அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறள் பகுத்துரைக்கும் பொருட்களில் அனைத்துப் பொருட்களையும் கூறுவது தமிழர் பெற்ற பேறு. திருக்குறள் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற சிறப்பையும், தொடர்ந்து அயல்நாட்டினரும் தமிழரும் என எண்ணிறைந்தோர் உரைகளை வழங்கிய சிறப்பையும் பெற்றுள்ளது.
திருக்குறளின் பழைய உரைகள் பத்து:
திருக்குறளுக்கு பதினான்காம் நூற்றாண்டிற்கு முன் உரை எழுதியவர்கள் எனக் கீழே கொடுக்கப்படும் பதின்மரையும் திருக்குறளின் பழைய உரையாசிரியர்களாக வெண்பா ஒன்று கூறுகின்றது.
'தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமேலழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்' (தனிப்பாடல்)
1. தருமர், 2. மணக்குடவர், 3. தாமத்தர், 4. நச்சர், 5. பரிமேலழகர், 6. பருதி, 7. திருமலையர், 8. மல்லர், 9. பரிப்பெருமாள், 10. காளிங்கர் ஆகிய இவர்களுள் மணக்குடவர், பருதி, பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் ஆகிய ஐவர் எழுதிய உரைகளே இன்று நமக்குக் கிடைக்கின்றன. மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த உரையாசிரியர்கள் வரிசையில் பரிமேலழகர் காலத்தால் பிற்பட்டவர் எனவும் அறிகிறோம். இவர்களின் காலம் 10ஆம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்பது ஆய்வாளர்களின் முடிவு.
இவர்களுள் பரிப்பெருமாள் குறித்த வரலாற்றை இன்றுவரை தெளிவாக அறிய முடியவில்லை, இருப்பினும் இவருடைய உரையின் முடிவில் உள்ள வெண்பா மூலமாக, தென் செழுவை என்பது இவர் ஊர் என்பதும், "தெய்வப் பரிப்பெருமாள்” என்று பெரிதும் போற்றப் பெற்றுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. இவர் வடமொழிப் புலமை பெற்றவராகவும் அறியப்படுகிறார்.
‘தெரிந்து தெளிதல்” என்னும் அதிகாரத்தில் உள்ள குறள்களுக்கு இவர் எழுதிய உரையில் துரோணாசாரியார் மதம், மகேச்சுரர் மதம், பராசரர் மதம், வியாதன் மதம், உத்தவாசாரியர் மதம், நாரதர் மதம், சுக்கிரர் மதம், கௌடிலியர் மதம் என்பனபோன்று பல்வேறு கோட்பாடுகளைச் சுட்டிச் செல்கின்றார். இவை குறித்து விவரமான செய்திகள் எதுவும் அறிய முடியவில்லை. பரிப்பெருமாள் தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் உள்ள குறள்களுக்கு எழுதிய உரையைத் தொடர்ந்து காணலாம்.
தெரிந்து தெளிதல்-பரிப்பெருமாள் உரை:
தெரிந்து தெளிதலாவது அமாத்தியரை (அமாத்தியர் இலக்கணம்; அமாத்தியர்=அமைச்சர்) ஆராய்ந்து தெளிதல், காரியந்தப்பாமலெண்ணி, அதற்காங் காலமும் இடமும் அறிந்தாலும், அது செய்து முடிக்கும் அமாத்தியரையும் எண்ணிக் கொள்ள வேண்டுதலின், அவற்றின் பின் கூறப்பட்டது.
'அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை பரிதே வெளிறு'
உரை: கற்றற்கரியனவற்றைக் கற்றுக் குற்றமற்றார் மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை. கல்வியுடையார் உள்ளும் புறம்பும் தூயாரைத் தேறலாம் என்பது "துரோணாசாரியார் மதம்". அவ்வளவில் தேறலாகா தென்று இது கூறப்பட்டது.
'அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி'
உரை: ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையரும் அல்லர்; பழிக்கும் நாணாராதலான். அரசனோடொத்த மறைந்த குற்றமுடையாரைத் தேறலாம். அவர் தம் குற்றம் மறைக்கு மாறு போல அவர் குற்றமும் மறைப்பர் ஆதலான் என்பது "மகேச்சுரர் மதம்". அது குற்றமென்று கூறப்பட்டது.
'காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்'
உரை: அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லதாரைத் தேறுதல், எல்லா அறியாமையும் தரும். அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது "பராசரர் மதம்". இஃது, இவ்வளவினால் தேறலாகாதென்றது.
'தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்'
உரை: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு, தீர்தலில்லாத துன்பமுண்டாகும். வழிமுறை என்றது தன்வழியின் உள்ளார்க்கு அவன் வழியின் உள்ளார் அமாத்தியராய்ப் போந்த முறைமை. தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத்தேறலா மென்பது "வியாதன் மதம்". அது குற்றமென்று இது கூறப்பட்டது.
'தேரான் றெளிவுந் தெளிந்தான் கணையுறவுந்
தீரா விடும்பை தரும்'
உரை: ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்தபின்பு ஐயுறுதலும் தீர்தலில்லாத துன்பத்தைத் தரும். முன்பு ஒருவினை செய்து அறியாதாரைத் தேறலாம்; அவர்கள் வறியராதலான் என்பது "உத்தவாசாரியர் மதம்". அது குற்றம் என்று இது கூறப்பட்டது.
'பெருமைக்கு மேனைச் சிறுமைக்குத் தத்தங்
கருமமே கட்டளைக் கல்'
உரை: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் (மற்றைச்) சிறியனாக்குதற்கும் வேறு தேடவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே படிக்கல்லாம் அதற்குத்தக ஒழுகுக. இஃது, ஒருவனை ஒருகாரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்ய வல்ல அளவுங் கண்டு, பின்னைப்பெரியனாக்க அமையுமென்பது "நாரதர் மதம்". இது, குற்றங்கூறாமையால் யாவர்க்கும் உடம்பாடென்று கொள்ளப்படும்.
'குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு'
உரை: உயர்குடிப் பிறந்து, காமம் வெகுளி முதலான குற்றத்தினின்று நீங்கித் தனக்குவரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன் கண்ணே தெளிதல். இது "சுக்கிரர் மதம்". இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படும்.
'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்'
உரை: ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து, குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து, அவற்றுள்ளும் தலைமையானும் பன்மையானும் மிக்கதனை அறிந்து கொள்க. இது "கௌடிலியர் மதம்". காரியம் பல காலின் அது செய்வாரும் பலர் வேண்டும். ஆதலால் அவர் எல்லாரையும் நற்குணத்தராகத் தேடுதலரிது என்பதனால் இது கூறப்பட்டது.
இவ்வாறாக பரிப்பெருமாள் திருக்குறள் தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் குறிப்பிடும் உரை கூறும் துரோணாசாரியார் மதம், மகேச்சுரர் மதம், பராசரர் மதம், வியாதன் மதம், உத்தவாசாரியர் மதம், நாரதர் மதம், சுக்கிரர் மதம், கௌடிலியர் மதம் போன்றவை குறித்து நாம் தேடித் தெளிவு பெறுதல் நலன் பயக்கும்.
உதவிய நூல்:
திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும்
பதிப்பாசிரியர் வித்துவான். கா. ம. வேங்கடராமையா எம். ஏ.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1988
https://www.tamilvu.org/library/nationalized/pdf/90-venkataramiya/thirukuralmulamumpariporuluraiyum.pdf
நன்றி:
"தவப்புதல்வி" - ஏப்ரல்-ஜூன் - தமிழ் காலாண்டிதழ்
திணை - 34 [அக்டோபர் - 2023]
https://archive.org/details/thinai-34/page/112/mode/2up




