திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு
வாழ்வியல் கருத்துக்களை ஏழு சீர்களிலும் இரண்டே அடிகளிலும் சுருங்கக் கூறும் சிறப்புடையது திருக்குறள். ஆழமான கருத்துச் செறிவாலும் பல அணிநயம் கொண்டு இலக்கியச்சுவையுடன் அமைந்திருக்கும் காரணத்தாலும் மேலும் சிறப்பு கொண்டு விளங்குகிறது. அணி என்பது இலக்கியத்தில் அழகுக்கு அழகுக் கூட்டும் முறையாகக் கருதப்படுகிறது.
"மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல்"
என்று பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் (நன்னூல் 55) பாயிரம் அழகுக்கு அழக்கூட்டுவதைக் குறிப்பிடுகிறது.
அணி என்றால் உவமையணி என்றே தொல்காப்பியம் குறிப்பிட்டாலும், பிற்காலத்தில் அணி இலக்கணம் விரிவடைந்து மேலும் பற்பல அணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குறளில் சொல்லும் கருத்தை மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு விளக்கும் முறையில் "உவமையணி" கொண்ட குறள்களாகப் பல குறள்கள் உள்ளன. மேலும்; எடுத்துக்காட்டு உவமை அணி, இல்பொருள் உவமை அணி, தொழில் உவமை அணி, உருவக அணி, ஏகதேச உருவக அணி, நிரல்நிறை அணி, பின்வருநிலையணி, வஞ்சப் புகழ்ச்சி அணி, பிறிதுமொழிதல் அணி, வேற்றுமை அணி போன்ற அணிகளும் திருக்குறளில் இடம் பெறுகின்றன. இவையாவும் பள்ளிப்பாடங்களில் இலக்கண வகுப்பில் பயிற்றுவிக்கப்பட்டவையே.
உவமை அணி:
திருக்குறளில் "உவமை" என்ற சொல் வருவது ஒரே ஒரு முறைதான்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் - 7)
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்பவர்கள் மட்டுமே மனக்கவலை நீங்கப் பெறுவார்கள் என்பது இக்குறள் தரும் பொருள். இவ்வாறு ஒரே ஒருமுறை 'உவமை' பற்றிப் பேசும் திருக்குறளில் நூற்றுக்கணக்கான உவமைகள் எடுத்தாளப் பட்டுள்ளன. திருக்குறளில் காணப்படும் உவமை நயம் குறித்து நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன.
இலக்கண நூல்கள் உவமை அணியே முதன்மை அணி என்று விளக்குகின்றன. புலவர் ஒருவர் தாம் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை (உவமேயம்) தெளிவாக உணர்த்தும் பொருட்டு, மற்றவர்களும் நன்கு அறிந்த பொருள் ('உவமை' அல்லது 'உவமானம்') ஒன்றின் பண்பு,தொழில், பயன் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுத் தம் பாடலின் கருத்தை விளக்கிக் கூறுவது உவமையணியின் இலக்கணம்.
ஆக, ஒப்பிடப்படும் பொருள் உவமேயம்; ஒப்பிடப் பயன்படும் பொருள் உவமை. உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக் காணலாம். அவை: 1) உவமை; 2) உவமேயம்; 3) உவமை உருபு; 4) ஒத்த பண்பு.
ஒரு பொருளோடு ஒரு பொருளும்; ஒரு பொருளோடு பல பொருளும்;
பல பொருளோடு பல பொருளும்; பல பொருளோடு ஒரு பொருளும்
என நான்கு வகையாகப் பொருள்கள் ஒப்புமைப்படுத்திக் கூறப்படும். பெரும்பாலும் உவமையையும் உவமேயத்தையும் இணைப்பதற்கு 'போன்ற, போல, ஒப்ப' முதலிய உவம உருபுகளில் ஒன்று பயன்படுத்தப்படும்.
போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே (நன்னூல் நூற்பா - 367)
என்பது உவம உருபுகள் குறித்து நன்னூல் தரும் இலக்கணம்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (783)
பொருள்: நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது 'போல' பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும். இதில், பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும் என்ற உவமேயம், போல என்ற உவம உருபால், நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தரும் என்ற உவமையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பண்பு, தொழில், பயன் என மூவகை ஒப்புமைகள்:
பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை, தொழில் ஒப்புமை, பயன் ஒப்புமை ஆகியவற்றின் அடிப்படையில் உவமை அணி வகைப்படுத்தப்படும். இதனால் பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும் என விளக்குகிறது தண்டியலங்காரம் நூற்பா.
பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை (தண்டி, நூற்பா. 30)
1. ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவு ஆகியவை அப்பொருளின் 'பண்பு' எனப்படும். இப்பண்புகளின் அடிப்படையில் ஒப்புமைப் படுத்தப்படும் உவமை பண்பு உவமை ஆகும்;
2. ஒரு பொருளின் 'தொழில்' அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்;
3. ஒரு பொருளால் கிடைக்கும் 'பயன்' காரணமாக அமையும் உவமை பயன் உவமை எனப்படும்.
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் (1121)
பொருள் : மென்மையான மொழிகளைப் பேசும் இப்பெண்ணின் வெண்மையான பற்களிடையே ஊறிய உமிழ்நீர், பாலும் தேனும் கலந்த சுவை போல் இனிமையானது- தலைவன் கூற்று. இது 'பண்பு உவமையணிக்கு' ஓர் எடுத்துக்காட்டு.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் (691)
பொருள்: தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குறள் 'தொழில் உவமை அணிக்கு' ஓர் எடுத்துக்காட்டு.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (215)
தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டவரின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியை ஒத்ததாகும். இக்குறள் 'பயன் உவமையணிக்கான' எடுத்துக்காட்டு.
உவமையணியானது 'எடுத்துக்காட்டு உவமையணி' என்றும் 'இல்பொருள் உவமையணி' என்றும் மேலும் இருவகையாகப் பிரிக்கப் படுதலும் உண்டு.
எடுத்துக்காட்டு உவமையணி: எடுத்துக்காட்டு உவமை அணி என்பது உவமானத்தையும் உவமேயத்தையும் தனி வாக்கியங்களாக அமைத்து இது பொருள் இது உவமை என்பது விளக்கப்படுகையில் இடையில் அதுபோல என்னும் உவமஉருபு கொடுக்காமல் ஒப்பிடுவது.
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் (573)
பொருள்: பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?
இல்பொருள் உவமை அணி: இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது இல்பொருள் உவமை அணி. அதாவது இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும்.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (273)
பொருள் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
மேலும் சில கருத்தைக் கவரும் அணி வகைகளும் திருக்குறளில் உள்ளன.
பின்வருநிலையணி:
ஒரே சொல் மீண்டும் மீண்டும் ஒரு குறளில் வரும் "பின்வருநிலையணி" என்ற முறையையும் வள்ளுவர் கையாண்டுள்ளார். வாய்விட்டுப் படிக்கும் பொழுது அவற்றின் ஓசைநயம் படிப்பவரைக் கவரும் வகையில் இக்குறள்கள் அமைந்துள்ளன. பாவலர் உணர்த்த விரும்பும் செய்தியை எளிதாகவும், அழகாகவும், கேட்பவர் மனதில் பதியும்படி சொல்வதற்கு ஒரேசொல் மீண்டும் மீண்டும் பலமுறை இடம் பெறும் வகையில் "பின்வருநிலையணியில்" செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஒரே சொல் வெவ்வேறு எண்ணிக்கையில் பல குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளன.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (350)
என்ற இக்குறளில் 'பற்று' என்ற ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது. இக்குறளின் ஏழு சீர்களில், ஆறு சீர்களில் பற்று என்ற சொல் இடம் பெறுகிறது. பற்றுகளை அகற்றுவதற்காகவே பற்றில்லாதவனைப் பற்றி நிற்க வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.
இது போன்றே, ஒரே சொல் 5 முறை ஐந்து குறட்பாக்களிலும், 4 முறை 22 குறட்பாக்களிலும், 3 முறை 27 குறட்பாக்களிலும் அமைந்துள்ளன என்று திருக்குறள் குறித்துப் பல புள்ளிவிவரங்கள் தரும் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.
செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்ப்பது 'பின்வரு நிலையணி'. இப் பின்வருநிலையணி மூன்று வகைப்படும்:
1. சொல்லும் பொருளும் பின்வருதல் - சொற்பொருள் பின்வருநிலையணி
2. சொல் மட்டும் தொடர்ந்து வருதல் - சொல் பின்வரு நிலையணி
3. சொற்கள் மாறி, ஆனால் பொருள் ஒன்றாக வருதல் - பொருள் பின்வரு நிலையணி
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (666)
எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர் என்பது இக்குறள் சொல்லும் பொருள். எண்ணிய என்ற சொல் திரும்பத் திரும்ப வரும் இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமையால் இக்குறள் 'சொற்பொருள் பின்வரும் நிலையணி' என்ற அணிக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். (751)
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை என்பது இக்குறளின் பொருள். 'பொருள்' என்ற சொல் மட்டும் குறளில் தொடர்ந்து வேறு (மதிப்பு, செல்வம் ஆகிய) பொருள்களில் வருதலால் இக்குறளின் அணி 'சொல் பின்வருநிலை அணி' என்பதாக அமைந்துள்ளது.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (400)
அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை என்பது இக்குறளின் பொருள். இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களும் செல்வத்தையே குறிக்கின்றன. எனவே; சொற்கள் மாறி, ஆனால் பொருள் ஒன்றாக வருதலால் இக்குறளில் 'பொருள் பின்வரு நிலையணி' இடம் பெற்றுள்ளது.
திருக்குறளின் 1330 குறள்களில் சற்றொப்ப நான்கு விழுக்காடு குறட்பாக்கள் 'சொற்பொருள் பின்வருநிலையணியிலும்' 'சொல் பின்வரு நிலையணியிலும்' வள்ளுவரால் இயற்றப்பட்டுள்ளன. இவையாவும் இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிவுவிருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பிறிது மொழிதல் அணி:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற (495)
ஆழமான நீரினுள் இருக்கும் வரை நீர்நிலைக்கு வரும் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; ஆனால் நீரிலிருந்து வெளியே வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும் என்பது இக்குறளின் பொருள்.
மக்களின் நல்வாழ்விற்கு வாழ்வியல் நெறிகளை விளக்க முடிவெடுத்த வள்ளுவர் அதை விட்டுவிட்டு ஏன் உயிரியல் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் மாறினார்? அவருடைய நோக்கத்திற்குத் தொடர்பில்லாமல் முதலை குறித்து ஏன் பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்படலாம். ஆனால், ஒரு செயல் ஆற்றுவதற்கு ஏற்றதான இடத்தை அறிந்து அதன் பிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்பதை 'இடனறிதல்' என்ற அதிகாரத்தில் விளக்க முற்படும் வள்ளுவர் 'பிறிது மொழிதல் அணி' என்ற அணியை இக்குறளில் எடுத்தாள்கிறார். கூறக் கருதிய பொருளை உவமையால் குறிப்பாக உணர்த்தியதால் இது பிறிது மொழிதலாகிறது.
ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்; ஆனால் தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்து இக்குறள் மூலம் உணர்த்தப்படுகிறது. ஆனால், இந்த உவமேயம் குறளில் சொல்லப்படவில்லை, முதலை உவமை மட்டும் விளக்கப்பட்டுள்ளது. பிறிது மொழிதல் அணியில் உவமை மட்டுமே இடம் பெறும். இவ்வாறாகத் தான் கூற விரும்பும் கருத்தை நேரடியாகக் கூறாமல், அதைப் புலப்படுத்தும் வகையில் வேறொரு கருத்தைக் கூறிப் புலப்படுத்துவதை,
கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு
ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப
(தண்டி. நூ. 52)
தண்டியலங்காரம் 'ஒட்டணி' என்று விவரிக்கிறது. பிறிது மொழிதல் அணிக்கு நுவலா நுவற்சி, சுருங்கச் சொல்லல், தொகைமொழி, உவமப்போலி என்னும் வேறு பெயர்களும் உள்ளன. அகத்திணைப் பாடலில் இடம்பெறும் பிறிது மொழிதல் அணி 'உள்ளுறை உவமம்' எனப்படுகிறது. எனவே உவமானத்தைக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் மறைபொருளாக, குறிப்பாக உணர்த்துதல் பிறிது மொழிதல் அணியாகும்.
வேற்றுமை அணி:
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது 'வேற்றுமையணி' எனப்படும்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (129)
தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும்; நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாது. இக்குறளில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்பட்டு, பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; ஆனால், உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடும் கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.
நிரல்நிறை அணி:
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது 'நிரல் நிறை அணி' (நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்) எனப்படும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)
அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும். இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.
வஞ்சப்புகழ்ச்சி அணி:
ஒருவரைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் 'வஞ்சப்புகழ்ச்சியணி' எனப்படும். 'மாறுபடு புகழ்நிலை அணி', 'புகழாப் புகழ்ச்சி அணி' என வஞ்சப்புகழ்ச்சி அணி இருவகைப் படுத்தப் படுகிறது.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில் (839)
அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிக இனியது; ஏனெனில், அவர்களிடம் இருந்து பிரிய நேர்ந்தால் அப்பிரிவு துன்பம் தருவதில்லை என்பது இக்குறளின் பொருள். இக்குறட்பாவில் அறிவிலார் உறவைப் புகழ்வது போல் பழித்துக் கூறுகிறார் வள்ளுவர். ஆதலால் இக்குறள் வஞ்சப்புகழ்ச்சி அணியின் கீழ் வகைப் படுத்தப்படுகிறது. புகழ்வது போல் பழிக்கும் வஞ்சப்புகழ்ச்சி அணியை 'மாறுபடு புகழ்நிலை அணி' என தண்டியலங்காரம் கூறுகிறது.
அது போல; ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற முறையினால் ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப் புகழ்ச்சி அணி.
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று (1112)
அனைவரையும் பார்ப்பது தாமரை மலர். ஆனால், நெஞ்சே என்னை மட்டும் நோக்கும் என் தலைவியின் கண்கள் மலர்கள் போன்றது என்று நீ மயங்குவது சரியா? என்று நெஞ்சிடம் கூறுவது போல தலைவன் கூறுகிறான். எனினும் தலைவியின் கண்களைப் புகழாமல் புகழ்வதே தலைவனின் நோக்கம். ஆதலால், பழிப்பது போன்ற முறையில், அதன் மேன்மை தோன்றக் கூறும் 'புகழாப் புகழ்ச்சி அணி' க்கு இக்குறள் ஓர் எடுத்துக்காட்டாகும்.
உருவக அணி:
உவமை வேறு உவமேயம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது 'உருவக அணி'யாகும்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும் (1068)
பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமை பின்னுமாக அமைவதுடன், அவையிரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறப்படும்.
ஏகதேச உருவக அணி:
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி. வடமொழிச் சொல்லான ஏகதேசம் (ஒரு பகுதி எனப்பொருள்படும்) சொல்லால் இது 'ஏகதேச உருவக அணி' எனப் பெயர் பெறுகிறது.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும் (306)
சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். சினம் கொள்பவரை விட்டுச் சுற்றத்தார் விலகிவிடுதல் இயல்பாதலால் துன்பப்படும்பொழுது அவர் உறவின் அரவணைப்பை இழந்துவிடுவார், உறவின் துணை மட்டுமே பாதுகாக்கும் தெப்பமாக உருவாகப்படுத்தப்பட்டுள்ளது.
பரிவருத்தனை அணி:
பாடலின் கருத்து ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைக் குறிப்பிடுவது பரிவருத்தனை அணி என்பதற்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது.
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து (1183)
தன் தலைவன் காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு தன்னுடைய அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார் என்று தலைவி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது. தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நிதரிசன அணி:
இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளின் பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையோ, தீமையோ தோன்றுமாறு இருப்பதாகச் சொல்லுவது நிதரிசன அணியின் இலக்கணம் ஆகும்.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (957)
மதிக்கப்படும் நற்குடியில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும் என்கிறது இக்குறட்பா. பெரியவர்களிடமும் குற்றம் உண்டு என்ற இயல்பை, அழகிய நிலவின் களங்கத்துடன் ஒப்பிட்டுக் கூறும் முறை நிதரிசன அணியின் இலக்கணத்தை ஒட்டி அமைகிறது.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 303 - 24.09.2025]
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 304 - 01.10.2025]
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 305 - 08.10.2025]
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 306 - 15.10.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi