பாண்டிய மன்னன் போருக்குச் சென்றுவிடுகிறான். அவனைப் பிரிந்திருந்த அவன் மனைவி பாண்டிமாதேவி அரண்மனைப் பள்ளியறை மேலுள்ள விதானச் சுவரைப் பார்த்தவாறு பஞ்சணையில் உறக்கமின்றித் தவிக்கிறாள். அந்த மேல் சுவரில் வான மண்டலத்தின் கோள்களும் விண்மீன்களும் கொண்ட ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. அவ்வோவியத்தில் வானில் திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேட ராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் கதிரவனும், கதிரவனிலிருந்தும் மாறுபட்ட சந்திரனும், சந்திரனின் காதல் மனைவியான ரோகிணி விண்மீனும் வரையப்பட்டுள்ளது. ரோகிணி தன் துணைவனுடன் சேர்ந்து இருப்பதைப் போல நாமும் நம் கணவனுடன் சேர்ந்து இருக்க இயலவில்லையே என்று எண்ணி பாண்டிமாதேவி ஏக்கப் பெருமூச்சு விடுவதாக நெடுநல்வாடை பாடல் கூறுகிறது. சந்திரனின் 27 மனைவியரில், ரோகிணி மீதுதான் சந்திரன் அதிகக் காதல் கொண்டிருந்தான் என்பது ஒரு தொன்மக்கதை.
புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல்
மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
(நெடுநல்வாடை. 159 - 163)
ரோகிணி (விண்மீன்) புவியிலிருந்து தோராயமாக 65 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளது. இந்திய வானியலிலும், அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 விண்மீன் கூட்டங்களில் (constellation), ரிஷப ராசி (Taurus) விண்மீன் கூட்டத்தில் எருதின் கண்ணாக உருவகப்படுத்தப்படும், செந்நிறத்தில் ஒளிரும் விண்மீன் இது. வானியல் நூல்கள் இந்த விண்மீனுக்குக் கொடுத்துள்ள பொதுப் பெயர் அல்டிபாரன் (Aldebaran) என்பதாகும்.
அல்டிபாரன் வான்வெளியில் கிரகண நீள்வட்டப் பாதைக்குத் தெற்கே 5.47 பாகையில் அமைந்துள்ளது. இந்த இட அமைப்பின் காரணமாக இந்த விண்மீனுக்கு முன்புறமாக நிலவு நகர்கையில், ரோகிணி விண்மீனை ஒரு சில வினாடிகள் நிலவு மறைத்துச் செல்லும். அதனால், புவியில் இருப்பவர் பார்வையில் ரோகிணி தற்காலிகமாக மறைந்துவிடும் (Occultation of Aldebaran by the Moon). இந்த விண்மீன் மறைத்தல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (சற்றொப்ப மூன்றரை ஆண்டுகள் காலகட்டத்தில்) அடிக்கடி நிகழ்வதும், பின்னர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு (தோராயமாகப் பதினெட்டரை ஆண்டுகளுக்குப் பிறகு) குறிப்பிட்ட இந்தத் தொடர் மறைவுகள் மீண்டும் நிகழ்வதும் நிலவின் நகர்வினால் சுழற்சியாக இயற்கையில் அரங்கேறும் ஒரு வானியல் நிகழ்ச்சி.
அண்மையில் ஜனவரி 29, 2015 இல் தொடங்கி செப்டம்பர் 3, 2018 வரை 49 மறைவுகளின் தொடர் நிகழ்ந்தது. அடுத்த ரோகிணி மறைவுகளின் தொடர் 2033 ஆண்டு முதல் 2037 வரை நிகழும். இதுவே ரோகிணிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தொடர்பின் அறிவியல் பின்னணி. நிலவினால் மேலும் சில விண்மீன்களும் கோள்களும் கூட அவ்வப்பொழுது மறைக்கப்படுவதுண்டு. சென்ற ஆகஸ்ட் 2024 சனிக்கோள் இவ்வாறு நிலவினால் மறைக்கப்பட்டது. எனவே, இவ்வாறு கோள்களும் விண்மீன்களும் ஒரு சில விநாடிகளுக்குப் புவியில் பார்ப்பவர் பார்வையிலிருந்து நிலவால் மறைக்கப்படுதல் இயல்பாக நிகழும் வானியல் காட்சி மாற்றங்கள்.
பண்டைய
காலங்களில், தொழில் நுட்பம் வளர்ந்த இன்றைய நவீன அறிவியல்
மூலம் நாம் அறிவனவற்றைத் தெரிந்திராத நாட்களில், உலகத்தின்
பல பண்பாடுகளிலும் காரணம் தெரியாத இயற்கை நிகழ்வுகளுக்குத் தொன்மக் கதைகள்
புனையப்பட்டு விளக்கங்கள் தரப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்தியப் புராணம் கூறும்
சந்திரனுக்கும் ரோகிணிக்கும் உள்ள நெருக்கமான காதல் பிணைப்பு. ரோகிணி
விண்மீனை ஒரு குறிப்பிட்ட காலச் சுழற்சியில் சந்திரன் அடிக்கடி
மறைத்துச் செல்லும் நிலைதான்
சந்திரனுக்கும் ரோகிணிக்கும் உள்ள இணைபிரிய விரும்பாக் காதலாகக் காட்டப்பட்டு, புராணமும் எழுதப்பட்டுள்ளது
என்று இன்றைய வானியல் ஆய்வாளர்கள் இந்தக் கதையின் அடிப்படையைக்
கட்டுடைத்துள்ளார்கள்.
9/4/2024 நிலவு மறைத்தல்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi
