உணக்குதல்
கரிகால் சோழன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாராட்டும் வகையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல் பட்டினப்பாலை ஆகும். அந்நூலில்,
அகல் நகர் வியல் முற்றத்து
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை
- கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை-20-24
என்று இடம் பெறும் வரிகளில், அகன்ற மனையின் பரந்த முற்றத்தில், ஒளிபொருந்திய நெற்றியையும், கபடமற்ற பார்வையையும், நேர்த்தியான அழகிய நகைகளையும் அணிந்த பெண்கள், வெய்யிலில் உலருகின்ற உணவைத் தின்னவரும் கோழியை விரட்டுவதற்காக, வளைவான அடிப் பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணிகளை வீசி எறிந்ததாகக் காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழுமை காட்டப் பட்டிருக்கிறது. முற்றத்தில் காயவைக்கப்பட்ட, கோழி உண்ண விரும்பிய உணவு ஏதேனும் கூலமாக இருக்கலாம், பெரும்பாலும் நெல்லாகவும் இருக்கக் கூடும். ஆனால் அந்த உணவு எது என்று குறிப்பிடப்படவில்லை.
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் - குறுந்தொகை-347/1
என்பது போன்று; ஒரு பொருளின் ஈரப்பதத்தை நீக்கும், புலரச் செய்யும், வற்றச் செய்யும் முறைக்கு இன்று நாம் பரவலாகப் பயன் கொள்ளும் உலர்தல், உலர்கின்ற, உலரும் என்பன போன்ற சொற்கள் தொகை இலக்கியங்களில் அதிகம் கையாளப்படவில்லை.
வெய்யிலில் காய வைப்பதை, உலர்த்துவதை உணக்குதல் தொடர்பான சொற்களான; உணக்கல் (காயவைத்தல்), உணக்கிய (காயவைத்த), உணக்கும் (காயவைக்கும்), உணங்க (காயவைக்க), உணங்கும் (காயும்), உணங்கல் (காயவைக்கப்பட்ட ஒரு பொருள்) ஆகியன பயன் கொள்ளப்பட்டுள்ளது.
குறளில் இச்சொல் இடம் பெறுகையில்;
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்
(அதிகாரம்:உழவு, குறள் எண்:1037)
என்ற குறளுக்கு, ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும் என்று மு. வரதராசன் விளக்கம் தருகிறார்.
உணக்குதல் = வாட்டுதல், உலர்த்துதல்
உணங்கல் = உலர்தல், வற்றல், காய்தல், உலர்ந்த மலர், வாடல், உலர்ந்த தானியம், காய்ந்த தசை, உணவு
என்று பாலூர் கண்ணப்ப முதலியார் யாத்த தமிழ் இலக்கிய அகராதி (பக்கம் -61) பொருள் தருகிறது.
உணக்கல் தொடர்பாகத் தொகை இலக்கியங்களில் இடம்பெறும் வரிகள் சிலவற்றை அடுத்துப் பார்க்கலாம்;
உணக்கல் (காயவைத்தல்)
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி - நற். 45/6
சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தல் வேண்டி.
உணக்கிய (காயவைத்த)
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற். 63/2
மிக்க மீன்களைக் காயப் போட்ட புதிய மணற் பரப்பில்.
உணக்கும் (காயவைக்கும்)
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு - நற். 4/4
அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று.
உணங்க (காயவைக்க)
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் - அகம். 300/2
நுண்ணிய மணலிடத்தே மீன்களைப் புலரும்படிப் பெய்வாராய்.
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க - புறம். 174/25
மிக்க நீர் உள்ள எல்லைகளில் உள்ள பல குளங்கள் வற்றிப்போக.
உணங்கும் (காயும்)
வலை உணங்கும் மணல் முன்றில் - பட்டினப்பாலை-83
வலைகிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில்,
உணங்கல் (தினை/மீன்/இறைச்சி ஆகியவற்றின் உணங்கல்)
செந்தினை உணங்கல் தொகுக்கும் - நற். 344/11
சிவந்த தினை புலருமாறு போடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்.
செந்தினை உணங்கல் - நற். 344/11
பைந்தினை உணங்கல் - ஐங். 469/1
சிறுதினை உணங்கல் - புறம். 319/5
புலவு மீன் உணங்கல் - நற். 331/4
கொழு மீன் உணங்கல் - அகம் 20/2
பல் மீன் உணங்கல் - அகம் 80/6
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் - அகம். 107/5
பெரிய புலி உண்ட மிச்சம் வைத்துப் போன மானேற்றின் காய்ந்த தசை.
வெண்ணெய் உணங்கல் போல - குறு. 58/5
காய்ந்து உருகும் வெண்ணெயைப் போல.
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு - புறம். 321/3
முறத்தில் வைத்து உலர்த்தப்பட்ட காய்ச்சலைத் தக்க சமயம் பார்த்துக் கவர்ந்து.
வெய்யிலில் காய்கின்றவை, உலரவைக்கப்பட்டவை எனப் பலவற்றை இங்கே காணமுடிகிறது. உணவுப் பொருட்கள் 'மட்டுமே' வெய்யிலில் காய்ந்ததாகப் பாடல்களின் வரிகளில் குறிப்பிடப்படவில்லை. கடல் சார்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் நெய்தல் திணைப் பாடல்களில் கடல் மணலில் மீன்கள் மட்டும் காயவைக்கப்பட்டு கருவாடு செய்யப்படவில்லை; மீனவர்கள் மீன்பிடிக்கும் வலைகளையும் வெய்யிலில் உலர்த்துகிறார்கள்.
உணவுப் பொருட்களில், மீன்கள் மட்டுமன்று; தினைகளும் காயவைக்கப்படுவதைக் காண முடிகிறது. பாலை நிலத்தில் புலி உண்ட பிறகு மீதம் விட்டுச் சென்ற மான், வெய்யிலில் உலர்வதாக அகநானூற்றுப் பாடலில் காட்டப் படுகிறது. புறப்பாடல் ஒன்று முறத்தில் காயவைக்கப்பட்ட ஏதோ ஒரு உணவுப் பொருளைக் குறிப்பிடுகிறது.
மற்றொரு புறப்பாடல், குளத்து நீர் வற்றிப் போவதை உணங்குவதாகக் குறிப்பிடுகிறது.
வெய்யில் கொளுத்தும் நேரத்தில் சூடாகிப்போன பாறையின் மீதுள்ள வெண்ணெய்யைக் கை இல்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற நிலையில், வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியாது மன உளைச்சல் கொள்வது போல, தன் காதலை வெளிப்படுத்த இயலாத கையறு நிலையைப் பாங்கனிடம் கூறுகிறான் தலைவன் ஒருவன் என்று குறுந்தொகைப் பாடல் ஒன்று கூறுகிறது. இங்கு வெய்யிலில் காய்வது வெண்ணெய்.
ஆக, இன்றைய நாளில் உலரவைக்கப்பட்ட உணவுப் பொருட்களான கருவாடு, உப்புக்கண்டம், வற்றல், வடவம் என எல்லாமே உணங்கல்தான்.
இவ்வாறாகத் தொகை இலக்கியங்களில் கூறப்படும் ‘உணக்கும்’ (உலரவைக்கும்) என்ற சொல் இன்றைய வழக்கிலும் உள்ளது. ஆனால் இவை மறைவை நோக்கிச் செல்கின்றன எனலாம். குளித்த ஈரக் கூந்தலைக் காயவைப்பதற்கு முடியை ‘உணர்த்து’ அல்லது ‘உணத்து’ என்ற சொல், சென்ற நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தது. இன்றோ, 'ஹேர் ரொம்ப வெட்டா இருக்கு; ட்ரை பண்ணு' என்று தமிழ் மாறிவிட்டது.
உயிர் உணக்கும் என்பது உயிரை வாடச் செய்யும் என்ற பொருளிலும்
'அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி’ (புறம் 25/6),
’முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!' (புறம் 219/2)
என்று புறப்பாடல்களில் இடம் பெறுகின்றன..
பல தூய தமிழ்ச் சொற்கள் இன்றைய நாளில் தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லையெனினும் கேரள மக்களின் மலையாள மொழியில் பயன்பாட்டில் உள்ளன என்பதை நாமறிவோம். 'உணக்குதல்' 'உணக்க வேண்டும்', 'உணங்கவில்லை' என்று சொல்வது மலையாளத்தில் இன்றும் வழக்கம் என்பது தெரிகிறது.
நாட்டுப்புறப் பாடலாக “முதல் மரியாதை” (1985) படத்தின் திரையிசையில் இடம்பெற்ற வைரமுத்துவின்,
அடி மாங்குளத்துக் கர மேல... ஏ...
மயிருணத்தும் சின்னவளே... மயிருணத்தும் சின்னவளே...
பாறையில நானிருந்து...
பாடும் குரல் கேக்கலையா... பாடும் குரல் கேக்கலையா...
பாட்டுச் சத்தம் கேக்கலையா... பாட்டுச் சத்தம் கேக்கலையா...
என்ற பாடல் வரிகளில் (https://youtu.be/M8CzmWnC9uA?si=iWteaaQbUjWlzcmR&t=69) காதலியைக் காண விரும்பிய காதலனின் பாடல் மயிர் உணத்தும் சின்னவளைத் தேடி ஏங்குகிறது.
இக்கட்டுரை எழுதுவதற்கு உதவிய இன்றியமையாத தளம்
முனைவர்.ப.பாண்டியராஜா உருவாக்கிய
தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம்
http://tamilconcordance.in/index.html
நன்றி:
தமிழணங்கு
ஜனவரி, 2024
#இலக்கிய நுட்பம், #இலக்கியம், #தமிழணங்கு, #Themozhi