Wednesday, September 10, 2025

சிவிகைப் பயணமும் அறவழியும்

சிவிகைப் பயணமும் அறவழியும் 

வள்ளுவர் தன் குறளின் தொடக்கமாக உள்ள 'பாயிரம்' பகுதியின் 4 அதிகாரங்களில்;  முதலில் இறைவணக்கம், வான்மழை போற்றுதல்,  உலகப் பற்றை நீத்தவர் பெருமை ஆகிய கருத்துக்களைக் கூறிவிட்டு அடுத்து அறநெறிப்படி வாழ்வதன் முக்கியத்துவத்தை 'அறன்வலியுறுத்தல்' அதிகாரத்தில் மூலம் எடுத்துரைக்கிறார்.  திருக்குறளின் நோக்கமே அறவாழ்வை, ஒழுக்க நெறிகளை மக்களிடம் கொண்டு செல்வது என்பதால் அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் குறள்கள் யாவும் அறவாழ்வின் மேன்மைக்குக் கொடுக்கப்படும் முக்கியமான ஓர் அறிமுக உரையாகக் கொள்ளலாம். இதன் பின்னரே அறத்துப் பாலில் இல்லறவியல்,  துறவறவியல் ஆகிய இயல்கள் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன. 

அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் குறட்பாக்கள்:
31.  அறமானது சிறப்பையும் செல்வத்தையும் அளிப்பதால், அதைவிடச் சிறந்த வேறொரு நன்மையும் உயிர்க்கு இல்லை. 
32.  அறத்தின் மூலம் கிடைக்கும் சிறப்பையும் செல்வத்தையும் விட ஒருவருக்கு மேலான நன்மை இல்லை, அதே சமயம் அறத்தை மறந்து வாழ்வதைக் காட்டிலும் கொடிய கேடு வேறு இல்லை. 
33.  தன்னால் முடிந்த வழிகளில், எல்லா இடங்களிலும் அறச்செயல்களை இடைவிடாமல் செய்ய வேண்டும்.  
34.  மனத்தளவில் குற்றம் இல்லாதிருப்பதே உண்மையான அறமாகும்; இதைத் தவிர்த்த செயல்களும், வார்த்தைகளும் ஆரவாரத் தன்மை கொண்டவை, அவை உண்மையான அறம் ஆகாது. 
35.  பொறாமை, பேராசை, சினம், கடுமையான சொல் ஆகிய இந்த நான்கையும் நீக்கி, குறைவின்றி ஒழுக்கத்தோடு வாழ்வதே அறமாகும்.
36.  எதிர்காலத்தில் செய்யலாம் என்று அறங்களை ஒத்திவைக்காமல், செய்ய வேண்டிய நற்செயல்களை உடனடியாகச் செய்துவிட வேண்டும். அப்போதுதான், உடல் அழிந்துபோகும் நேரத்தில், அந்தச் செயல்களே நமக்கு நிலையான துணையாக அமையும். 
37.  பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. — மு. வரதராசன்
38.  அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும். — சாலமன் பாப்பையா 
39.  மனித வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது புறப் பொருட்களைச் சார்ந்ததல்ல, மாறாக அது ஒருவரது அறவொழுக்கம் நிறைந்த வாழ்விலிருந்தே வருகிறது. 
40.  தன் வாழ்நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை அறச் செயல்களாகும்; தவிர்க்க வேண்டியவை பழிகளாகும். 

அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் பொருளைச்  சுருக்கமாகச் சொன்னால்; குற்றமில்லாத மனதுடன், மற்றவரை எந்த வழியிலும் வருத்தாமல், பிறருக்கு உதவும் நோக்கத்துடன் நற்செயல்கள் செய்வதுதான் அறவொழுக்கமாகும்  எனப் புரிந்து கொள்ளலாம். 

      இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
      அறவிலை வணிக னாயலன் பிறரும்
      சான்றோர் சென்ற நெறியென
      ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே. (புறநானூறு: 134)
கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரன், அறச் செயல்களைச் செய்தது, மறுமைக்கான நற்பலன் கருதி அல்ல. மாறாக, அதுவே சான்றோர் நெறி என்பதற்காகத்தான் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எழுதிய பாடல்.  வேள் ஆய் அண்டிரன் ஓர் "அறவிலை வணிகன்" அல்ல என்று அவனைப் பாராட்டுகிறார் புலவர்.   

தன்னல நோக்கோடு அறம் செய்யாமல்  ஈத்துவக்கும் இன்பத்திற்காக, அறம் என்ற நோக்கில் செய்யலாற்றுவது என்பதை வள்ளுவருமே ஈகை  அதிகாராத்தில் 
      நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
      இல்லெனினும் ஈதலே நன்று.   (குறள்  - 222) 
தன்னல நோக்கோடு அறம் செய்யாமல், ஈத்துவக்கும் இன்பத்திற்காக மட்டுமே அறம் செய்வதை வள்ளுவர் 'ஈகை' அதிகாரத்தில் குறிப்பிடுகையில், பிறரிடம் இரந்து வாழ்வதைத் தவிர்த்து விடுக, மேலுலகம் செல்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செய்யாமல் தன்னால் முடிந்தவரை பிறருக்குக் கொடுத்து உதவுவதே உயர்ந்த பண்பு  என்று குறிப்பிடுவார்.  பலன் கருதா நோக்கில் அறம் செய்தல் என்பதை ஓர் அளவுகோலாகக்  கொண்டு அறன் வலியுறுத்தல் குறள்களை ஆராய்ந்தால், நற்செயல் நோக்கம் மட்டுமே என்ற வகையில் ஆறு (32, 33, 34, 35, 39, 40) குறள்களும்; தன்னலப் பயன் கருதி செய்வனவாக மூன்று (31, 36, 38) குறள்களையும் தெளிவாக வகைப்படுத்திவிட முடியும். 

      அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
      பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (குறள் - 37)
என்ற குறள் பொருள்மயக்கம்  தரும் குறளாகும், இதற்குப் பொருள் கொள்வோர் பொருள்  கொள்ளும் முறையில் குறளின் கருத்து மாறுபடலாம்.  இது போன்ற சூழ்நிலையில் உரையாளர்கள்  பொதுவாகவே குறளின்  சொல்லுக்குச் சொல் பொருள் சொல்லிக் கடந்துவிடுவதும் வழக்கம். எடுத்துக்காட்டாக; "பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா"  என்று மு. வரதராசன் பொருள் கொள்வதைக் காண முடிகிறது.  




இக்குறளுக்கு இம்மையில் செய்யும் அறச்செயல் மறுமையில் நல்வாழ்வு தரும் என்ற (அறவிலை வணிகம்) பிறவிப்பயன்  கோட்பாட்டின் அடிப்படையில் பொருள்  சொல்லப்படும். முன்னைவினையின் பயன் என்ன என்பதைப் பல்லக்கு சுமப்பவனையும் அதில் பயணிப்பவனையும் பார்த்தாலே தெரியும், பயணிப்பவன் முற்பிறவியில் செய்த நல்வினையால் பல்லக்கில் செல்லும் நிலையில் உள்ளான், அவனைச் சுமப்பவர்கள் அறச்செயல் செய்யாததால் மற்றவரைச் சுமக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று பொருள் விளக்கம் கொடுக்கப்படுவது வழக்கம்.  இவ்வாறு பொருள் கொண்டால் இது நற்பயன் கருதி அறவழியில் நடக்க வலியுறுத்தும் பிரிவில் இக்குறளை வகைப்படுத்தலாம்.  இது வினைப்பயன் சார்ந்த ஒன்று. மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர், ஆகிய அனைத்துத் தொல்லாசிரியர்களும் இந்த வினைக்கோட்பாட்டுக் கருத்துத் தோன்ற உரை எழுதியுள்ளனர்.  இக்காலத் தமிழ் அறிஞர்களுள்ளும் தேவநேயப் பாவாணர், வ.உ.சிதம்பரம், கா.சுப்பிரமணியம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம், சுத்தானந்த பாரதியார், சாமி சிதம்பரனார் ஆகியோருக்கும் இக்கருத்து ஏற்புடையதாகவே இருந்துள்ளது.  

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (குறள் - 1062) என்று இயலாமையில், வறுமையில் உள்ளவருக்காக வருந்தி, பிச்சை எடுத்தாவது ஒருவர் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், இந்த உலகைப் படைத்த கடவுளும் பிச்சையெடுத்து அலைந்து கெட்டுத் தொலைக என்று கடுமையாகக் கூறும் வள்ளுவரா துன்பத்தில் உழல்வது ஒருவர் செய்த முன்வினைப்பயன் என்பார் என்ற கேள்வியும் எழுகிறது. 

இக்குறளுக்குப் பொருள் சொல்லும்  குன்றக்குடி அடிகளார்; இக்குறள் "சிவிகை ஊர்ந்து செல்வோன் தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது. "உள்ளது மறுத்தல்" என்ற குறிக்கோளுடையது இப்பா. பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர் துன்புறுதலை அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டால் அறம் பிழைத்துப் போய் விடுகிறது என்பார்" [உதவி:குறள்திறன் தளம்]. 

ஆகவே;  அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்பதன் பொருள், 
சிவிகை  பொறுத்தானோடு = பல்லக்கைச் சுமப்பவனுக்கும் அவன் உதவியோடு   
ஊர்ந்தான் இடை = அப்பல்லக்கில் பயணிப்பவனுக்கும் இடையில் உள்ள தொடர்பை நோக்கும் பொழுது  
அறத்தாறு இதுவென வேண்டா =  அறவழி இதுதான் என்று எண்ணுதல் வேண்டாம்

அதாவது, பல்லக்கைச் சுமந்து செல்பவர்களையும் அதில் பயணிப்பவரையும் காணும் பொழுது, சொல்லாமலே எது அறவழி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  ஒரு சிலரை நோகச் செய்து அவர் வாழ்வில் தங்களை மேம்படுத்திக் கொள்வது அறவழியும் அல்ல அது அறவாழ்வும் அல்ல.  
 
பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்ய விரும்பும் ஆதீனங்கள் உள்ள இக்காலத்தில், அறவோர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பல்லக்கில் பயணிப்பது அறம் பிழைபட்ட செயல் என்று உறுதியாக மறுத்துக் கூறியவரும் ஓர் ஆதீனத்தின் தலைவர் என்பது இங்குக் கவனத்திற்கு உரியது.


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 301   -  10.09.2025]  


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi