எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று தொடங்கி பகவத்கீதையின் சாரம் என்ற குறிப்புடன் “கீதாசாரம் சுவரொட்டி"யில் இடம் பெறும் கருத்துகள் யாவும் ஓர் ஆன்மீகப் புனைவு அல்லது கட்டுக்கதை.
வேதங்களின் சாரம் உபநிஷத்துகள்; அந்த உபநிஷத்துகளின் சாரம் பகவத்கீதை. உபநிஷத்துகளின் சாரமான பகவத்கீதையை கண்ணன் மக்களுக்காக அருளிச் செய்தார் என்பது ஆன்மீக வாதிகள் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை. இவ்வாறாக பகவத்கீதை என்பதே எழுநூறு வசனங்களில் கொடுக்கப்பட்ட உபநிஷத்துகளின் சுருக்கமான சாரம் என்ற நிலை இருக்கையில், அந்த சாரத்திற்கும் சாரம் என்று கீழ்க்காணும்;
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்."
பதினைந்து வரிகள் கொண்ட சொற்றொடர்கள் மிகப் பரவலாக அறியப்படுகின்றன.
அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக வேட்புமனு தாக்கல் செய்ததும் ஊடகவியலாளர்களுக்கு அது குறித்து அவர் அளித்த செய்தியில்;
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"
என்று தமது சமயச்சார்பற்ற உள்ளத்தை வெளிப்படுத்தினார்.
கீதையின் சுருக்கமாக கீதையின் இறுதியில் இரண்டே வசனங்களில் கண்ணனே கூறும் சாரத்திற்கும், கீதாசாரம் என அறியப்படும் இந்த 15 வரி சொற்றொடர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும்; பகவத்கீதையை முழுமையாகப் படித்தவர்கள், கீதாசாரம் சுவரொட்டியில் இருக்கும் வரிகள், கீதையில் எங்கே உள்ளன என்று தேடிப் பார்த்தால், அவை அங்கு இல்லை என்பதை உணரலாம். கீதாசாரத்தில் உள்ள கருத்துகளைக் கீதையிலிருந்து மறைமுகமாகக் கொண்டு வரலாம்; ஆனால் அவை கீதையின் நேரடி வாக்கியங்கள் அல்ல, கீதையின் சாரமும் அல்ல. இந்த கீதாசாரத்தை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது என்கிறார் ஸ்ரீ கிரிதாரி தாஸ் (https://www.facebook.com/profile.php?id=100005426808787).
மேலும் அவர், கீதாசாரத்தின் இந்த அழகிய வரிகளை ஒரு நல்ல கவிதையாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் கீதாசாரமாக ஏற்க முடியாது. இதிலுள்ள கருத்துகள் கீதையின் சாரமும் அல்ல, கீதையின் தத்துவத்திற்கு ஒத்துவரக்கூடியவையும் அல்ல, கீதாசாரம் சுவரொட்டியில் உள்ள முதல் கருத்து, கீதைக்கு முற்றிலும் முரணானது என்பதில் துளியும் சந்தேகமும் இல்லை. என்கிறார்.
அனைத்தும் நன்மைக்கே என்பதைக் கீதையில் காண இயலாது.
"இவ்வுலகம் துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது.” (பகவத்கீதை: 8.15) என்கிறது கீதை.
இவை ஒன்றுக்கு ஒன்று முரண் படும் கருத்துகள்.
தொடர்ந்து வரும் மற்ற வரிகளும் கீதை சொல்லும் பூர்வ ஜன்ம கர்ம வினைப்பயன் கருத்துக்கு மாறான கருத்துகளாகவே அமைந்துள்ளன என்கிறார் ஸ்ரீ கிரிதாரி தாஸ். அதாவது, புண்ணியம் செய்தோர் நற்பலன்களையும், பாவம் செய்தோர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும், இவ்வுலகிலுள்ள அனைத்தும் ஒவ்வொருவரின் கர்ம வினைப்படியே நடக்கின்றது என்பது கண்ணன் கீதையில் கூறும் தத்துவம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் கண்ணனைச் சரணடைய வேண்டும் என்பதே உண்மையான கீதாசாரம். என்பது இவர் வைக்கும் கருத்தாகும்.
திருவண்ணாமலை முனிவர் பகவான் ரமண மகரிஷி அவர்கள் பகவத்கீதையின் 700 வசனங்களில் 42 வசனங்களைத் தேர்ந்தெடுத்து, முழு கீதையின் சாரத்தையும் கீதாசாரம் என்று தமிழில் வழங்கியுள்ளார்.
கண்ணனின் கூற்றாகக் கீதை சாரத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மிகச் சுருக்கமாக கர்ணன் திரைப்படப் பாடலில் தந்துள்ளார்:
"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்
என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய், காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ
புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே
[நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்]
கண்ணதாசன் (கர்ணன் - 1964)
கீதாசார சுவரொட்டியில் உள்ளவை பாபர் மசூதி இடிப்புக்குப்பின் அதை நியாயப்படுத்த ஆர் எஸ் எஸ்ஸால் பரப்பப்பட்ட வரிகள். ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்ட எல்லா கோவில்களிலும் இவ்வரிகள் கீதாசாரம் என்ற பெயரில் எழுதப்பட்டிருப்பதாகவும் கருத்தொன்று மக்களிடையே இருப்பது தெரிகிறது.
சான்றாதாரம்:
1. கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். டிசம்பர் , 2012. https://tamilbtg.com/whatever-happened-it-happened-well-is-this-gitacharam/
2. கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். ஜனவரி 3, 2013
https://tamilbtg.com/what-is-real-gita-charam/
3. கீதாச்சாரம் யாரால் உருவானது?
https://ta.quora.com/கீதாச்சாரம்-யாரால்
4. ரமண மகரிஷி வழங்கிய பகவத் கீதை சாரம் - 42 வசனங்கள்
https://www.facebook.com/watch/?v=4881951441837476
நன்றி: தமிழணங்கு-ஆகஸ்ட் 2025 (பக்கம்: 10-13)
https://archive.org/details/thamizhanangu-august-2025/page/9/mode/2up
_________________________
#தமிழணங்கு, #வரலாற்றில் பொய்கள், #Themozhi





