Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

Sunday, January 25, 2026

கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி

கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி


கார்ல் சாகன் (1934-1996), ஒரு புகழ்பெற்ற அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர், அண்டவியல் ஆய்வாளர்.  சிக்கலான அறிவியல் கருத்துக்களை எளிய முறையில் தெளிவிக்கக்கூடிய வகையில் உரையாற்றக் கூடிய வல்லமை பெற்றிருந்த அறிவியல் உரையாளராக அறியப்பட்டதால் மக்களிடம் அவர் உரைகளுக்கு நல்ல செல்வாக்கு  இருந்தது. 


கார்ல் சாகனின் ஆலோசனையின் பேரில், 1990 பிப்ரவரி 14 அன்று விண்கலம் வாயேஜர் -1 புவியின் சுற்றுப்புறத்தை விட்டு சூரிய மண்டலத்தின் விளிம்புகளுக்குப் புறப்படும்போது, புவியை இறுதியாக ஒருமுறை சுற்றிவந்து படம் எடுத்தது.   புவியின் இந்த வெளிர் நீலப் புள்ளி உருவப்படத்தைப் படம்பிடித்தபோது வாயேஜர்-1 விண்கலம் சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தது, சிதறிய ஒளிக்கதிர்களின் இடையே சூரியனுக்கு மிக அருகில் படம் எடுத்ததன் விளைவாக, இப்படத்தில் பூமி, ஒரு சிறிய ஒளிப் புள்ளியாக, 0.12 பிக்சல் அளவுள்ள வெளிர் நீலப் புள்ளியாகத் தெரிகிறது.



கார்ல் சாகன் எழுதிய "பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்" (Pale Blue Dot: A Vision of the Human Future in Space by Carl Sagan) என்ற நூல் அதிகம் விற்பனையான நூல்களுள் ஒன்று.  இது விண்வெளி ஆய்வின் தேவையை வலியுறுத்தியது. கார்ல் சாகனின் 'வெளிர் நீலப் புள்ளி: விண்ணை நோக்கிய பார்வையால் உணரும் மனிதர்களின் எதிர்காலம்' என்ற இந்த நூலின் கருத்து மிகவும் பரவலாக வாசிக்கப்படு பாராட்டப்படும் ஒரு கட்டுரை.  அதன் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. 

நாம் விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து புவியைப் பார்த்தால், அது ஒரு சிறிய புள்ளியாகத் தான் தெரியும்…

“மீண்டும் அந்தப் புள்ளியைப் பாருங்கள். அதோ அங்கே. அதுவே நம் வீடு. அதுவே நாம் இருக்குமிடம்.  அங்குதான் நீங்கள் விரும்பும் அனைவரும், நீங்கள் அறிந்த அனைவரும், நீங்கள் எப்போதாவது  கேள்விப்பட்ட அனைவரும், இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்கையை அங்கேயே வாழ்ந்தார்கள்.

நமக்கு மகிழ்ச்சியும் துயரமும் தரும் அனைத்தும், நம்பிக்கை தருவதற்குத் தோன்றிய ஆயிரக்கணக்கான மதங்கள், கொள்கைகள், பொருளாதாரக் கோட்பாடுகள், வேட்டையாடியும்  சேகரித்தும்  வாழ்ந்த முன்னோர்கள் அனைவரும், ஒவ்வொரு வீரரும் கோழையும், ஒவ்வொரு பண்பாட்டை ஆக்கியவரும் அழித்தவரும், ஒவ்வொரு அரசரும் உழவரும்,  காதலிக்கும் இளவயது இணையர்கள் அனைவரும், ஒவ்வொரு தாயும் தந்தையும், வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு குழந்தையும், கண்டுபிடிப்பாளர்களும் ஆய்வாளர்களும், ஒவ்வொரு வாழ்வியல் நெறி வழிகாட்டியும், ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு ‘சூப்பர் ஸ்டார்’ பிரபலங்களும், ஒவ்வொரு ‘உயர்வாக மதிக்கப்பட்டத் தலைவர்களும்’,  ஒவ்வொரு புனிதரும் பாவியும் என நம் மனிதயின வரலாற்றில் வாழ்ந்த அனைவரும் அந்தச் சூரிய ஒளிக்கதிரில் மிதக்கும் தூசித் துகள் போலத் தெரியும் அந்தச் சிறு புள்ளியில்தான் வாழ்ந்தார்கள்.

பரந்த பிரபஞ்ச அரங்கில் பூமி என்பது மிகச் சிறிய மேடையே. இந்த ஒரு சிறு புள்ளியின் ஒரு மூலையில் வாழ்பவர்கள்,  தாங்கள் சென்ற இடத்தில் தம்மைப் போலவே இருக்கும் உலகின் மற்றொரு மூலையில் வாழ்பவர்களுக்கு இழைத்த முடிவில்லா கொடூரங்களை எண்ணிப் பாருங்கள். அவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்கிறார்கள், எவ்வளவு ஆவலுடன் ஒருவரையொருவர் கொல்லத் தயாராக இருக்கிறார்கள், எவ்வளவு தீவிரமான வெறுப்பை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நினையுங்கள். பெருமையும் வெற்றியும் அடைய வேண்டும் என்று, இந்தப் புள்ளியின் ஒரு சிறு பகுதியினைத் தற்காலிகமாக ஆதிக்கம் செய்யும் ஆசையில், எத்தனை தளபதிகளும் பேரரசர்களும் இரத்த ஆறுகளை  மண்ணில் ஓட்டவிட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.

நம்முடைய தோரணைகள், கற்பனையான நமது முக்கியத்துவம் என்ற உணர்வு, பிரபஞ்சத்தில் நமக்கு ஒரு தனிச் சிறப்பிடம் இருக்கிறது என்று கருதும் அறியாமை  ஆகியவற்றை எல்லாம் இந்த வெளிர்நீலப் புள்ளி சவாலுக்கு உள்ளாக்குகிறது. இந்தப் பரந்த, அனைத்தையும் சூழ்ந்த பெரிய அண்டவெளி இருளில், நம் பூமி ஒரு தனிமையான சிறு துகள் மட்டுமே. இந்தப் பரந்த அண்ட வெளியில்  நம்மிடமிருந்து நம்மையே காப்பாற்ற வேறு எங்கிருந்தாவது உதவி வரும் என்பதற்கு எந்த ஓர் அறிகுறியும் இல்லை.
 
இதுவரை உயிர் வாழத் தகுதியான உலகமாக அறியப்பட்ட ஒரே இடம் பூமி தான். வேறு எங்கும், நாம் எதிர்நோக்கும் குறைந்த அளவு  எதிர்காலத்தில், மனித இடம் குடியேற வேறிடம் ஏதும் கிடையாது.  ஆமாம்.  வேறு கோள்களுக்குச் சென்று வரமுடியும், —ஆனால் குடியேற இன்னமும் வாய்ப்பில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இப்பொழுது வாழ நமக்கு இருக்கும் ஒரே இடம் இந்தப் பூமிதான். 

வானியல் உண்மைகள் மனிதரிடம் பணிவு மனப்பான்மையை, பண்பை உருவாக்கும் அனுபவம் என்று சொல்லப்படுகிறது.  நாம் காணும் நமது சிறிய உலகின் இந்தத் தொலைதூர உருவத்தை விட மனித அகந்தையை அறியாமையை உணர்த்தும்  சிறந்த சான்று வேறொன்றும் இல்லை.

எனக்கு இது, நாம் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பையும், இதுவரை நாம் அறிந்த ஒரே இல்லமான இந்த மங்கலான வெளிர் நீலப் புள்ளியைப் பாதுகாத்து, மதித்து, நேசிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்துகிறது.”   
— கார்ல் சேகன், பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்


உதவிய தளங்கள் :
காணொளி: https://youtu.be/tgQ1PtkZvGU
தகவல்: https://www.planetary.org/worlds/pale-blue-dot; 
Carl Sagan (1934-1996), https://science.nasa.gov/people/carl-sagan/


நன்றி:
கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி
 - தேமொழி
இதழ்: தமிழணங்கு-பிப்ரவரி 2026; 
பக்கம்: 19-21


#தமிழணங்கு,  #மொழிபெயர்ப்பு, #அறிவியல், #கார்ல் சாகன், #Themozhi

Saturday, July 9, 2016

கோம்பிப் பாட்டு

கோம்பிப் பாட்டு


கவிதை மூலம் – ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) 
மொழிபெயர்ப்பு – தேமொழி

எப்பொழுதும் நான்  குறிப்பிடவிரும்பும் ஒன்று;  
பெருமையும், இறுமாப்பும்,  அரட்டையும் 
உறுதியாகச் சொல்ல உதவாத அரைகுறைப் பார்வையும் 
பேசுபவர்மீது நாம் கொண்ட மதிப்பைக் குலைத்துவிடும்.  
இருப்பினும் உலகையே அவர் சுற்றி வருவார்
பார்ப்பதையெல்லாம் பார்த்து வருவார் 
பயணம் முடித்தே வந்தார் என்றால்
பத்துமடங்கு துணிவும் அதிகரித்துவிடும் 
முயன்றாலும் அவரைப் பேசி நிறுத்தவும் இயலாது 
முட்டாள் பயணியும் உங்கள் வாயை அடைத்துவிடுவார்
"நான் நினைப்பது சரி என்றால், எனக்கு உங்கள் அனுமதியுண்டு 
நான் பார்த்திருக்கிறேன், நிச்சயமாக நான் அறிந்திருப்பேன்" 
என்பவரிடம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை 
அவரின் விருப்பத்தை மறுக்க முடியாமல் உடன்படுவீர். 

நட்புடனே அத்தகைய நண்பர் இருவர் பயணமாகி 
நடந்தார் கடந்தார் அரேபியப் பாலையை  
வழியெல்லாம் தொடர்ந்தது அவர்தம் உரையாடல் 
இதைப்பற்றியும் பேசினர், அதைப்பற்றியும் பேசினர் 
எதைப் பற்றியும் பேசினர், அத்துடன் தாம் கண்ட 
கோம்பியைக் குறித்த விவாதமும்தான் செய்தனர் 

வித்தியாசமான விலங்கென்றே வியந்தார் ஒருவர் 
"விண்ணின் கீழுள்ள இவ்வியனுலகு என்றும் கண்டதுண்டோ! 
பல்லி போன்ற நீண்ட மெலிந்த உடலுடன் 
பாம்பைப் போன்ற நாக்குடன், மீனின் தலையுடன்
பாதத்தில் கூரிய நகத்துடன் பிளவுபட்ட மூன்று விரல்களுடன் 
பின்புறம் மிக நீண்டதொரு  வாலுடன் மெல்ல மெல்ல 
ஊர்ந்த அந்தக் கோம்பி கொண்டதோர் அழகிய  நிறம்!  
யாரேனும் கண்டதுண்டோ அது போலத்தான் ஒரு நீல நிறம்?" 

"நிறுத்து... நிறுத்து" என்றே விரைவில் வந்தது தோழனின் மறுப்பு 
"பார்த்தேன் என்னிரு கண்களால் அதன் அழகிய பச்சை வண்ணம்     
படுத்தே கிடந்தது தனது வாயை அகலத் திறந்த வண்ணம் 
கதிரவனின் ஒளிக்கதிரில் தன்னைச் சூடேற்றிய வண்ணம் 
உடலை நீட்டி ஒய்யாரமாக ஓய்வெடுத்த கோம்பியை   
நான் கண்டபொழுது காற்றைக் குடித்தே அது களித்திருந்தது. 

"தோழா, நீ பார்த்த கோம்பியைத்தானே நானும் பார்த்தேன்  
தோலின் நிறம் நீலம்தான் என்று நானும் உறுதியாகச் சொல்வேன் 
நீண்டு பரவியிருந்த மரத்தின் கீழ் நானும் பார்த்தேன்  
நீண்ட குளிர் நிழலில் ஓய்ந்து கிடந்தது அந்த நீலநிறக் கோம்பி"   

"பச்சை நிறம் ஐயா, அது பச்சை என்றே  உறுதியாய்ச் சொல்வேன்"
"பச்சையா அந்த நிறம்?" பதிலுக்குக் கொதித்தார் தோழர்
"பார்வையற்றவன் நான் என்ற எண்ணமோ உமக்கு?" 
"பாதிப்பில்லை அதனால் உமக்கு", என்றார் நண்பர் 
"பயனற்ற வகையில் பார்க்க உதவும் உமது 
பார்வை இருந்தால்தான் என்ன? போனால்தான்  என்ன?"    

விவாதம் வளர்ந்தது  சச்சரவு முற்றியது 
வார்த்தைகள் வெடித்தன சண்டையில் முடிந்தது 
நல்ல வேளை, வந்தே சேர்ந்தார் மூன்றாமவர் 
அவ்வழி வந்த அவரிடமே வாதத்தை முன்வைத்தனர் 
அறிந்தால் சொல்வீர் அன்பரே என்றே வேண்டினர் 
"அந்தக் கோம்பியின் நிறமென்ன? பச்சையா நீலமா?"

"ஐயன்மீர் நிறுத்துவீர் உமது கூச்சலை" என்றார் வந்தவர்
"ஐயமின்றிச் சொல்வேன் அதன் நிறம் பச்சையோ நீலமோ அல்ல, 
அந்த விலங்கினை நேற்றிரவு  நானும் பிடித்தேன் 
அதன் நிறத்தை விளக்கொளியில் நன்கே பார்த்தேன்  
நான் பார்த்த கோம்பியின் நிறம் கரி போன்றதொரு கருப்பு   
விழிக்காதீர்கள், என்னிடம்தான் இருக்கிறது அது இப்பொழுதும்  
காட்டுவேன் உங்களுக்கு, வெற்றி பெற வேண்டிக் கொள்ளுங்கள்" 
"நான் வாழ்வையே  பணயம் வைப்பேன் அதன் நிறம் நீலமென்று" 
"நானும் சத்தியம் செய்வேன், அதைப் பார்த்தவுடன் 
நீங்களும் ஒப்புக்கொள்வீர் அதன் நிறம் பச்சையென்று"

"ஆகட்டும், உங்கள் ஐயம் அறவே நீங்கட்டும் 
நானும் வெளியே விடுவேன் கோம்பியை" என்றார் வந்தவர் 
"உங்கள் கண்முன் வெளிவரும் கோம்பி கருமையாக மட்டும் 
இல்லையெனில்  கொன்றே நானும் தின்றிடுவேன்" என்றார் 

சொல்லியவண்ணம் நன்கு பார்வையில் படுமாறு விடுவித்தார்  
கோம்பிதனை வெளியே, ஆகா! வெண்மையன்றோ அதன் நிறம்! 
இருவரும் வெறித்து நோக்க, வந்தவரோ வியந்து நோக்கினார். 
திகைத்து பேச்சிழந்த கூட்டத்தில் முதலில் பேசத் துவங்கியதும்  
வெளியே வந்த கோம்பியே, "என் மக்களே!" என அவர்களை அழைத்தது   
"நீங்கள் சொன்ன யாவும் சரிதான், அவையாவும் பிழையும்" என்றே அறிவீர்
"நீங்கள் கண்டதை அடுத்தமுறை பிறரிடம் விவரிக்கும் பொழுது 
உங்களைப் போன்றே பிறரும் கண் உடையவர் எனவும் எண்ணுவீர் 
உங்கள் பார்வையை நம்புவதைக் காட்டிலும் தான் கண்டதையே  
பிறர் நம்ப விரும்பினால் அதில் வியப்பில்லைதான் காண்பீர்"  


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

The Chameleon

– James Merrick (1720–1769)

OFT has it been my lot to mark
A proud, conceited, talking spark,
With eyes that hardly served at most
To guard their master ’gainst a post;
Yet round the world the blade has been,
To see whatever could be seen.
Returning from his finish’d tour,
Grown ten times perter than before,
Whatever word you chance to drop,
The travell’d fool your mouth will stop.
“Sir, if my judgment you’ll allow,
I’ve seen, and sure I ought to know.”
So begs you’d pay a due submission,
And acquiesce in his decision.
Two travellers of such a cast,
As o’er Arabia’s wilds they pass’d,
And on their way, in friendly chat,
Now talk’d of this, and then of that,
Discoursed awhile, ’mongst other matter,
Of the Chameleon’s form and nature.
“A stranger animal,” cries one,
“Sure never lived beneath the sun:
A lizard’s body lean and long,
A fish’s head, a serpent’s tongue,
Its foot with triple claw disjoin’d,
And what a length of tail behind!
How slow its pace! And then its hue!
Who ever saw so fine a blue?”
“Hold, there!” the other quick replies;
“’Tis green; I saw it with these eyes,
As late with open mouth it lay,
And warm’d it in the sunny ray.
Stretch’d at its ease the beast I view’d,
And saw it eat the air for food.”
“I’ve seen it, sir, as well as you,
And must again affirm it blue.
At leisure I the beast survey’d
Extended in the cooling shade.”
“’Tis green, ’tis green, sir, I assure ye.”
“Green!” cries the other in a fury;
“Why, sir, d’ye think I’ve lost my eyes?”
“’Twere no great loss,” the friend replies;
“For if they always serve you thus,
You’ll find them but of little use.”
So high at last the contest rose,
From words they almost came to blows,
When luckily came by a third;
To him the question they referr’d,
And begg’d he’d tell them, if he knew,
Whether the thing was green or blue.
“Sirs,” cries the umpire, “cease your pother;
The creature’s neither one nor t’other.
I caught the animal last night,
And view’d it o’er by candle-light.
I mark’d it well; ’twas black as jet.
You stare! But, sirs, I’ve got it yet,
And can produce it.” “Pray, sir, do;
I’ll lay my life the thing is blue.”
“And I’ll be sworn, that when you’ve seen
The reptile, you’ll pronounce him green.”
“Well, then, at once to ease the doubt,”
Replies the man, “I’ll turn him out;
And when before your eyes I’ve set him,
If you don’t find him black, I’ll eat him.”
He said; and full before their sight
Produced the beast, and lo! ’twas white.
Both stared; the man look’d wondrous wise.
“My children,” the Chameleon cries
(Then first the creature found a tongue),
“You all are right, and all are wrong.
When next you talk of what you view,
Think others see as well as you;
Nor wonder if you find that none
Prefers your eyesight to his own.”


மூலம்:
The Chameleon
By James Merrick (1720–1769)
(http://www.bartleby.com/380/poem/421.html)

தமிழில் இப்பாடலை "கோம்பி விருத்தம் " என்ற தலைப்பில் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் 1897 இல் மொழியாக்கம் செய்துள்ளார்.  வெ. ப. சு. வின்  கோம்பி விருத்தம் பாடலின்  மூலமும் உரையும் மதுரை திட்டத்தின்  கீழ் இணையத்தில்  வெளியிடப்பட்டுள்ளது 
(http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0448.html)



நன்றி: சிறகு
ஜூலை 9, 2016


#கவிதை, #சிறகு, #மொழிபெயர்ப்பு, #Themozhi 



Tuesday, January 26, 2016

விழித்தெழட்டும் என் நாடு!

விழித்தெழட்டும் என் நாடு!

கவிதை மூலம் – இரவீந்திரநாத் தாகூர்
மொழிபெயர்ப்பு – தேமொழி

எங்கே அச்சமற்ற மனம்
தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு கட்டுப்பாட்டுக்குள்
அடங்காமல் இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய
மனப்பான்மையால் சிதறாமல் இருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின்
ஆழத்தில் இருந்து உருவாகிறதோ
எங்கே சோர்வற்ற கரங்கள்
முழுமைப்படுத்துவதில் முனைகிறதோ
எங்கே தெளிந்த நீரோட்டமான சிந்தனை பாழான
பழக்கம் என்ற பாலை மணலில் மறையவில்லையோ
எங்கே உன்மனம் என்றும் பரந்த மனப்பான்மை
கொண்ட செயல்களை முன்னெடுக்கிறதோ
அந்த விடுதலை என்னும் சொர்க்கத்தில்
என் தந்தையே, என் நாடு விழித்தெழட்டும்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

 

இரவீந்திரநாத் தாகூர்

Where The Mind Is Without Fear

– Rabindranath Tagore

“Where the mind is without fear
and the head is held high,
where knowledge is free.
Where the world has not been broken up
into fragments by narrow domestic walls.
Where words come out from the depth of truth,
where tireless striving stretches its arms toward perfection.
Where the clear stream of reason has not lost it’s way
into the dreary desert sand of dead habit.
Where the mind is led forward by thee
into ever widening thought and action.
In to that heaven of freedom, my father,
LET MY COUNTRY AWAKE!

 

Saturday, January 16, 2016

என் அப்பா ...

 என் அப்பா ...


(என் அப்பா: கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு)

பல ஆண்டுகளாக நான் என் அப்பாவை வெறுத்திருக்கிறேன். என் பார்வையில், உலகிலேயே பொறுப்பற்ற ஒரு அப்பா என்றால் அது அவர்தான். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் பணம் எதுவும் சம்பாதித்ததில்லை. குடும்பமாகப் பொழுதைக் கழிக்கும்பொழுது அதில் மகிழ்ச்சி அடையாதவர், முதல் ஆளாக வெளியேறிவிடுவார். தன்னுடைய பிள்ளைகள் பள்ளியில் மகிழ்ச்சியாகப் படிக்கிறார்களா என்று அவர் கவலைப்பட்டதில்லை, ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நாங்கள் மதிப்பெண் பெறாவிட்டால் அவருக்குக் கோபம் மட்டும் வரும். அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவார், அதற்குக் காரணமும் எனக்குத் தெரியாது.

"யாரை நீங்கள் குறை சொல்ல முடியும்? எல்லாம் உங்கள் தலையெழுத்து" என்று அம்மாவும் பதிலுக்குக் கத்துவார். அம்மா தனது நினைவிலிருந்து முப்பதாண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மீண்டும் சொல்லும்பொழுது அப்பா அமைதியாக இருப்பார், அறையின் மறுபக்கத்தை நோக்கித் திரும்பி தனது சிகரெட்டைப் பற்ற வைப்பார். அம்மா அவரது மனதின் வலியை நினைவு படுத்தும்  பொழுது, அப்பாவின் சிகரெட் புகை வழியே அவர் கண்களின் கண்ணீரைப் பார்த்த நினைவுள்ளது.

என் அப்பா தியான்ஜின் (Tianjin) அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில், பழமைவாதக் குடும்பத்தின் முதல் மகனாக 1957 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் பிறந்தார். கடினமான வாழ்க்கை, ஆனால் அனைவரும் அவரிடம் அன்பு செலுத்தியது மட்டுமில்லாமல் செல்லம் கொடுத்துக் கெடுத்தார்கள். எனது தாத்தா பள்ளிக்கே சென்றது கிடையாது, அதில் அவருக்கு வாழ்நாள் முழுவதும் தாளாத வருத்தம் உண்டு. எனவே தனது கடந்த கால விருப்பங்களைத் தனது மகன் நிறைவற்ற வேண்டும் என எதிர்பார்த்தார். "கல்வி கற்ற அறிவாளியாக இருப்பதைவிட உலகில் சிறந்தது எதுவும் கிடையாது" என்று தனது அருகில் உள்ளோரிடம் சொல்லிக்கொண்டிருப்பார். அவர்களுக்கு அவர் ஏன் தனது மகனை வயல் வேலைகளைச் செய்யச் சொல்வதில்லை, அதற்குப் பதில், வறுமையான அந்தக் காலகட்டத்தில், தனது பிள்ளையின் வயதை ஒத்த மற்ற பிள்ளைகள் தங்கள் குடும்பத்திற்காக வயல்வெளியில் உழைக்கும்பொழுது, இவர் மட்டும் தனது மகனை நூல்கள், கவிதைகள், கதைப்புத்தகங்கள் படிக்கவும்; பழைய வானொலிப்பெட்டி வழியாக ஒலிபரப்பப்படும் உலகச் செய்திகளைக் கேட்கவும் அனுமதிக்கிறார் என்று புரியாது.

அப்பாவும் தனது குடும்பம் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குலைக்கவில்லை. அவருக்கு நல்ல நினைவாற்றல் உண்டு, பள்ளியிலும் நன்றாகப் படித்தார். எனது பாட்டி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள், ஒருமுறை கணக்கு ஆசிரியர் வகுப்பில் ஒரு கணக்கைப் போட வழிதெரியாமல் சங்கடப்பட்டாராம், ஆனால் தனது கையை உயர்த்திய என் அப்பா அதுநாள்வரை வகுப்பில் சொல்லியே தரப்பட்டிராத வழிமுறைகளின்படி அந்தக் கணக்கின் விடையைச் சொல்லியிருக்கிறார். இச்செயல், அந்தச் சிறிய கிராமப்புறப் பள்ளியில் என் அப்பாவைப் புகழ் பெறச் செய்தது. இது எந்த அளவு உண்மை என்று எனக்குத் தெரியாது, ஆனால், இதன் பிறகு சீனாவின் புகழ் பெற்ற கணித மேதையின் பெயரை ஒட்டி என் அப்பாவிற்கு "இரண்டாம் ஹுவா லூ கெங்" (Hua Lo-keng)  என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டது. இன்னமும் அவரது ஊரில் அவரை அவ்வாறு அழைப்பதுண்டு.

சீனாவின் கிராமப்புறங்களில், 1960களிலும் 70களிலும் அதிகம் பொழுதுபோக்க ஏதும் வாய்ப்பிருந்ததில்லை. என் அப்பாவும் தனது பெரும்பாலான நேரங்களை, ரொமான்ஸ் ஆஃப் தி த்ரீ கிங்டம்ஸ், தி ஆர்ட் ஆஃப் வார், தி வாட்டர் மார்ஜின் (Romance of the Three Kingdoms, The Art of War, The Water Margin) போன்ற புத்தகங்களைப் படிப்பதில் செலவிட்டார். எனது தாத்தா நெல் பயிரிட்டு, களையெடுத்து, குதிரைக்குத் தீவனம் தருவதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் பொழுது, எனது அப்பாவிற்குத் தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் சிறுவர்களிடம் கதைகள் சொல்வதில்தான் அதிக விருப்பம் இருந்தது. 'இந்த வயதான விவசாயிக்கு ஒரு நகர்ப்புற மகன் இருக்கிறான்' என்று பிறர் என் தாத்தாவிடம் வேடிக்கையாகக் கேலி பேசுவார்கள். அதைக் கேட்கும் தாத்தாவும் புன்னகையுடன், 'என் மகன் நல்ல அறிவாளி, நன்றாகப் படிப்பவன்' என்று பெருமை பேசுவார்.

என் அப்பா என்றுமே தன்னை அந்தக் கிராமத்தில் வாழும் மனிதராகக் கருதியதில்லை. மக்கள் அவரை ஆணவக்காரர் என்று சொல்வார்கள். அந்தக் கிராமத்தின் பிற இளைஞர்களை அவர் தன்னுடைய நண்பர்களாக என்றும் தன் மனதில் கருதியதுமில்லை. அவர்கள் தன்னை மதிப்புடன் பார்ப்பதை மட்டுமே விரும்பினார். அவர்களை அவர் கேலி செய்வார். ஒவ்வொருவருக்கும் அவர் பட்டப்பெயர் வைப்பதும், அது பிரபல்லியமாக மாறுவதும் வழக்கம். வாத்து போன்ற குரலை உடையவருக்கு "வாத்து சாங்" என்ற பெயரும்; நிறம் குறைவான, குட்டையான ஐந்தாவது பிள்ளையாக இருப்பவரை "குட்டி ஐந்தாம் உருளைக்கிழங்கு" என்றும்; சீன அதிபர் மாவோ போல முடிவெட்டிக்கொண்டு, தனது சட்டைப்பையிலும் இரண்டு சிறிய சிவப்பு அட்டைப் போட்ட புத்தகம் வைத்திருக்கும் மாவோ ரசிகரை "இரண்டாம் மாவோ" என்றும் அவர் அவர்களுக்குப் பட்டப்பெயர்கள் சூட்டுவார்.

என் அப்பா பள்ளிநாட்களில், படிக்க வேண்டிய முக்கியமான காலத்தில், 1966 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரை சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்தது. பள்ளியில் வகுப்புகள் மூடப்பட்டன, இல்லாவிட்டால் சரிவர நடத்தப்படவில்லை, வழக்கமான பாடங்களுக்குப்பதிலாகத் திட்டமிடப்பட்ட சிறப்புக் கலாச்சாரக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களும் கூட அப்பொழுது கற்றுக் கொடுக்கப்படவில்லை. படிக்க விரும்பாத மாணவர்களுக்கோ அது ஒரு சொர்க்க வாழ்க்கை. ஆனால் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த என் அப்பாவைப் போன்ற மாணவர்கள் படிப்பதற்கான சரியான வாய்ப்பையும் காலத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

என் அப்பா ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே, 1966 ஆம் ஆண்டிலேயே கல்லூரியின் உயர் கல்விக்கான 'காயோகோவ்' (Gaokao) தேர்வுமுறை கைவிடப்பட்டுவிட்டது. சீன அதிபர் மாசேதுங் (Mao Zedong), 1968 ஆண்டின் 'பீப்பிள்ஸ் டெய்லி' (People’s Daily ) செய்தித்தாளில், "கல்வி என்பது புரட்சிக்கு வழிவகுக்க வேண்டும், பாட்டாளி மக்களின் வாழ்வு உயர உதவிபுரிவதாக இருக்கவேண்டும்" என்று எழுதினர். விவசாயிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், வீரர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு என்பது 70களில் நடைமுறைக்கு வந்தது. அதனால் ஒருவரது குடும்பப் பின்னணி உயர் கல்வி கற்க முக்கிய காரணியாக அமைந்தது. அத்துடன் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும் அவசியம் என்றானது. என் அப்பா தனக்கு இதனால் உயர்கல்வி கற்க வாய்ப்பிருப்பதாக எண்ணினார். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணம். உயர்கல்வி கற்பது பரிந்துரைகளின் அடிப்படையில் என்று மாறியது. என் அப்பாவின் குடும்பப் பின்னணியில் பாதுகாப்புப்படை பிரிவினர், கட்சி உறுப்பினர்கள், அல்லது செம்படையின் வீரர்கள் என யாரும் இல்லாததால் என் அப்பா பரிந்துரைக்கப்படவில்லை. 1975 ஆம் ஆண்டு அப்பா தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஆனால் அவரது உயர்கல்விக்கான கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டன என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

பின்னர் அக்டோபர் 21, 1977 இல் மீண்டும் 'காயோகோவ்' தேர்வு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. கல்லூரியில் படிக்க விரும்பிய என் அப்பாவின் ஆசையை இது துளிர்விடச் செய்தது. ஒரு மாதம் கடந்த பிறகு நடக்கப் போகும் தேர்விற்காகக் கடினமாக உழைத்து தன்னை தயார் செய்து கொண்டார். தனது குடும்பத்தில் கல்லூரியில் அடியெடுத்துவைக்கப் போகும் முதல் மாணவனாகத் தான் இருப்போம் என நம்பிக்கையுடன் இருந்தார். அந்தக் குளிர் காலத்தில் தாத்தா என் அப்பாவைத் தனது குதிரை வண்டியில் தேர்வு நடக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார், வெளியே குளிரில் பலமணி நேரம் காத்திருந்தார். சீன வரலாற்றிலேயே குளிர்காலத்தில் நடத்தப்பட்ட ஒரே 'காயோகோவ்' தேர்வு அதுதான், குறைந்த அளவில் மாணவர் பங்கு பெற்ற தேர்வும் அதுதான். 5.7 மில்லியன் மாணவர்களில் 300,000 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

அப்பாவின் தேர்வு முடிவுகளும் சிறப்பாக இருந்தது. அறுவை சிகிச்சை மருத்துவம் படிக்க ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அவர் முதல் ஆண்டு படிப்பிற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பொழுதே, குடும்பத்தில் சிலர் தங்கள் மனதை மாற்றிக் கொண்டார்கள். மருத்துவராவதா? அது நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வேலைக்காரன் போன்ற பணிதானே என்று எண்ணினார்கள். அப்பா தனது மருந்துப்பெட்டியுடன், வெறுங்காலுடன் கிராமம் கிராமாகச் சென்று தனது மருந்தை ஏமாற்றி விற்கும் ஆளாக வாழுமாறு அவரது வாழ்க்கை அமைந்துவிடுமோ? என்பது போன்ற விவாதங்கள் என் தாத்தாவைக் குழப்பியது. அவருக்குப் பிற கிராமத்து மக்களின் பார்வையில் தனது மகன் வெறும் மருத்துவம் பார்க்கும் ஊழியனாகத் தென்படுவார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனது மகனிடம், நான் உன்னை அந்த மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்க மாட்டேன், மீண்டும் அடுத்த ஆண்டு 'காயோகோவ்' தேர்வுக்குத் தயார் செய், தேர்வு எழுது. நீ படிப்பதற்குச் சிறந்த படிப்பு எது எனத் திட்டமிடுவோம் என்றார்.

அடுத்த ஆண்டு, 1978 ஆம் ஆண்டு கோடையில் என் அப்பா மீண்டும் 'காயோகோவ்' தேர்வு எழுதினர். இந்தமுறை அவர் இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஒரு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிக்க முடிவு செய்தார். ஆனால், சில நாட்கள் கழித்து, கல்வி நிறுவனத்தின் உள்ளூர் பிரிவின் அதிகாரி, ஒரு புதிய கல்விக் கொள்கையின் காரணமாக அவரது விண்ணப்பத்தைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப வழியில்லை என்று கூறினார். சென்ற ஆண்டு படிக்க இடம் கொடுக்கப்பட்டும் அதனை ஏற்றுக் கொள்ளாது புறக்கணித்தவர்களுக்குத் தண்டனையாக அவர்கள் தகுதியை இழக்கிறார்கள். நம் நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைவு, அதனால் உனது விண்ணப்பத்தை நான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப் போவதில்லை என்று கூறிவிட்டார்.

யாருக்குமே அந்த அதிகாரி கூறியது உண்மையா என்று அறிய வழியில்லை. அந்தக் காலகட்டம் எதிலுமே குழப்பங்கள் நிறைந்த காலம், அதனால் உண்மையிலேயே அப்படி ஒரு கொள்கை இருந்ததா, அல்லது அவர் கூறிய காரணத்திற்கு வேறேதும் பின்னணி இருந்ததா என்று தெரிந்து கொள்ளவும் வழியில்லை. அவர் அந்தப் பதவிக்குப் புதிதாக வந்தவர், அதனால் துடிப்புடன் செயல்பட விரும்பினார் எனவும் வதந்தி உண்டு. ஒரு சிலர், அவரது மருமகள் தேர்வைச் சரியாக எழுதவில்லை. ஆனால் அந்தப் பெண்ணும் என் அப்பா படிக்க விரும்பிய அதே பல்கலைக் கழகத்தில் அதே படிப்பைப் படிக்க விரும்பினார். ஒரே பள்ளியில் இருந்து இருவர் சென்றால் அவருக்கு இடம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் என் அப்பா பலிகிடா ஆக்கப்பட்டார் என்றும் கூறினார்கள்.

எனது அப்பா மீண்டும் மூன்றாவது முறையாக 1979 இல் தேர்வு எழுத முயன்றார். ஆனால் இம்முறை தேர்வுக்குப் பதிவு செய்த பொழுதே, அவர் வயது வரம்பைக் கடந்துவிட்டதால் தேர்வு எழுதத்தகுதி இல்லை என்று தடை செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது 22, அவரது எதிர்காலமே மரண தண்டனைக்கு உள்ளானது.

***

என் அப்பாவின் வாழ்வில் நிகழ்ந்ததை நினைத்தால் என் இதயமே அவருக்காக இரத்தம் வடிக்கும். "விதியை மதியால் வெல்லலாம்" என்று வாழ்நாள் முழுவதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் எப்படி இடிந்து போயிருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

நான் மதிக்கும் சில சிறப்பான பொருட்களை ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன். அதில் என் அப்பாவின் இரு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று கருப்பு வெள்ளைப்படம் கொண்ட அவருடைய உயர்நிலைப்பள்ளியின் மாணவர் அடையாள அட்டை. அதில் ஆளைக் கவரும் தோற்றத்தில் அவர் இருக்க மாட்டார், ஆனால் புத்திசாலி என்பது வெளிப்படும் தோற்றத்துடன், கொஞ்சம் கூச்ச சுபாவம் தோற்றம் கொண்டவராக, அக்காலத்தில் பொதுவாக வழக்கில் இருந்த கருப்பு வண்ணச் சீருடையில் இருப்பார். மற்றொன்று பள்ளி நாட்களில் அவர் எழுதிய நாடகத்தின் கையெழுத்துப் பிரதி. கருநீல மையில், அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட பதிவின் இறுதியில் 1972 இல் "டாய்" எழுதியது (By Tai, 1972) என்ற குறிப்பிருக்கும்.

இவையிரண்டையும் நான் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் என் தாத்தா வீட்டிற்குப் போன பொழுது ஒரு புத்தகக் குவியலில் கண்டெடுத்தேன். அவற்றைப் பார்த்த பொழுது நான் எவ்வளவு அதிர்ச்சி அடைந்தேன் என்பது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நான் அறிந்தவரை அறுவையான, பலவீனமான மனிதராக, புகை பிடிப்பதும், சீட்டு விளையாடுவதும், சீன சதுரங்கம் விளையாடுவதும், குடிப்பதும் எனப் பொழுதைக் கழிக்கும் என் அப்பாவினுடையவை அவை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்பொழுதாவது புன்னகைக்கும் அவர், என்னை அரவணைத்து முத்தமிட்டதையோ, என்னுடன் பேசி என் இன்ப துன்பங்கள், அச்சம் கவலைகள் என எதிலும் பங்கு கொண்டதையோ நான் அறிந்ததில்லை. என் பள்ளியில் தேர்வுகளில் நான் பெறும் மற்றொரு முதல் மதிப்பெண் மட்டுமே அவருக்கு மகிழ்ச்சியைத்தரும்.

என் அப்பா குடித்திருக்கும்பொழுது அவரை எனக்குப் பிடிக்கும், அப்பொழுதுதான் அவர் அதிகம் பேசுவார். அந்தச் சமயம் அவர் அரசியல், வரலாறு என்று பேசுவதை விரும்புவார். ஒருமுறை குடித்திருந்த பொழுது கவிதை ஒன்றை எழுதினார். அதன் கடைசி இரு வரிகளும் எனக்கு நினைவிருக்கிறது.
"கடந்த இருபது ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கத் துணிவில்லை
கனவிலும் புத்தகங்களின் வாசனை என்னை வெட்டிக் கொல்கிறது"

பல்கலைக்கழகக் கல்வி என்பது இனி கிட்டாது என்ற நிலையில் 1979 இல் என் அப்பா தனது நினைவுகளில் ஆழ்ந்து போனார். கிராம மக்கள் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்தார்கள். அப்பா மிகவும் அமைதியானவராகி விட்டார். பல நாட்களுக்குக் காலையில் வீட்டை விட்டுச் சென்றால் இருட்டிய பிறகுதான் வீடு திரும்புவார். கிராம மக்களில் சிலர் அவரைக் கேலி செய்தனர், " இறவாது உயிர்த்தெழும் ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்று தன்னை நினைத்திருந்தார், ஆனால் அவர் சாதாரணக் கோழி என்பது தெரிந்துவிட்டது. அதிலும் பிற நாட்டுக் கோழிகளில் இருந்து எந்த வேறுபாடும் இல்லை," என்று ஏளனம் செய்தார்கள். 1970களின் காலகட்டத்தில், அவர் தனது துயரிலிருந்து மெதுவே மனம் தேற சீனாவின் விவசாயக் குடும்பம் ஒன்றினால் பொறுத்திருக்க இயலவில்லை. ஒரு மாதத்திற்குள் தாத்தா அவரை வயலுக்கு வேலைக்கு அனுப்பினார். ஆரம்பத்திலிருந்து ஒன்றுவிடாமல் கற்றுக்கொள்ள வைத்தார். நாட்டுப்புறங்களில் விவசாயம் தெரிந்திருந்தால் குறைந்தது பட்டினியால் சாகாமலாவது இருக்கலாம்.

என் பாட்டி சொல்லியிருக்கிறார்கள், 1979ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் முடிவில், ஒரு இரண்டு நாட்களுக்கு என் அப்பா காணாமல் போய் விட்டாராம். பக்கத்துக் கிராமத்தில் இருந்த ஒரு சிலர், அமைதியாக ஒரு இளைஞன் ஆற்றங்கரையில் தனித்து அமர்ந்திருந்ததைப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். என் அப்பாவின் குடும்பம் பதறிப் போய் அவரைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் ஆற்றில் குதித்திருப்பாரோ என்று அஞ்சியிருக்கிறார்கள். ஆனால் மூன்றாம் நாள் வெளிறிய முகத்துடனும் நீலம் பாரித்த உதடுகளுடனும் அவர் வீடு திரும்பியுள்ளார். அந்த இருநாட்களிலும் என்ன நடந்தது என யாருக்குமே தெரியாது, ஆனால் அதற்குப் பிறகு அப்பா தனது தலைவிதியை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தார். தன்னுடைய புத்தகங்களை எல்லாம் திரட்டி கிட்டங்கியில் போட்டு மூடி, அத்துடன் தன்னுடைய கனவுகளையும் சேர்த்து மூடிவிட்டார்.

பிற்காலத்தில், விவசாயம், வியாபாரம், அம்மாவுடன் மழலையர் பள்ளி நடத்துவது என அப்பா எல்லாவித வேலைகளையும் செய்தார். ஆனால் எதிலுமே அவருக்குப் பற்றுதல் இருக்கவில்லை. பெரும்பாலும் என் அம்மாவையே எதற்கும் நம்பி இருந்தார். பெரும் பொறுப்புகளையும், முக்கியமான பெரிய முடிவுகள் எடுப்பதையும் அம்மாவிடம் விட்டுவிட்டார். எனக்கு ஐந்து வயது இருக்கும்பொழுது கிராமத்திற்கு அருகில் இருந்த பெரிய நகரத்திற்குக் குடி பெயர்ந்தோம். "நான் என் வாழ்வின் மிகச் சிறந்த நாட்களைத் தொலைத்துவிட்டேன்," "சிறந்த வாய்ப்புகள், சிறந்ததான எதுவுமே என் கைநழுவிப் போய்விட்டது," என்று என்னிடம் சொல்லுவார். அப்பொழுதெல்லாம் அவர் தனது சோம்பேறித் தனத்திற்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறார் என்று நினைப்பேன். ஆனால் இப்பொழுது புரிகிறது, தனது கையாலாகாத நிலையால் ஏற்பட்ட தன்னிரக்கம் அவரை அவ்வாறு பேசச் செய்துள்ளது என்பதை.

முன்னர் பலமுறை என் அப்பாவை வருந்தச் செய்யும் வகையில் நான் பேசியுள்ளேன். அவர் குடும்பத்திடம் அவருக்கு அக்கறையில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் வளரத் தொடங்கியதும், காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மன்னிக்கத் துவங்கினேன். அவரைப் புரிந்து கொள்ள முயன்றேன். அவர் நிலையில் நானிருந்திருந்தால் அவரைவிட நல்ல முறையில் செயல்பட்டிருப்பேனா? எனக்குத் தெரியவில்லை.

2008 இல் நான் 'காயோகோவ்' தேர்வு எழுதிய பொழுது மழை கொட்டியது. பள்ளிக்கு வெளியே மழையில் ஒரு கையில் குடையும், மறு கையில் எனக்குப் பிடித்த பழங்களையும், கேக்குகளையும் கொண்ட பையைப் பிடித்தபடி எனக்காக அப்பா காத்திருந்ததைப் பார்த்த பொழுது அவரது கதை என் மனதில் ஓடியது. அவர் மிகவும் வயதானவராகத் தளர்ந்து போய்விட்டிருந்தார், நான் அவருக்குத் தெரியாதவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டு சத்தமில்லாமல் அழத் துவங்கினேன்.




_____________________________________________________________________________

குறிப்பு:
'கரோலின் கான்' அவர்களின் சிறுகதை, அவரது அனுமதி பெற்ற பிறகு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கரோலினுக்கு நன்றிகள் உரித்தாகிறது. 

My Father (http://theanthill.org/my-father)
Family history of the first gaokao after the Cultural Revolution
– by Karoline Kan (https://twitter.com/karolinecqkan)
Karoline Kan is a journalist in Beijing at Radio France Internationale
_____________________________________________________________________________

நன்றி: சிறகு
ஜனவரி 9 & 16, 2016

#சிறகு, #சிறுகதைகள், #மொழிபெயர்ப்பு, #Themozhi 




Friday, December 11, 2015

வானத்தைவிடப் பரந்து விரிந்தது

 வானத்தைவிடப் பரந்து விரிந்தது


கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
மொழிபெயர்ப்பு – தேமொழி


எல்லையற்ற கற்பனைத் திறனில்
நீலவானைவிடப் பரந்து விரிந்தது
அருகருகே வைத்து ஒப்பிட்டால்
மூளையின் ஆற்றலுக்கு உட்பட்டு
அதனுள் அடங்கிவிடும் பரந்தவானமும்
அளவற்ற கற்கும் ஆற்றலில்
நீலக்கடலை விடவும் ஆழமானது
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டால்
மூளை ஒரு கடற்பஞ்சென உறிஞ்சிட
வாளிக்குள் ஒடுங்கிவிடும் ஆழ்கடலும்
நிகரற்ற படைப்பாற்றல் தகுதியில்
ஒப்பற்ற கடவுளின் சக்திக்குச் சமம்
எடைக்கு எடை ஒப்பிடுகையில்
மூளை கடவுளைவிட மாறுபடுமெனில் அது
இசையின் சந்தங்களென வேறுபடுவதே

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


The Brain—is wider than the Sky—
– Emily Dickinson


The Brain—is wider than the Sky—
For—put them side by side—
The one the other will contain
With ease—and You—beside—
The Brain is deeper than the sea—
For—hold them—Blue to Blue—
The one the other will absorb—
As Sponges—Buckets—do—
The Brain is just the weight of God—
For—Heft them—Pound for Pound—
And they will differ—if they do—
As Syllable from Sound—



நன்றி: வல்லமை
டிசம்பர்  11, 2015


#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 


Wednesday, December 9, 2015

இறுதிப் பயணம் …

இறுதிப் பயணம் …


கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
மொழிபெயர்ப்பு – தேமொழி


சாவை நான் எதிர்நோக்காததால்
காலனே கனிவுடன் எனைத்தேடி வந்தான்
மறுவுலகம் செல்லும் மரணத்தேரிலே
காலனுடன் என் இறுதிப்பயணம்
மெதுவாக ஊர்ந்தே நாங்கள் சென்றோம்
காலனுக்கு எந்த ஓர் அவசரமுமில்லை
அவன் கருணையை மதித்தே நானும் எனது
உழைப்பிற்கும் ஓய்விற்கும் விடைகொடுத்தேன்
இடைவேளை மணியொலிக்க
பள்ளித் திடலில் விளையாடும்
குழந்தைகளைக் கடந்தோம்
வெறித்து நோக்கும்
வயல்வெளிக் கதிர்களையும்
மறையப் போகும்
மாலைக் கதிரவனையும் கடந்தோம்
இல்லை, கதிரவன்
எங்களைக் கடந்தே சென்றான்
மாலைப்பனியின் நடுக்கும் குளிரைத்
தடுக்கும் திறனற்றுப் போனதென்
மெல்லிய ஆடையும் சால்வையும்
மணல் திட்டின் மீதிருந்த
மாளிகையின் முன்னே
மரணத்தேரைச் சற்றே நிறுத்தினோம்
மண்ணில் புதைந்து புலப்படவில்லை
மாளிகையின் கூரையும் அதன் முகடும்
நூற்றாண்டுகள் பல கடந்தாலும்
அன்று நடந்தவை யாவுமே
நேற்று நிகழ்ந்தவையாக நெஞ்சில்
நிலைத்துப்போன நினைவுகள்
நான் எண்ணியவாறே அழிவற்ற
நிரந்தர வாழ்வை நோக்கிப்
பயணித்தன மரணத்தேரின் குதிரைகள்


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


Because I could not stop for Death
- Emily Dickinson

Because I could not stop for Death –
He kindly stopped for me –
The Carriage held but just Ourselves –
And Immortality.
We slowly drove – He knew no haste
And I had put away
My labor and my leisure too,
For His Civility –
We passed the School, where Children strove
At Recess – in the Ring –
We passed the Fields of Gazing Grain –
We passed the Setting Sun –
Or rather – He passed us –
The Dews drew quivering and chill –
For only Gossamer, my Gown –
My Tippet – only Tulle –
We paused before a House that seemed
A Swelling of the Ground –
The Roof was scarcely visible –
The Cornice – in the Ground –
Since then – ’tis Centuries – and yet
Feels shorter than the Day
I first surmised the Horses’ Heads
Were toward Eternity –
 


நன்றி: வல்லமை
டிசம்பர்  9, 2015



#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 


Friday, November 27, 2015

நடைபாதையின் முடிவில் …

 நடைபாதையின் முடிவில் …


கவிதை மூலம் – ஷெல் சில்வர்ஸ்டீன்
மொழிபெயர்ப்பு – தேமொழி


நடைபாதையின் முடிவிலோர் இடமுண்டு
அங்கே சாலை துவங்கும் முன்
அங்கே வெண்மையாய் மென்மையாய் வளரும் புல்லுண்டு
அங்கே ஒளிவீசும் செங்கதிரவனுண்டு
அங்கே பறந்து ஓய்ந்த நிலாப்பறவை
இளைப்பாறத் துளசியின் குளிர்க்காற்றுமுண்டு

கரும்புகை வீசுமிடத்தை விட்டு நாம் சென்றுவிடுவோம்
வளைந்து நெளிந்து செல்லும் இருண்ட சாலைகளை விட்டு
தார்ச்சாலையின் குழிகளில் பூத்திருக்கும் மலர்களைவிட்டு
காலால் நிலமளப்பதுபோல் மெதுவே மிகமெதுவே நடந்து
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறிகளைத் தொடர்ந்து
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்

ஆம் நிலமளப்பதுபோல் மெதுவே மிக மெதுவே நடப்போம்
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறி காட்டுமிடம் போவோம்
குழந்தைகளுக்காகக் குறிக்கப்பட்ட, குழந்தைகள் நன்கறியும்
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


Where The Sidewalk Ends
– by Shel Silverstein


There is a place where the sidewalk ends
and before the street begins,
and there the grass grows soft and white,
and there the sun burns crimson bright,
and there the moon-bird rests from his flight
to cool in the peppermint wind.

Let us leave this place where the smoke blows black
and the dark street winds and bends.
Past the pits where the asphalt flowers grow
we shall walk with a walk that is measured and slow
and watch where the chalk-white arrows go
to the place where the sidewalk ends.

Yes we’ll walk with a walk that is measured and slow,
and we’ll go where the chalk-white arrows go,
for the children, they mark, and the children, they know,
the place where the sidewalk ends.


நன்றி:  வல்லமை
நவம்பர்  27, 2015


#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 



Wednesday, November 25, 2015

நான் யார்?

நான் யார்?


கவிதை மூலம் – கார்ல் சாண்ட்பர்க்
மொழிபெயர்ப்பு – தேமொழி


விண்மீன்களை என்தலை மோதிடும்
மலையுச்சியில் என் பாதங்கள் பதிந்திடும்
பள்ளத்தாக்கிலும், எங்கெங்கும் நிறைந்திருக்கும்
வாழ்வின் கரையிலும் என் விரல்நுனிகள் திளைத்திருக்கும்

ஓசையுடன் நுரை பொங்கும் ஆதி அலைகளின்
ஆழத்தில் விதியெனும் கூழாங்கற்களை
என் கரங்களால் துழாவி நான் விளையாடுவேன்

நான் பலமுறை நரகத்திற்குச் சென்று வந்திருக்கிறேன்
நான் கடவுளுடன் பேசியுள்ளேன், சொர்க்கம் பற்றியும் நன்கறிவேன்
நான் கொடியவரின் குருதியிலும் துணிவிலும் மூழ்கியிருக்கிறேன்
ஆசையாய் கவர்ந்திழுக்கும் அழகினை நான் அறிவேன்
தவிர்த்திடு என அறிவித்தால், அதனை எதிர்த்திடும்
மனிதரின் அதிசயக் குணத்தையும் நான் அறிவேன்

எனது பெயர் உண்மை, உலகில் யார் கட்டுப்பாட்டிலும்
கட்டுண்டிருப்பதில்லை நான்

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
 

 Who Am I?
– Carl Sandburg


My head knocks against the stars.
My feet are on the hilltops.
My finger-tips are in the valleys and shores of
universal life.
Down in the sounding foam of primal things I
reach my hands and play with pebbles of
destiny.
I have been to hell and back many times.
I know all about heaven, for I have talked with God.
I dabble in the blood and guts of the terrible.
I know the passionate seizure of beauty
And the marvelous rebellion of man at all signs
reading “Keep Off.”

My name is Truth and I am the most elusive captive
in the universe.



நன்றி:  வல்லமை
நவம்பர் 25, 2015




#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 



Saturday, November 21, 2015

438 நாட்கள்: கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த மீனவர் ஒருவரின் உண்மைக்கதை

438 நாட்கள்: கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த மீனவர் ஒருவரின் உண்மைக்கதை

(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

நிலப்பரப்பில் இருந்து தொலைதூரத்தில், பசிபிக் பெருங்கடலின் மையத்தில், மார்ஷல் தீவுகளின் (Marshall Islands) கடற்காயலில் சென்று கொண்டிருந்த அந்தப் படகில் இருந்த கடலோரக் காவல்படையினர் தமது படகின் மேல்தளத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த உருவத்தை வெறித்துப் பார்த்தனர். அவர் பலநாட்கள் கடலில் தனித்துவிடப்பட்டவர் என்ற மறைக்கமுடியாத உண்மையை அவரது தோற்றம் காட்டியது. சிக்குப்பிடித்துப் புதர் போல மேல்நோக்கி மண்டியிருந்த தலைமுடியும், சீரற்று வளைந்த முடிக்கற்றையுடன், பலநாட்களாகச் சவரம் செய்யப்படாத ஒழுங்கற்ற தாடியும் கொண்டிருந்தார் அந்த மனிதர். மணிக்கட்டுகள் சிறுத்துப்போய், கணுக்கால்களும் வீங்கியிருந்த நிலையில் கொஞ்சமும் நடமாடாத முடியாதவராக அவர் இருந்தார். யாருடைய கண்களையும் சந்திக்க விருப்பமின்றிப் பார்வையைத் தவிர்த்து அவ்வப்பொழுது முகத்தையும் மூடிக் கொண்டார்.

எல் சல்வடோர் (El Salvador) நாட்டைச் சேர்ந்த 36 வயதான ‘ஹோஸே சல்வடோர் ஆல்வரெங்கா’ (José Salvador Alvarenga) என்ற மீனவர் தனது உதவியாளரான இளைஞருடன் பதினான்கு மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து ஒரு சிறிய படகில் தனது பயணத்தைத் துவக்கினார். இப்பொழுது அவர் கரை ஒதுங்கிய இடத்திற்கு அருகில், மார்ஷல் தீவுகளின் தென்முனையில் இருக்கும் ஏபான் ஆட்டல் (Ebon Atoll) என்ற ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். புயலில் சிக்கி, தான் புறப்பட்ட இடத்திலிருந்து 6,700 மைல்களுக்கு அப்பால், கடலில் 438 நாட்கள் அலைக்கழிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்.

பசிபிக் கடலில் படகில் மிதந்தவண்ணம், நிலவு குறைவதையும் வளர்வதையும் ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆல்வரெங்கா, தனிமையையும், மனச்சோர்வையும், அவ்வப்பொழுது தோன்றிமறையும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களுடனும் போராடிக் கொண்டிருந்தார். ஆனால், காட்டு விலங்குகளுடன் வாழ்வது போன்ற கற்பனையுலகில், மனப்பிரமைகளுடன், மிகத்தனிமையில் வாழ்ந்த அந்த வாழ்க்கை, கரைதிரும்பிய பின்னர் உலகப்புகழ் பெற்று, அனைவரும் ஆர்வத்துடன் அறிய விரும்பும் மனிதராக வாழப்போகும் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு அவரைத் தயார் செய்யவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, ஆல்வரெங்கா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அவரது குச்சி உடலை மறைத்த தொள தொளத்த பெரிய பழுப்புநிற சட்டையணிந்து, காவல்துறையினரின் படகில் இருந்து மெதுவாகவும், ஆனால் பிறர் உதவியின்றி இறங்கினார். நலிந்து ஒட்டி உலர்ந்த உடலுடன், நோய்ப்படுக்கையில் இருந்தவர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை எதிர்பார்த்த கூட்டத்தினரிடம் அவநம்பிக்கை அலைமோதியது. ஆல்வரெங்கா விரைவில் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு, படம் எடுத்த ஒளிப்படக் கருவிகளை நோக்கிக் கையசைத்தார். பலருக்கு அவரது தோற்றம் ‘காஸ்ட்அவே’ என்ற கடலில் தனித்துவிடப்பட்ட நாயகனாக ‘டாம் ஹான்க்ஸ்’ நடித்த ஹாலிவுட் படத்தின் பாத்திரத்தை நினைவூட்டியது. தாடியுடன் கரைமீண்ட மீனவரின் படம் விரைவில் எங்கும் பரவியது, சுருக்கமாக, ஆல்வரெங்கா என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்த பெயராகப் பேசப்பட்டது.

யாரால் கடலில் 14 மாதங்கள் தனித்து உயிர்வாழ முடியும்? ஹாலிவுட் கதாசிரியர்களால் மட்டுமே எல்லாம் மகிழ்ச்சிகரமாக இனிதே முடிந்தது என்று திரைக்கதை வசனம் எழுத முடியும். பத்திரிக்கையாளர்களுக்கு இவர் உயிர் பிழைத்த கதையை நம்பி ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. துப்பறிந்ததில், ஆல்வரெங்கா படகில் கடலுக்குச் சென்றதற்குச் சாட்சிகள் பலர் இருந்தனர். அவரைக் காப்பாற்றுமாறு அவர் எழுப்பிய எஸ்ஓஎஸ் அபயக்குரல் செய்திகளுக்குச் சான்றுகள் இருந்தன. மெக்சிகோவில் இருந்து புறப்பட்ட அதே படகுடன் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவர் கரை ஒதுங்கிய பொழுது, அவர் உறுதியுடன் ஆணித்தரமாகப் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். மருத்துவமனை அறையின் கதவில் கூட அவரைத் தனித்துவிடும்படி செய்தியாளர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு செய்தி எழுதி வைத்திருந்தார். பிறகு, எல் சல்வடோரில் உள்ள தனது வீட்டில் கார்டியன் பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்த பொழுது, மிகவும் விரிவாக, தான் கடலில் ஓராண்டுக்கும் மேலாகத் தத்தளித்து, கொடுமையான துன்பங்களை எதிர்கொண்டு, உயிர்பிழைத்து கரைமீண்ட கதையை விவரித்தார். இதோ அவரது கதை …

கடந்த 2012 ஆண்டின் நவம்பர் மாதம் 18ஆம் தேதியன்று, ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டதற்கும் மறுநாள், தனது காலின்கீழ் படகில் குளம் போல் நிரம்பும் கடல்நீரை ஆல்வரெங்கா பொருட்படுத்தவில்லை. ஒரு அனுபவமற்ற படகோட்டிக்கு வேண்டுமானால் அந்தச் சூழ்நிலை அச்சம் தந்திருக்கும். அலை மோதி படகு தத்தளிக்கும் பொழுது, பதற்றத்தில் அலையின் போக்கில் படகைச் செலுத்துவதில் கவனச் சிதறல் ஏற்பட்டிருக்கும். ஆல்வரெங்கா அனுபவசாலியான ஒரு கடலோடி, ஆபத்தைக் கையாள்வதிலும், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்தவர். தனக்கு உதவியாக உடன் வந்துள்ள, ‘எசீக்கில் கோர்டபா’ (Ezequiel Córdoba) என்ற அனுபவமற்ற இளைஞரின் உதவியுடன், கரையின் 50 மைல் தொலைவிலிருந்து, மெதுவாகக் கவனமாகக் கரையை நோக்கிப் படகைச் செலுத்தத் துவங்கினார்.

கொந்தளித்துப் படகில் மோதிய கடலலைகள் குடம் குடமாக நீரைப் படகில் வாரிக் கொட்டியது, படகு மூழ்குமோ அல்லது கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆல்வரெங்கா படகைச் செலுத்துவதில் கவனமாக இருக்க, கோர்டபா பதறிப் பதறி படகில் நிறையும் நீரை வாரி மொண்டு கடலில் வீசிக் கொண்டிருந்தார், அவ்வப்பொழுது நோகும் தோளுக்குச் சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு நீரை வெளியேற்றுவதைத் தொடர்ந்தார்.

இருபத்தைந்து அடி நீளத்திலும், ஆறடி அகலத்திலும், எந்த ஒரு உயரமான கட்டுமானமோ, கண்ணாடியோ, இயங்கும் விளக்கோ எதுவுமின்றி இருந்த ஆல்வரெங்காவின் படகு, கடலோடு கடலாக, கிட்டத்தட்ட தெளிவாகக் கண்டறிய முடியாத வண்ணம் இருந்தது. படகின் தளத்தில் குளிர்சாதனப் பெட்டியின் அளவு கொண்ட தொட்டி ஒன்றில் இரண்டு நாளாகப் பிடித்த சுறா, சூரை, மகிமஹி மீன்கள் நிறைந்திருந்தன. பிடித்த மீன்களைக் கரைக்குக் கொண்டு சென்றால், ஒரு வாரத்திற்குக் கவலையின்றி வாழத் தேவையான பணம் கிடைக்கும்.

ஆல்வரெங்காவின் படகில் பெட்ரோல் 70 கேலன்கள், குடிநீர் 16 கேலன்கள், தூண்டில் இரையாக 50 பவுண்ட் சார்டின் மீன்கள், 700 தூண்டில் கொக்கிகள், பல மைல் நீளத்திற்குத் தூண்டில் கயிறுகள், ஒரு மண்டா ஈட்டி, மூன்று கத்திகள், நீர் வாரி வாளிகள் மூன்று, நீர்ப்புகா பிளாஸ்டிக் உறையினுள் கைபேசி ஒன்று, நீர்ப்புகா பாதுகாப்பு அற்ற நிலையில் புவியிடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ் கருவி ஒன்று, அரையளவு மின்கல மின்சக்தி கொண்ட இரு-வழி வானொலி ஒன்று, படகின் மோட்டாரைப் பழுது பார்க்க அத்தியாவசியக் கருவிகள் ஒருசில, மற்றும் 200 பவுண்ட் பனிக்கட்டிகள் உட்படத் தேவையான பொருட்கள் பல நிரம்பியிருந்தன.

ஆல்வரெங்கா பயணத்திற்காகப் படகை, தனது நம்பிக்கைக்குரிய நண்பரும், வழக்கமாகத் தனக்கு உதவும் தோழர், ‘ரே பெரெஸ்’ (Ray Perez) உதவியுடன் தயார் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரால் வர இயலாமல் போனது. கடற்பயணத்தை நிறுத்த விரும்பாத ஆல்வரெங்கா பதிலுக்குக் கோர்டபாவை உதவிக்கு ஏற்பாடு செய்து கொண்டார். ‘பின்யாட்டா’ (Piñata) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட 22 வயதான கோர்டபா அந்தக் கடற்காயல் பகுதியின் மறுமுனையில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த கிராமத்தின் கால்பந்தாட்டக் குழுவின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற புகழ் பெற்றவர் கோர்டபா. ஆல்வரெங்காவும் கோர்டபாவும் அன்றுவரை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதுமில்லை, சேர்ந்து வேலை பார்த்ததும் இல்லை.

ஆல்வரெங்கா பதற்றத்துடன் படகை லாவகமாக, மெதுவாகக் கரையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தார். நீர்ச்சறுக்கு விளையாடுபவர் அலைகளினூடே நேர்த்தியாக வழுக்கிச் செல்வது போலப் படகைச் செலுத்தினார். வானிலை மோசமடையத் துவங்கியதும் கோர்டபாவின் உறுதி குலையத் தொடங்கியது. சில நேரங்களில் படகில் நிரம்பும் நீரை வாரி வீச மறுத்துவிட்டு, படகின் கம்பியை இருகரங்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பதும் அழுவதுமாக இருந்தார். இந்த வேலைக்காக அவர் 50 டாலர் ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். தடகள விளையாட்டு வீரர் போன்ற உறுதியான திடகாத்திரமான உடல்வாகு கொண்ட கோர்டபாவினால் எந்தக் குறையும் சொல்லாமல் 12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய முடியும். ஆனால் நீரை வாரி வீசி மோதும் அலைகளில், தத்தளிக்கும் படகில் கரை நோக்கிச் செல்லும் அந்தப் பயணம்? தங்களது சிறு படகு உடைந்து நொறுங்கி, அவர்கள் சுறா மீன்களுக்கு இரையாகப் போகிறார்கள் என்று அவர் உறுதியாக நம்பத் தொடங்கியதால் அச்சத்தில் அலறத் தொடங்கினார்.

இப்பொழுது புயல் மிகத் தீவிரமாகிவிட, கரையோரத் துறைமுகத்தின் அதிகாரிகள் மீன்பிடிப் படகுகளைக் கடலுக்குள் செல்ல அனுமதிக்காத நிலைமையாக மாறிவிட்ட நேரம்; அந்தச் சூழ்நிலையில் கடலில் படகின் சுக்கானை இறுகப்பிடித்தபடி அமர்ந்திருந்த ஆல்வரெங்காவோ மிக உறுதியுடன் கரை நோக்கிப் படகைச் செலுத்தினார். கடைசியாக மழை மேகம் கொஞ்சம் விலகி, கடலின் மூட்டம் நீங்கி கரைவரை பலமைல்களுக்குத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. காலை 9 மணி போலத் தொடுவானத்தில் கரையின் மலை தெரிந்தது. கரையிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருந்த பொழுது அவர்களது படகின் மோட்டார் இயந்திரம் பழுதாகி, திக்கித் திணறி உயிரை விட்டது. ஆல்வரெங்கா தனது முதலாளி வில்லி (Willy) யை ரேடியோவில் தொடர்பு கொண்டார்.

“வில்லி! வில்லி! வில்லி! எனது படகின் மோட்டார் பழுதாகிவிட்டது.”

கரையோரத்தில் தனது படகிலிருந்து முதலாளி வில்லி குரல் கொடுத்தார், “அமைதியாய் இருப்பா, எங்கிருக்கிறாய் உன் ஜிபிஎஸ் காட்டும் இடம் எது, சொல்லு.”

“எங்கள் ஜிபிஎஸ் வேலை செய்யவில்லை, கருவி பழுதாகிவிட்டது”

“நங்கூரத்தைப் போடு” என்றார் வில்லி.

“எங்களிடம் நங்கூரமும் இல்லை” என்றார் ஆல்வரெங்கா. கிளம்பும் முன் படகில் நங்கூரம் இல்லாததை அவர் கவனித்திருந்தார், இருந்தும் ஆழ்கடலுக்குப் போவதால் அதற்குத் தேவையிருக்காது என்று அதனைப் பொருட்படுத்தவில்லை.

“சரி, நாங்கள் வந்து உன்னை மீட்கிறோம்” என்றார் வில்லி.

“சீக்கிரம் வாருங்கள், நான் மிகவும் ஓய்ந்து போய்விட்டேன்,” என்று பதிலுக்குக் கத்தினார் ஆல்வரெங்கா. இதுதான் கரையில் இருந்தவர்கள் கடைசியாக அவர் குரலைக் கேட்டது.

படகின்மீது பேரலைகள் மோதத் துவங்க ஆல்வரெங்காவும் கோர்டபாவும் இணைந்து வேலை செய்யத் தொடங்கினர். காலைச் சூரிய ஒளியில், அவர்கள் அளவு உயரமுள்ள பெரிய அலைகள் அவர்களை நோக்கி வருவதைப் பார்த்தார்கள். அவர்கள் மீது அவை மோதிப் பிரிந்தது. இருவரும் அந்தத் திறந்த படகின் ஓரத்தில் சாய்ந்து, இறுகப் பற்றிக் கொண்டு உருண்டுவிழாமல் சமாளித்தார்கள்.

அலைகளின் போக்கு கணிக்க முடியாத வகையில் மாறிக்கொண்டே இருந்தது. பேரலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி அறைந்து, நடுவானில் ஒருங்கிணைந்து, சக்தியெல்லாம் ஒன்று திரட்டி, பெரும் சுவர் போல் உயர்ந்து எழும்பி சிறிது நேரத்திற்கு மிக உச்சத்திற்கு அவர்களைத் தூக்கியது. மூன்று மாடி உயரத்திற்குத் தூக்கிய பிறகு, உயரத்திலிருந்து விழும் எலிவேட்டர் போலத் திகிலை ஏற்படுத்தும் வண்ணம் உடனே தடாலெனக் கீழே போட்டது. அவர்களது கடற்கரைக் காலணிகள் தரையில் நிலைத்து நிற்க உதவாமல் வழுக்கியது.

ஆல்வரெங்காவிற்குக் காரணம் புரிந்தது, குறைந்தது 500 கிலோ அளவிற்குப் புதிதாய்ப் பிடித்த மீன்களின் பாரம்தான் படகை நிலைகொள்ளாமல் அலைக்கழிக்கிறதென்று. அவருக்குத் தனது முதலாளி வில்லியைக் கலந்தாலோசிக்க நேரமுமில்லை. தனது உள்ளுணர்வு சொல்வது போல நடக்க எண்ணிய அவர் பிடித்த மீன்கள் அத்தனையையும் கடலில் கொட்ட முடிவெடுத்தார். அவர்கள் ஒவ்வொரு மீனாகக் குளிர்பதனப் பெட்டியிலிருந்து இழுத்து வந்து, அந்த உயிரற்ற மீன்களைக் கடலில் வீசி வீசி எறிந்தார்கள். இப்பொழுது கடலில் தவறி விழுந்தால் அதைவிட ஆபத்து வேறேதும் இல்லை, தூக்கி வீசிய மீன்களின் இரத்த வாடையால் சுறாக்கள் ஈர்க்கப்பட்டிருந்தால் அவர்களை வந்து தாக்கும்.

ஆத்திரம் அடைந்த ஆல்வரெங்கா மீனைக் கொல்வதற்காகப் பயன்படுத்தும் கனமான தடியை எடுத்து பழுதாகிப்போன மோட்டார் இயந்திரத்தை ஓங்கி ஓங்கி அடித்தார். அடுத்துப் படகில் இருந்த அதிகப்படி பனிக்கட்டிகள், பெட்ரோல் ஆகியவற்றை எடுத்துக் கடலில் வீசினார்கள். ஆல்வரெங்கா 50 மிதவைகளை இணைத்துக் கட்டி ஒரு தற்காலிகக் கடல் நங்கூரமாக அதனைக் கடலில் வீசி மிதக்கவிட்டு, அதன் இழுவையினால் படகைக் கொஞ்சம் நிலை நிறுத்தினார். ஆனால் காலை 10 மணி போல ரேடியோவும் பழுதாகிவிட்டது. புயல் தொடங்கிய முதல் நாளின் நண்பகலிலேயே இந்த அலைக்கழிப்பு இன்னமும் ஐந்து நாட்களுக்காவது தொடரும் என அவர் நினைத்தார். ஜிபிஎஸ் கருவி பழுதாகிப் போனது பெரிய சிரமத்தைத் தந்தது. பழுதான மோட்டார் ஒரு பேரழிவு, இப்பொழுது தொடர்பு கொள்ள ரேடியோவும் இல்லாமல் அவர்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

புயல் அந்த மதியம் முழுவதும் அவர்களைப் படகில் தேங்கும் நீரை வாரி வாரி வெளியேற்ற வைத்து நிலைகுலைய வைத்தது. ஒரே வேலையை, அதே தசைகளுக்கு வேலைக் கொடுத்து மீண்டும் மீண்டும் மணிக்கணக்காகச் செய்தும், பாதி அளவு நீரை மட்டுமே அவர்களால் வெளியேற்ற முடிந்தது. இருவருமே கலைத்து மயங்கும் நிலைக்குப் போனாலும், ஆல்வரெங்காவிற்குக் கோபமும் தாளவில்லை. மீண்டும் தடியைக் கொண்டு பழுதாகிப் போன மோட்டாரை அடித்து நொறுக்கினார், வேலை செய்யாத ஜிபிஎஸ் கருவியையும், ரேடியோவையும் சீற்றத்துடன் கடலில் விட்டெறிந்தார்.

சூரியன் மறைந்தது, புயல் தொடர்ந்தது, ஆல்வரெங்காவையும் கோர்டபாவையும் குளிர் வாட்டியது. பெரிய குளிர்பதனப்பெட்டி அளவில் இருந்த, பனிக்கட்டியை உருகாமல் வைக்கும் பனிப்பெட்டியைப் புரட்டிப் போட்டு அதற்குள் இருவரும் சென்று முடங்கிக் கொண்டனர். நனைந்து சொட்டும் ஈரத்துடன், குளிரில் விரைத்துப் போன கைகளை அவர்களால் மடக்க முடியவில்லை. ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு, தங்கள் கால்களால் மற்றவர் உடலை அரவணைத்துக் கொண்டு தங்களைச் சுருட்டிக் கொண்டனர். ஆனால் புயல் மேலும் நீரைப் படகில் கொட்டவே படகு மேலும் மூழ்கும் நிலைக்குப் போனது. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பனிப்பெட்டியில் இருந்து வெளிவந்து வேக வேகமாக நீரை வாரி வெளியேற்றினார்கள். முன்னேற்றம் கொஞ்சமாக இருந்தாலும், மெதுவாக அவர்கள் காலடியில் குளம் போல் நிரம்பியிருந்த நீரின் அளவு குறையத் தொடங்கியது.

இருள் சூழ்ந்ததால் அவர்கள் உலகம் சுருங்கியது, சக்தி வாய்ந்த புயல் கரையைக் கடக்கும் பொழுது, மீனவர்கள் இருவரையும் மேலும் கடலின் உட்புறமாகத் தொலைவுக்குத் தள்ளிவிட்டது. அவர்கள் ஒருவேளை முதல்நாள் மீன்பிடித்த பழைய இடத்திற்கே வந்துவிட்டனரோ? அவர்கள் வடக்கே ‘அகபுல்கோ’ (Acapulco) நோக்கிப் போகிறார்களா அல்லது தெற்கே ‘பனாமா’ (Panama) நோக்கிப் போகிறார்களா? நட்சத்திரங்கள் மட்டுமே வழிகாட்டியாக இருக்க, வழக்கமாகச் செய்வது போலத் தொலைவைக் கணக்கிட இயலாது போனார்கள்.

கடலில் வீசி எறிந்துவிட்டதால், தூண்டிலோ தூண்டில் இரையோ இல்லாமல், மீன்பிடிப்பதற்கு ஆல்வரெங்கா ஒரு துணிச்சலான முறையைக் கையாண்டார். சுறாக்கள் வருகின்றனவா என்பதில் எச்சரிக்கையுடன் ஒரு கண் வைத்துக்கொண்டே, படகின் ஓரத்தில் மண்டியிட்டு அமர்ந்து, இருகைகளையும் தோள்வரை நீரில் கவனமாக நீட்டினார். தனது மார்பு படகின் பக்கவாட்டில் அழுந்தியிருக்க, கைகளை அசைக்காமல் சிறிது இடைவெளிவிட்டுக் காத்திருந்தார். ஏதேனும் ஒரு மீன் அவருடைய இருகரங்களுக்கு இடையே அகப்பட்டால், விரைவாக அமுக்கி, அதன் செதில்கள் மீது நகத்தால் அழுந்தப் பிடித்துக் கொள்வார். பல மீன்கள் தப்பிவிட்டன, ஆனாலும் ஆல்வரெங்கா விரைவில் இவ்வாறு மீன் பிடிப்பதில் திறமைசாலியாகிவிட்டார், மீனைப்பிடித்து அது கடிக்கும்முன் படகினுள் வீசலானார்.

கோர்டபா மீன் வெட்டும் கத்தியினால் திறமையாக மீனைச் சுத்தம் செய்து வெட்டி, விரலளவு சிறு துண்டங்களாக்கி வெய்யிலில் காயவைத்தார். இருவரும் மீன்களையே மாற்றி மாற்றித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆல்வரெங்கா பச்சை மீனையும் காய்ந்த மீனையும் சேர்த்தே விழுங்கத் தொடங்கினார். வித்தியாசம் தெரியாத அளவிற்கு அவருக்குச் சுவையே தெரியாமல் மரத்துப்போய்விட்டது, அதனால் சுவை பற்றி அவர் கவலைப்படவில்லை. மிகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களால் ஆமைகளைப் பிடிக்க முடிந்தது. சிலசமயம் தானே பறந்து வந்து படகில் விழும் பறக்கும் மீன்களும், அவர்களுக்குக் கிடைத்தன.

சிலநாட்களுக்குள் ஆல்வரெங்கா தனது சிறுநீரைக் குடிக்கப் பழகிக் கொண்டார், கோர்டபாவையும் அவ்வாறு செய்யச் சொல்லி ஊக்கமூட்டினார். மிகவும் உப்பாக இருந்தாலும் குமட்டவில்லை. சிறுநீர்கழித்து அதைக்குடித்து மீண்டும் மீண்டும் அவ்வாறே தொடர்ந்து செய்ததால் உடலுக்குத் தேவையான நீர் சிறிது கிடைத்தது. சொல்லப்போனால் உண்மையில் அவர்கள் நீரற்ற வறட்சியால் சாகாமல் இருக்க உதவியது. ஆல்வரெங்கா கடல்நீரைக் குடிப்பதால் உள்ள அபாயத்தை நன்கு தெரிந்தவர். எனவே மிகவும் தாகமாக இருந்தாலும் தங்களைச் சூழ்ந்துள்ள கடல் நீரிலிருந்து ஒரு கோப்பை நீரைக் கூட அவர்கள் குடிப்பதைத் தவிர்த்தார்கள்.

மிகவும் பசியாக இருந்தபொழுது தன்னுடைய நகங்களையே சிறுசிறு துண்டுகளாகக் கடித்துச் சாப்பிடவும் தொடங்கினார். ஜெல்லிமீன்கள் கிடைத்தால் அவற்றை அப்படியே அள்ளி முழுதாக விழுங்கினார். முதலில் தொண்டையின் முன்பகுதியை எரித்தாலும் பின்னர் பழகிப் போனது, அவ்வளவு மோசமாக இல்லை.

சுமார் 14 நாட்கள் கடலில் தவித்த பிறகு, ஆல்வரெங்கா பனிக்கட்டிப் பெட்டியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது 'ஸ்ப்ளாட்', 'ஸ்ப்ளாட்', 'ஸ்ப்ளாட்' என்ற ஓசை கேட்டது. சந்தேகமில்லாமல் அது பெட்டியின் மீது தாளகதியில் விழும் மழைத்துளிகளின் ஓசைதான். ‘பின்யாட்டா’, (கோர்டபாவின் செல்லப்பெயர்) ’பின்யாட்டா’, ‘பின்யாட்டா’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு ஆல்வரெங்கா பெட்டியிலிருந்து வெளியே பாய்ந்தார். அவரது உதவியாளர் கோர்டபாவும் உறக்கம் நீங்கி அவருடன் சேர்ந்து கொண்டார். கடந்த ஒருவாரமாக ஆல்வரெங்கா திட்டமிட்டிருந்தபடி நீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இருவரும் படகின் தளத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடினார்கள். கோர்டபா ஐந்து கேலன் கொள்ளும் சாம்பல் வண்ண வாளி ஒன்றைத் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்து வானத்தை நோக்கிப் பிடித்து நீர் சேகரிக்கத் தொடங்கினார்.

கருமேகங்கள் அவர்கள் தலைமீது உயரே குவிந்தது, பலநாட்களாகச் சிறுநீரையும், ஆமையின் இரத்தத்தையும் குடித்து, தாகத்தால் இறந்துவிடும் நிலைக்குச் சென்ற அந்த இருவர் மீதும் கடைசியாக மழை கொட்டத் தொடங்கியது. வாயைத் திறந்து விழும் மழைத்துளிகளைக் குடிக்கத் துவங்கினர், உடைகளைக் களைந்து அருமையாகக் கொட்டும் மழையில், நல்லநீரில் குளித்தார்கள். ஒருமணி நேரத்திற்குள் வாளியில் ஓர் அங்குலம் நீர் நிரம்பியது. இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை நீரைக் குடித்துக் கொண்டிருந்தார்கள். முதலில் கிடைத்த நீரைத் தாராளமாகக் குடித்தாலும், பிறகு எச்சரிக்கையாகத் தேவையான அளவு மட்டுமே குடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

கடலில் பலவாரங்கள் கடந்த பிறகு, ஆல்வரெங்காவும் கோர்டபாவும் திறமையான குப்பைப் பொறுக்கிகளாகத் தேறிவிட்டனர். கடலில் தங்களைக் கடந்து மிதந்து செல்லும் பலவகை பிளாஸ்டிக் குப்பைகளை வேறுபடுத்திப் பிரிக்கக் கற்றுக் கொண்டார்கள். தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு காலியான தண்ணீர் பாட்டில்களையும் எடுத்துச் சேகரித்துக் கொண்டனர். நிரம்பியிருந்த பச்சைநிறக் குப்பை மூட்டை ஒன்று அவர்கள் வழியே மிதந்து வந்த பொழுது அதனைப்பற்றி, படகின் தளத்தில் இழுத்துப் போட்டு அந்த மூட்டையின் பிளாஸ்டிக் உரையைக் கிழித்தார்கள். அதனுள் ஒரு பையில் மென்று துப்பிய சூயிங்கம் ஒரு கற்றை கிடைத்தது. வாதம் பருப்பு அளவுக்கு ஆளுக்கொரு துண்டாக அதனைப் பிய்த்து மென்று உணவை அசைபோடும் உணர்வை அனுபவிக்கக் கிடைத்த செல்வமாகக் கருதி பெருவிருந்தாகக் கொண்டாடினார்கள். சமையல் எண்ணெய்யில் ஊறியிருந்த அடுக்கின் கீழே பெரும் புதையலாக, அரை முட்டைக்கோசு, கொஞ்சம் கேரட்டு, ஒரு லிட்டர் ஊசிப்போன நாற்றமடிக்கும் புளித்த பால் ஆகியவை கிடைத்தன. இருந்தும் அதைக் குடித்தார்கள். அதுதான் முதன்முதலாகப் பல நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் கிடைத்த உணவு. ஊறிப்போன கேரட்டுகளை கிடைத்தற்கரிய செல்வமாகப் போற்றினார்கள்.

ஆமையைப் பிடித்து உணவாக உண்டவர்களுக்கு, பலநாட்களுக்குத் தேவையான உணவு சேமிப்பில் கிடைத்தவுடன், அந்தப் பெரிய கடலில் கொஞ்சம் ஆறுதலும் மன அமைதியும் கிடைத்தது. தங்களது அன்னையரைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அவர்களிடம் மோசமாக நடந்து கொண்டதற்கு வருந்தினார்கள். மிகவும் மோசமான மகன்களாகத் தங்கள் அம்மாவிடம் நடந்து கொண்டதற்காகக் கடவுளிடம் மன்னிப்பு கோரினார்கள். அவர்களைக் கட்டித்தழுவி முத்தமிட முடியுமா என்று கற்பனை செய்தார்கள். கடினமாக உழைத்து தங்கள் அம்மாக்கள் இனி வேலையே செய்யத் தேவையிருக்காத அளவிற்கு அவர்களைக் காப்பாற்றப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது.

கடலில் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆல்வரெங்கா பறவைகளையும், ஆமைகளையும் பிடிக்கவும், சாப்பிடவும் பழகிக் கொண்ட பொழுது, கோர்டபாவிற்கோ உடல்நலமும் மனநலமும் மோசமடையத் தொடங்கியது. அவர்கள் இருவரும் ஒரே படகில் இருந்த பொழுதும் அவர்கள் பயணம் வேறுதிசையில் இருந்தது. கோர்டபா கடற்பறவையின் இறைச்சியைச் சாப்பிட்டபிறகு உடல்நலமில்லாது போனது, அதனால் இனி சாப்பிடப்போவதில்லை என்ற விபரீத முடிவை எடுத்து எந்த உணவையும் சாப்பிட மறுத்தார். அவர் தனது இரு கைகளினால் தண்ணீர் பாட்டிலை இறுகப் பிடித்திருந்தாலும் அதனை வாய்க்கருகில் கொண்டுபோகும் ஆர்வமோ சக்தியோ அவருக்கு இல்லை. பறவை இறைச்சியின் சிறு துண்டங்களையும் சிலசமயம் ஆமை துண்டங்களையும் ஆல்வரெங்கா அவருக்கு உண்ணக் கொடுத்தார். கோர்டபா வாயை இறுக மூடிக் கொண்டார். அவரது மனத்துயரம் அவரது உடல் செயல்பாட்டை நிறுத்தத் தொடங்கியது.

இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். கோர்டபா உயிர் பிழைத்தால் எல் சல்வடோர் சென்று ஆல்வரெங்காவின் பெற்றோரைச் சந்திப்பது என்றும், ஆல்வரெங்கா உயிர்பிழைத்தால் மெக்சிகோவில் உள்ள ‘சியாபாஸ்’ (Chiapas) நகருக்குச் சென்று, கிறிஸ்துவப் போதகரான பாதிரியார் ஒருவரை மறுமணம் செய்து கொண்டவரும், தெய்வபக்தி நிறைந்தவருமான கோர்டபாவின் அம்மாவைச் சந்திப்பது என்றும் முடிவு செய்து கொண்டார்கள். கோர்டபா தனது அம்மாவிடம் உயிர் பிரிவதற்கு முன்னர் விடை பெற முடியாமல் போனதற்கு வருந்தியதாகவும், இனி அவருக்காக ‘டமாலீஸ்’ (tamales) சமைக்கத் தேவையிருக்காது என்றும், கோர்டபா இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டு அவர் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று ஆறுதல் அடையும்படியும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

“நான் சாகப் போகிறேன், நான் சாகப் போகிறேன், என் முடிவு நெருங்கிவிட்டது” என்று ஒருநாள் காலை கோர்டபா கூறினார்.

“சாவதைப்பற்றி நினைக்காதே, இருவரும் கொஞ்ச நேரம் தூங்குவோம்” என்று ஆல்வரெங்கா அவர் அருகில் சென்று படுத்தபடி கூறினார்.

“எனக்குச் சோர்வாக இருக்கிறது, குடிக்கத் தண்ணீர் வேண்டும்,” என்று கோர்டபா முனகினார். அவருக்கு மூச்சுத்திணற ஆரம்பித்தது. ஆல்வரெங்கா ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் வாயில் ஊற்றினார், ஆனால் கோர்டபாவினால் விழுங்க முடியவில்லை, மாறாக, அவருக்குச் சிறு சிறு வலிப்பு வந்து உடல் குலுங்கியது. அவர் உடல் துடித்து முறுக்கேற கோர்டபா வேதனையுடன் அரற்றினார். உடனே அதிர்ச்சி அடைந்த ஆல்வரெங்கா, “என்னைத் தனியே விட்டுப் போகாதே, வாழ்வதற்காகப் போராடு, நான் இங்கே தனியே என்ன செய்வது?” என்று அவர் முகத்தருகில் குனிந்து அலறினார்.

கொஞ்ச நேரத்தில் விழிகள் திறந்தவாறு இருக்க கோர்டபா இறந்து போனார். தோழன் இறந்துவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் “இப்பொழுது எப்படி இருக்கிறது?” என்று கோர்டபாவிடம் கேட்டார் ஆல்வரெங்கா. கோர்டபாவிடம் இருந்து பதிலில்லை.

கோர்டபாவின் உடலை அலை அடித்துச் சென்றுவிடாமல், தண்ணீர் படாமல் இருக்க நிமிர்த்தி வைத்துவிட்டு ஆல்வரெங்கா பலமணிநேரம் அழுதார்.

மறுநாள் காலை படகின் முனையில் சாய்ந்து இருந்த கோர்டபாவின் உடலை வெறித்துப் பார்த்து, “இப்பொழுது எப்படி இருக்கிறது? நன்றாகத் தூங்கினாயா? என்றார்.

“நான் நன்றாகத் தூங்கினேன், நீ நன்றாகத் தூங்கினாயா? காலை உணவு சாப்பிட்டாயா?” என்று தன் கேள்விக்கு இறந்துவிட்ட கோர்டபா பதிலளிப்பது போலத் தானே உறக்க பதிலளித்துக் கொண்டார். இருந்த தனது ஒரே தோழனும் இறந்துவிட்டதை எதிர்கொள்ள முடியாமல் அவர் இன்னும் இறக்கவில்லை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது ஆல்வரெங்காவிற்கு சுலபமாக இருந்தது.

கோர்டபா இறந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, நிலவொளி அற்ற இரவில் ஆல்வரெங்கா இறந்த உடலுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, திடீரெனக் கனவிலிருந்து விழித்தது போலத் தான் ஓர் உயிரற்ற உடலுடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். கோர்டபாவின் கால்களைக் கழுவிவிட்டார். தனக்கு உதவும் என்று அவருடைய சட்டையையும், காற்சட்டையும் உருவி எடுத்து, மண்டையோடும் குறுக்காக எலும்புகளும் வரைந்திருந்த சிவப்பு நிறச் சட்டையைத் தான் அணிந்து கொண்டு, கோர்டபாவின் உடலைக் கடலில் போட்டார். கோர்டபாவின் உடலைச் சறுக்கி நீரில் தள்ளிய பொழுது ஆல்வரெங்காவும் மயங்கி படகில் சரிந்தார்.

சில நிமிடங்கள் கழித்து உணர்வு வந்த பொழுது ஆல்வரெங்காவிற்கு அச்சமாக இருந்தது. பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாது நான் தனியே என்ன செய்வேன் என்ற கவலை அவருக்கு எழுந்தது. ஏன் எனக்குப் பதிலாக கோர்டபா இறந்தார். அவரை மீன் பிடிக்க அழைத்து வந்தது என் தவறு என்று கோர்டபாவின் சாவிற்குத் தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டார்.

ஆனால் அவருக்கு வாழ வேண்டும் என்ற எண்ணமும், தற்கொலை செய்து கொள்வதற்கு அச்சமும் (தற்கொலை செய்து கொள்பவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்று அவரது அம்மா உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்) இருந்ததால், வாழ வழி தேடி ஏதேனும் கப்பல் அந்த வழியே வருகிறதா எனக் கடற்பரப்பை ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினார். சூரிய உதயமும், சூரியன் மறைவும் உதவியாக இருந்தது, தொடுவானம் ஓவியம் போல மாறி சூரிய ஒளியும் தாங்கக் கூடியதாக இருந்தது. ஆல்வரெங்காவின் பார்வை கூர்மையடைந்து தொடுவானத்தில் தோன்றும் ஒரு சிறிய புள்ளியையும் கப்பல் என அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது நெருங்கி நெருங்கி பெரும் ஓசையுடன் வரும் பொழுது, அது வழக்கமாக பசிபிக் கடலைக் கடக்கும் ஒரு சரக்குக் கப்பல் என்பது தெரிய வரும்.

கடலை சுலபமாகக் கடந்து செல்லும் அந்தக் கப்பல்களின் தளத்தில் மனிதர்களும் தென்பட மாட்டார்கள், மனித நடமாட்டமும் இருக்காது, கவைக்குதவாத கப்பல்களாக அவை கடந்து போகும். ஒவ்வொருமுறை தென்படும் கப்பலும் ஆல்வரெங்காவிற்கு புத்துணர்ச்சி அளித்து, அவரை உற்சாகத்தில் துள்ள வைத்தது. மணிக்கணக்காகக் கையசைப்பதும், குதிப்பதும், கவனத்தைக்கவர முயல்வதுமாக இருப்பார். ஒவ்வொன்றாகச் சுமார் 20 சரக்குக் கப்பல்கள் இவ்வாறு இவரைக் கடந்து தொடுவானத்தில் சென்று மறைந்திருக்கின்றன. இருந்தும் வெறியேற்றும், சீண்டிப்பார்க்கும் இந்தப் போராட்டம் அவருக்கு உற்சாகத்தையே தந்தது. புயல்கள் அவரது சிறிய படகை அலைக்கழித்தன, நிலத்தைவிட்டு கடலில் வெகு தொலைவிற்குச் சென்ற பிறகு புயலின் அளவு சிறியதாகவும், அதன் தாக்கம் குறைவாகவும் தாங்கிக் கொள்ளும்படியும் இருந்தது.

ஆல்வரெங்கா தனது கற்பனையைக் கட்டவிழ்த்து ஓடவிட்டு, பைத்தியம் பிடிக்காதவாறு தன் மனநலத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டார். உண்மைக்குப் புறம்பானவற்றை நம்பும் வகையில் மனதை மாற்றிக் கொண்டார். வாழ்விலேயே சிறந்த உணவைத் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், சிறந்த உடலுறவு இன்பத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து கொண்டார். தனது தனிமையையே ஒரு மாய உலகில் வாழ்வதாக நினைத்துக்கொள்ளும் கலையில் திறமைசாலியானார். காலை வேளைகளில் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொண்டார். தான் பூமியில் உலவுவதாக நினைத்துக் கொண்டு தனது படகிலேயே குறுக்கும் நெடுக்குமாக நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். ஓரிடத்தில் முடங்கிப்போய் சாவை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, இவ்வாறாகக் கற்பனை செய்வதால் தான் உருப்படியாக ஏதோ செய்வதாகத் தன்னையே நம்ப வைத்துக் கொண்டார். தான் கற்பனையில் உருவாக்கிய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ இருப்பதாகப் பாவித்து, எதார்த்த உலகின் கொடுமையான உண்மை நிலையிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.

அவர் சிறுவனாக இருந்தபொழுது அவரது தாத்தா நிலவின் சுழற்சியை வைத்து எவ்வாறு காலத்தைக் கணக்கிடுவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். தனிமையில், பறந்து விரிந்த கடலில் இருந்தாலும் எத்தனை மாதங்களாக இப்படிக் கடலில் தத்தளிக்கிறோம் என்பதில் அவர் தெளிவாகவே இருந்தார். முன்னர் பார்த்திராத இடத்தை நோக்கிக் கடந்த 15 நிலாவின் சுழற்சி காலமாகக் கடலோடு போகிறோம் என்பது அவருக்குத் தெரிந்தது. பயணத்தின் முடிவில் அடுத்து அவர் போய்ச் சேரப்போகும் இடம் சொர்க்கம் என்று உறுதியாக நம்பினார்.

காற்றைக்கிழித்துக் கொண்டு கடல் நீரோட்டத்துடன் மென்மையாக ஆல்வரெங்காவின் படகு மிதந்துகொண்டிருந்தபொழுது, திடீரென வானில் கடலோரத்தில் வாழும் பறவைகளின் கூட்டம் தென்பட்டது. ஆல்வரெங்கா உற்றுப்பார்த்தார். அவரது கழுத்துத் தசைகள் இறுகின. வெப்பமண்டலத் தீவு ஒன்று மூடுபனியில் இருந்து வெளிப்பட்டது. பசிபிக் கடலின் பவளப்பாறைத் திட்டுகள், சிறிய மலையைச் சூழ்ந்த பசுமையான நிலம், அதைச் சுற்றி நீலநிற நீர் சூழ்ந்து பலவண்ணக் காட்சியாகத் தோன்றியது.

பிரமை இவ்வளவு நேரம் நீடிக்காதே, எனது வேண்டுதல்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா? என்று எண்ணிய ஆல்வரெங்காவின் மனதில் வேகமாகப் பல மோசமான கற்பனைகளும் விரிந்தன. அவர் கரையிலிருந்து விலகிச் சென்றுவிடக்கூடும், கடலை நோக்கிப் பின்னோக்கிப் போய்விடவும் கூடும்… முன்னர் அவ்வாறுதானே நடந்தது ... கரை ஒதுங்கும் நேரத்தில் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தத் தீவையே கூர்ந்து கவனித்து கடற்கரை ஓரம் தோன்றுவதை வைத்து மேலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய முயன்றார். அது ஒரு குட்டித்தீவு. அவர் கணிப்பின்படி ஒரு கால்பந்தாட்ட மைதானத்தைவிடப் பெரிதானது அல்ல. அது இயற்கையுடன் ஒன்றி சாலைகளோ, ஊர்திகளோ, வீடுகளோ இல்லாமல் இருந்தது.

கத்தியைக்கொண்டு படகுடன் இணைத்திருந்த மிதவையின் நைந்து போன கயிற்றைத் துண்டித்துவிட்டார். அது மிகவும் துணிச்சலான ஒரு முடிவு. பரந்து விரிந்த கடலில், தேவைக்கு நங்கூரம் இல்லாத பொழுது ஒரு சாதாரணப் புயல் கூட அவரது படகை உடனே கவிழ்த்துவிடக்கூடும். ஆனால் ஆல்வரெங்காவினால் கரையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதனால் படகை நிலைப்படுத்துவதைவிட வேகம் மிக முக்கியமானது என்ற முடிவின் மீது பந்தயம் கட்டினார்.

ஒரு மணி நேரத்தில் தீவின் கரையோரத்திற்குப் படகு ஒதுங்கியது. கரையிலிருந்து முப்பது அடி தொலைவில் இருக்கும் பொழுது நீரில் குதித்து கரையை நோக்கி ஆமை போல வேகமாக நீந்தினார். பெரிய அலை ஒன்று அவரை உயரத் தூக்கி மிதக்கும் கட்டையைக் கரையில் வீசுவது போல வீசியது. அலை பின்வாங்கிய பொழுது ஆல்வரெங்கா மணலில் முகம் புதைத்துக் குப்புறக் கிடந்தார். புதையலை அள்ளுவது போலக் கைநிறைய மணலை அள்ளிக் கொண்டார்.

மணலில் கம்பளமாக விரித்துக் கிடந்த ஊறிய தென்னை மட்டைகளிலும், கூரியத் தேங்காய் ஓட்டுகளின் மேலும், சுவையான பூக்களின் மேலும் கொலைப்பட்டினியாக, ஆடையின்றி இருந்த ஆல்வரெங்கா தவழ்ந்து சென்றார். அவரால் ஓரிரு வினாடிகளுக்கு மேல் நிற்க முடியவில்லை. அவரது உடல் முழுவதும் உருக்குலைந்து ஒல்லியாக ஒரு மெல்லிய மரப்பலகை போல மாறியிருந்தது. அவர் உடலில் மிச்சமிருந்தது வயிறும் குடலும், எலும்பும் அதன் மேல் போர்த்திய தோலும் மட்டுமே. கைகளில் தசையில்லை, கால்கள் சுருங்கிப் போய் எலும்பும் தோலுமாகப் பார்க்க அசிங்கமாக இருந்தது.

ஆல்வரெங்காவிற்குத் தான் கரை ஒதுங்கிய இடம் எதுவென்று தெரியாவிட்டாலும், அவர் கரையேறிய இடம் ‘ஏபான் ஆட்டல்’ (Ebon Atoll) தீவுக்கூட்டத்தின் ஒரு குட்டித்தீவான ‘டைல் ஐலெட்’ (Tile Islet) என்பதாகும். இது ‘ரிபப்ளிக் ஆஃப் தி மார்ஷல் ஐலண்ட்ஸ்’ (Republic of the Marshall Islands) க்கு உரிய 1,156 தீவுக்கூட்டத்தின் தென் முனையில் உலகின் பிற இடங்களுடன் தொடர்பற்ற தொலைவில் இருந்தது. ஏபான் தீவில் இருந்து ஒரு படகில் நிலத்தைத்தேடிச் செல்பவர்கள் 4,000 மைல்கள் வடகிழக்கில் பயணம் செய்து அலாஸ்காவையோ, அல்லது 2,500 மைல்கள் தென்மேற்காகப் பயணம் செய்து பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா (Brisbane, Australia) வையோ அடைய வேண்டியிருக்கும். ஆல்வரெங்கா ஏபான் தீவைத் தவறவிட்டிருந்தால் ஆஸ்திரேலியாவின் வடபகுதி நோக்கி மிதந்து சென்று ‘பப்புவா நியூ கினி’ (Papua New Guinea)யை அடைந்திருப்பார். ஆனால் மேலும் 3,000 மைல்கள் பயணித்து ‘பிலிப்பைன்ஸ்’ (Philippines)ன் கிழக்குக் கடற்கரையையும் அடைய வாய்ப்பிருந்திருக்கும்.

