வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம்
வள்ளுவர் குறளில் வாழ்வியல் நெறிகளை விளக்க பொருத்தமான பல எடுத்துக்காட்டுகளைக் கையாண்டுள்ளார். உலகம் போற்றும் நன்னெறி இவையிவை, பின்பற்ற வேண்டியவை இவை, உலகம் ஏற்கும் ஒழுக்கமுறை, இகழப்படும் நடைமுறை, தவிர்க்க வேண்டியவை, செயல்படுத்த வேண்டியவை எனப் பல பொருள்களை எடுத்துக்காட்டுகள் மூலமே விளக்கியுள்ளார். ஒப்பிட்டுக் காட்டப் பல உவமைகளைக் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் இயல்புகளை, மக்களின் பண்புகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த முறையை 'ஏது நடையினும் எடுத்துக் காட்டினும்' என்று தொல்காப்பியம் (மரபியல் நூற்பா 104) குறிப்பிடுகிறது.
இயற்கையில் இருந்தும், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கருவிகள் எனவும் வள்ளுவரால் எடுத்துக்காட்டுகளாக, உருவகங்களாக உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குழல், யாழ், பறை, பாறை, மலை, குன்று, கல், மழை, நீர், கடல், ஊருணி, ஊற்று, மணற்கேணி, குளம், வெள்ளம், நிலம், நன்னிலம், களர்நிலம், வேலி, தீ, வானம், வெயில், நிலவு, மதிமறைப்பு, மேகம், குவளை, அனிச்சம், மலர்கள், தளிர், நெருஞ்சி, பனை, தினை, நிழல், மரம், நச்சு மரம், பழுத்த மரம், பட்டமரம், மூங்கில், குன்றிமணி, கரும்பு, கருக்காய், எள், விதை, களை, பயிர், மீன், யானை, குதிரை, எருது, பசு, ஆட்டுக்கடா, புலி, நரி, முதலை, பாம்பு, எலி, புழு, கவரிமா, காக்கை, மயில், கொக்கு, அன்னம், ஆந்தை, ஆமை, வேடன், ஆயன், உழவன், மீனவன், அரசன், அமைச்சர், ஒற்றர், தூதர், படைத்தளபதி, வீரர், பேடி, யானைப்பாகன், தாய், தந்தை, மக்கள், மகன், தலைவன், தலைவி, செவிலி, தோழி, குழந்தை, புலவர், ஆசிரியர், மாணவர், மருத்துவர், நோயாளி, நல்லவர், தீயவர், செல்வந்தர், வறியவர், வள்ளல், கருமி, பிச்சைக்காரர், கொலையாளி, திருடர், கயவர், விலைமகளிர், தவம், தானம், வேள்வி, துறவி, அந்தணர், பார்ப்பனர், அறவோர், சான்றோர், பாவி, தெய்வம், இறைவன், இந்திரன், தாமரைக்கண்ணான், தேவர், எமன், பேய், அணங்கு, திருமகள், தவ்வை, பிணம், சொர்க்கம், நரகம், பகை, நட்பு, வில், வேல், வாள், காவடி, செங்கோல், ஊன்றுகோல், துலாக்கோல், அளவுகோல், தூண்டில், உரைகல், அரம், ஏர், எரு, அச்சாணி, வண்டி, தேர், சிவிகை, நாவாய், படகு, தெப்பம், தோணி, பளிங்கு, சதுரங்கம், கூத்தாடும் அரங்கு, சூதாட்டக் கழகம், சாக்கடை, வைக்கோல், குடிசை, கூடு, தூண், தாழ்ப்பாள், கதவு, அரண், சிறை, கோடாரி, கயிறு, பொம்மலாட்ட மரப்பாவை, மண் பொம்மை, மண்கலம், செப்புக்கலம், கைவிளக்கு, தூங்கா விளக்கு, பட்டடை, பாரம், உடை, அன்னத்தூவி, மயிலிறகு, முகபடாம், பொன், அணிகலன், முத்து, பவளம், கண், மயிர், நெஞ்சம், உணவு, கொழுப்பு, நெய், தேன் கலந்த பால், கள், உப்பு, நோய், புண், மருந்து, நஞ்சு, மாசு, அமுது, கனி, காய், பிறப்பு, இறப்பு, உறக்கம், மறைமொழி, எழுத்து, நூல், செல்வம், ஊதியம், முதல் என்று அப்பட்டியல் மிக நீண்டது. இவை நேரடியாகவோ கொடுக்கப்பட்ட குறிப்பு மூலமோ அறியக் கூடியவை.
இவ்வாறு வள்ளுவர் எடுத்துக்காட்டும் பொருள்கள் எல்லாம் மக்களின் வாழ்வில் இடம் பெறுபவை, மக்களாலும் நன்கு அறியப்பட்டவை. எளிமை, தெளிவு, சுருக்கம், ஆழமுடைமை,என்னும் பண்புகள் கொண்டவனாய் உணர்த்தும் பொருளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகள் முந்நூற்றைம்பதுக்கும் மேலானவை திருக்குறளில் இடம் பெறுவதாக 'திருக்குறள் அமைப்பும் முறையும்’ (1972) நூலில் மு. சண்முகம் பிள்ளை கூறுகிறார்.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 308 - 29.10.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi