Showing posts with label இலக்கிய நுட்பம். Show all posts
Showing posts with label இலக்கிய நுட்பம். Show all posts

Monday, January 8, 2024

உணக்குதல்

உணக்குதல்


கரிகால் சோழன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாராட்டும் வகையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்  பட்டினப்பாலை ஆகும். அந்நூலில்,

     அகல் நகர் வியல் முற்றத்து
     சுடர் நுதல் மட நோக்கின்
     நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
     கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை
            -   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை-20-24
என்று இடம் பெறும் வரிகளில்,  அகன்ற மனையின் பரந்த முற்றத்தில், ஒளிபொருந்திய நெற்றியையும், கபடமற்ற பார்வையையும், நேர்த்தியான அழகிய நகைகளையும்  அணிந்த பெண்கள், வெய்யிலில் உலருகின்ற உணவைத்  தின்னவரும் கோழியை விரட்டுவதற்காக, வளைவான அடிப் பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணிகளை வீசி எறிந்ததாகக் காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழுமை காட்டப் பட்டிருக்கிறது.  முற்றத்தில் காயவைக்கப்பட்ட, கோழி உண்ண விரும்பிய உணவு ஏதேனும் கூலமாக இருக்கலாம், பெரும்பாலும் நெல்லாகவும் இருக்கக் கூடும். ஆனால் அந்த உணவு  எது என்று குறிப்பிடப்படவில்லை.

     மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் - குறுந்தொகை-347/1
என்பது போன்று;   ஒரு பொருளின்  ஈரப்பதத்தை நீக்கும், புலரச் செய்யும், வற்றச் செய்யும் முறைக்கு இன்று நாம் பரவலாகப் பயன் கொள்ளும்  உலர்தல், உலர்கின்ற, உலரும் என்பன போன்ற சொற்கள் தொகை இலக்கியங்களில்  அதிகம் கையாளப்படவில்லை.  

வெய்யிலில் காய வைப்பதை, உலர்த்துவதை உணக்குதல் தொடர்பான சொற்களான; உணக்கல் (காயவைத்தல்), உணக்கிய (காயவைத்த), உணக்கும் (காயவைக்கும்), உணங்க (காயவைக்க), உணங்கும் (காயும்), உணங்கல் (காயவைக்கப்பட்ட ஒரு பொருள்) ஆகியன பயன் கொள்ளப்பட்டுள்ளது.

குறளில் இச்சொல் இடம் பெறுகையில்;
     தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
     வேண்டாது சாலப் படும்
          (அதிகாரம்:உழவு, குறள் எண்:1037)
என்ற குறளுக்கு, ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும் என்று  மு. வரதராசன் விளக்கம் தருகிறார்.

உணக்குதல் = வாட்டுதல், உலர்த்துதல்
உணங்கல் = உலர்தல், வற்றல், காய்தல், உலர்ந்த மலர், வாடல், உலர்ந்த தானியம், காய்ந்த தசை, உணவு
என்று பாலூர் கண்ணப்ப முதலியார் யாத்த தமிழ் இலக்கிய அகராதி (பக்கம் -61) பொருள் தருகிறது.  

உணக்கல் தொடர்பாகத் தொகை இலக்கியங்களில் இடம்பெறும் வரிகள் சிலவற்றை அடுத்துப் பார்க்கலாம்;

உணக்கல் (காயவைத்தல்)
     நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி - நற். 45/6
சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தல் வேண்டி.

உணக்கிய (காயவைத்த)
     மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற். 63/2
மிக்க மீன்களைக் காயப் போட்ட புதிய மணற் பரப்பில்.

உணக்கும் (காயவைக்கும்)
     அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு - நற். 4/4
அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று.

உணங்க (காயவைக்க)
     நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் - அகம். 300/2
நுண்ணிய மணலிடத்தே மீன்களைப் புலரும்படிப் பெய்வாராய்.

     மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க - புறம்.  174/25
மிக்க நீர் உள்ள எல்லைகளில் உள்ள பல குளங்கள் வற்றிப்போக.

உணங்கும் (காயும்)
     வலை உணங்கும் மணல் முன்றில் - பட்டினப்பாலை-83
வலைகிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில்,

உணங்கல் (தினை/மீன்/இறைச்சி ஆகியவற்றின் உணங்கல்)
     செந்தினை உணங்கல் தொகுக்கும் - நற். 344/11
சிவந்த தினை புலருமாறு போடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்.
     செந்தினை உணங்கல் - நற். 344/11
     பைந்தினை உணங்கல் - ஐங். 469/1
     சிறுதினை உணங்கல் - புறம். 319/5
     புலவு மீன் உணங்கல் - நற். 331/4
     கொழு மீன் உணங்கல் - அகம் 20/2
     பல் மீன் உணங்கல் - அகம் 80/6

     இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் - அகம். 107/5
பெரிய புலி உண்ட மிச்சம் வைத்துப் போன மானேற்றின் காய்ந்த தசை.

     வெண்ணெய் உணங்கல் போல - குறு. 58/5
காய்ந்து உருகும் வெண்ணெயைப் போல.

     சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு  - புறம். 321/3
முறத்தில் வைத்து உலர்த்தப்பட்ட காய்ச்சலைத் தக்க சமயம் பார்த்துக் கவர்ந்து.

வெய்யிலில் காய்கின்றவை, உலரவைக்கப்பட்டவை எனப் பலவற்றை இங்கே காணமுடிகிறது.  உணவுப் பொருட்கள் 'மட்டுமே' வெய்யிலில் காய்ந்ததாகப் பாடல்களின் வரிகளில்  குறிப்பிடப்படவில்லை.  கடல் சார்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் நெய்தல் திணைப்  பாடல்களில் கடல் மணலில் மீன்கள் மட்டும் காயவைக்கப்பட்டு கருவாடு செய்யப்படவில்லை; மீனவர்கள் மீன்பிடிக்கும் வலைகளையும் வெய்யிலில் உலர்த்துகிறார்கள்.  

உணவுப் பொருட்களில், மீன்கள் மட்டுமன்று; தினைகளும் காயவைக்கப்படுவதைக் காண முடிகிறது.  பாலை நிலத்தில் புலி உண்ட பிறகு மீதம் விட்டுச் சென்ற மான், வெய்யிலில் உலர்வதாக அகநானூற்றுப் பாடலில் காட்டப் படுகிறது.  புறப்பாடல் ஒன்று முறத்தில் காயவைக்கப்பட்ட ஏதோ ஒரு உணவுப் பொருளைக் குறிப்பிடுகிறது.

மற்றொரு புறப்பாடல், குளத்து நீர் வற்றிப் போவதை உணங்குவதாகக் குறிப்பிடுகிறது.  

வெய்யில் கொளுத்தும் நேரத்தில் சூடாகிப்போன பாறையின் மீதுள்ள வெண்ணெய்யைக் கை இல்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற நிலையில், வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியாது மன உளைச்சல் கொள்வது போல,  தன் காதலை வெளிப்படுத்த இயலாத கையறு நிலையைப் பாங்கனிடம்  கூறுகிறான் தலைவன் ஒருவன் என்று குறுந்தொகைப் பாடல் ஒன்று  கூறுகிறது.  இங்கு வெய்யிலில் காய்வது வெண்ணெய்.

ஆக, இன்றைய நாளில்  உலரவைக்கப்பட்ட உணவுப் பொருட்களான கருவாடு, உப்புக்கண்டம், வற்றல், வடவம் என எல்லாமே உணங்கல்தான்.

இவ்வாறாகத் தொகை இலக்கியங்களில் கூறப்படும் ‘உணக்கும்’ (உலரவைக்கும்) என்ற சொல் இன்றைய வழக்கிலும் உள்ளது. ஆனால் இவை  மறைவை நோக்கிச் செல்கின்றன  எனலாம். குளித்த ஈரக் கூந்தலைக் காயவைப்பதற்கு முடியை ‘உணர்த்து’ அல்லது  ‘உணத்து’ என்ற சொல், சென்ற நூற்றாண்டு வரை  வழக்கிலிருந்தது. இன்றோ, 'ஹேர் ரொம்ப வெட்டா இருக்கு; ட்ரை பண்ணு' என்று தமிழ் மாறிவிட்டது.  

உயிர் உணக்கும் என்பது உயிரை வாடச் செய்யும் என்ற பொருளிலும்
'அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி’ (புறம் 25/6),
’முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!' (புறம் 219/2)  
என்று புறப்பாடல்களில் இடம் பெறுகின்றன..

பல தூய தமிழ்ச் சொற்கள் இன்றைய நாளில் தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லையெனினும் கேரள மக்களின் மலையாள மொழியில் பயன்பாட்டில் உள்ளன என்பதை நாமறிவோம். 'உணக்குதல்' 'உணக்க வேண்டும்', 'உணங்கவில்லை' என்று சொல்வது மலையாளத்தில் இன்றும் வழக்கம் என்பது  தெரிகிறது.

நாட்டுப்புறப் பாடலாக “முதல் மரியாதை” (1985) படத்தின் திரையிசையில் இடம்பெற்ற வைரமுத்துவின்,  
     அடி மாங்குளத்துக் கர மேல... ஏ...
     மயிருணத்தும் சின்னவளே...  மயிருணத்தும் சின்னவளே...
     பாறையில நானிருந்து...
     பாடும் குரல் கேக்கலையா...  பாடும் குரல் கேக்கலையா...
     பாட்டுச் சத்தம் கேக்கலையா... பாட்டுச் சத்தம் கேக்கலையா...
என்ற பாடல் வரிகளில் (https://youtu.be/M8CzmWnC9uA?si=iWteaaQbUjWlzcmR&t=69) காதலியைக் காண விரும்பிய காதலனின் பாடல் மயிர் உணத்தும் சின்னவளைத் தேடி ஏங்குகிறது.


இக்கட்டுரை எழுதுவதற்கு உதவிய இன்றியமையாத தளம்
முனைவர்.ப.பாண்டியராஜா உருவாக்கிய
தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம்
http://tamilconcordance.in/index.html



நன்றி:
தமிழணங்கு 
ஜனவரி, 2024


#இலக்கிய நுட்பம், #இலக்கியம், #தமிழணங்கு, #Themozhi  




Monday, November 6, 2023

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்

 
தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் பொலிவிழந்த நிலை தோழியை வருத்துகிறது. தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். அப்பொழுது தலைவி  தோழியிடம் தங்களுக்கென நிலையான ஓர் இருப்பிடம்  இன்றி ஊர் ஊராகச் சென்று கூத்து நடத்துபவர்கள் மூதூர் ஒன்றில் கூத்து நிகழ்த்திவிட்டு வேறு ஊருக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் இருந்தபொழுது ஆரவாரமாக இருந்த மன்றம் பொலிவிழந்த நிலையில் இருப்பதைப் பார்க்கும் ஊர் மக்கள் வருந்துவார்கள்.  அது போன்று  தலைவன் இருந்த பொழுது மகிழ்ச்சியுடன் பொலிவுடன் இருந்த என் வாழ்க்கை அவன் பிரிவுக்குப் பின் வறண்டு போயுள்ளது, அதைக் காணச் சகியாது நீ  வருந்துகிறாய் என்று கூறுவதாக அதியன் விண்ணத்தனார் எழுதிய ஒரு அகநானூற்றுப் பாடலில் கூறுவார். இப்பாடல் கூத்தர்களின் கவலையற்ற  மகிழ்ச்சியான வாழ்க்கைமுறையை விரிவாகக் கூறும் பாடலாக அமைந்திருக்கும். இப்பாடலில் கூத்தர்கள் தங்கள் வண்டியில் செல்லும் நிலை விவரிக்கப்பட்டிருக்கும்.

      நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
      'ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து',
      ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
          [அகநானூறு 301, அதியன் விண்ணத்தனார், வரிகள் 6-8]
இந்த வரிகள் கூறுவது; நீரில் வாழும் முதலை அகல வாய்திறந்து கொட்டாவி விட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு அந்த வண்டியின் அமைப்பு இருக்கும். பனையோலைப் பாய் கூரையாக வேயப்பட்டிருக்கும் அந்தக் கூண்டு வண்டியின் சக்கரங்கள் தரையை அறைத்து ஒலியெழுப்பிச் செல்லும்.  இவ்வாறாகத் தங்கள் ஊர் இது என்ற கூற வழியின்றி தடையற்ற வாழ்வைக் கொண்டவர்கள் கூத்தர்கள் என்று விவரிக்கப்பட்டிருக்கும்.  


நீரில் வாழும் முதலை அகல வாய்திறந்து கொட்டாவி விடும் அமைப்பில் வண்டியா? என்று வியப்பாக இன்று இருக்கலாம்.  ஆனால் அத்தகைய வண்டிகள் சங்க காலம் முதல் 19 நூற்றாண்டு வரையிலும், ஏன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கூட மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. புகைப்படத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புகைப்படங்களில்  இத்தகைய வண்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆவணப்படுத்தப்  பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தேயிலைத் தோட்டப் பகுதியில் எடுக்கப்பட்ட பல படங்களில் இந்த வகை வண்டிகள் பதிவாகியுள்ளன.  


அகநானூறு  காட்டும் கூத்தர் வண்டி போன்றே கடியலூர் உருத்திரங் கண்ணனார்  எழுதிய பெரும்பாணாற்றுப்படை பாடல்  ஒன்று உமணர்(உப்பு விற்பவர்)  வண்டி ஒன்றை விவரிக்கும்.  அவ்வண்டியும் "ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்" என்றே கூறப்பட்டிருக்கும்.   பாதை வழியே ஊடறுத்துச் செல்லும் இந்த ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்தை ஓட்டுபவள் மடியில் குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண், அவள் மாட்டை அடித்து விரட்டி ஓட்டுகிறாள்.

      மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
      'ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்'
      வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
      கோழி சேக்கும் கூடுடைப் புதவின்
          [பெரும்பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, வரிகள் 49-52]

இந்த வரிகள் கூறுவது; மழைக்காலத்தில் தனது முகட்டில்  மேகத்தைச் சுமந்து  நின்ற மலையைப்  போல,   பனையோலைப் பாய் கூரையாக வேயப்பட்டிருக்கும் அந்தக் கூண்டு வண்டியின் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் கோழிக்கூட்டைக் கொண்ட அந்த உமர் கூண்டு வண்டியின் சக்கரங்கள் தரையை அறைத்து ஒலியெழுப்பிச் செல்லும்.  கானவர்கள் பயிரிட்டுள்ள தினையை அழிக்க வரும் யானைகளிடம் இருந்து காப்பதற்காக அவர்கள் புனங்களின்  இடையில் அமைத்திருக்கும் நிழல் தரும் குடில் கொண்ட  பரணைப் போலக்  காட்சி அளிக்கிறதாம் வண்டிக் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கோழிக்கூடு. (பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை: புலவர் கா. கோவிந்தன். 1996, பக்கம் -50)


இன்றைய நாளில் ஊர்திகளின் மேல் நாம் சரக்கு ஏற்றிச் செல்வது போல (Carrier/Roof rack) அக்காலத்தின் கூண்டு வண்டியின் கூண்டின் மேலும் சரக்கு ஏற்றிச் சென்றுள்ளது இதனால் தெரிகிறது.  

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் என்பது பனையோலைப் பாய் வேய்ந்த,  செல்லும் வழியை ஒலியுடன் அறுக்கும் கூண்டு வண்டி என்பதையும், அந்தக் கூண்டின் அமைப்பு வாய்திறந்து கொட்டாவி விடும் முதலையின் வாய் போன்ற அமைப்பில் இருக்கும் என்பதையும், அதன்மேல் சரக்கு வைக்கும் கூடு மலையின் மேல் மழைமேகம் தங்கி  இருப்பது போல இருக்கும் என்றும் தொகை இலக்கியப் பாடல் வரிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  அந்த அமைப்பில் உள்ள மாட்டு வண்டிகள் சென்ற நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தும் உள்ளன என்பதை ஒளிப்படங்கள் மூலம் அறியவும் முடிகிறது.  



நன்றி: தமிழணங்கு 
நவம்பர்,  2023



#இலக்கிய நுட்பம், #இலக்கியம், #தமிழணங்கு, #Themozhi  




Saturday, November 5, 2022

ஆய்ச்சியர் குரவை

ஆய்ச்சியர் குரவை


பொருளிழந்து, பெருமையிழந்து,  புகார் துறந்து, மறுவாழ்வு  தேடி மதுரையை நோக்கிச் செல்கிறார்கள் கோவலனும் கண்ணகியும்.  அவர்களுக்கு வழித்துணையாகச் செல்கிறார் சமணக் குரத்தி கவுந்தி அடிகள்.  மதுரை புறநகர்ப் பகுதியில் வாழும் இடையர் குலப் பெண்ணாகிய மாதரியிடம், கோவலனும் கண்ணகியும் தக்க இடம் கிடைத்து வாழ்வைத் தொடங்கும் வரை அவர்களைப் பாதுகாக்குமாறு  அடைக்கலமாகக் கொடுத்துச் செல்கிறார் கவுந்தி அடிகள்.  

அங்குக்  கண்ணகி  சமைத்துப்  பரிமாறிய உணவை உண்ட பிறகு, கண்ணகியின்  காற்சிலம்புகளில் ஒன்றைக் கடைவீதியில் விற்றுப் பொருளீட்ட மதுரை நகருக்குள் செல்கிறான் கோவலன்.  ஆனால், அச் சிலம்பு பாண்டிய அரசியின் களவு போன சிலம்பு என்று பொய்ப் பழி சுமத்தப்படுவதை  எதிர்கொள்கிறான்.  வழக்கை ஆராய்ந்து பாராத பாண்டிய மன்னன், கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனைக் கொன்று அரசியின் சிலம்பை மீட்டு வருமாறு காவலர்களுக்கு ஆணையிடுகிறான். காவலர்களால் கொலைத் தண்டனைக்கு உள்ளாகி உயிரிழக்கிறான் கோவலன்.  

மறுநாள் அதிகாலையில் பாண்டிய அரசனின் அரண்மனையில் காலை மணி ஒலிக்கிறது.  ஆயர்கள் வாழும் புறநகரில் இடைக்குலத்து முதியவளாகிய மாதரி அன்று கோயிலுக்கு  நெய்யளக்கும் முறை தன்னுடையது என்று நினைவு வந்தவளாகத்  தன் மகள் ஐயையை அழைத்துக் கொண்டு, கையில் மத்துடன் வெண்ணெய்  கடைவதற்காகத்  தயிர் வைக்கும் தாழியிடம் செல்கிறாள். பானையில் பால் உறைந்து தயிராக மாறியிருக்கவில்லை. முன்னர் உறியில் சேமித்த வெண்ணெய்யை எடுத்து உருக்குகிறாள்,  அதுவும் நெய்யாக உருகவில்லை.  கொட்டிலில் எருது கண்ணீர் வடிக்கிறது, பசு அஞ்சுவது போல நடுங்குகிறது. அதன் கழுத்தணி  தரையில் அறுந்து கிடக்கிறது.  துள்ளியாடும் ஆடும் துடிப்பின்றிச் சோர்வாகப் படுத்திருக்கிறது. இவற்றை அடுத்தடுத்துக் காணும்  மாதரி,  இவை யாவற்றையும்  தீய நிமித்தங்களாக உணர்கிறாள். தொழுவில் நிற்கும் ஆனிரைகளுக்கு எந்தத் துன்பமும் நேராமல் இருக்க மாயவனான மாலையும் அவனுக்கு மூத்தவனாகிய பலராமனையும் வாழ்த்தி குரவையாட்டம் நிகழ்த்த முடிவெடுக்கிறாள். 

தொழுவத்தில் நிற்கும் ஏழு காளைகளை ஏழு ஆயர்குல மகளிர் வளர்த்து வருகிறார்கள். அக் காளைகளை அடக்குபவரையே மணமுடிக்க வேண்டும் என்பது அவர்களது அவா. அந்த ஏழு பெண்களையும் அழைத்து அவர்களுக்குக் குரவைக்காகப் 'படைத்துக் கோள்' பெயர் இடுகிறாள் மாதரி.  நிகழ்த்துக் கலைகளான நாட்டியம் நாடகம் போன்றவற்றில் கூறப்படும் கதையில் இடம் பெறும் பாத்திரங்களுக்கான பெயரை நடித்துக் காட்டுபவருக்குச் சூட்டுவது வழமை.  அதாவது நடிப்பவருக்கு ஒரு  புனைபெயர் இட்டுச் சொல்வது வழக்கம் (எ. காட்டு: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், கார்த்தியின் படைத்துக் கோள் பெயர் வந்தியத்தேவன்).

ஆடுவோர் ஏழு பேரோ அல்லது ஒன்பது பேரோ  கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆடும் நடன வகை குரவை எனப்படும்.  வரிசையில் நிற்போரில் இடமிருந்து வலமாக முறையே;  குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று இசைக்குரிய ஏழு சுரங்களின்  பெயர்களைக் கைகோர்த்து ஆடவிருக்கும் ஆய்ச்சியர் எழுவருக்குப் பெயர்களாக மாதரி சூட்டுகிறாள்.  

இக்காலத்தில் இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) எனக் கூறப்படும் ச, ரி, க, ம, ப, த, நி (அதாவது; சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்பெறுபவை),  அக்காலத்தில் தமிழில்  'குரல்', 'துத்தம்', 'கைக்கிளை', 'உழை', 'இளி', 'விளரி', 'தாரம்' என்னும் ஏழு பெயர்களாலும்  அறியப்பட்டன. இந்த சுரங்களின் பலவேறு வகைக்  கோர்வைகளின் அடிப்படையில் இசையின் பண் (அல்லது  இராகம்) உருவாகிறது.  
 


அவர்கள் சம நிலையாக வட்டவடிவில் நின்று, நண்டுகள் போல அடுத்து நிற்பவரின்  கைகளுடன் தங்கள் கைகளைப் பிணைத்துக் கொண்டு,  கண்ணனின் புகழை வாழ்த்திப் பாடி குரவை ஆட ஆயத்தம் ஆனார்கள். இந்தக் காட்சியைக் கூறும் சிலப்பதிகார வரிகள் இவை: 

          இடை முதுமகள் இவர்க்குப்          (52) 
          படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
          குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
          கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
          விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.

          மாயவன் என்றாள் குரலை; விறல் வெள்ளை 
          ஆயவன் என்றாள் இளி தன்னை; ஆய் மகள்
          பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை; மற்றையார்
          முன்னை ஆம் என்றாள் முறை.          (60)
          மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும்;
          வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும்;
          கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்
          முத்தைக்கு நல் விளரி தான்
          அவருள்,
          வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
          தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர்
          வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப்
          பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
          ‘ஐ!’ என்றாள், ஆயர் மகள்                    (70)

          அவர்-தாம்
          செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
          அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் (73)

                    [சிலப்பதிகாரம்:  மதுரைக் காண்டம், 7. ஆய்ச்சியர் குரவை, வரிகள் 52-73] 

பாடல் கூறுவதன்படி குரவையாடுபவர் வரிசை, 
குரல் = மாயவன்
துத்தம் = நப்பின்னை/பிஞ்ஞை
கைக்கிளை = ஆயமகள் ஒருத்தி
உழை = ஆயமகள் ஒருத்தி 
இளி = பலராமன்
விளரி = ஆயமகள் ஒருத்தி 
தாரம் = ஆயமகள் ஒருத்தி
மாயவன்  சீர் வரிசையில் (அணியில்) பின்னையும் தாரமும் நின்றனர். 
பலராமன் சீர் வரிசையில் உழையும், விளரியும் நின்றனர். 
பிஞ்ஞையின் இடப்பக்கம் கைக்கிளை நிற்கிறாள் 
முத்தைக்கு  வலப்புறம் விளரி நிற்கிறாள் 
இவ்வாறாகப்  பாடல் தரும்  குறிப்புகள் குரவை ஆடுபவர்  நிற்கும் வரிசையைக் காட்டும். 
இதைக் கொடுக்கப்பட்டுள்ள படம் காட்சிப்படுத்துகிறது.  


இளங்கோவடிகள் இப் பாடல் வரிகளில் பல இசை நுட்பங்களைப் பொதிந்து  வைத்துள்ளார் எனலாம்.

இசையில் கருவிகளுக்கு முதல் முதல் சுருதி சேர்க்கும்பொழுது  ச-ப-ச என்ற மூன்று சுரங்களுக்குப் பொருந்தச் சேர்த்துக் கொள்வார்கள். ச-ப-ச என்ற சுரங்கள் சட்சம-பஞ்சம முறைப்படி (ஓசை அளவீட்டில் 1, 1½, 2) அமையும்.  கீழ் 'ச' வின் இருமடங்கு ஓசையுடையது மேல் 'ச' வாக இருப்பதனாலும் இடைப்பட்ட நிலையில் பஞ்சமம் சேரும்பொழுது கேட்பதற்கு இசை ஒத்து இனிமை நிறைந்து நிற்கும். சட்சம-பஞ்சம முறைப்படி இசை கூட்டப்படுவதின்  காரணம் சட்சமம் -பஞ்சமம்  இரண்டும் ஒலி வேறுபாடற்றவை, ஒரே முறையில்தான் ஒலிக்கப்படும்.  ஆனால் ஏனைய  ஐந்தும்  (ரி, க, ம, த, நி) ஒலிப்பில் வேறுபாடுகள் கொண்டவை, அவற்றுக்குத் தனிப்பெயர்களும் உண்டு, குறியீடுகளும் உள்ளன.  ('ரி' இல் 3,  'க' இல் 3,  'ம' இல் 2,  'த' இல் 3, மற்றும்  'நி' இல் 3  வேறுபாடுகள் உள்ளன).  

 

இதைத் தமிழ்ப் பெயர்களில் குறிப்பிடுவோமென்றால், குரல் (ச)  மற்றும் இளி (ப)  ஆகிய இரண்டும்  ஒலி வேறுபாடற்றவை. இவை முறையே மாயவனுக்கும், பலராமனுக்கும் எனக் குறிப்பிடுகிறாள் மாதரி.  இத் தேர்வு மாயவன் பலராமன் ஆகிய இருவரின் சிறப்பை, தனித்தன்மையைக்   காட்டுவதற்காக எனக் கொள்ளலாம்.   குரல், இளி ஆகிய இருவர் மட்டுமே ஆண் உருவாகப்  பாவித்து ஆடுகிறார்கள்.  மற்ற ஐவரும் பெண் உருவாகவே குரவை ஆடுகிறார்கள்.  

ச, ரி, க, ம, ப, த, நி என்ற சுரங்கள் வரிசையில் எட்டாவதாக மீண்டும் 'ச' வருகையில் (ச, ரி, க, ம, ப, த, நி, ச)   'ச' விற்கு முன்னதாக 'நி' இடம் பெறும்.  
அதாவது, 'குரல்' மறுபடி வரும்பொழுது அதற்கு  முன்னர் 'தாரம்' வரும்.  இங்குக் குரவை ஆடுபவர்கள் வட்டவடிவில் நிற்கும் பொழுது குரலுக்கு முந்தையதாக  (முன்னதாக)  தாரம் நிற்கிறாள்.  முந்தை முத்தை எனப் பாடலில் விகாரம் அடைந்தது. இதை வலித்தல் விகாரம் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

          மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
          வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
என்று இணை சேர்த்துவிட்டு, கைக்கிளையை (இணையின்றி /ஒருதலைக் காதல்) தனித்து விட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.  

மாயவன் கழுத்தில் நப்பின்னை துளசி மாலையைச் சூட்டி அவனோடு இணைந்து ஆட, வட்டவடிவில் கைகோர்த்து  மற்றவரும் அவன் புகழ் பாடி குரவை ஆட்டத்தைத்  தொடங்கினர்.

பார்வை நூல்கள்: 
சிலப்பதிகாரம், நூலாசிரியர் இளங்கோவடிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
சிலம்பின் கதை, நூலாசிரியர் பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்

படம் உதவி:
நடனக் காட்சி படவுதவி:  தமிழ் மரபு அறக்கட்டளை; தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும்  ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியக ஏற்பாட்டில் நடக்கும்  "அகம் புறம்"  தமிழ்க் கண்காட்சியின்  தொடக்கவிழாவின் கலைநிகழ்ச்சி.



நன்றி: தமிழணங்கு, நவம்பர்-2022


#இலக்கிய நுட்பம், #சிலப்பதிகாரம், #தமிழணங்கு, #Themozhi 




 

Saturday, July 18, 2020

மீக்கூறல்

மீக்கூறல்


“மீக்கூறல்” என்றால் புகழ்ந்து கூறுதல் என்பது அதன் பொருள். சங்க இலக்கியங்களில் காணப்பெறும் இச்சொல் இந்நாட்களில் வழக்கில் இருப்பதாக அறிய முடியவில்லை. மீக்கூறல் என்றால் அகராதி என்ன பொருள் தருகிறது என்று பார்ப்போமெனில் ஒருவரைப் பற்றி உயர்வாகக் கூறுதல் என்று, அதாவது பாராட்டுதல், அல்லது அவர் பெருமையை வியந்து கூறல் என்ற பொருள் இருப்பதை அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றிலும் திருக்குறளிலும் இடம் பெறும் இச்சொல்லை இடத்திற்கு ஏற்ப என்ன பொருளில் கூறப்படுகிறது என்ற மீள்பார்வை செய்வதன் மூலமாக, இச்சொல் [1] ஒருவர் அடைந்துள்ள உயர்நிலையை உள்ளவாறே உயர்த்திப் பேசல் என்ற பொருளில் வருகிறதா, அல்லது [2] தகுதி இல்லாதவரை மிகைப்படுத்திப் போற்றும் பொருளில் வருகிறதா என ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

“மீ” என்ற ஓரெழுத்து ஒருமொழி ஓர் உயர்நிலையைக் குறிப்பது. ஆகவே, மீ + கூறுதல் = உயர்வாகக் கூறுதல், புகழப்படுதல், போற்றுதல். மீக்கூறு (புகழ்), மீக்கூறல் (புகழ்தல்), மீக்கூற்றம் (புகழ்ச் சொல்), மீக்கூற்று (புகழ்), மீக்கூறுவோர் (புகழ்வோர்), மீக்கூறும் (புகழும், புகழப்படும்), மீக்கூறுதல் (உயர்வாகக் கூறுதல்) என்ற பொருளில் அமைகின்றது. ஆக, அகராதி தரும் விளக்கப்படி,

“மீக்கூறல்” என்ற சொல்லிற்குக் கொண்டாடல், புகழ்தல், வியத்தல் ஆகிய பொருளையும்,

“மீக்கூறு” என்பதற்குப் புகழ், புகழ்ச்சி, மீக்கூற்றம் ஆகிய பொருள்களையும் (கழகத் தமிழ் அகராதி- ப.765) கொள்ளலாம்.

வள்ளுவர் தமது இறைமாட்சி அதிகாரத்தில், குடிமக்கள் அணுகுவதற்கு எளியவராகவும் இன்சொல் கூறுபவராகவும் உள்ள மன்னரின் ஆட்சியை மக்கள் புகழ்ந்து கூறுவார்கள் என்று கூறுகிறார்.

     காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
     மீக்கூறும் மன்னன் நிலம்
(வள்ளுவர் அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:386)

இங்கு, புகழப்படும் சிறப்பைப் பெறுவார் மன்னவர் என்று உயர்வாகப் பேசப்படும் ஒரு நிலையை மீக்கூறும் என்ற சொல் குறிப்பது தெளிவாகிறது. இது உண்மையாக அப்பண்பு பெற்றிருக்கும் ஒருவர் மக்களிடம் பெறும் பாராட்டு. அது உள்நோக்கத்துடன் தகுதி அற்ற ஒருவர் குறித்துக் கூறும் பொய்யுரை அன்று.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் குறித்த செப்பேட்டுக் குறிப்புகளும் தொல்லியல் தடயங்களாக நமக்குக் கிடைக்கிறது. அவைமட்டுமன்றி, சங்கப் பாடல்களில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பாடல்களுக்கும் பாட்டுடைத்தலைவனாக (மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை) இலக்கியங்கள் வழியும் இவனை நாம் அறிகிறோம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த வீரனும் அரசனும் மட்டுமல்ல ஒரு சிறந்த புலவனும் கூட என்று காட்டும் புறப்பாடல் ஒன்று உண்டு (புறநானூறு – பாடல்: 72. இனியோனின் வஞ்சினம்!).

இந்த நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வழி வந்தவன். இவன் மிகச் சிறுவயதிலேயே அரச பொறுப்பை ஏற்கும் சூழல் உருவாகிறது. வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பகைவர் கூட்டம் அவன் நாட்டைக் கைப்பற்றப் படை எடுக்கிறது. ஓரிருவர் அல்ல. பெருவேந்தர்களான சோழர், சேரர், பல குறுநில மன்னர்கள் உட்பட எழுவர் புதிதாய் முடிசூட்டப்பட்ட இளைஞன் மீது கூட்டமாகப் போர் தொடுக்கிறார்கள். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். அப்பொழுது அவன் அவர்களை வெல்வேன், இல்லாவிட்டால் என் மக்கள் என்னைக் கொடுங்கோலன் எனத் தூற்றட்டும் என்று வஞ்சினம் கூறுகிறான். நாடு மீக் கூறுநர் நகுதக் கனரே. அதாவது, நெடுஞ்செழியனின் இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் நகைப்பிற்குரியவர்கள், இவன் இளையவன் என்று எனது மனம் வருந்துமாறு இழிவாகப் பேசும் இப்பகைவர்களை வெல்வேன், அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன் என்கிறான்.

     “நகுதக் கனரே, நாடு 'மீக் கூறுநர்';
     இளையன் இவன் என உளையக் கூறி”
(தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், புறநானூறு – பாடல்: 72. இனியோனின் வஞ்சினம்!)

தலையாலங்கானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் போரில் வெற்றி வாகை சூடியதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றும் சிறப்பிக்கப்பட்டான். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுடன் போரில் ஈடுபட்ட சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை தோல்வியடைந்து பாண்டியனால் சிறை செய்யப்பட்டான். இவை இரண்டும் ஒரே போரா அல்லது வெவ்வேறு போர்களா என்பது தெரியவில்லை. பின்னர் துணிவுடன் அந்தச் சிறைக்காவலை வென்று, தப்பித்து தனது நாட்டிற்குச் சென்று மீண்டும் மக்கள் புகழ ஆட்சி செய்தான். இந்த நிகழ்வும் மற்ற ஒரு புறப்பாடலில் (புறநானூறு – பாடல்: 17. யானையும் வேந்தனும்!) குறுங்கோழியூர் கிழார் என்ற புலவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேரன் தப்பிச் சென்றதைக் குழியில் விழுந்த யானை தனது முயற்சியால் தப்பி தனது இனத்தைச் சேர்வதுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார் புலவர். அப்பாடலிலும் ‘மீக்கூறல்’ என்ற சொல் வருவதைக் காண முடிகிறது.

     நீடுகுழி அகப்பட்ட
     பீடுஉடைய எறுழ்முன்பின்
     கோடுமுற்றிய கொல்களிறு
     நிலைகலங்கக் குழிகொன்று
     கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
     நீபட்ட அருமுன்பின்
     பெருந்தளர்ச்சி பலர்உவப்பப்
     பிறிதுசென்று மலர்தாயத்துப்
     பலர்நாப்பண் 'மீக்கூறலின்'
     உண்டாகிய உயர்மண்ணும்
(குறுங்கோழியூர் கிழார், புறநானூறு – பாடல்: 17. யானையும் வேந்தனும்!)

பெரிய குழி இருப்பதை அறியாது அதில் விழுந்த யானை, தனது வலிமையான தந்தத்தால் அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல, உனது வலிமையாலும் துணிவாலும் பகைவரின் சிறையிலிருந்து தப்பி வந்த நிகழ்வு உன் சுற்றத்தாரால் புகழ்ந்து கூறப்படுகிறது என்பதை ‘தாயத்துப் பலர்நாப்பண் மீக்கூறலின்’ என்று கூறிப் பாராட்டுகிறார் புலவர்.

புலவர் மார்க்கண்டேயனார் எழுதிய புறநானூற்றுப் பாடலில் (புறநானூறு – பாடல்: 365. நிலமகள் அழுத காஞ்சி!) இவ்வுலகில் போற்றத்தக்க அருஞ்செயல்கள் பல செய்து புகழ் ஈட்டி வாழ்ந்த மன்னர்கள் பலரும் மறைந்துவிடத் தான் மட்டும் இன்னமும் இறவாமல் இருக்கின்றோமே என்று நிலமகள் வருந்துவதாகக் கருத்து புனையப்படும் பாடலில்,

     பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
     முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
     விலைநலப் பெண்டிரிற் பலர்'மீக் கூற'
     உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்
     நிலமகள் அழுத காஞ்சியும்
     உண்டென
(மார்க்கண்டேயனார்; புறநானூறு – பாடல்: 365. நிலமகள் அழுத காஞ்சி!)
இங்கு மீக்கூறல் புகழ் என்ற பொருளில் காட்டப்படுகிறது.

அடுத்துக் காட்டப்படும் இரு பாடல்களும் அவ்வாறே இறந்த மன்னரின் புகழ் குறித்து புலவர்கள் இருவர் வருந்திப் பாடும் புறநானூற்றுப் பாடல்களே. முதலில், தனது மக்களுடன் மனவேற்றுமை கொண்டு அவர்களுடன் போர்தொடுக்க முற்பட்டு, பின்னர் அதைக் கைவிட்டு வடக்கிருந்து உயிர்துறந்த கோப்பெருஞ்சோழன் பற்றிய பாடல் ஒன்று.

கோப்பெருஞ்சோழனின் மறைவு குறித்து வருந்தும் புலவர் பொத்தியார் எழுதிய பாடலில் (புறநானூறு – பாடல்: 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!).

     பலர்க்கு நிழலாகி, உலகம் 'மீக் கூறி'த்
     தலைப்போகு அன்மையிற் சிறுவழி மடங்கி
     நிலைபெறு நடுகல் ஆகிய …
(புலவர் பொத்தியார், புறநானூறு – பாடல்: 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!)

பலருக்கு நல்வாழ்வு தந்து ஆதரித்து, உலகத்தார் உனது செயலைப் போற்றிப் புகழுமாறு நீ செய்து வந்த மக்கள் பணியை முற்றிலும் செய்து முடிக்க வழியின்றி வடக்கிருந்து உயிர் துறந்து இவ்வாறு சிறிய இடத்தில் ஒரு நடுகல்லாக உனது வாழ்வை முடித்துக் கொண்டாயே மன்னா, என்று கையறு நிலையில் புலவர் பொத்தியார் புலம்புகிறார். மன்னரின் சிறப்பை மக்கள் போற்றுவதை மீக்கூறல் என்கிறார் புலவர்.

இவ்வாறு புலவர் பொத்தியார் போன்றே மற்றொரு புலவரான பேரெயில் முறுவலார் என்பவர் மற்றொரு புறநானூற்றுப்பாடலில் (புறநானூறு – பாடல்: 239. இடுக சுடுக எதுவும் செய்க!) நம்பி நெடுஞ்செழியன் என்ற பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னர் ஒருவர் மறைந்த பிறகு பாடும் கையறு நிலைப் பாடலில், அவரும் மன்னரின் புகழைக் குறிப்பிடுகையில் மீக்கூறல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

     செற்றோரை வழிதபுத்தனன்;
     நட்டோரை உயர்புகூறினன்;
     வலியரென வழிமொழியலன்;
     மெலியரென 'மீக்கூறலன்';
     பிறரைத்தான் இரப்பறியலன்;
     இரந்தோர்க்கு மறுப்பறியலன்;
     வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
(புலவர் பேரெயில் முறுவலார்; புறநானூறு – பாடல்: 239. இடுக சுடுக எதுவும் செய்க!)

பகைவரை அவர்களின் சுற்றம் முதற்கொண்டு கிளையோடு வேரறுத்தவன், ஆனால் நண்பர்களைப் புகழ்ந்து போற்றியவன். வலிமையானவர் ஒருவர் என்று அவரிடம் பணிந்து பேசமாட்டான், ஆனால் தன்னைவிட வலிமை குறைந்த ஒருவரிடம் தனது புகழைக் கூறிக் கொண்டிருக்கவும் மாட்டான், தனக்கென்று எதையும் யாரிடம் இரந்து கேட்க மாட்டான், ஆனால் அவனிடம் இரப்போருக்கு அளிக்காமல் இருக்கவும் மாட்டான். வேந்தர்கள் கூட்டத்தில் தனது புகழை நிலைநாட்டியவன் அவன் என்று நம்பி நெடுஞ்செழியனைப் புகழ்ந்து கூடுகிறார். இத்தகைய மேன்மையான ஒருவன் மறைந்துவிட்டான் அவனைப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ எதைச் செய்தால்தான் என்ன என்று மனம் வெதும்புகிறார். இதில் மன்னன் தற்பெருமை பேசமாட்டான் என்பதைக் குறிப்பிட மீக்கூறல் செய்வது அவன் வழக்கமன்று என்று கூறுகிறார் புலவர்.

தற்புகழ்ச்சி உடையாரைப் புகழ்தல் கூடாது என்ற கருத்தை முன்வைக்க விரும்பும் முன்றுரையரையனார் எழுதிய பழமொழி நானூறு பாடல் ஒன்றும்,

     தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி
     வாயின்'மீக் கூறும்' அவர்களை ஏத்துதல்
     நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
     நாயைப் புலியாம் எனல்.
(முன்றுரையரையனார் எழுதிய பழமொழி நானூறு பாடல்)

திறமையுள்ளவர் என்று பெற்றெடுத்த தாய் தந்தையரால் நற்சான்று அளிக்கப்படும்படி நடக்காமல் தானே தன் செயல்களை வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை, மற்றவரும் அவ்வாறே போற்றுவதில் சிறப்பில்லை. அது அடுப்பருகே சோம்பி முடங்கிக் கிடக்கும் நாய் ஒன்றைப் புலி என்று புகழ்வதற்கு ஒப்பாக அமைந்துவிடும் என்று கூறுகிறது. இங்கு வாயின்மீக் கூறும் செய்யலான தற்புகழ்ச்சி விரும்பத்தக்கதல்ல, ஊக்குவிக்கக் கூடிய செயல் அல்ல எனச் சுட்டப்படுகிறது.

பெரியாழ்வார் எழுதிய “திருமாலிருஞ்சோலை எம்பெருமானை மீக்கூறல்” என்று பெருமாளைப் புகழும் காலத்தால் பிந்திய இலக்கியம் தவிர்த்து, பெரும்பாலும் மீக்கூறல் அரசன் குறித்த புகழ் என்பதுடன் மட்டும் பயனிலிருந்திருப்பதும் தெரிகிறது. பெருவீரச்செயல்காட்டிப் பகைவரோடு போர் செய்தலைக்கூறும் தும்பைத்திணைக்கு விளக்கம் கூறும் சபாபதி நாவலர் “தும்பைத்திணையாவது-ஒருவேந்தன் தன் வலியினை உலகம் மீக்கூறல் வேண்டி” மேற்செல்லும் ஒரு செயலாக விவரிக்கும் பொழுது மீக்கூறல் என்பதை அவரது திராவிடப் பிரகாசிகை (1976) நூலில் எடுத்தாள்கிறார். இலக்கிய வழக்கில் பெருமை மிக்க தக்கார் ஒருவரை ஏத்துதல், தகுதியுள்ளவரைப் போற்றுதல், பாராட்டாக உயர்த்திக்கூறல், உள்ளது உள்ளவாறாகவே உயர்வாகப் பேசுதல் என்ற பொருளில்தான் மீக்கூறல் இடம் பெறுதலைக் காண இயல்கிறது. மிகுத்துக்கூறல், மிகைப்படுத்துதல் அல்லது மிகைப்படப் பேசுதல் என்ற பொருள் கொள்ள வழியில்லை என்பதும் புரிகிறது.


நன்றி : சிறகு - ஜூலை  18, 2020

மின்தமிழ்மேடை— 22 [ஜூலை  - 2020]


#இலக்கிய நுட்பம், #இலக்கியம், #சிறகு, #Themozhi