Sunday, May 18, 2025

எது தமிழ்ப் புத்தாண்டு???

எது தமிழ்ப் புத்தாண்டு???

MJ. பிரபாகர்

தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்: நூலறிமுகம் 


தமிழர் பண்டிகைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தமிழ்ப் புத்தாண்டு.  தமிழ்ப் புத்தாண்டு எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்ற சர்ச்சை மிக நீண்ட காலமாகவே நிலவி வருகிறது.  ஒரு சாரார் சித்திரை மாதம் எனவும், ஒரு சாரார் தை மாதம் எனவும் வலியுறுத்திக் கொண்டே உள்ளார்கள். 12 கட்டுரைகளின் வழியாக அறிவியல் சார்ந்த தனது கருத்துக்களை இந்நூலில்  ஆசிரியர் பதிவு செய்து உள்ளார். 

மனிதராகிய நாம் அனைவரும் வெளி மற்றும் காலம் சார்ந்து தான் வாழ்கிறோம். இதில் வெளி என்பது வீடு, தெரு, ஊர், நாடு எனப் பல பிரிவுகளில் நாம் பகுத்து அறிகிறோம்.  காலம் என்ற அம்சத்தை அளந்து, பிரித்து அறிய உதவும் கருவியே நாட்காட்டி.

தமிழர்கள் உட்பட இந்தியப் பகுதியில் பல சமூகங்கள் சூரிய இயக்கத்தோடு சேர்ந்து இயங்கும் சூரிய - சந்திர நாட்காட்டிகளை உருவாக்கியுள்ளார்கள். தற்போது நாம் ஆங்கில நாட்காட்டியைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். 

சங்க காலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கான சான்றுகள் இல்லை. சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் தையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றுகளும் இல்லை. 

இத்தகைய கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டுமென்றால் அதற்கு நமக்கு அறிவியல் அடிப்படைத் தேவை.  இந்த நூல் அறிவியல் அடிப்படையில் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்த அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பண்டைய கால  நாட்காட்டிகளைப் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் எளிய தமிழில் நூலாசிரியர் வழங்கியுள்ளார்.

ஆவணி மாதம் தான் பழந்தமிழரின் புத்தாண்டு என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நூல் ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

வரலாற்று ஆய்வாளர் என்பவர் உண்மைக்கு மட்டுமே உண்மையானவராக இருக்க வேண்டும்.  ஏனெனில் உண்மைதான் வரலாற்றின் தாய்.  வரலாறு தான் அருஞ்செயல்களை ஆவணப்படுத்தி அடைகாக்கிறது. தெளிவின்மையின் எதிரி. கடந்த காலத்தின் சாட்சி. எதிர்காலத்தின் இயக்கு விசையும் கூட என்ற அம்பேத்கரின் கூற்றை நூலாசிரியர் அருமையாகச்  சுட்டிக்காட்டி உள்ளார். 

நூலாசிரியர் எந்த வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளச் சொல்லவில்லை. 
தை புத்தாண்டு என்று சொல்பவர்களையும் சித்திரைதான் புத்தாண்டு என்று சொல்பவர்களையும் அவர்களின் கொண்டாட்டத்தை மாற்றிக்கொள்ள எந்த வகையிலும் கூறவில்லை. 
ஆவணியே ஆதி என்று வரலாற்று ஆவணங்களான நிகண்டுகள் தெரிவிப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார். 

எனவே ஆண்டின் தொடக்கம் எது என தமிழர்கள் வரலாற்றில் மேற்கொண்ட ஆய்வு இது என்பதை ஏற்றுக் கொண்டு, ஆண்டின் தொடக்கம் குறித்த உண்மையை,  தமிழர் மரபு எது என்பதைப்  புரிந்து கொண்டாலே இந்த நூலில் நோக்கம் நிறைவேறி உள்ளதாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் தமிழகச் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்த உரைகளையும் நமக்கு ஆதாரமாக வழங்கி உள்ளார்.

தமிழ் வரலாறு பண்பாடு குறித்து ஆர்வம் உடையவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல் இது. பகுத்தறிவு சிந்தனைகளையும் நமக்கு வழங்கி உள்ளார். 

தமிழ் மொழி ஆர்வலரான முனைவர் ஜோதி எஸ்.  தேமொழி அமெரிக்க வாழ் தமிழர்.  

"தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்"
நூலாசிரியர் : முனைவர் தேமொழி
வெளியீடு :  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் -2024
விலை : ரூபாய் 250/-
தொடர்புக்கு: E Mail : mythforg@gmail.com 
நூல் கிடைக்குமிடம்: https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum

#தமிழ்ப்புத்தாண்டு, #நூலறிமுகம், #MJ. பிரபாகர், #Themozhi  



நீண்ட கால சர்ச்சைக்கு அறிவியல் பதில்

— எம்.ஜே.பிரபாகர்
Muthusamy Jeya Prabakar 



தமிழ்ப் புத்தாண்டு எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்ற நீண்ட கால சர்ச்சைக்கு அறிவியல் அடிப்படையில் தீர்வு காணும் முயற்சியே முனைவர் தேமொழியின் "தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்" என்ற நூல். சித்திரை மாதம் என்று சொல்பவர்களும், தை மாதம் என்று வலியுறுத்துபவர்களும் நீண்ட காலமாக முரண்பட்டு வரும் இந்தப் பிரச்சினைக்கு ஆவணங்கள் அடிப்படையில் தெளிவான விளக்கம் அளிக்கிறார் ஆசிரியர்.

பன்னிரண்டு கட்டுரைகளின் வழியாக அறிவியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கும் ஆசிரியர், மனிதர்களின் வாழ்வில் காலம் என்ற அம்சத்தை அளந்து பிரித்தறிய உதவும் கருவியாக நாட்காட்டி இருப்பதை விளக்குகிறார். தமிழர்கள் உட்பட இந்தியப் பகுதியில் பல சமூகங்கள் சூரிய இயக்கத்தோடு சேர்ந்து இயங்கும் சூரிய-சந்திர நாட்காட்டிகளை உருவாக்கிய வரலாற்றை எளிய தமிழில் விவரிக்கிறார்.

சங்க காலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கான சான்றுகள் இல்லை என்ற தனது கண்டுபிடிப்பை ஆசிரியர் தைரியமாக முன்வைக்கிறார். சித்திரையிலோ தையிலோ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பதை பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கிறார்.

ஆவணி மாதம் -
உண்மையான தொடக்கம் பழந்தமிழரின் புத்தாண்டு ஆவணி மாதமே என்பதை பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவுகிறார் ஆசிரியர். வரலாற்று ஆவணங்களான நிகண்டுகள் "ஆவணியே ஆதி" என்று தெரிவிப்பதை சான்றாக முன்வைக்கிறார். இந்தக் கண்டுபிடிப்பு தமிழ் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைகிறது.

தனது ஆய்வுகளை முன்வைத்தாலும், ஆசிரியர் எந்த வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளச் சொல்லவில்லை. தைப்புத்தாண்டு என்று சொல்பவர்களையும், சித்திரைதான் புத்தாண்டு என்று சொல்பவர்களையும் அவர்களின் கொண்டாட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு கேட்கவில்லை. வரலாற்று உண்மையைஅறிந்துகொண்டாலே போதும் என்ற நிலைப்பாடு எடுக்கிறார்.

தமிழகச் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்த உரைகளையும் ஆதாரமாக வழங்குவது நூலின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

அம்பேத்கரின் "உண்மைதான் வரலாற்றின் தாய்" என்ற கூற்றை மேற்கோள் காட்டி, வரலாற்று ஆய்வாளர் உண்மைக்குமட்டுமே உண்மையானவராக இருக்க வேண்டும் என்ற நெறியை வலியுறுத்துகிறார். இது நூல் முழுவதும் பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்வரலாறு மற்றும் பண்பாடு குறித்து ஆர்வம் உடையவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல். அமெரிக்க வாழ் தமிழரான முனைவர் தேமொழியின் இந்த ஆய்வு. தமிழ் அறிஞர்களுக்கு வழிகாட்டும் விளக்கு மாதிரி செயல்படும். பண்டைய கால நாட்காட்டிகளைப் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்கள் வாசகர்களின் அறிவைச் செழுமைப்படுத்தும்.

நூல்: தமிழ்ப் புத்தாண்டு -சர்ச்சைகளும் தீர்வுகளும்
நூலாசிரியர்: முனைவர் தேமொழி
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் - 2024
விலை: ரூபாய் 250/-
தொடர்புக்கு:
email: mythforg@gmail.com
நூல் கிடைக்குமிடம்: https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum


தீக்கதிர் :ஆகஸ்ட் 24, 2025