சேரமானின் பண்டையோர் கூற்று
சேரநாட்டின் முடியுடை வேந்தர்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்பவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படுபவர். சைவ நூல்களின் தொகுப்பான 11 ஆம் திருமுறையின் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா ஆகிய மூன்று நூல்கள் இவரால் இயற்றப்பட்டவையாகும். இப்பெருமாக் கோதையாரே கழறிற்றறிவார் என அறியப்படுபவரும் ஆவார். இவர் சுந்தரரின் நண்பராகவும், சிவனைத் தொழ அவருடன் திருக்கயிலை சென்றதாகவும் அறியப்படுகிறார். அருணகிரிநாதர் அவருடைய திருப்புகழில் சேரமான் பெருமாள் நாயனாரை "ஆதிஅந்தவுலாவாசு பாடிய சேரர்" என்று குறிப்பிடுவார்.
இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகவும், இறைவனைத் தொழும் உயிர்களை அத்தலைவன் மீது காதல் கொண்ட பெண்களாகவும் "நாயகி-நாயக பாவம்" என்ற அமைப்பில் எழுதப்படும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது "திருக்கயிலாய ஞானவுலா". உலகைத் தோற்றுவித்து ஆட்டுவிக்கும் இறைவன்பால் எல்லா உயிரினங்களும் அன்பு கொண்டு திளைத்து இறைவனால் ஆட்கொள்ளப்படுவதைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டது திருக்கயிலாய ஞானவுலா.
சேரமான் பெருமாள் நாயனார் தமக்கு முன் வாழ்ந்த திருமுறையாசிரியர்கள் அருளிய பொருளுரைகளை இவ்வுலாவில் பல விடங்களிலும் எடுத்தாண்டுள்ளார். திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் வாய்மொழிகளைத் தழுவி அவர் எழுதிய வரிகளைப் போலவே திருவள்ளுவர் குறள்களையும் இவர் எடுத்தாண்டுள்ளார்.
திருவுலா செல்லும் சிவபெருமானின் பேரழகைக் கண்டு மயங்கிய பெண்கள் பாடும் பாடல்களாக அமைந்த இந்த நூலின் மூலம் சேரமான் பெருமாள் திருக்குறளால் ஈர்க்கப்பட்டவர் என்பதை அறிய முடிகிறது.
"கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுளவென்று-பண்டையோர்
கட்டுரையை மேம் படுத்தாள்"
[திருக்கைலாய ஞானவுலா: 173-174 கண்ணிகள்]
இதன் பொருள்; நாம் கண்டும், கேட்டும், சுவைத்தும், மோந்தும், தீண்டியும் துய்க்கக் கூடிய ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன என்று மூத்தோர் சொல்லும் வாய்மொழியை ஒத்த தோற்றத்தினை உடையவள், இறைவனையும் கவரும் தோற்றம் கொண்டவள் எனப் பேரிளம் பெண்ணின் (33 — 40 வயதுடையவள்) இயல்புரைக்கும் பொழுது,
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
[களவியல், புணர்ச்சி மகிழ்தல்: குறள் - 1101]
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன (மு. வரதராசன் உரை).என்ற குறளை எடுத்தாண்டு இருப்பார்.
வள்ளுவரை பண்டையோர் என்று பெருமிதம் கொள்கிறார் சேரமான் பெருமாள்.
அவ்வாறே;
"இல்லாரை யெல்லாரும் எள்குவார் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னுஞ் -சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து"
[திருக்கைலாய ஞானவுலா: 136 - 137 கண்ணிகள்]
என்ற வரிகளில்; பொருள் இல்லாத ஏழைகளை எத்தகையோரும் இகழ்வர், செல்வரை எல்லோரும் சிறப்பு செய்வர் என்ற உலக வழக்கை அறிந்திருப்பதனால், இறைவன் தன் மீது மையல் கொள்ள வேண்டும் என்பதற்காக அவள் தன் மிக உயர்ந்த இடையில் மேகலையைச் சுற்றிக் கட்டி, தன் அழகிய மார்பின் மேல் மிக்க மணம் வீசும் சந்தனக் கலவையைப் பூசி மேலும் பல அணிகலன்களை அணிந்து கொண்டாள் என அந்த அரிவையின் (20 — 25 வயதுடையவள் அரிவை) அணிநலன்களைப் புலப்படுத்துகிறார். அவ்வரிகளில்,
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
[கூழியல், பொருள்செயல்வகை: குறள் - 752]
பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வார், செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர் (மு. வரதராசன் உரை) என்ற குறளையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளமை பொய்யில் புலவர் அருளிய திருக்குறளில் சேரமான் பெருமாள் நாயனார் கொண்ட பேரார்வத்தை இனிது புலப்படுத்துவதாகும் என்பார் வெள்ரைவாரணனார்.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவத்து மகளிரும் தன்னைக் கண்டு காமுற்று மயங்கும் நிலையில் தலைவனொருவன் உலாப்போவது ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைத் திணையைச் சார்ந்தது, இக் கைக்கிளைச் செய்திகள் பரத்தையர்க்கு அன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாதவை என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.
வள்ளுவர் குறிப்பிடும் தலைவி இல்லறம் மேற்கொண்ட ஒரு குலமகள் என்ற வகையில் இது வேறுபடுகிறது. தலைவியைக் குலமகள் எனக் காட்டும் முகமாகத்தான் வள்ளுவர் குறள்கள் அமைந்துள்ளன. அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பரத்தையர் என்ற பிரிவில் அடங்கும் பொதுமகளிரை "வரைவின் மகளிர்" (வரைவு= திருமணம்; ஓர் ஆணுடன் திருமண உறவு இன்றியும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லற வாழ்க்கை மேற்கொள்ளாதவருமான பொதுப்பெண்டிர், பொருள் பெண்டிர்) என்ற அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் தனியாகக் குறிப்பிடுகிறார்.
பார்வை நூல்: பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டாம் பகுதி: 8 - 12 திருமுறைகள்), வித்துவான் க. வெள்ரைவாரணன். பக்கம் 603. தமிழாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1969.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 302 - 17.09.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi