வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்
முனைவர் மு. முத்துவேலு
முதல் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது "வள்ளுவர் குறள் ஆத்திசூடி முறையில்" என்னும் நூலாகும்.
நூலைத் தொகுத்தவர் பைந்தமிழ் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள். ஆத்திசூடி என்பது தமிழ் அற நூல்கள் மரபில் ஒரு புதிய யாப்பு வடிவத்தில் அமைந்திருப்பதாகும். இது அறக்கருத்துக்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்திலும் ஆழமாகப் பதிவு செய்வதற்கு ஏற்ற வடிவமாக அமைந்துள்ளது. எனவே ஆத்திசூடி வடிவத்தை ஔவைக்குப் பின் பாரதியும் அதற்குப் பின்னர் பாரதிதாசனும் இன்னும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல புலவர் மக்களும் தாங்கள் கூற வந்த கருத்துக்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ற வடிவமான ஆத்திசூடியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள் திருக்குறளை ஆத்திசூடி முறையில் தொகுத்துள்ளார். தமிழின் நெடுங்கணக்கு அகர வரிசைப்படிச் செய்திகளை வரிசைப்படுத்திக் கூறுகிற ஆத்திசூடி முறையினுக்கு ஏற்ப
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" எனத் தொடங்கும் முதல் குறளில் இவரும் தொடங்கியுள்ளார்.
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்" என்னும் அவா அறுத்தல் அதிகாரத்தில் வரும் 363-ஆம் குறளோடு இதனை நிறைவு செய்துள்ளார்.
எழுபது திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அமைத்துள்ளார். இந்த நூலில் கடவுள் வாழ்த்து, கல்வி, காலம் அறிதல், அவா அறுத்தல், புகழ், பெருமை, வாய்மை முதலிய அதிகாரங்களிலிருந்து இரண்டு குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனைய 54 அதிகாரங்களிலிருந்து ஒரு குறள் என்ற விதத்தில் தேர்ந்தெடுத்து மொத்தம் எழுவது குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
குறள் குறித்தும் வள்ளுவர் குறித்தும் சில சிறப்புச் செய்திகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருக்குறள் பற்றிச் சில ஆராய்ச்சிச் செய்திகளை ஆய்வறிஞர் தொகுத்து வழங்கியிருப்பது மிகுந்த பயன்பாட்டுக்கு உரியதாகும்.
நூலில் ஆத்திசூடி என்பதற்கான இலக்கணத்தை அருமையாக எடுத்துரைப்பதும் மாணவர்களின் நலன் கருதி அமைந்தது எனலாம் அறிவுரைகளை எடுத்துச் சொல்லுகிற பொழுது உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் அமைத்துச் சொல்லுகிறார். ஔவையின் ஆத்திசூடியில் இருந்து சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
திருக்குறளில் இருந்து ஆத்திசூடி முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்தவர்களைப் பட்டியலிடும்போது முனைவர் சேயோன் அவர்கள் 2001 இல் தொகுத்தளித்த திருவள்ளுவர் ஆத்திசூடியையும் குறிப்பிட்டு இருப்பது ஆய்வாளரின் ஆழ்ந்த புலமையையும் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
அகரவரிசையில் திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அடுக்கித் தருகிற பணியை மட்டும் செய்யாமல் அந்தக் குறள்களுக்கு எளிய முறையில் உரையையும் வழங்கி உள்ளார். ஆய்வறிஞர் தேமொழி அவர்களின் எளிய உரைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
முயற்சித் திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (ஆள்வினை உடைமை குறள்- 616)
இந்தக் குறளுக்கு ஆசிரியரின் உரை பின்வருமாறு அமைகிறது. "முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையை வந்து சேரும்"
இரண்டாவதாக,
பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் (வாய்மை அதிகாரம் குறள் - 292)
இதற்கான தேமொழியாரின் உரை: பொய்யினால் நல்ல நன்மை ஏற்படக்கூடுமானால் அப்பொய்யையும் மெய்யாக ஏற்கலாம்.
இந்த வகையில் ஒவ்வொரு குறளுக்கும் இனிய எளிய உரை அமைத்திருப்பது சிறப்பாகும். இந்த உரைகளைக் காணும் பொழுது தேமொழியார் திருக்குறள் முழுவதற்கும் இது போன்ற எளியதோர் உரையை எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும்.
முனைவர் க. சுபாஷிணி அவர்கள் தம் பதிப்புரையில், "பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எளிய முறையில் சில குறட்பாக்களைப் பிழையின்றிக் கற்றுக் கொள்வதற்கு இது சிறந்த முறை மட்டுமல்ல எளிமையானதும் கூட" என்று கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம் உடையதாகும்.
ஆய்வறிஞர் தேமொழியார் தம் எளிய உரையின்மூலம் படிப்பவர்களை திருக்குறளுக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். எல்லோரும் திருக்குறளைக் கற்க இந்நூல் கைவிளக்காகத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.
வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்
— முனைவர் மு. முத்துவேலு
நன்றி: தமிழணங்கு - அக்டோபர் 2025 (பக்கம்: 91-93)
#தமிழணங்கு, #திருக்குறள், #நூலறிமுகம், #முனைவர்.மு.முத்துவேலு, #Themozhi