Showing posts with label மின்தமிழ். Show all posts
Showing posts with label மின்தமிழ். Show all posts

Thursday, April 14, 2016

சித்திரை முழுநிலவு சிந்தனைகள்

சித்திரை முழுநிலவு சிந்தனைகள் 



சித்திரை மாத முழுநிலவு (சித்திரா பௌர்ணமி) என்பது பலருக்குப் பல நினைவுகளைத் தூண்டிவிடலாம். வானியல் தகவலின்படி சித்திரை நட்சத்திரக் கூட்டத்துடன் முழுநிலவு இணைந்திருக்கும் நாள் சித்திரை முழுநிலவு நாள்.  அதன் அடிப்படையில் அந்த மாதத்திற்குச் சித்திரை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சித்திரை மாதம் மட்டும் அல்ல மற்ற பிற மாதங்களுக்கும் எந்தெந்த நட்சத்திரக் கூட்டத்துடன் முழுநிலவு வானில் சேர்ந்திருக்குமோ அந்த நட்சத்திரக் கூட்டத்தின் பெயரே பெரும்பாலும் வைக்கப்பட்டுள்ளது.

முழுநிலவை, அதன் பால் வெண்மை ஒளிவெள்ளத்தில் இரவின் அழகைப் பருகும் ஆர்வத்திலோ, அல்லது முழு நிலவொளியைத் தங்களுக்கு உதவும் வண்ணம் திட்டமிட்டோ ஒவ்வொரு மாத முழுநிலவன்றும் ஏதாவது ஒரு பண்டிகை, விழா ஆக்கியவற்றை  ஏற்பாடும் செய்திருப்பார்கள். 

இலக்கியத்தில்  சித்திரை முழுநிலவு:
தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் என்ற சோழ மன்னன் துவக்கி பண்டைய சோழ நாடு சிறப்பாகக் கொண்டாடிய இந்திராவிழா நினைவிலாடும். இந்திரவிழா சித்திரை  முழுநிலவு அன்று துவங்கும் ஒரு விழா. 



     "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
     'வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனத் 
     தேவர் கோமான் ஏவலின் போந்த"
               (சிலம்பு: 5:64-66)
என இளவேனில் காலத்தின் வருகையைக் கொண்டாடும் இந்தக் காமவேள் விழா ஒரு காதல் விழா.  

ஒரு முழுநிலவில் துவங்கி மறு முழுநிலவு வரும் வரை, 28 நாட்கள், ஆடல் பாடல் என்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்ட விழா.   அந்நாட்களில் மக்கள் தங்கள் மன்னனின் நலம் விரும்பிக் கொண்டாடியுள்ளனர். அந்த இந்திரவிழாவின்  ஒரு முழுநிலவு நாளன்றுதான்  மாதவியும் கோவலனும் ஊடல் கொண்டு கானல்வரி பாடிப் பிரிந்த நிகழ்வும் அரங்கேறியதைச் சிலப்பதிகாரத்தின் விழாவறைக் காதையும் குறிப்பிடுகிறது.  

பழந்தமிழகத்து இளவேனில் காலத்தைக் கொண்டாடும் இந்திரவிழா போல,  குளிர் நீங்கி மீண்டும் பயிர்கள் துளிர் விட்டு புதுவாழ்வு துவங்கும் வசந்த காலத்தை  உலகம் முழுவதுமே ஏதோ ஒரு வகையில் கொண்டாடும் வழக்கம் உள்ளது. 

இயற்கை சித்திரை முழுநிலவு:
அமெரிக்கப் பழங்குடிமக்களான செவ்விந்தியர்கள் இயற்கை நிகழ்வுகளுடன் ஒட்டி ஒவ்வொரு முழு நிலவுக்கும் ஒரு பெயர் வைத்துள்ளார்கள்.  அவர்கள் சித்திரை நிலவை இளஞ்சிவப்பு நிலா, புற்கள் துளிர்க்கும்  நிலா, வளரும் நிலா, முட்டை நிலா, மீன் நிலா (April’s Full Moon is Full Pink Moon, the Sprouting Grass Moon, the Growing Moon, the Egg Moon and the Fish Moon) என்ற பலபெயர்களிலும் குறிப்பிட்டாலும் 'பிங்க் நிலா' என்பது பரவலான வழக்கத்தில் உள்ளது.  இப்பெயர்களுக்குக் காரணமும் உள்ளது.    பாறைகளுக்கிடையில் படர்ந்து வளரும் "பிங்க் ஃபிளாக்ஸ்" (Creeping pink phlox)  என்ற மலர்கள் வசந்த காலம் துவங்கியதும் முதலில் பூக்கத் துவங்கும் மலர்களாக அதிகம்  மலர்ந்து தரையை இளஞ்சிவப்பு வண்ண மலர்களால் மறைக்கும். எனவே அந்தக் காலத்தில் வரும் முழுநிலவுக்கு அவ்வாறு  பெயர் வைத்தார்கள்.  


அது போன்றே பனிக்காலம் முடிந்து புற்கள், தாவரங்கள் எனப் பசுமை மீண்டும் திரும்பும் காலத்து முழுநிலவு என்பதால் அதற்கேற்ற வகையிலும், பறவைகளின் இனப்பெருக்கம் தொடங்கி முட்டைகளை அடைகாக்கத் துவங்குவதையும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நீர்நிலைகளில் குழுமுவதையும் குறிக்கும் காலத்து முழுநிலவு என்பதால் அதற்கேற்ற வகையிலும் பெயரிட்டார்கள்.  பொதுவாகவே பனி, குளிர் நீங்கி உயிர்களின் அடுத்த வாழ்க்கை சுழற்சி தொடங்கும் காலகட்டத்தில் வரும் முழுநிலவு மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கப்படும். அமெரிக்கப் பழங்குடியினர் சூட்டியுள்ள பெரும்பாலான முழுநிலவின் பெயர்கள் அல்கான்குவின் பழங்குடிகளின் (Algonquin tribe) மரபிலிருந்து வந்தவை.  இவர்களின் தாக்கமே அமெரிக்கா வந்த ஆரம்பக்கால ஐரோப்பியர்களிடம் அதிகம். 

இந்த ஆண்டின் சித்திரை முழுநிலவு:
இந்த 2016 ஆண்டின் சித்திரை முழுநிலவு நாள் ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று வருகிறது.   சித்திரைமாத முழுநிலவு பிற மாதங்களின் ஒளியுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் ஒளிர்வதாக இருக்கும். வானியல் நிலைப்படி சூரியனுக்கும் பூமிக்கும் எதிர்த்திசையில் இருக்கும் சித்திரை முழுநிலவுகள் மிகவும் ஒளிவீசுவதாக இருக்கும். இந்த ஆண்டின் சித்திரை முழுநிலவு அளவில் மிகவும் சிறியதாகவும் இருக்கப்போகிறது.  இந்த 2016 – ஆம் ஆண்டின் மற்ற பிற முழுநிலவுகளுடன்  ஒப்பிட்டாலும் சித்திரை முழுநிலவு  அளவில் சிறியதாகத் தோன்றும். அதற்குக் காரணம் நிலவு பூமியைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையில் இது   பூமியைவிட அதிகத் தொலைவில் இருக்கும் (apogee). இதனை 'மைக்ரோ முன்' (Micro Moon அல்லது  Micro Full Moon அல்லது  Apogee Moon) என அழைப்பது வழக்கம். 





மாறாக நீள்வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகே வரும் பொழுது (perigee), அளவில் மிகப் பெரியதாகத் தோன்றும் முழுநிலவை 'சூப்பர் மூன்' (super moon) என்று குறிப்பிடும் வழக்கமும் இருக்கிறது. அதாவது, இரண்டுவகையில் பெரியதும் சிறியதுமாகத் தோற்றம் காட்டும் அளவிற்கு நிலவு தோன்றும் இடைவெளியின் தூரம் 50,000 கிலோமீட்டர்கள் (30,000 மைல்கள்). எனவே, இந்தத் தொலைவு வேறுபாடுகளைக் கணக்கில் கொண்டால், பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தொலைவு சராசரியாக 382,500 கிலோமீட்டர்கள்(237,700 மைல்கள்).  சூப்பர் மூனை விட மைக்ரோ மூன்   14% அளவு சிறியதாகவும், 30% ஒளிமங்கியும் தோற்றம் தரும். சூப்பர் மூனின் ஈர்ப்புவிசையால் கடலலைகள் உயர்வதிலும் தாழ்வதிலும் இருக்கும் வேறுபாடு போல மைக்ரோ மூனின் ஈர்ப்புவிசை சற்றே குறைந்த காரணத்தினால் அலைகளின் உயரத்தில் வேறுபாடு குறைவாகவே இருக்கும். ஆகையால் மைக்ரோ மூன்  பார்க்க இந்தச் சித்திரை முழுநிலவு ஒரு நல்ல வாய்ப்பு.

ஆன்மிகச் சித்திரை முழுநிலவு:
சித்திரை முழுநிலவு 'பாஸ்கால் மூன்' (Paschal Moon) எனவும் அழைக்கப்படும்.  வசந்தகால  முழுநிலவு தோன்றும் நாளைக் கணக்கிட்டே இயேசுநாதர் உயிர் பெற்று எழுந்த நாளாகிய 'ஈஸ்டர்' (Easter) கணக்கிடப்படும்.  அது போன்றே யூதர்களுக்கும் 'பாஸோவர்' (Passover) என்ற அடிமைத் தளையில் இருந்து யூதர்கள் விடுபட்டதைக்  குறிக்கும் நாளும் கணக்கிடப்படுகிறது.  கடவுளின் கருணையினால், அடிமை வாழ்விலிருந்த  இஸ்ரேலிய மக்கள் மோசசின் உதவியுடன் எகிப்திலிருந்து நள்ளிரவில் தப்பிச் சென்றதாக விவிலியம் குறிக்கும் நாள் பாஸோவர்.  நிலவினை அடிப்படையாகக் கொண்ட யூத நாட்காட்டியில் 'நிசான்' மாதத்தின் 15 ஆம் நாள் (15th of the Hebrew month of Nisan) இவ்விழா துவங்கி ஏழெட்டு நாட்கள் நடைபெறும்.    எனவே ஒவ்வொரு ஆண்டும்   ஈஸ்டரும், பாஸோவரும் ஒரு குறிப்பிட்ட நாள்களிலேயே மீண்டும் மீண்டும்  வருவதில்லை. 





இந்துக்கள் 'சித்திரா பௌர்ணமி' அன்று  விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்வார்கள். சித்திரகுப்தர் எமனின் உதவியாளர், மக்களின் பாவ புண்ணியக் கணக்குகளை அவர் எழுதி வைப்பதாகவும், அக்கணக்கிற்கு  ஏற்ப  மக்கள் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போவார்கள் என்றும்  கூறப்படும்  தொன்மக் கதைகளை நாமறிவோம்.  சித்திரை முழுநிலவு நாள் சித்திரகுப்தரின் திருமணநாள் என்றும் பிறந்தநாள்  என்றும் வெவ்வேறு குறிப்புகள் கிடைக்கின்றன.  பார்வதி எழுதிய அழகிய ஓவியத்திற்கு சிவன் தனது  மூச்சுக் காற்று கொண்டு உயிர் கொடுக்க அது சித்திர குப்தராக மாறியதாக ஒரு கதை கூறுகிறது. மற்றொன்று அவர் காமதேனுவின் மகன் என்கிறது. மேலும் ஒன்று மக்களின் பாவபுண்ணியக் கணக்கை எழுத உதவியாளர் ஒருவர் தேவை என எமன் பிரமனிடம் கேட்க, அவர் எமனின் தந்தை சூரியனையே அதற்கு ஏற்பாடு செய்கிறார். சூரியன் வானவில்லைப் பெண்ணாக்கி தனது மனைவியாக்கி அவருடன் வாழ்ந்ததில்  பிறந்த குழந்தை, பிறக்கும் பொழுதே  கையில் ஏடும் எழுத்தாணியும் கொண்டு பிறந்தது. சித்திரகுப்தரான அவர்  தனது சகோதரன் எமனுக்கு உதவியாளர் பணியை ஏற்றார். அவரது  தாய் வானவில் என்பதால் அவருக்கு வண்ண வண்ண உடைகள் அணிவிக்கப்படுகிறது. 

எனவே சித்திரகுப்தருக்கு உரிய நாளான அன்று  அவரை வணங்கி தாங்கள் செய்த பாவங்களைக் குறைத்தும், புண்ணியங்களை அதிகரித்தும்  கணக்குக் காட்டும்படி (அதாவது, பொய்க்கணக்கு எழுதச் சொல்லி வேண்டுகோள் விடுப்பது ... ‘‘நாங்கள் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்’’ என்று பிரார்த்திப்பது முற்காலத் தமிழர் மரபு) வேண்டுவது வழக்கமாக இருந்து வருவதாகத் தொன்மக் கதைகள் கூறுகின்றன. சித்திரகுப்தரை வணங்குவதுடன் ஆறு கடல்களில் பாவம் நீங்க நீராடுதல், கிரிவலம் வருதல், பொங்கலிடுதல் போன்றவையும் கடைப்பிடிக்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. 

நினைவுகளில் சித்திரை முழுநிலவு:


கதைகளிலும் திரைப்படங்களிலும் சித்திரா பௌர்ணமி பற்றியும், அந்நாளில் சித்திரான்னங்களைக் கட்டுச்சோறாகக்  கட்டிக்கொண்டு மக்கள் ஆற்றங்கரைக்குப்  போய் நிலவொளியில் பொழுதைக் கழித்துக் கொண்டாடுவார்கள் என்பதைக் கேள்விப்பட்டதுடன் சரி.  சிறுவயதில் எனக்கும் என் தம்பி தங்கைக்கும் இது போன்று நாங்களும் கொண்டாட வேண்டும் என்று ஓர் அற்ப ஆசைவரும்.  திருச்சி போன்ற நகரில், கான்க்ரீட் வீடுகளுக்கு மத்தியில் சித்திரா பௌர்ணமி கொண்டாட வழியுண்டா?  ஆசை யாரை விட்டது? அம்மாவிடம் சொல்லி நச்சரித்து எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம் போன்ற உணவுகளைச் சமைக்கச் சொல்லி, அவற்றை எடுத்துக் கொண்டு போய்  மொட்டைமாடியில் பாய்விரித்து, கடைப்பரப்பி சாப்பிட்டு பொழுதைக் கழிக்கும் பொழுது, தரைதளத்திற்கு அடுத்த தளமாக இருந்த மொட்டைமாடியில் தெருவிளக்கு பளீரென விழுவதைப் பொருட்படுத்தாமல் பெயருக்காகச் சித்திரா பௌர்ணமி கொண்டாடிய நாட்கள் ஓரிரு முறைதான் என்றாலும் அவை நீங்காத நினைவுகள். 



தகவலும் படங்களும்  கொடுத்து உதவிய தளங்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை:
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=7

பிங்க் மூன்:
http://www.timeanddate.com/astronomy/moon/full-moon-names.html

மைக்ரோ மூன்:
http://earthsky.org/?p=175666
http://apod.nasa.gov/apod/ap121129.html

ஈஸ்டர்:
http://www.history.com/topics/holidays/history-of-easter
https://en.wikipedia.org/wiki/Easter

பாஸோவர்:
https://www.romper.com/p/when-is-passover-in-2016-the-jewish-holiday-falls-on-a-weekend-this-year-8592
https://en.wikipedia.org/wiki/Passover

சித்திரா பௌர்ணமி:
http://www.thiruketheechcharam.com/2012/05/full-moon.html
https://ammasclassics.wordpress.com/2011/04/25/சித்ரா-பௌர்ணமி-சித்ரகுப/

நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள் சிறப்பு மலர்
http://www.subaonline.net/thfebooks/chithirai2016/THF-Chithirairelease2016.pdf


ஏப்ரல் 14, 2016


#மின்தமிழ், #Themozhi