Wednesday, October 22, 2025

குறள் சொல்லும் துணைவயின் பிரிவு

குறள் சொல்லும் துணைவயின் பிரிவு


திருமணம் முடிந்த தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் கற்பு வாழ்க்கை வாழும் காலத்தில்; தலைவன் தலைவியைத் தனித்திருக்கச் செய்து பிரிந்து செல்லும் பிரிவு ஆறு வகைப்படும், அவை:  1. பரத்தையிற் பிரிவு (பரத்தையுடன் வாழ்தல்), 2. ஓதல் பிரிவு (கல்வி கற்க பிரிதல்), 3. காவல் பிரிவு (பாதுகாத்தல் தொழிலை  முன்னிட்டு பிரிதல்), 4. தூதிற் பிரிவு (தலைவன் தூது செல்லுதல்), 5. துணைவயின் பிரிவு (போரில் துணைபுரிதல்), 6. பொருள்வயின் பிரிவு (பொருளீட்டச் செல்லல்) என்பன. 

குறளில் காமத்துப் பாலில் வள்ளுவர் குறிப்பிடும் பிரிவு 'துணைவயின் பிரிவு' ஆகும். மன்னனுக்குப் பகைவர்களால் இடையூறு நேரும்பொழுது அவனுக்குத் துணைபுரியும் நோக்குடன் தலைவன் போருக்குச் செல்லும் பிரிவு இது. இலக்கண நூல்களின்படி அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவருக்கும் துணைவயின் பிரிவு உரியது. இதற்குரிய பிரிவு காலம் ஓர் ஆண்டு ஆகும். அவ்வாறு போரில் துணைபுரிதல் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன் அச்செயலின் காலம் நீட்டிக்கும் போது தலைவியை நினைந்து புலம்பலாம் என்றும் இலக்கணம் கூறுகிறது (கல்வி கற்கச் செல்லும் பொழுது தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புதல் கூடாது என்பது நம்பி அகப்பொருள் நூல் வகுக்கும் விதி). 

திருக்குறள் காமத்துப்பால் குறட்பாக்களில் குறிப்பிடப்படும் தலைவன் ஒருவனா அல்லது வெவ்வேறு ஆண்களா? அவ்வாறே குறள்களில் குறிப்பிடப்படும் தலைவி ஒருத்தியைக் குறிக்கிறதா  அல்லது அவர்கள் வெவ்வேறு பெண்களா?  என்பதை  நாம் உறுதியாகக்  கூற இயலாது.  ஆனால், வள்ளுவர் தன் வாழ்வையே வைத்து  அதில் பெற்ற அனுபவங்களை வைத்து குறள்  எழுதியிருக்கலாம், அல்லது தன் சூழலில் நிகழ்ந்தவற்றைக் கவனித்து அதன் அடிப்படையிலும் எழுதியிருக்கலாம். எனவே, அவர் குறிப்பிடும் தலைவன் யார் தலைவி யார் என்பதையும் அறுதியிட்டுக்  கூற இயலாது. 

இருப்பினும், குறள்களின் ஊடே அவர் விவரிக்கும் குறிப்புகளை வைத்து தலைவன் ஓர் உழவன், போர் நிகழும் காலத்தில் வேளாளர்களுக்கு அரசனின் அறிவிப்பு  கிட்டியதும், அரசனுக்கு உதவியாகப் போர்முனைக்குச் சென்ற ஒரு வீரர் என்று புரிந்து கொள்ள எந்த ஒரு  தடையும் இல்லை.  வள்ளுவர் உழவைப் போற்றுபவர். உழவுக்கு என்றே ஓர் அதிகாரத்தையும் ஒதுக்கி உள்ளார். 

மாறாக;  ஓர் அரசன் ஆட்சி செய்யும் முறைகளையும் நாடாளும் முறைகளையும் விரிவாகப் பொருட்பாலின் பல அதிகாரங்களில் வள்ளுவர் விளக்குவதால் திருக்குறளில் ஒரு குறுநில மன்னனின் அரசாளும் அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கலாம் என்பதையும் மறுக்க வழியில்லை.  

ஆக, தலைவன் ஓர் உழவு செய்யும் வேளாளனாகவோ, அல்லது ஒரு வேந்தனின் கீழ் அவனுக்கு உதவும் பொருட்டு போருக்குச் சென்ற சிற்றரசனாகவோ இருக்க வாய்ப்புண்டு. 



படைச்செருக்கு அதிகாரத்தில்; 
     என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
     முன்நின்று கல்நின் றவர்.   (771)
பகைவர்களே என் தலைவனை (அரசனை) எதிர்த்து நிற்காதீர்கள்; அவனை எதிர்த்தவர்கள் உயிரிழந்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என எச்சரிக்கிறான் ஒரு போர் வீரன். 



     கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
     மெய்வேல் பறியா நகும்.   (774)
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடும் வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ந்து அதனைப் பறித்துப் போரைத் தொடர்கிறான். 

படைச்செருக்கு அதிகாரம் காட்டும் வீரன் அகவாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதைக் காமத்துப்பால்  குறள்கள்  மூலம் அறியலாம்.  



தலைவனும் தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது தலைவனின் கூற்றாக; 
     ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
     நண்ணாரும் உட்குமென் பீடு.   (1088)
[காமத்துப்பால்-களவியல்-தகையணங்குறுத்தல்]
என்ற குறளைக் காணலாம்.  பகைவரையும் அஞ்ச வைக்கும் என் வலிமை என் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே  என்று போர் வீரனாகிய தலைவன் வியக்கிறான். 

தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் முடிந்து இல்லறவாழ்வில் மகிழ்ந்திருக்கும் பொழுது அரசனின் ஆணைக்கிணங்க போர்முனைக்குச் செல்கிறான் தலைவன் (தலைவன் தலைவியை நீங்கி வேந்தன் ஆணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை). அங்கே தலைவியின் நினைவில் புலம்புகிறான் என்று கற்பியல் குறள் மூலம் அறியலாம்.
     வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
     மாலை அயர்கம் விருந்து.   (1268)
[காமத்துப்பால்-கற்பியல்-அவர்வயின் விதும்பல்] 
அரசன் இப்போரில் வெற்றி பெறட்டும்; பின்னர் நான் இல்லம் திரும்பி என் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக என்று தலைவியுடன் மீண்டும் இல்லறம் தொடர விரும்பும் தலைவன்  கூறுவதாக இக்குறள் அமைகிறது. 



அவன் வரவை எதிர்நோக்கி  இல்லத்தில் காத்திருக்கும் தலைவியின் கூற்றாக; 
     உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
     வரல்நசைஇ இன்னும் உளேன்.   (1263)
[காமத்துப்பால்-கற்பியல்-அவர்வயின் விதும்பல்] 
வெற்றியை விரும்பி ஊக்கத்தையே உறுதுணையாக எண்ணிச் சென்ற என் கணவர், திரும்பி வருவார் என்ற எண்ணத்தினால்தான் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன் என்று  கூறுவதாக அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்) குறள் மூலம் அறிய முடிகிறது. 

தமிழ் இலக்கண நூல்கள் தரும் குறிப்புகளின்படி குறளின் காமத்துப்பால்  தலைவன் போரில் துணைபுரிதல் காரணமாகப் பிரிந்து சென்றவன் என்று முடிவு செய்யலாம்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 307   -  22.10.2025]
-----------------------------------


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi