'திருக்குறள் வைப்புமுறை'
மக்களுக்குத் திருக்குறளின் பாலுள்ள ஈடுபாட்டினைப் புலப்படுத்தும் வகையில் இந்நாள்வரையிலும் திருக்குறளுக்கு உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. திருக்குறள் நூலுக்கு எழுந்த பழைய உரைகள் பத்தும் எழுதியவர்கள் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என்று பதின்மரைத் திருக்குறளின் உரையாசிரியர்களாக ஒரு வெண்பா கூறுகின்றது. திருக்குறள் உரையாசிரியர்களுள் பரிமேலழகர் காலத்தால் பிற்பட்டவர் என்றாலும் அவர் உரையினையே பெரும்பான்மையர் தழுவி குறள் நூல்கள் எழுதத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் எழுதுகையில் பரிமேலழகர் கையாண்ட அதிகார வரிசைப்படுத்தும் முறையையும், அவற்றில் இருக்கும் குறள்களின் வரிசையையும் மற்றவர் பின்பற்றத் தொடங்கியதில் இன்று அது தர நிலைப்படுத்தும் முறையாகத் தானே அமைந்துவிட்டது.
வள்ளுவர் என்பது ஆசிரியரின் இயற்பெயர்தான் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லை, திருக்குறள் என்பதும் பாடலின் இலக்கண அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர் என்ற நிலையில், அப்புலவர் எழுதிய 1330 குறளையும் அவர் 133 அதிகாரங்களாகப் பிரித்தார் என்பதை மட்டும் திருக்குறள் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியச் சமயங்கள் அறிவுறுத்தும் மனிதர் அறியவேண்டிய மெய்ப்பொருள் (புருஷார்த்தம்-தருமம்/அறம், அருத்தம்/பொருள், காமம்/இன்பம், மோட்சம்/வீடு) என்று நான்கு வகைப்படுத்தப்பட்டாலும் வள்ளுவரின் குறளை இதுவரை யாரும் வீடு என்ற பிரிவுக்குள் வகைப்படுத்த முயன்றதாகத் தெரியவில்லை. வீடு என்பது அறத்தின் பயன் என்பதால் அதை அறத்துப்பாலில் அடக்கிவிட்டார் வள்ளுவர் என்பது உரைகாரர்கள் கருத்தாக அமைகிறது. ஆதலால், முப்பாலுடன் வள்ளுவரின் பகுப்பு முறை முடிந்தது என்று தெரிகிறது. அது வள்ளுவரின் கொள்கை நிலைப்பாட்டை அறிவுறுத்தும் மிக முக்கியமான குறிப்பு என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
இருப்பினும், முப்பால் பிரிவுக்குள் இயல்கள், அதிகாரங்கள் ஆகியனவற்றை வகைப்படுத்துதலை இன்றுவரை பல தமிழ் அறிஞர்கள் முயன்றுள்ளனர். காமத்துப்பாலை முதலில் வைக்க வேண்டும் என்று கருதியவர்களில் மு.வரதராசனும், கண்ணதாசனும் குறிப்பிடத்தக்கவர்கள். அவரவர் பார்வையில், அவரவர் முன்வைக்கும் ஏரணப்படி வரிசைப்படுத்தப்படுவது திருக்குறளின் கட்டமைப்பாகவும் உள்ளது என்றாலும், பரிமேலழகர் முறை பொதுமுறையாக நிலைத்துவிட்டது; அதனால் மு.வரதராசனும் அதையே பின்பற்றி தெளிவுரை எழுதினார். எனினும், பழைய உரைகாரர்களில் காலத்தால் முதன்மையானவர் மணக்குடவர் என்பதால் அவர் முறையைத்தான் நாம் செம்பதிப்பு முறைக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வைக்கப்பட்டாலும், வழக்கத்திற்கு வந்துவிட்டதை இனி மாற்றுவது கடினம் மட்டுமல்ல தேவையற்றதும் ஆகும்.
பழைய பத்து உரைகாரர்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்தாலும் அவர்கள் சிலரின் உரைகள் நமக்குக் கிட்டியதில்லை. பரிமேலழகர் உரை போன்றே மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பருதியார் ஆகியோர் உரைகளும் தனித்தனியே வெளிவந்துள்ளன. இக்காலத்தில் இந்நூல்கள் பலவற்றை இணையச் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம் (https://archive.org/details/thirukkural_201808/). அனைத்து உரைகளையும் ஒப்பாய்வு செய்ய உதவும் வகையில் ச. தண்டபாணி தேசிகர் அவர்களின் உரைவளப் பதிப்பும், மேலும் சில உரைக்கொத்து, ஒப்பாய்வு பதிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இயல்பிரித்தல், வகைப்படுத்தலில் உரையாசிரியர்களில் இறைநெறி, சமயநெறி, வாழ்வியல் நெறிகளின் தாக்கம் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. இவ்வாறான திருக்குறள் வரிசைப்படுத்தும் முறையை 'திருக்குறள் வைப்புமுறை' என்பர். வைப்புமுறை மாறுதல்களுக்கு, அதிகாரங்களை வரிசைப்படுத்தும் நோக்கத்தை உரைகாரர் விளக்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடியும்.
பழைய உரைகளில் காலத்தால் முந்திய பத்தாம் நூற்றாண்டு மணக்குடவர் உரையை, காலத்தால் பிந்திய பதின்மூன்றாம் நூற்றாண்டு பரிமேலழகர் உரையையும் அவற்றின் வைப்புமுறையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். இவற்றில் இயல்கள் ஒன்றாக இருப்பினும் அதிகாரங்கள் இயல்களுக்குள் மாறி உள்ளன. ஓர் எடுத்துக்காட்டுக்காக; முற்பட்ட மணக்குடவர், பின்வந்த பரிமேலழகர் ஆகியோரது அறத்துப்பால் பகுதியின் அதிகார வரிசையை மட்டுமே ஒப்பிடலாம். அறத்துப்பால் அதிகாரங்களில் 1.பாயிரம், 2.இல்லறவியல், 3. துறவறவியல், 4. ஊழியல் ஆகியவற்றில்; முதல் பாயிரம், இறுதி ஊழியல் ஆகியவற்றின் அதிகார வரிசை அமைப்பில் இருவர் வைப்புமுறையும் ஒன்றே, எந்த மாற்றமும் இல்லை. ஊழியியலில் இருப்பது ஒரே அதிகாரம் என்பதால் மாற்றவழியில்லை என்பது வேறு.
இடையில் உள்ள இல்லறவியலிலும், துறவறவியலிலும் இயல்களில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. இல்லறவியலில் 20 அதிகாரங்களும், துறவறவியலில் 13 அதிகாரங்களும் இருவர் வைப்புமுறையிலும் இருந்தாலும், இவற்றுக்குள் அதிகார வரிசைகளும் இடம் மாறியுள்ளன, இயல்களின் அதிகாரங்களும் வேறுபட்டுள்ளன:
1. இல்லறவியலின் பொறையுடைமை அதிகாரம் வரிசை மாறிவிட்டது. துறவறவியலில் தவமுடைமை, கூடாவொழுக்கம் அதிகாரங்கள் வரிசை மாறிவிட்டன.
2. மணக்குடவர் முறையில் இருக்கும் வாய்மையுடைமை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, புலான்மறுத்தல், கள்ளாமை ஆகிய ஆறு இல்லறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் துறவறவியலுக்கு மாற்றிவிட்டார்.
3. மணக்குடவர் முறையில் இருக்கும் இனியவைகூறல், அடக்கமுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை ஆகிய ஆறு துறவறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் இல்லறவியலுக்கு மாற்றிவிட்டார்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இந்த மாற்றங்கள் காட்டப்பட்டுள்ளன. இயலுக்குள் மாற்றம் பச்சை நிறத்திலும், இயல் கடந்த மாற்றம் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது ஒப்பிட்டுப் படிப்பவருக்கு ஏன் இந்த மாற்றம், காரணம் என்ன என்று பல கேள்விகள் எழும். மாற்றத்திற்குக் காரணம் அவர்கள் சார்ந்த சமயநெறிக்கும் பங்குண்டு. சமணர் என்று கருதப்படும் மணக்குடவர் கொல்லாமை, புலான்மறுத்தல் என்பவற்றை அனைவருக்கும் பொது என்று கருதுகிறார் என்றும்; பரிமேலழகர் இவை இரண்டையும் துறவறவியலுக்கு மாற்றிவிட்டால் வைதீகக் கோட்பாடுகளுக்கு இசைவாக அமையும் என்றும் கருதி இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னணியை அறியமுயல்வது ஆய்வாளர்களுக்கு மேலும் பல தகவல்களைக் கொடுக்கக் கூடும்.
திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் முப்பால் பிரிவுகளுக்குள் பல்வேறுவகையில் இயல்கள் பிரிப்பதிலும், அவற்றின் கீழ் அதிகாரங்களை வரிசைப்படுத்துவதிலும் மட்டும் வேறுபடவில்லை, அந்த அதிகாரங்களின் குறள்களுக்கு உரை எழுதிய வைப்புமுறையிலும் (வரிசைப்படுத்திக் கொள்வதிலும்) மாறுபடுகின்றனர். இக்காலத்தில் நாம் கையாளும் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றி அதனுடன் மற்ற உரையாசிரியர்களின் குறள் வைப்புமுறையை ஒப்பிட்டுள்ளார்கள் பல ஆய்வாளர்கள்.
வைப்புமுறை வேறுபாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாக; நாணுடைமை அதிகாரத்தின் குறட்பாக்களின் வைப்புமுறையை கிடைக்கும் பழைய உரைகாரர்களான பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் ஆகிய ஐவரின் உரைகளும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம். இந்த அதிகாரத்தின் குறள்களில் ஒரு குறள்கூட அனைவராலும் அதே வரிசையில் அமைக்கப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. மு.சண்முகம் பிள்ளை(1972) எழுதிய 'திருக்குறள் அமைப்பும் முறையும்' என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
பரிமேலழகர் - பரிப்பெருமாள் குறள் வைப்புமுறை ஒப்பீடு:
உரையாசிரியர் பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு, இவருக்கும் முன்னவரான மணக்குடவர் உரையைத் தழுவி இவருடைய உரை எழுதப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கா.ம.வேங்கடராமையா(1988) எழுதிய 'திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை அப்படியே பின்பற்றியதோடு மட்டுமின்றி, அவரது உரையையும் அப்படியே எடுத்து எழுதிவிட்டு மேலும் விளக்கம் எழுதும் முறை இவருடையது. எடுத்துக்காட்டாக;
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.
[மணக்குடவர் உரை விளக்கம்] இதன் பொருள்: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல, பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம் (என்றவாறு).
[பரிப்பெருமாள் உரை விளக்கம்] இது, தீமை மறக்கவேண்டு மென்று கூறிற்று.
இவர்கள் இருவரும் இக்குறளை 102ஆம் குறளாக வைக்கிறார்கள்; பரிமேலழகர் நூலில் இக்குறள் 108 ஆவது குறளாக அமைகிறது.
குறைந்த அளவு வேறுபாடாக, பதினாறு இடங்களில் பரிப்பெருமாள் மணக்குடவரிடம் இருந்து வேறுபடுகிறார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது.
ஓர் ஒப்பீட்டு ஆய்வாக, 1330 குறள்களின் வைப்புமுறையில் பரிப்பெருமாளுக்கும் பரிமேலழகருக்கும் அதிகாரங்களின் கீழ் குறள்களின் வரிசைப் படுத்துதலில் எந்த அளவு வேறுபாடு என்று ஆய்வு செய்த பொழுது: வெறும் 22% மட்டுமே இருவர் வரிசையும் ஒத்துப் போனது. பரிமேலழகர் வைப்புமுறைக்கும் பரிப்பெருமாள் வைப்புமுறைக்கும் இடையில் உள்ள வேற்றுமை 78%. ஒரு தோராயமாக ஐந்து குறள்களில் ஒன்றுமட்டுமே அதே வரிசை எண்ணில் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவு வேறுபாடு காணப்படுகிறது.
• மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய '2' அதிகாரங்களில் மட்டுமே இருவரின் குறள் வரிசைப்படுத்துதல் ஒன்றாக இருக்கிறது;
• அன்புடைமை, பொறையுடைமை, ஒப்புரவறிதல், தவம், வாய்மை , அறிவுடைமை, குற்றங்கூறாமை, தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், பொச்சாவாமை, கொடுங்கோன்மை, வினைத்திட்பம், மன்னரைச் சேர்ந்தொழுகல், அவை அஞ்சாமை, தீநட்பு, புல்லறிவாண்மை, உட்பகை, மருந்து, பெருமை, நன்றியில் செல்வம், நாணுடைமை, இரவச்சம், அலர் அறிவுறுத்தல், பசப்புறு பருவரல், தனிப்படர் மிகுதி, கனவுநிலை உரைத்தல், அவர்வயின் விதும்பல், புணர்ச்சி விதும்பல், புலவி நுணுக்கம், ஊடலுவகை ஆகிய '30'அதிகாரங்களில் எல்லாக் குறள்களுமே வரிசை மாறியுள்ளன;
• இவை தவிர்த்த '101' அதிகாரங்களில் ஆங்காங்கே ஒரு சில குறள்கள் தற்செயலாக அதே வரிசையில் அமைந்துவிடுவதாகத் தெரிகிறது.
இதற்கான மாதிரி ஒப்பீடு அட்டவணையின் படம் இணைக்கப்பட்டுள்ளது. படத்தில் பச்சை நிறம் இருவர் வரிசையிலும் இசைந்து செல்லும் குறள்கள். மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய அதிகாரங்கள் ஒத்திருப்பதையும்; அன்புடைமை அதிகாரத்தில் எல்லாமே மாறி இருப்பதையும்; மற்றவற்றில் ஒரு சில குறள்கள் மட்டுமே ஒத்திருப்பதையும் காணலாம். முழுமையான 1330 குறள்களுக்குமான ஒப்பீட்டு அட்டவணை https://aintinai.blogspot.com/2025/12/kural-couplets-ordering.html இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். (291) வாய்மை
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311) இன்னா செய்யாமை
என்று அதிகாரத் தலைப்பை வரையறுப்பது போன்ற குறள்களை பரிமேலழகர் அவற்றுக்கான அதிகாரங்களின் முதல் குறளாக மாற்றியது சிறப்பாக உள்ளது. எனினும், பிற இடங்களில் இதே முறையை அவர் பின்பற்றியதாகவும் தெரியவில்லை. ஆதலால், இதுவும் தற்செயலாக அமைந்துவிட்ட ஓர் அமைப்போ என்று எண்ண வைக்கிறது. மாற்றத்துக்கான அடிப்படை ஏரணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.
இந்த ஒப்பீடு; பாடல் தொகுப்பாக இருக்கும் தொன்ம இலக்கியங்களின் பாடல் வரிசை அவ்வாறே காலம் காலமாகப் பின்பற்றப்படுகிறது என்ற எண்ணம் தவறானது என்று காட்டுகிறது. தொகுப்புப் பாடல்களாக இருக்கும் இலக்கியங்களில் பாடல் வரிசைகளில் காலம்தோறும் மாற்றம் அடைந்திருக்கக் கூடிய வாய்ப்புண்டு என்ற புரிதலையும் தருகிறது.
![]() |
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 316 - 24.12.2025; இதழ்: 317 - 31.12.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi








