Showing posts with label அன்றும்-இன்றும். Show all posts
Showing posts with label அன்றும்-இன்றும். Show all posts

Thursday, October 17, 2024

துயிலாத பெண்ணொருத்தி: இலக்​கி​ய ஓவி​யங்கள்

  



     "நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
     தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
     நனந்தலை உலகமும் துஞ்சும்
     ஓர்யான் மன்ற துஞ்சா தேனே."

          ['பதுமனார்' எழுதிய பாடல்;
          குறுந்தொகை: எண்  6. நெய்தல் - தலைவி கூற்று]

இருள் மிகுந்த நள்ளிரவில்.  உரையாடல்களை முடித்துவிட்டு அமைதியாக மக்கள்  எல்லோரும் இனிமையாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  அகன்ற இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கவலையின்றித் தூங்குகின்றன. (தலைவன் நினைவால் வருந்தியவாறு) நான் ஒருத்தி மட்டும் தூங்காமல் இருக்கிறேன்.

............................. 

அப்படியே

இப்பாடலையும் கேளுங்கள். . .
திரையிசைப் பாடல் :
ஊரு சனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு (1986)
கங்கை அமரன்
https://youtu.be/WrBIA5WPDDU?si=BqHrNaJzoJp7LE8R

இப்பாடலையும் கேளுங்கள். . .
திரையிசைப் பாடல் :
பூ உறங்குது பொழுதும் உறங்குது - தாய் சொல்லைத் தட்டாதே (1961)
கண்ணதாசன்
https://www.youtube.com/watch?v=63Mf7bxBf3c

.............................


அக்டோபர்  17, 2024

#இலக்​கி​ய ஓவி​யங்கள், #செய்யறிவு, #அன்றும்-இன்றும், #Themozhi 




Wednesday, October 16, 2024

வருவீர் உளீரோ?

 

அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராய்ந்தவர் தொ.பரமசிவன்.   நூற்றாண்டுகளின் விழுமியம் படிந்திருக்கிற சடங்குகள் பலவற்றின் தோற்றப் பின்புலம் தெரியாமலேயே இன்றும் மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர், சிதைந்தும் மருவிய நிலையிலும் கூட தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் சடங்குகளாகத் தொடர்கின்றன என்று சான்றுகளுடன் மக்கள் வரலாற்றைக் கவனத்திற்குக் கொண்டு வந்தார் அவர்.

இதை நினைவுபடுத்துகிறது நன்னாகையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஒன்றின் கருத்து.  வழிப்போக்கர்கள் வந்து தங்கி இளைப்பாறிச் செல்ல பண்டைய தமிழர்களின் வீடுகள் திண்ணைகளுடன் அமைக்கப்பட்டன. தங்கும் விடுதி, உண்ணும் விடுதிகளற்ற அக்காலத்தில் நெடுந்தொலைவு செல்லும் வழிப்போக்கர் இல்லங்களின் முன் வாசலில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறுவர்.  விருந்து புறத்திருக்க அவர்களுக்கு அளிக்காது தான் உண்ணல் தமிழர் வழக்கமாக இருந்ததில்லை. அவர்களை அழைத்து உணவு பரிமாறுவர். அப்பொழுது எவரும் வீட்டில் நுழையும் வண்ணம் வீட்டின் வாயில் திறக்கப்பட்டு வரவேற்று உபசரிக்கப்படுவர்.


 

குறுந்தொகைப் பாடல் ஒன்றின் தலைவி மாலையில் தன் தலைவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.  அவன் அவளை மணக்காமல் நாட்களைக் கடத்தியவண்ணம் உள்ளான்.  இரவு தொடங்கியதால் வீட்டின் வாயிற் கதவைத் தாழிடும் முன்னர் 'சாப்பிட வருகிறவர் எல்லாரும் வரலாம்' என உணவிட விருந்தினரை அழைக்கும் பொழுது அவனும் விருந்தினர் கூட்டத்தில் ஒருவனாக உள்ளே வந்து அவளைச்  சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவனோ வரவில்லை. துயரம் தாளாத தலைவி தோழியிடம் இன்றும் நம் தலைவன் வரவில்லையே என்று சொல்லிப் புலம்புகிறாள்: [குறுந்தொகை: பாடல் — 118];

      புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
      நள்ளென வந்த நார் இல் மாலை,
      பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
      'வருவீர் உளீரோ?' எனவும்,
      வாரார் தோழி! நம் காதலோரே.

             
இவ்வாறாக, கதவை அடைக்கும் முன்னர் எவரேனும் உண்ண வருகிறீர்களா என்று கேட்கும் வழக்கம் வியக்கத்தக்க வகையில் இன்றும் பண்டைய தமிழ்மண்ணான  கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில் இரவில் வழக்கமாக உள்ளதை  இணையக் காணொளி ஒன்றின் வாயிலாக [https://www.instagram.com/p/BxaEwMbnBgW/ ] அறிய முடிகிறது.  

இரவில் கதவை மூடும் முன்னர் ""யாரேனும்  பசிக்காரர் உண்டோ?" என்று நான்கு வாயில்களிலும் சென்று கேட்டு, எவருக்கேனும் உணவு தேவையென்றால் அவருக்கு உணவளித்த பின்னரே கதவு மூடப்படும் என்று காணொளி விளக்கம் கூறுகிறது. இக்கோவில் வைக்கம் போராட்டம் காரணமாக வரலாற்றுச் சிறப்புப்பெற்ற அதே கோயில்தான். மேலும் பழமையைக் கடைப்பிடிக்கும் மற்றும் சில கேரளக் கோயில்களில் இவ்வழக்கம் இன்றும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. விருந்தினரைப் போற்றும் தொல்தமிழ் பண்பாட்டு எச்சத்தின் வியத்தகு தொடர்ச்சி மலைக்க வைக்கிறது.


நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 254

10/16/2024      வருவீர் உளீரோ?


#உலகத்தமிழ், #அன்றும்-இன்றும், #இலக்கியம், #Themozhi