Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Showing posts with label கருத்தரங்கம். Show all posts

Tuesday, March 3, 2026

அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்

 "அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"


முன்னுரை:
தமிழ் அறவியல் புலம் பரந்துபட்டது. மக்களுக்கு அறநெறி உரைக்க இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களையும், அயலகத்தில் தோன்றிய சமயங்களையும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் பல சமய நெறிகளுக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கிய நூல்கள் தமிழில் உண்டு என்ற சிறப்பிற்கு உரியது நம் தமிழ்மொழி.  அத்துடன் சமயக் கோட்பாடுகளை விமர்சிக்கும் சித்தர் பாடல்களுக்கும் தமிழில் இடமுண்டு. இத்தகைய தமிழ் அறநெறிச் சிந்தனையின் வளமான மரபில், மணிமேகலை காப்பியமும் திருக்குறளும் இரண்டு பெரும் தூண்களாகத் திகழ்கின்றன. இவ்விரண்டு படைப்புகளும் அறம், ஒழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள் குறித்த ஆழமான பார்வைகளை முன்வைத்தாலும், அவற்றின் தத்துவப்பின்னணிகள் வேறுபட்டவை.

பௌத்தம் கூறும் அறம்:
அறத்தின் மையம் மனிதம், இப்பூமியில் மனிதருக்கும் மனிதச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவு அன்பு என்று உரைத்த பௌத்தம்; எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஏனைய பிற உயிர்களுக்குத் தீங்கு இழைக்காமல், அவ்வுயிர்களின் துயர் களைவதே அறமாகும் என்று வரையறுத்தது. பௌத்தம் காட்டும் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய பண்புகளின் செயல் வடிவம்.

வள்ளுவம் காட்டும் அறம்:
மக்களுக்கு அறவழி காட்ட வந்த வள்ளுவர், தன் அறவுரைகளைச் சமய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தவில்லை. உலக உயிர்கள் எல்லாம் அறம் என்ற குடையின் கீழ் அமைபவை என்ற கொள்கையுடன் சமயங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகில் எவருக்கும் பொருந்தும் வண்ணம் அறவழி காட்டினார். சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் முன்னிறுத்தும் பௌத்த அறநெறிக் கோட்பாடுகளையும், திருவள்ளுவர் போதிக்கும் உலகப் பொதுவான அறக் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமிழ் அறநெறிச் சிந்தனையின் இருபெரும் கிளைகளின் ஒற்றுமை, வேற்றுமை மற்றும் அவை ஒன்றுக்கொன்று துணைநிற்கும் பாங்கினை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் மையமாகும்.

மணிமேகலை காப்பியம்:
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, பௌத்த அறிஞரான சீத்தலைச்சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலை காப்பியம், சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைந்திருந்தாலும், அதன் தனித்துவம் பௌத்த மெய்யியலை மையமாகக் கொண்டிருப்பதில் அடங்கியுள்ளது. உலக இன்பங்களைத் துறந்து, கருணை வழியில் பயணிக்கும் மணிமேகலை என்ற கதைநாயகியின் வழியே, பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான அறம், இரக்கம், கொடை, துறவு, அருள், நிலையாமை ஆகியவற்றை இக்காப்பியம் அழுத்தமாகப் பேசுகிறது. குறிப்பாக, பசித்தவருக்கு உணவளிக்கும் அமுதசுரபி என்னும் பாத்திரம், பௌத்த அறத்தின் செயல் வடிவமாகவும் குறியீடாகவும் விளங்குகிறது. எனவே மணிமேகலை என்றால் அறம், அறிவு, துறவு ஒருங்கிணைந்த ஓர் உருவம்.

திருக்குறள்:
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் அறநெறி மரபில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று, 'உலகப் பொதுமறை' என்று போற்றப்படுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட சமயம், இனம் அல்லது காலச் சூழலுக்குள் தன்னை வரையறுத்துக் கொள்ளாமல், மானுடப் பொதுமைக்கான அறக் கோட்பாடுகளைத் திருக்குறள் முன்வைக்கிறது.

[அ] அற விழுமியங்களில் ஒற்றுமையும் வேற்றுமையும்
திருக்குறளின் உலகப் பொது நெறியும், மணிமேகலையின் பௌத்த மெய்யியலும் பல முக்கிய அற விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் காணப்படும் ஒற்றுமைகள், தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.  இந்த ஒப்பீட்டு ஆய்வில், திருக்குறளின் அறக்கருத்துக்கள், மணிமேகலையின் பௌத்த அறநெறிகளுடன் ஒத்திருக்கும் இடங்களிலும் நுட்பமாக வேறுபடும் இடங்களிலும் ஓர் ஒப்பீட்டு அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பௌத்த அறக் கருத்துக்களுக்கு இணையான அல்லது மாற்றான வள்ளுவரின் சிந்தனைகள், தமிழ் அறநெறி மரபின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

