சங்க
இலக்கியங்களில் அயல்நாட்டுப் பறவைகள் வலசை வருவதும் போவதும்
குறிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக;
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு
மெய்யிவ ணொழியப் போகிஅவர்
செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே. [அகநானூறு - 113]
தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்தடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல, என் உடல் இங்கிருக்க எனது உயிர் புலம் பெயர்ந்து என் தலைவனை நாடிச் செல்கிறது என்று தலைவி தோழியிடம் கூறுவதாக அகநானூற்றுப் பாடல் காட்சி குறிப்பிடுகிறது.
பருவகால
மாறுதலுக்கும், தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்ப பறவைகள் நாடு
விட்டு நாடு வலசை சென்று வாழும். புவியின் வடகோளத்தில் குளிர் அதிகரித்தால் தெற்கு
நோக்கியும், கோடைக் காலத்து வெப்பத்தைத் தவிர்க்க குளிர்
பகுதிக்கும் என வெவ்வேறு வகைப் பறவைகள் வலசை சென்று தங்கள் வாழ்க்கைக்கு உகந்த இடத்தை இருப்பிடமாக்கிக்
கொள்ளும். ஆண்டுக்கு இருமுறை இவ்வாறு வடக்கும் தெற்குமாகப் பல ஆயிரம் மைல்கள் வரை
பறவைகள் பயணிப்பது வழக்கம்.
அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கும் காலம் தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகளும் குளங்களும் நிரம்புவது வழக்கம். தமிழ்நாட்டிலுள்ள வாழிடத்திற்கு அக்டோபரில் வரும் அயல்நாட்டுப் பறவைகள் கோடை வெப்பம் அதிகரிக்கும் முன்னர், மே மாதம் முதல் வாரம் போல தங்கள் நாடுகளுக்குத் திரும்பி விடும். ஆண்டுதோறும் மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் வலசை வந்து செல்கின்றன.
நவம்பர் - பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலவும் இதமான தட்ப வெப்ப நிலையால் ஈர்க்கப்பட்டும் தமிழகப் பகுதிகளுக்கு வலசை வரும் பற்பல வகை நாரைகள், கொக்குகள், நீர்க் காகங்கள், நீர்க்கோழிகள் என 200க்கும் மேற்பட்ட வகைப் பறவைகள் நீர்வாழ் பறவைகளாகும். இவற்றில் சில மழைக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்து இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு அடைகாக்கும். மற்றும் சில அவற்றின் இனப்பெருக்கம் செய்யும் காலத்திற்கு வேறு நாடுகளுக்கு வலசை சென்றுவிடும்.
இந்தியாவில் தோராயமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை வகைகள் உள்ளன. காகம், மணியன் காகம், சிட்டுக்குருவி, கதிர்குருவிகள், ஆள்காட்டி குருவி, மஞ்சள் குருவி, கல் குருவி, சிட்டு, தையல் சிட்டு, பருந்து, குயில், மைனா, மரங்கொத்திப் பறவை, புறா, மயில் ஆகியன தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொண்ட பறவைகள்.
தமிழ்நாட்டுக்கு வரும் பறவைகளை மண்ணிற்குப் புதியவை என்பதைக் குறிக்க விருந்து, வம்பு ஆகிய உரிச்சொற்கள் கொண்டு குறிப்பிட்டனர். விருந்து பறவை ['விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின்' - நற்றிணை 167] என்றும்; 'வம்பப்புள்'[வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு' - அகநானூறு 181] (Migratory Birds) என்றும் கூறினர்.
புலம்பெயராது
அதே நிலத்தில் வாழும் பறவைகள், 'வதி பறவைகள்' [வதி குருகு உறங்கும் இன்நிழல் புன்னை-
குறுந்தொகை 5] (Resident Birds) எனத் தமிழிலக்கியத்தில்
குறிப்பிடப்படுகிறது.
நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 251
9/25/2024 பருவகால மாறுதல்களும் பறவைகளும்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi