சொற்பொழிவாளர்களுக்கு வழிகாட்டி
பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா உரையாற்றுகையில், தான் பேசுவதற்குத் தொடர்பான தகவலை, அதற்குரிய நூலின் பக்கங்களைப் புரட்டி, குறிப்பிடப்படும் பகுதியைச் சுட்டிக் காட்டி வரிக்கு வரி வாசித்து சான்று காட்டும் பாங்கு மிகவும் வியப்பைத் தருவதாக இருக்கும். உண்மையை நிலைநாட்டச் சான்றாதாரமும் கையுமாக உரைகளைத் தொடங்குவதும், அவரது வியத்தகு நினைவாற்றலும் அவர் ஆற்றும் உரைகளின் மதிப்பை மேலும் உயர்த்தும்.
எந்த ஒரு செய்தி குறித்துப் பேசும் பொழுதும் சான்றாதாரத்துடன் பேசுகிறோம் என்பதை உணர்த்த, அந்நூலின் அப்பகுதியைப் பக்க எண்ணுடன் குறிப்பிட்டு வாசித்துக் காட்டும் பழக்கம், திராவிட இயக்கப் பேச்சாளர்களுக்குப் பெரியார் ஏற்படுத்தி வைத்த பழக்கம் என்பதை அறிவோம். அத்துடன் நூல்களைப் படித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளும் ஆர்வத்தை இயக்க வழி வந்தவர்களுக்கு வளர்த்து விட்டவரும் அவரே.
பெரியார் வழி வந்த சொற்பொழிவாளர்களுக்குத் தாமே ஒரு முன்மாதிரியாக இருந்து, இந்த முறையை ஆசிரியர் அய்யா கடத்தியுள்ளார் என்பதைத் திராவிட இயக்க மேடைகளின் நடவடிக்கைகளிலும், தோழர்களின் நூல் வெளியீட்டு விழாக்களிலும் காண்கிறோம். இதன் மூலம் ஆசிரியர் அவர்கள் மீது பெருமதிப்பு உண்டாகிறது.
ஆசிரியர் அவர்களும் தொடர்ந்து பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பும் நோக்கில் நூல்கள் எழுதிய வண்ணமே உள்ளார். பிறந்தநாள் காணும் ஆசிரியர் அவர்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து அவரது எழுத்துகளின் மூலமும் உரைகளின் மூலமும் உண்மைகளை உலகறியச் செய்து தொண்டாற்ற என் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை,
(பன்னாட்டு அமைப்பு), அமெரிக்கா.
நன்றி: "விடுதலை"
டிசம்பர் 1, 2024
#விடுதலை, #Themozhi
