Showing posts with label இலக்​கி​ய ஓவி​யங்கள். Show all posts
Showing posts with label இலக்​கி​ய ஓவி​யங்கள். Show all posts

Friday, December 6, 2024

ஔவையின்‌ ஒயில்: இலக்​கி​ய ஓவி​யங்கள்

தமிழ் இலக்கியங்களில் ஔவையாருக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு.  அவருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் இருந்த நட்பு, நினைக்கையில் எவர் நெஞ்சையும் நெகிழச் செய்வது. நமக்கு ஊடகங்கள் வழி காட்டப்பட்ட வயது முதிர்ந்த ஔவைப் பாட்டி வடிவத்திலிருந்து வேறுபட்ட தோற்றம் ஒன்றை நமக்கு அறியத் தருகிறது  அவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று. பாடல் குறிப்பிடுவது ஒயிலான இளநங்கையான ஔவையை.

 
 

     இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
     மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
     பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
     வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
     எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
     சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
     பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
     வளி பொரு தெண்கண் கேட்பின்,
     அது போர்! என்னும் என்ஐயும் உளனே!


பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, பாடியவர்: ஒளவையார்.  
புறநானூற்றுப் பாடல்: 89. என்னையும் உளனே!



பாடலின் பொருள்:

அழகிய மணிகள் கோர்க்கப்பெற்ற அணிகளை அணிந்த  இடையை வளைத்து நிற்கும், மை தீட்டிய கண்களையும் ஒளிபொருந்திய நெற்றியையும் கொண்ட நாட்டிய நங்கையே, உன் பரந்து விரிந்த இந்த நாட்டில்  போர் செய்வோரும்  இருக்கின்றனரா?  என்று என்னைக் கேட்கும் பெரும் படையைக் கொண்ட வேந்தரே!  


அடிக்கும் கோலைக் கண்டு அஞ்சாது சீறும் பாம்பினைப் போன்ற வலிமை கொண்ட இளைய வீரர்களும் எம்மிடம் உள்ளனர். அதுமட்டுமல்ல  பொது மன்றில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள முரசில் காற்று மோதி ஒலி எழுப்புகையில் அது போர்ப்பறையின் முழக்கம் என எண்ணித் துடித்து வீறு கொண்டெழும் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற என் அரசனும் உள்ளான் அறிவீராக!!.  என்று ஔவையார் தன் நண்பர் மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தைப் பெருமைப் பட எடுத்துரைக்கிறார் எதிரி நாட்டு  வேந்தருக்கு.


பாடலுக்கு விளக்கவுரையும், செய்யறிவு  ஓவிய உருவாக்கமும் - தேமொழி

 

நன்றி: "சக்தி"  பெண்ணிதழ்
டிசம்பர் 2024
"ஔவையின்‌ ஒயில்‌"
https://archive.org/details/sakthi-december-2024/page/19/mode/2up

#சக்தி, #இலக்​கி​ய ஓவி​யங்கள், #செய்யறிவு, #Themozhi 



Friday, November 8, 2024

தலைவியின் துயரம்: இலக்​கி​ய ஓவி​யங்கள்

தலைவன் தான் வருவதாகக் குறிப்பிட்ட காலம் கடந்தும் அவன் வரவில்லை என்றால் தலைவி மிகவும் துயரம் அடைவாள்; தன் வருத்தத்தை ஆற்ற முடியாத தலைவி தோழியிடம், தலைவன் இன்னமும் வரவில்லையே என்று கூறி வருந்தும் பாடல்கள் முல்லைத்திணையின் உரிப்பொருள் (இருத்தலும், இருத்தல் நிமித்தமும்) பிரிவில் அடங்கும்.
 
      இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
      துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
      நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
      நீர்வார் பைம்புதற் கலித்த
      மாரிப் பீரத் தலர்சில கொண்டே
            கோக்குள முற்றனார், குறுந்தொகை - 98
 
[இன்னளாயினள் = இத்தகையவள் ஆனாள்]
 

 
பாடலின் பொருள்:
தோழி! நம் தோட்டத்தில் நீர் ஒழுகி வழிந்தோடியதால் பசுமையாக வளர்ந்துள்ள புதர்களின் மேல் தழைத்துப் படர்ந்திருக்கும் கொடியில் மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைப் பறித்துச் சென்று தலைவனை நெருங்கி, நீ வாராமையால் உன் நினைவால் தலைவி இவ்வாறு ஆகிவிட்டாள் என்று அம்மலர்களைக் காட்டுபவர் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
 
தலைவனைப் பிரிந்து அவனைப் பாராமல் துயருற்று வருந்தும் தலைவியின் உடல் வெளிர் மஞ்சள் நிறம் அடையும் என்றும், அதைப் பசலை நோய் என்றும் இலக்கியங்கள் கூறுகிறது. பசலை நோயின் அறிகுறிகள் நெற்றியில் எளிதாக வெளிப்படும் என்றும் அது பீர்க்கம்பூவின் நிறத்தை ஒத்திருக்கும் என்பதால் பசலைக்குப் பீர்க்கம் பூவை உவமை கூறுவதும் இலக்கிய வழக்கு.

நன்றி: "சக்தி" பெண்ணிதழ்
நவம்பர் 2024
"தலைவியின் துயரம்‌"
https://archive.org/details/sakthi-november-2024/page/15/mode/2up

#சக்தி, #இலக்​கி​ய ஓவி​யங்கள், #செய்யறிவு, #Themozhi