Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Friday, September 26, 2025

பெரியார் படித்த அறிவியல் நூல்

 பெரியார் படித்த அறிவியல் நூல்



பெரியார் ஈ.வெ.ராமசாமி  தனது கட்டிலில் அமர்ந்த வண்ணம், வலது கையில் பிடித்திருக்கும் ஓர் உருப்பெருக்கியின் துணைகொண்டு இடது கையில் உள்ள ஒரு நூலைப் படிக்கும் படம் ஒன்றை இணையப் பயன்பாடு பரவலான இந்நாளில் அறியாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை. அந்தப் படத்தில் இருக்கும் பெரியார்தான் என்னுடைய 'பெரியார் பெருமை பெரிதே' என்ற நூலின் அட்டைப்படத்திலும் சிறிது மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளார்.  தள்ளாத முதிர்ந்த அந்த வயதில், பார்வைத் தெளிவிற்காக அணிந்திருக்கும் கண்ணாடியும் உதவாத நிலையில், உருப்பெருக்கி ஒன்றின் உதவியுடன் ஆர்வத்துடன் படிக்கிறார்.  

அவர் படிக்கும் அந்த நூல் 1967 இல் வெளியிடப்பட்ட நூல் என்பதால்,  அந்த ஆண்டே பெரியார்  அதை வாங்கிப் படித்தார் என்று வைத்துக் கொண்டாலும் அப்பொழுது அவருக்கு வயது 88. தமது 88-ஆவது வயதிலும், உருப்பெருக்கியின் உதவியுடன் பெரியார் ஆழ்ந்து  படிக்கும் அளவிற்கு அவரது கருத்தைக் கவர்ந்தது ஓர் அறிவியல் நூல் என்பதுதான் வியப்பிலும் வியப்பு !! 

இந்த நூலின் தலைப்பு, "நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்".    அறிவியல் ஆய்வாளர்கள் குறித்து  நூல்கள் பல எழுதிய 'எட்னா யோஸ்ட்' என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய 'மாடர்ன் அமெரிக்கன்ஸ் இன் சயின்ஸ் அண்ட் இன்வென்ஷன்' (Modern Americans in science and invention - Edna Yost) என்ற நூலை, ”நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்" என்று தமிழில், தென் இந்திய சயின்ஸ் கிளப்பிற்காக மொழிபெயர்த்தவர் திரு. சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர். விஞ்ஞான அறிவு - நூல் பிரிவின் கீழ், 239 பக்கங்கள் கொண்ட இந்த நூலை  1967ஆம் ஆண்டில் ஹிக்கின்பாதம்ஸ் வெளியிட்டது. 




மொழிபெயர்ப்பாளர் திரு. சி. சீநிவாசன், (ஸி.ஸ்ரீநிவாஸன் என்றும் இருவேறுவகையிலும் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டவர்) ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  சுதேசமித்திரனில் ஸி.ஆர்.ஸ்ரீநிவாச அய்யங்கார் ஆசிரியராயிருந்த காலத்தில் அங்குப் பணியாற்றியவர் சி.சீநிவாசன்.  புகழ்பெற்ற பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்த பெருமை இவருக்கு உண்டு. வில்லா கேதர் (Death Comes for the Archbishop - Willa Cather);  எர்னஸ்ட் ஹெமிங்வே (For Whom the Bell Tolls -Ernest Hemingway);  ஆலன் பேட்டன் (Cry, the Beloved Country - Alan Paton)  போன்ற புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் சி.சீநிவாசன். 

அவர் மொழிபெயர்ப்பில் வெளியான அறிவியல் பொருண்மை கொண்ட நூலைத்தான் நாம் படத்தில் உள்ள நம் பெரியாரின் கையில் காண்கிறோம். 

அறிவியல் நூலின் விவரம்:  
"நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்"
நூலாசிரியர்: எட்னா யோஸ்ட் 
மொழி பெயர்ப்பு: சி.ஸ்ரீனிவாசன்
பதிப்பு: ஹிக்கின்பாதம்ஸ் -  1967
239 பக்கங்கள் - விஞ்ஞான அறிவு நூல்

நன்றி: Canadian Rationalist - செப்டெம்பர் மாத இதழ் 
பக்கம் : 68-71



கிடைக்குமிடம் : https://www.commonfolks.in/books/d/periyar-perumai-perithe


கட்டுரைக்கு உதவியவை:
[1] சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர், கால சுப்பிரமணியம், 2024-04-05, விருட்சம் நாளிதழ். 
https://daily.navinavirutcham.in/?p=21965

[2] தமிழ்நாட்டு நூற்றொகை-தமிழ்-1967. வே. தில்லைநாயகம், நூலகர், கன்னிமாரா பொது நூலகம். சென்னை. பக்கம்-154, 1976. 
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0002372_தமிழ்நாட்டு_நூற்றொகை_-_1967.pdf

[3] MODERN AMERICANS IN SCIENCE AND INVENTION (1941 HB-DJ) Edna Yost
https://www.ebay.com/itm/326574775402

[4] Wikipedia: Edna Yost: https://en.wikipedia.org/wiki/Edna_Yost


Saturday, December 7, 2024

Periyar's Arivu Sudar



 

Periyar's Arivu Sudar

— Dr. Jothi S. Themozhi


Periyar E. V. Ramasamy presented his ideology of atheism in a very condensed form in his book titled "Arivu Sudar." This is a small book of 48 pages, published by his Kudi Arasu Publishers back in 1961 for a price of 25 paise. This book contains six articles or chapters of rationalistic ideas presented in the following order:
What is Discipline?
What is Atheism?
What is Dharma?
Bigotry
Moksha and Hell
Sami, Samayam, Samayacharyas

The first chapter discusses the concept of "morality" and argues that it is a tool used to control and suppress people, particularly the weak, uneducated, and women. The author contends that morality, like concepts such as chastity and love, is used to manipulate, exploit, and oppress women.

Periyar challenges the conventional understanding of morality and questions the existence of truly moral actions or individuals. He suggests that actions are judged based on the power and influence of the people involved, rather than on any inherent moral value.

Periyar examines various professions and social roles, arguing that individuals in these positions often engage in immoral behavior while simultaneously accusing others of lacking morality. He concludes that morality is a social construct used to maintain control and dominance, and that true morality lies in treating others with respect and dignity.

The author proposes a new definition of morality: "treating others as you would like to be treated and fulfilling their rightful expectations." Periyar emphasizes the importance of reciprocity and empathy in moral conduct.

The second chapter discusses the concept of “atheism” and its implications. It explores the reasons for the widespread disapproval of atheism, particularly the notion that it denies the existence of God. Periyar highlights the historical conflict between theism and atheism, emphasizing the recent growth of atheist movements and organizations, especially in the 20th century.

He delves into the activities of such organizations, including their publications and outreach efforts. Periyar examines the perceived consequences of atheism, addressing concerns about morality and social order. He questions whether belief in God truly leads to virtuous behavior and challenges the idea that atheism results in moral decline. Periyar concludes by raising questions about the existence and nature of God, prompting readers to consider the evidence and arguments presented.

In the third chapter, Periyar discusses the concept of Dharma and emphasizes that Dharma is not a fixed set of rules but rather a dynamic principle that adapts to changing times, places, and individual circumstances. He critiques blind adherence to tradition and advocates for a rational approach to Dharma. Periyar highlights how practices considered Dharma in the past may be seen as foolish or harmful in the present.

He argues that true Dharma is that which benefits both individuals and society as a whole and concludes by emphasizing the importance of critical thinking and understanding in determining what constitutes true Dharma.

In the fourth chapter, Periyar discusses the nature of religion and its impact on society. He argues that despite claims of divine origin, religions often rely on propaganda and fear to maintain their following. Periyar criticizes the practice of religious conversion, highlighting the potential for manipulation and exploitation, particularly among vulnerable populations.

He also emphasizes that the perceived benefits of religion, such as social harmony and spiritual well-being, are not exclusive to any particular faith. The text concludes by advocating for a society free from religious divisions, promoting a secular, egalitarian model based on reason and social justice.

The fifth chapter discusses the concepts of heaven and hell in the context of religion and human behavior. Periyar argues that these concepts are man-made constructs used to control and manipulate people. He criticizes the use of fear and reward to enforce social norms and maintain the status quo. Periyar emphasizes that the pursuit of salvation and the fear of damnation hinder progress and perpetuate inequality. He calls for the rejection of these concepts in favor of reason and human values, advocating for a focus on social justice and individual well-being in this life rather than the afterlife.

In the final chapter, Periyar discusses the role of religion, particularly Hinduism, in India. He criticizes the concept of God, religious practices, and the authority of religious leaders. Periyar argues that these elements hinder social progress, rational thinking, and scientific advancement in the country.

He emphasizes the need for India to shed its superstitions and embrace reason, self-respect, and freedom of thought. He questions the necessity of God and religious rituals for individual morality and societal well-being. The author also points out the substantial financial burden of religious practices and suggests that these resources could be better utilized for education and development. Periyar concludes by asserting that India's path to liberation lies in rejecting religious dogma and promoting rationalism.

Through this book, he presents his opinion by questioning the Vedic religion, which taught people about high and low, and the people who spread the concept of God and religion throughout history.

He compares religions and Gods. Again and again, he points out that all religions are the same and that there is no difference in ideas of God, religion, ritual, soul, heaven, and hell among them. By questioning the need for all these religions and Gods, he highlights the folly of fighting in their name and greedily destroying the hard-earned material called festivals.

To those who answered that all this is to lead people well, to live according to Dharma, to observe morality, he responds with what true morality and Dharma are.

Even today, those who oppose and deny Periyar continue to scorn him because they cannot face the questions raised by Periyar with this much research and methodology. In the process of destroying the science-based superstitions they follow, they leave behind the truth. But his questions remain unanswered.

[In observance of Periyar's oncoming  death anniversary in December...]

 

Thanks :

Sakthi (December-2024) issue

Periyar's Arivu Sudar
— Dr. J othi S. Themozhi
Page 6-9

https://archive.org/details/sakthi-december-2024/page/5/mode/2up


#சக்தி, #பெரியார், #English, #Themozhi 


 

Monday, December 4, 2023

என்றென்றும் பெரியார்!

என்றென்றும் பெரியார்!  



ஆயிற்று;  பெரியார் ஈரோடு வெ.ராமசாமி அவர்கள் மறைந்த டிசம்பர்  24, 1973 நாள் முதல், இந்த டிசம்பர் 24, 2023  வரை அவர் மறைந்து 50 ஆண்டுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது!!!  இருப்பினும் தமிழ் நாட்டில் அவரது தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை!   அவர் மறைந்து  அரை நூற்றாண்டுக்குப் பிறகும் மறுக்கமுடியாத வகையில் பெரியாரின்  தாக்கம் இன்றும் தொடர்கிறது.  பெரியார் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம் திரைப்படம் உட்பட,  எண்ணற்ற நூல்களும், கட்டுரைகளும், கவிதைகளும், காணொளிகளும் வெளியாகி தமிழக வரலாற்றில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பங்களிப்பை விவரித்துள்ளன. அவரது பிறந்த நாள், மறைந்த நாள் ஆகிய நாட்களில் அவரை நினைவு கூர்வது மட்டுமின்றி,  இந்த ஆண்டின் பிற நாட்களிலும் அவர் ஒரு பேசு பொருளாகத்தான் இருக்கிறார் என்பதற்குப் பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.  இந்த ஆண்டு மட்டுமன்று,  கடந்த ஆண்டுகளிலும் இதே கதைதான்.  

இன்றிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், 2017 ஆம் ஆண்டில், சென்னை 40வது புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த நூல்  ‘பெரியார் இன்றும் என்றும்’  என்ற தலைப்பில் விடியல் பதிப்பகம்  வெளியிட்ட, சற்றொப்ப 1000 பக்கங்களைக் கொண்ட ஒரு பெரிய நூல். சமுதாயம், மதம், கலைகள், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் வகை பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருந்தது.  இது அதிகம் விற்ற நூல் என்பது மட்டுமல்ல,  ஒரே புத்தகக்காட்சியில் முதல் பதிப்பு உடனே விற்றுத் தீர்ந்துவிட,  இரண்டாம்  பதிப்பும் உடனே வெளியிடப்பட்டு அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. ஆம், அதிக எண்ணிக்கை என்பது மட்டுமல்ல,  ஒரே புத்தகக்காட்சியில் உடனுக்குடன் இரண்டு பதிப்புகளும் விற்று சாதனை படைத்த நூல் என்ற பெருமைக்கு உரியது பெரியார் குறித்த நூல்தான். பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு என்றைக்கும் மக்களிடம் வரவேற்பு உண்டு என்பதையே இது காட்டுகிறது என்று செய்தித்தாள்கள் செய்திகள் வெளியிட்டன[1].

பெரியார் மறைந்த இந்த 50 ஆம் ஆண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டும் கூட.  வைக்கம் போராட்டம் இந்தியாவின் சமூகநீதிக்கான ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.  கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரிலிருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, சென்ற நூற்றாண்டில் வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது.  பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டம் 1924 மார்ச் 30 முதல், 1925 நவம்பர் 23ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை வழிநடத்திய கேரள போராட்டத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அரசால் சிறையில் அடைக்கப்பட்டதும் இடையில் இப்போராட்டம் தொய்வடைந்தது.  இந்த நிலையில் கேரள போராட்டக் குழுவினரின் அழைப்பை ஏற்று வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. பங்கேற்றார். இப்போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தில் தடையை மீறிப்  போராடினார் என்று பெரியார் இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதல் முறை கைதாகி சிறைத்தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஊரை விட்டு வெளியேறாமல் தடை ஆணையை மீறி மீண்டும் போராட்டத்திற்குச் சென்றதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.  பெரியார் ஓர் அரசியல் கைதி என்ற தகுதியும் அவருக்கு  மறுக்கப்பட்டு சிறையில்  கடுங்காவல் தண்டனைக்கு  உள்ளாக்கப் பட்டார்[2].  

கேரளாவின் சனாதன ஆதிக்க சக்திகளால் அடக்குமுறைக்கு ஆளான ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டமாகத் தொடங்கிய வைக்கம் போராட்டம், இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த ஓர் உரிமைப் போராட்ட நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.  பின்னாளில் இந்தியாவில் நிகழ்ந்த பல கோவில் நுழைவுப் போராட்டங்களின் துவக்கப்புள்ளி தான் இந்த வைக்கம் போராட்டம். அண்ணல் அம்பேத்கர் 3.3.1930 அன்று முன்னெடுத்த, நாசிக் நகரில் உள்ள காலாராம் கோயில் நுழைவுப் போராட்டமும், வைக்கம் போராட்டம் தந்த தாக்கமே.    திரு.வி.க. அவர்கள் நடத்திய நவசக்தி இதழில் பெரியாரை வைக்கம் வீரர் என்று புகழ்ந்து பாராட்டினார். "வைக்கம் வீரர் சொற்பொழிவு"  என்ற தலைப்பில் பெரியாரின் போராட்டக் காலச் சொற்பொழிவை 'நவசக்தி' 1924ஆம் ஆண்டு இதழில்  திரு. வி. க.  வெளியிட்டார்[3].    வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பெரும் பங்களிப்பைப் போற்றி, கேரள அரசும்  தமிழ்நாடு அரசும் இணைந்து வைக்கம் போராட்ட நூற்றாண்டை ஏப்ரல் மாதம் 1, 2023-ஆம்தேதி அன்று நடந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தன. பெரியார் தொண்டினைப் போற்றி இரு மாநில அரசுகளின் சார்பிலும் வைக்கம் வீரருக்குப் புகழ் வணக்கம் செலுத்தப் பட்டது.  வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை ஏப்ரல் மாதம் 1-ஆம்தேதி முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாட கேரள அரசும் முடிவு செய்துள்ளது[4].  

அண்டை மாநிலத்தில் மட்டும் அல்ல, அயல்  நாட்டிலும் பெரியாரின் புகழ்க்கொடி உயரப் பறக்கிறது.  அண்மையில் நவம்பர் 5, 2023  அன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் “பெரியார் விழா 2023” நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில்  உரையாற்றினார் (https://www.youtube.com/watch?v=01sP83hB3kY).   சமூக ஊடகங்களில் உள்ளவர்களால் பெரியார் குறித்த இவ்வுரை  பரபரப்பாக  விவாதிக்கும்  நிலையையும் எட்டியது [5].  

மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகள்தான் என்ன? என்ற வியப்பு எழாமல் இருக்காது.  பெரியார் முன்னெடுத்த போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது அனைவரும் சமம் என்ற சமத்துவ அடிப்படையிலான அவரது சமூக நீதிக் கொள்கைதான். மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவர் மொழிந்த சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், மனித நேயம், பெண்கள் முன்னேற்றம், சமயச் சார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை ஆகியவை.  இவையாவும் பெரியாரியத்தின் அடிப்படைக் கூறுகள்.   ஆதிக்கங்களுக்கும் அடக்குமுறைக்கு எதிரானவர் பெரியார்.  அவரின் கொள்கைப்படி பேதம் கூறும் சாதியை எது, அல்லது எவர் முன்னிறுத்தினாலும் அவர் எதிர்ப்பார். அது யாராக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி. நலிந்தவர் நலன் அவருக்கு  முக்கியம்.  இதுதான் பெரியார் தம் சொற்பொழிவுகள் மூலமும் எழுத்துக்கள் மூலமும் மக்களுக்கு ஊட்டிய விழிப்புணர்வு, தமிழ் நாட்டிற்கு அவர் அளித்த மறுமலர்ச்சி.  

"உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகிறது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்), வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது" [6] என்று மிகச் சரியாக இந்தியாவின் சமத்துவமின்மை எவ்வாறு பிற உலக நாடுகளில் இருக்கும் சமத்துவமின்மையில் இருந்து வேறுபட்டது என்று அதன் அடிப்படையை இனங்கண்டார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் [குறள் -48]   என்பதற்கு இணங்க இந்தியாவின் சாதிபேதம்  கூறும் நோய்க்குப் பல நூறு ஆண்டுகளாக அதைக் கட்டிக் காக்கும் வைதீகச் சமயத்தின்  பிறப்பு அடிப்படையிலான பேதம் கூறும் சனாதனக் கருத்துகள்தான் ஆணிவேர் என்பதையும் இனங்கண்டு கொண்டார். அந்த நச்சு மரத்தை அழிக்க வேருடன் நீக்க நாத்திக வழியில் தாக்குதல் தொடுத்தார்.  சுருக்கமாக, பெரியாரின் கொள்கை, பெரியாரின் சமூக பங்களிப்பு என்பன,  மனிதநேயமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்ததும், அந்த மனிதநேயமற்ற நடவடிக்கைக்கு மூலகாரணத்தைக் குறிவைத்துத் தாக்கி ஆட்டம் காண வைத்ததும் ஆகும்.

பெரியார் நடத்திய போராட்டங்களின் பட்டியல் நெடியது. அத்தனை போராட்டங்களின் மையக் கருத்து எதுவென நோக்கினால், அவை அனைத்திற்கும் அடிப்படை நோக்கம் ஏதோ ஒரு அடக்குமுறையை எதிர்த்துச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களாகவே அவை இருக்கும். மனிதநேயம், சமத்துவம், சமூகநீதி ஆகியன எவருக்கோ எந்தவகையிலோ மறுக்கப்பட்டுள்ளது என்று போராட்டக் களம் இறங்கியிருக்கிறார் பெரியார்.

ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்தச் சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன். அந்தச் சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து, இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்தச் சாதியின் பக்கமே நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன். அந்தத் தொழிலாளி வீட்டிற்குப் போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்தப் பெண்ணிற்காக நான் நிற்பேன்.  மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி என்று  தனது நிலைப்பாட்டை விளக்கியவர் பெரியார்.

      "நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்
      நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
      பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
      பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்"
என்று கவிஞர் கண்ணதாசன் பெரியாரைப் பாராட்டி கவிதை வடித்துள்ளார்[7].

பெரியார் மண் என்று பெருமிதத்துடன் இன்று அறிவித்துக் கொள்ளும் தமிழ் நாட்டின் வரலாற்றிலிருந்தோ,  இந்திய அரசின் வரலாற்றிலிருந்தோ அவரின் பங்களிப்பை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதபடி ஆழமான சுவடுகளைப் பல துறைகளில் பதித்துவிட்டுச் சென்றுள்ளார் பெரியார்; அவற்றில் குறிப்பிடத்தக்கச் சில:  

இந்திய மற்றும் தமிழகச் சட்ட மாற்றங்களில் பெரியாரின் பங்களிப்பு:
இந்தியாவின் புதிய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்தபிறகு, குமாரசாமி ராஜா ஆட்சியில் நாட்டின் புதிய அரசியல் சட்டத்தின் துணையுடன் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருந்த  கம்யூனல் ஜி.ஓ. வை (1920களில் நீதிக்கட்சி உருவாக்கிய வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணையை) முறியடிக்கும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. செண்பகம் துரைசாமி என்பவரும், சீனிவாசன் என்பவரும் தொழிற்கல்வி  மாணவர் சேர்ப்பில் கம்யூனல் ஜி.ஓ. குறுக்கீடு இருக்கக் கூடாது என்று வழக்குத் தொடுத்தனர். தமிழக அரசின் கம்யூனல் ஜி.ஒ. என்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணை இந்திய அரசின் சட்டப்படி செல்லாது என்று தலைமை நீதிபதி பி. வி. இராசமன்னார் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதுவரை இடவொதுக்கீடு, சமூகநீதி என்று போராடிப் பெற்ற தமிழக அரசின் அத்தனை முயற்சியும் தீர்ப்பால் செயலற்றுப் போனது. அரசியல் சட்டத்தினாலேயே மக்களின் உரிமை பறிக்கப்பட்ட அவலநிலை அது.   இந்தியாவின் சட்டவரைவை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் இடவொதுக்கீட்டுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு சட்டத்தையும் சட்டவரைவில் இடம்பெறச் செய்து, பார்ப்பன மாணவர்கள் சார்பில் ஒரு வழக்கையும் தொடுத்து, அவரே வாதாடி சட்ட வரையறையைக் கொண்டே இடவொதுக்கீட்டு ஆணையை முறியடித்தும் காட்டினார் என்பது அன்று தமிழகத்தின் முதுகில் குத்தப்பட்ட நிகழ்வு [8].

ஒரு தீர்ப்பு சட்டப்படி சரி, ஆனால் அறத்தின் அடிப்படையில் பிழை என்றால் சட்டத் திருத்தம் ஒன்றுதான் மீண்டும் அறத்தை நிலை நிறுத்தும். ஆகவே, தீர்ப்பையடுத்து ஈ.வெ.ரா. பெரியாரின் தலைமையில், திருச்சியில் நடந்த இடவொதுக்கீடு குறித்த மாநாட்டில் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறைக்காகச் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இங்குதான் இட ஒதுக்கீட்டில் பெரியாரின் பங்களிப்பின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றும் இடவொதுக்கீட்டின் தேவையையும் அதன் வரலாற்றையும் அறியாதவர் எண்ணற்றவர் என்பது ஒரு பெரிய குறைபாடு. கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் பெரியாரின் கீழ் ஒன்று திரண்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜரும் ஆதரவு அளித்தார். பெரியாரின் தலைமையில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கை 'இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது', அனைவருக்கும் இடவொதுக்கீட்டு உரிமையை மீட்டுக் கொடுத்தது. தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நேரு தலைமையிலிருந்த ஒன்றிய  அரசை உலுக்கியது. போராட்டத்திலிருந்த நியாயம் உணரப்பட்டது. இந்தியா அரசின் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே இட ஒதுக்கீடு அளிக்கப்பட அரசியல் சட்டத்தில் 15(4) பிரிவு (ஆர்ட்டிக்கில் – 15(4)) என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கல்வி மற்றும் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வரையறை உறுதி செய்யப்பட்டது. கல்வி மற்றும் சமூகவாழ்வில் முன்னேற வேண்டிய எந்த ஒரு வகுப்பினருக்கான திட்டங்களில் அரசின் எந்த ஒரு சட்டமும் தடை செய்ய முடியாத வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பெரியாரின்  போராட்ட நடவடிக்கை இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது என்பதும் இந்திய அரசியல் வரலாற்றில் நிலை பெற்றுவிட்டது. இன்றைய ஒன்றிய அரசின் ‘அரியவகை ஏழைப் பிரிவு’ என்ற உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க எடுத்த முடிவு இந்தச் சட்டத்திற்குப் புறம்பானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர் என்ற சமூக மாற்றத்திற்காக மரணத்திற்கு முன்னர் அவர் அளித்த இறுதி உரை வரை போராடியவர் பெரியார். சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த ஆண்டு 1974 ஜனவரியில் நடத்தத் திட்டமிட்ட “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியின் நோக்கம் மற்றும் தேவை என்ன என்பதை விளக்கி, அதில் மக்களின் கடமை என்ன என்று சிந்திக்கச் சொல்லி சமுதாய இழிவு ஒழிப்பு கிளர்ச்சியில் பங்கேற்க அவரது தொண்டர்களை(தோழர்களை) ஆயத்தமாக்குகிறார். தந்தை பெரியாரின் இந்த இறுதிப் பேருரையை, ‘மரண சாசனமாகவே அமைந்துவிட்ட தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை’ என்றே பலரும் குறிப்பிடுவதை அறிய முடிகிறது[9].

அவரது இந்தப் போராட்டத்தின் துவக்கம் 1920 களிலேயே தொடங்கியது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.  "ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள பிறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது" என 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சேலம் 3-ஆவது அரசியல்  மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது [10]. இவ்வாறாக ஒரு  தீர்மானம் முன்மொழியப்பட்டு சுமார் 93 ஆண்டுகள் கழிந்த பிறகு  இத்தீர்மானம் பல போராட்டங்கள் மற்றும்  சட்டச் சிக்கல்களுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. தந்தை 'பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' இதனால் அகற்றப்பட்டது[11].

சாதி மறுப்பு திருமணங்களும், சீர்திருத்த முறைப்படி வைதீகச் சடங்குகள் இன்றி நடை பெறும் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றதிலும் பெரியாரின் பங்களிப்பை எவராலும் மறுக்க இயலாது.  சாதிக்கான கட்டமைப்பு, சொந்த சாதி திருமண முறையால் வலுவடைகிறது என்பதால் பெரியார் காதல் திருமணங்களையும் கலப்புத் திருமணங்களையும் ஆதரித்துச் சாதிக் கட்டமைப்பை ஒழிக்கப் பாடுபட்டார்.  வைதீக  முறையில் நடக்காத சீர்திருத்தத் திருமண முறையைச் சமுதாய முன்னேற்றத்திற்கான  வழியாகக் கண்டார்.  அதற்கான சட்ட வடிவம் தான் சுயமரியாதைத் திருமணச் சட்டமாக அவரது கொள்கையைப் பின்பற்றிய அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் அண்ணாதுரையால் நடைமுறைப் படுத்தப்பட்டது. நவம்பர் 28, 1967 ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள். [12].

சமூக மாற்றங்களில் பெரியாரின் பங்களிப்பு:
ஐம்பது அகவையை எட்டிவிடும் பொழுதில், சமூகத் தொண்டின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த பெரியார், 1927ம் ஆண்டில் தனது பெயருக்குப் பின்னொட்டாக இருந்து வந்த ‘நாயக்கர்’ என்ற சாதிப்பட்டத்தை நீக்கிவிடுகிறார். தமது “குடிஅரசு” 25-12-1927 இதழ் முதற்கொண்டு ‘ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி’ என்று அறிவித்து சாதிப்பெயரைத் தவிர்த்துவிடுகிறார். பிறகு, 1929இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ எனும் நான் இன்றுமுதல் ‘ஈ.வெ.ராமசாமி' என அழைக்கப்படுவேன்" என்று அறிவித்து அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.   அதே மாநாட்டில்  பெரியாரோடு இணைந்து சௌந்தரபாண்டிய நாடார், விருதுநகர் ராமசாமி நாடார் உள்ளிட்ட பல தலைவர்களும் பெரியாரின் தொண்டர்கள் பலரும் தங்களின் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கிக் கொண்டனர்[13]. இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பெரியாரின் தூண்டுதல் காரணமாகச் சாதிப்பெயரைத் தங்கள் பெயருடன் இணைப்பதைக் கைவிட்டனர் தமிழர்.  ஒருவரின் சாதிப் பின்னணியை வெளிப்படையாகக் கேட்பது தவறான பண்பாடு என்று கூசும் அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது, அவ்வாறு மாற்றியவர் பெரியார்.  

பெண்ணுரிமைக்கு என்று உரத்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.  ஓர் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணுக்கும் இருக்கிறது என்று சென்ற நூற்றாண்டிலேயே  பெண்ணுரிமை பேசியவரும்,  பெண்ணுக்கு எதிரான சமூக அடக்குமுறைகளை ஒழிக்கப் போர்க்கொடி உயர்த்தியவர் அவர்.   'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற பெரியாரின் நூல் 1942-இல் வெளியான  79 பக்கங்கள்  மட்டுமே கொண்ட ஒரு  சிறு நூல்.  இந்த நூல்  பெண் ஏன் அடிமையானாள் என்று பல கோணங்களில் பெண்களின் நிலையை அணுகி,  பெண்ணுரிமை அற்ற நிலையை விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியது[14].   ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்று சென்ற நூற்றாண்டிலேயே கேள்வி எழுப்பிய பெரியார், ஆண்களுக்கு இருக்கும்  அனைத்து உரிமைகளும்  பெண்களுக்கும்  கொடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்தை முன்வைத்து பெண்களின் நிலையை மாற்றப் போராடினார். பெண் ஏன் அடிமையானாள் நூல் இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக் கொண்டிருக்கிறது.  தங்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிப் போராடிய  ஈ.வெ.ரா.  அவர்களைப் பெண்கள் பெரிதும் மதித்தனர். இந்தி எதிர்ப்பையொட்டி சென்னையில் 13.11.1938-ல் நடைபெற்ற தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் தந்தை ஈ. வெ. ரா. அவர்களுக்கு  “பெரியார்” எனும் பட்டம் பெண்கள் சார்பாக அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களால் வழங்கப்பட்டது[15].

குடிஅரசு 20.1.1935 தேதியிட்ட இதழிலிருந்து எழுத்துச் சீர்திருத்தத்தைப் பெரியார் நடைமுறைப்படுத்தினார். பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1978-79 ல் எம்.ஜி.ஆர்.  தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு,  1935 பெரியார் இயக்கம் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் (அய், அவ் மாற்றங்களைத் தவிர்த்து) தவிர மற்ற மற்ற மாற்றங்களை ஏற்றுச் செயற்படுத்தியது[16].  இவ்வாறாக, தமிழ் மொழி வரலாற்றிலும்  பெரியார் எழுத்து சீர் திருத்தம் என்ற முறையும் நிலைத்துவிட்டது.

தமிழக வரலாற்றில், இந்திய அரசியலில், இந்திய மற்றும் தமிழ் நாட்டுச் சட்ட வரையறைகளில், தமிழ்மொழி வளர்ச்சியில், மனிதநேய சமத்துவ மாற்றங்களில் என நிலையாக இடம் பிடித்தவர் பெரியார்.  மறைக்கவோ மறுக்கவோ முடியாதபடி தன் தடத்தைப் பதித்துச் சென்றவர் பெரியார்.  சாதி ஒழிப்பு, சாதிப் பெயர் மறுப்பு, எழுத்துச் சீர்திருத்தம், சுயமரியாதை, பகுத்தறிவு, கருத்துரிமை, பெண்ணுரிமை, சட்ட வரையறை திருத்தம் என்று எந்த ஒரு துறையிலும் அவர் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் தடம் பதித்துச் சென்றுள்ளார் என்பதை அவர் மறைந்து 50 ஆண்டுகள் கழித்தும் அவர் பேசு பொருளாக இருப்பது நிரூபிக்கிறது.  அவர் மறைவிற்குப் பிறகு பிறந்த தலைமுறையினர் இடையில் பெரியாரின்  புரட்சிக் கருத்துகள் போற்றப்படுகிறது.  பெரியார் பிறந்தநாளைச் சமூக நீதி நாள் என்று செப்டம்பர் 06, 2021 முதல் தமிழகம் கொண்டாடி வருகிறது.   பெரியார் என்றென்றும் நினைவு கூரப் படுவார்.   பெரியாரின்  தாக்கம் என்றென்றும் தொடரும்.

வாழ்க பெரியார் !! பெரியார் புகழ் ஓங்குக!!


உதவிய நூல்களும் செய்திக் குறிப்புகளும்:  
1.  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகம்
http://www.noolulagam.com/2017/01/31/168797/

2.  வைக்கம் போராட்டம்: சமூகநீதிக்கான வரலாற்றுத் திருப்புமுனை, முனைவர். தேமொழி. திராவிடப் பொழில்— திராவிட ஆய்விதழ், தொகுதி: 3, இதழ்:  2 , ஏப்ரல் - ஜூன் 2023. பக்கம் 69-75.
https://dravidapozhil.pmu.edu/pdf/Vaikom-Poraattam.pdf  

3.  வைக்கம் வீரர் சொற்பொழிவு - திரு. வி. கலியாணசுந்தரனாரின் 'நவசக்தி' 1924 இதழ்.

4.  வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி அழைப்பு.
https://www.dailythanthi.com/News/State/vaikam-protest-centenary-kerala-chief-minister-calls-on-chief-minister-mk-stalin-925668

5.  விதைத்தவர் பெரியார் : விளைந்தது சந்திரயான் ..., ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நவம்பர் 9, 2023
https://minnambalam.com/featured-article/periyar-and-science-mylswamy-annadurai-speech-in-singapore/

6.  பெரியார், 14.12.1931 திராவிட இயக்க இதழ்கள்: தொகுதி 2

7.  "பிறப்பினிலே பெரியாராய்த் தான்பிறந்தார்!", கவிஞர் கண்ணதாசன். பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில் -கி.வீரமணி நூலிலிருந்து.  

8.  வகுப்புரிமைப் போராட்டம், க. அன்பழகன், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத் தெரு, சென்னை.

9.  தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை: மரண சாசனம்,  தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, கிண்டில் பதிப்பு, 2017.

10. சேலம் 3-வது அரசியல்  மகாநாடு. குடி அரசு. 13-11-1927 இதழ். பக்கம் - 13

11.  அனைத்து ஜாதி அர்ச்சகர் வழக்கு: நீதிமன்ற தீர்ப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம்?, முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ், 22 ஆகஸ்ட் 2022. https://www.bbc.com/tamil/india-62633574

12.  சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை!, ரமணி மோகன கிருஷ்ணன், நவம்பர் 29, 2015.
https://www.vikatan.com/literature/arts/55766-

13.  "முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு”, 1929 டிசம்பர், ‘குடிஅரசு’ இதழ்கள்

14.  பெண் ஏன் அடிமையானாள்?, தந்தை பெரியார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.  பக்கங்கள்:79 1942.  

15.  ‘தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு’ , 20.11. 1938, ‘குடிஅரசு’ இதழின் தலைப்புச் செய்தி.  

16. பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து, முதல் தொகுதி, சிந்தனையாளர் கழகம், 1974 – http://dvkperiyar.com/wp-content/uploads/2015/11/EVRT-VOL-1-part-1.pdf



நன்றி:
தமிழணங்கு 
டிசம்பர்,   2023


#பெரியார்,  #தமிழணங்கு, #Themozhi  



Monday, March 6, 2023

பெண்ணடிமை நிலை குறித்து பெரியாரின் பார்வை

பெண்ணடிமை  நிலை குறித்து பெரியாரின் பார்வை


பெண்களின் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று பெண்களின் தற்போதைய முன்னேற்ற நிலையைக் கருத்தில் கொண்டால், ஆண்களுக்கு நிகரான சட்ட உரிமைகளும்  பாதுகாப்புகளும்  பெண்களுக்குக்  கிடைக்க இன்னும் 286 ஆண்டுகள் ஆகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.  

பெண்மையைப் போற்றுகிறோம் என்று உலக மகளிர் நாளைக் கொண்டாடும் தமிழர் எவரும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணுக்கும் இருக்கிறது என்று சென்ற நூற்றாண்டிலேயே  பெண்ணுரிமை பேசியவரும்,  பெண்ணுக்கு எதிரான சமூக அடக்குமுறைகளை ஒழிக்கப் போர்க்கொடி உயர்த்தியவருமான  தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களை நினைவு கூராமல் இருக்க முடியாது.

விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற பெரியாரின் நூல் 1942-இல் வெளியானது. இந்த 79 பக்கங்கள்  கொண்ட சிறு நூலில் 1. கற்பு, 2. வள்ளுவரும் கற்பும், 3. காதல், 4. கல்யாண விடுதலை, 5. மறுமணம் தவறல்ல, 6. விபச்சாரம், 7. விதவைகள் நிலைமை, 8. சொத்துரிமை, 9. கர்ப்பத்தடை, 10. பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழிய வேண்டும் என்ற 10 தலைப்புகளின் கீழ் பெண் ஏன் அடிமையானாள் என்று ஆராய்கிறார் பெரியார்.

கற்பு என்ற சொல்லின் பொருள் ஆராய்ச்சியில் துவங்கும் முதல் அத்தியாயத்தில், "கல்வி, நேர்மை போன்றவற்றைக் குறித்த கற்பு என்ற  சொல் எவ்வாறு மகளிர் நிறை என்பதைக் குறிக்கும் பெண்களின் பாலினக் கலவி ஒழுக்கத்திற்கான ஒரு சொல்லாக மாறியது என்று விளங்கவில்லை" என்று அதிரடியாகத் துவக்குகிறார் பெரியார்.  ஒழுக்கம் என்பது மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவர்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டும்; அதுதான் ஒழுக்கம் என்று ஆணித்தரமாகக் கூறியவர் பெரியார் (விடுதலை, 7.2.1961).  

ஒழுக்கம் என்பதற்கு ஒரு வரையறைதான் இருக்க இயலும். ஆணுக்கு ஓர் ஒழுக்க வரையறை என்றும் பெண்ணுக்கு ஓர் ஒழுக்க வரையறை என்றும்  இருக்க வாய்ப்பில்லை.  கற்பு, விபச்சாரம், மறுமணம், மணவிலக்கு, சொத்துரிமை போன்றவற்றில் பாலினத்திற்கு ஒரு விதி என்று வகுத்து வைப்பது நீதி அல்ல. ஆணுக்கென்று ஒரு நீதியும் பெண்ணுக்கென்று ஒரு நீதியும் இருந்தால் அது அநீதி என்று சொல்லத் தேவையில்லை.  இது போன்ற தன்னல நோக்கம் கொண்ட சூழ்ச்சி, பெண்ணின் வாழ்வுரிமையை, அடிப்படைத் தேவைகளை முடக்கும் நோக்கில் பெண்ணை அடிமைப்படுத்த வடிவமைக்கப்பட்டவை.  வாழும் சமுதாயத்தில் சரிபாதியினரான பெண்களின் தனிமனித உரிமைகளை மதிக்காத நிலை மனிதச் சமுதாயத்திற்குத் தேவை இல்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் எந்த மேன்மையும் இருக்காது.

அடுத்து, குறளில் "வாழ்க்கைத் துணைநலம்", "பெண் வழிச் சேரல்"  அதிகாரங்களின் குறள்கள் பெண்ணடிமைக் கருத்துகளைக் கொண்டவையாக இருக்கின்றன என்று வள்ளுவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். வள்ளுவர் ஒரு பெண்ணாயிருந்து எழுதி இருந்தால் இது போன்ற கருத்துகளில் எழுதி இருக்கமாட்டார். தன்னல நோக்குடன் வலிய  நிலையில் ஆதிக்க மனப்பான்மையிலிருந்த ஆண்களால் பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகள் சமைக்கப்பட்டு  பெண்கள் வாழ்வில் அவை திணிக்கப்பட்டு அவை பெண்களை அடிமைத் தளையில் சிக்க வைத்துள்ளது. எதிர்க்கேள்வி எழுப்பாமல் இதனைப் பெண்களும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கியதுதான் அவர்களின் அடிமை நிலைக்குக் காரணம். கீழ் சாதி என்பவர்கள் எவ்வாறு தங்களுக்கு விதிக்கப்பட்ட அந்த நிலையை  மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்கிறார்களோ  அது போன்றே பெண்ணடிமை நிலையும் உருவாகிவிட்டது என்கிறார் பெரியார்.  

ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்ற அவருடைய கேள்வி எவரையும் சிந்திக்க வைக்கும்.  பெண்களுக்கு விடுதலை என்ற நிலை உருவாக, கற்பு என்பதை  இரு பாலருக்கும் பொதுவாக்கி,  ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுக்கப்படுதல் வேண்டும் என்பது அவரது முடிபு.  நாட்டில் இருக்கும் 99.80% பெண்களுக்கு நமக்கு ஏன் இந்த அடிமை நிலை என்ற எண்ணம் கூட வருவதில்லை என்கிறார் பெரியார்.

காதலுக்கு என்று  எந்தச் சிறப்புத் தன்மையும்  இல்லை.  இயல்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இனப்பெருக்கப்  பருவத்தில் ஏற்படும் சேர்க்கை ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல் என்பது தனித்துவம் கொண்ட வேறு சிறப்புப் பெற்றது அல்ல. இந்தியாவைப்  பொறுத்தமட்டில் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்ற  அடிப்படை நோக்கம் கொண்டதாகத் திருமணம் என்ற இல்லற உறவு மாற்றப்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்றும் நோக்கில் இயற்கைக்கு மாறாக,  மணவுறவிற்கு  ஒரு தெய்வீகத் தன்மை கற்பிக்கப்பட்டு சடங்குகள்  மூலம் பெண்களை அடிமைப் படுத்துவதை மறைத்துப் பெண்கள்  வஞ்சிக்கப் படுகிறார்கள் என்கிறார் பெரியார்.  

விருப்பமில்லாத மணவாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று ஆணையோ அல்லது பெண்ணையோ கட்டாயப்படுத்துதல் சரியல்ல.  மணவுறவில் இருந்து விலக விரும்புவோருக்கு மனித உணர்வுகளுக்கு முதன்மை நிலையும் மதிப்பும் அளித்து மணவிலக்கு கொடுக்கப்படவேண்டும். விருப்பமில்லாத நிலையில் வாழும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் மணமுறிவு செய்துகொள்ளவும் தங்கள் விருப்பப்படி வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உரிமையிருக்கவேண்டும் என்பது பெரியாரின் கருத்து. மணம் என்பது மணமக்கள் தங்கள் வாழ்க்கைச் சவுகரியத்திற்காகச் செய்துகொள்ளப்படும் ஓர் ஒப்பந்த ஏற்பாடு.   ஆணுக்கு மனைவி இறந்த பிறகு அல்லது கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இல்லாத நிலையில் அல்லது மணவாழ்க்கை சரியாக அமையாத வேறு பல சூழல்களில் ஆண் மற்றொரு பெண்ணை மணம் செய்வது ஏற்கப்படுகிறது. பெண்களுக்கோ வாழாவெட்டி என்ற பட்டம் கிடைக்கிறது.

அன்பும், ஆசையும் இல்லாத அல்லது அவை தனக்கு ஏற்படாத ஓர் இடத்தில் ஒருவர்  எப்படி வாழ்வது? மணம் செய்து கொண்டாகிவிட்டதே என்று அன்பையும், ஆசையையும், இன்பத்தையும்,  திருப்தியையும் தியாகம் செய்து மணவாழ்க்கையைத் தொடர்வது சரியான முறையா? என்ற கேள்விகளை எழுப்புகிறார்.  ஆகவே, மணம் செய்து கொண்ட மணமக்கள் (கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ) மணவுறவில் இருந்து விடுவித்துக்கொண்டு மற்றொருவரை மறுமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்ற கருத்தின் அடிப்படையில் செங்கல்பட்டு மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, தொடர்ந்து ஈரோடு மாநாட்டில் அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தையும் நிறைவேற்றச் செய்திருக்கிறார் பெரியார். இது சென்ற நூற்றாண்டில் அவர் காலத்தில் மணவிலக்கு என்ற உரிமை எந்த அளவிலிருந்தது என்பதைக் காண்பிக்கிறது.

பொதுவாகப் பெண்கள் நிலைமை மாறியாக வேண்டும் என்கிறார் பெரியார். எந்தெந்தக் காரணத்தால் கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லையோ, ஒத்துவரவில்லையோ அந்தந்தக் காரணங்களால் மனைவிக்கும்  கணவனைப்  பிடிக்காதபோது,  மறுமணம் செய்து கொள்ள ஆணுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும். மறுமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் பொருந்தும்  என்றும்,  உலக வாழ்விலும், சமுதாயத்திலும், சட்டத்திலும், மதத்திலும் ஆண்களுக்குள்ள சவுகரியங்களும், உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கவேண்டுமென்றும்  தீர்மானமாகக் கூறுகிறார்.

