தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள்
முன்னுரை:
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் எது என்று ஒவ்வொரு ஆண்டும் தொடரும் சர்ச்சையில் தொல்தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து சான்று காட்டும் நோக்கில் தைப் புத்தாண்டு பிரிவினரும், சித்திரைப் புத்தாண்டு பிரிவினரும் தத்தம் பங்கிற்கு மேற்கோள்களைக் கொடுப்பது வழக்கம். உண்மையில் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள் குறித்து எந்த அளவு செய்தி உள்ளது? அவற்றில் எந்த ஒரு செய்தியாவது இந்த மாதம்தான் தமிழர்களின் ஆண்டின் தொடக்கம் இதுவென்று என்று ஆணித்தரமாக அறுதியிட்டுக் கூறுகிறதா? அதாவது தமிழ் நிகண்டுகள் "ஆவணியே ஆதி" என்று தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்தை ஆவணித் திங்கள் என்று நேரடியாக எடுத்துரைப்பது போல இலக்கியங்களில் புத்தாண்டின் தொடக்கத்தைச் சுட்டும் தகவல் உள்ளதா என்று அறிய ஒரு விரிவான ஆய்வு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை.
கணினி காலத்தில் அதன் உதவி கொண்டு ஆய்வு செய்வது பெருமளவு தேடலை எளிமையாக்கி, நீண்ட ஆய்வுக் காலத்தைக் குறுக்கி விடுவது ஆய்வாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஆய்விற்கான தரவுத் தளங்களும் தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கி இணையத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கருவூலங்களும் இன்றைய நிலையில், உண்மை அறிவதில் ஆர்வமும், ஆய்வுத் தேவை உள்ளவர்களுக்கும் ஆய்வை எளிதாக்குகிறது.
ஆய்வு முறை:
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம் (http://tamilconcordance.in/) தமிழிலக்கிய ஆய்வுத் தேவைகளுக்கு மிகுந்த உதவி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இத்தளத்தில் தமிழின் பண்டைய செவ்வியல் இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் ஆகியனவற்றுக்கும் பல இலக்கண நூல்களுக்கும் தொடரடைவுகள் கிடைக்கின்றன.
இந்த ஆய்வுக்கு உதவிய தமிழிலக்கிய இலக்கண நூல்கள் 115; அவை கீழ்க்காணும் வகையில் அடங்குபவை. இந்த 115 நூல்களே இக்கட்டுரைக்கான ஆய்வெல்லை என அறிக.
இலக்கண நூல்கள் = 8
எட்டுத்தொகை நூல்கள் = 8
பத்துப்பாட்டு நூல்கள் = 10
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் = 18
ஐம்பெருங்காப்பிய நூல்கள் = 5
ஐஞ்சிறுகாப்பிய நூல்கள் = 5
பக்தி இலக்கிய நூல்கள் = 15
சிற்றிலக்கிய நூல்கள் = 20
நீதி நூல்கள் = 21
பிற இலக்கிய நூல்கள் = 5
(குறிப்பு: மேற்காணும் 115 நூல்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் விரிவான பட்டியலைப் பிற்சேர்க்கையாகக் காண்க)
பல தமிழ் நூல்களை ஓரிடத்தில் தொகுத்து, அவற்றுக்கான தொடரடைவுகளையும் தாங்கி நிற்கும் இத்தளத்தின் உதவியின்றி இந்த ஆய்வைச் செய்வதற்கு, தனி மனிதர் ஒருவர் ஆண்டுக்கணக்காக ஆய்வைச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கூறினால் அது மிகைப்படுத்துதல் அல்ல.
தமிழ் இலக்கியத் தொடரடைவு தளத்தின் உதவி கொண்டு பட்டியலில் காணப்படும் 115 நூல்கள் யாவிலும் ஒவ்வொரு தமிழ் மாதம் குறித்தும் கிடைக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அவை அட்டவணையாக இணைக்கப் படுகிறது. கார்த்திகை மகளிரைக் குறிக்கும் கார்த்திகை என்ற சொல்லோ, துன்பம் என்ற பொருளில் வரும் ஆனி என்ற சொல்லோ, கண்ணாடி, சிவன், நாட்டியம் போன்ற பொருளில் இடம் பெறும் ஆடி என்ற சொல்லோ தவிர்க்கப்பட்டன.
இந்த ஆய்வின் மூலம் சில உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன; அவை . . .
ஆய்வின் நோக்கமான, தமிழ்ப் புத்தாண்டு எது என்று நேரடியாகக் கூறும் தகவல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல்களில் இடம் பெறவில்லை. இது வரலாறு இதழ் நடத்திய ஆய்வின் முடிவையே ஒத்திருக்கிறது. வைகாசி மாதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை எண்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக முறை குறிப்பிடப்படுவது பங்குனி மாதம்.
தைத்திங்கள்:
சங்க இலக்கி நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் இன்று வழக்கில் இருக்கும் 12 மாதங்களின் பெயர்களில் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. இவற்றில் தைத் திங்களின் பெயரே மிகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலினால் சங்க இலக்கியங்களில் தை மாதமே சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது எனலாம். தைமாதத்தின் தைந்நீராடல், தைந்நீராடும் நோன்பு, குளிர்ந்த குளத்து நீர், குளிர்ந்த மழை ஆகியவற்றைக் குறிப்பிட நேர்கையில் தைத்திங்கள் குறிப்பிடப் பெறுகின்றன என்பதைக் கீழ்க்காணும் வரிகள் மூலம் அறியலாம்.
தைஇத் தண் கயம் போல - ஐங்குறுநூறு
தைஇத் திங்கள் தண் கயம் படியும் - நற்றிணை
தைஇத் திங்கள் தண் கயம் போல - புறநானூறு
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் - அகநானூறு
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண் நீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ - கலித்தொகை
தாய் அருகா நின்று தவ தை நீராடுதல் - பரிபாடல் 11/91
நீ தக்காய் தை நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் - பரிபாடல் 11/115
இன்ன பண்பின் நின் தை நீராடல் - பரிபாடல் 11/134
இது போன்றே, இரவுப்பொழுது நீண்டு உள்ள மாசி மாதம் என்றும், பங்குனி விழா குறித்தும் குறிப்பிடுகையில் சங்க இலக்கியங்களில் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன. தை மாதம் குறித்து சங்க இலக்கியங்கள் சிறப்புறக் குறிப்பிட்டாலும் தை ஆண்டின் முதல் மாதம் என்றோ, மக்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்ற குறிப்போ இல்லை. மாசி பங்குனி என்று குறிப்பது போல தை மாதம் குறித்தும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
சித்திரைத் திங்கள்:
இது போன்றே சித்திரை ஆண்டின் முதல் மாதம் என்ற குறிப்பும் இந்த நூல்களில் எங்கும் இடம் பெறவில்லை. ஒப்பிடுகையில், தை மாதம் சிறப்புறக் குறிப்பிடப்பட்ட அளவிற்குச் சித்திரை மாதம் சிறப்பாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையே காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் உருவானதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில் சித்திரை மாதத்து முழுநிலவு நாளன்று இந்திர விழா நடை பெற்றதைக் குறிக்கிறது. ஆண்டின் தொடக்கம் என்ற குறிப்பு அதில் இடம் பெறவில்லை.
தமிழர்கள் ஒவ்வொரு மாதத்தின் முழுநிலவு நாள்களையும் சிறப்பாகக் கொண்டாடி இருப்பதையும் அறிய முடிகிறது. சித்திரை மாதத்துச் சித்திரை நாள், பங்குனி உத்தரம், தைப்பூசம் போன்ற முழுநிலவு நாட்களின் நிலவொளியை மிக விரும்பிய தமிழர்கள் ஏதோ ஒரு காரணத்தை முன்னிறுத்தி விழா நாட்களாக அந்நாட்களை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
எனவே, சித்திரை விழாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டின் தொடக்கம் எனக் கூற விரும்பினால் அந்தத் தகுதி பங்குனி விழாவிற்கும் இருக்கிறது. "பங்குனி விழவின் உறந்தையொடு" (நற்றிணை 234/7) சங்க கால நற்றிணை பாடலிலேயே பங்குனி விழா இடம் பெற்று விடுகிறது.
ஆவணித்திங்கள்:
நிகண்டுகளில் "ஆவணியே ஆதி" என்ற குறிப்பு போல ஆவணி ஆண்டின் தொடக்கம் என்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இந்த நூல்களில் தகவல் இல்லை.
"ஆவணித் திங்கள் நள்ளிருள் பக்கத்து அட்டமி தனில் அரும் கற்பின் - (குசேலோபாக்கியானம்:3 676/2) என்று கண்ணன் பிறந்த நாளைக் குறிப்பிடும் முகமாக குசேலோபாக்கியானம் ஆவணியைக் குறிப்பிடுகிறது.
மேலும், "அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம்" (நந்திக் கலம்பகம்: 2 101/1) என்றவாறு ஆனி, ஆடி, ஆவணி என வரிசையாகக் குறிப்பிடும் முறை நந்திக் கலம்பகம் நூலில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.
"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (சம்பந்தர் - கோளறு பதிகம்)
என்று சம்பந்தர் தேவாரத்தில் வார நாட்களை ஞாயிறு முதல் சனி வரை வரிசைப் படுத்திக் காட்டுவது போல தமிழ் மாதங்கள் வரிசைப்படுத்திக் காட்டுவதை இந்த இலக்கியங்களில் காண இயலவில்லை.
கல்வெட்டுச் செய்தி:
இலக்கியங்கள் போலவே கல்வெட்டுகளிலும் புத்தாண்டு குறித்த தகவல் இல்லை. சோழர் காலக் கல்வெட்டு உத்தராயணத் துவக்கம் தை முதல்நாள் என்று குறிப்பிடுகிறது என்பதை அறிய முடிகிறது (திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள், முதலாம் இராஜராஜரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு).
"ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை." என்று தொல்லியல் ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
முடிவுரை:
ஆண்டின் தொடக்கம் எது என நிகண்டுகள் ஆவணப்படுத்தியது போல இலக்கியங்களில் காணப்படாத நிலை தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இருந்ததில்லை என்பதைத்தான் காட்டுகிறது. சித்திரை ஆண்டின் புத்தாண்டு என்றும், வடமொழிப் பெயர்களுடைய 60 ஆண்டு காலக்கணக்கும் தமிழகத்தில் விஜய நகர ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டவை என்பதைக் காலக்கோட்டில் கல்வெட்டுகளை வரிசைப்படுத்தும் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. ஆனால் இலக்கியத் தரவுகள் மூலம் தமிழர் எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கில் கொண்டார்கள் என்பதையோ, புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தது என்பதையோ கூற இயலாது.
_________________________________________________
பிற்சேர்க்கை:
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழிலக்கிய இலக்கண நூல்கள் பின்வருமாறு:
இலக்கண நூல்கள் : (இலக்கண நூல்கள் 8)
1. தொல்காப்பியம், 2. இறையனார் அகப்பொருள், 3. புறப்பொருள் வெண்பாமாலை, 4. நன்னூல், 5. நேமிநாதம், 6. நம்பி அகப்பொருள், 7. காக்கை பாடினியம், 8. மறைந்துபோன இலக்கண நூல்கள் - தொகுப்பு.
சங்க இலக்கியம் — எட்டுத்தொகை : (எட்டுத்தொகை நூல்கள் 8)
1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு.
சங்க இலக்கியம் — பத்துப்பாட்டு : (பத்துப்பாட்டு நூல்கள் 10)
1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை , 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக்காஞ்சி, 7. நெடுநல்வாடை, 8. குறிஞ்சிப்பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம்.
சங்கம் மருவிய காலம் — பதினெண்கீழ்க்கணக்கு : (பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 18)
1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னா நாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார்நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. ஐந்திணை எழுபது, 9. திணைமொழி ஐம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. திருக்குறள், 12. திரிகடுகம், 13. ஆசாரக்கோவை, 14. பழமொழி நானூறு, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை.
ஐம்பெருங்காப்பியங்கள் : (ஐம்பெருங்காப்பிய நூல்கள் 5)
1. சிலப்பதிகாரம், 2. மணிமேகலை, 3. சீவக சிந்தாமணி, 4. வளையாபதி, 5. குண்டலகேசி.
