Monday, April 22, 2013

காற்றுக்கென்ன வேலி!!!

 காற்றுக்கென்ன வேலி!!!





Lean In: Women, Work and the Will to Lead
- by Sheryl Sandberg
Hardcover: 240 pages
Publisher: Knopf (March 11, 2013)
Language: English
ISBN-10: 0385349947

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு, மகளிருக்குத் தலைமைப் பதவி ஏற்கும் தகுதி இருக்கிறதா என்ற சந்தேகமே வர வாய்ப்பிருக்காது.  அவரவர் பிறந்த காலக்கட்டத்தை வைத்து உலக நாடுகளில் ஓரிரு நாடுகளிலாவது பெண்கள் தலைமை ஏற்றுத் திறம்பட வழி நடத்துவதைப் பார்த்துத்தான் வளர்ந்திருப்பார்கள். அதிலும் கீழை நாடுகளில் பெண்களின் மேல் அடக்குமுறை அதிகம் எனக் கூறப்பட்டாலும், அந்த நாடுகள்தான் பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டதில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் அரசியல் ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுப்பணிகளில் முத்திரை பதித்திருக்கும் பெண்களைப் போல, பெண்களால் வர்த்தக நிறுவனங்களிலும் அதே அளவு தலைமைப் பதவிகளைப் பெற முடிந்திருக்கிறதா என்பது பலரும் வியந்து கேட்கும் கேள்வி.

சுயதொழில்களில் பெண்கள் முன்னின்று தங்கள் நிறுவனங்களைக் கட்டிக் காத்து வளர்த்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனாலும் மற்ற பிற வணிக நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றும் பொழுது, அவர்களது பங்களிப்பு பாராட்டப் படுவதில்லை, அவர்கள் தகுதிக்கேற்ற பதவிகள் வழங்கப் பெறுவதில்லை என்பது பெண்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் என்றும் உள்ள மனக் குறைபாடு. பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  இந்திரா நூயி புகழ் பெற்ற பெண் நிர்வாகியாக உலகில் அறியப்படுகிறார்.  அவர் போல விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சில பெண்கள்தான் 'ஃபார்ச்சுயூன் 500' (Fortune 500) எனப் போற்றப்படும் பெருவணிக நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஏன் இந்தப் பாகுபாடு? பெண்களின் முன்னேற்றத்தில் எதனால் தடை ஏற்படுகிறது? 1960 கள் முதல் பெண்ணியம் என்று மகளிரின் சமுதாய முன்னேற்றத்திற்காக, சம உரிமைக்காகப் பாடுபட்ட புரட்சி அலை ஏன் செயலிழந்து நிற்கிறது? இது போன்ற தடைக்கற்களை எப்படி அகற்றுவது? இதனைச் செய்ய வேண்டியவர் யார்? எங்கே குறைபாடு இருக்கிறது? எனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதல் பத்திரிக்கை ஆசிரியர்கள் எனப் பலரும் அவரவர் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அது போன்ற பெருவணிக நிறுவனங்கள் ஒன்றில் தலைமைப் பொறுப்பேற்ற பெண் நிர்வாகியின் கண்ணோட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் நாம் படிக்க வேண்டியது "ஷெரில் சேண்ட்பெர்க்" (Sheryl Sandberg) எழுதிய "லீன் இன்: விமன், வொர்க் அண்ட் தி வில் டு லீட்" (Lean In: Women, Work and the Will to Lead) என்ற புத்தகத்தை.

ஷெரில் ஃ ப்பேஸ் புக் (Face Book) சமூக வலைத்தள நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பெண்ணதிகாரி (chief operating officer of Facebook), ஃபார்ச்சுயூன் 50 தரவரிசைப் பட்டியலில் அதிகாரம் நிறைந்த பெண் நிர்வாகியாகவும் (Fortune’s list of the 50 Most Powerful Women in Business), டைம் இதழின் உலகில் செல்வாக்குமிக்க 100 மனிதர்களில் (Time’s 100 Most Influential People in the World) ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

ஷெரில் இந்த நூலை எழுத நேர்ந்த காரணம் என்ன என்பதையும் கூறுகிறார். அவர் முதன் முதலில் பணியில் சேர்ந்தபொழுது அவரது தலைமுறையினருக்குச் சம அளவு பொறுப்பும் வாய்ப்பும் இருப்பதாக நினைத்திருந்தாராம்.  ஆனால் நடைமுறையோ வேறு விதமாக இருந்திருக்கிறது.  பெண்கள் அதிக அளவில் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுகிறார்கள்.  மேல் நிலைப் பட்டங்களும் பெறுகிறார்கள்.  பல பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஏனோ ஒவ்வொரு துறையிலும் 20 விழுக்காடுகளுக்கும் குறைவாகவே தலைமைப் பொறுப்பினை வகிக்கும் நிலையை அடைகிறார்கள். இது அவரது கவனத்தை ஈர்த்து மேலும் இதன் காரணத்தை ஆராயத் தூண்டியிருக்கிறது.

அவரது கூர்ந்த கவனிப்பு பெண்கள் முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்பதாக அவருக்குத் தெரிவித்தது; பணியிடத்தில் நிலவும் பாரபட்சமான நிலை, பணியில் இசைவான முறையில் பணியாற்ற வகையில் இல்லாத வரைமுறைகள்,  குறைவான வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவது எனப் பற்பல தடைகளாகும். அத்துடன் பெண்களும் தங்களை அறியாமலே தங்கள் முன்னேற்றத்திற்குத் தீங்கு விளைவிக்கும் சில பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்குகிறார்கள், ஆர்வமுடன் விவாதங்களில் கலந்து கொள்வதில்லை, தங்கள் கருத்துக்களைத் துணிவுடன் முன் வைப்பதில்லை. எந்தப் புதிய பணியையும் தங்களால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கை பல பெண்களுக்கு  ஏற்படுகிறது. எதையும் செய்ய என்னால்  இயலும்  என்ற தன்னம்பிக்கை குறைவால் முன்னேற வாய்ப்பளிக்கும் புதிய பதவிகளைத் தவிர்க்க முயல்கிறார்கள். தவறாக ஏதேனும் செய்து கேலிக்குரிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும், தயக்கமும் அவர்களைக் கட்டுப் படுத்துகிறது.

வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளாலும், சமுதாயம்  காலம் காலமாகப் பெண்களுக்கென வரையறுத்த சில கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படும் வகையிலுமே அவர்களது நடை முறைகள் அமைகிறது. இவை அவர்கள் முன்னேற்றத்தின் தடைக் கற்களாக விளங்குகிறது.  ஷெரில் இது போன்ற பண்புகளைத் தன்னிடமும், தன்னுடன் பணியாற்றும் பெண்களிடமும் கண்டு, அதனால் அவர்கள் நல்ல பல வாய்ப்புகளையும் நழுவ விடுவதை உணர்ந்து இதனை நீக்கும் முயற்சியினைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.  திறமை இருந்தும் தயக்கத்துடன் வாய்ப்புகளை நழுவ விடும் செயல்கள் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைவதற்குத் தடையாக இருக்கிறது.

எந்த வயதிலும், எந்தப் பணியிலும், எந்த வாழ்க்கை சூழ்நிலையிலும் இருக்கும் பெண்களுக்கும் இந்த அறிவுரைகள் பொருந்தும்.  கல்வி முடித்து முதன்முறையாகப் பணிபுரியச் செல்லும் பெண்களானாலும், குடும்பப் பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் பணிபுரியச் செல்லும் பெண்களானாலும், அனைத்துப் பெண்களுக்கும் தங்கள் திறமையில் நம்பிக்கைக் கொள்ள, தாங்கள் கண்ட கனவுகள் வழி குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்கு இவர் அறிவுரை உதவும். தங்கள் துறையில் மற்றவர்களைத் தலைமை ஏற்று வழி நடத்த விரும்புபவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது ஷெரிலின் அறிவுரைகள்.

இந்நூலில் பெண்களின் வாழ்க்கைத் துணைவர்களும் தங்களுக்குரிய பங்கினை உணர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று  ஷெரில் கூறுகிறார். ஒருவரின் முன்னேற்றத்திற்கு அவரது பாலினம் எந்த வகையிலும் தடையாக இல்லாதவாறும், அவர்களது ஆர்வமும் முயற்சியும் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து சமநீதி உள்ள உலகம் அமைய நடவடிக்கைகள் எடுப்பது அனைவரின் பொறுப்பாகும்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிகம் உறுதுணையாக இருக்கப் போவது பெண்களில் பலர் தலைமைப் பதவிகளுக்கு வருவதே ஆகும்.  அவ்வாறு தலைமைப் பொறுப்பேற்கும் பெண்கள், தங்களின் கண்ணோட்டத்தில் பெண்களுக்குத் தடைகளாக இருக்கும் காரணங்களை உடைத்தெறியும் வழியில் வகை செய்யலாம்.  ஆனால் இது கோழியில் இருந்து முட்டை வருமா அல்லது முட்டையில் இருந்து கோழி வருமா என்பது போன்ற விவாதமாகவும் அமைகிறது.

இதற்கு எடுத்துக் காட்டாக அவர் கூறுவது கூகிள் (Google) நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை. மகப்பேறு காலத்தில் அவரது ஊர்தியை நிறுத்துமிடம் அதிகத் தொலைவில் இருந்த பொழுது அவர் அடைந்த சிரமத்தினால் உடனடி நடவடிக்கையாக கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்க அவர் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிடுகிறார். அவரும் பெண்ணாக இருந்தும் அதுவரை அவருக்குக் கர்ப்பிணிப் பெண்கள் அடைந்த சிரமம் புரியாமல் இருந்ததாகவும், அதுபோலவே கூகிள் தலைமை அதிகாரிகளுக்கும் அதன் முக்கியத்துவம் தெரியாததும் அவரை வியக்க வைத்ததாகக் கூறுகிறார்.  அதுவரை அங்குப் பணி புரிந்த பெண்களும் சிறப்புச் சலுகை கேட்பதைத் தவிர்த்ததன் காரணம், பணியிடத்தில் இது போன்ற சிறப்புச் சலுகைக் கோரிக்கைகள் வைப்பது அவர்களைக் குறைவாக மதிப்பிடச் செய்யும் என்ற அச்சமாகவோ தயக்கமாகவோ இருந்திருக்கக் கூடும் என்பது ஷெரிலின் கருத்து.

ஒரு ஆணுக்கு அவர்  ஆண் என்ற ஒரே காரணத்தினால், அவரால் தலைமை ஏற்க முடியும் என்று கருதி தலைமைப் பதவி தேடி வரும்.  ஆனால் பெண்களோ தாங்கள் அந்தப் பதவிக்குத் தகுதிகள் உடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தொழில் முறையில் பெண்களுக்குத் தலைமைப் பதவியை அடைய ஏற்படும் தடையை 'கண்ணாடிக் கூரை' (Glass ceiling) என்ற முட்டுக் கட்டை இருப்பதாகக் கூறுவதுண்டு.  தொழிலேணியில் (career ladder/corporate ladder) அவர்கள் ஓர் அளவிற்கு மேல் ஏற முற்படுவது பலரால் விரும்பப் படுவதில்லை.  அது போன்ற தடைகள் ஏற்படும்பொழுது பெண்கள் தொழிலேணி  வழியாகக் குறிப்பிட்ட உயர்நிலைப் பதவியை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்வதைத் தவிர்த்து, குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள 'ஜங்கிள் ஜிம்' (Jungle Gym) விளையாட்டு உபகரணத்தில் எப்படிப் பல வழிகளில் ஏறி உச்சியை அடைய முடிகிறதோ அதைப்போன்று செயல் பட வேண்டும்.  குறிப்பிட்ட தலைமைப் பதவியை அடைய அந்த நிறுவனத்தில் முட்டுக்கட்டை இருப்பதாகக் கருதினால் அந்தப் பதவியை அடைய வழிவகுக்கும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஷெரில்.

இந்த நூலின் மூலமாக அவர் அறிவுறுத்துவது இரு முக்கியக் கருத்துக்கள்:  ஒன்று, பெண்கள் தலைமைப் பதவிகளை அடைந்து தன்னையொத்த பெண்களும் முன்னேறி தலைமைப் பதவியை அடைய வழி வகுக்க வேண்டும், அவர்கள் பெண்களின் தேவைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மற்றொன்று, பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைத்தெறிந்து அவர்கள் குறிக்கோள்களை அடைய பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்து ஊக்குவிக்க வேண்டும்.

இக்கருத்துக்களை முன்னிறுத்தத் தனது வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவுகளை, செய்த பிழைகளை, அவருக்கு ஏற்பட்ட தடைகளை, தொழிலிலும் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறி விளக்க முற்படுகிறார். பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும், பணியிடத்திலும் சிறந்த முடிவுகளை எடுத்து தன்நிறைவு பெற்று வாழ்க்கைக் கனவுகளையும் குறிக்கோளையும் அடைய வழி சொல்லுகிறார்.

ஷெரில் பெண்கள் தலைமைப் பதவியை அடையத் தடைகளாக இருக்கும் முக்கிய காரணங்களாகக் கருதுவது ...

[1] வாழ்வில் அனைத்தையும் செய்ய வேண்டும், அதுவும் அனைத்தையும் சரியாகவும் செய்ய வேண்டும் என்று எண்ணுவது; கச்சிதமாக ஒரு தவறு கூட இருக்கக்கூடாது என்று செயல்படுவது நடைமுறையில் உதவாது.  இந்த எண்ணமே முன்னேற்றத்தின் முக்கிய எதிரி.

[2] வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டுவது போன்ற அருமையான நேரங்களில், பெண்கள் தங்கள் திறமையிலோ, அல்லது தங்கள் வாழ்க்கை சூழ்நிலையை முன்னிறுத்தி இது தன்னால் இயலுமா என்பது போன்ற சந்தேகங்கள் கொள்வது. அதனால் தன்னம்பிக்கையின்றி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி அவற்றை நழுவ விட்டுவிடுவது.

[3] பொதுவாக அனைவரும் அறிவதும், ஆண்களைப் பொறுத்தவரை அடிப்படையில் அனைவரும் நம்புவதும் பணியிலும் குடும்ப வாழ்க்கையிலும் அவர்களுக்கு எந்த விதத் தடைகளும் கிடையாது என்பதை.  பணியிலும் வெற்றி பெற்று, ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையும் அவர்களால் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களுக்கு ஏதோ ஒன்றை இழந்துதான் மற்றொன்றை அடைய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பணியினைத் திருப்திகரமாகச் செய்தாலும், மேலும் பல பொறுப்புகளைப் பெற்றுத் தலைமைப் பதவிக்குச் செல்ல பெண்களுக்குக் குடும்ப வாழ்வில் பல நிர்ப்பந்தங்கள் தடையாக அமைந்து விடுகிறது.

[4] பெண்களும் தாங்களே தங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். யாராவது உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  தங்கள் தலைமைப் பண்புகளைச் செயல்களில் காட்டவேண்டும்.  எப்பொழுதும் அடுத்தவர் சொல்வதை மட்டுமே செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதும், சுயசிந்தனையின்றிப் பிறர் ஆட்டுவிப்பதற்கு ஏற்ப ஆடும் பண்புகளைக் காட்டும் ஒருவரால் தலைமைப் பொறுப்பைத் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை அடுத்தவர்கள் கோணத்தில் எண்ணிப் பார்ப்பதற்கு இயலாததாக இருக்கும்.

[5] தங்கள் வெற்றி தங்கள் கையில், தங்கள் நடவடிக்கையில் இருக்கிறது அதனைச் சரியாகக் கையாள்வதே மேலும் முன்னேறுவதற்கு வழி வகுக்கும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். அவர்களது முன்னேற்றத்தை விரும்புவதில், அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதில் அவர்களைத் தவிரப் பிறருக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

[6] தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், தன்னம்பிக்கையுடன் இருப்பதாகப் பிறர் உணரும் வண்ணம் செயல் படுவதும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடைய வழி வகுக்கும். பெரும்பாலும் வாய்ப்புகள் யாருக்கும் வழங்கப் படுவதில்லை, விருப்பப்படுபவர்களால் எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதே உண்மை.  அத்துடன், மிக வேகமாக இயங்கும் தற்கால உலகில் வாய்ப்புகள் யாருக்காகவும் வழங்கப் படுவதும் இல்லை, அவர்கள் வழியில் தென்படும் வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதே அவரவர் வெற்றிக்கு வழி என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

[7] தாய்மார்கள் தங்களுக்குத் தோன்றும் தேவையற்ற குற்ற உணர்வுகளுக்குப் பலியாகாமல், காலத்தைத் திறம்பட  நிர்வகித்துச் செயல்படுவது தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

[8] எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் மிக முக்கியமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியது தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பதாகும். தங்களுக்கு வாழ்க்கைத் துணை தேவை என்று முடிவெடுக்கும் பெண்கள், தங்கள் பணிக்கும் தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளுக்கும் உறுதுணையாக இருக்கும், உதவும், தன்னலமற்று மனைவியின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தும் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

[9] அச்சமே பெண்களுக்கு முதல் எதிரி. சரியான முடிவுகளை எடுக்காமல் போய் விடுவோமோ? அவ்வாறு செய்தால் நம்மைப் பார்த்து பிறர் நகைப்பதற்கு இடம் கொடுத்துவிடுவோமோ? தோல்வி அடைந்து விடுவோமோ? பிறர் நம்மைத் தவறாக எண்ணும் வாய்ப்பை அளித்துவிடுவோமோ? நம் முன்னேற்றம் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்துமோ? தகுதிக்கு மீறிய செயலாக அகலக்கால் வைக்கிறோமோ? என்பது போன்ற தேவையற்ற அச்சங்கள் பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும் வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.  அதிலும் தங்களால் சிறந்த மகளாக அல்லது, சிறந்த மனைவியாக அல்லது, சிறந்த தாயாகச்  செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்பது போன்ற அச்சங்கள் பல பெண்களையும் காலம் காலமாகப் பிடித்தாட்டி அவர்கள் முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கிறது.

[10] எந்த முடிவையும் எடுப்பதில் அச்சம் குறுக்கிடாவிட்டால், அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் தொழில் முறையில் எடுக்கும் முடிவுகள் என்னவாக இருக்குமோ அந்த முடிவினை  எடுப்பதில் பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது.

ஷெரில், தான் பணிபுரியும் ஃபேஸ்புக்  நிறுவன அலுவலகச் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஊக்கமூட்டும் கருத்துப்படச் சுவரொட்டிகள் குறிப்பிடும் அறிவுரைகளை நூலைப் படிப்பவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறர். "தன்திறமையில் தன்னம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்," "தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்" என்பது போன்ற வாசகங்களைத் தாங்கியவை அச்சுவரொட்டிப் படங்கள். அவற்றில் ஷெரிலின் கவனத்தை மிகவும் கவர்ந்ததாக, "அச்சம் என்பதே உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?" என்ற வாசகத்தைக் குறிப்பிடுகிறார்.

     "காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
      கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
      மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?"
என்ற கண்ணதாசனின் வரிகள் தனது வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்குச்  சிறந்த அறிவுரை.  இந்த அறிவுரைதான் ஷெரிலின் நூல் முழுவதும் விரவி நின்று பெண்களுக்குத் தன்னம்பிக்கையைத் தந்து "உன்னால் முடியும் பெண்ணே" என்று உற்சாகமூட்டுகிறது. பெண்களின் வாழ்வில் பங்குபெறும் ஆண்களுக்கும் சமுதாயத்திற்கும், பல்லாண்டுகளாக அடக்கு முறையினால் தவிக்கும் பெண்களுக்குச் சமவுரிமை பெற்றுத்தரத்  தடையாக இருக்கக்கூடாது, தங்கள் கடமையை உணர்த்து உதவ வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.  பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவுடன் செயல்படும் பணியிடங்களும், குடும்பமும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணையுமே பெண்களுக்குச் சமவுரிமை கிடைக்க வழி செய்ய முடியும்.



நன்றி:
திண்ணை
ஏப்ரல் 22, 2013 

#திண்ணை, #பெண்ணியம், #நூல் மதிப்புரை, #Themozhi  




Sunday, April 7, 2013

புகழ் ​பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்

புகழ் ​பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்



உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர். அவர் எழுத்துக்களைப் படித்து விமரிசிப்வர்களே சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும், ஆங்கில அறிஞர்களாகவும் இன்றும் கொண்டாடப் படுவார்கள்.

அவரது “Et tu, Brute?” என்ற வாக்கியமும் உலகப் புகழ் பெற்றது. ரோம அரசின் பேரரசர் ஜூலியஸ் சீசர், தனது முதுகில் குத்திய தனது உற்ற நண்பன் புருட்டஸை வேதனையுடன் நோக்கி “நீயுமா புருட்டஸ்?” என்று கேட்டு உயிர் விடும் முன் சொல்லிய கடைசி உரையாடல் அது.

இப்பொழுது ஷேக்ஸ்பியரின் அன்பு ரசிகர்கள் அதே தொனியில் “நீங்களுமா ஷேக்ஸ்பியர்?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் மார்ச் 31, 2013 அன்று  உலகம் முழுவதும் பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டு, அனைத்து நாளிதழ்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்ட ஷேக்ஸ்பியர் பற்றிய செய்திதான்.

இலக்கியமேதை என்று போற்றப்பட்ட ஷேக்ஸ்பியரின் மறுபக்கம் அவர் ஒரு சமூக விரோதி எனத் தெரிவிக்கிறது. வேல்ஸில் உள்ள ‘அபெர்ஸ்ட்டிவித் பல்கலைக்கழக’ (Aberystwyth University in Wales) ஆராய்ச்சியாளர்கள், நீதிமன்ற ஆவணங்களையும், ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்ட மற்ற பிற ஆவணங்களையும் இணைத்து ஆராய்ச்சி செய்து கண்டு அறிந்ததோ அவரைப் பற்றிய அதிர்ச்சி தரும் மறுபக்கம்.

அந்த ஆராய்ச்சிக் குழுவில் ஒருவரான ‘ஜேன் ஆர்ச்சர்’ (Jayne Archer) என்ற ஆராய்ச்சியாளர், ஷேக்ஸ்பியர் ஒரு சமூகவிரோதியாக வாழ்ந்தார் என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியர் கள்ளச் சந்தையில் தானியங்களைப் பதுக்கி, பஞ்ச காலத்தில் அதிக விலைக்கு விற்றார். அந்தப் பணத்தில் வட்டிக்குக் கடன் கொடுத்து வாழ்ந்தார், பணத்தைத் திருப்பிக் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தவர்களுக்கு மனிதாபிமானம் இல்லாமல் நெருக்கடி கொடுத்தார். இவ்வாறு சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஈட்டிய வருமானத்திற்கு வரிகட்டாமல் வரி ஏய்ப்பு செய்தார். சட்ட விரோதமான கள்ளச் சந்தை வியாபாரத்திற்காகவும், வரி ஏய்ப்பிற்காகவும் நீதிமன்றம் அவருக்குப் பலமுறை அபராதம் விதித்தது. தொடர்ந்து அவ்வாறே செய்தால் சிறையிலும் அடைக்கப் படுவார் என்ற எச்சரிக்கையும் அவருக்கு விடப்பட்டது என்பது இந்த ஆராய்ச்சி வழி தெரிகிறது.

தனது ‘குலோப் நாடக அரங்கம்’ (Globe Theatre) மூலம் கிடைத்த வருமானத்தை எல்லாம் 15 ஆண்டுகளாக மால்ட்டும், பார்லியுமாக வாங்கி மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைத்திருந்து, அதிக விலைக்கு பஞ்ச காலத்தில் விற்றிருக்கிறார். பிறகு இவற்றில் வந்த பணத்தில் வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலங்களிலும் கட்டிடங்களிலும் முதலீடு செய்ததாலும் அவர் இறந்த பொழுது, அவர் வாழ்ந்த ‘வார்விக்க்ஷையர்’ (Warwickshire) நகரின் மிகப் பெரிய நிலச்சொந்தக்காரராகவும், பெரும் செல்வந்தராகவும் இருந்தார். பஞ்ச காலத்தில் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை வியாபாரியாக இருந்ததற்கும், வரி ஏய்ப்பிற்கும் ஷேக்ஸ்பியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் ஆவணம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஷேக்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு இறந்த பொழுது, அவருக்கு ‘ஸ்டாஃபோர்ட் புனித தேவாலயத்தில்’ (Stratford’s Holy Trinity Church) எழுப்பப்பட்ட நினைவுச் சிலையும் கையில் ஒரு தானிய மூட்டையை ஏந்தி நின்ற ஷேக்ஸ்பியரைத்தான் சித்தரிப்பதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் அவரது இலக்கிய மேன்மையை மட்டும் புகழ் பாடும் வண்ணம், கையில் இறகுப்பேனாவை வைத்திருக்கும் இலக்கியவாதி தோற்ற சிற்பம் 18 ஆம் நூற்றாண்டில் அமைக்கப் பட்டது. இந்த மாற்றத்திற்குக் காரணம் அவரைப்பற்றிய மதிக்கத் தகுந்த வாழ்க்கையை மட்டும் மக்கள் அறியும் வண்ணம் செய்ய ஏற்பட்ட முயற்சி என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதுவரை ஷேக்ஸ்பியர் வாழ்ந்த மாளிகையையும், அவர் மறைந்த இடத்தையும் கண்டு வரும் சுற்றுலாப் பயணிகள் முன்னிருந்த நிலையை அறிந்திருப்பதில்லை.

இவ்வாறு வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்ட; மனிதாபமற்ற வியாபாரியாக, ஒரு சமூக விரோதியாக வாழ்ந்த ஷேக்ஸ்பியரின் வாழ்வைப்பற்றிய ஆராய்ச்சி அறிக்கை 2013 ஆம் ஆண்டு மே மாதம் வேல் சில் நடைபெற்ற ‘ஹே இலக்கிய விழாவில்' (Hay literary festival in Wales in May) வெளியிடப் பட்டது.

ஷேக்ஸ்பியரின் ‘கொரியோலேநஸ்’ (Coriolanus) என்ற அரசியல்-துன்பியல் நாடகத்தில் விவரிக்கப் பட்டிருக்கும் காட்சிகளில் ஒன்று பண்டைய ரோமாபுரியின் பஞ்சகாலத்தில் ஏற்பட்ட புரட்சியை விளக்குவதாகும். ஆனால், இப்பொழுது அந்தக் காட்சிக்கு அடிப்படையாக விளங்கியது 1607 ஆம் ஆண்டு, ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தில் நிகழ்ந்த பஞ்சமும், அதனால் ஏற்பட்ட விவசாயிகளின் புரட்சியும்தான் என்று கருதப்படுகிறது. தனது சொந்த அனுபவத்தை அவர் விவரித்துள்ளதாகத் தெரிகிறது.

‘கூல வணிகர் ஷேக்ஸ்பியர்’ தனது ‘மேக்பெத்’ (Macbeth) நாடகத்தின் வாயிலாகவும், மற்றும் ‘மெர்சண்ட் ஆஃப் வெனிஸ்’ (The Merchant of Venice) நாடகத்தில் அவர் வடித்த, கொடுமைக்கார, பேராசை நிறைந்த, வட்டிக்குக் கடன் கொடுக்கும் ‘ஷைலாக்’ (Shylock) என்னும் பாத்திரத்தின் வழி அவர் தன்னை சித்தரிப்பதாகவும், அவரது குற்ற உணர்ச்சி இவ்வாறு வெளிப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக இலக்கியவாதிகள், ஏழைகளுக்கு இரங்கிய அவரது இரக்க குணத்தின் வெளிப்பாடே கொரியோலேநஸ், மேக்பெத் நாடகத்தின் மாந்தர்களை அவர் வடிவமைத்ததன் காரணம் எனக் கருதி வந்தனர்.


REFERENCES:
Study shows Shakespeare as ruthless businessman.
By JILL LAWLESS, Associated Press, Mar 31, 2013

Shakespeare was a tax-evading food hoarder, study claims
William Shakespeare evaded tax and illegally stockpiled food during times of shortage so he could sell it at high prices, academics have claimed.
By Sam Marsden, The Telegraph, 31 Mar 2013

Shakespeare called grain hoarder, tax dodger, money lender and ruthless businessman of Stratford-upon-Avon
‘Over a 15-year period he purchased and stored grain, malt and barley for resale at inflated prices to his neighbors and local tradesmen,’ write researchers from Aberystwyth University in Wales.
BY GINGER ADAMS OTIS, NEW YORK DAILY NEWS, APRIL 1, 2013

Study: Shakespeare Resorted To Tax Fraud, Grain Hoarding For Money And Livelihood.
By Heather Manes, Opposing Views, Sun, March 31, 2013

William Shakespeare: Study sheds light on Bard as food hoarder.
By BBC News, 1 April 2013

Was Shakespeare a tax dodger? Bard was ‘ruthless businessman who exploited famine and faced jail for cheating revenue.’
By DAILY MAIL REPORTER, 31 March 2013

William Shakespeare: Tax Cheat, Grain Hoarder.
Fox News, 31 Mar 2013

Tax Day Comfort—Shakespeare Was A Tax Cheat.
Robert W. Wood, Forbes, 4/06/2013

A tempest over Bard’s biz head
By Howard Gensler, Daily News wire services, April 02, 2013

William Shakespeare a tax-dodging, food hoarder?
The Economic Times, Mar 31, 2013.

Researchers Look Into Shakespeare’s Finances
NPR News, April 01, 2013





நன்றி:
திண்ணை, 
ஏப்ரல் 7, 2013

#வரலாறு, #திண்ணை, #Themozhi