அறத்தின் ஆற்றல்: இரு நூல்களிலும் 'அறம்' என்ற கருத்தாக்கம்
மணிமேகலை மற்றும் திருக்குறள் ஆகிய இரு நூல்களுக்கும் 'அறம்' என்ற கருத்தாக்கமே மைய அச்சாக விளங்குகிறது. அறம் என்பது வெறும் நீதி அல்லது சட்ட விதிகளை மட்டும் குறிக்காமல், அது அடிப்படை வாழ்வியல் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. இவ்விரு படைப்புகளும் அறத்தை வரையறுக்கும் விதத்தினை ஆராய்வது, அவற்றின் தத்துவ அடித்தளத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பௌத்த மரபில் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வடிவமாகும். அறம் எங்கிருக்கிறதோ அங்கு அன்பு, இரக்கம் ஆகியன தாமாகவே குடிகொண்டுவிடும் என்பது பௌத்த அறத்தின் உள்ளடக்கம். அறம் என்பது விதிகளின் தொகுப்பு அல்ல; அது அனைத்து உயிர்கள் மீதும் காட்டப்படும் பேரன்பின் வழியே பற்றற்ற நிலையை அடைய உதவும் மெய்யியல் பாதையாகும். மணிமேகலையின் செயல்கள் துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும் இந்தப் பேரறத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. மணிமேகலை அன்பை, அறத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடாகக் காண்கிறது. துறவறம், தவம் ஆகிய வழிகளைத் தேர்வு செய்து அறம் என்பதைச் செயல்படுத்துகிறது.
     "மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
     மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
     உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே"
          [மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை: 94-96]

உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, இந்த நிலவுலகில் வாழ்வோர்க்கெல்லாம் உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர் என்கிறது மணிமேகலையின் பௌத்தம். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பதைச் சங்ககாலப் புலவரான குடபுலவியனார் பாடிய புறநானூற்றுப் பாடலும் (பாடல் எண் 18) கூறும் முறைமையால் இக்கருத்தாக்கம் தமிழ் மண்ணின் பண்பாகவும் இருந்ததை அறிய முடிகிறது.

மறுபுறம், திருக்குறள், அறத்தை உலகியல் வாழ்வோடு இணைத்து, ஒரு நடைமுறை ஒழுக்கக் கோவையாக முன்வைக்கிறது.
     "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
     பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (குறள்: 49)
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் என்று இல்லறமே அறம் என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். தொடர்ந்து;

     "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
     தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள்: 322)
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும் என்று கூறும் வள்ளுவர் மணிமேகலை காட்டிய பல்லுயிர் ஓம்புவது என்கிற தலையாய அறத்தை இல்லறம் வழிச் செயல்படுத்த அறிவுறுத்துகிறார் என்பதைக் காணமுடிகிறது. திருக்குறள் துறவறம், தவம் ஆகியவற்றை விவரித்தாலும், அறத்தை இல்லற வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மைக் கடமையாக வரையறுக்கிறது.

அத்துடன் தீய குணங்களிலிருந்து விலகி இருப்பதே அறத்தின் அடிப்படை என்கிறார் அவர்:
     "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம். (குறள்: 35)
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு தீய குணங்களையும் விலக்கி வாழ்வதே அறம் என்பது இதன் பொருள். எனவே, திருக்குறள் தீயவற்றை நீக்குவதே அறத்தின் இயல்பு என ஒரு வாழ்வியல் நெறியை வரையறுப்பதுடன், இல்லறம் போற்றி அனைவருக்கும் உதவ அறிவுரை கூறுகிறது.

[ஆ] பொதுவான அற விழுமியங்கள்: அன்பும் இரக்கமும் அருளும் நன்னெறிகளும்
அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஒத்துக் காணப்படும் திருக்குறளும் மணிமேகலையும் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
     "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
     என்புதோல் போர்த்த உடம்பு. (குறள்: 80)
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் என்பது இதன் பொருள். அத்துடன்,

     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு" (குறள்: 72)
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிச் செயல்படுபவர்கள் என்று அத்தகையவர்கள் பண்பையும் குறள் சுட்டுகிறது. குறளின் அதிகாரங்கள் பலவும், பௌத்தப் பஞ்சசீலக் கொள்கைகளான 1. கொல்லாமை, 2. கள்ளாமை, 3. காமத்தில் தவறாமை, 4.பொய்யாமை, 5. கள் உண்ணாமை ஆகிய ஐந்து நல்லொழுக்கக் கொள்கைகளையும்; அத்துடன் பௌத்தம் போதிக்கும் ஈகை, நிலையாமை, அவா அறுத்தல், அன்புடைமை, அருளுடைமை, ஒழுக்கமுடைமை, ஊழ் போன்ற நெறிகளையும் அதிகார அளவில் விளக்கும் குறட்பாக்களைக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. அத்துடன், திருக்குறள் முன்வைக்கும் 'ஒழுக்கம்' என்பது எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் சாராத, மனிதர் அனைவருக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் நெறியாகும்.

     "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
     உயிரினும் ஓம்பப் படும்" (குறள்: 131)
ஒழுக்கம் உயிரை விட மேலானது என்பது திருக்குறளின் துணிபு. திருக்குறளில் வலியுறுத்தப்படும் 'ஒழுக்கம்' என்பது மதம், இனம், மொழி கடந்து அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஓர் உலகப் பொதுவான அறநெறியாகும்.

[இ] உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதுதலும் ஈகையும்
மணிமேகலையின் ஆபுத்திரன் கதை மக்களிடம் உயர்வு தாழ்வு பேசுவதை மறுப்பதற்கும், அனைத்து உயிர்களையும் கருணையுடன் போற்றவதை வலியுறுத்தவும் படைக்கப்பட்டுள்ள கதாபாத்திரம். பிறந்த பின் அனாதையாக விடப்படும் ஆபுத்திரன், பார்ப்பனர் வேள்வியில் உயிர்ப்பலியைத் தடுப்பவனாகவும், அமுதசுரபி உதவியுடன் வறியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவளிக்கும் இரக்கமுள்ளவனாகவும் காட்டப்படுகிறான்.

     "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
     செய்தொழில் வேற்றுமை யான்" (குறள்: 972)
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும் என்று கூறும் குறளும்;

     "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
     உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள்: 259)
அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது என்று கூறும் குறளும்;

     "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
     குறியெதிர்ப்பை நீர துடைத்து" (குறள்: 221)
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது என்று கூறும் குறளும் அனைவரும் சமம், பிறப்பில் பேதமில்லை என்று கூறுகிறது.

மணிமேகலையின் அறவியல் கட்டமைப்பு, பௌத்தத்தின் தத்துவார்த்த இலக்கான 'நிப்பானம்' (நிர்வாணம்/முக்தி) என்ற வீடுபேற்றை அடைவதோடு பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. மணிமேகலை கூறும் அறங்கள் அனைத்தும் பிறவித் துன்பச் சங்கிலியை அறுக்கும் கருவிகளாகும். இதற்கு மாறாக, திருக்குறள் ஓர் உலகப் பொதுவான, சமயச் சார்பற்ற அறவியல் அமைப்பை முன்வைக்கிறது. அதன் நோக்கம், இவ்வுலகில் ஒரு சீரான, இணக்கமான, அறம் சார்ந்த வாழ்வை வாழ்ந்து சிறப்படைவதே ஆகும்.

     "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
     இல்லெனினும் ஈதலே நன்று" (குறள்: 222)
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது. நன்னெறி என்பதற்காக மட்டுமே அறம் செய்தல் சிறப்பாகும். மாறாக; முக்தி அடைதல், மேலுலகம் அடைதல் போன்ற நோக்கில் இல்லாமல், அதை எதிர்பார்க்காமல், பலன் எதிர் பார்க்காமல், அறவிலை வணிகம் செய்யாமல் நன்னெறி என்பதற்காகவே தேவையானவருக்கு உதவ வேண்டும் என்கிறது. இவ்வகையில், எந்த ஓர் உயிருக்கும் தீங்கு செய்யாமை, பல்லுயிர் ஓம்புதல் என்ற கொள்கையில் இவ்விரு நூல்களும் மிக வலுவாக ஒன்றிணைகின்றன. இது இவ்விரு அறவியல் மரபுகளுக்கும் இடையேயான ஒரு முக்கிய ஒற்றுமைப் புள்ளியாகும்.

மணிமேகலை, ஈகையைத் துறவறத்தின் ஒரு கடமையாகச் சித்திரிக்கிறது. திருக்குறளோ, அதை ஒரு சமூக மற்றும் தனிமனித அறமாக, ஒரு செம்மையான இல்லற வாழ்வின் இன்றியமையாத அங்கமாகக் கருதுகிறது. திருக்குறள் ஈகையை இல்லறத்தாரின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. துறவறம் போற்றவும் இல்லற வாழ்வினர் மேற்கொள்ளும் ஈகை உதவுகிறது என்று காட்டுகிறது.

முடிவுரை:
திருக்குறள் மணிமேகலை ஆகிய இவ்விரு நூல்களிலும் அறம் அடித்தளமாக விளங்குவதையும், அவ்வறச்சிந்தனைகளை இருவேறு கோணங்களில், ஆனால் ஒரே குறிக்கோள் நோக்கி வெளிப்படுத்துவதையும், இரு நூல்களும் அறம், அன்பு, அருள், கருணை, கொல்லாமை, நிலையாமை, ஊழ்வினை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஆழமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளமையையும், அவை மானுட வாழ்வின் மேன்மைக்கு அறமே அடித்தளம் என்பதை ஒருமித்த குரலில் பறைசாற்றுகின்றன என்பதையும் இந்த ஒப்பீட்டு ஆய்வானது எடுத்துரைக்கிறது.

குறள் சொல்லும் சமயம் கடந்த பொது நன்னெறி கோட்பாடுகளை விளக்க, அவற்றைக் கதைவடிவில் மக்களிடம் கொண்டு செல்ல ஒரு புனைவு எழுதப்படுமானால், ஒரு பௌத்தப் படைப்பாளரின் கருத்துரிமை அடிப்படையில் உருவான காப்பியமாக, மணிமேகலையாக அது திகழ்கிறது எனலாம். "பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய்" (மணிமேகலை - 22; சிறைசெய் காதை) என்று சீத்தலைச் சாத்தனார் வள்ளுவரை மேற்கோள் காட்டும் வரிகள் மேகலை ஆசிரியருக்கு வள்ளுவம் கொடுத்த தாக்கத்திற்கும் சான்றாக அமைகிறது.

மணிமேகலையின் கதை வடிவ விளக்கமும், திருக்குறளின் கோட்பாட்டு விளக்கமும் ஒரே அறத்தின் இருவேறு வெளிப்பாடுகளாகும். ஆக, மணிமேகலை ஓர் ஆன்மீகத் தலைவியாக மட்டுமின்றி, சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்கிறாள். உலக இன்பங்களைத் துறந்து, ஞானத்தைத் தேடி, மனிதக்குலத்திற்குச் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆழமான ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கிறாள்.

இருப்பினும், அவற்றில் நுட்பமான சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. மணிமேகலை, பௌத்த மெய்யியலின்படி, பற்றுகளை அறுக்கும் துறவு நெறியை வீடுபேற்றுக்கான வழியாக முன்வைக்கிறது. மேலும், ஆன்மா குறித்த அதன் அனாத்மா பார்வை, இந்திய மெய்யியலின் பிற மரபுகளிலிருந்து தனித்து நிற்கிறது. மறுபுறம், திருக்குறள் இல்லறத்தை மையமாகக் கொண்ட ஓர் உலகப் பொது நெறியை வகுத்து, அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை வலியுறுத்துகிறது வையத்தில் வாழ்வாங்கு வாழ அறிவுறுத்துகிறது.

இறுதியாக, இந்த இரு பெரும் நெறிகளும் முரண்பட்டவை அல்ல, மாறாகத் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஒருங்கிணைந்த பார்வையை வழங்கும் இருவேறு கிளைகள் என்பது நிறுவுகிறது. 'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை' என்ற பார்வையில் மணிமேகலையில், அறம் என்பது ஆன்மிக விடுதலையை நோக்கிய ஒரு பயணம்; திருக்குறளிலோ, அறம் என்பதே மனிதராக வாழ்வதன் இலக்கணம். இந்த இரு பெரும் மரபுகளும் இணைந்து தமிழ் அறநெறிச் சிந்தனையை வளப்படுத்தி, உலகிற்கே வழிகாட்டும் ஒருங்கிணைந்த பார்வையை வழங்குகின்றன.

சான்றாதாரங்கள்:
1. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (ஆசிரியர்), ந.மு. வேங்கடசாமிநாட்டார் (ஆசிரியர்).  மணிமேகலை (மூலமும் உரையும்), கௌரா பதிப்பகம், சென்னை, 2019

2. வரதராஜன்.மு, திருக்குறள் உரை விளக்கம், திருவள்ளுவர் நிலையம், திருச்சி, 1954.

"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
— முனைவர் ஜோதி எஸ். தேமொழி
செயலாளர், தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
சான் பிரான்சிஸ்கோ, யூ.எஸ்.ஏ
-------


தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி. . .
டோக் பெருமாட்டி கல்லூரி-மதுரை, தமிழ் உயராய்வு நடுவம்
24.02.2026 அன்று நடத்திய
'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை'— என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில்
"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
என்னும் தலைப்பில் முனைவர் ஜோதி எஸ். தேமொழி வழங்கிய கட்டுரை
கருதரங்க மலர் - ISBN: 978-93-47702-06-8




----

[நன்றி: தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை'— என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம்-24.02.2026]

நன்றி: தமிழணங்கு,  ஏப்ரல் 2026 (பக்கம்: 37 - 42)



#தமிழணங்கு, #கருத்தரங்கம், #திருக்குறள், #சொற்சுவை, #மணிமேகலை, #Themozhi 

Saturday, September 21, 2024

தொல்காப்பிய மெய்ப்பாடுகள்: ஓர் அறிவியல் நோக்கு


ஆய்வுத் தலைப்பு: 

அறிவியல் சொல்லும் மெய்ப்பாடுகளும் தொல்காப்பிய மெய்ப்பாடுகளும்


குறிசொற்கள்: 

தொல்காப்பியம், மெய்ப்பாடுகள், உணர்ச்சிகள், எண்வகை மெய்ப்பாடுகள், 'புளட்சிக்'  உளவியல் கோட்பாடு


ஆய்வுச் சுருக்கம்: 

உலக மொழிகளில் மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த தனிச்சிறப்புக் கொண்டது தொல்காப்பியம். ஒருவரின் உள்ளத்து உணர்ச்சிகள் பிறருக்குப் புலனாகுமாறு புற உறுப்புகளில் தோன்றுவதே மெய்ப்பாடு ஆகும். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியல் எட்டு வகையான மெய்ப்பாடுகளை வகைப்படுத்துகிறது. அவற்றை, 1) சிரிப்பு, 2) அழுகை, 3) இழிபு, 4) வியப்பு, 5) அச்சம், 6) பெருமிதம், 7) சினம், 8) மகிழ்ச்சி என எட்டு வகை மெய்ப்பாடுகளாகத் தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார். எண்வகை மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றும் நான்கு நான்கு (8x4=32) காரணிகளின் மூலம் 32 வழிகளில் மேற்கூறிய உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இன்றைய அறிவியலும் உளவியல் கோட்பாடுகளின்வழி (Psychological Theories) மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகளை விளக்குகிறது.  இன்றைய அறிவியல் உலகம் வகைப்படுத்தி விளக்கும் உள்ளத்தின் உணர்வுகளின் வெளிப்பாட்டைத் தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்வது; குறிப்பாக, 'புளட்சிக்' கோட்பாட்டுடன் (Plutchik's theory) உளவியல் நோக்கில் ஒப்பிடுவதன் மூலம் ஓர் ஒப்பீட்டு ஆய்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது.


முன்னுரை:

உலக மொழிகளில் காணப்பெறும் பன்மொழிகளின் இலக்கண நூல்களுடன் ஒப்பிடுகையில், மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே நூல் தொல்காப்பியம் மட்டுமே. மற்ற மொழிகளின் இலக்கண நூல்கள் சொல், தொடர் மற்றும் பாடல்களுக்கு இலக்கணம் வகுத்தாலும் மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுக்கவில்லை. இப்பண்பினால் தொல்காப்பியம் இலக்கண நூல்களுள் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

தொல்காப்பியமெய்ப்பாடுகள்:

பொருளதிகாரத்தில் ஆறாவதாக அமைந்திருக்கும் மெய்ப்பாட்டியல் எண்வகையான மெய்ப்பாடுகளை வகைப்படுத்துகிறது. மெய் - உடம்பு; பாடு - படுதல், தோன்றுதல். அஃதாவது,  ஒருவரின் உள்ளத்து உணர்ச்சிகள் பிறருக்குப் புலனாகுமாறு புறஉறுப்புகளில் தோன்றுவதே மெய்ப்பாடு ஆகும்.  ஒருவரின் மெய் வேறுபாடு அறிந்து மற்றவர் ஒழுக வேண்டிய திறப்பாடு பற்றி வகுக்கும்  தொல்காப்பியர் 1) நகை  2) அழுகை 3) இளிவரல் 4) மருட்கை 5) அச்சம் 6) பெருமிதம் 7) வெகுளி 8) உவகை என எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பட்டியலிடுகிறார்.

     "நகையே  அழுகை  இளிவரல் மருட்கை

      அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

      அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப" (தொ. பொ. 247)

 என்று மேற்கூறிய நூற்பாவில் தொல்காப்பியர் சுட்டுவது சிரிப்பு, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்யின்புறப்புலப்பாடுகள் எட்டு வகை  என்பதே  ஆகும்.

அத்துடன்;

      "பண்ணைத் தோன்றிய எண்நான்கு  பொருளும்

      கண்ணிய புறனே நால்நான்கு என்ப" (தொ.பொ. 245)

என்ற மேற்கண்ட நூற்பாவின்படி எண்வகை மெய்ப்பாட்டுக்களன்கள்(இடங்கள்) ஒவ்வொன்றும் நான்கு நான்கு  பொருள்களில் வரும் என்றும் தொல்காப்பியர் மேலும் விளக்குகிறார். அதாவது, (8 x 4 = 32) மேற்கூறிய பொருள்களின் மூலமாக  உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இவற்றை விரிவாகவும் கீழ் வரும் நூற்பாக்களின்வழி அறியலாம்.

1.      "எள்ளல்  இளமை பேதைமை மடன் என்று

உள்ளப்பட்ட நகை  நான்கு  என்ப" (தொ. பொ. 248) நகை மெய்ப்பாடு,

இகழ்தல், இளமை, அறியாமை, ஒன்றை மற்றொன்றாக மாற்றி உணர்தல் ஆகிய நான்கு சூழல்களிலும் வெளிப்படும்.

2.      "இழிவே இழவே அசை வேவறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே"  (தொ. பொ. 249)  அழுகை மெய்ப்பாடு,

இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை  ஆகிய நான்கு காரணங்களாலும் அழுகை ஏற்படும்.

3.      "மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு

யாப்புற வந்த இளிவரல்நான்கே" (தொ. பொ. 250) இளிவரல் மெய்ப்பாடு,

முதுமை, நோய், துன்பம், எளிமை  ஆகிய நான்காலும் இளிவரலாகிய இழிபு ஏற்படும்.

4.    "புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

      மகிமை சாலாமருட்கைநான்கே" (தொ. பொ. 251) மருட்கை மெய்ப்பாடு,

அறிந்திராத புதுமை, அளவிலா பெருமை, அளவில் மிகக் குறைந்த சிறுமை, ஒன்று பிறிதொன்றாகும் ஆக்கம்  ஆகிய நான்காலும் வியப்புத் தோன்றும்.

5.      "அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே" (தொ. பொ. 252)  அச்ச மெய்ப்பாடு,

கண்ணுக்குப்புலப்படாமல் இருந்து வருத்தும் சூர் முதலான தெய்வங்கள், கொடிய விலங்குகள், கள்வர், அரசன் ஆகிய நான்கினாலும் அச்சம்  ஏற்படும்.

6.      "கல்வி தறுகண்புகழ்மை கொடை எனச்

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே" (தொ.பொ.253) பெருமித மெய்ப்பாடு,

கல்வி,அஞ்சாமை, கிடைக்கும் புகழ், வழங்கும் கொடை ஆகிய நான்காலும்பெருமிதச் சுவை  தோன்றும்.

7.     "உறுப்பறைகுடிகோள் அலை கொலை என்ற

வெறுப்ப வந்த வெகுளி நான்கே" (தொ. பொ. 254) வெகுளி மெய்ப்பாடு,

உறுப்புக்களை அறுத்தல், துன்புறுத்தல், வைதல்,  அறிவால் பெற்ற புகழை  அழித்தல்  ஆகிய நான்கு இடங்களிலும் வெறுக்கத்தக்கச்சினம் தோன்றும்.

8.      "செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என

      அல்லல் நீத்தே உவகை நான்கே" (தொ. பொ. 255) உவகை மெய்ப்பாடு,

செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சி, மேன்மையான அறிவுப் புலமை, உள்ளம் ஒத்தவரோடு  இணைதல், கூடி ஆடும் விளையாட்டு  ஆகிய நான்காலும் மகிழ்ச்சி ஏற்படும்.

மேலே கூறப்படும் இந்த எட்டு வகையான மெய்ப்பாடுகளின் அகச்சுவைக் கூறுகளாவன;    1. உடைமை 2. இன்புறல் 3. நடுவுநிலை 4. அருளல் 5. தன்மை  6. அடக்கம் 7. வரைதல் 8. அன்பு 9. கைம்மிகல் 10. நலிதல் 11. சூழ்ச்சி 12. வாழ்த்தல் 13. நாணுதல் 14. துஞ்சல் 15. அரற்று 16. கனவு 17. முனிதல் 18. நினைதல் 19. வெரூஉதல் 20. மடிமை  21. கருதல் 22. ஆராய்ச்சி 23. விரைவு 24. உயிர்ப்பு 25. கையாறு 26. இடுக்கண் 27. பொச்சாப்பு 28. பொறாமை 29. வியர்த்தல் 30. ஐயம் 31. மிகை 32. நடுக்கு ஆகிய  இந்த 32 மெய்ப்பாடுகள் (தொ. பொ. 256) மன உணர்வு மெய்ப்பாடுகளின் கீழ் இடம் பெறுகின்றன.

அடிப்படை மனித உணர்ச்சிகள் முகத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் என்பதை இன்றைய அறிவியல் உலகமும் உளவியல் கோட்பாடுகளின்வழி (Psychological Theories)  விளக்குகிறது.  உளவியல் என்பது மக்களின் செயல்கள், நடத்தைகள், உள்ளத்திறன்கள் பற்றி அறிய உதவும் ஓர் அறிவியல்.  ஆகவே, இன்றைய அறிவியல் உலகம் வகைப்படுத்தி விளக்கும் அவ்வுள்ளத்தின் நிகழ்வுகளை;   தொல்காப்பியம் காட்டும் புறத்தார்க்கும் புலப்படுவதும் வெளிப்படக்கூடியதுமான மெய்ப்பாடுகளை  உளவியல் நோக்கில் ஒப்பிட்டு ஆராய்வது, குறிப்பாக,  'புளட்சிக்' கோட்பாட்டுடன்  (Plutchik's theory) ஒப்பிட்டு ஆராய்வது என்ற அடிப்படையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.


தொல்காப்பியர் – இராபர்ட் புளட்சிக்  ஓர் ஒப்பீடு:

உளவியல் ஆய்வில், மனித உணர்வுகளை வகைப்படுத்துவதில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க உளவியல் அறிஞர் 'இராபர்ட்புளட்சிக்' (Robert Plutchik) கையாண்ட வகைப்பாட்டு முறைகளோடு ஒப்பிடலாம். 'இராபர்ட்புளட்சிக்' உணர்வுகள்கோட்பாடு (Robert Plutchik's Theory of Emotions) விலங்குகள் மற்றும் மனிதர்களின் உணர்ச்சிகளின் கருத்தாக்கத்திற்கான அடித்தளத்தை நிறுவியது.

உணர்வுகளின் வெளிப்பாடு  குறித்த இவரது உளவியல் கோட்பாட்டின் அடிப்படை, மனவளர்ச்சிக் கோட்பாடு (psycho-evolutionary theory of emotions);  இக்கோட்பாட்டின் அடித்தளம் என்பது ஓர் உயிரினத்தின்உணர்வுகள், சமூகச் சூழ்நிலை மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு ஏற்ப தகவமைத்து வெளிப்படுத்தப் படுபவை என்று விளக்கமளிக்கிறார் புளட்சிக், இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உணர்ச்சிகளை வேறுபடுத்துகிறது.

புளட்சிக் எட்டு முதன்மை உணர்வுகளை அடையாளம் கண்டு அவற்றை  "சக்கரம்" வடிவத்தில் மாறுபட்ட எதிரெதிர் இணையாக ஒழுங்கமைத்துக்காட்டினார்.  மகிழ்ச்சி — சோகம், கோபம் — பயம், நம்பிக்கை — வெறுப்பு, ஆச்சரியம் — எதிர்பார்ப்பு,  இந்தஅமைப்பை உணர்வுகள் சக்கரத்தில் காணலாம் (படம் 1). 

இவரும்தொல்காப்பியர் கூறிய எண்வகை மெய்ப்பாடுகள்போன்று;1. மகிழ்ச்சி(Joy) 2. அழுகை(Sadness) 3. இழிபு/வெறுப்பு(Disgust),  4. வியப்பு (Surprise) 5. அச்சம்(Fear)  6. சினம்(Anger)  7. எதிர்பார்ப்பு(Anticipation) 8. நம்பிக்கை(Trust)ஆகிய எட்டு முதன்மை உணர்ச்சிகள் இருப்பதாக  வரையறுக்கிறார்.

'புளட்சிக்' உளவியல் கோட்பாட்டு குறிப்பிடும் எட்டு  உணர்வுகளும் தொல்காப்பியர் காட்டும்  சிரிப்பு, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சிஆகிய எட்டு வகைமெய்ப்பாடுகளுடன் பெருமளவிற்கு இசைந்து செல்வதைக் காணலாம். 

தாம் குறிப்பிடும் முதன்மை உணர்வுகள் தோன்றக் காரணம் எவையெவை என்பதையும் கீழ்வருமாறு விவரிக்கிறார் புளட்சிக்:

மகிழ்ச்சி: மகிழ்ச்சி, மகிழ்ச்சி மற்றும் நேர்மறையான அனுபவங்களுடன் தொடர்புடையது.

அழுகை: இழப்பு, ஏமாற்றம் மற்றும் எதிர்மறை உணர்வுகளுடன் தொடர்புடையது.

வெறுப்பு: விரும்பத்தகாத அல்லது புண்படுத்தும் ஒன்றின் மீதான வெறுப்பிலிருந்து எழுகிறது.

வியப்பு: எதிர்பாராத ஒன்று நடக்கும்போது ஏற்படும் உணர்வு.

அச்சம்: ஆபத்து, அச்சுறுத்தல் மற்றும் உயிர்வாழும் உள்ளுணர்வுகளுடன் தொடர்புடையது.

சினம்: விரக்தி,  எரிச்சல் மற்றும் வலுவான எதிர்வினைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு: எதிர்கால நிகழ்வுகளை எதிர்நோக்குவதை உள்ளடக்கியது.

நம்பிக்கை: மனநிறைவு மற்றும் அமைதியின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.

இவ்வாறாக புளட்சிக் முதன்மை உணர்வுகள் தோன்றுவதற்கான காரணங்கள் உணர்வுகளுடன் தொடர்புடையவை எனக் கூறுகிறார்.

           தொல்காப்பியர்  கூறும் எட்டு முதன்மை மெய்ப்பாடுகளின் எண்ணிக்கை - 32  (8 x 4 = 32)

           மெய்ப்பாட்டுநிலைக்களன்கள் (தொல். பொ. 248 —தொல். பொ. 255) நூற்பாக்களில்  விளக்கப்படுகின்றன.

மேலும், புளட்சிக்கின் கோட்பாடு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை (primary and secondary) உணர்ச்சிகளின் அடித்தளத்தை நிறுவியது. இரண்டாம் நிலை உணர்வுகள் முதன்மை உணர்வுகளின் கலவையாகும். அவை மிகவும் சிக்கலானதாகவும்நுணுக்கமாகவும் இருக்கும் என்கிறார் புளட்சிக்.

எடுத்துக்காட்டாக;

பொறாமை உணர்வு:  சோகம்  மற்றும்  கோபம் ஆகிய உணர்வுக் கலவைகளின் வெளிப்பாடு

அவமான உணர்வு: பயம் மற்றும் வெறுப்பு ஆகிய உணர்வுக் கலவைகளின் வெளிப்பாடு

குற்ற உணர்வு: மகிழ்ச்சி மற்றும் அச்சம் ஆகிய உணர்வுக் கலவையின் வெளிப்பாடு

ஆர்வம்: நம்பிக்கை மற்றும் வியப்பு ஆகிய உணர்வுக்  கலவையின் வெளிப்பாடு.

என்பது புளட்சிக்  உணர்வுகளை வகைப்படுத்தும் முறைக்குத் தரும்  விளக்கம்.

இது எண்வகை மெய்ப்பாட்டுக்களன்கள் தவிர்த்து மெய்ப்பாட்டிற்குரிய பிறநிலைக்களன்கள் என்று தொல்காப்பியர் வகைப்படுத்தும் 32 மனஉணர்வு மெய்ப்பாடுகளுடன் (தொல். பொ. 256)  தொடர்புடையதாக விளக்கமாக அமைந்திருப்பதையும் காணலாம். அவர் காட்டும் இரண்டாம் நிலை உணர்வுகள் தொல்காப்பியர் வகைப்படுத்தும் மனஉணர்வு மெய்ப்பாடுகளுக்கு இணையானது எனவும் கூறலாம். இவ்வாறாக அண்மைய அறிவியல் உலகம் கூறும் உளவியல் கோட்பாடுகளுடன்தொல்காப்பியரின்மெய்ப்பாட்டியல்கருத்துகளை ஒப்பிட்டு ஆராய இயலும்.

படம் – 1 : தொல்காப்பியர் காட்டும்  எட்டு மெய்ப்பாடுகள்

 

 

படம் – 2 : புளட்சிக்கின் எட்டு முதன்மை உணர்வுகள்

 

படம் – 3 : தொல்காப்பியர் காட்டும்  எட்டு மெய்ப்பாடுகளும் அவற்றுக்கான மெய்ப்பாட்டு நிலைக்களன்களும்

 

படம் – 4  : புளட்சிக்கின் எட்டு முதன்மை உணர்வுகள்

தோன்றுவதற்கான காரணங்கள்

 

முடிவுரை:

உணர்வுகளைக்  குறித்த அறிவும் ஆய்வும் வரலாற்றில் பலகாலமாகவே இருந்தாலும்; உளவியல் என்ற முறையான ஓர் அறிவியல் துறையின் கீழ் அறிவியல் நோக்கில் அறியவும் ஆராயவும்முற்பட்ட காலம்  வெகு அண்மையில்  19 ஆம் நூற்றாண்டில்தான்.   பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதியில் (1879) லீப்ஜிக்கில் வுண்டின் ஆய்வகத்தை நிறுவியதன் மூலம் உளவியல் ஓர் அறிவியல் துறையாக வெளிப்பட்டது.

 

உளவியல் கூறும்  நவீன  அறிவியல் கொள்கைகளுக்கும்கோட்பாடுகளுக்கும் இணையான கருத்தாக்கங்கள்  2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தமிழ் இலக்கண நூலானதொல்காப்பியத்தில் காணக் கிடைப்பது மிக வியப்பானது. அறிவியல்  என்னும் ஒரு துறைக்குத் தேவையான நுண்ணிய கூர்ந்த கவனிப்பும், பார்த்தவற்றை ஆவணப்படுத்தி நுணுகி  ஆய்ந்து விளக்கமளித்து  அவற்றை ஆவணப்படுத்தும் அறிவியல் போக்கும் பழந்தமிழர்களிடையே இயல்பாக அமைந்து இருந்ததையே இந்த ஒற்றுமை காட்டுகிறது.

 

தொல்காப்பியநூற்பா குறிப்பிடும் சிரிப்பு, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி  என்ற இந்த எட்டு வகை உணர்வுகளும் அல்லது மெய்ப்பாடுகளும் தமிழருக்கு மட்டுமன்றி  உலக மனித இனத்தில் உள்ள எவருக்குமே பொதுவாக அமைந்தவை.   அவற்றை இலக்கண நூலின் பொருளதிகாரத்தின் பகுதியாக்கிய சிறப்பு தொல்காப்பியரின்  அறிவு மேன்மையைக் காட்டுகிறது .

சுவை எனவும் குறிப்பிடப்படும் மெய்ப்பாடுகள் எட்டு என வரையறுத்த தொல்காப்பியர்; தான் குறிப்பிடும் எட்டு மெய்ப்பாடுகள் அல்லது சுவைகள் ஒவ்வொன்றும் அவை பிறப்பதற்கான நான்கு நிலைக்களன்களையும் காட்டியுள்ளார். எனவே, எட்டு சுவைகள்பிறப்பதற்கு அடிப்படையாக முப்பத்திரண்டு நிலைக்களன்கள் தொல்காப்பியரால் குறிப்பிடப்படுகிறது. புளட்சிக்கின் கோட்பாடும் இந்த வகையிலேயே உளவியல் விளக்கம் தருவதைக் காணமுடிகிறது.

வெவ்வேறு பண்பாட்டு மாறுபாடுகள் உணர்ச்சி அனுபவங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகளை வடிவமைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.   இருப்பினும் இது போல உணர்வுகளைப் பகுத்தாயும் புளட்சிக்கின் கோட்பாடும்,  தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளுக்கும் உணர்வுகளின் அடிப்படைப் புரிதலை வழங்குகிறது  என்பதில்  மாற்றுக்   கருத்து   இருக்க   வழியில்லை.

 

சான்றாதாரங்கள்:

தொல்காப்பியம்  பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் நூற்பாக்கள்

தொல்காப்பியம் உரைவளம், பொருளதிகாரம்: மெய்ப்பாட்டியல், தொகுப்பும் குறிப்பும்  ஆ . சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998

Theories of Emotion (Emotion: Theory, Research, and Experience Vol. 1),  Robert Plutchik, Henry Kellerman. Academic Press, 1980.

Plutchik, R. The nature of emotions: Human emotions have deep evolutionary roots, a fact that may explain their complexity and provide tools for clinical practice. Am. Sci. 2001, 89, 344–350.

 

பின்னிணைப்பு:

தொல்காப்பியம் பொருளதிகாரம்மெய்ப்பாட்டியல்நூற்பாக்கள்

‘உய்த்துணர்வு இன்றித்தலைவரு பொருளின்

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும்,’

            — தொல். பொ. 516

‘பண்ணைத்தோன்றியஎண்நான்கு பொருளும்

கண்ணியபுறனேநால்நான்குஎன்ப’

            — தொல். பொ. 245

‘நகையே அழுகை இளிவரல்மருட்கை

      அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

      அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப’

            — தொல். பொ. 247

      ‘எள்ளல் இளமை பேதைமை மடம் என

உள்ளப் பட்ட நகைநான்குஎன்ப.’

            — தொல். பொ. 248

      ‘இளிவேஇழவேஅசைவே வறுமை என

விளிவுஇல் கொள்கை அழுகை நான்கே.’

            — தொல். பொ. 249

‘மூப்பேபிணியே வருத்தம் மென்மையோடு

யாப்புற வந்த இளிவரல்நான்கே.’

            — தொல். பொ. 250

      ‘புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கைநான்கே.’

            — தொல். பொ. 251

      ‘அணங்கேவிலங்கேகள்வர்தம்இறைஎனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே.’

            — தொல். பொ. 252

      ‘கல்வி தறுகண்இசைமைகொடைஎனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.’

            — தொல். பொ. 253

      ‘உறுப்பறைகுடிகோள்அலைகொலை என்ற

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.’

            — தொல். பொ. 254

      ‘செல்வம் புலனேபுணர்வுவிளையாட்டென

      அல்லல் நீத்த உவகை நான்கே.’

            — தொல். பொ. 255

மெய்ப்பாட்டிற்குரியபிறநிலைக்களன்கள்- சிறப்பில்லாமெய்ப்பாடுகள்

ஆங்கவைஒருபால் ஆக ஒருபால்

உடைமை1இன்புறல்2நடுவுநிலை3அருளல்4

தன்மை5அடக்கம்6வரைதல்7அன்பு8எனாக்

கைம்மிகல்9நலிதல்10சூழ்ச்சி11வாழ்த்தல்12

நாணுதல்13துஞ்சல்14அரற்றுக்15கனவு16எனாஅ

முனிதல்17நினைதல்18வெரூஉதல்19மடிமை20

கருதல்21ஆராய்ச்சி22விரைவு23உயிர்ப்பு24எனாஅக்

கையாறு25இடுக்கண்26பொச்சாப்புப்27பொறாமை28

வியர்த்தல்29ஐயம்30மிகை31நடுக்கு32எனாஅ

இவையும் உளவே அவையலங்கடையே.

            — தொல். பொ. 256

இது மேற்கூறி வந்த எண்ணான்கும்  அன்றி  இவை  முப்பத்திரண்டும் அவை போல மெய்ப்பாட்டிற்குரிய பிறநிலைக்களன்களாகும்

 

சான்றாதாரங்கள்:

Report of the Calendar Reform Committee. Saha, M. N. (chairman) (1955) Page xiii, 238

ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார், வித்துவான் திரு. பு. சி. புன்னைவனநாத முதலியார்

எழுதிய விருத்தியுரை. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக்கம் 73-74.

https://www.tamilvu.org/ta/library-l2H00-html-l2H00bod-132247

Freeth, T., Higgon, D., Dacanalis, A. et al. A Model of the Cosmos in the ancient Greek Antikythera Mechanism. Nature. Sci Rep 11, 5821 (2021).

https://rdcu.be/dXv4Z

Wonder of the Ancient World. Tony Freeth. Scientific American Magazine Vol. 326 No. 1 (January 2022), p. 24

doi:10.1038/scientificamerican0122-24

Decoding the Antikythera Mechanism, the First Computer.  Jo Marchant.  Smithsonian Magazine.  February 2015

https://www.smithsonianmag.com/history/decoding-antikythera-mechanism-first-computer-180953979/

Scientists Unravel Mystery of Ancient Greek Machine. Ker Than.  Live Science. August 17, 2022

https://www.livescience.com/1166-scientists-unravel-mystery-ancient-greek-machine.html

Antikythera Mechanism

https://www.youtube.com/watch?v=zu--8qxDlCY


முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடுகனடா - செப்டம்பர் 212024

ஆய்வரங்கில் படிக்கப்பட்ட  ஆய்வுக் கட்டுரை . . .

“தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் அறிவியல்  சொல்லும்  மெய்ப்பாடுகளும்”

[ஆய்வுக் குறிப்பு எண் - தொ.மா. 142

Meyppadu of Tholkappiyam compared with Psychological Science -Themozhi]


செப்டம்பர் 21, 2024

#கருத்தரங்கம், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #தொல்காப்பியம்,  #Themozhi