Showing posts with label திண்ணை. Show all posts
Showing posts with label திண்ணை. Show all posts

Sunday, February 15, 2026

திண்ணை - இணைய இதழ் - பதிவுகள்

 திண்ணை - இணைய இதழ் - பதிவுகள்
   (இத்தளத்தில் . . . )


1. கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா? [அக்டோபர் 1, 2012]
https://aintinai.blogspot.com/2012/09/blog-post.html

2. வாழ்க்கைச் சுவடுகள் [நவம்பர் 26, 2012]
https://aintinai.blogspot.com/2012/11/blog-post_26.html

3. பெண்களின் விதிகள் [டிசம்பர் 30, 2012]
https://aintinai.blogspot.com/2012/12/blog-post_30.html

4. வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன் [ஜனவரி 27, 2013]
https://aintinai.blogspot.com/2013/01/blog-post_27.html

5. புதியதோர் உலகம் செய்வோம் . . . [பிப்ரவரி 11, 2013]
https://aintinai.blogspot.com/2013/02/blog-post.html

6. சும்மா கிடைத்ததா சுதந்திரம்? [பிப்ரவரி 18, 2013]
https://aintinai.blogspot.com/2013/02/blog-post_18.html

7. பொதுவில் வைப்போம் [மார்ச் 25, 2013]
https://aintinai.blogspot.com/2013/03/blog-post.html

8. புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர் [ஏப்ரல் 7, 2013]
https://aintinai.blogspot.com/2013/04/blog-post.html

9. காற்றுக்கென்ன வேலி!!! [ஏப்ரல் 22, 2013]
https://aintinai.blogspot.com/2013/04/blog-post_22.html

10. நீராதாரத்தின் எதிர்காலம் [மே 27, 2013]
https://aintinai.blogspot.com/2013/05/blog-post.html

11. மொழியின் அளவுகோல் [ஜூன் 24, 2013]
https://aintinai.blogspot.com/2013/06/blog-post.html

12. வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் [அக்டோபர் 7, 2013]
https://aintinai.blogspot.com/2013/10/blog-post_7.html

13. “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள் [அக்டோபர் 20, 2013]
https://aintinai.blogspot.com/2013/10/blog-post_20.html

14. விசுவப்ப நாயக்கரின் மகள் [மே 11, 2015]
https://aintinai.blogspot.com/2015/05/blog-post.html

15. மீனாம்பாள் சிவராஜ் [மார்ச் 11, 2018]
https://aintinai.blogspot.com/2018/03/blog-post.html



#பதிவுத்தொகுப்பு, #திண்ணை,  #Themozhi 



Sunday, March 11, 2018

மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ்




தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் ராஜாஜி  21.04.1938 அன்று ஆணையைப் பிறப்பித்தபொழுது அதை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். முதல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாற்றினார். “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்று முழக்கமிட்ட முன்னணிப் பெண்ணியத் தலைவர், ஈ.வெ.ரா. அவர்களை நாம் “பெரியார்” என அழைக்கக் காரணமானவர், அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்து அம்பேத்கரால் எனது அன்புச் சகோதரியே என்று அழைக்கப்பட்டவர், தலித் மக்களுக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்ற முதல் பெண்மணி, கௌரவ நீதிபதியாகப் பணியாற்றியவர், பல்கலைக்கழக செனட் அமைப்புகளில் பங்கேற்று வழிநடத்தியவர் எனப் பல குறிப்பிடத்தக்கச் சமூகப்பணிகளை ஆற்றிய மீனாம்பாள் அவர்கள்,  புகழ்பெற்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியாரும் ஆவார்.

பர்மாவிற்குக் குடிபெயர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின், முதன் முதலாகக் கப்பலோட்டிய மதுரைப் பிள்ளை என்றழைக்கப்பட்ட செல்வந்தரின் வழித்தோன்றலாக பர்மாவில் பிறந்து, வளர்ந்து தனது உயர்கல்விக்காக இந்தியா வந்தவர் இவர். நீதிக்கட்சியில் இணைந்து கணவருடன் பணியாற்றியவர், பின்னர் பெரியார் மீது பேரன்பு கொண்டவராகச் சுயமரியாதை இயக்கத்திலும் தொடர்ந்தார். சாதி எதிர்ப்பு ஆதரவாளரான இவர் சைமன் கமிஷனை ஆதரித்து உரையாற்றி 1928 ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் துவக்கினார்.



மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். அவர் அன்று வழங்கிய உரையின் சுருக்கம் இக்கட்டுரை. இந்துமதம் கடைப்பிடித்த வர்ணாசிரமத் தர்மமே நாட்டு மக்களின் கல்வி மற்றும் ஒற்றுமை சீர்குலைவு, மகளிர் வாழ்ந்த அடிமைநிலை வாழ்வு யாவற்றுக்கும் காரணம் என இன்று நாம் அறிவோம். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மீனாம்பாள் தனது உரையில் நாட்டின் கல்வி, ஒற்றுமை, சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் முன்னேற்றம், நீதிக்கட்சி செய்த மனிதநேய நன்மைகள் ஆகியவற்றைக் குறித்து தமது கருத்துகளைக் கீழ்வருமாறு அந்தத் தலைமையுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் “கல்வி”, “ஒற்றுமை”, “மகளிர் முன்னேற்றம்” இம்மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது; சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு; உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள், மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது.

நம் நாட்டின் ஆண்கள் அடைந்துள்ள கல்விநிலை வளர்ச்சியே பிற்போக்கான நிலையில் காணப்படுகையில் பெண்களின் கல்விநிலை குறித்து என்ன சொல்வது? அரசு மேற்கொண்ட முயற்சியால் பல கல்வி வாய்ப்புகள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகையில், இதைக் கைநழுவவிடாமல் நம் சமூகத்தார்(ஆதிதிராவிடர்), இம்மாதிரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாம் யாவரும் கல்வியில் தேர்ந்து, சமூகத்தில் உள்ள மற்றவர் நிலைக்கு நாமும் உயர வேண்டும்.

ஓர் குடும்பமோ, ஓர் சமூகமோ, ஓர் தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் மக்களிடம் ஒற்றுமை மிகவும் அவசியம். நம் நாட்டின் சாதிப்பாகுபாடுகள் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து நம் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது. நம் நாட்டில் சாதிகள் அறவே ஒழிய இன்னமும் பலகாலம் ஆகலாம். நாமும் மற்றவர்களைப் போல மனிதர்களாக நடத்தப்பட, வாழ்வில் முன்னேற, எல்லா உரிமையும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்கும் பொருட்டு நாம் ஒற்றுமையாக இயங்க வேண்டும்.

ஒற்றுமையாக இயங்க நாம் சங்கங்கள் அமைக்க வேண்டும், சங்கங்கள் வாயிலாக அனைவரும் சேர்ந்து பழகுவதால் நமக்குள் ஒற்றுமை ஏற்படும், கூட்டாக நமக்கு வேண்டிய பள்ளிக்கூடம், கிணறு முதலிய சௌகரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், அதன் மூலம் கல்வி பெற்று முன்னேற்றமடையவும், ஒற்றுமையின் பலத்தால் அரசின் கவனத்தைக் கவரவும் முடியும். ஒடுக்கப்பட்ட இனத்தவர் கூட்டுறவுச் சங்கங்களால் உதவி செய்யப்படாமல் புறக்கணிக்கப் படும்பொழுது அவர்கள் தங்களுக்கான கூட்டுறவுச் சங்கங்களைத் தாமே உருவாக்கிக் கொண்டு ஒற்றுமையாகப் பயன்பெற்று மேல்நிலைக்கு வரவேண்டும்.

பெண்கல்வி என்பது குழந்தைகளை வளர்த்துப் பராமரித்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் அருமையை உணர்த்தி அக்குடும்பத்தை உயர்த்தும். பெண்களின் அரசியல் பங்களிப்புகளுக்கு வழி வகுத்து சமூக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இதனை மனதில் கொண்டு பெண்கல்விக்கு வழிவகுப்பது இன்றியமையாதது.

நீதிக்கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய பிரச்சனைகள் அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. நீதிக்கட்சி சட்டமியற்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது. தெரு, குளம், பொதுச் சாவடி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் அனைவரும் நுழைய வாய்ப்பளித்தது. இதன் பிறகே ஆதிதிராவிடர்களைக் கவர காங்கிரஸ்காரர்கள் “ஹரிஜன சேவா சங்கம்” என்ற ஒன்றைத் துவக்கிக் கொண்டு பெயருக்குக் கண்துடைப்பு செயல்களைச் செய்து மேல் ஜாதிக்காரர்களே பயன் அடையும்படி செய்தார்கள். பூனா ஒப்பந்தம் என்ற நெருக்கடி கொடுத்து தேர்தல்களின் மூலம் ஆதிதிராவிடர்களுடைய பிரதிநிதிகள் வருவதைத் தடுத்தார்கள். அதுமட்டுமல்ல அந்த பூனா ஒப்பந்தத்தில் ”காந்தியின் உயிரைக் காப்பாற்ற” என்பதற்காகவே கையெழுத்திட்டவர்களுக்கே காங்கிரஸ்காரர் எதிர் வேட்பாளரையும் நிறுத்தி தொந்தரவு கொடுத்தார்கள். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையில் நன்மை செய்பவர் யாரெனத் தெளிவாக விளங்கும்.



துணை நின்றவை:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
http://dalitshistory.blogspot.in/2016/03/blog-post_62.html

திருநெல்வேலி ஜில்லா – ஆதிதிராவிடர் மகா நாடு, ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ், தலைமைப் பிரசங்கம், 31.1.1937
http://www.subaonline.net/TPozhil/e-books/THF-Meenambal%20Speech-1937.pdf


நன்றி:
திண்ணை
மார்ச் 11 , 2018


#திண்ணை, # வரலாறு, #பெண்ணியம், #Themozhi  




Monday, May 11, 2015

விசுவப்ப நாயக்கரின் மகள்

விசுவப்ப நாயக்கரின் மகள்


விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகரப் பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, விஜயநகரப் பேரரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு வரி அளித்து, முழுத் தன்னாட்சி உரிமை பெற்றுக் கொண்ட நாயக்கர் பேரரசின் பிரதிநிதிகளால் மதுரை, தஞ்சை, செஞ்சி பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கியது. மதுரை நாயக்கர்கள் 1529 ஆம் ஆண்டு துவங்கி 1736 ஆம் ஆண்டு வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தனர். தஞ்சை, செஞ்சி நாயக்கர் மன்னர்களைவிடவும் மதுரை நாயக்கர்களே நீண்டகாலம் ஆட்சி செய்தனர்.

மதுரை நாயக்கர் மன்னர்கள்:
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரை நாயக்கர் ஆட்சியின் பகுதியாக இருந்தாலும், மதுரை நாயக்க மன்னராக “விசுவநாத நாயக்கர்” 1529 ஆண்டு முதல் விஜயநகர அரசின் பிரதிநிதியாக அரசுப் பொறுப்பை ஏற்றார். மாலிக்காபூர் படையெடுப்பினால் களையிழந்து இருந்த மதுரையை வளமையான நிலைக்கு மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவர் காலத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, 72 பாளையப்பட்டுகளின் தலைவர்களான பாளையக்காரர்களின் கீழ் ஆட்சி நடைபெறத் துவங்கியது.

தளவாய் அரியநாத முதலியார்:
விசுவநாத நாயக்கரின் முதலமைச்சரான “தளவாய் அரியநாத முதலியார்” என்பவர் இந்தப் பாளையப்பட்டு ஆட்சிமுறைக்கு முதலில் வழிவகுத்தவர். முதலமைச்சராகவும் இராணுவ அதிகாரியாகவும் பணியாற்றியதுடன் மட்டும் அல்லாமல், பாளையப்பட்டு திட்டம் கொண்டு வந்தது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தை 1569 ஆம் ஆண்டு கட்டுவித்தது என இவர் பல அரிய பணிகளை முன்னின்று ஏற்று மதுரை நாயக்கர் மன்னர்களுக்கு உதவியவர். மன்னர் விசுவநாத நாயக்கர் ஆட்சியின் காலம் (1529 – 1564) முதற்கொண்டு, அவருக்குப் பின்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 – 1572), வீரப்ப நாயக்கர் (1572 – 1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 – 1601) காலம்வரை எனத் தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலங்களிலும் இவர் அவர்களுக்கு ஆலோசனை கூறும் பொறுப்பில் இருந்து புகழ் பெற்றவர்.

மீனாட்சியம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தின் வாயிலில் தளவாய் அரியநாத முதலியார் குதிரை மீது அமர்ந்திருக்கும் சிலையும் உண்டு. குடிமக்களின் மிகுந்த மதிப்பையும், மரியாதையையும் பெற்றிருந்த இவர் 80-ஆவது வயதில், கி.பி. 1600-இல் முதுமையுற்று மறைந்தார். இவர் மறைந்த காலத்தில் நாயக்க மன்னர்கள் இருவர் குழுவாக ஆட்சி நடத்தினர். இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும் (1595 – 1601) அவரது சகோதரரான “விசுவப்ப நாயக்கரும்” இணையாக நாட்டை ஆண்டனர். இவர்கள் ஆட்சியில் திருச்சி மாநகரம் இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அத்துடன் திருச்சி மிக முக்கியமான நகராகவும் இவர்கள் ஆட்சியில் விளங்கியது.

மன்னர் விசுவப்ப நாயக்கர்:
மதுரை நாயக்க மன்னர்கள் வரிசையில், வரலாற்றுக் கோணத்தின் அடிப்படையில் அதிகம் பேசப்படாத, புகழ் பெற்றிராத மன்னரான விசுவப்ப நாயக்கர் உண்மையில் மிகவும் புகழ்பெற்ற மதுரை “திருமலை நாயக்கரின்” பாட்டனார் ஆவார். இவர் அதிகம் அறியப்படாததற்கு இவர் தனது மூத்த சகோதரர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கருடன் ஆட்சியை இணையாக நடத்தியது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

மன்னர் விசுவப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் தளவாய் அரியநாத முதலியார் உயிர்நீத்தார். விசுவப்ப நாயக்கர் பற்றியும், தளவாய் அரியநாத முதலியார் பற்றியும் சில வரலாற்று ஆவணங்களும், மதுரை குனியூர் கல்வெட்டும்(Kuniyur Plate) தகவல்கள் தருவது போலவே, திருச்சியில் உள்ள சிறுதெய்வக் கோயிலொன்றும் தகவல் தருகிறது

பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்:



திருச்சி தென்னூரில் “பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்” (தென்னூர் ஹை ரோடு, திருச்சி 620017, புவியிடக்குறியீடு: 10°48’58″N 78°40’48″E) என்ற குலதெய்வம் கோவில் ஒன்று உள்ளது. இத்தெய்வம் வாணியச் செட்டியார் குலத்தின் குலதெய்வம். இக்கோவில் வாணிய செட்டியார் சமூகத்தின் பருத்திக்குடையான், தென்னவராயன், பயிராலழக, பாக்குடையான், மாத்துடையான் மகரிஷி முதலான 5 கோத்திரக் குடி மக்களுக்கும் உரிமையானது. பெரியநாச்சி அம்மனும், அவரது கணவர் வீரிய பெருமாள் என்பவரும், பிள்ளையற்ற இவர்களின் சிதைக்குத் தீமூட்டிய வீரப்ப சுவாமி என்பவரும் இச்சமூக மக்களுக்கு மூதாதையர்கள். இந்த மூதாதையர்களை இக்குலமக்கள் குலதெய்வங்களாக வணங்கி வழிபடுகிறார்கள்.

பெரியநாச்சி அம்மையாருக்குக் கோவில் எழுப்பி அக்கோயிலில் அவர் கணவர் வீரிய பெருமாள் மற்றும் மகன்முறை ஏற்று இறுதிச் சடங்குகள் செய்த வீரப்ப சுவாமி ஆகியோரையும் குலதெய்வங்களாக வணங்கி வருகிறார்கள். இம்மூவரையும் சேர்த்து இக்கோவிலில் “33 சிறுதெய்வங்கள்” உள்ளனர். அவர்களில் மன்னர் விசுவப்ப நாயக்கர், தளவாய் அரியநாத முதலியார் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் எவ்வாறு இக்கோயில் தெய்வங்களானார்கள் என்பதை இக்கோவிலின் தலவரலாறு மூலம் அறிந்து கொள்ளலாம். மன்னர் விசுவப்ப நாயக்கர் மற்றும் தளவாய் அரியநாத முதலியார் ஆகியோர் பற்றிய குறிப்புகளைக் கணக்கில் கொண்டு பெரியநாச்சி அம்மையார் வாழ்ந்த காலத்தைப் பின்னோக்கிக் கணித்தால், அம்மையார் வாழ்ந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது தெரிகிறது. குறிப்பாக அவர் உயிர் நீத்ததை 1595-1600 க்கும் இடைப்பட்ட காலம் என்றும் காலகட்டத்தை மேலும் குறுக்கலாம். இவர் வாழ்ந்த காலம் 1580 – 1600 க்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் உத்தேசமாகக் கூறலாம்.

தலவரலாறு வழங்கும் தகவல்:
தலவரலாறாகக் கூறப்படுவது நான்கு நூற்றாண்டுகளுக்கு (420 அண்டுகளுக்கு) முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. வாய்வழிக் கதையாக அக்குல மக்களிடம் வழங்கி வருகிறது. இருப்பினும் அவர்கள் சரியான காலத்தைக் கணக்கிடவில்லை என்பதையும் கோவிலின் இணையதளப் பக்கம் வழங்கும் தலவரலாறு மூலம் அறிய முடிகிறது. வாணியச் செட்டி குலத்தைச் சேர்ந்த பெரியநாச்சி அம்மையாரும், அவர் கணவர் வீரிய பெருமாளும் தங்கள் குலத் தொழிலான எண்ணை வியாபாரம் செய்து வருகின்றனர். திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வருகின்றனர், இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

இந்தக்காலகட்டத்தில் உறையூரில் இருந்து விசுவப்ப நாயக்கர் ஆட்சி செய்யும் பொழுது தளவாய் அரியநாத முதலியார் அவரது அமைச்சராக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் நாயக்கர்களுக்குத் தலைநகராக விளங்கியது மதுரைதான். ஆனால் பிற்பாடு இவரது பேரன் தலைநகரை திருச்சிக்கு மாற்றினார், பிறகு மற்றொருவர் ஆட்சிக்கு வந்து தலைநகரை மதுரைக்கு மாற்ற, பிறகு மறுபடியும் திருச்சி மதுரை என்று இரு ஊர்களும் நாயக்கர் காலத்துத் தலைநகர்களாக மாறி மாறி இருந்து வரும் வழக்கம் தொடர்ந்தது. உறையூரில் இருந்து விசுவப்ப நாயக்கர் திருச்சி பகுதியை அரசாள, மதுரையில் இவரது அண்ணன் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில்தான் இருமன்னர்கள் அடங்கிய குழுவின் ஆட்சி நடந்தது என்பதை வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உறையூரில் மன்னர் விசுவப்ப நாயக்கரின் அன்பு மகள், இளவரசி இறந்துவிடுகிறாள். மிகவும் துயருற்ற மன்னருக்கு ஆட்சியிலும் நாட்டமின்றிப் போகிறது.

கடைவீதியில் ஒருநாள் தற்செயலாக பெரியநாச்சி அம்மையாரைப் பார்த்ததும் மன்னர் வியக்கிறார். பெரியநாச்சி அம்மையார் இறந்த இளவரசியின் சாயலில் இருக்கவும் அவரைப் பற்றி அமைச்சரிடம் தகவல் சேகரித்து அவரை அழைத்துவரச் சொல்கிறார். பெரியநாச்சி அம்மையார் தனது கணவருடன் சென்று மன்னரைச் சந்திக்கிறார். மன்னர் தனது மகள் போலவே இருக்கும் பெரியநாச்சி அம்மையாரை அவரது மகளாகவே எண்ணுவதாகவும், அவருடன் அரண்மனையில் தங்கிவிடும்படியும் கூறுகிறார். அரண்மனை வாழ்வில் இத்தம்பதியருக்கு ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. மன்னர் பெரியநாச்சி அம்மையாரைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் அளிக்கும் பொழுதெல்லாம் வந்து சந்தித்துச் செல்வதாகக் கூறி இருவரும் திரும்பி விடுகிறார்கள். எனினும், பெரியநாச்சி அம்மையாரைக் கண்டவுடன் மன்னரும் மனக்கவலையை மறந்து ஆட்சியில் கவனம் செலுத்துகிறார். இவர்களும் தங்களது எண்ணை வாணிபத்தைத் தொடர்கிறார்கள்.

ஒருநாள் புதுக்கோட்டைப் பகுதியின் காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற மன்னருக்குக் கிடைத்த விலங்கின் இறைச்சியைத் தனது மகளாகக் கருதும் பெரியநாச்சி அம்மையாருக்குக் கொடுக்க விருப்பம் ஏற்படுகிறது. அவரது சேவகர்களில் ஒருவனிடம் அதைக் கொடுத்தனுப்புகிறார். அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு, தனது நாய் துணைக்கு வர, வீடு திரும்பிக் கொண்டிருந்த வீரிய பெருமாளை அவன் வழியில் சந்திக்கிறான். சேவகன் அவரிடம் மன்னர் கொடுத்தனுப்பியதை பெரியநாச்சி அம்மையாரிடம் கொடுக்க தான் செல்வதாகக் கூற, வீரிய பெருமாளும் அது என்ன என்று தெரியாமலேயே அவர் தலை மீதிருக்கும் எண்ணெய்ப் பானையின் மீது வைக்கச் சொல்லி, தான் கொடுத்துவிடுவதாகவும் அவனிடம் கூறிவிடுகிறார். அவர் வீடு திரும்பும் வழியில் கோட்டை முனி அவரை அடித்துக் கொன்றுவிடுகிறது. உடலெல்லாம் இரத்தக்கறையுடன் நாய் பெரியநாச்சி அம்மையாரிடம் ஓடி வருகிறது. ஏதோ விபரீதம் நடந்ததை அறிந்து பெரியநாச்சி அம்மையார் நாயினைத் தொடர்ந்து சென்று இறந்து கிடக்கும் கணவரைக் கண்டு அழுது அரற்றுகிறார். பிறகு அவரது இறுதிக் காரியங்களை முடிப்பதற்காக உடலை வண்டியிலேற்றி உறையூருக்குத் திரும்புகிறார். வழியில் இப்பொழுது கோவில் இருக்கும் இடத்திற்கு அருகில் வரும் வண்டி அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருகிறது.

தனது கணவருக்கு அங்கேயே சிதை மூட்டும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகிறார் பெரியநாச்சி அம்மையார். இதற்குள் தகவலறிந்த மன்னர் விசுவப்ப நாயக்கர் அங்கு வருகிறார். இறுதி காரியங்கள் முடிந்தவுடன் பெரியநாச்சி அம்மையாரை அவர் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட விரும்புவதையும் சொல்கிறார். ஆனால், பெரியநாச்சி அம்மையார் தனது கணவனுடன் உடன்கட்டை ஏறப்போவதாகக் கூறி உறுதியாக மறுத்துவிடுகிறார். எனவே மன்னரும் வேறுவழியின்றி வருத்தத்துடன் சந்தனக் கட்டைகள் அடுக்கிய சிதையை அமைத்துக் கொடுக்க, பெரியநாச்சி அம்மையார் கணவருடன் உடன்கட்டை ஏறுகிறார்.

சிதை ஏறும்பொழுது, தங்களுக்கு மகன் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கைச் செய்ய யாருமில்லையே என்று வருந்தி கணவரின் குலதெய்வமான பெருமாளிடம் பெரியநாச்சி அம்மையார் வேண்ட, அவரது கணவரின் சொந்த ஊரில், மலையின் மீது குடிகொண்டிருக்கும் பெருமாள் வீரப்ப சுவாமியாக உருவெடுத்து வந்து, மகன் பொறுப்பினை ஏற்று சிதைக்குத் தீ மூட்டுகிறார். சில நாட்களுக்குப் பிறகு மன்னரின் கனவில் பெரியநாச்சி அம்மையார் தோன்றி தான் சக்தியின் வடிவமாகப் பூமியில் தோன்றிச் செய்ய நினைத்த கடமைகளை முடித்துவிட்டதாகவும், அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் அவருக்குக் கோவில் ஒன்று எழுப்பி, அவரது குலமக்கள் வணங்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறார். கனவில் தோன்றிய, தனது மகளாகக் கருதிய பெரியநாச்சி அம்மையார் சொன்னது போலவே அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் அவருக்கு ஒரு கோவிலை எழுப்புகிறார் மன்னர் விசுவப்ப நாயக்கர். இன்றுள்ள கோயிலின் கருவறை (உடன்கட்டை ஏறிய இடத்தில்) சுவர்களில் தீப்பிழம்புகள் படம் வரையப்பட்டுள்ளது.




காலத்திற்கேற்ற தலவரலாறு விளக்கம்:
வாய்வழியாகக் கூறப்பட்டு வந்துள்ள தலபுராணக்கதையில் ஏதோ ஓர் உண்மை இழை இருக்கிறது என்ற அனுமானத்திலும் நாம் இந்த நிகழ்ச்சியை அணுகலாம். அந்த அனுமானம்தான் இக்கட்டுரைக்கும் அடிப்படை. மக்களின் காலத்திற்கு ஒவ்வாத புரிதல்களால் இக்கதை இந்நாளில் பல இடங்களில் கேள்விகள் பல எழுப்பும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஆனாலும் தகவல்களைச் சரியான கோணத்தில் அணுகி, என்னதான் நடந்திருக்கக் கூடும் என்பதையும் சரிவர யூகிக்க முடியும்.

இலங்கையின் வரலாற்றை ஒரு பௌத்தத் தொன்மச் சார்புநிலை நூலாக “மகாவம்சம்” என்ற பெயரில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தேரவாத புத்தத் துறவி “மகாநாம தேரர்” என்பவர் பாலி மொழியில் எழுதினார். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட “கெய்கர்” (Wilhelm Geiger) என்பார் நூற்பதிப்பின் முன்னுரையில் அந்நூலை அணுகும் முறையை,
“…that our method is simply to eliminate from the tradition all the miraculous stories and consider what is left over as authentic history”
என்று விவரிப்பார்.

அதே கோணத்தில் இந்தத் தலவரலாற்றிலும், இயற்கையில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாத புனைவுகளைப் புறந்தள்ளி, ஊடாடிச் செல்லும் வரலாற்றுக் குறிப்புகளை மட்டுமே கொள்வோமானால், இது நடந்த காலகட்டம் மன்னர் விசுவப்ப நாயக்கர் வாழ்ந்த காலம், தளவாய் அரியநாத முதலியார் உயிரோடு அரச குடும்பத்துடன் தொடர்பில் இருந்த காலம் என்றும் அனுமானிக்கலாம்.

அரசரிடம் இருந்து அனுப்பப்பட்ட பொருளையும், அரசரின் சேவகன் வீரிய பெருமாளுடன் பேசிக்கொண்டிருப்பதையும் கண்டவர் யாருக்கோ அப்பொருளைக் கொள்ளையடிக்கும் எண்ணம் வந்திருக்கலாம். அது என்ன என்று அறியாமலேயே வீரிய பெருமாளைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு பொருளை எடுத்துக் கொண்டோடி இருந்திருக்கலாம். அப்பொருளை இறைச்சி என்று சொல்வதே கோட்டை முனியுடன் தொடர்பு படுத்த எழுந்த எண்ணமாகவும் இருக்கலாம். அக்காலங்களில் காரணம் கூற இயலாத கொலைகளைப் பேய், பிசாசு, காட்டேறி, முனியாண்டி ஆகியோர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறிவிடும் வழக்கம் இருந்ததை நாம் அறிவோம். பின்னர், பெரியநாச்சி அம்மையாருக்கும் அவர் கணவருக்கும், அவரது கணவர் வழி உறவில், மகன் முறையில் உள்ளவர் யாரேனும் ஒருவர் சிதைக்குத் தீயிட்டிருந்திருக்கலாம். பிறகு இறந்தவர் நினைவாக அங்குக் கோவிலும் எழுப்பப்பட்டிருக்கிறது.

திருச்சி புத்தூரில் இன்றும் விசுவப்ப நாயக்கர் தெரு என்று ஒரு தெரு பெரியநாச்சி அம்மன் கோவிலின் வடமேற்குப் பகுதியில் உள்ளது (தெரு இருக்கும் பகுதியின் புவியிடக் குறியீடு: 10°49’3″N 78°40’44″E), அது அக்கால உறையூர் நகரின் பகுதியாக இருந்திருந்திருக்கலாம். இது தற்கால அருணா தியேட்டருக்குப் பின்புறம் உள்ள பகுதி. ஆனால் இத்தெருவுக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு உரியவர் மன்னர் விசுவப்ப நாயக்கர் என்றும், அவர் புகழ் பெற்ற மன்னர் திருமலை நாயக்கரின் பாட்டனார் என்பதும் இந்நாள் மக்களுக்குத் தெரியாது என மிக உறுதியாக நம்பலாம். இன்றைய கோவில்குளத்தின் வடக்குப் பகுதி இடுகாடாகவும் இருந்திருக்கிறது. இடுகாட்டின் பயன்பாட்டில் இருந்த குளம் (குளத்தின் புவியிடக் குறியீடு: 10°49’0″N 78°40’48″E) இப்பொழுது கோவிலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. மன்னர் விசுவப்ப நாயக்கர் பெரியநாச்சி அம்மனின் தந்தை முறை என்று குறிப்பிடப்பட்டு, அவரது தளவாய் அரியநாத முதலியாருடன் கோவிலில் குடியேற்றப்பட்டு இருவரும் பெரியநாச்சி அம்மையாரின் குடும்பத்துடன் இன்று குலதெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர்.



கட்டுரை வழங்கும் தகவலுக்கான தரவுகளின் மூலம்:
History of the Nayaks of Madura, By R. Sathyanatha Aiyar, 1924, Humphrey Milford Oxford University Press; – see Chapter 5, Page 82 & Chapter 6, Page 89 & page 395
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி – https://ta.wikipedia.org/s/l5d
தளவாய் அரியநாத முதலியார் – https://ta.wikipedia.org/s/xy9
ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி – http://sriperiyanachiammantemple.org/
Santhipriya’s pages, By N.R.Jayaraman – http://santhipriyaspages.blogspot.com/2014/12/blog-post.html
Geiger, Wilhelm. (2013). pp. 15-6. Mahavamsa The Great Chronicle of Ceylon. London: Forgotten Books. (Original work published 1912) – http://www.forgottenbooks.com/readbook_text/Mahavamsa_The_Great_Chronicle_of_Ceylon_1000058910/15
_______________________________

நன்றி: திண்ணை
மே 11, 2015

#திண்ணை, #வரலாறு, #Themozhi 
 

Sunday, October 20, 2013

"காமன்சென்ஸ்" இல்லாத "காமன்வெல்த்" நாடுகள்

"காமன்சென்ஸ்" இல்லாத "காமன்வெல்த்" நாடுகள்


சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி,  40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல.  தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1].  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல நோக்கு அமைப்புகளும் வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அவர்களும் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி  அக்டோபர் 1, 2013 முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். மக்கள் உணர்வை மதித்து நல்லதொரு முடிவெடுப்பேன் என்ற இந்தியப் பிரதமரின் உறுதிமொழியின் பேரில் அவரது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது [2]. 

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான கனடாவின்  பிரதமர்  ஸ்டீஃபன் ஹார்பர் புறக்கணித்துவிட்டார் [3].  இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் [4].  உலக அளவில் இலங்கையில் காமன்வெல்த்  மாநாடு நடத்த எதிர்ப்புகள் கிளம்பினாலும் உறுதியான முடிவு எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள், Commonwealth National) என்ற அமைப்பு தேவையா? அதனால் யாருக்கு என்ன பயன் என்பதை ஆராய்வது பலனளிக்கும்.  காமன்வெல்த் நாடுகள் என்பவை சென்ற நூற்றாண்டு வரை இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த 54 நாடுகள்.  தற்பொழுது இவையாவும் சுதந்திர நாடுகள்.  முன்னாள் இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த  இந்த நாடுகள் யாவும் இணைந்து, இங்கிலாந்து நாட்டுடனும்;  அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த தங்கள் நாடுகளுக்கு  இடையேயான நல்லுறவுக்காகவும்  தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு காமன்வெல்த் நாடுகள் என்ற அமைப்பு.  ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளின் பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றை மேம்படுத்தத் தோற்றுவிக்கப்பட்டதே  இந்த அமைப்பு என்று இந்த அமைப்பு தோன்றியதற்குக்  காரணம், நோக்கம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.  அத்துடன் அமைப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைவதே அமைப்பின்  கொள்கைகளும், செயல்பாடுகளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் உறுப்பினர் பதவி என்பது கட்டாயம் அல்ல.  இங்கிலாந்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக விண்ணப்பித்து இந்த காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் [5] [6].


உறுப்பினர் பதவி கட்டாயம் இல்லை என்பது மிக மிக முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.   இதையும் தெரிந்துகொண்டே உறுப்பினராக இருக்க விழைவது இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அடிமை மனப்பான்மையையே காட்டுகிறது.  ஒருகாலத்தில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த அமெரிக்கா இந்த அமைப்பில் பங்கெடுக்க விண்ணப்பிக்கவும் இல்லை, உறுப்பினராகவும் இல்லை. இது அமெரிக்காவின் சுயமதிப்பின் நிலையை, சுதந்திர மனப்பான்மையைப் பறைசாற்றுகிறது.  வரலாற்று உண்மையாக இருந்தாலும் தங்கள் நாடு அடுத்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு என்ற அவமானகரமான காலநிலையை அமெரிக்கா மறக்கவிரும்பும் செயலாகவே இதைக் கருதலாம்.  அமெரிக்கா எடுத்த இந்த நிலைப்பாட்டின் காரணமாக அமெரிக்காவின் சுயகௌரவத்தைப் பாராட்டவே தோன்றுகிறது.

அமெரிக்காவைப் போன்றே எகிப்து, ஜோர்டான், ஈராக், பாலஸ்தீனம், சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரெய்ன், ஓமன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் யாவும்  தங்களுக்கு இங்கிலாந்துடன் வரலாற்றுத் தொடர்பு இருந்தும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை [5]. 

அக்டோபர் 3, 2013 அன்று காம்பியா காமன்வெல்த் நாடுகளின் அமைப்பிலிருந்து வெளியேறி உள்ளது [7]. அதன் தலைவர் யஹ்யா ஜம்மே  (Yahya Jammeh) இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு என்பதனைக் குறிக்கும் அமைப்புடன் எந்த உறவும் தங்கள் நாட்டிற்குத் தேவையில்லை என அறிவித்துள்ளார் [8]. இரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும், 4,000 சதுர மைல் பரப்பளவுள்ள மிகச் சிறிய நாடு  இந்தக் காம்பியா.

இதனால் இந்த அமைப்பில் பெருமையுடன் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு, "காமன்சென்ஸ் இல்லாத காமன்வெல்த் நாடுகளே, தெளிவு பெறுங்கள், நாமார்க்கும் குடியல்லோம்," என்று உணர்த்த வேண்டும் என்பது தெரிகிறது. இந்நாடுகளுக்கு அடிமை நாடாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை  என்பது  விளங்கவில்லை.  இதுவரை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு உருப்படியாக என்ன சாதித்தது என்பதும் கேள்விக்குரியதே.

உலக அமைதிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட உலக ஐக்கிய நாடுகளின் சபையே இலங்கையின் தமிழர்களுக்குச் சரியான உதவி செய்யாமல் இருக்கும் நிலையில்,  காமன்வெல்த் நாடுகள் அமைப்பு பெரிதாக என்ன உதவி செய்துவிடப்போகிறது? காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் 'ஹாரேர் பொதுநலப் பிரகடனம்' (Harare Commonwealth Declaration) அறிவுறுத்தும் கொள்கைக்கு [9] புறம்பாக, மக்களாட்சி வழிமுறைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நைஜீரியாவும், பாகிஸ்தானும், சிம்பாபுவே நாடுகளும் முறையே 1995, 1999, 2002 ஆண்டுகள் தற்காலிகமாக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டன.  அதிலும் பாகிஸ்தான் இருமுறை நீக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது ஃபிஜி நாடு நீக்கப்பட்ட நிலையில் உள்ளது [5].  இலங்கையின் மனித உரிமை மீறல் செயல்களுக்காக அந்நாட்டின் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி கனடாவும் [10], இங்கிலாந்தும் [11] இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பின.  ஆனால் இந்தியாவில் இருந்து எந்த எதிர்ப்பும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. 

Adding insult to injury என்று ஆங்கிலத்தில் கூறுவது போல பட்ட காயத்தினைப் பெரிதுபடுத்தி நோகச் செய்யும் செயலாக இருக்கிறது மனித உரிமைகளை மீறிய, காமன்வெல்த் மாநாட்டின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும்  இலங்கையிலேயே காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் செயல். நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்பினர் பதவியை நீக்கப்பட வேண்டிய நாட்டில் நடக்கப்போகும் இம்மாடு இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இல்லவே இல்லை என்பதைச்  சிறு குழந்தை கூடச் சொல்லிவிடும்.  காமன்வெல்த் நாடுகளின் இந்த மாநாடு [12] இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம்.  வரும் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 17 தேதி வரை நடக்கப்போகும் மாநாட்டின் விளைவுகள்  இலங்கை அதிபதிக்கு ஒருவகையில் பாராட்டாகவே அமையும்.  சென்ற முறை 2011 ஆம் ஆண்டு நடந்த இம்மாநாடு ஆஸ்திரேலியாவில் கூட்டப்பட்டதால்  அந்த நாட்டின் பிரதமர் 'ஜூலியா கில்லர்ட்' (Julia Gillard) 'காமன்வெல்த் சேர் பெர்சன் இன் ஆஃபிஸ்' (Commonwealth Chairperson-in-Office) என்ற தலைவர்  பதவியைப் பெற்றார்.  ஆஸ்திரேலியப் பிரதமரின் இப்பதவிக்காலம் வரும் மாநாட்டுடன் முடிவடைந்து அடுத்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இப்பதவியைப் பெறுவார்; தொடர்ந்து அடுத்த மாநாடு நடக்கும் 2015 ஆம் ஆண்டு வரை இப்பதவியையும் வகிப்பார் [5].  இந்த பதவியளிப்பு நடவடிக்கை இலங்கையின் மனிதநேய மீறல்களை ஆதரிப்பதாகவே அமைகிறது. நடக்கப்போகும்  இலங்கை மாநாட்டினால் அநியாயமாக உயிர்நீத்த அல்லது உயிர் நீக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்கும் நீதி என்ன என்பது விளங்கவில்லை.

காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பது என்பது ஒரு தனிப்பட்ட நாட்டின் விருப்பத்தின் பேரில் அமைந்திருக்கும் பொழுது (அதாவது உறுப்பினராக இருக்க எந்த ஒரு கட்டாயமும் இல்லாத பொழுது); காமன்வெல்த் நாடுகள்  அமைப்பு ஏற்பட்ட நோக்கத்திற்கும் செயல்பாடுகளுக்கும்  முரணாக இலங்கையில் நிலைமை மாறும்பொழுது; முதன் முதலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து வெளிவந்திருக்க வேண்டிய இந்திய அரசு ஏன் இன்னமும் உறுப்பினராக ஒட்டிக் கொண்டிருக்கிறது?  பங்களாதேஷை 1972 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு  ஒரு தனி நாடாக அங்கீகரித்த பொழுது, தனது கண்டனத்தைக் காட்ட பாகிஸ்தான் கூட உறுப்பினர் பதவியை ஒருமுறை  நீக்கிக் கொண்டு தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது [5].  காமன்வெல்த் நாடுகள்  அமைப்பில் அதிக மக்கள்தொகை உள்ள நாடான இந்தியா இது போன்று அமைப்பை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருந்தால் அது இலங்கை அரசின் மனிதநேயத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு நல்லதொரு கண்டனமாக அமைந்திருக்கும்.

குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டிக்காத பொழுது அவர்கள் குற்றத்தை ஊக்குவிப்பவர்களாக ஆகிறார்கள், அத்துடன் அவர்களும் குற்றத்திற்கு உடந்தையாகவும்  ஆகிறார்கள் என்பது பொது மொழி.  இந்திய அரசுக்குத்  தான் இன்னமும் இங்கிலாந்து நாட்டின் அடிமை நாடு என்ற எண்ணம் மாறவில்லை என்பதையே காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் இச்செயல் தெளிவு படுத்துகிறது.  இந்தியா ஒரு  சுதந்திர நாடாக இருக்கும் பொழுது, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு சரிவரத் தன் கடமையை ஆற்றாத பொழுது அந்த அமைப்பிலிருந்து வெளியேற இந்தியாவிற்கு என்ன தயக்கம்? ஏன் துணிச்சல் இல்லை?

எதற்கெடுத்தாலும் அமெரிக்கா என்று பெருமை பேசி அதன் வழி நடக்க ஆசைகொள்ளும் இந்தியர்கள் இந்த நிலைமையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன்னுதாரணமாகக் கொள்வது நல்லது. காமன்வெல்த் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர் பதவியை மறுக்கும் இந்தியாவின் நடவடிக்கை மனித உரிமைகளை ஆதரிக்க முன்வரும் செயலாக அமையும், பாராட்டவும் படும்.  இந்தியா ஒரு நல்ல வழிகாட்டியாக அமையுமா?



சான்றாதாரங்கள்:
1. காமன்வெல்த் மாநாடு: பிரதமருக்கு ஜெ., கடிதம், அக்டோபர் 17, 2013, http://www.dinamalar.com/news_detail.asp?id=828940

2. தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்,  அக்டோபர் 15, 2013, http://www.bbc.co.uk/tamil/india/2013/10/131015_thiyaguwid.shtml

3. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா பிரதமர் முடிவு, அக்டோபர் 7, 2013, http://tinyurl.com/kk7orao

4. இலங்கையில், காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது : இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தல்,  அக்டோபர் 18, 2013, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=65720

5. Commonwealth of Nations - https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations

6. Commonwealth of Nations membership criteria  - https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations_membership_criteria

7. Statement by Commonwealth Secretary-General Kamalesh Sharma on The Gambia - http://thecommonwealth.org/media/news/statement-commonwealth-secretary-general-kamalesh-sharma-gambia

8. Q & A: Gambia and the Commonwealth,  David Blair1, 03 Oct 2013, Telegraph, http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/gambia/10352888/Q-and-A-Gambia-and-the-Commonwealth.html

9. Harare Declaration - https://en.wikipedia.org/wiki/Harare_Declaration

10. Mike Blanchfield (14 January 2013). "Harper rebukes Sri Lanka over jurist's dismissal as talk of summit boycott heats up". The Globe and Mail.  - http://www.theglobeandmail.com/news/politics/harper-rebukes-sri-lanka-over-jurists-dismissal-as-talk-of-summit-boycott-heats-up/article7341673/

11. David Miliband (11 March 2013). "Britain must stand up for human rights in Sri Lanka". M.guardian.co.uk. - http://www.theguardian.com/commentisfree/2013/mar/11/britain-human-rights-sri-lanka?view=mobile

12. Commonwealth Heads of Government Meeting 2013 - http://thecommonwealth.org/


Picture Courtesy:
Wikipedia: https://upload.wikimedia.org/wikipedia/commons/5/51/Commonwealth_of_Nations.svg
The Commonwealth - http://thecommonwealth.org/sites/default/files/styles/large/public/images/event/chogm-flags.jpg?itok=gXMAF4HF




நன்றி:
திண்ணை
அக்டோபர் 20, 2013 


#திண்ணை, # வரலாறு, #Themozhi  



Monday, October 7, 2013

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்


சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.  இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்' (group ‘A’ aviation pilot license)  பெற்றார்.  பிறகு தொழில் முறை விமானியாக 'பிரிவு ‘பி’ விமானி உரிமம்' (group B commercial pilot's license) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும்  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகத்  தடைப்பட்டது.  விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று, பிறகு ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948 இல் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார். 

உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் (Wright Brothers) நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் டிசம்பர் 17, 1903 (at Kitty Hawk, North Carolina on December 17, 1903) அன்று வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது.  உலக அளவில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் விமானச் சேவையில் 1909 ஆம் ஆண்டு முதல் இறங்கின.  ‘வான்பயணத்தின் பொற்காலம்’ (Aviation's Golden Age 1918–1939) எனக் கருதப்பட்ட காலம் என்பது முதலாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, இரண்டாம் உலகப்போரின் துவக்கம் உரையில் உள்ள இடைப்பட்ட காலமாகும். இக்காலம் விமானங்களின் தொழில் நுட்பமும் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்த காலமாகும்.

இக்காலத்தில் விமானச் சேவை வணிக அளவில் வளர்ந்தபொழுது பல விமானிகள் தோன்றினர்.  அவர்களில் மகளிர் பலரும் அடங்குவர்.  அமெரிக்காவின் ‘ஹரியெட் குயிம்பி’ (Harriet  Quimby) என்ற பெண்மணி 1911 ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்மணி ஆவார்.  இவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் (அக்காலத்தில் சரளா ஷர்மாவாக இருந்தவர்) விமானி உரிமம் பெற்றார்.  தற்காலத்தின் "ஏர் இந்தியா" விமான நிறுவனம் (அக்கால இந்தியாவில் தனியார் நிறுவனமாக  ஜே.ஆர்.டி டாட்டாவும் அவர் குடும்பத்தினரும் துவக்கிய வர்த்தக விமானச்சேவை) துவக்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த  காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது ஒரு செயற்கரிய வியப்பூட்டும் சாதனை.

வாழ்க்கைக் குறிப்பு:
சுதந்திரத்திற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் (Lahore,  Pakistan) பி.டி. ஷர்மா ( P. D. Sharma) என்பவரைத் தனது 16 வயதில் மணந்த சரளா பொது ஆண்டு 1914 இல் பிறந்தவர்.  இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி'  (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது.   பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும்  (Badrinath and Haridwar) இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது.  சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள்.  முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக (airmail pilot's license) இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி.டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில்  பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.

தனது மனைவி சரளாவையும் விமானியாக்க அவரது கணவர் ஆர்வமுடன் இருந்தார்.  அவரையும் விடக்  கணவர் ஷர்மாவின் தந்தை மிகவும் தூண்டுகோலாக இருந்து மருமகளை ஊக்குவித்து வந்தார்.  தனது மகனிடம் அவர் சரளாவிற்கு விமானப் பயிற்சியைத் துவக்க வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.  ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிட்டாததைக் கண்ட அவர் தானே தனது மருமகளை "லாகூர் ஃப்ளையிங் கிளப்" (Lahore Flying Club) இல் சேர்த்து 'டிம்மி தஸ்த்தூர்' (Timmy Dastur) என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவின் முதல் பெண் விமானி:
பயிற்சியாளர் தஸ்த்தூர் சரளாவிற்கு  சரியாக  8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.  தனது கணவர் பணியிலிருந்து வரும்வரை காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 ஆண்டு 'ஜிப்சி மாத்' (Gypsy Moth) என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார்.  அப்பொழுது நான்கு வயது மகள்  ஒருத்திக்கு இளந்தாயாக இருந்த சரளாவிற்கு வயது 21 தான்.  தான்  வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.

இவர் விமானம் ஓட்ட கற்ற பிறகே கார் மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாகக் கூறும் இவர், இவரது நோக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே ஆள் ஃப்ளையிங் கிளப்பில் வேலை செய்த ஓர் ஊழியர் மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார். முதல் பெண் விமானியாகப் பறந்ததற்குப்  பிறகு தனியாக லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.  

இவர் கணவர் பி.டி. ஷர்மா ஒரு விமான விபத்தில் 1939 ஆம் ஆண்டு இறந்த பிறகு தனது 24 வயதில் தனது ஒன்று மற்றும் ஆறு வயது மகள்களுடன்  சரளா தனித்து விடப்பட்டார்.  தொடர்ந்து தொழில்முறை விமானியாகத் தகுதி பெற விரும்பி இவர் ஜோத்பூர் (Jodhpur) சென்றார்.  அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடைப்பட்டது. எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் லாகூர் சென்று 'மேயோ கலைக் கல்லூரி'யில் (Mayo School of Art) ஓவியம் கற்று வங்காள முறை ஓவியத்தில் (trained in the Bengal school of painting) நுண்கலையில் பட்டயப் படிப்பை (diploma in fine arts) முடித்தார். 

சுதந்திர இந்தியாவில் சரளாவின் வாழ்க்கை:
நாடு சுதந்திரம் அடையும் நாள் அருகாமையில் வரும் பொழுது பாகிஸ்தானில் கலவரங்கள் அதிகரித்தது.  பெண்கள் அவர்களது கணவர் அல்லது வீட்டில் பிற ஆண்கள் இறக்க நேர்ந்தால் எதிரிகள் கையில் சீரழியாமல் இருக்க, நஞ்சுண்டு உயிரை மாய்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு நச்சுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  கைம்பெண்ணாக இரு சிறுமிகளுடன் இருந்த சரளாவை டெல்லிக்குச்  சென்றுவிடும்படி  ஆலோசனை வழங்கப்பட்டது.  அவரும் நிலைமையை உத்தேசித்து தனது மகள்களுடன் புகைவண்டியில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். 

டெல்லியில் ஓவியங்களை வரைந்தும், ஆடை ஆபரணங்களை வடிவமைத்தும் விற்பனை செய்து ஒரு தொழிலதிபராக சரளா வாழ்க்கையைத் துவக்கினார்.  மகரிஷி சாமி தயானந்த சரஸ்வதி துவக்கிய ஆரிய சமாஜத்தின் வழிநடந்த இவர், அந்த சமாஜத்தின் இந்துமதச் சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் தனது பெற்றோர் தந்த ஆதரவினால் மீண்டும் பி.பி. தாக்ரல் (P. P. Thakral) என்பவரை 1948 ஆம் ஆண்டு மறுமணம் புரிந்து கொண்டார்.  தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளா  1948  ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் பெற்றார்.  அப்பொழுது செய்தித்தாளில் வெளிவந்த, ராஜஸ்தான் அரச குடும்பத்தின் அரச குடும்ப விமானத்திற்குப் பெண் விமானி தேவை என்ற விளம்பரத்திற்கு விண்ணப்பித்தார். ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக (job in Rajasthan as a personal pilot to the royalty of Alwar) ஆறு மாதங்கள் அப்பணியை மேற்கொண்டார்.


மார்ச் 15, 2009 இல் உயிர்நீத்த சரளா தன்னுடைய வாழ்நாட்களின் பிற்பகுதியில்  ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பணியில் முழு ஈடுபாடு காட்டினார்.  அச்சுப்பட்டை ஓவியங்களால் இவர் வடிவமைத்த சேலைகளும், கைவினை ஆபரணங்களும் பலராலும் விரும்பப்பட்டன.  அவரது வாடிக்கையாளர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட் (Vijaylaxmi Pandit) குறிப்பிடத் தகுந்த ஒருவர்




ஆதாரங்கள்:
First Licensed Women Pilots, 1936 - India - Sarla Thakral
http://centennialofwomenpilots.com/node/25

Women's Day: Top 100 coolest women of all time, Sarla Thakral: The first Indian woman to fly a plane, back in 1936.
http://ibnlive.in.com/photogallery/inside_photo_new_des.php?slideshow_id=3515&num=72

Flying colours & ground reality, Smriti Kak Ramachandran, February 5, 2006, The Tribune
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm

Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231

Remember Sarla Thakral's maiden flight of fancy, Nov 25, 2009, DNA INDIA
http://www.dnaindia.com/speakup/1316073/report-remember-sarla-thakrals-maiden-flight-of-fancy

Sarla Sharma: Being a Woman and a Pilot in Lahore in 1936, Anurag Sharma
http://www.smartindian.com/Sarla-Sharma-Thakral-Pilot.html

Sarla Thakral - https://en.wikipedia.org/wiki/Sarla_Thakral

India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/

Rahul Ittal's statement on India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/#comment-371

இந்தியாவின் முதல் பெண் விமானி, டிசம்பர் 15, 2009, விடுதலை
http://viduthalai.periyar.org.in/20091215/news21.html


காணொளி:
Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231


படங்கள் உதவி:
Sarla Thakral, First Woman Pilot of India - Late 1930's   - http://www.oldindianphotos.in/2012/07/sarla-thakral-first-woman-pilot-of.html   &
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm


நன்றி:
திண்ணை
அக்டோபர் 7, 2013 

#திண்ணை, #பெண்ணியம்,  #Themozhi  




Sunday, June 23, 2013

மொழியின் அளவுகோல்

 மொழியின் அளவுகோல்


ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது?

உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்),
   ●  10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன
   ●  22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன
   ●  35% மொழிகள் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றன ஆனால் அவற்றின் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது
   ●  21% மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப்படுகிறது
   ●  13% மொழிகள் அழியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன, இதனைப் பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் இம்மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.

இந்த 7105 உலக மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்கா நாடுகளில் 2146, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஆஸ்திரேலிய/பசிபிக் நாடுகளில் 1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. வாழும் மொழிகள் அதிக எண்ணிக்கையில் ஆசியாவிலும், எண்ணிக்கையில் குறைவாக ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன.  அத்துடன் அதிக மொழிகள் அழியக்கூடிய ஆபத்தில் இருப்பது அமெரிக்க நாடுகளில். வாழும் மொழிகளில் பல நல்ல பயன்பாட்டில் இருப்பது ஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய/பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில்.  ஐரோப்பிய நாடுகளில் மொழிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பல மொழிகள் நல்ல மேன்மையான நிலையில் பயன்பாட்டில் உள்ளன.

இது போன்ற மொழிகளைப் பற்றிய புள்ளி விபரங்களைத் தருவது ‘எத்னலாக்’ (Ethnologue – http://www.ethnologue.com/). எத்னலாக் என்பது ஒரு விரிவான மொழி அட்டவணை (comprehensive language catalogue). உலகளவில் மொழியியல் வல்லுநர்களுக்கும், மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஓர் இன்றியமையாத பட்டியல்.  பொதுவாக மதத்தினைப் பரப்பும் பொருட்டு தங்கள் மறை நூல்களை/விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்குப் பெரும் பொருளைச்  செலவு செய்ய எண்ணும் மத நிர்வாகத்தினர் இந்தப் பட்டியலின் துணையுடன் ஒரு குறிப்பிட்ட மொழியின் தற்கால நிலையை அறிந்து அதற்கேற்பப்  பொருட் செலவு செய்வதைப் பற்றி முடிவெடுப்பார்கள். இது போன்ற மற்றும் பல மொழி சார்ந்த திட்டங்களுக்கும் இப்பட்டியல் தரும் புள்ளி விபரங்கள் உதவும்.

இந்தப் பட்டியல் 1951 ஆண்டு முதற்கொண்டு ‘தி சம்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லிங்க்விஸ்டிக்ஸ்’ (The Summer Institute of Linguistics – SIL) என்ற மொழியியல் நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் தொகுக்கப் பட்டது  இந்த விரிவான மொழி அட்டவணை. இப்பட்டியல் உலகில் உள்ள  புழக்கத்தில் உள்ள அனைத்து மொழிகளையும், 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு மறைந்த மொழிகளையும் பற்றிய செய்திகளைத் தரும் ஒரு தகவல் களஞ்சியம். இப்பட்டியல் தரும் புள்ளி விபரங்களில் ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிவின் மக்கள்தொகை, அவர்கள் கல்வியறிவின் நிலை, உலகின் எப்பகுதிகளில் அம்மொழி பேசப்படுகிறது, அதன் தற்கால வளர்ச்சி நிலை போன்ற தகவல்கள் அடங்கும். ஏறத்தாழ ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய  மேம்படுத்தப்பட்ட ‘எத்னலாக்’ பதிப்பு வெளியிடப்படுகிறது. தற்பொழுது வெளிவந்துள்ள இப்புதிய பதிப்பின்படி 1950 ஆம் ஆண்டு வழக்கில் இருந்த மொழிகளில் 375 மொழிகள்  மறைந்துவிட்டது தெரிய வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் (மார்ச் 2013) வெளிவந்துள்ள ‘எத்னலாக்’ நூலின் புதிய 17 ஆம் பதிப்பு இணையத்தின் வழியாக மொழியியல் துறை வல்லுநர்கள் மட்டுமின்றி, மொழியைப் பற்றிய ஆர்வலர்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நூல் வடிவம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இப்புதிய பதிப்பில் ஒவ்வொரு மொழிக்கும் மூன்றெழுத்திலான ஒரு குறியீடு (ISO-codes, three-letter language identifier codes) அளிக்கப்பட்டுள்ளது. இக்குறியீடுகள் சர்வதேசத் தரநிர்ணய அமைப்பின் (International Organization for Standardization, ISO 639-3) முறையினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்றெழுத்துக் குறியீடுகள் ஆகும். இதில் தமிழுக்காக ஒதுக்கப்பட்ட குறியீடு  tam (http://www.ethnologue.com/language/tam). பொதுவாக ஒரு மொழியைப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நிலை இருக்கும்பொழுது இந்தச் சீரான குறியீட்டு முறை குழப்பத்தைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, சமஸ்கிருதம் என்பது சான்ஸ்க்ரீட்  என்றும் வடமொழி என்றும் அறியப்படும் பொழுது ‘san’ என்னும் அதன் குறியீடு குழப்பத்தைத் தவிர்க்கிறது (http://www.ethnologue.com/language/san). கவனத்தைக் கவரும் பக்கக் குறிப்பு ஒன்று: இந்த அட்டவணை தரும் தகவலின்படி சமஸ்கிருதம் ஒரு  செம்மொழி (Classical language) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

இப்பட்டியல் தமிழ் மொழியைப் பற்றி அளிக்கும் தகவல்: தமிழ் உலகளவில் 68 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதில் 60 மில்லியன் தமிழர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். இது தமிழகப்பகுதியில் பெரும்பாலும் பேசப்படுகிறது.  அத்துடன் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அன்றி இரண்டாம் நிலையில் ஒரு மாநிலத்தின் மொழியாக உள்ளது (Language Status – 2 /Provincial). இளநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகிறது.  1727 ஆம் ஆண்டு முதல்  தமிழ் விவிலியத்தின் முழுமையான பதிப்பு வழக்கில் உள்ளது.  அத்துடன் உலகில் மற்ற எந்தெந்த  நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது  என்றும், எத்தனை வட்டார வழக்குகள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலேஷியா, சிங்கப்பூர், மரைட்டஸ், ஸ்ரீலங்கா நாடுகளில் தமிழின் நிலை பற்றிய மேலதிகத் தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது.  அவற்றில் ஸ்ரீலங்காவில் மட்டும் தமிழ் ஆட்சி மொழியின் நிலையிலும் (நிலை 1), மற்ற பிற நாடுகளில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் நிலையிலும் (நிலை 4) இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மொழிவாரியாகவும், உலகின் பகுதிவாரியாகவும், நாடுகள் வாரியாகவும் தகவல்கள் வழங்கப் பட்டுள்ளன (http://www.ethnologue.com/statistics). குறிப்பாக இந்தியாவில் மொழிகளின் நிலையைப் பற்றி அறிய விரும்பினால், இத்தளம் வழங்கும், இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் பகுதிகளை விளக்கும் வரைபடங்கள் (http://www.ethnologue.com/country/IN/maps), மற்றும் இந்திய மொழிகளின் நிலையைப் பற்றிய தகவல்கள் (http://www.ethnologue.com/country/IN) ஆகியவற்றின் துணை கொண்டு அறிந்து கொள்ளலாம்.  இந்திய மொழிகள் எனப் பட்டியலிடப் பட்ட 461 மொழிகளில் 447 மொழிகள் மட்டுமே தற்பொழுது புழக்கத்தில் உள்ளன,14 மொழிகள் முற்றும் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. அவ்வாறு இருக்கும் 447 மொழிகளிலும் 55 மொழிகள் ஆபத்தான நிலையிலும், 12 அழிவுப் பாதையிலும் சென்று கொண்டுள்ளன, 380 மொழிகள் மட்டுமே நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளன.

மொழியின் அளவுகோல்:
இவ்வாறு பற்பல தகவல்களைத் திரட்டித் தரும் இந்த அட்டவணை, மொழிகளின் வளர்ச்சி நிலையை எவ்வாறு அளக்கிறது என்பதையும் அறிந்து கொள்வது நம் மொழியின் வளர்ச்சியை நாம் கண்காணிக்க உதவும். இப்புதிய பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ‘மொழிமேகம்’ (Language Cloud) என்ற விளக்கப் படம் ஒரு ‘மொழிவளர்ச்சி அளவுகோல்’ ஆகும். ஒரு மொழியின் தற்கால வளர்ச்சி நிலையை உலகில் உள்ள  மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வண்ணம் வரைபடமாகவும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த அளவீடுகள் மிகவும் பயனுள்ளது. மொழியின் உபயோக நிலையைப் பல்வேறு வர்ணங்களால் குறியிட்டு விளக்கப்படுவதால் இம்முறை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இந்த அளவிடும் முறை EGIDS (Expanded Graded Intergenerational Disruption Scale) என்று குறிப்பிடப்படுகிறது.  ‘ஜாஷுவா ஃபிஷ்மேன்’ (Joshua Fishman) என்னும் மொழியியல் வல்லுநர் (linguist) 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘ரிவர்சிங் லாங்குவேஜ் ஷிஃபிட்’ (Reversing Language Shift) என்னும் நூலில் அவர் உருவாக்கியிருந்த GIDS (Graded Intergenerational Disruption Scale) என்ற முறையினை அடிப்படையாகக் கொண்டு, அதனை மேலும் விரிவுபடுத்தியதாக இம்முறை விளங்குகிறது. 0 முதல் 10 வரை உள்ள அளவுகளில் குறிக்கப்படும் இந்த அளவுகோலின்படி, 0 என்னும் நிலை ஆங்கிலம் போன்ற ஒரு பன்னாட்டு மொழியையும், 10 என்பது மறைந்துவிட்ட மொழியையும் குறிக்கும். மேலும் இந்த 0 – 10 வரை உள்ள மொழியின் வளர்ச்சி நிலையை மேலும் தெளிவாக வகைப்படுத்த, மொழிகளைப் பல பிரிவுகளாகப் பிரித்து அப்பிரிவுகளுக்கு ஒரு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது.

ஊதா = (EGIDS 0-4) —  நிலைப்படுத்தப்பட்டுவிட்ட மொழி – மொழி நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளது
நீலம் = (EGIDS 5) — வளரும் மொழி – மொழி பயன்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கிறது
பச்சை = (EGIDS 6a) — உயிரோட்டமுள்ள மொழி – மொழி நல்ல பயன்பாட்டில் இருக்கிறது ஆனால் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது, ஆனால் பரவலான பயன்பாட்டில் இல்லை
மஞ்சள் = (EGIDS 6b-7) — சோதனையைச் சந்தித்துள்ள மொழி – மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கிறது, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப் படுவது மட்டுமே மொழியின் நிலை மாறக்கூடும் என்று நம்பிக்கையைத் தரும் வகையில் உள்ளது
சிவப்பு = (EGIDS 8a-9) — அழியும் நிலையில் உள்ள மொழி – மொழி அழியும் ஆபத்தான நிலையில் இருக்கிறது, இதனைப் பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் மொழியின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.
கருப்பு = (EGIDS 10) — அழிந்துவிட்ட மொழி – யாருமே பயன்படுத்தாத நிலையை அடைந்து, யாரும் தங்கள் கலாச்சாரப் பின்னணியாகவும் அந்த மொழியை அடையாளம் காட்டாத நிலை (கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மேற்கூறப்பட்ட இந்த அளவீட்டை அடிப்படையாகக் கொண்டது).

இந்த அளவிடும் முறைப்படி மொழியின் தற்கால நிலையென (0 விலிருந்து 10 வரையான எண்)  கணக்கிடப்பட்ட EGIDS அளவு உலகில் அம்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டு, பிறகு இம்மொழியையும் அதனது பயன்பாட்டு நிலையைக் குறிக்கும் வண்ணத்தில் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் ஒரு புள்ளியாகக் குறிப்பதால், ஒரே பார்வையில் அந்த மொழியின் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம்.  உலகத்தில் உள்ள 7105 மொழிகளும் இந்த வரைபடத்தில் அதன் வளர்ச்சிக்கேற்ப ஒரு புள்ளியாகக் குறிப்பிடப்படுகிறது. நேர் அச்சில்(y axis) மொழியினைப் பேசும் மக்கள்தொகை ‘மடக்கை அளவிலும்’ (in logarithmic scale, 100 = 1; 102 = 100; 104 = 10,000; 106 = 1,000,000; 108 = 100,000,000), கிடை அச்சில் (x axis) EGIDS அளவீடான மொழியின் வளர்ச்சியின் அளவும் குறிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து மொழியின் புள்ளிகளையும் ஒருங்கே பார்க்கும் பொழுது இப்படம் ஒரு மேகம் போலத் தோற்றமளிப்பதால் ‘மொழிமேகம்’ என்று இந்த வரைபடம் குறிப்பிடப்படுகிறது.  அதிகமாகப் பேசப்படும், நன்கு வளர்ச்சியடைந்த மொழியானது  படத்தில் இடது மேற்புறம் ஊதா வண்ணத்திலும் அழிந்துவிட்ட மொழியானது  படத்தில் வலது கீழ்ப்புறத்தில் கருப்பு வண்ணத்திலும்  இடம் பெறும்.

ஒவ்வொரு மொழிக்காகவும் ஒரு குறியீடு கொடுக்கப்பட்டிருப்பது போலவே, ஒவ்வொரு மொழிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அதன் தனிப் பக்கத்தில் மொழிமேகத்தில் அந்த மொழியின் வளர்ச்சியைக் குறிக்கும் வரைபடமும் கொடுக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில், படம் – 1 இல் ‘மொழியின் அளவுகோல்’; படம் -2 இல் மொழியின் அளவுகோலைக் கொண்டு உருவாக்கப் பட்ட மாதிரி ‘மொழிமேகம்’ விளக்கப்படத்தில் ‘தமிழின் வளர்ச்சி நிலை’ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.







தமிழ் மொழியின் நிலை தற்கால நிலை:
இந்த மொழியின் அளவுகோலின்படி, ஒரு மொழி பயிற்றுமொழியாக இருப்பது ஒரு முக்கிய அடிப்படைத் தகுதியாகவும், அளவுக்குறியாகவும் இருக்கிறது.  ஒருவருக்கு அவரது தாய்மொழியில் படிப்பதுதான் எளிது என்ற ஆராய்ச்சி முடிவுகளைக் கருத்தில் கொண்டு, உலக ஐக்கிய நாடுகள் சபை (UNESCO) தாய்மொழிக் கல்வியினை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழி நாளாகக் குறிப்பிட்டு, விழா எடுத்து தாய்மொழியின் முக்கியத்தை உணர்த்தப் பாடுபட்டு வருகிறது. மொழிகளைப் பாதுகாக்க உலகம் தழுவிய முறையில் எடுக்கப்படும் உன்னதமான நடவடிக்கையாக இச்செயல் விளங்குகிறது.

இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும் அது ஒரு மாநில மொழி மட்டுமே, இந்தியாவில் தமிழ் ஓர் ஆட்சி மொழியல்ல. தமிழர்களும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கௌரவமாகவும், ஆங்கில நூல்களைப் படித்து விவாதிப்பதைப் பெருமையாகவும் பல தலைமுறைகளாகக் கருதி வருகின்றனர். மேலும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அறிவும் குறைவு என்ற ஆணித்தரமான மனப்பான்மையும் உள்ளவர்கள் பெரும்பாலான தமிழர்கள்.

இவ்வாறாக மொழியின் அளவுகோலின்படி மொழியின் மாட்சியான நிலையெனக் குறிக்கும் ஒவ்வொரு அளவீடுகளிலும் தமிழின் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழின் நிலை இவ்வாறிருக்க, சமீபத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளும், பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி என்ற நிலைப்பாடும் மொழியின் வளர்ச்சி அளவுகோலின் பயிற்றுமொழி என்ற தகுதியிலிருந்தும்  தமிழை விலக்கிச் செல்லும் முதல் நடவடிக்கையாக இருக்கிறது.  இந்த முடிவு சரிதானா என்பதை மொழியின் ஆர்வலர்கள் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகிறது.


References:
[1] Ethnologue’s newest edition reports vitality of sign languages worldwide. (http://www.sil.org/about/news/ethnologue%E2%80%99s-newest-edition-reports-vitality-sign-languages-worldwide)
[2] Assessing endangerment: Expanding Fishman’s GIDS. Revue Roumaine de Linguistique, Paul M. Lewis & Gary F. Simons. 2010. 55.2: 103–20. (http://www-01.sil.org/~simonsg/preprint/EGIDS.pdf)
[3] Language development versus language endangerment: Assessing the situation worldwide, Gary F. Simons, SIL International. IAS and GILLBT conference on Language and Culture in National Development, University of Ghana, Legon, 12–13 April 2012. (http://www-01.sil.org/~simonsg/presentation/Ghana%202012.pdf)
[4] Expanded Graded Intergenerational Disruption Scale.(http://surveywiki.info/index.php/EGIDS)
[5] International Mother Language Day (IMLD). (http://www.un.org/en/events/motherlanguageday/)
[6] UNESCO Atlas of the World’s Languages in Danger.(http://www.unesco.org/culture/languages-atlas/index.php)
[7] Analyzing the role of instructional language in Enhancing scientific cognition of elementary level Students belonging to marginalized communities; Sindh – Pakistan, Dr. Tayyaba Zarif and Dr. Aijaz Ahmed. ISSN: 2186-8492, ISSN: 2186-8484 Print Vol. 2. No. 1. February 2013. (http://www.ajssh.leena-luna.co.jp/AJSSHPDFs/Vol.2(1)/AJSSH2013(2.1-29).pdf)
[8] Karuna opposes English in govt schools as medium of instructions, Chennai, May 14, 2013. (http://indiatoday.intoday.in/story/karuna-opposes-english-in-govt-schools-as-medium-of-instructions/1/271024.html)




நன்றி: திண்ணை - ஜூன் 23, 2013

#திண்ணை, #அறிவியல், #மொழியியல், #Themozhi 



Monday, May 27, 2013

நீராதாரத்தின் எதிர்காலம்

நீராதாரத்தின் எதிர்காலம்




நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.  உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம். இதனால் மூன்றாம் உலகப் போரும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கப் படுகிறது. நீராதாரத்தைத் தடையின்றிப் பெற மரம் வளர்த்தல், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் தன்னார்வக் குழுக்களும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.  அத்துடன் நீராதாரத்தின் தேவையைத் திட்டமிடத் தொழில்நுட்பமும் உதவக்கூடும் என்றால் அந்த முயற்சி வரவேற்கத் தக்கதாகவே இருக்கும்.

உலக ஆதாரவளங்கள்  நிலையம் (World Resources Institute / WRI) உலகில் நீராதாரத்தில் ஏற்படும் மாறுதல்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களின் தாக்கத்தை முன்னறிய உதவும் ஒரு மென்பொருள் தளத்தை உருவாக்கியுள்ளது.  அதிக வெள்ளப்பெருக்கினாலோ அல்லது நீரற்ற வறட்சி காரணமாகவோ ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கணிக்க இத்தளம் உதவ வேண்டும் என்பது இதனை உருவாக்கிய உலக ஆதாரவளங்கள்  நிலையத்தின் குறிக்கோள். “ஆக்வடக்ட்” (Aqueduct) ‘கால்வாய்’ என்ற பொருள் படும் இந்த மென்பொருள் உருவாக்கும் வரைபடங்கள், நீர்வளத்தினால் விளையக்கூடிய  அபாயங்களை ஆய்ந்தறிய ஒரு சிறந்த கருவியாகும். இதனை உருவாக்க உதவியதில் ஜி.இ (GE), ஷெல் (Shell), ப்ராக்டர் அண்ட் காம்பிள் (Procter & Gamble) போன்ற பெருவணிக நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.

இந்த வரைபடங்கள் அபாயம் குறைந்த பகுதிகளை வெளிர் மஞ்சள் நிறத்தில் தொடங்கி, அதிக அபாயத்திற்குரிய பகுதிகளைக் கருஞ்சிவப்பு நிறம் வரை வேறுபடுத்திக் காட்டும் வகையில் உருவாக்கப் படுகிறது.  இதுவரை உருவாக்கப்பட்டவற்றிலேயே மிகத் துல்லியமாகத் தகவல்களைக் குறிக்கும் வரைபடமாகவும், அத்துடன் நிலத்தடி நீர் அளவின் தகவல்களையும் இணைத்து வழங்கும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

மிகச் சமீபத்தியத் தகவல்களை (2010 ஆம் ஆண்டு) உள்ளடக்கிய இந்த வரைபட மென்பொருள், உலக அளவில் நீரினை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கூறுகளை அளக்க உதவுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் உபயோகத்திற்காகக் கிடைக்கும் நீரின் அளவின் வேறுபாடு, வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு (எத்தனை முறை வெள்ளம் ஏற்படுகிறது, அது விளைவிக்கும் பாதிப்பின் தீவிரம் போன்ற தகவல்கள்), வறட்சியின் தீவிரம் (எவ்வளவு காலத்திற்கு, எந்த அளவிற்குத் தீவிரமாக வறட்சி பாதிக்கிறது), நிலத்தடி நீரின் அளவு, மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகளின் தகவல்கள், நீர் சுத்திகரிப்பிற்குத்  தேவைப்படும் நீரின் அளவு, நீராதாரச் செய்திகளுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவம், பருவநிலை மாறுதல்களினால் ஏற்படும் இடர்கள், போன்ற பல முக்கியத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, அவற்றினை ஆராய்ந்து, கணித்து, அதன் அடிப்படையில் கிடைக்கும் தகவல்களினைக் கொண்டு இந்த வரைபடங்கள் உருவாக்கப் படுகின்றன.

அத்துடன் இந்த வரைபடங்கள் மேலே குறிப்பிடப்பட்டவற்றை உள்ளடக்கிய மிக முக்கியமான 12 நீர் அபாயக் குறியீடுகளை (water risk indicators) கொண்டு நீராதாரத் திட்டமிடலுக்கு உதவியாகக் கணிக்க உதவுகிறது.  நீராதாரப் பற்றாக்குறையினால்  வேளாண்மை, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு, வேதிப்பொருட்கள் உற்பத்தி, மின்சாரம், குறைகடத்திகள் (semiconductor), எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, சுரங்கத் தொழில், கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில் ஆகிய தொழில் துறைகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிய முடியும். மேலும், நாட்டின் எந்தப் பகுதிகளில் நீராதார அபாயத்தின் தாக்கம் தீவிரமாகக் காணப்படும் என்பதையும் கண்டறியலாம்.

ஒவ்வொரு தொழில் துறை மற்றும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் எனத் தேவைக்கேற்பத் தகவல்களைத் தனித்தனியாகவும்; இவை அனைத்தையும் அடுக்குகளாக (layers) ஒன்றன் மேல் மேல் ஒன்றாக ஒருங்கிணைத்து பொதுவான தகவல்களையும் அறிய முடியும்.  இதனால் நிகழ் காலத்திலும் எதிர்காலத்தில் நீராதாரத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  இது போன்ற தகவல்களால் நீராதாரத்தை நம்பியுள்ள தனிப்பட்ட தொழில் துறைகளும், அரசும் தங்கள் திட்டமிடுதலைச் சீர் செய்து கொள்ள இயலும். தனியார் தொழில் துறைகளுக்கும், அரசாங்கங்களுக்கும், அரசுசாரா அமைப்புகளுக்கும் இத்தகவல் திட்டமிடுதலுக்கு மிகவும் உதவும். ஏனைய பெரும்பாலோருக்கு ஒன்பது தொழில்துறை அறிகுறிகளையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு முன்னிருப்பாக (default) அமைக்கப்பட்ட விளக்கப்படமே போதுமானது.

இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நீர்த்தேவை என்பதே நாடுகள் சந்திக்கப் போகும் பெரிய சவால்களில் ஒன்றாகும். அத்துடன் அதிமுக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சவாலாகவும் நீராதார வளம் அமைந்திருக்கிறது என்று இந்த மென்பொருளினை வடிவமைத்த உலக ஆதாரவளங்கள்  நிலையத்தின் இயக்குநர் பெட்சி ஓட்டோ (Betsy Otto, Director of Aqueduct for WRI) குறிப்பிடுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் நாட்டின் வடபகுதியில் இமயத்தில் இருந்து தோன்றும் வற்றாத நதிகளினால் வெள்ள அபாயம் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் தென் பகுதியில் பருவ மழைகள் பொய்க்கும் பொழுது வறட்சி ஏற்படும் நிலையும் உள்ளது.  அதிலும் குறிப்பாகக் காவிரி பாசனப் பகுதியின் நீராதாரம் விவாதங்களுக்கு உட்பட்டே இருக்கிறது.  நியாயமாக, இயற்கையில் நதியின் போக்குப்படி உழவுத் தொழிலுக்குக் கிடைக்க வேண்டிய நீர்ப்பங்கீட்டினைக் கேட்டு தமிழகம் போராட, தங்களுக்கே நீர் போதவில்லை எனக் கர்நாடகம் கைவிரித்து போராட்டம் நடத்தும் நிலை யாவரும் அறிந்த ஒரு முடிவற்ற தொடர் கதை.  இந்த இரு மாநிலங்களுக்கிடையேயான  நீர்ப் பிரச்சனை நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குச் செல்லவேண்டிய கட்டாயமும் தொடர்ந்து வருகிறது.  நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகும் நீராதாரப்  பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையிலும்  தீர்ந்தபாடில்லை.  இந்தச் சூழ்நிலையை ஆராயும் பொருட்டு இந்த மென்பொருளைக் கொண்டு உருவாக்கப் பட்ட தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியப் பகுதியின் வரைபடங்களில், தென்னிந்தியாவின் தற்கால நீராதாரமும், நீராதாரத்தின் எதிர்கால நிலையின் படங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.





வரைபடங்கள் அளிக்கும் தகவலின்படி தமிழகத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்கால நீராதாரத்தின் நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது என்பதை நாம் அறியமுடிகிறது. 



 குறிப்பு:
இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்ற நீராதாரத்தின் எதிர்காலத்தை ஆராய்ந்தறியும் படங்களை உருவாக்க இத்தளத்திற்குச் செல்லவும்: http://aqueduct.wri.org/




மேலும் தகவல்களுக்கு:
http://pdf.wri.org/aqueduct_metadata_global.pdf
http://www3.weforum.org/docs/WEF_GlobalRisks_Report_2013.pdf
https://www.youtube.com/watch?v=Aolms7OSuLQ&t=83s

நன்றி: திண்ணை - மே 27, 2013

#திண்ணை, #அறிவியல், #Themozhi 


Monday, April 22, 2013

காற்றுக்கென்ன வேலி!!!

 காற்றுக்கென்ன வேலி!!!





Lean In: Women, Work and the Will to Lead
- by Sheryl Sandberg
Hardcover: 240 pages
Publisher: Knopf (March 11, 2013)
Language: English
ISBN-10: 0385349947

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு, மகளிருக்குத் தலைமைப் பதவி ஏற்கும் தகுதி இருக்கிறதா என்ற சந்தேகமே வர வாய்ப்பிருக்காது.  அவரவர் பிறந்த காலக்கட்டத்தை வைத்து உலக நாடுகளில் ஓரிரு நாடுகளிலாவது பெண்கள் தலைமை ஏற்றுத் திறம்பட வழி நடத்துவதைப் பார்த்துத்தான் வளர்ந்திருப்பார்கள். அதிலும் கீழை நாடுகளில் பெண்களின் மேல் அடக்குமுறை அதிகம் எனக் கூறப்பட்டாலும், அந்த நாடுகள்தான் பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டதில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் அரசியல் ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுப்பணிகளில் முத்திரை பதித்திருக்கும் பெண்களைப் போல, பெண்களால் வர்த்தக நிறுவனங்களிலும் அதே அளவு தலைமைப் பதவிகளைப் பெற முடிந்திருக்கிறதா என்பது பலரும் வியந்து கேட்கும் கேள்வி.

சுயதொழில்களில் பெண்கள் முன்னின்று தங்கள் நிறுவனங்களைக் கட்டிக் காத்து வளர்த்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனாலும் மற்ற பிற வணிக நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றும் பொழுது, அவர்களது பங்களிப்பு பாராட்டப் படுவதில்லை, அவர்கள் தகுதிக்கேற்ற பதவிகள் வழங்கப் பெறுவதில்லை என்பது பெண்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் என்றும் உள்ள மனக் குறைபாடு. பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  இந்திரா நூயி புகழ் பெற்ற பெண் நிர்வாகியாக உலகில் அறியப்படுகிறார்.  அவர் போல விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சில பெண்கள்தான் 'ஃபார்ச்சுயூன் 500' (Fortune 500) எனப் போற்றப்படும் பெருவணிக நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஏன் இந்தப் பாகுபாடு? பெண்களின் முன்னேற்றத்தில் எதனால் தடை ஏற்படுகிறது? 1960 கள் முதல் பெண்ணியம் என்று மகளிரின் சமுதாய முன்னேற்றத்திற்காக, சம உரிமைக்காகப் பாடுபட்ட புரட்சி அலை ஏன் செயலிழந்து நிற்கிறது? இது போன்ற தடைக்கற்களை எப்படி அகற்றுவது? இதனைச் செய்ய வேண்டியவர் யார்? எங்கே குறைபாடு இருக்கிறது? எனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதல் பத்திரிக்கை ஆசிரியர்கள் எனப் பலரும் அவரவர் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அது போன்ற பெருவணிக நிறுவனங்கள் ஒன்றில் தலைமைப் பொறுப்பேற்ற பெண் நிர்வாகியின் கண்ணோட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் நாம் படிக்க வேண்டியது "ஷெரில் சேண்ட்பெர்க்" (Sheryl Sandberg) எழுதிய "லீன் இன்: விமன், வொர்க் அண்ட் தி வில் டு லீட்" (Lean In: Women, Work and the Will to Lead) என்ற புத்தகத்தை.

ஷெரில் ஃ ப்பேஸ் புக் (Face Book) சமூக வலைத்தள நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பெண்ணதிகாரி (chief operating officer of Facebook), ஃபார்ச்சுயூன் 50 தரவரிசைப் பட்டியலில் அதிகாரம் நிறைந்த பெண் நிர்வாகியாகவும் (Fortune’s list of the 50 Most Powerful Women in Business), டைம் இதழின் உலகில் செல்வாக்குமிக்க 100 மனிதர்களில் (Time’s 100 Most Influential People in the World) ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

ஷெரில் இந்த நூலை எழுத நேர்ந்த காரணம் என்ன என்பதையும் கூறுகிறார். அவர் முதன் முதலில் பணியில் சேர்ந்தபொழுது அவரது தலைமுறையினருக்குச் சம அளவு பொறுப்பும் வாய்ப்பும் இருப்பதாக நினைத்திருந்தாராம்.  ஆனால் நடைமுறையோ வேறு விதமாக இருந்திருக்கிறது.  பெண்கள் அதிக அளவில் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுகிறார்கள்.  மேல் நிலைப் பட்டங்களும் பெறுகிறார்கள்.  பல பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஏனோ ஒவ்வொரு துறையிலும் 20 விழுக்காடுகளுக்கும் குறைவாகவே தலைமைப் பொறுப்பினை வகிக்கும் நிலையை அடைகிறார்கள். இது அவரது கவனத்தை ஈர்த்து மேலும் இதன் காரணத்தை ஆராயத் தூண்டியிருக்கிறது.

அவரது கூர்ந்த கவனிப்பு பெண்கள் முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்பதாக அவருக்குத் தெரிவித்தது; பணியிடத்தில் நிலவும் பாரபட்சமான நிலை, பணியில் இசைவான முறையில் பணியாற்ற வகையில் இல்லாத வரைமுறைகள்,  குறைவான வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவது எனப் பற்பல தடைகளாகும். அத்துடன் பெண்களும் தங்களை அறியாமலே தங்கள் முன்னேற்றத்திற்குத் தீங்கு விளைவிக்கும் சில பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்குகிறார்கள், ஆர்வமுடன் விவாதங்களில் கலந்து கொள்வதில்லை, தங்கள் கருத்துக்களைத் துணிவுடன் முன் வைப்பதில்லை. எந்தப் புதிய பணியையும் தங்களால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கை பல பெண்களுக்கு  ஏற்படுகிறது. எதையும் செய்ய என்னால்  இயலும்  என்ற தன்னம்பிக்கை குறைவால் முன்னேற வாய்ப்பளிக்கும் புதிய பதவிகளைத் தவிர்க்க முயல்கிறார்கள். தவறாக ஏதேனும் செய்து கேலிக்குரிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும், தயக்கமும் அவர்களைக் கட்டுப் படுத்துகிறது.

வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளாலும், சமுதாயம்  காலம் காலமாகப் பெண்களுக்கென வரையறுத்த சில கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படும் வகையிலுமே அவர்களது நடை முறைகள் அமைகிறது. இவை அவர்கள் முன்னேற்றத்தின் தடைக் கற்களாக விளங்குகிறது.  ஷெரில் இது போன்ற பண்புகளைத் தன்னிடமும், தன்னுடன் பணியாற்றும் பெண்களிடமும் கண்டு, அதனால் அவர்கள் நல்ல பல வாய்ப்புகளையும் நழுவ விடுவதை உணர்ந்து இதனை நீக்கும் முயற்சியினைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.  திறமை இருந்தும் தயக்கத்துடன் வாய்ப்புகளை நழுவ விடும் செயல்கள் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைவதற்குத் தடையாக இருக்கிறது.

எந்த வயதிலும், எந்தப் பணியிலும், எந்த வாழ்க்கை சூழ்நிலையிலும் இருக்கும் பெண்களுக்கும் இந்த அறிவுரைகள் பொருந்தும்.  கல்வி முடித்து முதன்முறையாகப் பணிபுரியச் செல்லும் பெண்களானாலும், குடும்பப் பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் பணிபுரியச் செல்லும் பெண்களானாலும், அனைத்துப் பெண்களுக்கும் தங்கள் திறமையில் நம்பிக்கைக் கொள்ள, தாங்கள் கண்ட கனவுகள் வழி குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்கு இவர் அறிவுரை உதவும். தங்கள் துறையில் மற்றவர்களைத் தலைமை ஏற்று வழி நடத்த விரும்புபவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது ஷெரிலின் அறிவுரைகள்.

இந்நூலில் பெண்களின் வாழ்க்கைத் துணைவர்களும் தங்களுக்குரிய பங்கினை உணர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று  ஷெரில் கூறுகிறார். ஒருவரின் முன்னேற்றத்திற்கு அவரது பாலினம் எந்த வகையிலும் தடையாக இல்லாதவாறும், அவர்களது ஆர்வமும் முயற்சியும் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து சமநீதி உள்ள உலகம் அமைய நடவடிக்கைகள் எடுப்பது அனைவரின் பொறுப்பாகும்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிகம் உறுதுணையாக இருக்கப் போவது பெண்களில் பலர் தலைமைப் பதவிகளுக்கு வருவதே ஆகும்.  அவ்வாறு தலைமைப் பொறுப்பேற்கும் பெண்கள், தங்களின் கண்ணோட்டத்தில் பெண்களுக்குத் தடைகளாக இருக்கும் காரணங்களை உடைத்தெறியும் வழியில் வகை செய்யலாம்.  ஆனால் இது கோழியில் இருந்து முட்டை வருமா அல்லது முட்டையில் இருந்து கோழி வருமா என்பது போன்ற விவாதமாகவும் அமைகிறது.

இதற்கு எடுத்துக் காட்டாக அவர் கூறுவது கூகிள் (Google) நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை. மகப்பேறு காலத்தில் அவரது ஊர்தியை நிறுத்துமிடம் அதிகத் தொலைவில் இருந்த பொழுது அவர் அடைந்த சிரமத்தினால் உடனடி நடவடிக்கையாக கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்க அவர் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிடுகிறார். அவரும் பெண்ணாக இருந்தும் அதுவரை அவருக்குக் கர்ப்பிணிப் பெண்கள் அடைந்த சிரமம் புரியாமல் இருந்ததாகவும், அதுபோலவே கூகிள் தலைமை அதிகாரிகளுக்கும் அதன் முக்கியத்துவம் தெரியாததும் அவரை வியக்க வைத்ததாகக் கூறுகிறார்.  அதுவரை அங்குப் பணி புரிந்த பெண்களும் சிறப்புச் சலுகை கேட்பதைத் தவிர்த்ததன் காரணம், பணியிடத்தில் இது போன்ற சிறப்புச் சலுகைக் கோரிக்கைகள் வைப்பது அவர்களைக் குறைவாக மதிப்பிடச் செய்யும் என்ற அச்சமாகவோ தயக்கமாகவோ இருந்திருக்கக் கூடும் என்பது ஷெரிலின் கருத்து.

ஒரு ஆணுக்கு அவர்  ஆண் என்ற ஒரே காரணத்தினால், அவரால் தலைமை ஏற்க முடியும் என்று கருதி தலைமைப் பதவி தேடி வரும்.  ஆனால் பெண்களோ தாங்கள் அந்தப் பதவிக்குத் தகுதிகள் உடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தொழில் முறையில் பெண்களுக்குத் தலைமைப் பதவியை அடைய ஏற்படும் தடையை 'கண்ணாடிக் கூரை' (Glass ceiling) என்ற முட்டுக் கட்டை இருப்பதாகக் கூறுவதுண்டு.  தொழிலேணியில் (career ladder/corporate ladder) அவர்கள் ஓர் அளவிற்கு மேல் ஏற முற்படுவது பலரால் விரும்பப் படுவதில்லை.  அது போன்ற தடைகள் ஏற்படும்பொழுது பெண்கள் தொழிலேணி  வழியாகக் குறிப்பிட்ட உயர்நிலைப் பதவியை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்வதைத் தவிர்த்து, குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள 'ஜங்கிள் ஜிம்' (Jungle Gym) விளையாட்டு உபகரணத்தில் எப்படிப் பல வழிகளில் ஏறி உச்சியை அடைய முடிகிறதோ அதைப்போன்று செயல் பட வேண்டும்.  குறிப்பிட்ட தலைமைப் பதவியை அடைய அந்த நிறுவனத்தில் முட்டுக்கட்டை இருப்பதாகக் கருதினால் அந்தப் பதவியை அடைய வழிவகுக்கும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஷெரில்.

இந்த நூலின் மூலமாக அவர் அறிவுறுத்துவது இரு முக்கியக் கருத்துக்கள்:  ஒன்று, பெண்கள் தலைமைப் பதவிகளை அடைந்து தன்னையொத்த பெண்களும் முன்னேறி தலைமைப் பதவியை அடைய வழி வகுக்க வேண்டும், அவர்கள் பெண்களின் தேவைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மற்றொன்று, பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைத்தெறிந்து அவர்கள் குறிக்கோள்களை அடைய பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்து ஊக்குவிக்க வேண்டும்.

இக்கருத்துக்களை முன்னிறுத்தத் தனது வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவுகளை, செய்த பிழைகளை, அவருக்கு ஏற்பட்ட தடைகளை, தொழிலிலும் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறி விளக்க முற்படுகிறார். பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும், பணியிடத்திலும் சிறந்த முடிவுகளை எடுத்து தன்நிறைவு பெற்று வாழ்க்கைக் கனவுகளையும் குறிக்கோளையும் அடைய வழி சொல்லுகிறார்.

ஷெரில் பெண்கள் தலைமைப் பதவியை அடையத் தடைகளாக இருக்கும் முக்கிய காரணங்களாகக் கருதுவது ...

[1] வாழ்வில் அனைத்தையும் செய்ய வேண்டும், அதுவும் அனைத்தையும் சரியாகவும் செய்ய வேண்டும் என்று எண்ணுவது; கச்சிதமாக ஒரு தவறு கூட இருக்கக்கூடாது என்று செயல்படுவது நடைமுறையில் உதவாது.  இந்த எண்ணமே முன்னேற்றத்தின் முக்கிய எதிரி.

[2] வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டுவது போன்ற அருமையான நேரங்களில், பெண்கள் தங்கள் திறமையிலோ, அல்லது தங்கள் வாழ்க்கை சூழ்நிலையை முன்னிறுத்தி இது தன்னால் இயலுமா என்பது போன்ற சந்தேகங்கள் கொள்வது. அதனால் தன்னம்பிக்கையின்றி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி அவற்றை நழுவ விட்டுவிடுவது.

[3] பொதுவாக அனைவரும் அறிவதும், ஆண்களைப் பொறுத்தவரை அடிப்படையில் அனைவரும் நம்புவதும் பணியிலும் குடும்ப வாழ்க்கையிலும் அவர்களுக்கு எந்த விதத் தடைகளும் கிடையாது என்பதை.  பணியிலும் வெற்றி பெற்று, ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையும் அவர்களால் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களுக்கு ஏதோ ஒன்றை இழந்துதான் மற்றொன்றை அடைய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பணியினைத் திருப்திகரமாகச் செய்தாலும், மேலும் பல பொறுப்புகளைப் பெற்றுத் தலைமைப் பதவிக்குச் செல்ல பெண்களுக்குக் குடும்ப வாழ்வில் பல நிர்ப்பந்தங்கள் தடையாக அமைந்து விடுகிறது.

[4] பெண்களும் தாங்களே தங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். யாராவது உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  தங்கள் தலைமைப் பண்புகளைச் செயல்களில் காட்டவேண்டும்.  எப்பொழுதும் அடுத்தவர் சொல்வதை மட்டுமே செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதும், சுயசிந்தனையின்றிப் பிறர் ஆட்டுவிப்பதற்கு ஏற்ப ஆடும் பண்புகளைக் காட்டும் ஒருவரால் தலைமைப் பொறுப்பைத் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை அடுத்தவர்கள் கோணத்தில் எண்ணிப் பார்ப்பதற்கு இயலாததாக இருக்கும்.

[5] தங்கள் வெற்றி தங்கள் கையில், தங்கள் நடவடிக்கையில் இருக்கிறது அதனைச் சரியாகக் கையாள்வதே மேலும் முன்னேறுவதற்கு வழி வகுக்கும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். அவர்களது முன்னேற்றத்தை விரும்புவதில், அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதில் அவர்களைத் தவிரப் பிறருக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

[6] தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், தன்னம்பிக்கையுடன் இருப்பதாகப் பிறர் உணரும் வண்ணம் செயல் படுவதும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடைய வழி வகுக்கும். பெரும்பாலும் வாய்ப்புகள் யாருக்கும் வழங்கப் படுவதில்லை, விருப்பப்படுபவர்களால் எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதே உண்மை.  அத்துடன், மிக வேகமாக இயங்கும் தற்கால உலகில் வாய்ப்புகள் யாருக்காகவும் வழங்கப் படுவதும் இல்லை, அவர்கள் வழியில் தென்படும் வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதே அவரவர் வெற்றிக்கு வழி என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

[7] தாய்மார்கள் தங்களுக்குத் தோன்றும் தேவையற்ற குற்ற உணர்வுகளுக்குப் பலியாகாமல், காலத்தைத் திறம்பட  நிர்வகித்துச் செயல்படுவது தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

[8] எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் மிக முக்கியமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியது தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பதாகும். தங்களுக்கு வாழ்க்கைத் துணை தேவை என்று முடிவெடுக்கும் பெண்கள், தங்கள் பணிக்கும் தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளுக்கும் உறுதுணையாக இருக்கும், உதவும், தன்னலமற்று மனைவியின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தும் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

[9] அச்சமே பெண்களுக்கு முதல் எதிரி. சரியான முடிவுகளை எடுக்காமல் போய் விடுவோமோ? அவ்வாறு செய்தால் நம்மைப் பார்த்து பிறர் நகைப்பதற்கு இடம் கொடுத்துவிடுவோமோ? தோல்வி அடைந்து விடுவோமோ? பிறர் நம்மைத் தவறாக எண்ணும் வாய்ப்பை அளித்துவிடுவோமோ? நம் முன்னேற்றம் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்துமோ? தகுதிக்கு மீறிய செயலாக அகலக்கால் வைக்கிறோமோ? என்பது போன்ற தேவையற்ற அச்சங்கள் பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும் வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.  அதிலும் தங்களால் சிறந்த மகளாக அல்லது, சிறந்த மனைவியாக அல்லது, சிறந்த தாயாகச்  செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்பது போன்ற அச்சங்கள் பல பெண்களையும் காலம் காலமாகப் பிடித்தாட்டி அவர்கள் முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கிறது.

[10] எந்த முடிவையும் எடுப்பதில் அச்சம் குறுக்கிடாவிட்டால், அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் தொழில் முறையில் எடுக்கும் முடிவுகள் என்னவாக இருக்குமோ அந்த முடிவினை  எடுப்பதில் பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது.

ஷெரில், தான் பணிபுரியும் ஃபேஸ்புக்  நிறுவன அலுவலகச் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஊக்கமூட்டும் கருத்துப்படச் சுவரொட்டிகள் குறிப்பிடும் அறிவுரைகளை நூலைப் படிப்பவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறர். "தன்திறமையில் தன்னம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்," "தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்" என்பது போன்ற வாசகங்களைத் தாங்கியவை அச்சுவரொட்டிப் படங்கள். அவற்றில் ஷெரிலின் கவனத்தை மிகவும் கவர்ந்ததாக, "அச்சம் என்பதே உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?" என்ற வாசகத்தைக் குறிப்பிடுகிறார்.

     "காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
      கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
      மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?"
என்ற கண்ணதாசனின் வரிகள் தனது வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்குச்  சிறந்த அறிவுரை.  இந்த அறிவுரைதான் ஷெரிலின் நூல் முழுவதும் விரவி நின்று பெண்களுக்குத் தன்னம்பிக்கையைத் தந்து "உன்னால் முடியும் பெண்ணே" என்று உற்சாகமூட்டுகிறது. பெண்களின் வாழ்வில் பங்குபெறும் ஆண்களுக்கும் சமுதாயத்திற்கும், பல்லாண்டுகளாக அடக்கு முறையினால் தவிக்கும் பெண்களுக்குச் சமவுரிமை பெற்றுத்தரத்  தடையாக இருக்கக்கூடாது, தங்கள் கடமையை உணர்த்து உதவ வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.  பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவுடன் செயல்படும் பணியிடங்களும், குடும்பமும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணையுமே பெண்களுக்குச் சமவுரிமை கிடைக்க வழி செய்ய முடியும்.



நன்றி:
திண்ணை
ஏப்ரல் 22, 2013 

#திண்ணை, #பெண்ணியம், #நூல் மதிப்புரை, #Themozhi