ஐஞ்சிறுகாப்பியங்கள் : (ஐஞ்சிறுகாப்பிய நூல்கள் 5)
1. உதயண குமார காவியம், 2. நாக குமார காவியம், 3. யசோதர காவியம், 4. சூளாமணி, 5. நீலகேசி.
பக்தி இலக்கியங்கள் : (பக்தி இலக்கிய நூல்கள் 15)
1. தேவாரம், 2. திருவாசகம், 3. திருக்கோவையார், 4. திருமுறை, 5. திருமந்திரம், 6. சைவப் பிரபந்த மாலை, 7. பெரியபுராணம், 8. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், 9. திருப்புகழ், 10. தேம்பாவணி, 11. சீறாப்புராணம், 12. திருவருட்பா, 13. தாயுமானவர் பாடல்கள், 14. இரட்சணிய யாத்திரிகம், 15. கல்லாடம்.
சிற்றிலக்கியங்கள் : (சிற்றிலக்கிய நூல்கள் 20)
1. அபிராமி அந்தாதி, 2. அழகர் கிள்ளைவிடு தூது, 3. கச்சிக் கலம்பகம், 4. கலிங்கத்துப்பரணி, 5. காசிக் கலம்பகம், 6. காவடிச் சிந்து, 7. குசேலோபாக்கியானம், 8. குமரேச சதகம், 9. தக்கயாகப்பரணி, 10. தஞ்சைவாணன் கோவை, 11. தமிழ்விடு தூது, 12. திருக்குற்றாலக் குறவஞ்சி, 13. நந்திக் கலம்பகம், 14.நளவெண்பா, 15. பாண்டிக்கோவை, 16. பெத்லகேம் குறவஞ்சி, 17. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 18. மதுரைக் கலம்பகம், 19. முக்கூடற் பள்ளு, 20. மூவருலா.
நீதி நூல்கள் : (நீதி நூல்கள் 21)
1. ஆத்திசூடி, 2. கொன்றைவேந்தன், 3. மூதுரை, 4. நல்வழி, 5. வெற்றி வேற்கை, 6. உலக நீதி, 7. நீதிநெறி விளக்கம், 8. அறநெறிச்சாரம், 9. நீதி நூல், 10. நன்னெறி, 11. நீதி சூடாமணி, 12. சோமேசர் முதுமொழி வெண்பா, 13. விவேக சிந்தாமணி, 14. ஆத்திசூடி வெண்பா, 15. நீதி வெண்பா, 16. நன்மதி வெண்பா, 17. அருங்கலச்செப்பு, 18. முதுமொழிமேல் வைப்பு, 19. புதிய ஆத்திசூடி, 20. இளையார் ஆத்திசூடி, 21. திருக்குறள் குமரேச வெண்பா.
பிற இலக்கியங்கள் : (பிற இலக்கிய நூல்கள் 5)
1. கம்பராமாயணம், 2. முத்தொள்ளாயிரம், 3. பெருங்கதை, 4. வில்லி பாரதம், 5. பாரதியார் கவிதைகள்.
ஆய்வுக்கு உதவிய தளம்:
முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம்
http://tamilconcordance.in/
சான்றாதாரங்கள்:
எதுதான் தமிழ்ப்புத்தாண்டு? ஆசிரியர் குழு, வரலாறு. இதழ் 86
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ]
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1094
சித்திரையில்தான் புத்தாண்டு, எஸ். இராமச்சந்திரன். தினமணிi 24-1-2008 பக்கம் 8.
http://www.sishri.org/puthandu.html
தமிழகத்தின் ஆண்டுக் கணக்கு முறை. திரு. க. த. திருநாவுக்கரசு. ஆய்வுக் கோவை, டாக்டர் வ. சுப. மாணிக்கம், 1971, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 376-381.
https://ta.wikisource.org/s/1lwe
நன்றி:
தமிழணங்கு
செப்டெம்பர், 2024
#இலக்கியம், #தமிழணங்கு, #தமிழ்ப்புத்தாண்டு, #Themozhi

