Showing posts with label சொல்வனம். Show all posts
Showing posts with label சொல்வனம். Show all posts

Sunday, March 10, 2024

மனித இனத்தினர் எப்பொழுது அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தனர்?




அமெரிக்க நிலப்பகுதிக்கு மனித இனம் எப்பொழுது குடியேறியது என்பது சென்ற 20 ஆம் நூற்றாண்டுவரை தொல்லியல், மரபணு ஆய்வு சான்றுகளின் அடிப்படையில்  ஒரு தெளிவான முடிவு செய்த நிலையாக இருந்தது.  சற்றொப்ப,  இன்றைக்கு 16,000  ஆண்டுகளுக்கு முன்னர், பனியுகத்தில் ஆசியக் கண்டத்தின் சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியும், வட அமெரிக்கக் கண்டத்தின் அலாஸ்காவின் மேற்குப் பகுதியும்  கடல்நீர் உறைந்து போனதன் காரணமாக,  தற்காலிகமாக அப்பொழுது ஒரு 5,000 ஆண்டு காலகட்டத்திற்கு  உருவாகி இருந்த (ஆனால் தற்பொழுது மூழ்கிப் போய்விட்ட) 'பெரிங் நீரிணைப்பு' (Bering Strait) மூலம் இணைக்கப்பட்டிருந்தது.    ஆசியப் பகுதியில் வாழ்ந்த நமது 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo sapiens) மனித இன மூதாதையர், உணவிற்காக வேட்டையாடி நாடோடிகளாக வாழ்ந்த காலக்கட்டத்தில், தங்களின் கால்நடைகளுடன் தரைவழிப் பயணமாக ஆசியாவில் இருந்து பெரிங் நீரிணைப்பு வழியாக அலாஸ்கா பகுதிக்கு வந்தனர்.  அப்பொழுது  வட தென் அமெரிக்கா கண்ட நிலப்பகுதிகளில் எந்த மனித இனத்தினரும் வாழவில்லை.  விலங்குகள் மட்டுமே இருந்தன.   அலாஸ்கா பகுதியில் இருந்து மேற்குக் கரையோரமாக மிக விரைவில் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா நிலப்பகுதிகளில் பரவினார்.  இந்த வழிப் பயணம்  கெல்ப் காடுகளின் ஊடே சென்ற பயணம் என்பதால் இதை 'கெல்ப் பெருவழி' (“kelp highway”) என்று குறிப்பிடுவார்கள்.  அமெரிக்க மண்ணில் நுழைந்த பிறகு கடந்த 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் தெற்கு முனை வரை மனிதப் பரவல் மிக விரைவாக நிகழ்ந்துவிட்டது.  இவ்வாறு சைபீரியா வழியாக முதன் முதலில் அமெரிக்காவிற்குக் குடியேறியவர்களை  'பேலியோ அமெரிக்கர்கள்' ( (Paleo-Americans) என்று குறிப்பிடுவர். இவர்கள் சைபீரியாவில் வாழ்ந்து  வந்தவர்களின்  வழித்தோன்றல்கள் என்பதனை மரபணு ஆய்வுகளும் உறுதிப்படுத்தின. இது தரை இணைப்பு வழியாகப் புலம் பெயர்வு என்ற கோட்பாட்டை உறுதி செய்தது.  இது மாறாத  கருத்தாகவும்  இருந்தது.

இந்த 21 ஆம் நூற்றாண்டில் கிடைக்கும் சான்றுகள் இந்த முடிவை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளன. தற்பொழுது அமெரிக்காவில் மனித இனம் குடியேறியது குறித்து 3 கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. நீரிணைப்பு வழியாக வந்தனர் என்ற கோட்பாடு (Crossing Beringia Theory/the land bridge theory),
2. ஆசியாவில் இருந்து கடற்கரையோரமாகப் படகில் வந்தனர் என்ற கோட்பாடு (the trans-Pacific migration theory),
3. பசிபிக் கடல்வழி வழியே கடலின் குறுக்காகப் பயணம் (The Trans-Pacific Migration Theory- Sailing the Open Seas).

அட்லாண்டிக் கடல் வழி வந்து சேர்ந்த சொல்யூட்ரியன் இனமக்கள் கருதுகோள் (The Solutrean Hypothesis: Across the Atlantic Ice):
மேலும் ஒரு கருதுகோள் ஒன்றும்  உண்டு.  அதன்படி, ஐரோப்பியாவின்  பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் பகுதியில் வாழ்ந்த 'சொல்யூட்ரியன்'  (Solutreans) என்றழைக்கப்படும்  கற்கால மனித மூதாதையர் தோலினால் செய்த சிறிய படகுகள் மூலம் அட்லாண்டிக் கடலைக் கடந்து சுமார் 22,000  இல் இருந்து  17,000  ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் குடியேறினர் என்பது  சொல்யூட்ரியன் கருதுகோள். இக்கருதுகோள் அதிக எதிர்ப்புகளையும், மறுப்புகளையும் எதிர்கொள்ளும் சர்ச்சைக்குரிய, ஏற்கப்படாத  ஒரு கருதுகோள்.  

1.  பெரிங் நீரிணைப்பு வழியாக வந்தனர் என்ற கோட்பாடு (Crossing Beringia Theory):
முன்னர்  கூறப்பட்டவாறு,  'பெரிங் நீரிணைப்பு' இருந்த 5000 ஆண்டுகள் காலகட்டத்தில் ஆசியாவில் இருந்து தரைவழியே வந்தனர் என்பதே ஏறக்குறைய பெரும்பாலான தொல்லியல், மரபணு ஆய்வாளர்கள் சான்றுகள் அடிப்படையில் ஏற்கும் கோட்பாடு.  ஆனால் இந்தப் பனியுகக்  குடிபெயர்வு என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? வந்த பின்னர் எவ்வாறு தெற்கு நோக்கி அவ்வளவு விரைவாகப் பரவினர்? என்ற ஏன்?  எவ்வாறு? என்ற கேள்விகளுக்கான விடை  பல கோணங்களில் இன்றும் ஆராயப்பட்டு வருகிறது. இருப்பினும், எப்பொழுது புலம் பெயர்ந்தார்கள் என்பதைத்  தொல்லியல் மற்றும் மரபணு ஆய்வுகள் மூலம் கணிக்க முடிகிறது.  

புலம் பெயர்ந்த ஆசியப் பகுதி மக்கள் சைபீரியாவில் இருந்து 24,000 இல் இருந்து 21,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பினர் என்ற கோட்பாட்டுக்கு  பேலியோ சைபீரியர்கள் மற்றும் பேலியோ அமெரிக்கர்கள்  மரபணு ஆய்வு முடிவுகளின் ஒப்பீடு தரும் தகவல்  உறுதி செய்கிறது. அமெரிக்கப் பழங்குடியினர் மரபணு ஆய்வு முடிவுகள்,   67% அமெரிக்கப் பழங்குடியினர் மரபணுக்கள்  அவர்களுக்குக் கிழக்காசியப் பகுதியினர் மரபணுவுடன் தொடர்புள்ளதாகக் காட்டுகிறது.

பேலியோ காலகட்டக் கடைசிப் பனியுகம் (Last Glacial Maximum) என்பது 23,000 ஆண்டுகளில் இருந்து 19,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதும் அறிவியல் ஆய்வு முடிவுகள் உறுதியாகக் காட்டுகிறது. இதுவே பெரிங் நீரிணைப்பு உருவாகக் காரணமான இயற்கைச் சூழல்.

நியூமெக்சிகோ பகுதியில் உள்ள குலோவிஸ் (Clovis, New Mexico) என்ற தொல்லியல் ஆய்வுக் களத்தில் முதலில் கண்டெடுக்கப்பட்ட  குறிப்பிட்ட அமைப்பு கொண்ட கற்காலக் கருவிகளும் இதே  13,500  ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையே. இக்கால கட்டத்தைச் சேர்ந்த  கற்காலக் கருவிகள் வட அமெரிக்கப் பகுதியில் பல இடங்களில் பரவலாகக் கிடைக்கும் தொல்லியல் தடயங்கள்.  இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த மூதாதையரை 'குலோவிஸ் மக்கள்' எனவும் அவர்களின் பண்பாட்டை  'குலோவிஸ் பண்பாடு' எனவும் குறிப்பிடும் வழக்கமும் வந்தது.

எனவே பனியுகத் தகவல், மரபணு ஆய்வுகள், தொல்லியல் தடயங்கள் யாவும் சற்றொப்ப 14,000 ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாப் பகுதியில் இருந்து பெரிங் நீரிணைப்பு வழியாக அமெரிக்க வந்தனர் என்ற கோட்பாட்டை உறுதி செய்கின்றன.  
 
 
இதன் பிறகு மேலும் 14400  ஆண்டுகள், 14800 ஆண்டுகள்,  15500 ஆண்டுகள்,  16000  ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் தடயங்களும் கிடைக்கப் பெற்றன.  

புவியியல் ஆய்வுகள் மூலம் பெரிங் நீரிணைப்பு  இருந்த காலம் 15,000 இல் 14,000 ஆண்டு காலகட்டம் என்று அறிய முடிகிறது.  ஆனால்,  காலத்தில் முற்பட்ட, அதாவது பெரிங் நீரிணைப்பு வழி திறந்திருக்க வாய்ப்பில்லாத காலத்திற்கும் முற்பட்ட காலத்து மனித இனம் அமெரிக்க மண்ணில் இருந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைக்கத் தொடங்கிய பொழுது,  மனித இனம் தரை வழி இல்லாத காலத்தில் எப்படி அமெரிக்க மண்ணிற்குப் புலம் பெயர்ந்தனர் என்ற அறிவியல் விளக்கம் தேடி அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2. ஆசியாவில் இருந்து கடற்கரையோரமாகப் படகில் வந்தனர் என்ற கோட்பாடு (the trans-Pacific migration theory):
இதற்கான விடை அளிக்கப் புதிய கோட்பாடு முன் வைக்கப்பட்டது. குலோவிஸ் மக்களுக்கும் முற்பட்ட காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்,  பெரிங் நீரிணைப்பு வரை தரை வழியாக வந்து, பிறகு அங்கிருந்து கடற்கரையோரமாகப் படகில் வந்திருக்கக் கூடும்.   கடல்வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டு கரையோரமாக அவர்கள் வந்திருந்தால் மனித இனம் தென்னமெரிக்கத் தென்முனை வரை விரைவாகப் பரவியதன் காரணமும் பொருந்தும் என்று கருதினர்.  தடைகள் நிரம்பிய தரைவழியில் நடந்து செல்வதைவிட, கடற்கரை ஓரமாக நீர்வழியில் செல்வது எளிது, விரைவிலும்  பயணம் செய்ய முடியும் என்பது இந்தக்  கோட்பாட்டிற்குக் காரணம். அக்காலச் சுற்றுச் சூழல், தட்பவெப்ப  நிலையும் அக்கால அமெரிக்க மேற்குக் கடற்கரையோரம், உள்நாட்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில்  உறைபனியின்றி இன்றி இருந்ததாகப் புவியியல் தரவுகளும் இந்த முடிவை  உறுதி செய்கின்றன. மரபணு ஆய்வுத் தரவுகளும் கடலோரப் படகுப் பயணம் கோட்பாட்டை உறுதி செய்கின்றன. தொல் மரபணு குறித்த ஆய்வுகள் மரபணு தொடர்ச்சிகளும், கிளை பிரிந்த வேறுபாடுகளும், பரவல்களும் போன்ற மரபணு  மாற்றங்களும் விரைவாகவே நடந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. தரைவழி பரவியிருந்தால் அவர்கள்  விரைவாகப் பரவியிருக்க வழியில்லை.  ஆகவே  பெரிங் நீரிணைப்பு காலகட்டத்திலேயே மிக விரைவாகத் தென்னமெரிக்கத்  தென்முனை வரை  அவர்களால் நகர முடிந்திருக்கிறது என்று  தரைவழிப் பரவல் கோட்பாட்டிற்கு மற்றொரு மாற்று விளக்கம் உருவானது. இது தவிர்த்து மக்கள் பல அலைகளாகவும் வெவ்வேறு காலங்களில் வந்திருக்கவும்  வாய்ப்புண்டு.

3. பசிபிக் கடல்வழி வழியே கடலின் குறுக்காகச் செய்த பயணம் (The Trans-Pacific Migration Theory- Sailing the Open Seas):
ஆமசான் காடுகளின் பழங்குடிகளில் பெரும்பான்மையர் சைபீரியா/கிழக்கு ஆசிய மரபணுக்களைக் கொண்டிருந்தாலும், 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு மரபணு ஆய்வின் முடிவு ஆமசான் பழங்குடிகளில் ஒரு பிரிவினரின் மரபணு ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் (ஆஸ்திரேலியா, நியூகினியா, பப்புவா நியூகினியா பகுதி பழங்குடியினர்) அவர்களுக்கும் இருக்கும் தொடர்பைக் காட்டியது. எனவே ஆயிரக்கணக்கான மைல்கள்  தொலைவில் இருந்து பசிபிக் கடலின் வழியாகப் படகில் இவர்கள் தென்னமெரிக்கப் பகுதிக்கு வந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது.  ஆனால் இன்றுவரை இதற்கு உறுதியான மரபணு சான்றுகளோ தொல்லியல் சான்றுகளோ இல்லை.  மரபணுக்களில் ஒரு தொடர்பு மட்டுமே கிடைத்துள்ளது.  மேலும், 40000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் சீனக் குகைப் பகுதியில் வாழ்ந்த மூதாதையர் இனத்தின்  ஒரு பகுதியினர் தெற்காக ஆஸ்திரேலியா நோக்கிப் புலம் பெயர்ந்திருக்கலாம், மற்றொரு பிரிவு அங்கிருந்து  வடக்கு நோக்கி நகர்ந்து பெரிங் நீரிணைப்பு வழியாக அமெரிக்கா வந்திருக்கலாம்.  ஆக, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு பிரிவுகளுக்கும்  ஒரு பொது ஆசிய மூதாதையர் இனம் இருந்திருக்கலாம் என்று மரபணுத் தொடர்பிற்கு ஒரு  மாற்றுக் கோணமும் வைக்கப்படுகிறது.  

அட்லாண்டிக் கடல் வழி வந்து சேர்ந்த சொல்யூட்ரியன் இனமக்கள் கருதுகோள் (The Solutrean Hypothesis: Across the Atlantic Ice):
சொல்யூட்ரியன் என்ற மனிதர்கள் கூட்டம் ஐரோப்பாவில் இன்றைய ஐபீரியன் தீபகற்பம் எனப்படும் பகுதியிலும் இன்றைய பிரான்ஸ் பகுதியிலும் வாழ்ந்தவர்கள். இவர்கள்  உருவாக்கிய கருவிகள் தனித்தன்மை வாய்ந்த கற்காலக் கருவிகள்.  23,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து  18,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால இடைவெளியில்  இவர்கள் தோலால் செய்யப்பட்ட சிறிய படகுகளில் பனிப்பாறைகள் நிறைந்திருந்த அட்லாண்டிக்  கடலின் வழியே வேட்டையாடி உணவு தேடும் நோக்கத்துடன் மேற்கு நோக்கிப் பயணம் செய்து அமெரிக்க மண்ணின் கிழக்குக் கரையை  வந்தடைந்தனர் என்கிறது இந்தக்  கருதுகோள். இதற்கு ஆதரவாக  மேரிலாண்ட் பகுதியில் 20000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று கணிக்கப்படும் கற்காலக் கருவிகள் சொல்யூட்ரியன் கற்கருவிகளைப் போலவே உள்ளன என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதை மறுப்பவர்கள் சொல்யூட்ரியன்  மக்களிடம் படகு தயாரித்த தொழில்நுட்பம் இருந்ததற்கான தொல்லியல் தடயங்களும் இருந்ததில்லை; அத்துடன் அமெரிக்கத் தொல்மனிதர் மரபணு, ஐரோப்பியத்  தொல்மனிதர் மரபணுவுடன் ஒத்துப் போகவும் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி மறுத்துவிட்டனர். இக்கருதுகோள் ஆய்வாளர்களால் ஏற்கப்படாத ஒன்று.

இவற்றைத் தவிர்த்து,  வெகு அண்மையில் 2021 ஆம் ஆண்டு நியூமெக்சிகோ பகுதியில் சேற்றில் பதிவாகிப் பாதுகாக்கப்பட்ட  வகையில் மனிதர்களின் காலடிச் சுவடுகள் கிடைத்துள்ளன.  இவை நீர்நிலை அருகில் உவர் நில மண்ணில் மனிதர்கள், சிறு குழந்தைகள் வாழ்ந்து விளையாடி விட்டுச் சென்ற ஆயிரக் கணக்கான காலடிச் சுவட்டுத்  தடயங்கள். இவற்றுடன் விலங்குகளின் காலடிச் சுவடுகளும் பதிவாகியுள்ளன.  


இவற்றின் காலம் முன்னர் 23,000 ஆண்டுகளுக்கும்  21,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் காலடிச் சுவடுகளின் காலம்  மறுக்க வழியில்லாதவாறு  இரண்டு வெவ்வேறு முறைகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.  காலடிச்சுவடுகளில் கிடைத்த விதைகள், மகரந்தத் துகள்கள் ஆகியன கரிமக் காலக்கணிப்பு முறையில் கணிக்கப்பட்டன. அப்பகுதியில் கிடைத்த கற்காலக் கருவிகளும் 'லூமினசன்ஸ் ஆய்வு' (luminescence – optically stimulated luminescence dating) என்ற ஒளிர்வு சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. இரு சோதனைகளும்  அதே காலகட்டத்தை உறுதி செய்துள்ளன.  இந்த  ஆய்வுகளும் சைபீரியாவில் வாழ்ந்த மனித இனத்தினர்  கடற்கரையோரமாகப் படகில் புலம் பெயர்ந்திருக்கக் கூடும் என்ற கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது.

தற்பொழுது ஆய்வாளர்கள் மனித இனம் அமெரிக்க மண்ணில் 24,500-22,000 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் ஒரு முறையும், பின்னர் 16,400-14,800 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் ஒருமுறையும் என வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பிரிவாக வந்திருக்கக் கூடும் என்று கருதுகிறார்கள். இந்த இரு காலகட்டங்களின்  தட்பவெப்ப நிலை, சுற்றுச் சூழல் ஆகியவை வெற்றிகரமான புலம்பெயர்வுக்கும் குடியேறுதலுக்கும் உதவியிருக்கக்கூடும் என்பது புவியியல் சார்ந்த அறிவியல் தரவுகளின் அடிப்படைகளில் இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு வெவ்வேறு அலை புலம் பெயர்தல் முடிவு,  கிடைத்துள்ள தொல்லியல் தடயங்கள் முடிவுகளுடனும், மரபணு ஆய்வுத் தகவல்களுடனும் ஒத்துப் போகிறது.  

References:
1.  New data suggests a timeline for arrival of the first Americans. Becky Raines. February 24, 2023
https://around.uoregon.edu/content/new-data-suggests-timeline-arrival-first-americans

2.  How Early Humans First Reached the Americas: 3 Theories.  Did humans first set foot in the Americas after walking—or sailing or paddling by sea? Dave Roos. July 14, 2023.
https://www.history.com/news/human-migration-americas-beringia

3.  Reconstructing the Deep Population History of Central and South America. Cosimo Posth et al., Volume 175, Issue 5, 15 November 2018, Pages 1185-1197.e22
https://doi.org/10.1016/j.cell.2018.10.027

4.  Tests confirm humans tramped around North America more than 20,000 years ago, Robert Sanders. October 5, 2023.
https://news.berkeley.edu/2023/10/05/tests-confirm-humans-tramped-around-north-america-more-than-20-000-years-ago

5.  When Did Humans Come to the Americas? Guy Gugliotta. February 2013
https://www.smithsonianmag.com/science-nature/when-did-humans-come-to-the-americas-4209273/

6.  Peopling of the Americas
https://en.wikipedia.org/wiki/Peopling_of_the_Americas

7.  What's the earliest evidence of humans in the Americas?  Charles Q. Choi.  August 13, 2023
https://www.livescience.com/archaeology/whats-the-earliest-evidence-of-humans-in-the-americas

படம் உதவி: விக்கிப்பீடியா 

 

நன்றி : 
சொல்வனம்
மார்ச் 10, 2024 
மனித இனத்தினர் எப்பொழுது அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தனர்?
https://solvanam.com/2024/03/10/மனித-இனத்தினர்-எப்பொழுது/ 


#சொல்வனம், #அறிவியல், #Themozhi