ஆய்வுத் தலைப்பு:
அறிவியல் சொல்லும் மெய்ப்பாடுகளும் தொல்காப்பிய மெய்ப்பாடுகளும்
குறிசொற்கள்:
தொல்காப்பியம், மெய்ப்பாடுகள், உணர்ச்சிகள், எண்வகை மெய்ப்பாடுகள், 'புளட்சிக்' உளவியல் கோட்பாடு.
ஆய்வுச் சுருக்கம்:
உலக மொழிகளில் மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த தனிச்சிறப்புக் கொண்டது தொல்காப்பியம். ஒருவரின் உள்ளத்து உணர்ச்சிகள் பிறருக்குப் புலனாகுமாறு புற உறுப்புகளில் தோன்றுவதே மெய்ப்பாடு ஆகும். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியல் எட்டு வகையான மெய்ப்பாடுகளை வகைப்படுத்துகிறது. அவற்றை, 1) சிரிப்பு, 2) அழுகை, 3) இழிபு, 4) வியப்பு, 5) அச்சம், 6) பெருமிதம், 7) சினம், 8) மகிழ்ச்சி என எட்டு வகை மெய்ப்பாடுகளாகத் தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார். எண்வகை மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றும் நான்கு நான்கு (8x4=32) காரணிகளின் மூலம் 32 வழிகளில் மேற்கூறிய உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இன்றைய அறிவியலும் உளவியல் கோட்பாடுகளின்வழி (Psychological Theories) மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகளை விளக்குகிறது. இன்றைய அறிவியல் உலகம் வகைப்படுத்தி விளக்கும் உள்ளத்தின் உணர்வுகளின் வெளிப்பாட்டைத் தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்வது; குறிப்பாக, 'புளட்சிக்' கோட்பாட்டுடன் (Plutchik's theory) உளவியல் நோக்கில் ஒப்பிடுவதன் மூலம் ஓர் ஒப்பீட்டு ஆய்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
முன்னுரை:
உலக மொழிகளில் காணப்பெறும் பன்மொழிகளின் இலக்கண நூல்களுடன் ஒப்பிடுகையில், மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே நூல் தொல்காப்பியம் மட்டுமே. மற்ற மொழிகளின் இலக்கண நூல்கள் சொல், தொடர் மற்றும் பாடல்களுக்கு இலக்கணம் வகுத்தாலும் மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுக்கவில்லை. இப்பண்பினால் தொல்காப்பியம் இலக்கண நூல்களுள் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றது.
தொல்காப்பியமெய்ப்பாடுகள்:
பொருளதிகாரத்தில் ஆறாவதாக அமைந்திருக்கும் மெய்ப்பாட்டியல் எண்வகையான மெய்ப்பாடுகளை வகைப்படுத்துகிறது. மெய் - உடம்பு; பாடு - படுதல், தோன்றுதல். அஃதாவது, ஒருவரின் உள்ளத்து உணர்ச்சிகள் பிறருக்குப் புலனாகுமாறு புறஉறுப்புகளில் தோன்றுவதே மெய்ப்பாடு ஆகும். ஒருவரின் மெய் வேறுபாடு அறிந்து மற்றவர் ஒழுக வேண்டிய திறப்பாடு பற்றி வகுக்கும் தொல்காப்பியர் 1) நகை 2) அழுகை 3) இளிவரல் 4) மருட்கை 5) அச்சம் 6) பெருமிதம் 7) வெகுளி 8) உவகை என எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பட்டியலிடுகிறார்.
"நகையே அழுகை
இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப" (தொ.
பொ. 247)
அத்துடன்;
"பண்ணைத் தோன்றிய எண்நான்கு பொருளும்
கண்ணிய புறனே நால்நான்கு என்ப" (தொ.பொ. 245)
என்ற மேற்கண்ட நூற்பாவின்படி எண்வகை மெய்ப்பாட்டுக்களன்கள்(இடங்கள்) ஒவ்வொன்றும் நான்கு நான்கு பொருள்களில் வரும் என்றும் தொல்காப்பியர் மேலும் விளக்குகிறார். அதாவது, (8 x 4 = 32) மேற்கூறிய பொருள்களின் மூலமாக உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இவற்றை விரிவாகவும் கீழ் வரும் நூற்பாக்களின்வழி அறியலாம்.
1. "எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப்பட்ட
நகை நான்கு என்ப" (தொ. பொ. 248)
நகை மெய்ப்பாடு,
இகழ்தல், இளமை, அறியாமை, ஒன்றை மற்றொன்றாக மாற்றி உணர்தல் ஆகிய நான்கு சூழல்களிலும் வெளிப்படும்.
2. "இழிவே இழவே அசை வேவறுமையென
விளிவில்
கொள்கை அழுகை நான்கே" (தொ. பொ. 249) அழுகை மெய்ப்பாடு,
இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை ஆகிய நான்கு காரணங்களாலும் அழுகை ஏற்படும்.
3. "மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற
வந்த இளிவரல்நான்கே" (தொ. பொ. 250) இளிவரல்
மெய்ப்பாடு,
முதுமை, நோய், துன்பம், எளிமை ஆகிய நான்காலும் இளிவரலாகிய இழிபு ஏற்படும்.
4. "புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மகிமை சாலாமருட்கைநான்கே" (தொ. பொ.
251) மருட்கை மெய்ப்பாடு,
அறிந்திராத புதுமை, அளவிலா பெருமை, அளவில் மிகக் குறைந்த சிறுமை, ஒன்று பிறிதொன்றாகும் ஆக்கம் ஆகிய நான்காலும் வியப்புத் தோன்றும்.
5. "அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்
பிணங்கல்
சாலா அச்சம் நான்கே" (தொ. பொ. 252) அச்ச மெய்ப்பாடு,
கண்ணுக்குப்புலப்படாமல் இருந்து வருத்தும் சூர் முதலான தெய்வங்கள், கொடிய விலங்குகள், கள்வர், அரசன் ஆகிய நான்கினாலும் அச்சம் ஏற்படும்.
6. "கல்வி தறுகண்புகழ்மை கொடை எனச்
சொல்லப்பட்ட
பெருமிதம் நான்கே" (தொ.பொ.253) பெருமித மெய்ப்பாடு,
கல்வி,அஞ்சாமை, கிடைக்கும் புகழ், வழங்கும் கொடை ஆகிய நான்காலும்பெருமிதச் சுவை தோன்றும்.
7. "உறுப்பறைகுடிகோள் அலை கொலை என்ற
வெறுப்ப
வந்த வெகுளி நான்கே" (தொ. பொ. 254) வெகுளி
மெய்ப்பாடு,
உறுப்புக்களை அறுத்தல், துன்புறுத்தல், வைதல், அறிவால் பெற்ற புகழை அழித்தல் ஆகிய நான்கு இடங்களிலும் வெறுக்கத்தக்கச்சினம் தோன்றும்.
8. "செல்வம் புலனே புணர்வு விளையாட்டு
என
அல்லல் நீத்தே உவகை நான்கே" (தொ. பொ.
255) உவகை மெய்ப்பாடு,
செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சி, மேன்மையான அறிவுப் புலமை, உள்ளம் ஒத்தவரோடு இணைதல், கூடி ஆடும் விளையாட்டு ஆகிய நான்காலும் மகிழ்ச்சி ஏற்படும்.
மேலே கூறப்படும் இந்த எட்டு வகையான மெய்ப்பாடுகளின் அகச்சுவைக் கூறுகளாவன; 1. உடைமை 2. இன்புறல் 3. நடுவுநிலை 4. அருளல் 5. தன்மை 6. அடக்கம் 7. வரைதல் 8. அன்பு 9. கைம்மிகல் 10. நலிதல் 11. சூழ்ச்சி 12. வாழ்த்தல் 13. நாணுதல் 14. துஞ்சல் 15. அரற்று 16. கனவு 17. முனிதல் 18. நினைதல் 19. வெரூஉதல் 20. மடிமை 21. கருதல் 22. ஆராய்ச்சி 23. விரைவு 24. உயிர்ப்பு 25. கையாறு 26. இடுக்கண் 27. பொச்சாப்பு 28. பொறாமை 29. வியர்த்தல் 30. ஐயம் 31. மிகை 32. நடுக்கு ஆகிய இந்த 32 மெய்ப்பாடுகள் (தொ. பொ. 256) மன உணர்வு மெய்ப்பாடுகளின் கீழ் இடம் பெறுகின்றன.
அடிப்படை
மனித உணர்ச்சிகள் முகத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. மெய்ப்பாட்டைத்
தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் என்பதை இன்றைய அறிவியல் உலகமும் உளவியல்
கோட்பாடுகளின்வழி (Psychological Theories) விளக்குகிறது. உளவியல் என்பது மக்களின் செயல்கள், நடத்தைகள், உள்ளத்திறன்கள் பற்றி அறிய உதவும் ஓர்
அறிவியல். ஆகவே, இன்றைய
அறிவியல் உலகம் வகைப்படுத்தி விளக்கும் அவ்வுள்ளத்தின் நிகழ்வுகளை; தொல்காப்பியம் காட்டும்
புறத்தார்க்கும் புலப்படுவதும் வெளிப்படக்கூடியதுமான மெய்ப்பாடுகளை உளவியல் நோக்கில் ஒப்பிட்டு ஆராய்வது, குறிப்பாக, 'புளட்சிக்' கோட்பாட்டுடன் (Plutchik's theory) ஒப்பிட்டு
ஆராய்வது என்ற அடிப்படையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
தொல்காப்பியர்
– இராபர்ட் புளட்சிக் ஓர் ஒப்பீடு:
உளவியல் ஆய்வில், மனித உணர்வுகளை வகைப்படுத்துவதில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க உளவியல் அறிஞர் 'இராபர்ட்புளட்சிக்' (Robert Plutchik) கையாண்ட வகைப்பாட்டு முறைகளோடு ஒப்பிடலாம். 'இராபர்ட்புளட்சிக்' உணர்வுகள்கோட்பாடு (Robert Plutchik's Theory of Emotions) விலங்குகள் மற்றும் மனிதர்களின் உணர்ச்சிகளின் கருத்தாக்கத்திற்கான அடித்தளத்தை நிறுவியது.
உணர்வுகளின் வெளிப்பாடு குறித்த இவரது உளவியல் கோட்பாட்டின் அடிப்படை, மனவளர்ச்சிக் கோட்பாடு (psycho-evolutionary theory of emotions); இக்கோட்பாட்டின் அடித்தளம் என்பது ஓர் உயிரினத்தின்உணர்வுகள், சமூகச் சூழ்நிலை மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு ஏற்ப தகவமைத்து வெளிப்படுத்தப் படுபவை என்று விளக்கமளிக்கிறார் புளட்சிக், இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உணர்ச்சிகளை வேறுபடுத்துகிறது.
புளட்சிக் எட்டு முதன்மை உணர்வுகளை அடையாளம் கண்டு அவற்றை "சக்கரம்" வடிவத்தில் மாறுபட்ட எதிரெதிர் இணையாக ஒழுங்கமைத்துக்காட்டினார். மகிழ்ச்சி — சோகம், கோபம் — பயம், நம்பிக்கை — வெறுப்பு, ஆச்சரியம் — எதிர்பார்ப்பு, இந்தஅமைப்பை உணர்வுகள் சக்கரத்தில் காணலாம் (படம் 1).
இவரும்தொல்காப்பியர் கூறிய எண்வகை மெய்ப்பாடுகள்போன்று;1. மகிழ்ச்சி(Joy) 2. அழுகை(Sadness) 3. இழிபு/வெறுப்பு(Disgust), 4. வியப்பு (Surprise) 5. அச்சம்(Fear) 6. சினம்(Anger) 7. எதிர்பார்ப்பு(Anticipation) 8. நம்பிக்கை(Trust)ஆகிய எட்டு முதன்மை உணர்ச்சிகள் இருப்பதாக வரையறுக்கிறார்.
'புளட்சிக்' உளவியல் கோட்பாட்டு குறிப்பிடும் எட்டு உணர்வுகளும் தொல்காப்பியர் காட்டும் சிரிப்பு, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சிஆகிய எட்டு வகைமெய்ப்பாடுகளுடன் பெருமளவிற்கு இசைந்து செல்வதைக் காணலாம்.
தாம்
குறிப்பிடும் முதன்மை உணர்வுகள் தோன்றக் காரணம் எவையெவை என்பதையும் கீழ்வருமாறு
விவரிக்கிறார் புளட்சிக்:
மகிழ்ச்சி:
மகிழ்ச்சி, மகிழ்ச்சி மற்றும் நேர்மறையான அனுபவங்களுடன்
தொடர்புடையது.
அழுகை:
இழப்பு,
ஏமாற்றம் மற்றும் எதிர்மறை உணர்வுகளுடன் தொடர்புடையது.
வெறுப்பு:
விரும்பத்தகாத அல்லது புண்படுத்தும் ஒன்றின் மீதான வெறுப்பிலிருந்து எழுகிறது.
வியப்பு:
எதிர்பாராத ஒன்று நடக்கும்போது ஏற்படும் உணர்வு.
அச்சம்:
ஆபத்து,
அச்சுறுத்தல் மற்றும் உயிர்வாழும் உள்ளுணர்வுகளுடன் தொடர்புடையது.
சினம்:
விரக்தி, எரிச்சல் மற்றும் வலுவான
எதிர்வினைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு:
எதிர்கால நிகழ்வுகளை எதிர்நோக்குவதை உள்ளடக்கியது.
நம்பிக்கை:
மனநிறைவு மற்றும் அமைதியின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.
இவ்வாறாக
புளட்சிக் முதன்மை உணர்வுகள் தோன்றுவதற்கான காரணங்கள் உணர்வுகளுடன் தொடர்புடையவை
எனக் கூறுகிறார்.
• தொல்காப்பியர் கூறும் எட்டு முதன்மை மெய்ப்பாடுகளின்
எண்ணிக்கை - 32 (8 x 4 = 32)
• மெய்ப்பாட்டுநிலைக்களன்கள் (தொல். பொ. 248 —தொல். பொ. 255) நூற்பாக்களில் விளக்கப்படுகின்றன.
மேலும், புளட்சிக்கின் கோட்பாடு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை (primary
and secondary) உணர்ச்சிகளின் அடித்தளத்தை நிறுவியது. இரண்டாம் நிலை
உணர்வுகள் முதன்மை உணர்வுகளின் கலவையாகும். அவை மிகவும்
சிக்கலானதாகவும்நுணுக்கமாகவும் இருக்கும் என்கிறார் புளட்சிக்.
எடுத்துக்காட்டாக;
பொறாமை
உணர்வு: சோகம் மற்றும்
கோபம் ஆகிய உணர்வுக் கலவைகளின் வெளிப்பாடு
அவமான
உணர்வு: பயம் மற்றும் வெறுப்பு ஆகிய உணர்வுக் கலவைகளின் வெளிப்பாடு
குற்ற
உணர்வு: மகிழ்ச்சி மற்றும் அச்சம் ஆகிய உணர்வுக் கலவையின் வெளிப்பாடு
ஆர்வம்:
நம்பிக்கை மற்றும் வியப்பு ஆகிய உணர்வுக்
கலவையின் வெளிப்பாடு.
என்பது புளட்சிக் உணர்வுகளை வகைப்படுத்தும் முறைக்குத் தரும் விளக்கம்.
இது எண்வகை
மெய்ப்பாட்டுக்களன்கள் தவிர்த்து மெய்ப்பாட்டிற்குரிய பிறநிலைக்களன்கள் என்று
தொல்காப்பியர் வகைப்படுத்தும் 32 மனஉணர்வு மெய்ப்பாடுகளுடன் (தொல். பொ. 256) தொடர்புடையதாக விளக்கமாக அமைந்திருப்பதையும்
காணலாம். அவர் காட்டும் இரண்டாம் நிலை உணர்வுகள் தொல்காப்பியர் வகைப்படுத்தும்
மனஉணர்வு மெய்ப்பாடுகளுக்கு இணையானது எனவும் கூறலாம். இவ்வாறாக அண்மைய அறிவியல்
உலகம் கூறும் உளவியல் கோட்பாடுகளுடன்தொல்காப்பியரின்மெய்ப்பாட்டியல்கருத்துகளை
ஒப்பிட்டு ஆராய இயலும்.
படம் – 1 : தொல்காப்பியர் காட்டும் எட்டு மெய்ப்பாடுகள்
படம் – 2 : புளட்சிக்கின் எட்டு முதன்மை உணர்வுகள்
படம் – 3 : தொல்காப்பியர் காட்டும் எட்டு மெய்ப்பாடுகளும் அவற்றுக்கான
மெய்ப்பாட்டு நிலைக்களன்களும்
படம் – 4 :
புளட்சிக்கின் எட்டு முதன்மை உணர்வுகள்
தோன்றுவதற்கான காரணங்கள்
முடிவுரை:
உணர்வுகளைக் குறித்த அறிவும் ஆய்வும் வரலாற்றில் பலகாலமாகவே
இருந்தாலும்; உளவியல் என்ற முறையான ஓர் அறிவியல் துறையின் கீழ்
அறிவியல் நோக்கில் அறியவும் ஆராயவும்முற்பட்ட காலம் வெகு அண்மையில் 19 ஆம் நூற்றாண்டில்தான். பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதியில் (1879)
லீப்ஜிக்கில் வுண்டின் ஆய்வகத்தை நிறுவியதன் மூலம் உளவியல் ஓர் அறிவியல் துறையாக
வெளிப்பட்டது.
உளவியல்
கூறும் நவீன அறிவியல் கொள்கைகளுக்கும்கோட்பாடுகளுக்கும்
இணையான கருத்தாக்கங்கள் 2500
ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தமிழ் இலக்கண நூலானதொல்காப்பியத்தில் காணக் கிடைப்பது
மிக வியப்பானது. அறிவியல் என்னும் ஒரு
துறைக்குத் தேவையான நுண்ணிய கூர்ந்த கவனிப்பும், பார்த்தவற்றை
ஆவணப்படுத்தி நுணுகி ஆய்ந்து
விளக்கமளித்து அவற்றை ஆவணப்படுத்தும்
அறிவியல் போக்கும் பழந்தமிழர்களிடையே இயல்பாக அமைந்து இருந்ததையே இந்த ஒற்றுமை
காட்டுகிறது.
தொல்காப்பியநூற்பா குறிப்பிடும் சிரிப்பு, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என்ற இந்த எட்டு வகை உணர்வுகளும் அல்லது மெய்ப்பாடுகளும் தமிழருக்கு மட்டுமன்றி உலக மனித இனத்தில் உள்ள எவருக்குமே பொதுவாக அமைந்தவை. அவற்றை இலக்கண நூலின் பொருளதிகாரத்தின் பகுதியாக்கிய சிறப்பு தொல்காப்பியரின் அறிவு மேன்மையைக் காட்டுகிறது .
சுவை எனவும் குறிப்பிடப்படும் மெய்ப்பாடுகள் எட்டு என வரையறுத்த தொல்காப்பியர்; தான் குறிப்பிடும் எட்டு மெய்ப்பாடுகள் அல்லது சுவைகள் ஒவ்வொன்றும் அவை பிறப்பதற்கான நான்கு நிலைக்களன்களையும் காட்டியுள்ளார். எனவே, எட்டு சுவைகள்பிறப்பதற்கு அடிப்படையாக முப்பத்திரண்டு நிலைக்களன்கள் தொல்காப்பியரால் குறிப்பிடப்படுகிறது. புளட்சிக்கின் கோட்பாடும் இந்த வகையிலேயே உளவியல் விளக்கம் தருவதைக் காணமுடிகிறது.
வெவ்வேறு
பண்பாட்டு மாறுபாடுகள் உணர்ச்சி அனுபவங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகளை
வடிவமைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
இருப்பினும் இது போல உணர்வுகளைப் பகுத்தாயும் புளட்சிக்கின் கோட்பாடும், தொல்காப்பியர் கூறும்
மெய்ப்பாடுகளுக்கும் உணர்வுகளின் அடிப்படைப் புரிதலை வழங்குகிறது என்பதில்
மாற்றுக் கருத்து இருக்க
வழியில்லை.
சான்றாதாரங்கள்:
தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் நூற்பாக்கள்
தொல்காப்பியம் உரைவளம், பொருளதிகாரம்: மெய்ப்பாட்டியல், தொகுப்பும் குறிப்பும் ஆ . சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998
Theories of Emotion (Emotion: Theory, Research, and Experience Vol. 1), Robert Plutchik, Henry Kellerman. Academic Press, 1980.
Plutchik,
R. The nature of emotions: Human emotions have deep evolutionary roots, a fact
that may explain their complexity and provide tools for clinical practice. Am.
Sci. 2001, 89, 344–350.
பின்னிணைப்பு:
தொல்காப்பியம் பொருளதிகாரம்மெய்ப்பாட்டியல்நூற்பாக்கள்
‘உய்த்துணர்வு
இன்றித்தலைவரு பொருளின்
மெய்ப்பட
முடிப்பது மெய்ப்பாடு ஆகும்,’
— தொல். பொ. 516
‘பண்ணைத்தோன்றியஎண்நான்கு
பொருளும்
கண்ணியபுறனேநால்நான்குஎன்ப’
— தொல். பொ. 245
‘நகையே
அழுகை இளிவரல்மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப’
— தொல். பொ. 247
‘எள்ளல் இளமை பேதைமை மடம் என
உள்ளப்
பட்ட நகைநான்குஎன்ப.’
— தொல். பொ. 248
‘இளிவேஇழவேஅசைவே வறுமை என
விளிவுஇல்
கொள்கை அழுகை நான்கே.’
— தொல். பொ. 249
‘மூப்பேபிணியே
வருத்தம் மென்மையோடு
யாப்புற
வந்த இளிவரல்நான்கே.’
— தொல். பொ. 250
‘புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா
மருட்கைநான்கே.’
— தொல். பொ. 251
‘அணங்கேவிலங்கேகள்வர்தம்இறைஎனப்
பிணங்கல்
சாலா அச்சம் நான்கே.’
— தொல். பொ. 252
‘கல்வி தறுகண்இசைமைகொடைஎனச்
சொல்லப்
பட்ட பெருமிதம் நான்கே.’
— தொல். பொ. 253
‘உறுப்பறைகுடிகோள்அலைகொலை என்ற
வெறுப்பின்
வந்த வெகுளி நான்கே.’
— தொல். பொ. 254
‘செல்வம் புலனேபுணர்வுவிளையாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே.’
— தொல். பொ. 255
மெய்ப்பாட்டிற்குரியபிறநிலைக்களன்கள்-
சிறப்பில்லாமெய்ப்பாடுகள்
ஆங்கவைஒருபால்
ஆக ஒருபால்
உடைமை1இன்புறல்2நடுவுநிலை3அருளல்4
தன்மை5அடக்கம்6வரைதல்7அன்பு8எனாக்
கைம்மிகல்9நலிதல்10சூழ்ச்சி11வாழ்த்தல்12
நாணுதல்13துஞ்சல்14அரற்றுக்15கனவு16எனாஅ
முனிதல்17நினைதல்18வெரூஉதல்19மடிமை20
கருதல்21ஆராய்ச்சி22விரைவு23உயிர்ப்பு24எனாஅக்
கையாறு25இடுக்கண்26பொச்சாப்புப்27பொறாமை28
வியர்த்தல்29ஐயம்30மிகை31நடுக்கு32எனாஅ
இவையும்
உளவே அவையலங்கடையே.
— தொல். பொ. 256
இது மேற்கூறி வந்த எண்ணான்கும் அன்றி இவை முப்பத்திரண்டும் அவை போல மெய்ப்பாட்டிற்குரிய பிறநிலைக்களன்களாகும்
சான்றாதாரங்கள்:
Report of the Calendar Reform Committee. Saha, M. N. (chairman) (1955) Page xiii, 238
ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார், வித்துவான் திரு. பு. சி.
புன்னைவனநாத முதலியார்
எழுதிய
விருத்தியுரை. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக்கம் 73-74.
https://www.tamilvu.org/ta/library-l2H00-html-l2H00bod-132247
Freeth,
T., Higgon, D., Dacanalis, A. et al. A Model of the Cosmos in the ancient Greek
Antikythera Mechanism. Nature. Sci Rep 11, 5821
(2021).
https://rdcu.be/dXv4Z
Wonder of
the Ancient World. Tony Freeth. Scientific American Magazine Vol. 326 No. 1 (January 2022),
p. 24
doi:10.1038/scientificamerican0122-24
Decoding
the Antikythera Mechanism, the First Computer.
Jo Marchant. Smithsonian
Magazine. February 2015
https://www.smithsonianmag.com/history/decoding-antikythera-mechanism-first-computer-180953979/
Scientists
Unravel Mystery of Ancient Greek Machine. Ker Than. Live Science. August 17,
2022
https://www.livescience.com/1166-scientists-unravel-mystery-ancient-greek-machine.html
Antikythera
Mechanism
https://www.youtube.com/watch?v=zu--8qxDlCY
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா - செப்டம்பர் 21, 2024
ஆய்வரங்கில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை . . .
“தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் அறிவியல் சொல்லும் மெய்ப்பாடுகளும்”
[ஆய்வுக் குறிப்பு எண் - தொ.மா. 142
Meyppadu of Tholkappiyam compared with Psychological Science -Themozhi]
செப்டம்பர் 21, 2024
#கருத்தரங்கம், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #தொல்காப்பியம், #Themozhi