Tuesday, December 9, 2025

எண்ணென்ப சொல்லென்ப

எண்ணென்ப சொல்லென்ப 

திருக்குறளில்  அறம், பொருள், இன்பம் என்று முப்பால் உள்ளது, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என்ற எண்ணிக்கையில் 133 அதிகாரங்களில் மொத்தம் 1330 குறள்கள்  உள்ளன. ஒரு குறளில் முதல் அடியில் 4 சீர்கள், இரண்டாம் அடியில் 3 சீர்கள் என 7 சீர்கள் கொண்டது ஒரு குறள்  என்ற அடிப்படைத் தகவலைப் பள்ளிச்சிறார் முதற்கொண்டு அனைவரும் அறிவோம். மேலும் அறத்துப்பாலில் 4 இயல்களும், பொருட்பாலில் 3 இயல்களும், இன்பத்துப்பாலில் 2 இயல்களும் என திருக்குறளில் மொத்தம் ஒன்பது இயல்கள் உள்ளன. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் (380 குறள்கள்), பொருட்பாலில் 70 அதிகாரங்கள் (700 குறள்கள்), இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள்(250 குறள்கள்) என்ற கணக்கும் படித்திருப்போம். குறளுக்கு 2 அடி என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் குறளில் 2660 அடிகள் என்றும்,  ஒரு குறளுக்கு 7 சீர் என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் திருக்குறளில் 9,310 சொற்கள் இருக்கலாம் என அடுத்த கட்டமாக ஒரு தோராயமாக மதிப்பிடுவோம்.  

ஆனால், இதற்கும் அடுத்த கட்டமாக, திருக்குறளுக்குத் தொடரடைவு செய்த முனைவர் ப. பாண்டியராஜா, "திருக்குறள் - சொற்கள் - எண்ணிக்கை" என்று தனது ஆய்வுத் தளத்தை விரிவாக்கி ஆராய்ந்து இருக்கிறார் என்பதை அவருடைய தமிழ் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளத்தில் (http://tamilconcordance.in/TABLE-kuraL.html) உள்ள ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறியலாம். இனி திருக்குறள் குறித்து அவர் தளம் தரும் புள்ளி விவரங்களில்  ஒரு பார்வை: முனைவர் ப. பாண்டியராஜா திருக்குறளில் 11368 சொற்கள் உள்ளன என்றும்; அவற்றில் மீண்டும் மீண்டும் வராத சொற்களாக 4902 சொற்கள்  உள்ளன எனவும் குறிப்பிடுகிறார். சொற்களைப் பிரித்துக் கணக்கிட்ட  முறையை 'பிரிசொற்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக வாலறிவன் என்பதை வால்_அறிவன் என அவர் கையாண்ட முறையை விளக்குகிறார். இதனால் சொற்களின் எண்ணிக்கை 11368 என்ற அளவை எட்டியுள்ளது. 

அடுத்து, கூட்டுத் தொடரடைவு என்ற முறையில் சங்க இலக்கியப் பாடல்களில் (பத்துப்பாட்டு+எட்டுத்தொகை) உள்ள சொற்களையும், திருக்குறளில்  காணப்படும் சொற்களையும், "சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள், பொதுவல்லாத சொற்கள்"  என்று ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுகிறார். 
1. சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச்சொற்கள்: 
இப்பிரிவில் சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களைப் பொதுவான சொற்களாக  வகைப்படுத்துகிறார். அதாவது, 'பகவன் முதற்றே உலகு' என்பதில் இடம் பெறுவது போன்றே,  'உலகு காக்கும் உயர் கொள்கை (புறம்-400) என்ற புறப்பாடலிலும் "உலகு" என்ற சொல் இருப்பது  பொதுச்சொல் ஆகும். அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள் ஆகும். 

திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.  எனவே, (சங்க இலக்கியத்தில் இல்லாமல்) திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள் என்ற பிரிவில் குறளில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும் என்கிறார்.  திருக்குறளில்  இடம்பெறும் அடிமை, பகவன் ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் சங்க இலக்கியத்தில் இல்லை என்று எடுத்துக்காட்டி  விளக்குகிறார். சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள் என  2600 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

2. சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள்: 
சங்க இலக்கியத்தில் இடம் பெறாமல் திருக்குறளில்  மட்டுமே இடம் பெறும் சொற்கள் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேல் என்றாலும், திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டதை  நினைவில் கொள்க. இப்பிரிவில் 2180 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

மொழியின் வளர்ச்சியில் புதுச்சொற்கள் மொழியில் பயன்பாட்டிற்கு வருவதும் சில வழக்கொழிவதும் இயல்பே. எனவே திருக்குறளில்  மட்டுமே வரும் சொற்கள் எவை என்று பார்வையிடுகையில் ஓர் எழுபது சொற்கள் தேர்வு செய்யப்படு இங்கே கொடுக்கப்படுகிறது. இந்தச் சொல் தேர்வுக்குச் சிறப்பு அடிப்படை என எதுவும் இல்லை என்பதைப் படிப்பவர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சொற்களைப் படித்துக் கொண்டே வருகையில், அப்படியா! இது சங்க இலக்கியத்தில்  இல்லையா என்று வியந்த சொற்கள்  இப்பட்டியலில் இடம் பெறுகின்றன.  இப்பட்டியலை வியந்து வியந்து இருமுறை படிக்கப் பரிந்துரை வழங்கப்படுகிறது. இப்பட்டியல் இருவேறு கோணங்களைக் காட்டும். முதலில் சங்க இலக்கியத்தில் இல்லாத திருக்குறள் சொற்களா? என்ற வியப்புடன் படிப்பது. அடுத்து மீண்டும், இன்றும் நம் வழக்கில் இந்தத் திருக்குறள் சொற்கள் உள்ளனவா என்று மற்றொருமுறை படித்து வியப்பது.  

சொல் எழுபது:
சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் 2180 சொற்களில் 70 சொற்கள்:
அகர, அடிமை, அமைச்சு, அறிவது, ஆசாரம், ஆட்சி, இகழ்ச்சி, இதனால், இருட்டு, இல்வாழ்க்கை, 
இழுக்கு, உலகத்தார், ஊருணி, எண்ணம், எனது, எனப்படும், ஒருகால், கடப்பாடு, கடைப்பிடித்து, கயவர், 
கல்வி, கள்ளம், கற்க, குலம், சார்பு, சிலர், செங்கோன்மை, செயற்கை, தலைமக்கள், தள்ளாமை, 
தானம், துப்புரவு, தும்மல், தூக்கம், தூய்மை, தொழும், தோல்வி, நாகரிகம், நுட்பம், நேர்வது, 
பகவன், பயன்படும், பழகுதல், பழங்குடி, பழமை, பாராட்டுதல், பாவம், பாவி, பிற்பகல், பிறந்தார், 
பிறவி, புல்லறிவு, புழுதி, பூசனை, பெருமிதம், மங்கலம், மதிநுட்பம், மாறுபாடு, மானம், முடிவு, 
முற்பகல், மேற்கொள்வது, மேன்மை, வணக்கம், வாணிகம், வியந்து, விழிப்பது, வெல்வது, வெறுப்பு, வேண்டுதல்
மீண்டும் ஒருமுறை படித்து குறளில்  இடம் பெறும்  இன்றும் வழக்கில் உள்ள  சொற்களை அறியவும்.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 314 - 10.12.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi