பலநூறு ஆண்டுகளுக்கு
முன்னர், மன்னராட்சி காலத்தில் அரசர்களை வழிநடத்த எழுதப்பட்ட திருக்குறள், குடியாட்சி காலத்திலும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்
மக்களின் பிரதிநிதியாக அரசாட்சி செய்பவருக்குப்
பொருந்தி வருவதில்தான் குறளின் சிறப்பு இருக்கிறது. இருப்பினும் மனைவி, பெண்கள் இவர்களைக் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம்,
பெண்வழிச்சேரல் அதிகாரங்களில்
உள்ள குறள்கள் இக்காலத்தில் ஏற்க
இயலாவண்ணம் பெண்களுக்கு மதிப்பு தராமல்
அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பெண்ணியவாதிகள் பலர் இந்த அதிகாரங்களைப்
பற்றிய கசப்புணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் முதன்மை இடம் பெரியாருக்குத்தான் உள்ளது.
வள்ளுவரைக் கேள்விகேட்ட, மறுதலித்த துணிச்சலான
எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இவர்
திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் போதிக்கும் 30 குறள்களையும் நீக்கிவிடவேண்டும் எனப்
பேசியவர். பெண்ணியம், சமத்துவம், பகுத்தறிவு
எனப் பேசிய எழுத்தாளர்களான பாரதிதாசனும், கலைஞர் மு.
கருணாநிதியும் இக்குறள்களுக்கான உரைகளைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி
அமைக்க முனைந்தனர். இக்கட்டுரை
வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேரல் ஆகிய அதிகாரங்களின்
குறள்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரான முத்தமிழறிஞர்
மு. கருணாநிதி அவர்கள் உரை எழுதிய முறையைக் குறிப்பிட்டு அந்த நன்முயற்சியைப்
பாராட்டுகிறது.
வாழ்க்கைத்
துணைநலம்:
வாழ்க்கைத் துணைநலம்
அதிகாரத்தில் மனைவி குறித்துத்தான் கூறப்படுகிறது என்பதை; 1.
மாண்புடையள், 2. மனைமாட்சி இல்லாள், 3.
இல்லதென் இல்லவள், 4. பெண்ணின் பெருந்தக்க யாவுள, 5. கொழுநன் தொழுதெழுவாள், 6. சொற்காத்துச்
சோர்விலாள், 7. மகளிர் நிறைகாக்கும், 8.
பெண்டிர் பெருஞ்சிறப்பு போன்ற முதல் 8 குறள்கள் நேரடியாகக் குறிக்கும்.
இருப்பினும்; இறுதி 2
குறள்களும் (குறள் - 59, 60) மேலோட்டமாக பெண்ணைக்
குறிக்கும். ஆனால் இன்றைய உலகில்
சமத்துவக் கருத்தை மதிப்பவர்கள், இவை பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமே பொருந்தும் வகையில் பொருள் கொள்ள
விரும்புவார்கள். ஓர் ஒப்பீட்டிற்காக
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் இறுதி
இரு குறள்களுக்கும் எழுதப்பட்ட
உரைகள் இங்குக் கொடுக்கப்படுகின்றன.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை
இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
[இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 59]
புகழைக் காக்க விரும்பும்
மனைவி இல்லாதவர்க்கு,
இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
—மு. வரதராசன்
புகழை விரும்பிய மனைவியைப்
பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை
இல்லை.
—சாலமன் பாப்பையா
புகழுக்குரிய இல்வாழ்க்கை
அமையாதவர்கள்,
தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல்
குன்றிப் போய் விடுவார்கள்.
—மு. கருணாநிதி
இதில் கருணாநிதி உரைதான்
காலத்திற்குப் பொருத்தமானது, ஆண் பெண்
இருவருக்குமே பொருந்தும். நல்ல கணவன்
அமையாத மகளிர் துயர் குறித்து, அவள் எதிர்கொள்ளும் அவமானம் குறித்து வள்ளுவர் ஏன் எழுதவில்லை என்று
இப்பொழுது வள்ளுவரைக் கேட்க
வாய்ப்பில்லை. ஆனால் நாம் அந்த
எதிர்பார்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வரலாம், அதாவது தக்கவாறு
பொருள் கூறுவதன் மூலம். அடுத்து;
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
[இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 60]
மனைவியின் நற்பண்பே
இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம்
என்று கூறுவர்.
— மு. வரதராசன்
ஒருவனுக்கு நற்குண
நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற
அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
— சாலமன் பாப்பையா
குடும்பத்தின் பண்பாடுதான்
இல்வாழ்க்கையின் சிறப்பு;
அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
— மு. கருணாநிதி
இதிலும் கருணாநிதி உரைதான்
காலத்திற்குப் பொருத்தமானது, ஆண் பெண்
இருவருக்குமே பொருந்தும். குடும்பத்தின்
பெருமைக்கு அவர்களின் நற்பண்பும், நல்ல மக்கட் செல்வங்களும்
அமைவது என்று, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உள்ள
பொறுப்பை உணர்த்துகிறது.
ஆனால் இது வள்ளுவரின்
எண்ணம் அல்ல. இருப்பினும், குறளின் அதிகாரத்தைக்
கணக்கில் கொள்ளாமல், இவற்றைத் தனிப்பட்ட குறள்கள் என்ற அணுகுமுறையில் பொருள்
கொண்டால் இக்காலத்திற்கும் அவை செவ்வனே பொருந்தும்.
பெண்வழிச்சேரல்:
பெண்வழிச்சேரல்
அதிகாரத்தில்;
மனைவிழைவார் (901), இல்லாள்கண் (903), மனையாளை (904), இல்லாளை (905), இல்லாள் (906) என்று குறிப்பிடும் குறட்பாக்களின் மூலமாக 'மனைவி சொல்லைக் கேட்பவன் மடயன்' என்ற கருத்தை
வலியுறுத்தித்தான் வள்ளுவர் எழுதியுள்ளார். இதில் எவருக்கும் வள்ளுவர் நோக்கம்
குறித்து மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. இவ்வாறு 5 குறட்பாக்களில் நேரடியாக மனைவி என்றே
குறிப்பிட்ட வள்ளுவர்; மற்றும் ஐந்து குறள்களில், பெண் (902, 907,
908, 909, 910) என்று
பொதுவாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். ஆனால் அவையும் மனைவியைக் குறிக்கும்
குறள்கள்தான். பொம்பளை பேச்சைக் கேட்கிறான், பொண்டாட்டி பேச்சைக் கேட்கிறான் என்று இன்றும்
இழிவாகத்தான் மனைவி சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவரைக் கூறுவது உலக வழக்கம்.
இந்த அதிகாரத்திற்கு
கருணாநிதி உரையைப் படிக்கும் பொழுது மனைவி சொல்லிற்கு மதிப்பு தருவதில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது
என்பதைக் காண இயலும். அதனால், "பண்பில் குறைபாடு
கொண்ட" மனைவி சொல்வதைக் கேட்டு நடப்பது சரியல்ல என்று உரை எழுதுகிறார். எல்லா
மனைவிகளும், எல்லாப் பெண்களும் பண்பற்றவர்கள் இல்லையே. குறைபாடு கொண்ட மனிதர்கள் உலகில் உள்ளார்கள்
என்பதுதான் உண்மையும் கூட. அந்த
அடிப்படையில் ஆணவம், அகங்காரம் கொண்டு தன் வாழ்க்கைத்
துணையை மதிக்காமல் நடக்கும் மனைவியின்
சொல்லுக்கு அவன் மதிப்புத் தரத் தேவையில்லை என்று பொருள் கூற முற்படுகிறார் என்பது
தெளிவு.
மனைவி என்ற நேரடியாக
வள்ளுவர் குறிப்பிடாத பொழுது,
மாறாக பெண் என்று மட்டும் குறிப்பிடும் பொழுது, அந்தப் பெண்ணை மனைவி என்று
கொள்ளத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு, பொதுவாகப்
பெண்கள், அதிலும் ஆணவம் அகங்காரம் கொண்ட பெண்கள் மட்டுமே
என்ற கோணத்தில் கருணாநிதி உரை எழுதுகிறார்.
இது மீண்டும் மனைவியை இளக்காரமாகக் கருதும் போக்கைத் தவிர்க்கும் மற்றொரு
முறை.
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
[நட்பியல்; பெண்வழிச்சேரல்; குறள்- 909]
அறச் செயலும் அதற்குக்
காரணமாக அமைந்த பொருள் முயற்சியும்,
மற்றக் கடமைகளும் 'மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில்' இல்லை.
—மு. வரதராசன்
அறச்செயலும் சிறந்த
பொருட்செயலும்,
பிற இன்பச் செயல்களும் 'மனைவி சொல்லைக்
கேட்டுச் செய்பவரிடம்' இருக்கமாட்டா.
—சாலமன் பாப்பையா
'ஆணவங்கொண்ட
பெண்கள்' இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற
பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க
முடியாது.
—மு. கருணாநிதி
பொதுவாக, பகுத்தறிவு,
சமத்துவம் என்ற வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த
அதிகாரங்கள் மிக உறுத்தலாக இருக்கும். தங்கள் கொள்கைக்கு மாறுபட்டவையாக அவை
இருப்பதை உணர்வார்கள். அதனால் வள்ளுவர்
மேல் குற்றம் காண்பதைத் தவிர்த்து, காலத்திற்குப் பொருத்தமான
விளக்கம் தர முற்படுவார்கள். இலக்கியவாதிகளான கருணாநிதி, பாரதிதாசன்
போன்றோர் குறளுக்கு உரை எழுதும் முறையை இந்தப் பிரிவில் அடக்கலாம்.
ஒருவர் பெண்ணாகப்
பிறந்துவிட்டார் என்பதாலேயே அவர் சிந்தனைக்கு மதிப்பு தரவேண்டாம் என எண்ணுவது
எத்தகைய அறமற்ற செயல் என்று மனதில் தோன்றுவதை நேரடியாகச் சொல்ல இலக்கியத்தின் மீது
பற்று அற்ற பெரியார் போன்றவராலேயே முடிந்தது.
“வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால், இக்கருத்துகளைக்
கூறியிருக்கமாட்டார்” என்று, தான் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்' நூலின் 'வள்ளுவமும் கற்பும்' என்ற
இரண்டாவது அத்தியாயத்தில் பெரியார் குறிப்பிட்டிருப்பார். பண்டைய தமிழ்ப்
பண்பாட்டின்படி 'யார் சொன்னாலும் குற்றம் குற்றமே' என்று பெரியாரால் சொல்ல முடிந்தது. ஆனால், மற்ற
எழுத்தாளர்களால் அவ்வாறு நேரடியாக உண்மையைக் குறிப்பிட முடியாமல் போனது.
பெண் சொல்லைக் கேட்கக்
கூடாது என்பது காலத்திற்கு ஒவ்வாத கருத்து;
இதனைப் பள்ளியில் முதல்
வகுப்பில் ஔவை எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடம்
படித்தவர்களால் மறுக்க இயலாது. வள்ளுவர் கருத்திற்கு நேரடியாக உரை
எழுதப்பட்டிருந்தாலும் சரி, காலத்திற்குத் தக்கவாறு உரை
எழுதப்பட்டிருந்தாலும் சரி வள்ளுவரின் அறிவுரையை ஏற்று "எப்பொருள் யார்யார்
வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற முடிவெடுக்கும்
நிலை ஏற்பட்டால், வள்ளுவரின் குறள்களில் சில காலத்திற்கு
ஏற்றவை அல்ல என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது.
வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்
சேரல் அதிகாரங்கள் - வள்ளுவர் காலத்துக்
கருத்துகள் கொண்டவைதான். அவற்றில் உள்ள
குறள்கள் பல இக்காலத்திற்குப் பொருந்தாது
என்றால் அந்த உண்மையை நாம் ஏற்க வேண்டும்.
பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டார், அக்காலத்தில் அவர்
ஆணையை ஏற்று நடக்க வேண்டிய சூழல் அரசுப் பணியாளர்களுக்கு இருந்தது. அத்தகைய
சூழலில் பெண்ணின் சொல்லைக் கேட்காதே
என்று கூறும் குறள் பொருந்துமா? இந்தியாவிற்கு
அந்நாட்களில் பின்னடைவு ஏதும் ஏற்பட்டதா? அவர் காலத்தில்தான்
இந்தியச் சட்டவரையறையின் முகப்புரையில்,
'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்து திருத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.
இதனைக் கருத்தில் கொண்டால் கருணாநிதி உரை ஏற்கத்தக்கது. பல நூறு ஆண்டுகளுக்கு
முற்பட்ட இலக்கியம் ஒன்றிற்குக்
காலத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்வதைக் குறை காண்பதற்கு வழியில்லை. இந்த
அதிகாரங்களுக்குக் கலைஞர் கருணாநிதி உரைகள் சிறந்தவை. காலத்திற்கேற்பப்
பொருந்துபவை.
நன்றி:
"கனடியன் ரேஷனலிஸ்ட்" இதழ்,
ஜூன் 2025
#கனடியன் ரேஷனலிஸ்ட், #திருக்குறள், #கலைஞர், #பெண்ணியம், #Canadian Rationalist, #Themozhi