ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்
தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் பொலிவிழந்த நிலை தோழியை வருத்துகிறது. தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். அப்பொழுது தலைவி தோழியிடம் தங்களுக்கென நிலையான ஓர் இருப்பிடம் இன்றி ஊர் ஊராகச் சென்று கூத்து நடத்துபவர்கள் மூதூர் ஒன்றில் கூத்து நிகழ்த்திவிட்டு வேறு ஊருக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் இருந்தபொழுது ஆரவாரமாக இருந்த மன்றம் பொலிவிழந்த நிலையில் இருப்பதைப் பார்க்கும் ஊர் மக்கள் வருந்துவார்கள். அது போன்று தலைவன் இருந்த பொழுது மகிழ்ச்சியுடன் பொலிவுடன் இருந்த என் வாழ்க்கை அவன் பிரிவுக்குப் பின் வறண்டு போயுள்ளது, அதைக் காணச் சகியாது நீ வருந்துகிறாய் என்று கூறுவதாக அதியன் விண்ணத்தனார் எழுதிய ஒரு அகநானூற்றுப் பாடலில் கூறுவார். இப்பாடல் கூத்தர்களின் கவலையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கைமுறையை விரிவாகக் கூறும் பாடலாக அமைந்திருக்கும். இப்பாடலில் கூத்தர்கள் தங்கள் வண்டியில் செல்லும் நிலை விவரிக்கப்பட்டிருக்கும்.
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
'ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து',
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
[அகநானூறு 301, அதியன் விண்ணத்தனார், வரிகள் 6-8]
இந்த வரிகள் கூறுவது; நீரில் வாழும் முதலை அகல வாய்திறந்து கொட்டாவி விட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு அந்த வண்டியின் அமைப்பு இருக்கும். பனையோலைப் பாய் கூரையாக வேயப்பட்டிருக்கும் அந்தக் கூண்டு வண்டியின் சக்கரங்கள் தரையை அறைத்து ஒலியெழுப்பிச் செல்லும். இவ்வாறாகத் தங்கள் ஊர் இது என்ற கூற வழியின்றி தடையற்ற வாழ்வைக் கொண்டவர்கள் கூத்தர்கள் என்று விவரிக்கப்பட்டிருக்கும்.
நீரில் வாழும் முதலை அகல வாய்திறந்து கொட்டாவி விடும் அமைப்பில் வண்டியா? என்று வியப்பாக இன்று இருக்கலாம். ஆனால் அத்தகைய வண்டிகள் சங்க காலம் முதல் 19 நூற்றாண்டு வரையிலும், ஏன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கூட மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. புகைப்படத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புகைப்படங்களில் இத்தகைய வண்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தேயிலைத் தோட்டப் பகுதியில் எடுக்கப்பட்ட பல படங்களில் இந்த வகை வண்டிகள் பதிவாகியுள்ளன.
அகநானூறு காட்டும் கூத்தர் வண்டி போன்றே கடியலூர் உருத்திரங் கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை பாடல் ஒன்று உமணர்(உப்பு விற்பவர்) வண்டி ஒன்றை விவரிக்கும். அவ்வண்டியும் "ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்" என்றே கூறப்பட்டிருக்கும். பாதை வழியே ஊடறுத்துச் செல்லும் இந்த ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்தை ஓட்டுபவள் மடியில் குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண், அவள் மாட்டை அடித்து விரட்டி ஓட்டுகிறாள்.
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
'ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்'
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்
[பெரும்பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, வரிகள் 49-52]
இந்த வரிகள் கூறுவது; மழைக்காலத்தில் தனது முகட்டில் மேகத்தைச் சுமந்து நின்ற மலையைப் போல, பனையோலைப் பாய் கூரையாக வேயப்பட்டிருக்கும் அந்தக் கூண்டு வண்டியின் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் கோழிக்கூட்டைக் கொண்ட அந்த உமர் கூண்டு வண்டியின் சக்கரங்கள் தரையை அறைத்து ஒலியெழுப்பிச் செல்லும். கானவர்கள் பயிரிட்டுள்ள தினையை அழிக்க வரும் யானைகளிடம் இருந்து காப்பதற்காக அவர்கள் புனங்களின் இடையில் அமைத்திருக்கும் நிழல் தரும் குடில் கொண்ட பரணைப் போலக் காட்சி அளிக்கிறதாம் வண்டிக் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கோழிக்கூடு. (பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை: புலவர் கா. கோவிந்தன். 1996, பக்கம் -50)
இன்றைய நாளில் ஊர்திகளின் மேல் நாம் சரக்கு ஏற்றிச் செல்வது போல (Carrier/Roof rack) அக்காலத்தின் கூண்டு வண்டியின் கூண்டின் மேலும் சரக்கு ஏற்றிச் சென்றுள்ளது இதனால் தெரிகிறது.
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் என்பது பனையோலைப் பாய் வேய்ந்த, செல்லும் வழியை ஒலியுடன் அறுக்கும் கூண்டு வண்டி என்பதையும், அந்தக் கூண்டின் அமைப்பு வாய்திறந்து கொட்டாவி விடும் முதலையின் வாய் போன்ற அமைப்பில் இருக்கும் என்பதையும், அதன்மேல் சரக்கு வைக்கும் கூடு மலையின் மேல் மழைமேகம் தங்கி இருப்பது போல இருக்கும் என்றும் தொகை இலக்கியப் பாடல் வரிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த அமைப்பில் உள்ள மாட்டு வண்டிகள் சென்ற நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தும் உள்ளன என்பதை ஒளிப்படங்கள் மூலம் அறியவும் முடிகிறது.
நன்றி: தமிழணங்கு
நவம்பர், 2023
#இலக்கிய நுட்பம், #இலக்கியம், #தமிழணங்கு, #Themozhi


