத்தில் நடந்த இந்தியாவிற்கான மகளிர் தேசிய 33வது சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடரில், சென்னை கார்த்திகா தமிழ்நாடு அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று பீகார் அணியை 33-32 புள்ளிக் கணக்கில் அப்பொழுது வென்றார். அந்த விளையாட்டுப் போட்டியிலும் இவர் விளையாட்டுத் திறமைக்காக ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணிக்குத் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த தங்கமகள் சென்னை கார்த்திகாவிற்குப் பாராட்டு. 


----------------












கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா
முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-nov-25/page/11/mode/2up
நன்றி: சக்தி நவம்பர் 2025 (பக்கம்: 11-12)


#சக்தி, #பெண்ணியம், #Themozhi 

Tuesday, September 30, 2025

பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்

பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்


கட்டுமானங்களின் தனிச்சிறப்பு என்ற அடிப்படையில் இன்றைய உலகில் பல பாலங்களுக்குப் பற்பல சிறப்புகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதையும் இருக்கும்.  அவ்வாறான சிறப்புப் பெற்ற பாலங்களுள் ஒன்றுதான் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள  வாட்டர்லூ  பாலம் (Waterloo Bridge).  இதன் சிறப்பு, இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையோர் (70 விழுக்காட்டினர் அல்லது சற்றேறக்குறைய 350 பணியாளர்கள்) பெண்கள் என்பதுதான். எனவே, இது பலகாலம் 'லேடீஸ் பிரிட்ஜ்' (The Ladies Bridge) என்றே அழைக்கப்பட்டு வந்தது.  தேம்ஸ் ஆற்றின் படகோட்டிகளும், பயணிகளும் லேடீஸ் பிரிட்ஜ் என்றே அழைத்தாலும், இது பெண்களால் கட்டப்பட்டப் பாலம் என்ற வாய்மொழிக் கதை மக்களிடையே இருந்தாலும்,  இதற்கு வரலாற்றுச் சான்றுகள் தரப்படாத காரணத்தால் இது ஒரு கட்டுக்கதை என்ற எண்ணமே மக்களிடையே நிலவி வந்தது. அண்மையில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் பெண்கள் பங்கேற்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.




இந்தப் பாலத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தப் பாலத்தின் தொடக்கம் 19ஆம் நூற்றாண்டு. லண்டனின் ஸ்ட்ரான்ட் பகுதியில் 'ஸ்ட்ரான்ட் பிரிட்ஜ்' (the Strand Bridge) என்ற பெயரில் 1810–1817 காலகட்டத்தில் போக்குவரத்துப் பயணிகளிடம் பயன்பாட்டிற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்துடன் இப்பாலம் கட்டப்பட்டது.  ஒன்பது வளைவுகளைக் கொண்டதாக, சற்றொப்ப 2500 அடிகள் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட பாலம் இது.   ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பொழுது இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் நாட்டு ஆட்சியாளர் நெப்போலியனை வாட்டர்லூ போரில் 1815ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தது. எனவே அதைக் கொண்டாடும் இரண்டாம் ஆண்டு விழாக் காலத்தில்,  1817இல் பாலம் திறக்கப்பட்டபொழுது வெற்றியைச் சிறப்புச் செய்யப் பாலத்தின் பெயர் வாட்டர்லூ பிரிட்ஜ் என மாற்றப்பட்டது.  

காலப்போக்கில் ஆற்றின் நீரோட்டத்தால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலத்தின் அடிப்பகுதியின் கட்டுமானம் அரிக்கப்பட்டு பாலம்  வலுவிழந்து மறுசீரமைப்பு  செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.  கில்பர்ட் ஸ்காட் (Sir Giles Gilbert Scott) என்பவர் புதிய பாலத்தை வடிவமைத்தார்.  பாலத்தின் கட்டுமானம் தொடங்கிய பொழுது அதன் அருகே இணையாக ஒரு தற்காலிக இரும்புக் கிராதி பாலம் எழுப்பப்பட்டு, வாட்டர்லூ  பாலத்தின் பகுதிகளையே மீண்டும் மறுசுழற்சி செய்யும் திட்டத்துடன் பழைய பாலத்தின் கட்டுமானம் தகர்க்கப்பட்டது.  இந்நேரத்தில்தான் எதிர்பாராத விதமாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த  ஆண்கள் யாவரும் போர்முனைக்கு அழைக்கப் பட்டார்கள்.  ஆனால், கட்டுமானப் பணிகளும் நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

வேறுவழியின்றிப் பெண்களைக் கட்டுமானப் பணிக்கு அமர்த்தினார்கள்.  இந்த நிலை உலகம் முழுவதுமே போரில் ஈடுபட்ட நாடுகளின் நிலையாக அக்காலத்தில் இருந்தது.  வழக்கமான போர்க்காலப் பணியாக மருத்துவச் செவிலியர், தொலைபேசி இணைப்பாளர், அலுவலகச் செயலாளர்  போன்ற பணிகளைத் தவிர்த்து ஆண்களின் பணியாகக் கருதப்பட்ட தொழிற்சாலைப் பணியாளர், கட்டுமானப் பணியாளர், ஊர்திகள் இயக்குபவர், விமானம் ஓட்டுபவர் போன்ற புதிய பணிகளில் எல்லாம் பெண்கள் பங்கேற்றனர். அக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டும் 25,000 மகளிர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தரவுகள் சொல்கிறது. அதாவது, கட்டுமானப் பணியில் மூன்று விழுக்காட்டினர் அளவில் பெண்கள் பங்கேற்று இருந்தனர்.  இவர்கள் வெல்டிங், கான்கிரீட் கலவை தயாரித்தல் போன்ற வேலைகளையும் செய்தனர்.  இக்காலத்தில் சராசரியாகக் கட்டுமானப் பணியில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள் ஈடுபடுவதுடன் இதை ஒப்பிட்டால், சென்ற நூற்றாண்டில் கட்டுமானப் பணியில் மகளிர் பங்களிப்பின் தீவிரம் புரியும்.  

பணியில் அமர்த்தப்பட்ட பட்ட பெண்களுக்கு நீண்ட நேர வேலை, கழிப்பிடம் ஓய்வறை போன்ற வசதிகளும் குறைவு. இருப்பினும், ஆண்களைவிடக் குறையான ஊதியம் என்பது மட்டுமல்ல, போர் முடிந்து ஆண்கள் நாடு திரும்பினால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வீடு திரும்ப வேண்டும் என்ற உண்மையையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.  போர் தொடர்ந்தது, ஒரு முறை வாட்டர்லூ பாலமும் நாஜிப் படையின் குண்டு வீச்சிற்கு  உள்ளானது. இருந்தும்  கட்டுமானம் தொடர்ந்தது. தொடர வேண்டியது நாட்டின் கௌரவம், அது  மக்களுக்கு நம்பிக்கை தருதல் போன்றவற்றுடன், அப்பாலம்  போர்க்கால இராணுவத்திற்குத் தேவையானதாகவும் இருந்தது,  பெண்கள்  தொடர்ந்து பணி புரிந்தனர்.  இக்கட்டுமானப் பணி 1937இல் தொடங்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரினால் பணி சற்றே தொய்வடைந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.  ஆனால், அங்குதான் ஒரு கசப்பான திருப்பம்.  



பாலம் மீண்டும் திறக்கப்பட்ட பொழுது விழாவில் பங்கேற்ற இங்கிலாந்தின் துணை முதல்வர் ஹெர்பர்ட் மோரிசன் (Herbert Morrison) அவ்விழாவில் ஆற்றிய உரையில்,  பாலம் உருவானதில் பெண்களின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடப் படவே இல்லை. ஆண்களுக்குப் பாராட்டு கூறப்பட்டது. அவ்வாறே எங்கும் இப்பாலக் கட்டுமானத்தில் மகளிர் பங்கேற்றதற்கான எந்த ஒரு வரலாற்றுக் குறிப்பும் இடம் பெறவில்லை.  கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம் பீட்டர் லிண்ட் அண்ட் கம்பெனி  (Peter Lind & Company) அதை மூடிவிட்டு, தங்கள் வர்த்தகத்தையும் முடித்துக் கொண்டு நிறுவனத்தைக் கலைத்தவுடன் அதில் இருந்த ஆவணங்களும்  மறைந்து போயின.  

மக்கள் வழக்கில் மட்டும் காரணம் தெரியாத வகையில் லேடீஸ் பிரிட்ஜ்  என்ற பெயர் உள்ளதைக் கவனித்த வரலாற்று ஆய்வாளர் கிறிஸ்டின் வால் (Christine Wall) அருங்காட்சியகத்தின் (The Archives of The National Science and Media Museum) சேமிப்பில் இருந்த பழைய திரைப்படங்களையும் படங்களையும் தேடிப் பார்த்து,  பாலத்தின் பணியில் ஈடுபாடிருந்த சில பெண்களின் படங்களைக் கண்டெடுத்தார். அதில் பெண்கள் வெல்டிங் வேலை செய்யும் படங்கள் கிடைத்தன. அப்பெண்களில் ஒருவரின் பெயர் 'டாரத்தி' (Dorothy) என்றும் அடையாளம் காணப்பட்டது.  இதனால் லேடீஸ் பிரிட்ஜ்  என்று வாட்டர்லூ  பாலம் அழைக்கப்பட்ட காரணமும், அதன் கட்டுமானப் பணியில் பெண்கள் ஈடுபட்டு இருந்ததும் கட்டுக்கதையல்ல உண்மை என்பது நிறுவப்பட்டது. வரலாற்றில்  மறைந்து போன, மறைக்கப்பட்ட மகளிரின் பங்களிப்பு மீண்டும் வெளிப்பட்டது இப்பாலத்தின் சிறப்பு.

இதன் வரலாற்றுச் சிறப்பிற்கு மதிப்பளிக்க, பாலத்தில் இங்கிலாந்தின் வரலாற்றுச் சின்னம் பொறிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் பள்ளி பாடத் திட்டங்களில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதத் துறையில் பெண்களின் பங்களிப்புகள் (STEM-courses) மறைக்கப்படுவதைக் கண்டித்து இங்கிலாந்து பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்த பொழுது,  லேடீஸ் பிரிட்ஜ் பாலத்தில் பதாகைகளுடன் எதிர்ப்பைக் காட்டி அடையாளப்  போராட்டமாக ஊர்வலம் சென்றனர்.  



புதியதாக எழுப்பப்பட்ட வாட்டர்லூ  பாலத்திற்கு  முன்பிருந்த பழைய பாலத்தை 1810  இல் ஜான் ரென்னி (John Rennie) வடிவமைத்திருந்தார். புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் கிளாட் மோனெ (claude monet)  1903இல்  அப்பாலத்தை வரைந்த வண்ண ஓவியம் இன்று அனைவராலும் பாராட்டப்படும் ஓவியமாக விளங்குகிறது.  




அதிகாலை மூடுபனியின் இடையே பாலத்தின் தோற்றமானது  கனவுலகில் காணும் பாலம் போல அந்த ஓவியத்தில் தோற்றமளிக்கும்.  அதே பழைய  வாட்டர்லூ  பாலத்தின் அமைப்பின் அடிப்படையில்தான் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலம் கட்டப்பட்டது.


சான்றாதாரங்கள்:
1.  The original Waterloo Bridge
https://www.thehistoryoflondon.co.uk/the-original-waterloo-bridge/

2.  The story behind the iconic 'Ladies' Bridge' in London
https://www.ice.org.uk/news-views-insights/inside-infrastructure/the-story-behind-the-bridge-in-london-known-as-the-ladies-bridge


பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்
 — முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-october-2025/page/71/mode/2up
நன்றி: சக்தி அக்டோபர் 2025 (பக்கம் :72-77)


#சக்தி, #பாலம், #வாட்டர்லூ, #பெண்ணியம், #Themozhi 

Saturday, June 21, 2025

பெண்ணியப் பார்வையில் கலைஞரின் திருக்குறள் உரை



பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மன்னராட்சி காலத்தில் அரசர்களை வழிநடத்த எழுதப்பட்ட திருக்குறள், குடியாட்சி காலத்திலும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மக்களின் பிரதிநிதியாக அரசாட்சி செய்பவருக்குப்  பொருந்தி வருவதில்தான் குறளின் சிறப்பு இருக்கிறது.  இருப்பினும் மனைவி, பெண்கள்  இவர்களைக் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேரல் அதிகாரங்களில்  உள்ள குறள்கள்  இக்காலத்தில் ஏற்க இயலாவண்ணம் பெண்களுக்கு  மதிப்பு தராமல் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பெண்ணியவாதிகள் பலர் இந்த அதிகாரங்களைப் பற்றிய கசப்புணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில்  முதன்மை இடம் பெரியாருக்குத்தான் உள்ளது. வள்ளுவரைக் கேள்விகேட்ட, மறுதலித்த துணிச்சலான எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இவர் திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் போதிக்கும் 30 குறள்களையும் நீக்கிவிடவேண்டும் எனப் பேசியவர். பெண்ணியம், சமத்துவம், பகுத்தறிவு எனப் பேசிய எழுத்தாளர்களான பாரதிதாசனும், கலைஞர் மு. கருணாநிதியும்  இக்குறள்களுக்கான  உரைகளைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க  முனைந்தனர்.  இக்கட்டுரை  வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேரல் ஆகிய அதிகாரங்களின் குறள்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரான முத்தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்கள் உரை எழுதிய முறையைக் குறிப்பிட்டு அந்த நன்முயற்சியைப் பாராட்டுகிறது.
 
வாழ்க்கைத் துணைநலம்:
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் மனைவி குறித்துத்தான் கூறப்படுகிறது என்பதை; 1. மாண்புடையள், 2. மனைமாட்சி இல்லாள், 3. இல்லதென் இல்லவள், 4. பெண்ணின் பெருந்தக்க யாவுள, 5. கொழுநன் தொழுதெழுவாள், 6. சொற்காத்துச் சோர்விலாள், 7. மகளிர் நிறைகாக்கும், 8. பெண்டிர் பெருஞ்சிறப்பு போன்ற முதல் 8 குறள்கள் நேரடியாகக் குறிக்கும். 
 
இருப்பினும்; இறுதி 2 குறள்களும்  (குறள் - 59, 60)  மேலோட்டமாக பெண்ணைக் குறிக்கும்.  ஆனால் இன்றைய உலகில் சமத்துவக்   கருத்தை மதிப்பவர்கள், இவை பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமே பொருந்தும் வகையில் பொருள் கொள்ள விரும்புவார்கள்.  ஓர் ஒப்பீட்டிற்காக வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் இறுதி  இரு குறள்களுக்கும்  எழுதப்பட்ட உரைகள் இங்குக் கொடுக்கப்படுகின்றன.
 
      புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
      ஏறுபோல் பீடு நடை.  
      [இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 59]
 
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
—மு. வரதராசன்
 
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
—சாலமன் பாப்பையா
 
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
—மு. கருணாநிதி   
 
இதில் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானது, ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  நல்ல கணவன் அமையாத  மகளிர் துயர் குறித்து, அவள் எதிர்கொள்ளும் அவமானம் குறித்து வள்ளுவர் ஏன் எழுதவில்லை என்று இப்பொழுது வள்ளுவரைக்  கேட்க வாய்ப்பில்லை.  ஆனால் நாம் அந்த எதிர்பார்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வரலாம், அதாவது தக்கவாறு பொருள் கூறுவதன் மூலம். அடுத்து;
 
      மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
      நன்கலம் நன்மக்கட் பேறு.  
      [இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 60]
 
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
— மு. வரதராசன்
 
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.  
— சாலமன் பாப்பையா
 
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
— மு. கருணாநிதி
 
இதிலும் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானது, ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  குடும்பத்தின் பெருமைக்கு அவர்களின் நற்பண்பும், நல்ல மக்கட் செல்வங்களும் அமைவது என்று, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது.
 
ஆனால் இது வள்ளுவரின் எண்ணம் அல்ல.  இருப்பினும்,  குறளின்  அதிகாரத்தைக்  கணக்கில் கொள்ளாமல், இவற்றைத்  தனிப்பட்ட குறள்கள் என்ற அணுகுமுறையில் பொருள் கொண்டால் இக்காலத்திற்கும் அவை செவ்வனே பொருந்தும்.
 
பெண்வழிச்சேரல்:
பெண்வழிச்சேரல் அதிகாரத்தில்; மனைவிழைவார் (901), இல்லாள்கண் (903), மனையாளை (904), இல்லாளை (905), இல்லாள் (906) என்று குறிப்பிடும் குறட்பாக்களின் மூலமாக 'மனைவி சொல்லைக் கேட்பவன் மடயன்' என்ற கருத்தை வலியுறுத்தித்தான் வள்ளுவர் எழுதியுள்ளார். இதில் எவருக்கும் வள்ளுவர் நோக்கம் குறித்து மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. இவ்வாறு  5 குறட்பாக்களில் நேரடியாக மனைவி என்றே குறிப்பிட்ட வள்ளுவர்; மற்றும் ஐந்து குறள்களில், பெண்  (902, 907, 908, 909, 910) என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். ஆனால் அவையும் மனைவியைக் குறிக்கும் குறள்கள்தான். பொம்பளை பேச்சைக் கேட்கிறான், பொண்டாட்டி  பேச்சைக் கேட்கிறான் என்று இன்றும் இழிவாகத்தான் மனைவி சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவரைக் கூறுவது உலக வழக்கம்.
 
இந்த அதிகாரத்திற்கு கருணாநிதி உரையைப் படிக்கும் பொழுது மனைவி சொல்லிற்கு  மதிப்பு தருவதில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது என்பதைக் காண  இயலும்.  அதனால்,  "பண்பில் குறைபாடு கொண்ட" மனைவி சொல்வதைக் கேட்டு நடப்பது சரியல்ல என்று உரை எழுதுகிறார். எல்லா மனைவிகளும், எல்லாப் பெண்களும் பண்பற்றவர்கள் இல்லையே.  குறைபாடு கொண்ட மனிதர்கள் உலகில் உள்ளார்கள் என்பதுதான் உண்மையும் கூட.  அந்த அடிப்படையில் ஆணவம், அகங்காரம் கொண்டு தன் வாழ்க்கைத் துணையை  மதிக்காமல் நடக்கும் மனைவியின் சொல்லுக்கு அவன் மதிப்புத் தரத் தேவையில்லை என்று பொருள் கூற முற்படுகிறார் என்பது தெளிவு.
 
மனைவி என்ற நேரடியாக வள்ளுவர் குறிப்பிடாத பொழுது, மாறாக பெண் என்று மட்டும் குறிப்பிடும் பொழுது,  அந்தப் பெண்ணை மனைவி என்று கொள்ளத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு, பொதுவாகப் பெண்கள், அதிலும் ஆணவம் அகங்காரம் கொண்ட பெண்கள் மட்டுமே என்ற கோணத்தில் கருணாநிதி உரை எழுதுகிறார்.  இது மீண்டும் மனைவியை இளக்காரமாகக் கருதும் போக்கைத் தவிர்க்கும் மற்றொரு முறை.
 
      அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
      பெண்ஏவல் செய்வார்கண் இல். 
      [நட்பியல்; பெண்வழிச்சேரல்;  குறள்- 909]
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் 'மனைவியின் ஏவலைச்  செய்வோரிடத்தில்' இல்லை.
—மு. வரதராசன்
 
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் 'மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம்' இருக்கமாட்டா.
—சாலமன் பாப்பையா
 
'ஆணவங்கொண்ட பெண்கள்' இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
—மு. கருணாநிதி
 
பொதுவாக, பகுத்தறிவு, சமத்துவம் என்ற வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த அதிகாரங்கள் மிக உறுத்தலாக இருக்கும். தங்கள் கொள்கைக்கு மாறுபட்டவையாக அவை இருப்பதை உணர்வார்கள்.   அதனால் வள்ளுவர் மேல் குற்றம் காண்பதைத் தவிர்த்து, காலத்திற்குப் பொருத்தமான விளக்கம் தர முற்படுவார்கள். இலக்கியவாதிகளான கருணாநிதி, பாரதிதாசன் போன்றோர் குறளுக்கு உரை எழுதும் முறையை இந்தப் பிரிவில் அடக்கலாம்.
 
ஒருவர் பெண்ணாகப் பிறந்துவிட்டார் என்பதாலேயே அவர் சிந்தனைக்கு மதிப்பு தரவேண்டாம் என எண்ணுவது எத்தகைய அறமற்ற செயல் என்று மனதில் தோன்றுவதை நேரடியாகச் சொல்ல இலக்கியத்தின் மீது பற்று அற்ற பெரியார் போன்றவராலேயே முடிந்தது.  “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால், இக்கருத்துகளைக் கூறியிருக்கமாட்டார்” என்று,  தான் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்' நூலின் 'வள்ளுவமும் கற்பும்' என்ற இரண்டாவது அத்தியாயத்தில் பெரியார் குறிப்பிட்டிருப்பார். பண்டைய தமிழ்ப் பண்பாட்டின்படி 'யார் சொன்னாலும் குற்றம் குற்றமே' என்று பெரியாரால் சொல்ல முடிந்தது. ஆனால், மற்ற எழுத்தாளர்களால் அவ்வாறு நேரடியாக உண்மையைக் குறிப்பிட முடியாமல் போனது. 
 
பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்பது காலத்திற்கு ஒவ்வாத கருத்து; இதனைப்  பள்ளியில் முதல் வகுப்பில் ஔவை எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடம் படித்தவர்களால் மறுக்க இயலாது. வள்ளுவர் கருத்திற்கு நேரடியாக உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி,  காலத்திற்குத் தக்கவாறு  உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி வள்ளுவரின் அறிவுரையை ஏற்று "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டால், வள்ளுவரின் குறள்களில் சில காலத்திற்கு ஏற்றவை அல்ல என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது.
 
வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேரல் அதிகாரங்கள்  - வள்ளுவர் காலத்துக் கருத்துகள் கொண்டவைதான்.  அவற்றில் உள்ள குறள்கள் பல இக்காலத்திற்குப்  பொருந்தாது என்றால் அந்த  உண்மையை நாம் ஏற்க வேண்டும். பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டார், அக்காலத்தில் அவர் ஆணையை ஏற்று நடக்க வேண்டிய சூழல் அரசுப் பணியாளர்களுக்கு இருந்தது. அத்தகைய சூழலில் பெண்ணின் சொல்லைக் கேட்காதே  என்று  கூறும் குறள்  பொருந்துமா? இந்தியாவிற்கு அந்நாட்களில் பின்னடைவு ஏதும் ஏற்பட்டதா? அவர் காலத்தில்தான் இந்தியச் சட்டவரையறையின்  முகப்புரையில், 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்து திருத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இதனைக் கருத்தில் கொண்டால் கருணாநிதி உரை ஏற்கத்தக்கது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் ஒன்றிற்குக்  காலத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்வதைக் குறை காண்பதற்கு வழியில்லை. இந்த அதிகாரங்களுக்குக் கலைஞர் கருணாநிதி உரைகள் சிறந்தவை. காலத்திற்கேற்பப் பொருந்துபவை.
 
நன்றி: "கனடியன் ரேஷனலிஸ்ட்" இதழ், ஜூன் 2025


#கனடியன் ரேஷனலிஸ்ட், #திருக்குறள், #கலைஞர், #பெண்ணியம், #Canadian Rationalist,  #Themozhi