அவர் புதர்களின் ஊடே தடுமாறி நடந்த பொழுது, திடீரென ஒரு சிறு வாய்க்கால் தோன்றியது. அக்கரையில் ‘எமி லிபாக்மேட்டோ’ (Emi Libokmeto)வும் அவரது கணவர் ‘ரஸ்ஸல் லெய்கிட்டிரிக்’ (Russel Laikidrik)கும் வசிக்கும் கடற்கரை வீடு இருந்தது. எமி அத்தீவில் காய்ந்த தேங்காய்களின் மட்டைகளை உறிக்கும் தொழில் செய்பவர். எமி ஏறிட்டுப் பார்த்த பொழுது புதியவர் ஒருவர் அங்கு நிற்பதைக் கண்டார். பார்ப்பதற்குச் சக்தியற்றவராகத் தோன்றும், பசியுடன் கூக்குரலிடும் ஆல்வரெங்காவை அவர் பார்த்த பொழுது, இந்த மனிதர் இங்கு நீந்தி வந்திருந்தால், நிச்சயம் ஏதேனும் ஒரு கப்பலில் இருந்து தவறி விழுந்திருப்பார் என்றுதான் முதலில் நினைத்தார்.

எச்சரிக்கையுடன் உத்தேசமாக ஒருவரை ஒருவர் எதிர் கொண்ட பிறகு எமியும் ரஸ்ஸலும் அவரை தங்கள் வீட்டிற்கு வரவேற்றனர். ஆல்வரெங்கா ஒரு படகையும், ஒரு மனிதனையும், ஒரு கடற்கரையையும் வரைந்து காட்டினார். பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். எப்படி அவரால் 7,000 மைல்கள் கடலில் மிதந்து வந்ததைக் குச்சி மனிதர்கள் படம் வரைந்து விளக்க முடியும்? அவரது பொறுமை குறைந்தது, அவர்களிடம் மருந்து கேட்டார், மருத்துவரிடம் போக வேண்டும் என்றார். எல்லாவற்றுக்கும் எமியும் ரஸ்ஸலும் புன்னகையுடனும் அன்புடனும் தலையசைத்தார்கள். ஒருவருக்கொருவர் அடுத்தவர் பேசும் மொழி புரியாவிட்டாலும் ஆல்வரெங்கா பேசிக்கொண்டே இருந்தார். அவர் அதிகம் பேசப் பேச எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எமியும் ரஸ்ஸலும் ஏன் சிரித்தார்கள் என்பது தெரியாவிட்டாலும், ஆல்வரெங்கா தான் உயிர் பிழைத்ததற்காகச் சிரித்தார்.

கடலிலிருந்து பிழைத்து வந்தவரை நன்கு உபசரித்த பிறகு, மறுநாள் காலை ரஸ்ஸல் தனது படகில் அந்தக் காயலைக் கடந்து துறைமுகமும் பெரிய நகருமான ஏபான் நகரின் நகராட்சித் தலைவரைச் சந்தித்து உதவிக் கேட்கச் சென்றார். சிலமணி நேரங்களில் காவல் துறை, மருத்துவச் செவிலியர் என ஒரு குழு சேர்ந்து ஆல்வரெங்காவை மீட்க வந்தார்கள். ஆல்வரெங்காவை படகில் ஏற்றி தங்களுடன் ஏபானுக்கு அழைத்துப் போக அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. காட்டுமிராண்டி தோற்றத்துடன் இருந்த ஆல்வரெங்காவிற்கு சிகிச்சை அளித்தபடி அவரிடம் மேலும் அவர் பயணம் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்த பொழுது, நார்வேயில் இருந்து அங்கு வந்திருந்த பயணியான மானிடவியலாளர் ஒருவர் ‘மார்ஷல் ஐலண்ட்ஸ் ஜர்னல்’ பத்திரிக்கைக்குச் செய்தி கொடுத்தார்.

ஏ எஃப் பி (Agence France-Presse – AFP) செய்தி நிறுவனத்தின் ‘கிஃப் ஜான்சன்’ (Giff Johnson) என்பவர் எழுதிய ஆல்வரெங்கா தப்பிப்பிழைத்த விவரங்களைக் கொண்ட முதல் சிறப்புச்செய்தி ஜனவரி 31 அன்று வெளியானது. ஹவாய், லாஸ் ஏஞ்சலஸ், ஆஸ்திரேலியாவில் இருந்து பல பத்திரிக்கை நிருபர்கள் அந்தத் தீவிற்கு வந்து, தப்பிப்பிழைத்ததாகக் கூறப்படும் ஆல்வரெங்காவை பேட்டி எடுக்கக் குழுமினர். பத்திரிக்கையாளர்கள் பலரும் ஆல்வரெங்காவைப் பற்றிய சுவையான தகவல்களைச் சேகரிக்க முயன்ற பொழுது, ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு மட்டுமே இருந்த அந்தக் குட்டித்தீவின் தொலைபேசி ஒரு போர்க்களமானது. ஆல்வரெங்கா கூறியவை யாவும்; தொடக்கத்தில் அவர் தொலைந்ததாகக் கூறப்பட்ட அறிக்கை, கடலில் நடத்திய மீட்புப் பணி தேடல் அறிக்கை, கடல் நீரோட்டத்தின் திசையில் அவர் பயணித்திருப்பது, அவர் மிகவும் சக்தியற்ற நிலையில் இருப்பது போன்ற உறுதியான சான்றுகளின் காரணமாக அவர் கூறிய கதை நம்பக்கூடியதாகவே இருந்தது.

ஆனாலும் இணையத்திலும், உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கை அலுவலகங்களிலும் விவாதங்கள் வெடித்தன. ‘எர்னஸ்ட் ஷாக்கெல்டன்’ (Ernest Shackleton) என்ற கடலில் தப்பிப் பிழைத்த கடலோடியின் தீரச் செயலுக்குப் பிறகு ஆல்வரெங்காவின் பயணம்தான் குறிப்பிடத்தக்கதா, அல்லது ‘ஹிட்லர் டைரி” என்ற மோசடியைப் போல உலக மகா மோசடியா என்ற கேள்விகள் தொடங்கின. அதிகாரிகள் ஆல்வரெங்காவின் முதலாளியை விசாரித்ததில், நவம்பர் 17, 2012 அன்று துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் துவக்கித் தொலைந்து போன படகின் பதிவு எண்ணும், ஆல்வரெங்கா கரையொதுங்கிய படகின் பதிவு எண்ணும் ஒன்றே என்று உறுதி செய்தார். கார்டியன் பத்திரிக்கையின் செய்தியாளர் ‘ஜோ டக்மேன்’ (Jo Tuckman) மெக்சிகோவின் கடலோர மீட்புப் பணிக் குழுவினரிடம் விசாரித்த பொழுது, அதன் தலைமை அதிகாரி ‘ஹெய்மி மார்க்குவின்’ (Jaime Marroquín) ஆல்வரெங்காவையும் கோர்டபாவையும் காப்பாற்ற எடுத்த முயற்சியையும், பலனற்றுப் போன மீட்புப்பணி தேடலையும் பற்றி விவரமாக எடுத்துரைத்தார். காற்று மிகப் பலமாக இருந்தது, இருநாட்களுக்குப் பிறகு தெளிவாகக் காணமுடியாத அளவிற்கு ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் தேடும் விமானங்களையும் நிறுத்த வேண்டியதாயிற்று என்று விவரித்தார்.

மெக்சிகோவின் கடலோரப் பகுதி மக்கள் விசாரிக்கப்பட்டார்கள், மருத்துவ அறிக்கைகளும், கடலின் வரைபடங்களும் ஆராயப்பட்டன. கடலில் இருந்து மீண்டவர்களிடமும், அமெரிக்கக் கடலோரக் காவற்படையினரிடமும், கடற்படை வீரர்களிடமும் (US Coast Guard and The Navy Seals), பசிபிக் கடலின் குறுக்காகப் பயணம் மேற்கொண்டு தீரச்செயல் செய்த ‘ஐவான் மெக்ஃபெடியன்’ மற்றும் ‘ஜேசன் லூயிஸ்’ (Ivan MacFadyen and Jason Lewis) ஆகியோரிடமும் கடற்பயணம் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியை நன்கறிந்த கடல் ஆய்வாளர்களிடமும், வணிக மீனவர்களிடமும் இருந்து செய்திகள் திரட்டப்பட்டன. அனைவரும் ஆல்வரெங்கா தனது கடல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் விவரங்களில் இருந்து அவர் கூறுவது உண்மையாக இருக்கவே வாய்ப்புள்ளது என்றும், அவரது கடல் அனுபவம் அவர்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுடன் ஒத்திருப்பதாகவும் உறுதி செய்தார்கள். ஆல்வரெங்கா மார்ஷல் தீவுகளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபொழுது அவரைச் சந்தித்துப் பேசிய அமெரிக்கத் தூதரக அதிகாரி அவருடைய காயங்களையும் அவரது நிலையையும் பார்த்தார். அவரது நைந்து போன உடலில் இருந்த பல காயங்களின் வடுக்கள் அவர் கடலில் வெகுநாட்கள் தத்தளித்ததைக் காட்டுவதாகவே கூறினார்.

இதற்கிடையில், அங்கே மார்ஷல் தீவுகளில் ஆல்வரெங்காவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமடைந்தது. அவருடைய கால்களும் பாதங்களும் வீங்கிப் போயின. அவருடைய திசுக்கள் நீரின்றிப் பலநாட்களாக வறண்டு போயிருந்ததால், கிடைக்கும் நீரை எல்லாம் அவை இப்பொழுது அப்படியே உறிஞ்சுவதால் இவ்வாறு வீங்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஆல்வரெங்காவின் உடல்நிலை தேவையான அளவு தேறி நிலையாகிவிட்டது என்று முடிவு செய்து எல் சல்வடோரில் உள்ள அவரது குடும்பத்தைச் சந்திக்கும் பயணத்தை மேற்கொள்ள அனுமதித்தார்கள்.

ஆல்வரெங்காவிற்கு இரத்தச் சோகை அதிகமாக இருந்தது. பச்சையாக(சமைக்காத) ஆமைகளையும், பறவைகளையும் அவர் உண்டதால் அவரது ஈரல்களில் ஒட்டுண்ணிகள் தொற்றியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் எண்ணினார்கள். ஆல்வரெங்கா அந்த ஒட்டுண்ணிகள் அப்படியே மேலேறி தனது மூளையைத் தாக்கக் கூடும் என நம்பினார். ஆழ்ந்து தூங்க முடியாமல் கோர்டபா இறந்து போன நினைவுகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டார். தனியாக ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததை உற்சாகமாகக் கொண்டாட இயலவில்லை. உடல்நிலை தேறியதும், தான் ஒப்பந்தம் செய்து கொண்டபடி கோர்டபாவிற்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மெக்சிகோவிற்குப் பயணமானார். கோர்டபாவின் அம்மா ‘ஆநா ரோசா’ (Ana Rosa) அவர்களிடம் கோர்டபா சொல்லச் சொன்ன செய்தியைச் சொன்னார். அந்த அம்மையாருடன் இரண்டு மணிநேரம் செலவிட்டு அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார்.

நிலத்திற்குத் திரும்பியும் அவரது வாழ்வில் நிம்மதியில்லை. பல மாதங்களுக்கு ஆல்வரெங்கா அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. கடலின் மீது மட்டுமல்ல நீரைப் பார்ப்பதற்கே அவருக்கு உள்ளூரப் பயம் தோன்றியது. விளக்குகளை எரியவிட்டே தூங்கினார், தனிமையைத் தவிர்க்க எப்பொழுதும் அவருக்கு ஒரு துணை தேவையாக இருந்தது. கரைக்குத் திரும்பிய உடனேயே, உலகம் முழுவதுமிருந்து வரும் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு வழக்கறிஞரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார். பிறகு சிலநாட்களில் அவரை நீக்கிவிட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுத்தார். நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஆல்வரெங்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி, மில்லியன் டாலருக்கு இழப்பீடு கேட்டு அவர் மீது வழக்கொன்றைப் பதிவு செய்தார்.

ஓராண்டுக்குப் பிறகு, அவருடைய குழப்பங்கள் ஓரளவு குறைந்த பிறகே வரைபடத்தில் தான் எவ்வளவு தொலைவு பசிபிக் கடலில் மிதந்து சென்றோம் என்று அவரால் பார்க்க முடிந்தது, தான் செய்த அசாதாரணக் கடற்பயணத்தைப் பற்றி வியந்து போகவும் முடிந்தது. மனநிலையைப் பாதிக்கும் விளிம்பு வாழ்க்கையில் அவர் 438 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். பசி, தாகம், தனிமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு மட்டும் அவர் போகவில்லை. ஆல்வரெங்கா அனைவருக்கும் சொல்ல விரும்புவது "உங்களுக்கு வாழ்வதற்கு ஒருமுறைதான் வாய்ப்பு கிடைத்துள்ளது – அதனால் அதனைப் போற்றுங்கள்".


—————————————————————-
குறிப்பு:
“438 நாட்கள்: கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த மீனவர் ஒருவரின் உண்மைக்கதை” என்ற இக்கட்டுரை, '438 Days: An Incredible True Story of Survival at Sea' என்ற நூலின் சுருக்கம். நூலின் ஆசிரியரும், கார்டியன் செய்தித்தாளின் செய்தியாளருமான திரு. ஜானதன் ஃபிராங்க்ளின் அவர்கள் எழுதி கார்டியனில் வெளியான அவரது ஆங்கிலக் கட்டுரை, கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



கட்டுரைக்கு உதவிய பதிவு:
Lost at sea: the man who vanished for 14 months
http://www.theguardian.com/world/2015/nov/07/fisherman-lost-at-sea-436-days-book-extract?
Jonathan Franklin, Saturday 7, November 2015

நூல்:
Title: 438 Days: An Incredible True Story of Survival at Sea
Author: Jonathan Franklin
Publisher:Pan Macmillan, 2015
ISBN: 1509800166, 9781509800162



நன்றி: சிறகு
நவம்பர் 21, 2015
நவம்பர் 28, 2015
டிசம்பர் 7, 2015 

#உண்மைக்கதை, #சிறகு, #மொழிபெயர்ப்பு, #Themozhi