தமிழ் இலக்கியங்களில்
ஔவையாருக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு. அவருக்கும் அதியமான் நெடுமான்
அஞ்சிக்கும் இருந்த நட்பு,
நினைக்கையில் எவர் நெஞ்சையும் நெகிழச் செய்வது. நமக்கு ஊடகங்கள் வழி
காட்டப்பட்ட வயது முதிர்ந்த ஔவைப் பாட்டி வடிவத்திலிருந்து வேறுபட்ட தோற்றம் ஒன்றை
நமக்கு அறியத் தருகிறது அவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று. பாடல்
குறிப்பிடுவது ஒயிலான இளநங்கையான ஔவையை.
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும்
அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்ஐயும் உளனே!
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, பாடியவர்:
ஒளவையார்.
புறநானூற்றுப் பாடல்: 89. என்னையும் உளனே!
பாடலின் பொருள்:
அழகிய மணிகள்
கோர்க்கப்பெற்ற அணிகளை அணிந்த இடையை வளைத்து நிற்கும், மை
தீட்டிய கண்களையும் ஒளிபொருந்திய நெற்றியையும் கொண்ட நாட்டிய நங்கையே, உன் பரந்து விரிந்த இந்த நாட்டில் போர் செய்வோரும்
இருக்கின்றனரா? என்று என்னைக் கேட்கும் பெரும்
படையைக் கொண்ட வேந்தரே!
அடிக்கும் கோலைக் கண்டு அஞ்சாது சீறும் பாம்பினைப் போன்ற வலிமை
கொண்ட இளைய வீரர்களும் எம்மிடம் உள்ளனர். அதுமட்டுமல்ல பொது மன்றில் கட்டித்
தொங்கவிடப்பட்டுள்ள முரசில் காற்று மோதி ஒலி எழுப்புகையில் அது போர்ப்பறையின்
முழக்கம் என எண்ணித் துடித்து வீறு கொண்டெழும் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற என்
அரசனும் உள்ளான் அறிவீராக!!. என்று ஔவையார் தன் நண்பர் மன்னர் அதியமான்
நெடுமான் அஞ்சியின் வீரத்தைப் பெருமைப் பட எடுத்துரைக்கிறார் எதிரி நாட்டு
வேந்தருக்கு.
பாடலுக்கு விளக்கவுரையும், செய்யறிவு
ஓவிய உருவாக்கமும் - தேமொழி