Monday, November 14, 2022

அகம் புறம் வாழ்வு சிறக்க திருக்குறள் உணர்த்தும் குறிப்பறிதல் திறன்





முன்னுரை :
மக்களின் அக வாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் விளக்கிக் கூறும் சங்க இலக்கியங்களை அகம், புறம் எனப் பாகுபாடு செய்வது தமிழ் இலக்கிய மரபு. மக்களின் வாழ்வியலில் அவர்களின் காதல் வாழ்க்கையை அகம் என்றும், அவர்களின் வீரம், கொடை, புகழ் போன்றவற்றைச் சிறப்பிப்பன புறம் என்றும்,  அகம் புறம் ஆகிய இருதிணைகளும் பகுத்துக் கூறுகின்றன. இதனை;  
         'அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான், அதனாலாய பயன் தானே அறிதலின் அகம் என்றார்' (தொல். பொருள். இளம். 3) என்றும்,
         'புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் ஆகலான் அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார்' (தொல். பொருள். இளம் 3) என்றும்'
இளம்பூரணர் விளக்குவார்.

தமிழ் என்றாலே அதன் சிறப்பு அகம் என்பது தமிழறிஞர்களின் துணிபு. சங்க இலக்கியமாகிய  குறிஞ்சிப் பாட்டு "ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது" என்னும் குறிப்பைக் கொண்டுள்ளது.  இதனால், ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக் கபிலர் நூலை இயற்றினார் என்ற இக்குறிப்பே   'அகம்'  என்ற இலக்கியப் பாகுபாடு தமிழ் தவிர்த்த பிற மொழிகளில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

தமிழின் இச்சிறப்பை 'தமிழ்ச்செல்வம்' என்பார் பாவேந்தர் பாரதிதாசன். தன் மகள்  இத்தகைய தமிழ்ச்செல்வமாக சிறப்புற்று வாழ விழைகிறார் அவளைப்  பெற்றவர்.
         புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
         புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
         புலவர் கண்ட நூலின் - நல்
         திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
         செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
         செல்வம் ஆக மாட்டாயா?
அக்காலம் முதல் இக்காலம் வரை இத்தகைய அகம் புறம் திணை வேறுபாடு  தமிழுக்கே உரிய சிறப்பாகப் போற்றப்படுகிறது என்பதை இவ்வரிகள் மூலம் அறிய முடிகிறது.  

அத்துடன், அதே பாடலில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்,  அறம் எது? மறம் எது? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும் வைத்துள்ளார்.

         அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
         அறிகிலாத போது - யாம்
         அறிகிலாத போது - தமிழ்
         இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
         இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
         இயம்பிக் காட்ட மாட்டாயா?
என்று பாரதிதாசன் கூறுவது புறப்பொருள் குறித்து அறிய திருக்குறள் ஒரு சிறந்த நூல் என்பதையும் உணர்த்துகிறது.  

திருக்குறளின் முப்பால்களில் அறமும் பொருளும்  புறவாழ்வின் வாழ்வியல் விழுமியங்களின் தொகுப்பாக அமைந்தவை.  இவ்விரண்டையும் தவிர்த்து  மூன்றாவதாக வள்ளுவர் வகுத்து அளித்த காமத்துப் பால் குறள்கள் அகப்பொருள்  குறித்து  அறிய உதவும் வழிகாட்டி.

குறிப்பறிதல்:
இவ்வாறு 'அகம்' (காமத்துப்பால்) எனவும் 'புறம்' (அறத்துப்பாலும் பொருட்பாலும்) எனவும்  வகுத்துக் கொண்டாலும், இவ்விரு அகம் புறம் பிரிவுகளிலும் "குறிப்பு அறிதல்" என்ற தலைப்பில் இரு அதிகாரங்களைக் கொடுத்து அதற்கான கருத்துக்களையும் வள்ளுவர் கொடுத்துள்ளதைக் காண்கிறோம்.  
'குறிப்பு அறிதல்' என்ற 71 ஆவது அதிகாரம் பொருட்பாலின் அமைச்சியல் கீழ் இடம் பெறுகிறது.
மற்றொரு 'குறிப்பு அறிதல்' என்ற 110 ஆவது அதிகாரம் இன்பத்துப் பாலின் களவியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பறிதல் என்பது உள்ளக்குறிப்பைத் தெரிந்துகொள்வது என்ற பொருள் தரும். அதாவது, பிறர் மனத்தில் உள்ளதை அவர் கூறாமலேயே அறிந்து கொள்ளும் ஆற்றல்.  குறிப்பறிதல்.  பிறர் தம்  உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலேயே  அவருடைய மனக் குறிப்பை அறிய உதவும் கருவிகளாக முகமும் கண்ணும் வள்ளுவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டவருக்கு மற்றவர் உள்ளத்தின் அகக்குறிப்பை அறிந்துகொள்வது எளிது.

(I) பொருட்பாலின் குறிப்பு அறிதல் அதிகாரம்:
[பொருட்பால்-அமைச்சியல்-71. குறிப்பறிதல்]
  —  "குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறிதல். இஃது அமைச்சியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறியது என்னையெனின், குறிப்பறிதல் அரசர்க்கும் வேண்டுமாதலின், 'இறந்தது காத்தல்' என்னும் தந்திர உத்தியால் கூறப்பட்டது என்க. இது பெரும்பான்மையும் அரசர்க்கும் வேண்டுமாதலின், மன்னரைச் சேர்ந்தொழுகலின் பின் கூறப்பட்டது,"  என்பது மணக்குடவர் தரும் அதிகார உரை விளக்கம்.

  —  "அஃதாவது , அரசர் கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல், இது மன்னரைச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையாததாகலின் அதன் பின் வைக்கப்பட்டது, "  என்பது பரிமேலழகர் தரும்  அதிகார உரை விளக்கம்.  

  —  "ஒருவருக்கொருவர் குறிப்பறிந்து பழகுதல். அரசன் குறிப்பறிந்து அமைச்சர் பழகுதலும் அவ்வாறே ஆள்பவன் மற்றவர்களின் குறிப்பறிந்து பழகுதலும் எல்லாம் இதிலடங்கும், " என்பது தமிழண்ணல் தரும்  அதிகார உரை விளக்கம்.  

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.  பொருட்பாலின் குறிப்பு அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் 10 குறள்களில் கூறும் கருத்துக்களைக் கீழ்க் காண்பது போலத் தொகுக்கலாம்:
ஒருவர் தன் மனதில் என்ன எண்ணுகிறார் என்பதை அவரது முகமே காட்டிவிடும்.  கண்ணாடி தன் முன் நிற்பவர் உருவத்தைக் காட்டுவது போலவே, ஒருவரது உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவர் கூறுவதற்கு முன்னர் அவரது முகம் காட்டிக் கொடுக்கும்.  ஒருவர் ஒன்றும் கூறாத பொழுதே அவருடைய முகக்குறிப்பால் அவர் உள்ளத்து எண்ணங்களைப் புரிந்து கொள்ளுவது உலகின் மிகச் சிறந்த பண்பு. அவ்வாறு ஒருவர் பார்வையில் தோன்றும் வேறுபாடுகளைக் கொண்டே எதிரில் உள்ளவர்  நட்பு எண்ணம் கொண்டவரா அல்லது பகை எண்ணம் கொண்டவரா எனவும் அறிந்துவிடுவார்கள். அவ்வாறு மற்றவர் முகக்குறிப்பை அறியும் ஆற்றல் உள்ளவருக்கு அவரது கண்களே அளவிடும் கருவியாக அமையும். ஒருவர் மனதில் எழும் எண்ணங்களை தெய்வத்தால் மட்டுமே அறிய இயலும், எனவே அவ்வாறு புரிந்துகொள்ளும் திறன் கொண்ட ஒருவர் தெய்வத்திற்கு இணையானவர். அத்தகைய ஆற்றல் கொண்ட ஒருவரை எதைக் கொடுத்தும் துணையாக்கிக் கொள்ள வேண்டும்.  மற்றவர் எண்ணத்தைக் குறிப்பால் உணரக் கூடியவர்  பிறரைத் தோற்றத்தில் ஒத்து இருந்தாலும் அவர் மற்றவரைவிட அறிவால் மேம்பட்டவர்.  அத்தகைய  குறிப்பறியும் ஆற்றல் கொண்டவராக ஒருவர் இருந்தால் அவர் முன் சென்று நின்றாலே போதும், பேச வேண்டிய தேவையில்லை.   முகக் குறிப்பால் மற்றவர் எண்ணத்தை அறிய முடியாதவருக்கு அவரது கண்களால் பயனில்லை.  

இந்த அதிகாரத்தின் புகழ் பெற்ற குறள்;
          அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
          கடுத்தது காட்டு முகம்.

(II) இன்பத்துப் பாலின் குறிப்பு அறிதல் அதிகாரம்:
[காமத்துப்பால்-களவியல்-110. குறிப்பறிதல்]
  —  "குறிப்பறிதலாவது தலைமகள் உள்ளக் குறிப்பினைத் தலைமகன் அறிதல்,"  என்பது மணக்குடவர் தரும் அதிகார உரை விளக்கம்.

  —  "அஃதாவது, தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம். தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின், தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது,"  என்பது பரிமேலழகர் தரும்  அதிகார உரை விளக்கம்.  

  —  "தலைவியைக் கண்டு அவள் அழகால் கவரப்பட்டு அவளை வியந்து நின்ற தலைமகன் அவளுடன் நெருங்கி உரையாட, உறவாட, அவள் குறிப்பினை அறிய முற்படுகின்றான். குறிப்பறிதலாவது அவள் உள்ளக் கருத்தினை அறிதலாகும்," என்பது  சி. இலக்குவனார் தரும்  அதிகார உரை விளக்கம்.  

காமத்துப் பாலில், களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் தலைவியர் உள்ளநிலை உணர்ச்சிகள், இருவருடையே காதல் அரும்பி மலரும் வளர்ச்சியை, அதன் பின்னர் உள்ளம் இணைந்த அன்பினால்  அவர்கள் கற்பு என்ற இல்லற வாழ்வில் இணைவதை வள்ளுவர் காமத்துப்பாலில் அழகுற விவரிக்கிறார். களவியலின்  குறிப்பறிதல் அதிகாரம் தலைவன் தலைவியின் உள்ளக் கிடக்கையை எவ்வாறு அவளது செயல்கள் மூலம் குறிப்பால் அறிகிறான் என்பதை விவரிக்கும். கண்ணுடன் கண் பேசும் மொழி, வாய்ச் சொல்லின் தேவையற்ற நிலை காதலர்கள் தம் துணையின் குறிப்பறிதலின் சிறப்பு.

காமத்துப் பாலின் குறிப்பு அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் 10 குறள்களில் கூறும் கருத்துக்களைக் கீழ்க் காண்பது போலத் தொகுக்கலாம்:
காதலியின் பார்வை நோய் தருவதாகவும், அதே வேளை அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் அமைகிறது. அவளது கள்ளத்தனமான கடைக்கண் பார்வை காதலன் தன்னை நெருங்கிவிட்டதில் அவள் உள்ளம் மகிழ்வதைக் காட்டுகிறது.  காதலனின் பார்வைக்கு நாணித்  தலை கவிழ்ந்த வண்ணம் பார்க்கும் பார்வை அவள் அவன் உறவை விரும்புவதைக்  காட்டி  காதலனின் நெஞ்சில் அன்பை வளர்க்கிறது.  காதலன் பாராத பொழுது அவனை நோக்கி பின் தனக்குள் புன்னகைக்கும் அவளது இதழ்களில் அரும்பும் முறுவல் அவள் உள்ளத்தின் இசைவைக் காட்டுகிறது. காதலியின் கடைக்கண் பார்வை அவளது காதலை உறுதி செய்கிறது. அயலார் போன்ற கோபப் பார்வையும் கடுமையான மொழியும் காதலியின் காதலை மறைக்காமல், மாறாக  அவளது அன்புள்ளத்தையே வெளிப்படுத்துகிறது. காதலர்களின் அயலார் போன்ற பொய்யான நடிப்பும், பகையுணர்வற்ற கடுமையான சொல்லும் பார்வையும், அவர்கள் உள்ளத்தால் உறவாகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. காதலன் பார்க்கும் பொழுது பரிவு கொண்ட பார்வையுடன் அவள் முறுவலிக்கும்பொழுது அவள் அழகான சாயலுடன் அவனுக்குத் தோன்றுகிறாள். பொது இடத்தில் அறிமுகமற்றவர் போலப் பாசாங்கு செய்து புதியவர் ஒருவரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்வது காதல் உணர்வின் குறிப்பைக் கொடுக்கிறது. கண்களும் கருத்தும் ஒத்தவர்களாக மாறிய நிலையில்  அவர்களுக்கு இடையே உரையாடலுக்குத் தேவை இல்லாமல் போகிறது.

இவ்வாறு காதலனும் காதலியும் போலியாக பகைகொண்டவர் போலவும் புதியவர் போலவும் பொய்மையாகப் பார்த்துக் கொள்வதன் மெய்யான குறிப்பையும், அவர்களது கடுமொழியின் பின்னேயும் கடைக்கண் பார்வையின் பின்னேயும் இருக்கும் காதலின்  உண்மையான  குறிப்பையும்   உணராவிட்டால் அவர்கள் காதல் வளர வாய்ப்பில்லை.  காதலிப்பவர் காட்டும் பாசாங்கு  குறிப்பின் சரியான  உண்மையான பொருள்  அறிதலில் கவனமாக இருந்தாலே இல்லறம் வரையில் வாழ்வு உயரும். வாய்ச் சொல்லின்றி பார்வையினால் காதலரின் உள்ளக் குறிப்பு அறிதல் என்ற திறனின் தேவையை குறிப்பறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் இவ்வாறு உணர்த்துகிறார்.

இந்த அதிகாரத்தின் புகழ் பெற்ற குறள்;
          கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
          ளென்ன பயனு மில.

முடிவுரை:
அகவாழ்விற்கும் புறவாழ்விற்கும் குறிப்பறியும் ஆற்றல் பொதுவானது என்பதையும், அந்த ஆற்றல் வாழ்வை மேன்மைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை வள்ளுவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
 

குறிப்பு:  குறிப்பறிதல் என்ற அதிகாரத்தின் பெயருக்கு "நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்" (தொல்காப்பியம், களவியல்: 1042) என்ற  தொல்காப்பியரின் களவியல் நூற்பா காரணமாயிருக்கலாம் என்பர்.  தலைமக்கள் இருவரின் நோக்கங்களும் (கண்களும்) அவர் தம் கருத்துக்களை ஒன்றுபடுத்தற்கு உணர்வினைக் கூட்டியுரைக்கும் குறிப்புரைகளாகும் என்பது இதன் பொருள்.  
பரிமேலழகர் உரையில் பொருட்பாலில் உள்ள அதிகாரம் 71றும்,  காமத்துப்பாலில் உள்ள அதிகாரம் 110தும் “குறிப்பறிதல்” என்ற தலைப்பிட்ட அதிகாரங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.  
பரிமேலழகருக்கு முற்பட்ட காளிங்கர் தம் உரையில் காமத்துப்பாலில் உள்ள குறிப்பறிதல் என்பதை “குறிப்புணர்தல்” என்று கொடுத்துள்ளார்.  
அத்துடன், ‘குறிப்பறிவுறுத்தல் ’ என்ற 128வது அதிகாரம் ஒன்றும் தலைவி உடல்மொழியால் வாய்ச்சொற்கள் இல்லாமல், தம் உள்ளக் குறிப்பைத் தலைவனுக்கு அறியச் செய்வதையும் வள்ளுவர் சொல்லிச் செல்கிறார்.


பார்வை நூல் மற்றும் தளங்கள்:
திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் மூலமும் மணக்குடவர் உரையும்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0650.html

குறள் திறன்
http://kuralthiran.com/Home.aspx





















நன்றி :
மின்தமிழ்மேடை  - 31 [அக்டோபர்  - 2022]
அகம் புறம் - சிறப்பிதழ் 
https://archive.org/details/THFi-QUARTERLY-31/page/131/mode/2up

#திருக்குறள், #மின்தமிழ்மேடை, #Themozhi  

Saturday, November 5, 2022

ஆய்ச்சியர் குரவை

ஆய்ச்சியர் குரவை


பொருளிழந்து, பெருமையிழந்து,  புகார் துறந்து, மறுவாழ்வு  தேடி மதுரையை நோக்கிச் செல்கிறார்கள் கோவலனும் கண்ணகியும்.  அவர்களுக்கு வழித்துணையாகச் செல்கிறார் சமணக் குரத்தி கவுந்தி அடிகள்.  மதுரை புறநகர்ப் பகுதியில் வாழும் இடையர் குலப் பெண்ணாகிய மாதரியிடம், கோவலனும் கண்ணகியும் தக்க இடம் கிடைத்து வாழ்வைத் தொடங்கும் வரை அவர்களைப் பாதுகாக்குமாறு  அடைக்கலமாகக் கொடுத்துச் செல்கிறார் கவுந்தி அடிகள்.  

அங்குக்  கண்ணகி  சமைத்துப்  பரிமாறிய உணவை உண்ட பிறகு, கண்ணகியின்  காற்சிலம்புகளில் ஒன்றைக் கடைவீதியில் விற்றுப் பொருளீட்ட மதுரை நகருக்குள் செல்கிறான் கோவலன்.  ஆனால், அச் சிலம்பு பாண்டிய அரசியின் களவு போன சிலம்பு என்று பொய்ப் பழி சுமத்தப்படுவதை  எதிர்கொள்கிறான்.  வழக்கை ஆராய்ந்து பாராத பாண்டிய மன்னன், கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனைக் கொன்று அரசியின் சிலம்பை மீட்டு வருமாறு காவலர்களுக்கு ஆணையிடுகிறான். காவலர்களால் கொலைத் தண்டனைக்கு உள்ளாகி உயிரிழக்கிறான் கோவலன்.  

மறுநாள் அதிகாலையில் பாண்டிய அரசனின் அரண்மனையில் காலை மணி ஒலிக்கிறது.  ஆயர்கள் வாழும் புறநகரில் இடைக்குலத்து முதியவளாகிய மாதரி அன்று கோயிலுக்கு  நெய்யளக்கும் முறை தன்னுடையது என்று நினைவு வந்தவளாகத்  தன் மகள் ஐயையை அழைத்துக் கொண்டு, கையில் மத்துடன் வெண்ணெய்  கடைவதற்காகத்  தயிர் வைக்கும் தாழியிடம் செல்கிறாள். பானையில் பால் உறைந்து தயிராக மாறியிருக்கவில்லை. முன்னர் உறியில் சேமித்த வெண்ணெய்யை எடுத்து உருக்குகிறாள்,  அதுவும் நெய்யாக உருகவில்லை.  கொட்டிலில் எருது கண்ணீர் வடிக்கிறது, பசு அஞ்சுவது போல நடுங்குகிறது. அதன் கழுத்தணி  தரையில் அறுந்து கிடக்கிறது.  துள்ளியாடும் ஆடும் துடிப்பின்றிச் சோர்வாகப் படுத்திருக்கிறது. இவற்றை அடுத்தடுத்துக் காணும்  மாதரி,  இவை யாவற்றையும்  தீய நிமித்தங்களாக உணர்கிறாள். தொழுவில் நிற்கும் ஆனிரைகளுக்கு எந்தத் துன்பமும் நேராமல் இருக்க மாயவனான மாலையும் அவனுக்கு மூத்தவனாகிய பலராமனையும் வாழ்த்தி குரவையாட்டம் நிகழ்த்த முடிவெடுக்கிறாள். 

தொழுவத்தில் நிற்கும் ஏழு காளைகளை ஏழு ஆயர்குல மகளிர் வளர்த்து வருகிறார்கள். அக் காளைகளை அடக்குபவரையே மணமுடிக்க வேண்டும் என்பது அவர்களது அவா. அந்த ஏழு பெண்களையும் அழைத்து அவர்களுக்குக் குரவைக்காகப் 'படைத்துக் கோள்' பெயர் இடுகிறாள் மாதரி.  நிகழ்த்துக் கலைகளான நாட்டியம் நாடகம் போன்றவற்றில் கூறப்படும் கதையில் இடம் பெறும் பாத்திரங்களுக்கான பெயரை நடித்துக் காட்டுபவருக்குச் சூட்டுவது வழமை.  அதாவது நடிப்பவருக்கு ஒரு  புனைபெயர் இட்டுச் சொல்வது வழக்கம் (எ. காட்டு: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், கார்த்தியின் படைத்துக் கோள் பெயர் வந்தியத்தேவன்).

ஆடுவோர் ஏழு பேரோ அல்லது ஒன்பது பேரோ  கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆடும் நடன வகை குரவை எனப்படும்.  வரிசையில் நிற்போரில் இடமிருந்து வலமாக முறையே;  குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று இசைக்குரிய ஏழு சுரங்களின்  பெயர்களைக் கைகோர்த்து ஆடவிருக்கும் ஆய்ச்சியர் எழுவருக்குப் பெயர்களாக மாதரி சூட்டுகிறாள்.  

இக்காலத்தில் இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) எனக் கூறப்படும் ச, ரி, க, ம, ப, த, நி (அதாவது; சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்பெறுபவை),  அக்காலத்தில் தமிழில்  'குரல்', 'துத்தம்', 'கைக்கிளை', 'உழை', 'இளி', 'விளரி', 'தாரம்' என்னும் ஏழு பெயர்களாலும்  அறியப்பட்டன. இந்த சுரங்களின் பலவேறு வகைக்  கோர்வைகளின் அடிப்படையில் இசையின் பண் (அல்லது  இராகம்) உருவாகிறது.  
 


அவர்கள் சம நிலையாக வட்டவடிவில் நின்று, நண்டுகள் போல அடுத்து நிற்பவரின்  கைகளுடன் தங்கள் கைகளைப் பிணைத்துக் கொண்டு,  கண்ணனின் புகழை வாழ்த்திப் பாடி குரவை ஆட ஆயத்தம் ஆனார்கள். இந்தக் காட்சியைக் கூறும் சிலப்பதிகார வரிகள் இவை: 

          இடை முதுமகள் இவர்க்குப்          (52) 
          படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
          குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
          கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
          விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.

          மாயவன் என்றாள் குரலை; விறல் வெள்ளை 
          ஆயவன் என்றாள் இளி தன்னை; ஆய் மகள்
          பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை; மற்றையார்
          முன்னை ஆம் என்றாள் முறை.          (60)
          மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும்;
          வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும்;
          கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்
          முத்தைக்கு நல் விளரி தான்
          அவருள்,
          வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
          தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர்
          வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப்
          பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
          ‘ஐ!’ என்றாள், ஆயர் மகள்                    (70)

          அவர்-தாம்
          செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
          அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் (73)

                    [சிலப்பதிகாரம்:  மதுரைக் காண்டம், 7. ஆய்ச்சியர் குரவை, வரிகள் 52-73] 

பாடல் கூறுவதன்படி குரவையாடுபவர் வரிசை, 
குரல் = மாயவன்
துத்தம் = நப்பின்னை/பிஞ்ஞை
கைக்கிளை = ஆயமகள் ஒருத்தி
உழை = ஆயமகள் ஒருத்தி 
இளி = பலராமன்
விளரி = ஆயமகள் ஒருத்தி 
தாரம் = ஆயமகள் ஒருத்தி
மாயவன்  சீர் வரிசையில் (அணியில்) பின்னையும் தாரமும் நின்றனர். 
பலராமன் சீர் வரிசையில் உழையும், விளரியும் நின்றனர். 
பிஞ்ஞையின் இடப்பக்கம் கைக்கிளை நிற்கிறாள் 
முத்தைக்கு  வலப்புறம் விளரி நிற்கிறாள் 
இவ்வாறாகப்  பாடல் தரும்  குறிப்புகள் குரவை ஆடுபவர்  நிற்கும் வரிசையைக் காட்டும். 
இதைக் கொடுக்கப்பட்டுள்ள படம் காட்சிப்படுத்துகிறது.  


இளங்கோவடிகள் இப் பாடல் வரிகளில் பல இசை நுட்பங்களைப் பொதிந்து  வைத்துள்ளார் எனலாம்.

இசையில் கருவிகளுக்கு முதல் முதல் சுருதி சேர்க்கும்பொழுது  ச-ப-ச என்ற மூன்று சுரங்களுக்குப் பொருந்தச் சேர்த்துக் கொள்வார்கள். ச-ப-ச என்ற சுரங்கள் சட்சம-பஞ்சம முறைப்படி (ஓசை அளவீட்டில் 1, 1½, 2) அமையும்.  கீழ் 'ச' வின் இருமடங்கு ஓசையுடையது மேல் 'ச' வாக இருப்பதனாலும் இடைப்பட்ட நிலையில் பஞ்சமம் சேரும்பொழுது கேட்பதற்கு இசை ஒத்து இனிமை நிறைந்து நிற்கும். சட்சம-பஞ்சம முறைப்படி இசை கூட்டப்படுவதின்  காரணம் சட்சமம் -பஞ்சமம்  இரண்டும் ஒலி வேறுபாடற்றவை, ஒரே முறையில்தான் ஒலிக்கப்படும்.  ஆனால் ஏனைய  ஐந்தும்  (ரி, க, ம, த, நி) ஒலிப்பில் வேறுபாடுகள் கொண்டவை, அவற்றுக்குத் தனிப்பெயர்களும் உண்டு, குறியீடுகளும் உள்ளன.  ('ரி' இல் 3,  'க' இல் 3,  'ம' இல் 2,  'த' இல் 3, மற்றும்  'நி' இல் 3  வேறுபாடுகள் உள்ளன).  

 

இதைத் தமிழ்ப் பெயர்களில் குறிப்பிடுவோமென்றால், குரல் (ச)  மற்றும் இளி (ப)  ஆகிய இரண்டும்  ஒலி வேறுபாடற்றவை. இவை முறையே மாயவனுக்கும், பலராமனுக்கும் எனக் குறிப்பிடுகிறாள் மாதரி.  இத் தேர்வு மாயவன் பலராமன் ஆகிய இருவரின் சிறப்பை, தனித்தன்மையைக்   காட்டுவதற்காக எனக் கொள்ளலாம்.   குரல், இளி ஆகிய இருவர் மட்டுமே ஆண் உருவாகப்  பாவித்து ஆடுகிறார்கள்.  மற்ற ஐவரும் பெண் உருவாகவே குரவை ஆடுகிறார்கள்.  

ச, ரி, க, ம, ப, த, நி என்ற சுரங்கள் வரிசையில் எட்டாவதாக மீண்டும் 'ச' வருகையில் (ச, ரி, க, ம, ப, த, நி, ச)   'ச' விற்கு முன்னதாக 'நி' இடம் பெறும்.  
அதாவது, 'குரல்' மறுபடி வரும்பொழுது அதற்கு  முன்னர் 'தாரம்' வரும்.  இங்குக் குரவை ஆடுபவர்கள் வட்டவடிவில் நிற்கும் பொழுது குரலுக்கு முந்தையதாக  (முன்னதாக)  தாரம் நிற்கிறாள்.  முந்தை முத்தை எனப் பாடலில் விகாரம் அடைந்தது. இதை வலித்தல் விகாரம் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

          மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
          வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
என்று இணை சேர்த்துவிட்டு, கைக்கிளையை (இணையின்றி /ஒருதலைக் காதல்) தனித்து விட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.  

மாயவன் கழுத்தில் நப்பின்னை துளசி மாலையைச் சூட்டி அவனோடு இணைந்து ஆட, வட்டவடிவில் கைகோர்த்து  மற்றவரும் அவன் புகழ் பாடி குரவை ஆட்டத்தைத்  தொடங்கினர்.

பார்வை நூல்கள்: 
சிலப்பதிகாரம், நூலாசிரியர் இளங்கோவடிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
சிலம்பின் கதை, நூலாசிரியர் பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்

படம் உதவி:
நடனக் காட்சி படவுதவி:  தமிழ் மரபு அறக்கட்டளை; தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும்  ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியக ஏற்பாட்டில் நடக்கும்  "அகம் புறம்"  தமிழ்க் கண்காட்சியின்  தொடக்கவிழாவின் கலைநிகழ்ச்சி.



நன்றி: தமிழணங்கு, நவம்பர்-2022


#இலக்கிய நுட்பம், #சிலப்பதிகாரம், #தமிழணங்கு, #Themozhi