விபச்சாரம் செய்கிறாள் என்று பெண்ணைத்தான் உலகோர்  வசை கூறிக் குற்றம் சொல்லுகின்றார்களே தவிர, அவளின் அப்படிப்பட்ட  நிலைக்கு ஆணைக்  குற்றம் சொல்லுவதில்லை. இது போன்ற ஒழுக்கக் குறைவு என்ற பழிச் சொற்களும் ஆண்களுக்குக் கிடையாது.  "விபச்சாரம்" என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டும்.   பெண்களை ஆண்களின் அடிமைகள் என்றும், விலைக்கு வாங்கவும் விற்கவும் வாடகைக்கு விடவும் கூடியவர்கள் என்றும் கருதும் நிலையின் வெளிப்பாடுதான்  விபச்சாரம். கற்பு என்பது போல  விபச்சாரம் என்பதும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்களின்மீது சுமத்தப்படாமலும், ஆண்கள் அதற்காகப் பயப்படவோ அவமானப்படவோ கட்டுப்பட்டிருக்கவோ தேவையில்லை என்று இருக்கும் சமுதாயப் போக்கு பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு.  கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு மட்டுமின்றி அவை பெண்களை அடிமையாக்கவும், கட்டுப்படுத்தவும் உண்டாக்கப்பட்ட சுயநலச் சூழ்ச்சி நிறைந்த தன்மை  கொண்டது என்கிறார் பெரியார்.

நாட்டுக்கும் சமூகத்திற்கும் உரிமை கேட்டு உரிமைக்குரல்  எழுப்பும் எவரும்  சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ள பெண்கள் உரிமையின்றி முடக்கப்பட்டுக் கிடப்பதில் கவலை கொள்வதில்லை என்று சமூக அக்கறை கொண்டவர்கள் பெண்களின் நிலையில் அக்கறை கொள்ளாததைச் சாடுகிறார் பெரியார். இந்து மதத்தில் மனைவியை இழந்தாலும் வயதான ஆண்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால் இல்லறத்தை மேற்கொள்ளாத பதின்ம வயது பெண்ணாக இருந்தாலும் கணவனை இழந்தால் காலம் முழுவதும் வாழ்க்கைத்துணை இன்றி வாழக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடிய இரக்கமற்ற நிலையும் உண்டு.  உடன்கட்டை ஏறுவது ஒருநாள் துன்பம் என்றால்,  கைம்பெண்ணாக வாழ்வதோ வாழ்நாள் முழுதும் தாங்க முடியா சித்திரவதைக் கொப்பான துன்பம் என்று பெண்கள் நிலையிலிருந்து சிந்தித்துள்ளார் பெரியார்.  

திருமணம் என்ற உறவுக்குள் நுழையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு நிலையிலும் வேறுபாடு காட்டப்பட்டு பெண்களின் உரிமைகள் முடக்கப்பட்டே வந்துள்ள நிலையைக் காண முடிகிறது.  மனிதச் சமூகத்தில் சரிபாதியான எண்ணிக்கை கொண்ட பெண்களுக்குப் பிறப்பிலேயே உரிமைகள் மறுக்கப்படுவது தொடங்கிவிடுகிறது.  இயற்கைக்கு மாறான வாழ்வியலை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். விதவைகளுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை ஏற்படுத்துவதும் பெண்ணடிமை நிலை நீக்குவதில் ஒரு பகுதி. பெண்ணடிமை நிலை ஒழிய வேண்டும் என்றால் பெண்களை அடிமையாக நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும் என்கிறார் பெரியார்.  

இந்தியாவில் தனி மனிதர்க்கு எதிரான  கொடுமைகள் பல இருந்து வந்தாலும், அவற்றுள் அவசரமாய் ஒழிக்கப்பட வேண்டியவை தீண்டாமையும், பெண்ணடிமை நிலையும் என்கிறார் பெரியார்.  ஆண்களைப்போன்ற சட்டப்படி சொத்துரிமை பெறுவதற்குப் பெண்கள் களத்தில் இறங்க வேண்டும், கிளர்ச்சி செய்ய வேண்டும்.  பெண்களுக்குச் சொத்துரிமை இருந்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவிதமான அசவுகரியங்களும் ஒழிந்துபோகும். பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இரண்டும் கிடைத்துவிட்டால் தானே பொருளீட்டவும், தங்கள் வாழ்க்கைத்துணையைத் தாங்களே தேர்ந்து எடுத்து அவர்களுடன் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தும் வாய்ப்பும் ஏற்படும்.  பெண் அடிமை நிலைக்கான பல காரணங்களில்  சொத்துரிமை இல்லாதது என்பதே மிகவும் முக்கியமான காரணம் என்பது பெரியாரின் கருத்து.

கர்ப்பத் தடையின் தேவை குறித்து அனைவரும், அக்காலத்தில் கொண்டிருந்த,  இக்காலத்திலும் கொண்டிருக்கும் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் கருத்து.  பெண்களின் உடல்நலம்,  நாட்டின் பொருளாதார நிலை, குடும்பச் சொத்து பிரிவடையாமல் இருக்க என்று பற்பல காரணங்களை முன்வைத்து மற்றவர்கள்  கர்ப்பத்தடை தேவை என்று கூறுவார்கள்.  மாறாக, பெண்ணடிமை நிலையிலிருந்து பெண்கள் விடுதலையடையவும், தற்சார்புடன் வாழவும்  கர்ப்பத்தடையை பெரியார் வலியுறுத்துகிறார்.  இதற்காகப் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிடுவதையும் பெரியார் வரவேற்கிறார்.  பெண்கள் மட்டுமல்ல, பிள்ளைகள் பலரைப் பெற்ற ஆண்களும் வாழ்வில் இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  அதிலும் சொத்து, தொழில், வருவாய் போன்றவை இல்லாத பெண்கள் தங்கள் பிள்ளைகளின் நலம் கருதி பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.  இதை முன்னிறுத்தி   பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட வேண்டும் என்று கூறுகிறார்.  ஆண்களுக்கு வாய்ப்பிருப்பது போல பெண்களுக்கும் பிரம்மச்சாரிய வாழ்க்கை முறை அமைவது அவர்களுக்கு விடுதலை தரும்  என்றும் கூறுகிறார்.  

உலகில் எந்தச் சமயமும் பெண்களை  அறத்துடன் நடத்தியதில்லை.  சமய விதிகளை அமைத்து பெண்களைக் கட்டுப்படுத்தின; கட்டுப்படுத்துகின்றன என்பது உலகறிந்த உண்மை.  இந்தியப் பெண்களின் அடிமைநிலை பற்றிக் குறிப்பிடுகையில்  பெண் என்றும் எந்த வயதிலும் தந்தை, கணவன், பிள்ளைகள் என்று எவருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்க வேண்டும் என்று  இந்துமதச் சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன. மத சாஸ்திரங்களின் விதிகள் ஆண்களுக்குப் பெண்ணை அடிமையாக்க வேண்டுமென்பதல்லாமல் வேறில்லை என்று உறுதிப்படக் கூறுகிறார். இவ்வாறு தங்கள் மீது திணிக்கப்படும் கருத்துகளைப்  பெண்களும் ஏற்றுக் கொண்டு வாழ்வதால் பரம்பரை பரம்பரையாக அடிமை வாழ்வு வாழ்கிறார்கள் என்கிறார்.  அத்துடன், இன்னமும் பெண்களுக்கு, தாங்கள் ஆண்களைப்போல முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. ஆண் இல்லாமல் பெண்ணால்  வாழ முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் கருதுவதற்கு அவர்களுக்குப் பிள்ளைகள் பெறும் நிலையும் அதையொட்டிய கடமைகளும் இருப்பதானால்தான்.  அதனால் அடுத்தவர் ஆதிக்கத்திற்கு இடமேற்படுகிறது.  அதனால் பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் நிலை இடையூறாக அமைகிறது.  பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால், உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு அதனால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடும் என்ற கேள்வியைப் பெரியார் முன் வைக்கிறார்.

பெண்கள் விடுதலைக்கு  ஆதிக்க மனப்பான்மை கொண்ட "ஆண்மை" அழியவேண்டும்.  ஆண்கள் முயற்சியால் பெண்களுக்கு எனச் செய்யப்படும் எவ்வித முயற்சியும்  விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது.  பெண்களால் "ஆண்மை" என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி என்று தீர்மானமாகக் கூறுகிறார் பெரியார்.

பெரியாரால் இந்த நூலில் சுட்டப்படுவனவற்றில் விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று சட்டப்படி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்று சென்ற நூற்றாண்டிலேயே கேள்வி எழுப்பிய பெரியார், ஆண்களுக்கு இருக்கும்  அனைத்து உரிமைகளும்  பெண்களுக்கும்  கொடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்தை முன்வைத்து பெண்களின் நிலையை மாற்றப் போராடினார்.  ஆனால் இந்த நூற்றாண்டிலும் பலருக்குப் பெண்களுக்குச் சமவுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்கும் மனநிலை வரவில்லை என்பது வியக்கவைக்கும் உண்மை.

சமூக நலமா அல்லது தனிமனித நலமா என்று வரும் போது தனிமனித நலத்தை விடச் சமூக நலனுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பவர்கள் அந்தப் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே உள்ளதாக எண்ணுகிறார்கள். ஆகவே,  பெண்களின்  அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டால் பெண்கள் வேறுவழியின்றிக் காலம் முழுவதும் பிறரைச் சார்ந்து வாழும் வாழ்க்கைக்குத் தள்ளப்படுவார்கள் என்ற தன்னல நோக்கில் ஆண்களுக்கு வாய்ப்பாக உருவாக்கப்பட்ட விதிமுறைகள் பெண்கள் முன்னேற்றத்தை வெகுவாகத் தடுத்துவிட்டது. ஆதிக்க நிலையில் இருப்போர்  திட்டமிட்டவாறே  பெண்களை அடிமை நிலைக்குத் தள்ளிவிட்டது.  சமூகக் கட்டமைப்பைக் கட்டிக் காக்க,   தங்கள் ஆதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப்  பெண்களையும் சிலரையும் அடிமைப்படுத்தி வைக்கும்   நிலை இக்காலத்திற்குப் பொருந்தாத ஒரு  நிலைப்பாடு. இதனை ஏற்காமல்  பெண்ணுரிமை பேசுபவர்களையும் கேட்பவர்களையும் ஒழுக்கக் குறைவானவர்கள் என்றும், கட்டற்ற பாலினச் சுதந்திரத்திற்கு அடிபோடுபவர்கள் என்றும் குடும்ப அமைப்பைச் சீர் குலைப்பவர்கள் என்று கொச்சைப்படுத்தி,  கூசாமல்  குற்றம் சாட்டிப் பழிபோடும் பிற்போக்குவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்துதான் வருகின்றன. ஒருவருடைய உரிமையைப் பறித்து அடிமையாக்கி வாழ்வதில் சமூக மேன்மை இருக்க வழியில்லை.

இந்தியாவில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் பெண்கள் இருக்கிறார்கள், குடும்பங்களும் இருக்கின்றன.  உலகில் மகிழ்ச்சியான நாடுகள் என்ற தரவரிசைப் படுத்துதலையும், பெண்கள் வாழ மிகச் சிறந்த நாடுகள் என்று தரவரிசைப் படுத்துதலையும் ஆண்டுதோறும் சில நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன.  இந்த இரண்டு பட்டியல்களிலும் முதல் பத்து இடங்களுக்குள் தங்கள் இருப்பை  தக்க வைத்துக் கொண்டிருப்பவை நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள்.  அங்கும் குடும்பங்கள் இருக்கின்றன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடாக வரிசைப்படுத்தப் படும் நாடுகள் உலகின் மகிழ்ச்சியான நாடுகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தரவரிசைப்படுத்துதலில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் சட்டங்களால் சீர்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறையினரால் விரிவான சமூகப் பார்வையும் விழிப்புணர்வும் ஏற்பட்டுவிட்ட நிலையில், தகவல் பரிமாற்றப் புரட்சியால் சுருங்கிவிட்ட உலகில்  மணவிலக்கு, கைம்பெண் மறுமணம், கல்வியுரிமை, சொத்துரிமையும், குடும்பக் கட்டுப்பாடு முறைகள் ஆகியவற்றுக்குத் தடையில்லை என்பது மகிழ்ச்சிக்குரியதே.  சமயக் கட்டுப்பாடு என்ற விதிகளால் பெண்களுக்குப் பல உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த ஒரு காலத்தில், பெண்களே தங்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதியை இப்படி வாழ்வதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்றுக் கொண்டு வாழ்ந்த சென்ற நூற்றாண்டில், பெண்களுக்கு ஏன் இந்த நிலை என்று சிந்திக்கவும் அதை எதிர்க்கவும் துணிந்தவர்கள் வெகு சிலரே.  பெண்களின் வாழ்வு நிலையை உயர்த்த, போராட்டங்களும் பரப்புரைகளும் செய்த பெரியாரையும், சமத்துவச் சட்ட விதிகள்  அவற்றின் மூலம் பெண்விடுதலையை உறுதிப்படுத்திய அம்பேத்கரையும் பெண்கள் என்றும் நன்றியுடன் நினைக்க வேண்டும்.

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையோ என்றார் கண்ணதாசன்.  தாய் என்ற பெண்ணின்  கருவறையிலிருந்து பிறக்கும் ஆண்கள், தனது தலைமுறையைத் தொடர தனது பிள்ளைகளை ஈன்று வளர்த்தெடுக்கும் துணைவியைக் கொண்ட ஆண்கள் பெண்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் பொருட்படுத்தாது குடும்ப வன்முறைகளையும், பாலின வன்முறைகளையும் செய்வதையும்,   பெண்களின் உரிமைகளை மறுத்து அடிமைகளாகக் கருதும் மனப்பான்மையையும்  விட்டொழிப்பது  நாட்டிற்கு முன்னேற்றம் தரும்.

"எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (புறநானூறு:187)
என்ற பாடலில்  நிலத்தைப் பொறுத்ததன்று வாழ்வும் தாழ்வும், அந்தந்த  நிலத்தில் வாழும்  ஆடவரைப் பொறுத்தது அது என உரைக்கிறார் ஒளவையார்.


பார்வை நூல்:
“பெண் ஏன் அடிமையானாள்?”
தந்தை பெரியார்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
பக்கங்கள்:79


சான்றாதாரங்கள்:
Advancing Gender Equality: UN Women at Davos 2023, January 10, 2023
https://www.unwomen.org/en/news-stories/announcement/2023/01/un-women-at-davos-2023

Best Countries for Women
Scandinavian countries dominate this 2022 list of the Best Countries for Women.
https://www.usnews.com/news/best-countries/best-countries-for-women

Discover the 10 Happiest Countries in the World
https://www.plumguide.com/journal/happiest-countries-in-the-world 


நன்றி: தமிழணங்கு
மார்ச்,  2023



#தமிழணங்கு, #Themozhi, #பெரியார்