Saturday, December 21, 2019

செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி

செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி


பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும், வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர்.

தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் ‘செம்பியன் மாதேவி – வாழ்வும் பணியும்’ என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது. பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் 2019 வெளியீடு கண்டது இந்நூல். இதன் வெளியீட்டிற்கு உதவிய புரவலர் மேனாள் தமிழகக் கல்வி அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.

நூலின் முன்னுரையைத் தொடர்ந்து செம்பியன் மாதேவியை அறிமுகப்படுத்திய பின்னர், அவர் அறப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றுக்குச் சான்றுகளாகத் திகழும் 1. கோனேரிராஜபுரம், 2. திருக்கோடிக்காவல், 3. ஆடுதுறை, 4. குத்தாலம், 5. செம்பியன்மாதேவி, 6. ஆனாங்கூர், 7. திருவாரூர், 8. மயிலாடுதுறை, 9. திருவக்கரை, 10. திருமுல்லைவாயில், 11. திருமுதுகுன்றம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களையும் அவற்றின் கட்டமைப்பையும், சிலைகளையும், கல்வெட்டுகள் தரும் வரலாற்றுச் செய்திகளையும், அவற்றில் இணைந்துள்ள செம்பியன் மாதேவியின் அறப்பணிகளையும் கலைப்பணிகளையும் விரிவாக நூல் எடுத்துரைக்கிறது. இச்செய்திகள் நூலின் முதல் பாகமாக 50 பக்கங்களில் கொடுக்கப்பட்ட பிறகு, இரண்டாம் பகுதியில் செம்பியன்மாதேவியின் பிற கோயில் பணிகள், அன்னாரின் கலைப்பணி, அவர் வழங்கிய செப்புத் திருமேனிகள், சோழ அரசர்க்கும் அவர்தம் தேவியரும் குறித்து இரண்டாம் பாகத்தில் 25 பக்கங்களுக்கு விளக்கப்படுகிறது. மூன்றாம் பாகமாகச் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் இணைக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த திருவுருவங்கள் அமைக்கப்பட்டன என்ற செய்திகளைத் தரும் அட்டவணை நூலின் இரண்டாம் பகுதியில் இணைத்திருப்பது சிறப்பு. சோழர்காலக் கோயில் கட்டுமான கலை வளர்ச்சியையும் மாற்றத்தையும் அறிய இப்பகுதி உதவுகிறது. இப்பகுதிக்கு உதவும் வகையில் அவை பற்றியும், சிலைகள் குறித்த படங்களும் கொடுக்கப்பட்டால் கோயில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியையும் அறிந்து கொள்ள உதவும். செப்புச் சிலைகள் குறித்த பட்டியல் நூலின் இரண்டாம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறந்த இணைப்பு. செம்பியன் மாதேவியின் கவின்மிகு இச்செப்புச் சிலையே இந்த நூலின் அட்டையிலும் இடம்பெற்றுள்ளது.


வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படுபவர் மதிக்கப்படுபவர் செம்பியன் மாதேவி. இவர் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சில நூல்களும் முன்னரே வெளிவந்துள்ளன. நூலின் முன்னுரைச் செய்தியானது, இந்நூலை வெளியிட்ட பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் முன்னர் அவர்கள் வெளியிட்ட வரலாற்று நூல்கள் விரைவில் விற்றுத் தீர்ந்தன என்கிறது. அவ்வாறே இந்நூலும் வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படும் வகையிலேயே அமைந்துள்ளது, அதனால் மறுபதிப்பு வெளியிடும் தேவையும் ஏற்படலாம். மேற்கொண்டு அடுத்த பதிப்புக்கு எடுத்துச் செல்கையில் நூலில் சிற்சில மாற்றங்கள் செய்யலாம். முதலாவதாக நூலில் ஆங்காங்கே தலைகாட்டும் தட்டுப்பிழைகளைச் சீர் செய்யலாம். செம்பியன்மாதேவி வரலாற்றுக்கு எவ்வகையிலும் தொடர்பு இருப்பதாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்திருக்கும், நூலின் மூன்றாம் பாகமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் பகுதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நூலில் இடம் பெறும் கோயில்கள், அவற்றின் சிலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றின் படங்களை இணைக்கலாம். அவை நூலின் செய்தியை விளக்கமாக அறிந்து கொள்ளவும் களத்திற்குப் பார்வையிடச் செல்வோருக்கு ஒரு கையேடாகவும் துணைபுரியும்.

செம்பியன் மாதேவியார்:
 “செம்பியன் மாதேவி” (கி.பி 910 – 1001) சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூர் என அறியப்படும் செம்பியன் கிழானடி நல்லூரில் அமைந்துள்ளது. ‘மழவரையர் மகளார் கண்டராதித்தர் தேவியார் உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த பராந்தகன் மாதேவடிகளார் செம்பியன் மாதேவியார்’ என்று கல்வெட்டுகளில் செம்பியன் மாதேவியார் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். மழவர் நாட்டின் திருக்கோயிலூரில் மழவர் குலப்பெண்ணாகப் பிறந்து, மிக இளம் வயதில் (முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகனான) கண்டராதித்த சோழரின் இரண்டாவது மனைவியானவர் செம்பியன் மாதேவியார். இவர் குறித்த முதல் கல்வெட்டு 941 ஆம் ஆண்டில் பராந்தகச் சோழனின் காலத்தைய கல்வெட்டாகத் திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் கிடைத்துள்ளது. அதில் இவர் நந்தா விளக்கெரிக்க ஆடுகளைக் கொடையாக அளித்துள்ளார் என்ற செய்தி உள்ளது.

இவரை மணந்த கண்டராதித்தர் 949 ஆம் ஆண்டில் முடிசூடி எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்து 956 ஆம் ஆண்டில் மறைந்துவிடுகிறார். பதினைந்து ஆண்டுகளே நீடித்த இவரது திருமண வாழ்விற்குப் பிறகு சிறுவனான தமது மகன் மதுராந்தகன் என்ற உத்தமசோழனை வளர்த்து அவன் முடிசூட்டி ஆண்ட பொழுதும், அவனும் மறைந்து அவனுக்குப் பிறகு ராஜ ராஜ சோழன் முடி சூட்டி ஆளத் துவங்கிய பிறகும் என 60 ஆண்டுகள் இவர் இறைப்பணியில் ஈடுபட்டதைக் குறித்து ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தைய 1001 ஆம் ஆண்டின் கல்வெட்டும் கிடைத்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆக, இவர் முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், தமது மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன், இராஜராஜ சோழன் எனச் சோழ அரசர்கள் பலரின் அரசாட்சிக் காலங்களைக் கண்ட சோழ அரசகுல முதுபெரும் தேவியாவார்.  செம்பியன் மாதேவி என்பது இவருடைய பட்டப் பெயராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பிற்காலத்தில் ‘மதுராந்தகன் மாதேவடிகள் ஆன செம்பியன் மாதேவியார்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் ஆற்றிய இறைப்பணிகள்;
1. செம்பியன் மாதேவியார் புதியதாகக் கட்டிய கோயில்கள், முன்னர் செங்கல் தளிகளாக (கோயில்களாக) இருந்தவற்றை அவர் கற்றளிகளாக மாற்றியவை,
2. முன்னர் இருந்த கோயில்களில் செய்த திருப்பணிகள், அவற்றில் புதியதாக இணைத்த பகுதிகள் மற்றும் சிற்பங்கள்,
3. அவர் தான் எடுப்பித்த கோயில்களுக்கும் முன்னர் இருந்த கோயில்களுக்கும் வழங்கிய பொருட்கொடைகள்
என மூன்று வகையில் பிரித்தறியப்படுகிறது.

செங்கல் தளியிலிருந்து செம்பியன் மாதேவியரால் முதலில் கற்றளியாக மாற்றப்பட்ட கோயில் கோனேரிராஜபுரம் கோயில். அவரது மகன் உத்தம சோழனின் மூன்றாம் (கிபி 972 இல்) ஆட்சி யாண்டில் அவரது தந்தை கண்டராதித்தர் நினைவாகக் கட்டப்பட்டது. இக்கோயிலில் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியும் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்புச் சிற்பமும் அதுகுறித்த கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில் கண்டராதித்தர் லிங்கம் முன் அமர்ந்து வணங்க, அவருக்குப் பின்னர் இருவர் வெண்சாமரமும், வெண்கொற்றக்குடையும் ஏந்த, லிங்கத்தின் அருகாமையில் அதற்கு மாலை சூடும் வகையில் செம்பியன் மாதேவி வணங்கியபடி நிற்பார் (பார்க்க: பக்கம் 14). தரையில் அமர்ந்து வணங்கும் கண்டராதித்தரைத் தவிரச் சிற்பத்தில் இடம் பெற்றுள்ள மற்றவர் குறித்து அடையாளம் காணுவதில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வெட்டில் காணப்படும் செய்தி:

“ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளார் ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழன் திரு ராஜ்ஜியம் செய்தருளா நிற்கத் தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லம் உடையாற்கு திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத் திருக்கற்றளியிலேயே திருநல்லம் உடையாரை திருவடித் தொழுகின்றாராக எழுந்தருளுவித்த கண்டராதித்த தேவர் இவர்” என்று கல்வெட்டு கூறுகின்றது. திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் கோயிலின் கருவறையின் தென்சுவரில் இச்சிற்பத் தொகுதியும் கல்வெட்டும் காணப்படுகிறது. கோனேரிராஜபுரம் கோயில் கட்டிய சிற்பிக்கு ‘இராசகேசரி மூவேந்த வேளாண்’ என்ற பட்டமும் கொடுத்து கருவறைச் சுவரிலேயே சிற்பம் அமைத்தும் பெருமை செய்துள்ளார் செம்பியன் மாதேவி. செம்பியன் மாதேவியாரின் பணிகளைப் போற்றும் வகையில் நாகபட்டினம் அருகிருக்கும் ஊர் ஒன்றுக்கு செம்பியன்மாதேவி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

சோழர் காலக் கட்டிடக்கலை முற்காலச் சோழர், இடைக்காலச் சோழர், பிற்காலச் சோழர் என மூன்று கட்டங்களில் அறியப்படுகிறது; இடைக்காலமான செம்பியன் மாதேவி காலத்தில் கருவறை அர்த்த மண்டபங்களில் உள்ள தேவகோட்டங்களின் (மாடங்கள்) எண்ணிக்கை அதிகரிக்கும் முறை துவங்கியது. பத்தாம் நூற்றாண்டில் தமிழகக் கோயில் கட்டிடக்கலையில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் செம்பியன் மாதேவி. உயர்ந்த எண்ணிக்கையில், 16 தேவகோட்டங்கள் வரை விரிவாக்கப்பட்டுள்ளது. உத்தம சோழர் காலத்திற்குப் பிறகு கோயில் சிற்பங்களின் எண்ணிக்கையும் வகைகளும் அதிகரித்தாலும், அவற்றின் எழிலும் நளினமும் முந்தைய காலச் சிலைகளின் தோற்றத்துடன் ஒப்பிடுகையில் குறைந்து விட்டது என்பதும் சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இதற்குக் கற்களைத் தேர்வு செய்த முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் என்றும் ஐயுறுகிறார்கள்.

சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இவர் காலத்தில் செப்புத் திருமேனிகள் வடிக்கும் கலை மிதமிஞ்சிய வேகத்தில் வளர்ச்சியடைந்தது. பலவகை தெய்வங்களின் உருவங்களும் செப்பு வடிவம் பெற்றனர். கோயிலில் மூலவர் சிற்பங்கள் கருங்கற்களால் ஆன நிலையான சிற்பங்கள் என்பதால், விழாக் காலங்களில் இறைவனைப் பல்லக்கிலும், வீதியுலாவிற்காகக் கொண்டு செல்ல பஞ்சமூர்த்திகள் (ஐந்து இறைவர்கள் – சிவன், உமை, பிள்ளையார், முருகன், சண்டிகேசுவரர் என்று குடும்பமாக) தனித்தனியாகத் தேர்களிலும் எடுத்துச் செல்லும் வழக்கம் தோன்றியதால் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம் ஆகிய ஐம்பொன்களின் உலோகக் கலவைகளில் சிலைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கோயிலும் குறைந்த அளவு இந்த ஐவர் செப்புச் சிலைகளையாவது கொண்டிருப்பது வழக்கம்.


நெடிய ஒடிசலான உருவத்துடன், குறைந்த அணிகலன்களும், இடையில் மட்டும் உடையணிந்து திறந்த மார்புடன், தலையில் உயர்த்தி முடியப்பட்ட கொண்டையுடன், நீண்ட துளையுள்ள காதுகளுடன் கையில் தாமரை மலர் பிடிப்பது போன்ற முத்திரையுடன் உடைய புகழ் பெற்ற செப்புச் சிலை செம்பியன் மாதேவிக்கும் உண்டு. அது அவரது மகன் உத்தமசோழனால் தனது தாய் பிறந்த சித்திரைத் திங்கள் கேட்டை நட்சத்திர நாள் விழாவில் வீதியுலா செல்ல உருவாக்கப்பட்ட சிலை எனப்படுகிறது. இச்சிலையின் அமைப்பில்தான் இறைவி பார்வதியின் சிலைகளும் வடிக்கப்படுவது வழக்கம். இறைவிக்கு இணையாக இவர் கருதப்பட்டிருப்பதை இதனால் அறிய முடிகிறது. சோழர்காலச் செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்றும் கருதப்படுகிறது.

கோயில்களைப் புதிதாகக் கட்டுவதையும் புதுப்பித்துக் கட்டுவதையும் கடந்து, அக்கோயில்களில் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், விழாக்கள் நடக்கவும், விளக்குகள் தொடர்ந்து எறியவும் என எண்ணிறந்த கொடைகளையும், செல்வங்களையும், பொற்கழஞ்சுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும், செப்புச் சிலைகளையும், அணிமணிகளையும் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார் செம்பியன் மாதேவி. மங்கலநாண் அல்லது தாலி அணிவது தமிழர் மரபிலிருந்ததா என்ற வினா சென்ற நூற்றாண்டில் ம.பொ.சி., மற்றும் மா. இராசமாணிக்கனார் போன்ற பெரும் தமிழறிஞர்களை இரு பிரிவுகளாக விவாதத்தில் இறக்கியது. மா. இராசமாணிக்கனார் பிரிவினர் தாலி திருமணத்தில் மரபு வழக்கானது பிற்காலமே என்ற கருத்தை முன்வைத்தனர். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோனேரிராஜபுரம் கோயிலின் துர்கை சிலையில் கழுத்தில் மங்கலநாண் அணிந்துள்ளவராகக் காட்டப்படுகிறார். அதுமட்டுமின்றி, விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றத்தின் பழமலைநாதர் கோயிலின் இறைவிக்கு அரை கழஞ்சு எடையுள்ள பொற்றாலி, மூன்று குண்டுமணிகள் ஆகியவற்றைக் கூரைப்புடவையுடன் செம்பியன் மாதேவி கொடையளித்த கல்வெட்டுச் செய்தியும் கிடைக்கிறது. இதிலிருந்து நாம் உறுதியாக 10 ஆம் நூற்றாண்டில் திருமணமான பெண்கள் தாலி அணிந்தனர் எனவும் அறிய முடிகிறது.

சோழர் காலத்தில் அரச மகளிரின் ஆளுமை, கொடைத்தன்மை, செல்வ நிலை ஆகியன எந்த அளவு உயர்ந்த நிலையிலிருந்தது என்பதற்குச் சான்று செம்பியன் மாதேவியின் வாழ்வு. அறப்பணி மற்றும் கலைப்பணிகளுடன், செம்பியன் மாதேவியின் சிறப்பாக நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியது அவருடைய வரலாறு காக்கும் செயல்கள். அதன் காரணமாகவே இவர் ஒரு வரலாற்று நாயகி என அழைக்கப்பட வேண்டியவர். இவர் தாம் புதுப்பித்த செங்கற் கோயில்களின் பழைய கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றைப் புதுப்பிக்கப்பட்ட கற்றளிகளின் கட்டுமானங்களில் இடம் பெறச் செய்தார். அவ்வாறு (26 கல்வெட்டுப் படிகள்) பொறிக்கப்படுகையில் இது ‘ஒரு பழங்கல்படி’ என்ற வரியையும் அவற்றில் வெட்டுவித்தார். அவ்வாறு பழங்கல்படி எடுக்கையில் ஆடுதுறைக் கோயிலிலிருந்த வரகுணபாண்டியனின் கல்வெட்டையும், அவர் ஓர் எதிரி நாட்டு அரசனான பாண்டியனாக இருந்தாலும் கூட அவரது கல்வெட்டையும் படியெடுத்துப் பாதுகாத்து வரலாற்றை ஆவணப்படுத்துவதில் அவர் காட்டிய அக்கறைக்காகவே செம்பியன் மாதேவி போற்றப்படவேண்டிய ஒரு வரலாற்று ஆளுமை என்றால் அது மிகையல்ல.


நூல் விவரம்:
செம்பியன் மாதேவி (வாழ்வும் பணியும்)
பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்
பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு
செப்டெம்பர் 2019
பக்கங்கள்:120
விலை: ரூ. 100/-
ISBN: 978-93-89146-75-2


நன்றி: கண்டராதித்தர் சிற்பம் – கல்வெட்டு பட உதவி, திரு. மாரிராஜன், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்


நன்றி: சிறகு 
டிசம்பர் 21, 2019

#சிறகு, #நூல் மதிப்புரை, #வரலாறு, #Themozhi



Wednesday, December 4, 2019

வள்ளுவர் என்றோர் ஆய்வாளர்

 
 


'மெய்ப்பொருள் காண்பதறிவு' என உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிய விரும்புவது வள்ளுவர் வழி என்பதை நாம் அறிவோம்.
                    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
                    மெய்ப்பொருள் காண்பது அறிவு (அறிவுடைமை: குறள் -  423) 
என எச்செய்தியை எவர் சொன்னாலும் அது உண்மையா என ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை என்று வள்ளுவர் விளக்கும் குறள்  'அறிவுடைமை' அதிகாரத்தின் கீழ் இடம் பெறுகிறது.  அது இன்றைய சமூக ஊடக புரட்டுச் செய்திகளைப் பரப்புபவரிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லும் குறளாக அதிகம் பயன்படும் நிலைக்கும் வந்திருக்கிறது.  மெய்ப்பொருள் ... உண்மை; அந்த உண்மை என்ன என அறிவதே அறிவுடைமை.  அதற்குத் தேவை ஆய்வு மனப்பான்மை, ஆய்வுக்கான வழிமுறைகளை அறிந்திருக்கும் நிலைமை. சொல்வனவற்றின்  நம்பகத்தன்மை குறித்து ஐயத்துடன் நோக்கும் மனப்பான்மை. 

சமயவழியில் பயணிப்போர் தொன்மக் கதைகளைக் கேட்டுப்பழகி அவற்றை நம்பியதன் காரணமாக ஆராயும் மனப்பான்மையைப் பலநூற்றாண்டுகளாகக் கைவிட்டு விட்டனர். அத்தகைய பயிற்சிமுறையின் விளைவு இன்று மக்களிடம் சொன்னதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது, நம்புவது என்ற ஒரு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கம் முன்னுள்ள ஒரு  ஆடு சென்றால், அது  சென்ற வழியில் சிந்திக்காமல் மற்ற ஆடுகளும் செல்லும் ஒரு ஆட்டுமந்தையின் இயல்பில் மக்களைக் கொண்டு வந்து விட்டுள்ளது. 

இக்குறள் பிறர் கூறுவதில் உள்ள உண்மைகளைக் கண்டறிய  வலியுறுத்துவது போலவே 'மெய்யுணர்தல்' அதிகாரத்தின் மற்றொரு குறள் எந்தப் பொருள் எத்தன்மையதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மையான குணத்தினை உணர்ந்து கொள்வதே அறிவுடைமை  என்று மீண்டும் அறிவுறுத்துகிறது. 
                    எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
                    மெய்ப்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: குறள் - 355)
உண்மை அறிதலே அறிவுடைமை என்பது இதனால் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இதற்கு மாறாக, மாற்றுக் கோணத்தில், 

                    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
                    இன்னா அறிவி னவர் (இகல்: குறள் - 857)
என்ற குறள், ஆராய்ந்து உண்மை காணவிரும்பாதோரைக் குறித்துச்  சொல்கையில்; மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய விரும்பாது இருப்போர் மாறுபட்ட சிறுமதி கொண்ட அறிவற்றவர் என்கிறது.

ஆராய்வதை வள்ளுவர் பல வகையான சொற்களில் கூறுகிறார். 'ஆய்' 'ஆயும்' 'ஆய்ந்து' 'ஓர்ந்து' 'தேர்ந்து' என்ற சொற்கள்  'ஆராய்ந்து' செய்தல் என்ற பொருளில் திருக்குறளில் இடம் பெறுகின்றன. தேராது, ஓராது, நாடாது - போன்ற சொற்களும் 'ஆராயாமல்' செய்தல் என்ற பொருளில் குறட்பாக்களில் பயின்று வருகின்றன. 

ஆராய்பவர் கொள்கை அல்லது கோட்பாடு என்னவாக இருக்க வேண்டும் வள்ளுவர் கூறுவதை மற்றொரு குறளின் வழி அறியலாம்.  
                    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
                    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (வினைத்திட்பம்: குறள் - 662)
ஆய்ந்தவர்-ஆராய்ந்தவர்; கோள்-கோட்பாடு.   எனவே இக்குறளின் கருத்துப்படி, பொதுவாகத் தொலைநோக்குடன் சிந்தித்தலும், இடையூறு ஏற்படுகையில் தளராது இருப்பதும் ஆய்வாளர் நெறி என்று இக்குறள் மூலம் அறியலாம். செயல்வழி நடைமுறையில் செயலை முடிக்கும் வகையில் ஆய்ந்தவர் கொள்கையானது செயல் ஆற்றும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து அந்த இடையூற்றை நீக்குதலும், இடையிலே ஊறு நேரின் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டுமாகும். ஆகவே, இதுவே ஆராய்ந்து அறிய  விரும்புவோரிடம் நிலவ வேண்டிய வினைத்திட்பக் கொள்கை
 
இக்குறளின்  கருத்து எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை, 
                    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
                    அதனை அவன்கண் விடல் (தெரிந்து வினையாடல்: குறள் - 517)
என்ற குறள்  விளக்குகிறது. ஒரு செயலை எந்தெந்த வழிமுறைகளால் எவரால் சிறப்பாகச்  செய்து முடிக்க முடியும் என்பதைக் கண்டறிந்து (ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து) அதை அவரிடம் ஒப்படைக்கவேண்டும். இது நடைமுறை வாழ்க்கையில் நாம் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மற்றொரு  சூழ்நிலை.  

இன்றைய  நவீனக் காலத்தில் ஆய்வுக்குரிய நெறிகள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன.  தனது ஆய்வுக் கேள்விக்கான உண்மையை அறிய ஆய்வாளர்கள் தரவுகளைத் திரட்டும்பொழுது அத்தரவுகளின் உண்மைத்தன்மை அறிவது இன்றியமையாதது என்பது ஆய்வுமுறையின் அடிப்படை.  ஆய்வின் கேள்வியொன்று செய்தி  'அகச்சான்றுகள்' மற்றும்  'புறச்சான்றுகள்'  கொண்டு சரிபார்க்கப்பட்டு அதன் உண்மைத்தன்மை மதிப்பிடப்படும்.  

எடுத்துக் காட்டாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் யவனருடன் கடல்வழி வணிகம் செய்ததாகக் கூறப்படுவது உண்மையா என்று நாம் அறிய விரும்புவோம் என்று கொள்வோம்.  இந்த ஆய்வுக் கேள்விக்கான தரவை சங்க இலக்கியத்தில் தேட முற்படுவோம் .  எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் குறிப்பிடும், 
                    "சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
                    யவனர் தந்த வினைமாண் நன்கலம்
                    பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
                    வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ" (அகநானூறு: 149, 8-11)
என்ற பாடல் வரிகள் தமிழர் யவனர்களுடன்  வணிகம் செய்தார் என்ற சங்க இலக்கியப் பாடல் தரும் சான்றாகும்.  இச்சான்று அகச்சான்று வகையில் அடங்கும்.  இலக்கியம் தமிழரின் கடல் வணிகத்தைக் கூறுகிறது என்று நாம் சான்றுடன் குறிப்பிடலாம். 

இத்துடன், ரோமாபுரிப் பேரரசின் வரலாற்றுக் குறிப்பொன்றில், தமிழக முத்துக்களை ரோமப்பேரரசின் பெண்கள் அதிகம் வாங்கி அலங்கரித்துக் கொள்வதால் அவர்களின் அரசின் பொன் அதிக அளவில் தமிழகத்திற்கு வருகிறது. இதைத் தடை செய்யவேண்டும் என்று  பிளினி ( Pliny the Elder, in 77 CE, called India “the sink of the world's gold!”) என்பவர் குறிப்பிடுவது வெளியிலிருந்து நமக்குக் கிடைக்கும் புறச்சான்று.  இதனால் தமிழரும் யவனரும் வணிகத்தில் ஈடுபட்டனர் என்று இருவேறு தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது. இங்கு  இருவேறு கோணத்தில் கிடைத்த தரவுகள் ஒப்பிடப்படுகின்றன.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் யவனர்களுடன் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது  தமிழ்ப் புலவர்களின் கற்பனை அல்ல என்பது தெளிவாகிறது.  

'டிரையாங்குலேஷன் ஆஃப் டேட்டா' (triangulation of data)  என்ற தரவுகள் உறுதிப்படுத்தும் மற்றொரு முறையில் மூன்றாவதாகவும், மற்றொரு சான்று வேறொரு கோணத்தில் அதே செய்தியை உறுதிப்படுத்த வேண்டும் (Triangulation refers to the use of multiple methods or data sources in qualitative research to develop a comprehensive understanding of phenomena - Patton, 1999). இதனை மும்முனைத் தரவு ஆய்வு முறை எனலாம்.

தமிழரின் பண்டைய கடல்வழி வணிகத்திற்கான மூன்றாம் கோணத்தில் கிடைக்கப்பெற்ற தரவு குறித்துத் தேடுவோமானால், இந்திய-ஐரோப்பியக் கடல்வழிப் பாதையில், இடையில் உள்ள ஓமன் நாட்டில் கிடைத்த "ணந்தை கீரன்"  என்று 'தமிழி' எழுத்தில் கிடைத்த  மட்பாண்ட ஓடு அதே காலகட்டத்தில் கிடைக்கும் ஒரு தொல்லியல் சான்று (Carrer & Gheller, 2015).   இது தமிழரின் கடல்வழி வணிகத்தை மூன்றாவது கோணத்திலும்  உறுதி செய்துவிடுகிறது. 

இது போன்று  தகவலின் உண்மைத்தன்மையை வேறுபட்ட பல  மூலங்களில் கிடைக்கும் தரவுகளை ஒப்பிட்டு நம்பகத்தன்மையை மதிப்பிடும் முறைகள்  இன்றைய காலத்தின் ஆய்வுநெறிக்கான புத்துருவாக்கம் என நாம் கருதுவோமானால், திருவள்ளுவர் 'ஒற்றாடல்' அதிகாரத்தில் எழுதியுள்ள குறட்பாக்கள் சொல்லும் கருத்துக்களை நாம் மீள்பார்வை செய்ய வேண்டும்.   

தரவுகளின் உண்மை அறிய வள்ளுவர் காட்டும் வழிமுறைகளை இனி காண்போம். ஒரு அரசர் ஒற்றர் மூலம் அறியும் உளவுச் செய்தியை எவ்வாறு ஆராய வேண்டும் என்று அறிவுறுத்த விரும்பும் வள்ளுவர், 
                    ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
                    ஒற்றினால் ஒற்றிக் கொளல் (ஒற்றாடல்: குறள் - 588)
என்கிறார். ஒரு உளவாளி சேகரித்துச் சொன்ன செய்திகளை மற்றொரு  உளவாளி மூலம் முன்னர் கிடைத்த ஒற்றுச் செய்தியினை ஒப்பிட்டு நோக்கி உண்மை அறிய வேண்டும் என்பது  குறள்  சொல்லும் கருத்து. ஒரு ஒற்றர் சொல்லும் உளவுச் செய்தியை அப்படியே நம்பக்கூடாது, மற்றொரு ஒற்றர் கொண்டு வரும் செய்தியும் அதே தகவலைத் தந்தாலே அரசர் அதனை உறுதியாக நம்பி முடிவெடுக்கலாம். 

இவ்வாறு தரவுகளை ஒப்பிடச் சொல்லும் வள்ளுவர் அடுத்த குறளிலேயே மூன்றுகோணங்களில் அலசி ஆராயவும் (triangulation of data) சொல்கிறார். 
                    ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
                    சொற்றொக்க தேறப் படும் (ஒற்றாடல்: குறள் - 589)
ஒருவரை மற்றொருவர் அறியாத வகையில் மூன்று வெவ்வேறு ஒற்றர்களை ஒற்றறிய அனுப்பி, அந்த மூவரும் அறிந்து வந்து சொல்லும் கருத்தில் ஒற்றுமை இருப்பின் அதை உறுதியான  உண்மை என அறியலாம் என்பது இந்தக் குறள் சொல்லும் கருத்து. 

தரவுகளை ஆராய்வது போன்றே, ஆய்வு செய்யும் ஒருவர் தான் ஆய்வு செய்யும் புலத்தில் இதற்கு முன்னர் ஆய்வு செய்தோர் என்னென்ன கண்டுபிடித்து அறிந்து, அதைக் கொண்டு எந்தெந்த முடிவுகளை எடுத்தார்கள் என்பது குறித்த 'ஆய்வுப் பின்புலம்' (Literature Review) அறிந்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.  ஆய்வுக் கட்டுரை எழுதுபவர் அப்பொருள் குறித்து இதுவரை என்னென்ன கருத்துகள் உள்ளன என்று நூல்கள் பல படித்து, அக்கருத்துக்களை மீள்பார்வை செய்து, தனது தேடல் கேள்வி குறித்துத் தான் கண்டறிந்ததைக் கூறுவது ஆய்வின் நடைமுறை. இந்நாட்களில்  முறையான ஆய்வுக் கட்டுரை எழுதும் கட்டமைப்பில் இது  இன்றியமையாததாகவும் அமையும்.  இம்முறையை வள்ளுவர் குறிப்பிடுவதையும் காணலாம். 

                    செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
                    உள்ளறிவான் உள்ளம் கொளல் (வினைசெயல்வகை: குறள் - 677) 
செய்ய வேண்டிய செயலைச் செய்கின்றவன் செய்முறையாவது, அச்செயலின் நுட்பங்களை முன் அறிந்தவன் கூறியவற்றைக் கருத்தில் கொள்வது ஆகும் என்பது இக்குறள் கூறும் கருத்து. 

திருவள்ளுவர் ஆராய்ந்து அறிய வேண்டிய தேவை குறித்தும், எந்தெந்த சூழலில் கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், எத்தகைய ஆய்வு நெறியைக் கடைபிடிக்க வேண்டும் என்று பற்பல குறள்களில்  விரிவாக விளக்குவதிலிருந்து வள்ளுவர் ஓர்  சிறந்த ஆய்வாளராக இருந்திருக்கிறார் என்று அறிய முடிகிறது. அவ்வாறு உலக இயல்புகளைக் கவனமாக ஆராய்ந்த அவரது முடிவுகளே திருக்குறள்களாக மலர்ந்து உலகில் அனைவரும் பின்பற்ற வழிகாட்டியாக அமைந்துள்ளது. 



ஆய்விற்குத் துணை செய்தவை:
1.  எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், அகநானூறு பாடல் (149. பாலை).
2.  Healy, John F. (1991). Pliny the Elder. Natural History: A Selection. (77 CE) (XXXII, chaps. 21, 23), p. 281. Penguin Books. ISBN 0-14-044413-0.
3.  Realistic Evaluation, Michael Quinn Patton (1999), American Journal of Evaluation, Volume: 20 issue: 2, page(s): 385-388, Issue published: June 1, 1999
4.  Francesco Carrer, Viola Gheller (2015), Invisible Cultures: Historical and Archaeological Perspectives, p.233. Cambridge Scholars Publishing.
5.  தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Literature). ஆக்கம் முனைவர்.ப.பாண்டியராஜா,  http://tamilconcordance.in/table-KURAL.html
6.  குறள் திறன் - http://kuralthiran.com/Home.aspx


நன்றி:
ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சிறப்பு மலர்
டிசம்பர் 4, 2019 
https://mupporul.blogspot.com/2019/11/blog-post_15.html


#திருக்குறள், #ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சிறப்பு மலர், #Themozhi  

Saturday, November 23, 2019

ஆய்வு வழியில் வள்ளுவர்



ஆராய்ந்து அறியும் மனப்பான்மையைக் கொண்டோர் பண்புகள் எத்தகையனவாக இருக்கும்?

          அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
          பெரும்பயன் இல்லாத சொல். (பயனில சொல்லாமை: குறள் – 198)

அருமையான பயனளிக்கக் கூடியவை எவை என ஆராய்ந்து அதனை அடைய முயலுவோர், பெரும் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள். அதாவது, அவர்கள் வெற்றுப் பேச்சைத் தவிர்ப்பவர்கள்.

வள்ளுவரும் அத்தகையவர் என்பதை அவர் தமது அறநூல் கருத்துக்களைக் குறட்பாக்களாக ஈரடியில் எழுதியது உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பண்பு கொண்ட வள்ளுவர் எப்பொழுதெல்லாம் ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்? ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ (அறிவுடைமை: குறள் – 423) என்று கூறுமிடத்து, உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிவதுதான் அறிவுடைமை என்கிறார் வள்ளுவர். அவர் எந்தெந்த சூழ்நிலையில் ஆராய்வதைக் குறித்துத் தமது திருக்குறளில் கூறியுள்ளார் என்ற ஒரு மீள்பார்வை, வள்ளுவர் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நமக்கு அறியத் தரும். அதை கடைபிடிப்பது வாழ்வியல் வழிகாட்டியாகவும் உதவும் என்பதும் திண்ணம்.

நாம் ஆய்வைப் பயன்படுத்த வேண்டிய சூழல் எது? என்ற கோணத்துடன் குறட்பாக்களை ஆய்வு செய்யும்பொழுது; 
(1) உறவுமுறை கொள்ளுதல், 
(2) செயலாக்கத் திட்டங்கள், 
(3) வாழ்வியல் அறிதல்,
(4) ஆட்சிமுறை அறங்கள் 
ஆகியவற்றில் ஆய்வுக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கூற்றின் மூலம் தெளிவாகிறது.

(1)    உறவின் விதிகள் – உறவுமுறை கொள்ளுதல்:
வள்ளுவர் ஆய்வு செய்து நடக்க வேண்டிய சூழ்நிலைகளாகக் கருதுவது “ஒருவருடன் நாம் மேற்கொள்ளும் தொடர்பு” குறித்து என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

நம் பிறப்பின் காரணமாக நம் உறவாக அமைபவர் குறித்து நமக்கு ஆராய்ந்து தெரிந்தெடுக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ, அவர்களை மாற்றவோ வாய்ப்பில்லை. ஆனால் நாம் நட்பாகத் தேர்வு செய்பவர்களை, துணையாக இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அவர்களுடன் உறவாட வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.

          ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
          தான்சாம் துயரம் தரும். (நட்பு ஆராய்தல்: குறள் – 792)

ஆய்ந்தாய்ந்து, ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து, ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து. ஆய்ந்தாய்ந்து, அதாவது மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்து என்று வள்ளுவர் இங்கு வலியுறுத்துவதைக் காணலாம். பலவகையிலும் ஆராய்ந்து தெளிவு பெறாமல், உணர்வின் வழியில் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பானது முடிவில் சாகும் அளவிற்கும் பெருந்துயரில் கொண்டுவிடும் என்கிறது ‘நட்பு ஆராய்தல்’ அதிகாரத்தின் குறள்.

ஆராயாமல் செய்த நட்பினும் கேடு வேறு ஒன்றும் இல்லை என்ற இதே கருத்தை;
          நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
          வீடில்லை நட்பாள் பவர்க்கு (நட்பாராய்தல்: குறள் – 791)

என்ற குறளும் கூறுகிறது. இக்குறளில் ஆராயாமல் செய்வதை நாடாது (நாடாது-ஆராயாமல்) என்கிறார் வள்ளுவர். ஆகவே, ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை.

          அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
          வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் (நட்பு ஆராய்தல்: குறள் – 795)

நல்ல நட்பு என்ற கூறப்படும் தகுதி யாருக்கு உண்டென்றால், அழுகின்ற அளவுக்கு அறிவுரை சொல்லி ஒருவரைத் திருத்தும் உரிமையுடையவரையே அடையாளம் காட்ட இயலும். அவரையே நட்பாகக் கொள்ள வேண்டும். அத்தகைய இடித்துரைக்கும் பண்பில்லாத ஒருவரானால், அவர் குறித்து ஆராய்ந்து முடிவெடுத்த பின்னர்தான் (ஆய்ந்து நட்புக் கொளல் – ஆராய்ந்து நட்புக் கொள்க) அவரை நமது நட்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் குறள் கூறும் கருத்து.

யாருடன் தொடர்பு கொள்ளுதல் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற இக்கருத்தை வள்ளுவர் வரைவின் மகளிருடன் கொள்ளும் தொடர்புக்கும் பொருத்திக் காட்டுகிறார். ஆராய்ந்து அறியும் அறிவற்றவரே பொதுமகளிர் உறவினை நாடிச் செல்வர் என்பது வள்ளுவரின் துணிபு.

           பொருட்பொருளார் புன்னலம் தோயா அருட்பொருள்
          ஆயும் அறிவி னவர் (வரைவின் மகளிர்: குறள் – 914)

மற்றொரு குறளில், அருளுடமை என்னவென்று ஆராய்ந்து தெளிந்த அறிவுடையவர், பொருள் ஒன்றையே கருத்தாகக் கொண்டு செயல்படும் பொதுமகளிரின் இழிவான உறவை நாடமாட்டார்கள் என்கிறார்.

          ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
          மாய மகளிர் முயக்கு (வரைவின் மகளிர்: குறள் – 918)

ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதோருக்கு அழகிய மோகினியால் (அணங்கு தாக்கு) தாக்கப்பட்டவர் போல வஞ்சம் நிறைந்த பொதுமகளிரை நாடுவர் என்கிறர் வள்ளுவர்.

விலைமகளிரிடம் செல்வோர் மட்டுமன்று, அடுத்தவர் மனைவியை விரும்பிச் செல்பவரும் அதே ஆராயும் அறிவற்றவரே என்கிறது குறள்,

          எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
          தேரான் பிறனில் புகல் (பிறனில் விழையாமை: குறள் – 144)

பெருமைமிக்க நிலையில் உள்ள ஒருவரும், தான் செய்வது எத்தகைய ஒரு இழிய செயல் என்று சிறிதும் ஆராய்ந்து பார்க்க மாட்டாதவராக (தேராது-தனது தகுதியின் நிலை குறித்து ஆராயாமல்) பிறன் மனைவியை நாடிச் செல்வது அவரது பெருமையை அழித்துவிடும்.

(2) செயல்வகை விதிகள் – செயலாக்கத் திட்டங்கள்:
          இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
          அதனை அவன்கண் விடல் (தெரிந்து வினையாடல்: குறள் – 517)

ஒரு செயலை குறிப்பிட்ட இந்தந்த வழிமுறைகளால் இவர் செய்து முடிக்க வல்லவர் என்பதைக் கண்டறிந்து அப்பணியை அவரிடம் ஒப்படைக்கவேண்டும். செயல், செய்முறைகள், செயலை முடிக்கக்கூடிய தகுதி இம்மூன்றும் தக்கவாறு பொருந்திவிட்டால் அச்செயல் நிறைவடைவதில் தடையிருக்காது. இதனை ஆராய்ந்து முடிவெடுத்துச் செயல்படவேண்டும் என்பது வள்ளுவர் அறிவுரை. Well begun is half done என்ற ஆங்கிலப் பழமொழியும் நன்கு துவங்கிய ஒரு செயல் என்றால் அதுவே பாதி முடிவடைந்த நிலை என்கிறது.

          தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
          அரும்பொருள் யாதொன்றும் இல் (தெரிந்து செயல்வகை: குறள் – 462)

என்ற குறள், (தேர்ந்து-ஆராய்ந்து) தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையுள்ளவர்களுடன் இணைந்து தாமும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோருக்குச் செய்ய இயலாத கடினமான செயல் என்று எதுவுமே இல்லை என்று அறிவுறுத்துகிறது. பணியில் ஈடுபடுவோரை ஆராய்ந்து தேர்ந்து எடுத்து அவர்களுடன் சிந்தித்துச் செயலாற்றினால் பிறகு பணியில் வெற்றி என்பதுதான் விளைவு. அவ்வாறான திறமைசாலிகளை எவ்வாறு அடையாளம் காண என்ன வழி என்பதையும் வள்ளுவர் விளக்கத் தவறவில்லை.

          அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
          திறம்தெரிந்து தேறப் படும் (தெரிந்து தெளிதல்: குறள் – 501)

அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் ஆகிய இந்த நான்கிலும் ஒருவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என ஆராய்ந்து, பணிக்கு இவர் கொண்டுள்ள இத்தகைய பண்புகள் உதவுமா என்று ஆராய்ந்த பின்னரே ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அறம் தவறாதவராக, விலைக்கு வாங்க முடியாதவராக, இன்பவாழ்வில் நாட்டமில்லாதவராக, உயிரை இழக்க வேண்டியிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலும் காட்டிக் கொடுத்துக் கைவிடாதவர் போன்றவரை நம்பி மட்டுமே சில நுட்பமான செயல்களை ஒப்படைக்க இயலும் என்பதுதான் உண்மை.

          தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
          தேறுக தேறும் பொருள் (தெரிந்து தெளிதல்: குறள் – 509)

எவரையும் ஆராயாது பணிக்குத் தேர்ந்தெடுக்கக்கூடாது. ஆராய்ந்து தேர்வு செய்த பின்னரும் அவரது திறமைக்கு ஏற்ற செயலையே அவரிடம் ஒப்படைக்க வேண்டும். என மீண்டும் இந்தக் குறளிலும் ஆராய்ந்து ஒருவரைப் பணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

(3) வாழ்க்கை விதிகள் – வாழ்வியல் அறிதல்:
தாம் வாழும் வாழ்வைக் குறித்த தெளிவான புரிதல் இருப்போருக்கு மன அமைதி இருக்கும் என்பது இக்கால மனவளக் கட்டுரை எழுதுவோர் கூறும் தத்துவக் கருத்தன்று. சங்கப் பாடலான புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் இதைத் தெளிவாகக் கீழ்வருமாறு கூறுகிறார்,
          ….
          சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
          இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
          இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
          வானம் தண்துளி தலைஇ யானாது
          கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
          நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
          முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
          காட்சியில் தெளிந்தனம்… (புறநானூறு-192)

எங்களுக்குச் சாதல் புதுமையில்லை, அவ்வாறே வாழ்தலும் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை, அந்த வாழ்வை வெறுத்து இது துன்பமான வாழ்வு என ஒதுங்கியதுமில்லை. பேராற்று நீர்வழி ஓடும் ஓடம் போல இயற்கைவழியில் எதுவும் நிகழ்வதுதான் உயிர்வாழ்வதன் இயல்பு என்று சான்றோர் அறிவுறுத்தியதை அறிந்து தெளிவு பெற்றுள்ளோம் என்று வாழ்க்கையின் இயல்பை கணியன் பூங்குன்றனார் நயம்பட உரைக்கின்றார். இத்தெளிவு வந்த பிறகு நமது மனம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு அலைபாயாது அஞ்சாது அமைதியுடன் இருக்கும்.

இந்த உண்மையை ஆராய்ந்து அறிவது பற்றியும் வள்ளுவர் கூறுகிறார்.
          கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
          மற்றீண்டு வாரா நெறி (மெய்யுணர்தல்: குறள் – 356)

இவ்வுலகிலே மெய்ப்பொருளைக் கற்று உணர்ந்தவர், வாழ்க்கைத் துன்பங்கள் இங்குத் தோன்றாதவாறு நல்வழியை அடைய முற்படுவர்.
          ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
          பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு (மெய்யுணர்தல்: குறள் – 357)

ஒருவரது உள்ளம் தாம் வாழும் வாழ்க்கையின் பொருளை (ஓர்த்து -ஆராய்ச்சி செய்து) ஆய்ந்து உறுதியாக உணர்ந்துவிடுமானால், பின்னர் பிறப்பின் காரணம் குறித்து எண்ண வேண்டியதில்லை.

அவ்வாறு ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை என்பதை மற்றொரு குறளிலும் வள்ளுவர் கூறுகிறார்.
          பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
          செம்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: குறள் – 358)

பிறப்பு பற்றிய காரணம் அறியமுடியாத பேதைமை நீங்குமாறு எங்கும் சிறப்புற நிறைந்துள்ள செம்பொருளை ஆராய்ந்து உணர்வதே அறிவு.

(4) அரசாட்சியின் விதிகள் – ஆட்சிமுறை அறங்கள்:
ஆட்சி செய்வோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இன்றியமையாதது. அவர்கள் செங்கோல் தாழாது ஆட்சி செய்ய எதையும் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். இதைச் சிலப்பதிகாரத்தில், கண்ணகி தனது கணவன் கோவலனின் இறப்பிற்குப் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கச் சென்ற பொழுது கூறுவதன் மூலம் தெளிவாகக் காணலாம். கண்ணகி தன்னை பாண்டியனிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அவனை நோக்கி “தேரா மன்னா” (தேரா மன்னா = ஆராய்ச்சி இல்லாத அரசனே) என்றுதான் பேசத் துவங்குகிறாள். தொடர்ந்து, ஆராய்ச்சி மணி கட்டி ஆட்சி செய்து, அம்மணியை ஒலித்து நீதி கேட்ட கன்றை இழந்த பசுவிற்கு நீதி வழங்க விரும்பி, தேரோட்டி அதைக் கொன்ற தனது மகனையே தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய சோழமன்னனின் நாட்டைச் சேர்ந்தவள் நான் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.

          தேரா மன்னா செப்புவது உடையேன்
          எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
          புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
          வாயிற் கடைமணி நடுநா நடுங்க
          ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
          அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
          பெரும்பெயர்ப் புகார்என் பதியே”
               (சிலப்பதிகாரம்-வழக்குரை காதை: 50-63)

ஆராய்ந்து நீதி வழங்க வேண்டியது மன்னனின் கடமை, அதுவே அறம் என்று கூறும் வள்ளுவர்,
          ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
          தேர்ந்துசெய் வஃதே முறை (செங்கோன்மை: குறள் – 541)

வழக்கை ஆராய்ந்து, எவருக்கும் சார்புநிலையில் இரக்கம் காட்டாமல், இறையாண்மையுடன் தெளிவாக உணர்ந்து முடிவு செய்வதுவே அறமாகும் என்று குறளில் வலியுறுத்துகிறார். அடுத்த கட்டமாக, அவ்வாறு ஆராயாமல் அரசாளும் மன்னனின் ஆட்சிக்காலம் தானே அழியும் என்கிறார். முறைதவறித் தீர்ப்பு வழங்கிய பாண்டியன் நெடுஞ்செழியனின் வாழ்வும் அவ்வாறேதான் முடிவுற்றது.

          எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
          தண்பதத்தான் தானே கெடும் (செங்கோன்மை: குறள் – 548)

மக்கள் எளிதாக முறையிட வழி செய்து , காலந்தாழ்த்தாது ஆராய்ந்து தக்கவகையில் நீதி வழங்காத ஆட்சி தானே அழிந்துவிடும்.

மேலும் வள்ளுவர், ஒற்றுச் செய்திகளை ஆராய்ந்து உண்மைத் தன்மை அறிய வேண்டிய தேவையையும் மன்னனுக்கு உணர்த்துவார்.
          ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
          ஒற்றினால் ஒற்றிக் கொளல் (ஒற்றாடல்: குறள் – 588)

என்கிறார் வள்ளுவர். ஒரு உளவாளி சேகரித்துச் சொன்ன செய்திகளை மற்றொரு உளவாளி மூலம் முன்னர் கிடைத்த ஒற்றுச் செய்தியினை ஒப்பிட்டு நோக்கி உண்மை அறிய வேண்டும் என்பது குறள் சொல்லும் கருத்து. ஒரு ஒற்றர் சொல்லும் உளவுச் செய்தியை அப்படியே நம்பக்கூடாது, மற்றொரு ஒற்றர் கொண்டு வரும் செய்தியும் அதே தகவலைத் தந்தாலே அரசர் அதனை உறுதியாக நம்பி முடிவெடுக்கலாம்.

இவ்வாறு தரவுகளை ஒப்பிடச் சொல்லும் வள்ளுவர் அடுத்த குறளிலேயே மூன்றுகோணங்களில் அச்செய்தியை அலசி ஆராயவும் சொல்கிறார்.
          ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
          சொற்றொக்க தேறப் படும் (ஒற்றாடல்: குறள் – 589)

ஒருவரை மற்றொருவர் அறியாத வகையில் மூன்று வெவ்வேறு ஒற்றர்களை ஒற்றறிய அனுப்பி, அந்த மூவரும் அறிந்து வந்து சொல்லும் கருத்தில் ஒற்றுமை இருப்பின் அதை உறுதியான உண்மை என அறியலாம் என்பது இந்தக் குறள் சொல்லும் கருத்து.

இதுகாறும், வள்ளுவர் ஆய்வு செய்க எனக் கூறும் குறட்பாக்களின் கருத்துக்களைப் பகுத்துக் காண்கையில் நாம் அறிவது; 
பிறப்பால் கிடைக்கும் உறவுகளைத் தவிர்த்து, நாம் தேடி அடையும் ஏனைய உறவுகளை ஆராய்ந்து அறிந்த பின்னரே அவர்களுக்கு நம் தனிப்பட்ட வாழக்கையில் இடம் அளிக்க வேண்டும். அந்த உறவுகளே அறம் சார்ந்த வகையில் நம் வாழ்க்கை அமைய உதவும். 
தொழில்முறையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பொழுதும் தக்கவரைத் தேர்ந்து தமது பணியில் இணைத்துக் கொள்ளுதல் பணியில் வெற்றிபெற வழி வகுக்கும். 
அத்துடன் இன்றி வாழ்க்கையின் இயல்பு என்னவென்று ஆராய்ந்து அறிந்து கொண்டால் துயர் வருத்தாது அமைதியுடன் வாழ இயலும். 
இவ்வாறு தனி மனிதருக்கு மட்டுமின்றி அரசாட்சி செய்வோருக்கும் கூறுகிறார். அறம் எது என ஆராய்ந்து தம் ஆட்சிக்குரிய மக்களுக்கு முறை செய்ய வேண்டும். இல்லாது போனால் அவர்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

உதவிய நூல்கள்: 
திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம்.


நன்றி :
சிறகு -  நவம்பர் 23, 2019
http://siragu.com/ஆய்வு-வழியில்-வள்ளுவர்/


#திருக்குறள், #சிறகு, #Themozhi  

Saturday, November 9, 2019

சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது?

சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது?


பண்டைய தமிழக மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற அவை வணிகம், போர், வழிபாடு, உறவின் நிமித்தம் என எதுவாக இருப்பினும் அவை எளிதாக நடைபெறப் பல வகைச் சாலைகள் தமிழகத்தின் ஊர்களிலும், சிற்றூர்களுக்கு இடையிலும், பெருநகரங்களுக்கு இடையிலும் இருந்தன. ஊர்களுக்குள் இருக்கும் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என அறியப்பட்டன(1). அக்காலத்தில் தேரோடும் வீதிகளான பெருந்தெருக்களைக் கொண்டவை பல ஊர்கள். இரு சிற்றூர்களை ஊர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என அறியப்பட்டன(2). ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரரசுகளின் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும் இணைத்தன(3).

இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்தப் பெருவழிகளைப் பராமரிக்க வரி வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன(4). வணிகர்களும், சரக்கு வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின. ஆற்றங்கரையோரம் மக்கள் குடியேறிய ஊர்களையும் அவை இணைத்ததால் பெருவழிகள் உருவானதைத் தேவைக்கேற்ற ஓர் உருவாக்கம் என்றே கொள்ளலாம்.

சங்க காலம் முதற்கொண்டே பல பெருவழிகளின் பெயர்கள் கிடைக்கின்றன. பெருவழிகள் குறித்த தகவல் தமிழகத்தின் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. கோயில்களுக்காகக் கொடைகள் வழங்கப்படுகையில், அது நிலக்கொடையாக இருப்பின் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடுகையில் பெருவழிகள் பற்றிய செய்திகள் சிலவும் கிடைக்கின்றன. வணிக மையமாக இருந்த கொங்குப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெருவழிகள் இருந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, கொற்கைப் பெருவழி, கொங்குப் பெருவழி, பட்டினப் பெருவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, இராசமகேந்திரன் பெருவழி, ராஜகேசரிப் பெருவழி, மகதேசன் பெருவழி, வீரநாராயணன் பெருவழி, சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, அரங்கம் நோக்கிய பெருவழி, இராசராசபுர பெருவழி, இராச இராசன் பெருவழி, இராசேந்திரன் பெருவழி, குலோத்துங்கன் பெருவழி, விளாங்குடையான் பெருவழி, கூழையானை போன பெருவழி, மேற்குநோக்கிப் போன பெருவழி, மேலைப் பெருவழி, வடுகப் பெருவழி, தடிகைப் பெருவழி, பட்டினப் பெருவழி என்று பல பெருவழிகளின் பெயர்கள் கிட்டியுள்ளன. அரசர், அரசியர் பெயர்களிலும் அந்தப் பெருவழிகளின் பெயர்கள் இருந்துள்ளன. செல்லும் ஊர்களின் பெயர்களிலும், திசைகள் குறித்தும் அவை பெயரிடப்பட்டுள்ளதைக் காணலாம்.

இராஜகேசரி பெருவழி என்பது கொங்குமண்டலத்தின் சிறப்பான பெருவழிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆதித்த சோழன் கி.பி. 871-907 கால கட்டத்தில் ராஜகேசரி பெருவழியை முப்பது அடி அகலத்திற்குச் செப்பனிடப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல் கூறுகிறது (5). தமிழகத்தின் குணகடலையும் குடகடலையும் (இன்றைய வங்கக்கடல், அரபிக்கடல்) இணைக்கும் பெருவழி ஒன்று பாலக்காட்டுக் கணவாய் வழி இருந்துள்ளது. இது மேற்குத் துறைமுகமான முசிறியையும், கிழக்குத் துறைமுகமான பூம்புகாரையும் இணைத்திருக்க வாய்ப்புள்ளது.

நா. பார்த்தசாரதி எழுதிய ‘பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்’ என்ற நூலில் பூம்புகார் நகர் குறித்து எழுதுகையில் புகாருக்குச் செல்லும் பெருவழியாக பட்டினப்பெருவழியைக் குறிப்பிடுகிறார். “இந் நகரத்துக்குச் செல்லும் பிரதான சாலை சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் பட்டினப் பெருவழி” என்று குறிக்கப்பட்டுள்ளது என்று டி. வி. பண்டாரத்தார், எழுதிய காவிரிப்பூம்பட்டினம் நூலில் இருந்து மேற்கோள் கொடுக்கிறார் (6, 7). பூம்புகார் ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ என்று கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் புகழப்பட்டு ‘பட்டினப்பாலை’ என்ற நூலும் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் (8). பட்டினம் என்றாலே அது பூம்புகார்ப் பட்டினம்தான் என அறியப்பட்ட நகர் இது. ஆகவே, பட்டினப் பெருவழி என்றால் அது பூம்புகாருக்குச் செல்லும் பெருவழி என்றே எண்ணப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை 1979 இல் வெளியிட்ட ‘நன்னிலம் கல்வெட்டுக்கள்’ (முதல் தொகுதி, ஆ. பத்மாவதி, பக்கம் – 12) நூலில் உள்ள கல்வெட்டொன்று நாகப்பட்டினம் செல்லும் பெருவழியைப் ‘பட்டனப் பெருவழி’ என்று குறிப்பிடுகிறது (9). இப்பெருவழி இன்றைய தேசியநெடுஞ்சாலை 67 (National Highway 67) ஆகும்.


கண் நோய் தீர்க்கும் திருத்தலமாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, ஆலத்தாங்குடி பகுதியில் உள்ள ‘கண்கொடுத்தவனிதம்’ என்ற ஊரின் கோயில் அறியப்படுகிறது. இத்திருக்கோயில், திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் வட்டத்தில் திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பாண்டவை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தொன்மையான இந்த ஆலயத்தில் மூன்றாம் குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. அக்காலத்தில் இது அருமொழிதேவ வளநாட்டுப் பிரிவின் கீழ் இருந்திருக்கிறது.

முதல் மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 36 ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1298 ஆண்டில்) நயன வரதேஸ்வரர் கோயில் வடபுறத்திலுள்ள பட்டிகையில் உள்ள கல்வெட்டில் இக்கோயில் நாச்சியாரான தேவதம்பிராட்டியாரின் சேவைக்காக நிலக்கொடை அளிக்கப்பட்டதைக் கூறுகிறது. ஆலத்தாங்குடியின் புகழாபரணீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள் (கோயில் நிர்வாகத்தினர்) இந்த நிலக்கொடைக்காகப் பற்பலரிடம் நிலம் வாங்கியுள்ளதைக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. அந்த நிலங்களின் எல்லைகளைக் குறிக்கையில் ஆலத்தாங்குடி பாண்டிவாய் ஆற்றுக்கு வடகரை, இராஜராஜன் வாய்க்கால், மூவாயிரன் வாய்க்கால், வயிரவன் வாய்க்கால் என்ற குறிப்புகள் இடம் பெறுகின்றன. ஆலத்தாங்குடி ‘பாண்டிவாய் ஆறு’ இந்நாட்களில் ‘பாண்டவை ஆறு’ என்று மருவி உள்ளதும் தெரிகிறது.

இவ்வாறாக நிலங்களின் எல்லையைக் குறிப்பிடுகையில், கல்வெட்டின் 12 ஆவது வரி பட்டனப் பெருவழிக்கு (குறிப்பு: பட்டினப் பெருவழி என்று இல்லாமல் பட்டனப் பெருவழி என்றுள்ளது) தெற்கில் அமைந்துள்ள நிலமும் வாங்கப்பட்டதைக் குறிப்பிடுவதைக் கீழ்க்காணும் செய்தியின் மூலம் அறியலாம்.


12 ..ப்பற்றுக்கும் வினாயகப்பிள்ளையார் திருவிருப்புக்கும் மேற்கு தென்பாற்கெல்லை இந்நாயனார் திருநாமத்துக் காணிக்கு வடக்கு மேல்பாற்கெல்லை இந்நாயனார் திருநாமத்துக் காணிக்கு கிழக்கு வடபாற்கெல்லை பட்டனப் பெருவழிக்கு தெற்கு நடுவு குழி – ரு௰ சீராமன் ஆதித்தபட்டன் பிடவாரி தந்த காவதகுடியில் பவுத்திர மாணிக்கவதிக்கு கிழக்கு மூவாயிரவன் வாய்க்காலுக்கு வடக்கு ௩ கூ ம் ௪ ௯ ம் நிரவினி துண்டத்து வடக்கடைய திருவிடை யாட்டம் விட்டு தெற்கு ௹ ௬ இதில் இந்நாயனார்க்கு முன்னாள் நல்லூருடையா [ன்]

இன்றைய நாளில், தமிழ்நாட்டின் குறுக்காக 555 கி.மீ. தொலைவுக்கு, கோவையையும் நாகப்பட்டினத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாக இந்த நெடுஞ்சாலை NH 67 அறியப்படுகிறது. கரூரில் இருந்து காவிரி ஆற்றின் தென்கரையை ஒட்டி குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் நகர்களின் வழியே இந்த நெடுஞ்சாலை நாகப்பட்டினம் வரை செல்கிறது. ஆனால், இந்தத் தொலைவுள்ள நீண்ட பெருவழிக்கும் அக்காலத்தில் பட்டினப் பெருவழி என்ற பெயர் இருந்திருக்குமா என்பது ஐயமே. குறைந்தது தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வழியாக நாகப்பட்டினத்தைப் பட்டினப் பெருவழி இணைத்திருக்கக்கூடும் என்பதைக் கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். மேலும் பட்டினப் பெருவழி என்பது 13 ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் செல்லும் பெருவழியைத்தான் குறிப்பிடுகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.



சான்றுகள்:
1. “தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள்”
2. பிற்கால சோழர் சரித்திரம்,3ஆம் பகுதி சதாசிவ பண்டாரத்தார், ப-107
3. இந்திய வரலாறு, சத்தியநாதய்யர், முதல்பாகம், ப-425
4. திருப்பாற்கடல் கல்வெட்டு, காவேரிப்பாக்கம் ஊர்மன்றம்
5. கா.சு.வேலாயுதன் (2017 சூன் 16). “தூர்ந்து கிடக்கும் ராஜகேசரி பெருவழி”செய்திக் கட்டுரை. தி இந்து.
6. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும், நா. பார்த்தசாரதி, (1992)
7. டி. வி. பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம். ப.42
8. பட்டினப்பாலை 218
9. நன்னிலம் கல்வெட்டுக்கள் – முதல் தொகுதி, ஆ. பத்மாவதி, பக்கம் – 12, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை, 1979 
– http://www.tamildigitallibrary.com/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kut1&tag=நன்னிலம்%20கல்வெட்டுக்கள்# book1/




நன்றி: சிறகு 
நவம்பர் 9, 2019


#சிறகு, #கல்வெட்டு, #தொல்லியல், #வரலாறு, #Themozhi



Wednesday, September 18, 2019

தோலுரித்த கலகத் திருமகன்

தோலுரித்த கலகத் திருமகன்





ஏன் ஏன் என்ற வினாக்கள் 
அறியா வயதுடன் நிற்பதல்ல 
ஏன் அவர்கள் என்றும் அப்படி 
வறுமையில் உழல வேண்டும்?
ஏன் இவர்கள் என்றும் இப்படி 
உரிமையின்றி வாழ வேண்டும்?

எல்லாமும் கடவுளால் என்ற 
ஆன்மிக விளக்கம் உதவவில்லை 
செய்த பாவம், அவர்கள் விதி
என்ற விடையில் அடங்கவில்லை 
சமயம் வகுத்த சாத்திரங்கள் எனில் 
ஆராய முற்பட்டார் அந்த கலகக்காரர் 

ஆவலுடன் உரிக்கத் துவங்கினார் 
அந்த சமய வெங்காயத்தை 
அவர் அதன் தோலை உரிக்க உரிக்க 
கண்ணீர் வழிந்தது, பெரியாருக்கல்ல 
கடவுள் பெயரில் ஸ்மிருதிகள் எழுதி 
அடக்குமுறை செய்தோருக்கு 

உள்ளே ஒன்றுமில்லை என்பது உறுதியானது
ஒரு சிலரின் ஓங்கிய வாழ்விற்குப்
பல பலவீனர்கள் கொடுத்த விலை என்ற 
வஞ்சகர் திட்டம்  வெளியானது 
சூழ்ச்சிக்கார்களின் சூது புரிந்தது 
வெளியிட்டார் வெள்ளை அறிக்கையை 

கடவுள் இல்லை, இல்லை; 
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; 
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;
கடவுளை மற ! மனிதனை நினை ! 

அடங்கிக் கிடந்த ஆண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட பிரிவினருக்குப் 
போயின; போயின பதவிகள் 
அடங்கிக் கிடந்த பெண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட ஆண்களுக்குப்
போயின; போயின  நிம்மதி 

அவர் சொல்வதைப் பின்பற்றச் 
சொன்னதில்லை பெரியார்
நானே சொன்னாலும் நம்பாதே 
என்றுதான் சிந்திக்கத் தூண்டினார்
மெய்ப்பொருள் காணச் சொன்னார் 
சூழ்ச்சியைத் தோலுரித்த கலகத் திருமகன் 

ஏன்..ஏன்..மீண்டும் மீண்டும் கேள்..கேள் கண்ணே
சிந்திப்பாய் சிந்திப்பாய் சிந்திப்பாய் பெண்ணே




நன்றி:
மின்தமிழ்மேடை  - 19 [அக்டோபர்  - 2019]
https://archive.org/details/THFi-QUARTERLY-19/page/235/mode/2up

#மின்தமிழ்மேடை, #கவிதை, #பெரியார், #Themozhi 

செப்டெம்பர்  18, 2019



Saturday, July 13, 2019

சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்

சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்


          அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri-பின்னங்குடி சாமிநாத சுப்பிரமணிய சாஸ்திரி) அவர்கள் ஒரு  பன்மொழி அறிஞர். தமிழிற்கும் வடமொழிக்கும் இலக்கியப்பணிகள் பல ஆற்றியவர். தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த இவர் தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.  “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.  இவரது சிறந்த மொழியியற் புலமையையும், மொழியிலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும்,   கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதன் சுருக்கமாக,  செல்லமாக “பிசாசு” என்றும் அழைக்கப்பட்டார். உரையாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பலநூல்கள் எழுதிய இவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்”  (1930 ஆம் ஆண்டு) என்ற பெருமையும் உண்டு.   தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும் அதன் வடமொழி இலக்கண உறவும் என்ற தலைப்பில் முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை எழுதினர்.  சமஸ்கிருத இலக்கிய வரலாறு, சமஸ்கிருத இலக்கண வரலாறு ஆகியவற்றைத் தமிழில் எழுதியுள்ளார். இவரது தொல்காப்பிய ஆய்வில் வடமொழி சார்பின் தாக்கம் அதிகம் என்ற கருத்துகளும் அக்காலத்தில் தமிழறிஞரிடையே இருந்தன. தொடர்ந்து "தொல்காப்பிய சொல்லதிகாரக் குறிப்பு"  என்ற இவரது நூல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் வித்துவான் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்ட பொழுது விவாதங்கள் வெடித்தன. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த தமிழறிஞர்கள் அவர்களின் திங்கள் இதழான தமிழ்ப் பொழில் மூலம் பல மறுப்புக் கட்டுரைகளை, மாற்றுக் கருத்துகளை, விளக்கங்களைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதிவு செய்து வந்தனர் என்பது சென்ற நூற்றாண்டின் தமிழ்  வரலாற்றின் ஒரு பகுதி.



          செம்மொழிகளான தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே தொன்றுதொட்டு இருந்துவரும் தொடர்பு இவரது ஆய்வுகளின் அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கிறது.  இருமொழிகளிலும் இலக்கண இலக்கியப் படைப்புகளையும்  ஒப்பிடுவதில் தொடங்கிய இவரது முயற்சியின் தொடர்ச்சியில் உருவான மற்றொரு நூல் "சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்".  இந்நூலின் நோக்கம் சமஸ்கிருத  இலக்கியங்களில் உள்ள வைதீகச் சமயக் கருத்துகளைச்  சங்க இலக்கியப்பாடல்களின் கருத்துகளுடன் ஒப்பிடுவது.    டாக்டர். பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய இந்த ஒப்பீடு நூல், திருப்பனந்தாள் மடம் நல்கிய 400 ரூபாய் பொருளுதவியுடன் 500 பிரதிகள் அச்சிடப்பட்டு  1951 ஆண்டு வெளியிடப்பட்டது.  எழுபது பக்கங்களைக் கொண்ட இந்த மிகச்சிறிய நூல் 1. சங்கநூல்கள், 2. வைதிகமார்க்கம், 3. சங்கநூல்களும் வைதிகமார்க்கமும் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


          இந்நூல் கருத்துகளைச் சற்றே விரிவாகக் காணுவது தமிழரின் பெருமைக்குரிய கருவூலமான சங்கப்பாடல்களில், தமிழுக்குச் செம்மொழி என்ற சிறப்பை நல்கிய சங்கப்பாடல்களில் ஆரிய வேத சமயத்தின் சமய அடிப்படைக்  கருத்துகளின் தாக்கம் எந்த அளவு, அதுவும் எக்காலத்திலேயே  இருந்துள்ளது என்ற தெளிவைக் கொடுக்கும்.  ஆய்வுத்திறனுக்காகப் புகழப்படுபவரும்,  தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி வல்லுநருமான  சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் நூல்வழியே அதை அறிவது ஒரு பெருவாய்ப்பு. 


(I)
முதல் பகுதி-சங்கநூல்கள்: 
          இப்பகுதி சங்கநூல்கள் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்தை 12  பக்கங்களில் தருகிறது. இதில் 1. தொல்காப்பியம், மற்றும் சங்க இலக்கியங்களான  2. பத்துப்பாட்டு,  3. எட்டுத்தொகை, 4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றைப் பற்றிய தேவையான அளவு அறிமுகம் கொடுக்கப்படுகிறது.

இந்தச் சங்க நூல்கள் அறிமுகப் பகுதியில் சுப்பிரமணிய சாஸ்திரி சொல்லும்  சில முக்கியக் கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொல்காப்பியம் - தமிழில் எழுத்துக்கு இலக்கணம் கூறும் எழுத்ததிகாரம் வடமொழியில்  'சிக்ஷா' எனப்படும்; தமிழில் சொல்லுக்கு இலக்கணம் வகுக்கும் சொல்லதிகாரம் வடமொழியில் 'வியாகரணம்' எனப்படும்;  தமிழில் செய்யுட்களின் பொருளுக்கு இலக்கணம் வகுக்கும் பொருளதிகாரம் செய்யுளின் கருப்பொருளின் அடிப்படையில் 'அகம்', 'புறம்' எனப் பிரிக்கிறது, ஐந்திணை ஒழுக்கம் மற்றும்  செய்யுள் அமையும் இலக்கணத்தைக் கூறுகிறது.  இது வடமொழியில் "அலங்காரசாஸ்திரம்" எனப்படுகிறது என்கிறார் (பக்கம்: 1-2). 

பரிபாடல் -  பண்டைய தமிழகத்திலிருந்த  வைதீக ஒழுக்கங்களை மிகுதியும் அறிய முடிகிறது. இப்பாடல்களில் காணப் பெரும் முருகன் பிறப்பு, வைதீக ஒழுக்கம் போன்றவற்றை வடமொழியின் உபநிஷத்து மற்றும் மகாபாரதம் போன்ற நூல்களில் பயிற்சி இருந்தாலே பொருள் விளங்கும் (பக்கம்: 7) என்கிறார் நூலாசிரியர்.

திருக்குறள் - மகாபாரதத்தில் தர்மத்தை 'பிரவிருத்தி தர்மம்', 'நிவிருத்தி தர்மம்' என வியாசர் பிரித்தது போலவே, வள்ளுவரும் அறத்தை 'இல்லறம்', 'துறவறம்' எனப் பிரித்துள்ளார்.  மோட்சம் பெறுவதைக் கடவுள் வாழ்த்து, அவாவறுத்தல் ஆகிய அதிகாரங்களில் உணர்த்துகிறார் என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி (பக்கம்: 9)

நாலடியார் - தொடர்ந்து நாலடியார் குறித்துக் குறிப்பிடும் பொழுது சமண நூலான இது அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறள் போலவே அமைந்ததுடன், திருக்குறள் கருத்துகளை விரிவாக விளக்கும் நூல் என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. இருப்பினும் திருக்குறளை மகாபாரத 'பிரவிருத்தி தர்மம்', 'நிவிருத்தி தர்மம்'  பிரிவுகளைக் கொண்டது என்று குறிப்பிட்ட சுப்பிரமணிய சாஸ்திரி நாலடியாருக்கு அதனை நீட்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (பக்கம்: 9).

பழமொழி நானூறு - இந்தச் சமண நூலும் திருக்குறள் கருத்துகளின் தொகுப்பே  என்கிறார், சமண நூல் எனக் கூறினாலும்  பின்னர் இதிலிருந்தும் சுப்பிரமணிய சாஸ்திரி  வைதீக தொடர்பு காட்டுகிறார்.  


(II)
இரண்டாம் பகுதி-வைதிகமார்க்கம்:  
நூலின் இப்பகுதி வைதிகமார்க்கம்  என்றால் என்னவென்றும்,  அதன் கூறுகள் யாவை எனவும்  ஒரு 9 பக்கங்களில் 1. வேதங்களும் அங்கங்களும், 2. மக்கட்பிரிப்பு, 3. மக்கட்தொழில், 4. மறுமை, 5. வழிபடு கடவுள், 6. ஊழும் வீடும் என்ற பக்கத் தலைப்புகளில் விவரிக்கிறது.

1. வேதங்களும் அங்கங்களும் :—
வேதம் என்பது, தேவதைகளை அழைக்கும் 'மந்திரங்கள்" என்ற பகுதியையும், அவற்றுக்கு உரை கூறும் 'பிராம்மணம்' என்ற பகுதியையும் கொண்டது.  மந்திரங்கள்  தொகுக்கப்பட்ட தொகைநூல் 'சம்ஹிதை' எனப்படும்.  ருக் செய்யுளாகவும், யஜூர் வசனங்களாகவும், சாமவேதம் கீதங்களாகவும் உள்ளன.  அதர்வ வேதம் ருக் அமைப்பை ஒட்டியது.  இவற்றுடன், இவ்வேதங்களின் சாரங்களாக மோட்சம் அடையும் வழிகளைக் கூறும் பற்பல உபநிஷத்துகளையும் கொண்டதே வேத சமயம்.

இவற்றை முறைப்படி பின்பற்ற  வேதாங்கங்களும், மக்கள் வைதீக தர்மத்தைப் பின்பற்ற வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் மகாபாரத இதிகாசங்களும்  புராணங்களும் இயற்றப்பட்டன.  வைதீக தர்மத்தை அறியும் இந்த நூல்களை அதன் 'வகை/பிரிவுகளின்' எண்ணிக்கையின் அடிப்படையில் 'பதினான்குவித்யை' என்பர்.

வைதிக மார்க்கம் சொல்லும் நால்வேதங்கள்  (ருக், யஜூர், சாம, அதர்வ வேதங்கள்) குறித்து புறப்பாடல்களும் (புறம். 2, 15) கூறுகின்றன.

2. மக்கட்பிரிப்பு :—
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என மக்கள் 4 வகையாகப் பிரிக்கப்பட்டனர். முதல் மூன்று வர்ணத்தின் ஆண்களுக்கும், சூத்திர பெண்களுக்கும் பிறந்தோர் 'அநுலோமசாதியர்' எனவும், இதன் மாற்று வடிவமாக  முதல் மூன்று வர்ணத்தின் பெண்களுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறப்போர் 'பிரதிலோமசாதியர்' எனவும் அறியப்பட்டனர். ப்த்ருதேவதைக்கு செலுத்தவேண்டிய கடனைச் செலுத்த ஆண் வாரிசு இன்றியமையாமை என்ற கருத்தும் இந்த மார்க்கத்தின் பகுதி.

3. மக்கட்தொழில் :—
பிராமணர்களுக்கு ஆறு தொழில்களும் (வேதங்களைக் கற்றல், பிறர்க்குக் கற்பித்தல், யாகங்களைச் செய்தல், பிறருக்கு அவற்றைச் செய்வித்தல், தானம் கொடுத்தல், அதனைப் பெற்றுக் கொள்ளுதல்);
சத்திரியருக்கு ஐந்து தொழில்களும் (வேதத்தைக் கற்றல், யாகம் செய்தல், தானமளித்தல், மக்களைக் காத்தல், குற்றமறிந்து தண்டித்தல்);
வைசியருக்கு ஆறு தொழில்களும் (வேதத்தைக் கற்றல், யாகம் செய்தல், தானமளித்தல், பசுவைப் பாதுகாத்தல், உழவு, வணிகம்);
சூத்திரருக்கு உழவு, தச்சு, சிற்பம், நாட்டியம், மற்ற முதல் மூன்று பிரிவுக்கும் வழிபாடு செய்தல் போன்றவை விதிக்கப்பட்டன.

முதல் மூவருக்கும் வேதம் கற்க வேண்டும் என்பதால் உபநயனமும், அது 'துவிஜ' என்ற இருபிறப்பு உடையவர் தகுதியாகவும் கூறப்பட்டது. உபநயனத்திற்குப்  பிறகுள்ள இரண்டாம் பிறப்பில் காயத்ரீ தாயாகவும், ஆசிரியர் தந்தையாகவும் கருதப்படுவார் என்பதால் காயத்ரீ ஜபம் செய்தல் அவர்கள் கடமையாகிறது. அவ்வாறு செய்தால் பிராமணர்கள் அறிவாலும், சத்திரியர்கள் உடல் பலத்தாலும், வைசியர்கள் செல்வ பலத்தாலும் சிறப்பான நிலை பெறமுடியும். அவ்வாறு பெறும் சிறப்பாலே பிறருக்கும் அவர்கள் உதவ இயலும்.

4. மறுமை :—
இறந்த பின் நல்வினை செய்தோர் சொர்க்கத்திற்கும், தீவினை செய்தோர் நரகத்திற்கும் செல்வர். மகன் செய்யும் ஈமச் சடங்கு இதற்கு வழியமைக்கும். பித்ருக்களுக்கு பிண்டமிடும் ஆண்மகனைப் பெறவேண்டியது பித்ருக்களுக்குத் தீர்க்க வேண்டிய கடன். சொர்க்கத்திலிருப்போர் தேவர்கள்.  தேவர்களின் அரசன் இந்திரன். இவர்களுக்கான உணவு மக்கள் பூமியில் நடத்தும் யாகத்தில் இடும் பொருள். யாகம் செய்து தீ வளர்த்து அதில் இடும் அவிர்பாகம் பொருளை அக்னி இந்திரனிடம் சேர்ப்பிப்பான். இந்த உதவிக்குத் தேவர்கள் மக்களுக்கு மழை தருவார்கள்.

5. வழிபடும் கடவுளர் :—
பிரும்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, பலராமன், கந்தன், போன்றவரும், இராமாயண மகாபாரத இதிகாசம் கூறும்  கடவுளரும், புராணக் கதைகள் கூறும் கடவுளரும்  எனப் பற்பலர் வேதசமயக் கடவுளர். 

6. ஊழும் வீடும் :—
மக்கள் தம் வாழ்வில் எதிர்கொள்ளும் நன்மைக்கும் தீமைக்கும் அவரவர் முற்பிறப்பில் அவர்கள் ஆற்றிய நன்மை தீமைகளே காரணம்.  அடுத்துவரும் பிறப்புகளில் நல்லநிலையை அடைய, இப்பிறப்பில்  நன்மை செய்ய வேண்டும். கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவரை அடைய முயல வேண்டும். அதற்கு அறியாமையும்,  ஆசையும்  தடைகளாக  இருக்கும். அவற்றை  அழித்து முக்தி நிலை அடைய வேண்டும். உயிருடன் இருக்கும்பொழுதே முக்தி பெற்றால் அது ஜீவன்முக்தி. பற்றற்று இருத்தல் முக்தியடையும் வழி என்பது போன்ற கருத்துகளை உபநிஷத்துகள் உணர்த்தும்.

மேற்காட்டியவை யாவும் சுப்பிரமணிய சாஸ்திரியால் வைதீக சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளாகக் காட்டப்படுபவை. வேதசமயக் கருத்துகளின் அறிவியல் தன்மையை அலசுவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.


(III)
மூன்றாம் பகுதி-சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்: 
சங்க நூல்களையும் வைதிக மார்க்கத்தையும் அடுத்துவரும்  49 பக்கங்களில் நூலின் இறுதிப்பகுதி ஒப்பிடுகிறது.

இப்பகுதியில் நூலின் இரண்டாம் பகுதியில்  காட்டப்படும் ஆறு வேத சமயக் கூறுகளையும்  சற்றே விரிவாக ஒப்பிட முற்படுகையில் எட்டு  பக்கத்தலைப்புகளாக இப்பகுதி விரிகிறது. 1. வேதங்களும் அங்கங்களும், 2. வர்ணங்களும் ஆச்ரமங்களும், 3. அக்னிஹோத்ரமும் யாகங்களும், 4. இம்மையும் மறுமையும், 5. தெய்வங்கள், 6. ஊழ், 7. ஏனைய செய்திகள், 8. முக்தி.  இப்பகுதியே  நூலின் உட்கருத்தான ஒப்பிடுதலின்  நோக்கம் என்பதால் இப்பகுதியை நாம் விரிவாக அறிந்து கொள்ளுதல் தேவையுமாகும்.

முதல் பகுதியில்  இவையிவை சங்கநூல்கள் என அறிமுகப்படுத்திய பின்னர், அடுத்த பகுதியில் இவையிவை வைதீக சமயத்தின் கூறுகள் என அறிமுகப்படுத்தப் பட்டது. அடுத்ததாக, இந்த வைதீக சமயக் கூறுகள் சங்க இலக்கியங்களில் எங்கெங்கு தென்படுகின்றன எனவும், அந்த வைதீக சமயநெறிகள் கூறும் வடமொழி நூல்களில் அவை இருக்குமிடங்கள் எவை எனவும் மேற்கோள் காட்டி நிறுவுவதுதான் நூலின் இந்த  மூன்றாம் பகுதி (சங்கப்பாடல்களைத் தொடர்ந்து அடைப்புக் குறிக்குள் பாடலின் எண், ஒரே பாடலாக இருப்பின் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது).

1. வேதங்களும் அங்கங்களும் :—
திருமுருகாற்றுப்படை (179-182) நூலில், இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்களை கற்றது கூறப்படுகிறது. ஒவ்வொரு வேதத்தையும் இருபிறப்பாளர் பன்னிரு ஆண்டுகளில் கற்பார் என்பது போன்ற செய்திகளை வடமொழியின் கௌதமதர்ம சூத்திர நூல் கூறும்.

புறநானூற்றுப் பாடல் (166) நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் சிவனிடமிருந்து தோன்றியதாகக் கூறும். இக்கருத்து உபநிஷத்து, வியாச சூத்திரத்திலும் காணப்படும் கருத்து.

பரிபாடல் (3) உலகின் உயிர்களும் அண்டமும்  திருமாலிடம் இருந்து தோன்றியதாக வேதங்கள் கூறுகின்றன என்கிறது.  இக்கருத்து கீதையிலும் காணப்படும் ஒன்றாகும். பரிபாடல் (2) வேதங்களால் கடவுள் அறியப்படுவதைக் கூறுகிறது. இதுவும் கீதையின் கருத்தே.

குறுந்தொகை பாடல் (156) வேதங்கள் எழுதப்படாமல் வாய்மொழியாகக் கற்பிக்கப்படுவதைக் கூறுகிறது. இதனை 'கேள்வி' என்று பதிற்றுப்பத்து (64, 70, 74, 361)பாடல்களும், பார்ப்பனர் வேதம் பாடுவதை மதுரைக் காஞ்சி பாடல் (468, 656 வரிகள்), பரிபாடல் (9) பாடல்களும், வேதங்கள் தர்மத்தைக் கூறுகின்றன என ஐங்குறுநூறு  (387) பாடலும் கூறுகின்றன.

பார்ப்பனரே வேதம் கற்பித்தனர் என்பதைத் தொல்காப்பியம் (எழுத்து- 102), பரிபாடல் (2, 3), கலித்தொகை (126), திருக்குறள் (543), பெரும்பாணாற்றுப்படை (300), புறநானூறு (2), குறள் (560), திரிகடுகம் (70), நான்மணிக்கடிகை (89), இனியவை நாற்பது (8)  ஆகியன கூறுகின்றன என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

வேதம் குறிக்கும் வேள்விகளை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் 15), சோழன் கரிகாலன் (புறம் 224) ஆகியோர் செய்ததாகவும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.  

2. வர்ணங்களும் ஆச்ரமங்களும் :—
தமிழரிடம் நால்வர்ண (பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர்) கருத்துகள் இருந்தன என்பதை; 
அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் (தொல். பொருள். புறத்திணையியல் 20 சூத்திரம்)

தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்கள்  காட்டுகின்றன என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

நான்மறைகளும் அவற்றை ஓதுவது பார்ப்பனர் தொழில் என புறநானூறு (6, 26, 93, 221, 361), ஆசாரக்கோவை (53), சிறுபாணாற்றுப்படை (204), பட்டினப்பாலை (202), பதிற்றுப்பத்து (24, 64), நான்மணிக்கடிகை (33), ஐங்குறுநூறு (202), திருமுருகாற்றுப்படை (179-184), குறுந்தொகை (154)  ஆகிய  சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. அவற்றில் அந்தணர் உயர்பிறப்பு எனவும், அவர்களது தொழில், பண்பு, தோற்றம் (குடுமி, பூணூல், கமண்டலம் தாங்கியிருத்தல்)  ஆகியன  காட்டப்படுவதைச் சுட்டுகிறார் ஆசிரியர். அவ்வாறே,  தோல்வேலை செய்பவர் இழிபிறப்பாளர் இழிசினன் எனப்  புறநானூற்றுப் பாடல்கள் (82, 170, 287) கூறுவதாகவும் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

வடமொழி சாஸ்திரங்கள் காட்டும் 8 திருமண வகைகளைப் பெருந்திணை, களவு, கைக்கிளை என தொல்காப்பியர் களவியல் சூத்திரங்களில் (15,1, 14) வகைப்படுத்தியதாகக் கூறுகிறார். திருமணத்தில் தீயை வலம் வரும் குறிப்பு கலித்தொகை (69), ஏழடி பின் செல்வதைப் பொருநராற்றுப்படை (166) பாடல் வழியாகவும் காட்டுகிறார்.

மேலும், அகநானூற்றுப்  (86) பாடலில் மக்களைப் பெற்ற  வாலிழை மகளிர் நால்வர் திருமணத்தில் மணமக்களை வாழ்த்துவதைச் சுட்டி, அவர்களை வேத திருமணத்தில் சுமங்கலிப் பெண்கள் வாழ்த்துவதுடன் ஒப்பிடுகிறார். பெண்ணை கொடையாகக் கொடுக்க யாருமில்லாத பொழுது பெண் தானே தன்னைக் கொடையாக்கலாம், முன்னர் முதல் மூன்று குலத்தோருக்கும் இருந்த வைதிக திருமண முறை, பிற்காலத்தில் நான்காம் குலத்தவரிடமும் பரவியது என்று குறிப்பிடும்   தொல்காப்பியம் கற்பியல் (2, 3) சூத்திரங்களின் கருத்துகளுக்கு மகாபாரதம், ஆதிபர்வதம் (94, 13) வரிகளை மேற்கோளாகக் காட்டுகிறார்.

ருது காலத்தில் கணவன் மனைவியைப் பிரியக்கூடாது எனக்  கெளதமரின் தர்ம சூத்திரமும் (1-5-1) , மனு தர்ம சாஸ்திரமும் (113, 46)  சொல்வதைத் தொல்காப்பியம் கற்பியல் (46, 47) சூத்திரமும், திரிகடுகம் (17)  பாடலும் கூறுவதாகக் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. இல்லறத்தில் இருப்போர் ஆற்ற வேண்டியவை ருஷி, தேவ, பிதிர் என  3 கடன்கள்.   வேதம் படித்தல், தேவர்களுக்கு ஹோமம் செய்தல், பிதிர் கடன் ஆற்ற ஆண்மக்களைப் பெறுதல் ஆகியவற்றால் இக்கடன்கள் நீங்கும் என யஜூர்வேத தைத்திரீய  சம்கிதை கூறுகிறது.  இதே கருத்துகள் திரிகடுகம் (34), புறநானூறு (2, 9), கலித்தொகை-நெய்தல்கலி (2), பெரும்பாணாற்றுப்படை (315-6), நற்றிணை (141), முல்லைப்பாட்டு (37-8), பொருநராற்றுப்படை (91), மதுரைக்காஞ்சி (463-474)  இந்த கடன்களைப் பார்ப்பனர் கடைப்பிடிப்பதைக் குறிக்கின்றன. இதையே குறள் (41) இல்வாழ்வார் இயல்புடை மூவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனவும் கூறுகிறது. தென்புலத்தார் அல்லது பித்ருக்கள் தென்புலத்தில்  வாழ்கின்றனர் என்ற கருத்து 'தட்சிண பிதர' என்று தைத்ரீய சம்ஹிதை கூறும் கருத்து. இதை மகாபாரதமும், கடோபநிஷத் ஆகியவையும்  கூறுகின்றன. 

3. அக்னிஹோத்ரமும் யாகங்களும் :—
இப்பகுதியில் பார்ப்பனர் காலை மாலை இடைவெளியில் தேவர் கடனை அடைக்க முத்தீவளர்த்தனர் என்பதைச் சங்கப்பாடல்களில் இருந்து காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.  பார்ப்பனர் வேள்வி வளர்த்தனர் என்பதை அவர்களின் வாழ்வியல்முறை குறிக்கும் முந்தைய தலைப்பே அவர்களது கடனாகக் காட்டுவதால்,  கூறியது கூறல் விடுத்து,  சுப்பிரமணிய சாஸ்திரி எந்த சங்கப்பாடல்களை இங்கு பார்ப்பனர்-வேள்வி வளர்த்தல் என்பதற்கு மேற்கோள்களாகக் காட்டுகிறார் எனக் குறிப்பிட்டுக் கடந்து செல்லுதலே சிறந்தது.  புறநானூறு (2, 99, 122, 166), பட்டினப்பாலை (200), குறிஞ்சிப்பாட்டு (225), கலித்தொகை (36, 119), பதிற்றுப்பத்து (70, 74, 21), அகநானூறு(220, 361), பெரும்பாணாற்றுப்படை (315-6), திருமுருகாற்றுப்படை (94-6),  சிறுபஞ்சமூலம்(33), கார்நாற்பது (7) ஆகியன வேள்வி குறித்துக் கூறும் சங்கப் பாடல்கள். வேள்விக் குண்டத்தின் கீழ் ஆமை வைப்பதாகத்  தைத்திரீய சம்கிதை கூறுவதை அகநானூற்றுப் பாடலும் (361), வேள்வித்தூணில் துணி சுற்றுவதாக பூர்வமீமாம்சை கூறுவதை அகநானூற்றுப் பாடலும் (220), காட்டுகின்றன.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் 15, மதுரைக் காஞ்சி 759-863), சோழன் கரிகாலன் (புறம் 224), இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (புறம் 363, 400), நலங்கிள்ளி (புறம் 31, 32), சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (பதிற்றுப்பத்து 64, 70) ஆகியோர் வேள்விகள் செய்ததைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.  பாண்டியர் பாண்டவ குலம் என்ற கருத்தில் கவுரியர் (புறம் 3, அகம் 342), பஞ்சவர் (அகம் 70, புறம் 58) எனவும் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. சோழர்கள் தம்மைச் சிபியின் வழித்தோன்றல்கள் (புறம் 39, 43)  என்றும் எண்ணினார். மூவேந்தர் தம்மை வைதீகம் கூறும் சத்திரியக் குலம் என்று கருதியதால்  வேள்விகள் செய்யப் புகுந்தனர். 

4. இம்மையும் மறுமையும் :—
உடலும் உயிரும் கொண்ட உயிரினங்களுக்கு 1. ஸ்தூல சரீரம் உடலில் உயிர் இருக்கும்  வரை உள்ள உடல் என்றும், 2. ஸுக்ஷ்மசரீரம் உயிர் முக்தி அடையும் வரை இருக்கும் என்றும், எல்லா உயிரும் ஸ்தூல சரீரம் விட்டு நீங்கும் என்பதும் இம்மை - மறுமை குறித்த வேத சமய நம்பிக்கை.  உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு  நிலையற்றது. அதாவது வாழ்க்கை நிலையற்றது. உடலிலிருந்து உயிரைப் பிரிப்பது 'கூற்றம்' 'காலன்' என்பது வைதீக சமயக் கருத்து.

கூற்றம் குறித்து மலைபடுகடாம் (209), புறநானூறு (4, 195), பதிற்றுப்பத்து (39), பரிபாடல் (5) ஆகிய பாடல்கள் கூறுகின்றன.  உயிர் நீங்கிய உயிர் மறுமைக்குச் செல்ல  மகன் பிண்டம் கொடுப்பார் என்பதைப் புறநானூறு (222, 246) பாடல்கள் காட்டுகிறது. இக்கருத்தை  மகாபாரதமும் காட்டும். இம்மையில் செய்த வினைப்பயன் மறுமையில் துய்க்கப்படும் என்பதைப் புறநானூறு (29, 134), நான்மணிக்கடிகை (15) பாடல்கள் காட்டுகின்றன.

நல்வினை செய்தோர் சொர்க்கம் செல்வர் என்ற கருத்தை புறநானூறு (174), பரிபாடல் (19), திருக்குறள் (86) பாடல்கள் மூலம் அறியலாம். அவ்வாறே தீவினை செய்தோர் நரகம் செல்வர் என்ற கருத்தைப் புறநானூறு (5), குறுந்தொகை (292), குறள் (130) பாடல்கள் மூலம் அறியலாம்.   மேலும், பலன் கருதாது நல்வினை செய்யவேண்டும் என்று கீதை (2, 47) கூறும் கருத்தைப் புறநானூறு (134, 182), அகநானூறு (54), பதிற்றுப்பத்து (38) பாடல்கள் காட்டுகின்றன.

கணவனின் மறைவுக்குப் பிறகு மனைவி உடன்கட்டையேறும் நிகழ்வை புறநானூறு (62, 246) பாடல்களும், கைம்மை நோன்பு ஏற்பதை புறநானூறு (234) பாடல்களும் காட்டுகின்றன.

சொர்க்கம் என்பதை தேவருலகம், உயர்நிலையுலகம், மேலோருலகம், நாகம், வச்சிரத்தடக்கை நெடியோன் கோயில், பெரும்பெயருலகம், புத்தேணாடு, துறக்கம், சிறந்தோருலகம், இமையார் தேயம் என்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன.

இந்திரன் — தேவருலகம் ஆளும் இந்திரனும் பல பெயர்களால் சங்கப்பாடல்களில் காட்டப்படுகின்றான்.  அவனுக்கு வேள்விகள் செய்யப்படுகிறது என்பதும் அவன் அகலிகையை வஞ்சித்த குற்றத்திற்காக கௌதமர் சாபம் பெற்றான் என்ற கதையும் பரிபாடல் (19) நூலில் காட்டப்படுகிறது. திருக்குறளும் (25)  இந்திரனின் ஐம்புலன் அடக்கமின்மையைக் கூறுகிறது. தேவருலகில் வாழ்வோர் குறித்து புறநானூறு (174, 182, 377), குறள் (413), பட்டினப்பாலை (184), கலித்தொகை (2, 82), பதிற்றுப்பத்து (74, 89), அகநானூறு (136), பரிபாடல் (3) ஆகிய பாடல்கள் மூலம் அறியலாம்.

வருணன் — நெய்தல் தெய்வம் எனத் தொல்காப்பியம் (அகத். 5), மன்மதன் - இரதி பரிபாடல்  (19) போன்ற பிற தேவருலக தேவதைகள் குறித்தும் சங்கப்பாடல்களில் குறிப்புக்கள் காணப்பெறுகின்றன.

5. தெய்வங்கள் :—
பிரும்மா, திருமால், சிவன், முருகன் தொடர்புகள் குறித்து மிகுதியாகவும், பலராமன், கொற்றவை குறித்து சிலவும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

பிரும்மா — பிரும்மா  குறித்து கலித்தொகை (2), பெரும்பாணாற்றுப்படை(402-4), திருமுருகாற்றுப்படை(164-5), பரிபாடல் (8), இனியவை நாற்பது (1), இன்னாநாற்பது (1) பாடல்களிலும்; 

திருமால் — திருமால் குறித்து தொல்காப்பியம் (அகத். 5), முல்லைப்பாட்டு(1-3), பெரும்பாணாற்றுப்படை (29-30), , கலித்தொகை (103, 104, 105, 124, 145),  இன்னா நாற்பது (1), இனியவை நாற்பது (1),  புறநானூறு (174), கார்நாற்பது (1), திணைமாலை(150-96), பரிபாடல் (4, 8, 13, 15, 49), மதுரைக் காஞ்சி (591) பாடல்களிலும் காணலாம்.  இப்பாடல்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதப் பாடல்கள் கூறும் திருமாலுடன் கருத்தொற்றுமை கொண்டவை.

சிவன் — சிவன் குறித்து அகநானூறு (181, 220, 360), கலித்தொகை (2, 38, 103, 142, 150), புறநானூறு (6, 56, 91), இன்னா நாற்பது (1), இனியவை நாற்பது (1), பரிபாடல் (5, 8), மலைபடுகடாம் (83), திருமுருகாற்றுப்படை (151, 256), பழமொழி (124), மதுரைக் காஞ்சி (453) பாடல்களில் வைதிக சமயத்தின் தொடர்பு காட்டப்படுகிறது. இராவணன் கைலாயத்தைத் தூக்கிய கதையைக் கலித்தொகை (38) பாடலும்;  சிவன் முப்புரம் எரித்த கதை புறநானூறு (55), பரிபாடல் (2, 5, 8, 9, 13, 82), கலித்தொகை (பாலை 1) பாடல்களில் இடம் பெறுகிறது. சிவன் முப்புரம் எரித்த இதே கதை மகாபாரதம் கர்ணபர்வத்தில்  காணப்படுகிறது.

முருகன் — முருகன் குறித்து தொல்காப்பியம் (அகத். 5), அகநானூறு (59), புறநானூறு (23), கலித்தொகை (93), குறுந்தொகை (1), இன்னா நாற்பது (1) ஆகியவற்றிலும் முருகன் பிறப்பு குறித்து  பரிபாடல் (5, 8, 9, 14, 17), திருமுருகாற்றுப்படை (151-173, 260)  கூறும் புராணக்கதைகள்  மகாபாரதம் அநுசாஸநபர்வம் (130,133), வநபர்வம் (227) பகுதியிலும், வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் (36, 37) பகுதியிலும் காணப்படுகின்றது. சூரபன்மனை முருகன் அழித்ததைப் பதிற்றுப்பத்து (11),  புறநானூறு (23, 56), திருமுருகாற்றுப்படை (46), அகநானூறு (59), பரிபாடல் (4, 14) பாடல்கள் கூறுகின்றன.  முருகன்  வள்ளியை மணந்த கதை மகாபாரதத்தில் இல்லை.

பலராமன் — பலராமன் குறித்து புறநானூறு (56, 58), கலித்தொகை (104), பரிபாடல் (2), கார்நாற்பது (19), பழமொழி நானூறு (37), திணைமாலை நூற்றைம்பது (96) போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.  பலராமன் குறித்த இப்பகுதியில் சுப்பிரமணிய சாஸ்திரி வடமொழி நூல்களின் மேற்கோள் கொடுக்கவில்லை.  வடமொழி நூல்கள் சொல்லும் பலராமன் தோற்றம் செயல்பாடு குறித்து சங்கப்பாடல்கள் சொல்லும் பலராமன் தொடர்பு காட்டவில்லை.

கொற்றவை  —  பாலைநிலத்துக் கொற்றவை குறித்து, அவள் பார்வதியின் மறுவுருவம் என்ற கருத்து திருமுருகாற்றுப்படை (258) , நெடுநல்வாடை (166) நூல்களில் இடம் பெறுகின்றன. கொற்றவை என்பதும் துர்க்கை என்பதும் ஒருபொருட்கிளவி என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. மகாபாரதத்தில் போர் தொடங்குமுன் துர்கை துதிக்கப்படுகிறாள் எனக் குறிப்பிட்டு விடாரபர்வம் (8), பீஷ்ம பர்வம் (23) மேற்கோள்களை ஆசிரியர்  கொடுக்கிறார். அந்த மேற்கோள் வரியிலேயே 'ஆர்யே மந்திரவாஸிநி' என்ற குறிப்பும் உள்ளது. பலராமன் பகுதி போல இப்பகுதியும் மிகச் சுருக்கமாகவே அமைந்துள்ளது. 

6. ஊழ் :—
முற்பிறப்பின் வினைப்பயன்கள் இப்பிறவியில் தொடரும் என்பதும், அதனை ஊழ், தெய்வம், வினை, பால் என்ற சொற்களாலும் குறிப்பிடுகிறது வைதீக சமயம்.  தொல்காப்பியம் (கிளவி. 57), புறநானூறு (236), குறுந்தொகை (366), நற்றிணை (88), கலித்தொகை (118),  குறள் (125, 380, 619) போன்ற பாடல்களில் வினை, வினைப்பயன் கருத்துகள் விரவியுள்ளன. இக்கருத்து மகாபாரதத்திலும் பலவிடங்களில் கொடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார்  சுப்பிரமணிய சாஸ்திரி.

இப்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பிலேயும் உறுத்தூட்டும் என்பதற்கு திணைமாலை நூற்றைம்பது (123) பாடலையும், அதே கருத்தைக் கொண்ட ஒரு வடமொழி தர்ம சாஸ்திர செய்யுளையும் கூறுகிறார். மேற்கொண்டு, வினைப்பயன் ஏழு பிறப்புகளிலும்  தொடர்வது  என்ற கருத்துக்கு  குறள் (62, 125, 835, 396) பாடல்களைச் சுட்டும் ஆசிரியர் அதற்கு இணையான 'ஏழ்பிறப்பு' என்ற கருத்தாக்கம் கொண்ட வடமொழி செய்யுட்களை மேற்கோளாகக் காட்டினாரில்லை.

7. ஏனைய செய்திகள் :—
இப்பகுதியில்; இராமாயணக் கதைக் குறிப்புகள் இடம்பெறும் சங்கப்பாடல்களாக புறநானூறு (378), அகநானூறு (70), பழமொழி நானூறு (257)  பாடல்களும்; 

மகாபாரதத்தில் இடம்பெறும் பல்வேறு  கதைக் குறிப்புகள் இடம்பெறும் சங்கப்பாடல்களாக புறநானூறு (2, 122),  பெரும்பாணாற்றுப்படை (303, 415), கலித்தொகை (2, 25, 26, 52, 104), பழமொழி நானூறு (137, 356), சிறுபாணாற்றுப்படை (238), மதுரைக்காஞ்சி (202), பதிற்றுப்பத்து (31), பரிபாடல் (5), நெடுநல்வாடை (163) பாடல்களும் கொடுக்கப்படுகின்றன.

தொடர்ந்து வைதீக சமயக் கருத்துகள் கொண்ட ஆசாரக் கோவை (17, 24, 29, 35, 39, 43, 46, 83) பாடல்களுக்கு கௌதம தர்ம சூத்திரம் பாடல்கள் பலவற்றை  மூலமாகக் காட்டுகிறார் சுப்பிரமணிய சாஸ்திரி.

செய்த தீவினை சிலவற்றுக்குக் கழுவாய் (பரிகாரம்)  இல்லை என்ற கருத்து மகாபாரதத்தில் வருவது போன்றே புறநானூறு (34) பாடலும் காட்டுகிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். முன்னோர் செய்த நல்வினை பின்னோரை காக்கும் எனப் புறநானூறு (102) பாடல் கூறுவதையும் சுட்டுகிறார் ஆசிரியர்.

வானியல் குறிப்புகள் கொண்ட புறநானூறு (117), பரிபாடல் (11) பாடல்களைக் காட்டும்பொழுது, 'வானியல் குறிப்புகள்' என்பவையே வேத சமயத்துடன் தொடர்பு கொண்டவை என்ற கருத்து ஆசிரியருக்கு உள்ளதாகத் தெரிகிறது.  அவற்றுக்கு அவர் வடமொழி மேற்கோள்கள் காட்ட முற்படவில்லை.  அவ்வாறே 'வடக்கிருத்தல்' என்ற வழக்கம் புறநானூறு (65), அகநானூறு (55) பாடல்கள் மூலம் காட்டப்படும்பொழுதும் வேத சமய மேற்கோள்கள் கொடுக்கப்பெறவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மேலும்,  கௌதம தர்ம சூத்திரம் (1,7,1) மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்கிறது என்று கூறுவதுடன்,  அக்கருத்தை  'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே' என்ற புறநானூற்றுப் (183) பாடலுடனும், அதே கருத்தைக் கூறும் குறள் (409) பாடலுடனும் இணைத்து  சான்றாகக் காட்டப்படுவது சற்றே திகைப்படையச் செய்கிறது. இவ்விரு பாடல்களையுமே வேதசமயம் காட்டும் மக்கட்ப்பிரிவுகளையும் அதற்கான வாழ்வியலையும் மறுக்கும் பாடலாகவே நம்மில் பலர் அறிந்துள்ளோம்.

தொடர்ந்து இப்பகுதியில் (பக்கம்: 64), தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தல் போற்றப்பட்டது என்ற கருத்தைக் கொண்ட — புறநானூறு (183), பதிற்றுப்பத்து (38) பாடல்களை நுழைப்பது  பொருத்தமற்று இருக்கிறது. எவ்வாறு தமிழர் வாழ்வியலில் நட்பு என்பதற்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு குறித்து வடமொழி மகாபாரதக் கதையிலிருந்து மேற்கோள் காட்டுவது பொருந்தாதோ, எவ்வாறு கடையேழு வள்ளல்கள் கொடைக்கு மகாபாரதக் கர்ணன் கதையை அடிப்படையாகக் காட்ட வழியில்லையோ அவ்வாறே மானிடவியல் கீழே வரக்கூடிய காதல், நட்பு, அன்பு, திருமணம், கொடை, வீரம், மரணம் போன்றவற்றுக்கும் தொடர்பு கொடுத்தல் பொருத்தமற்றது. 

மனித உணர்வுகளின்  வெளிப்பாடான  செயல்பாடுகளை உலகின் பிற இடத்திலிருந்து மற்றொரு பகுதியினர் அறிந்து கொண்டார்கள் எனக் கூறுதல் ஏற்புடையதல்ல. அதன் அடியொற்றி  நிகழும் நடைமுறைகளில்  இடம்பெறும் அயல் பண்பாட்டுக் குறிப்புக்கள், அதற்கு இணையான கதைக் குறிப்புகள் மட்டுமே பொருத்தமாக இருக்க வழியுண்டு. பிறப்பு, வாழ்வு, இறப்பு போன்றவை உலகெங்குமுண்டு. அவற்றின்  சடங்குகளில் அயல் பண்பாட்டுத் தாக்கத்தை மட்டுமே நாம் ஒப்பிடுகையில் கருத்தில் இருத்தவேண்டும். பசியெடுத்தால் உணவு உண்ணுதல், அதைப் பகிர்ந்துண்ணுதல்  என்பவை எல்லாம் அடுத்தவர் கற்றுக் கொடுத்துத்தான் நாம் அறிந்தோம் என்பது எந்த அளவு ஏற்புடையதாக இருக்கும் என்பதைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும். சுனையில் உள்ள சிறிதளவு நீரையும்  பெண்மான் குடிக்கட்டும் (ஐந்திணை ஐம்பது -38) என்று தானும் குடிப்பது போலப் பாவனை செய்து, பெண்மானை நீரைக் குடிக்க வைத்த ஆண்மான் செய்த விட்டுக் கொடுத்தலை அறிய எந்த வேத சமய நூல்களைக் கற்றது? என்ற கேள்வி இதற்குச் சரியான விடையைக் காட்டும்.

8. முக்தி :—
முக்தி என்பது இருவகைப்படும், அவை 'விதேகமுக்தி', 'ஜீவமுக்தி'. இறந்தபின் அடையும் விதேகமுக்தியும்  இருவகைப்படும். அது 'அபராமுக்தி' என்றும்,  ஜீவன் பிரும்மத்தோடு ஒன்றுபட்டால் 'பராமுக்தி' என்றும் அறியப்படும். 

முக்தியை அடையக் கடவுள் விரும்பும் ஒழுக்க நெறியில் நிற்கவேண்டும். அப்பொழுது அஞ்ஞானம் நீங்கி ஞானம் தோன்றும்.  திருக்குறள் பாடல்கள் அபராமுக்தியை (குறள் 3), பராமுக்தியை (குறள் 358) காட்டுகிறது என்கிறார் ஆசிரியர்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்  (குறள் 6), இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு (குறள் 352) ஆகிய ஒழுக்கநெறி பாடல்களின் கருத்துகள் கீதையின் கருத்துகள் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது.

கடோபநிஷத் விளக்கும் முக்தி என்பதை 'செலவு' என்ற சொல்  மூலம்  நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் (62) 'புலம் பிரிந்துறையும் செலவு நீ நயந்தனை' என விளக்குகிறார் என்று கூறும் ஆசிரியர் முக்தி என்பதும், செலவு என்பதும் ஒருபொருட்கிளவி  என்றும் கூறுகிறார். அவ்வாறே 'அந்நிலை' என்ற சொல் பெரும்பாணாற்றுப்படையின்  (466) 'நில்லா உலகத்து நிலைமை தூக்கி அந்நிலை அணுக வேண்டி' என்ற வரியில் முக்தியை விளக்குகிறது என்கிறார்.

அவ்வாறே, இப்பிறப்பிலேயே பற்றற்ற  நிலையை அடைவது குறித்து  கடோபநிஷத் மற்றும் மகாபாரதம் கூறும் கருத்துக்களைத்  திருக்குறள் (370), மதுரைக் காஞ்சி (468-471) சிறுபஞ்சமூலம் (36) காட்டுகிறது என்று கூறும் ஆசிரியர் முடிவாக  ......

            "சங்கநூல்கள் பலவற்றுள் வைதிக மார்க்கமே உணர்த்தப்பட்டது என்பது அறியப்படும்"
என்று நூலை நிறைவு செய்கிறார்.  

இக்கருத்து எந்த அளவு ஏற்புடையது என்பது ஆராயத்தக்கது.  சங்க நூல்களில் வைதீக சமய கருத்துகளும் இடம் பெற்றுள்ளன என்றும், வேத சமயத்தைப் பின்பற்றியவரும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பிரிவினர் என்பதுமே ஏற்கத் தக்கதாக இருக்கும்.  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்களிலிருந்து, எத்தனை பாடல்களை  ஆசிரியர் மேற்கோள் கொடுக்கிறார் என்ற ஒரு மீள்பார்வையே பல பதினெண்கீழ்க்கணக்கு  நூல்கள் இதில் இடம் பெறாமையையும் காட்டும். அவ்வாறே வைதீக சமய நூலை மொழியாக்கம் செய்த ஆசாரக்கோவை நூலிலிருந்தே மேற்கோள் கொடுப்பதும் பொருந்தாமல் போகும். 

சமண சமயக் கருத்துகளோ புத்த சமயக் கருத்துகளோ வைதீக சமயத்திலிருந்து பிரிந்த காரணத்தால் அதே இம்மை, மறுமை, வீடுபேறு போன்ற கருத்துகளின் தாக்கத்தோடும், அதே தெய்வங்கள், தேவர்களின் கதைகளுடனும் இருக்கும். ஆனால் அவை வேதத்தை ஏற்ற சமயங்கள் எனக் கூற வழியில்லை என்பதையும் அறிவோம்.  இதற்கு ஆசிரியர் திருக்குறளை வைதீக சமயநூல் என்ற கோணத்தில் எடுத்துக் கொள்வதைச் சான்றாகக் காட்டலாம்.  

சங்க நூல்களில் வைதீக சமய  கருத்துகள் எவையெவை என அறிய இந்த நூல் ஒரு சிறந்த குறிப்பு நூல்.   இது சமய அடிப்படையில் சங்கப்பாடல்களை ஆராய்வோர் எவரும் படித்திருக்க வேண்டிய நூல் என்றால் அது மிகையன்று. 




நூல் குறிப்பு:
சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்
ஆசிரியர் :  சுப்பிரமணிய சாஸ்திரி, P. S.
பதிப்பாளர்:  திருச்சி : யுனைடேட் பிரிண்டர்ஸ் லிமிடெட், அச்சுக்கூடம் , 1951
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdl0ly
[Source: Tamil Digital Library]



நன்றி:  சிறகு 
ஜூலை 13, 2019


#சிறகு, #நூல் மதிப்புரை, #Themozhi 







Saturday, June 15, 2019

எண்குணத்தான்



முன்னுரை:
‘எண்குணத்தான்’ என்ற சொல் குறிப்பது என்ன? யாரைக் குறிக்கிறது ?

      கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
      தாளை வணங்காத் தலை.(குறள்: 9)

எண்வகைப்பட்ட குணங்கள் கொண்ட தெய்வத்தின் திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் குறித்த குறள் இது. அவ்வாறு வணங்காத தலையானது சுவையறியா வாய், காணாத கண், நுகரா மூக்கு, கேளாச் செவி, உணர்வற்ற உடல் போன்ற புலனில்லாத பொறிகளுக்கு ஒப்பாகும் என குறள் குறிப்பிடுகிறது. அதாவது மூளை செயல்படாத ஒரு மனித நிலை/தலை. அவ்வாறு வணங்காதாரை அறிவற்ற மனிதர் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு வணங்கப்பட வேண்டியவர் யாரென வள்ளுவர் குறிப்பிட்டார் என்ற கருத்து பேதங்களும் உண்டு. ஆனால், இக்கட்டுரையின் மையக்கருத்து அதுவன்று. எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழ் அகரமுதலி எண்குணத்தான் என்பதை எட்டுக் குணங்களையுடைய கடவுள், அருகன், சிவன் எனப் பொருள் விளக்கம் தரும். ஆனால் குறளுக்கு விளக்கவுரை எழுதியோர் எண்குணங்கள் என்பதற்குப் பற்பல வகையில் விளக்கம் தர முற்பட்டது தெரிகிறது.

ஆங்கிலத்தில் இக்குறளின் எண்குணத்தான் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்பொழுதும் “who is possessed of ‘the Eight-fold Excellence,” என்றும் “eight attributes” என்று கொடுப்பதைக் காணலாம்.

வள்ளுவர் குறள் எழுதிய காலத்தில் எண்குணங்கள் எவை என்ற விளக்கமே தேவையற்ற ஒரு நிலை இருந்திருக்கலாம். யாவரும் அறிந்த ஒரு கருத்தாக்கமாகவும் அது இருந்திருக்கலாம். அதனாலேயே அதை அவர் குறளில் வேறெங்கும் விவரிக்க முற்படவில்லை என்றும் நாம் கொள்ளலாம். ஆனால், ‘எண்குணத்தான்’ குறிப்பது என்ன? என்று விளக்க முற்படும் உரையாசிரியர் கருத்துகளுக்குள் அது குறித்த ஒரு தெளிவின்மை வெளிப்படுகிறது.


‘எண்குணத்தான்’ குறித்து உரையாசிரியர்கள் பார்வை:
I.
எண்குணம் என்பவை எவை என விரிவான பொருள் விளக்கம் கூறாமல் தவிர்த்துவிடுதல்:-
‘எட்டுக்குணங்களைக் கொண்டவன் திருவடியை வணங்காத தலை’ என்று பொருள் கொண்டாலும் அந்த எட்டு குணங்கள் எவை என்ற விளக்கம் தராது அமைதல்.

மு.வரதராசனார்: எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவை.

மணக்குடவர்: எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.

தொல்லாசிரியர்களில் பரிப்பெருமாளின் விளக்கம் மணக்குடவரை ஒத்துள்ளது. நாம் அறிவதில் காலத்தால் மூத்த உரையாளரும் சமணருமான மணக்குடவர் எட்டு குணங்கள் எவையென விவரித்துக் கூற முற்படாதது கண்டு ஐயமுறுவோரும் உளர்.

இம்முறையில் கூறப்படும் விளக்கங்களில் எண்குண இறைவன் என்றே குறிப்பிட்டு விட்டுக் கடந்துவிடும் ஒரு நிலை காணப்படுகிறது. எண்குணங்கள் எவையெவை என்ற விரிவான விளக்கம் கொடுக்கப்படுவதில்லை. தற்கால உரையாசிரியர்களில் வ. சுப. மாணிக்கம், புலியூர்க் கேசிகன், தச்சாம்பாடி சின்னசாமி நயினார், சிவயோகி சிவக்குமார் போன்ற பலரும் இம்முறையிலேயே உரையெழுதியுள்ளார்கள்.

II.
எட்டு குணங்கள் எவை எனத் தான் சார்ந்த சமய தத்துவ விளக்கம் கொடுக்க முற்படுதல்:-
பரிமேலழகர்:
எண்குணங்களாவன…
1. தன்வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை

இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது (இது எந்த சைவ ஆகமத்தில் உள்ளது என அவர் குறிப்பிடவில்லை என்பதையும் இங்குக் கருத்தில் கொள்ளத்தக்கது).

மேலும் அவரே, ‘அணிமா’ வை முதலாக உடையன எனவும் (1. அணிமா, 2. மகிமா, 3. கரிமா, 4. லகிமா, 5. பிராத்தி, 6. பிராகாமியம், 7. ஈசத்துவம், 8. வசித்துவம் ஆகிய தியானத்தால் பெறப்படும் எட்டு சித்திகளும்/அஷ்டமாசித்திகளும்),

‘கடை இலா அறிவை’ முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர் என்றும் கூறுகிறார் (1. கடையிலா அறிவு, 2. கடையிலாக் காட்சி, 3. கடையிலா வீரியம், 4. கடையிலா இன்பம், 5. நாமமின்மை, 6. கோத்திரமின்மை, 7. ஆயுள் இன்மை, 8. அழியா இயல்பு என்ற எட்டு குணங்கள், இது ஒரு சமணக் கோட்பாடு, அடுத்து அது காட்டப்படுகிறது).

பரிமேலழகர் வழியைப் பின்பற்றி தேவநேயப் பாவாணரும், எண் குணங்களாவன-தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன என்று சைவ சமயம் சார்ந்த விளக்கம் அளிக்கிறார்.

பரிதியார்: ‘எட்டுக் குணங்களுடைய சிவன்’ சிவந்த தாளை வணங்காத தலை சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம் என்றவாறு சிவனுடன் தொடர்புப்படுத்திக் குறிப்பிட்டு,

“எட்டு குணத்தான்” எட்டுக் குணமாவன:
1.  அனந்த ஞானம்
2.  அனந்த வீரியம்
3.  அனந்த குணம்
4.  அனந்த தெரிசனம்
5.  நாமமின்மை
6.  கோத்திரமின்மை
7.  அவாவின்மை
8.  அழியாவியல்பு
என்பன எனக்குறிப்பிடுகிறார்.

ஆகவே சைவ சமய உரையாசிரியர் கருத்தில் உருவானவையாக, சிவனின் எண்குணங்களாக இப்பொருள் விளக்க முயற்சி அமைவதைக் காணலாம்.

இருப்பினும் இச்சைவ சமய பரிதியார் சிவனின் குணங்களாகக் கொடுப்பவை சமண சமயத்தின் எட்டு வினைகளை வென்ற குணங்கள் என்பதைச் சமண நூல்கள் தெளிவாகக் காட்டும். குறளுக்கும் பிற்கால நூலான தேவாரம் முதன்முதலில் எண்குணத்தான் என்ற குறிப்பைத் தருகிறது என்பதும் ஆய்வாளர்களால் காட்டப்படுகிறது.

வினைகளை வென்று உயர்ந்த ஆன்மாவையே இறைவனாகக் கொள்கிறது சமணம். சமணம் காட்டும் எட்டு வினைகள் (1. ஞானாவரணீயம், 2. தர்சனாவரணீயம், 3.  மோகனீயம், 4. அந்தராயம், 5. வேதனீயம், 6. ஆயுஷ்யம், 7. நாமம், 8. கோத்திரம் என்ற இந்த எட்டு வினைகளைப் பற்றிச் சமண நூலான சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. முதல் நான்கும் காதி வினைகள் என்றும், அடுத்த நான்கும் அகாதி வினைகள் எனப்படும்). ஆன்மாவின் இயற்கையான, இயல்பான குணங்களை மறைக்கும் இந்த வினைகளை வென்றெடுக்கும் குணங்கள் எண்குணங்கள் என்பது சமண சமய விளக்கம்.

1.  ஞானாவரணீயம் என்ற வினைக் கெடுதலால் கடையிலா அறிவும்
2.  தர்சனாவரணீயம் கெடுதலால் கடையிலா காட்சியும்
3.  மோகனீயம் கெடுதலால் கடையிலா இன்பமும்
4.  அந்தராயம் கெடுதலால் கடையிலா வீரியமும்
5.  வேதனீயம் கெடுதலால் அழியா இயல்பும்
6.  ஆயுஷ்யம் கெடுதலால் ஆயுள் இன்மையும்
7.  நாமம் கெடுதலால் நாமமின்மையும்
8.  கோத்திரம் கெடுதலால் கோத்திரமின்மையும்

இத்தகைய ஆன்மாவிற்கு உயர்வளிக்கும் எட்டு குணங்களும் பரிதியார் மூலம் சமணத்திலிருந்து சைவத்திற்குச் சென்றுவிட்டதை அறியமுடிகிறது. இவை சமண கோட்பாடென்பதைச் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருநூற்றந்தாதி, சிகாமணிநாதர் அந்தாதி, நேமிநாதர் பதிகம், நீலகேசிச் செய்யுள் போன்ற சமண இலக்கியங்களில் காணலாம்.

III.
நூலில் திருக்குறள் அமைப்பு வைப்புமுறையைப் பின்பற்றியே எட்டு குணங்கள் எவை என்று பொருள் கூற முயலுதல்:-
இன்று நாம் அறியும் பதிப்புகளில் முதல் அதிகாரம் கீழுள்ள வகையில் வணங்குதற்குரிய இறைவனை வரிசைப்படுத்துதலைக் காணலாம்.

1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இருவினையும் சேரா இறைவன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான்
7. தனக்குவமை இல்லாதான்
8. அறவாழி அந்தணன்
9. எண்குணத்தான்
10. இறைவன்

இவ்வரிசையில் 9ஆம் குறளாக அமைந்துள்ள குறள் ‘எண்குணத்தான்’ குறித்துக் கூறுகிறது. ஆகையினால் எண்குணம் என்பது இக்குறளுக்கு முற்பட்ட எட்டு குறள்கள் காட்டும் இறைவனின் பண்புகள். பத்தாம் குறள் இறைவன் எனப் பொதுவாகச் சொல்லிச் செல்வதன் நோக்கமும் அதுவே என்றும் விளக்கம் கொடுக்கும் முறை உள்ளது. எனவே, 1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. வேண்டுதல் வேண்டாமை இலான், 5. இருவினையும் சேரா இறைவன், 6. பொறிவாயில் ஐந்தவித்தான், 7. தனக்குவமை இல்லாதான், 8. அறவாழி அந்தணன் ஆகிய எண் குணங்களே எண்குணத்தானின் எட்டு குணங்கள் என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது.

பூரணச்சந்திரன், அ. கு. ஆதித்தர், பொன்.சரவணன் போன்றவர்கள் கொடுக்கும் இவ்விளக்கம் ஏரண முறையில் ஏற்கத்தக்கதாகவும் சிறப்பாகவும் தோன்றக்கூடும். இருப்பினும் இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், இம்முறை திருக்குறள் அமைப்பும் திருக்குறள் வைப்புமுறையும் பல உரையாசிரியர்கள் நூலில் பலவாறாக வேறுபட்டுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறுகிறது.

திருக்குறள் அமைப்பும் திருக்குறள் வைப்புமுறையும்: ஒரு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களை வரிசைப்படுத்தும் முறை வைப்பு முறை ஆகும். குறளுக்குக் கிடைக்கும் பழைய உரைகளுள் மணக்குடவர் உரையே காலத்தால் முந்தியது. அதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் நூலில் உள்ள முறை இன்று நாம் படிக்கும் திருக்குறள் பதிப்புகளிலிருந்து வேறுபட்டது. இது குறித்து ஆழ்ந்து நோக்கும்பொழுது திருக்குறளின் 133 அதிகாரங்களின் ஒவ்வோர் அதிகாரத்திலும் உள்ள பத்துப் பாடல்களையும் வரிசைப்படுத்துவதில் மாறுதல்கள் இருப்பதை அறியலாம். திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவருமே குறள்களையும், அதிகாரங்களையும், இயல்களையும் வரிசைப்படுத்திக்கொள்வதில் மாறுபடுகின்றனர். ஆகவே குறள் வைப்பு வரிசைமுறை கொண்டு பொருள் கொள்ள விழைவது தவறான அணுகுமுறை என்பதை மேலும் விளக்க வேண்டுவதில்லை.

சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், முதல் அதிகாரத்தின் முதல் மூன்று குறள்களின் வரிசை மட்டுமே அனைவர் உரையிலும் மாறாமல் உள்ளன. மற்ற குறள்கள் யாவுமே ஒவ்வொருவர் நூலிலும் வரிசை மாறியுள்ளன. இக்காலத்தில் நாம் கையாளும் திருக்குறள் பதிப்புகள் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றுபவை. அதில் மட்டுமே எண்குணத்தான் குறள் 9ஆவதாக வருகிறது. மணக்குடவர் வரிசையில் எண்குணத்தான் 10 ஆவது குறளாக வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அப்பொழுது வைப்புமுறை அடிப்படையில் பொருள் கொள்வது உதவாது போகும்.

கோளில் பொறியில் குணமிலவே குறள் வைப்புமுறை வேறுபாடுகள்:
மணக்குடவர் வைப்பு முறை- 10
பரிப்பெருமாள் வைப்பு முறை – 10
பரிதியார் வைப்பு முறை – 8
காலிங்கர் வைப்பு முறை – 5
பரிமேலழகர் வைப்பு முறை – 9

மாறாக, முதல் அதிகாரத்தில் காணப்படும் இறைக்குரியதாகக் கூறப்படும் எட்டு குணங்கள் என்ற பொது நோக்கில் குறிப்பிட்டால் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும் அதைத்தான் வள்ளுவர் மறைமுகமாக எட்டுகுணங்கள் எனக் குறிப்பிட்டாரா என்பது கேள்விக்குரியதுதான்.

IV.
எண்குணங்கள் என்ற பல்வேறுபட்ட பட்டியல்களும் தரும் உரைகள்:-
இறையரசன் தமது உரையில்: 1. அன்பு, 2. அறிவு, 3. பணிவு, 4. ஒழுக்கம், 5. இன்சொல், 6. வீரம், 7. அறம், 8. புகழ் ஆகிய எட்டு எனவும்;

கு. ச. ஆனந்தன் தமது உரையில்: 1. மெய்யுணர்வு, 2 . உலகோர் உள்ளத்தில் இடம் பெற்றமை, 3. ஐம்பொறிகளின் நுகர்வாயில்களை அழித்தமை, 4. அவாவின்மை, 5. பேரா இயற்கை பெற்றமை, 6. தன்னிகரற்ற தன்மை, 7. இறைமை, 8. செந்தண்மையுடன் கூடிய அறம் ஆகிய எட்டு எனவும்;

ஜெகவீர பாண்டியனார் திருக்குறள் குமரேச வெண்பாவில்: 1. தலைமை, 2. தூய்மை, 3. தத்துவ-நிலைமை, 4. அருள், 5. வலிமை, 6. இன்பம், 7. அமலம், 8. தெளிவு ஆகியன எண்குணங்கள் எனவும்;

பிங்கல நிகண்டு: 1. பாவம், 2. இறவு, 3. பற்று, 4. பெயர், 5. உவமை-இன்மை, 6. ஒருவினை, 7. குறையறவு, 8. கோத்திரம்–இல்லாமை ஆகியன எண்குணங்கள் எனவும் குறிப்பிடுவதைக் காணலாம்.

இதுவரை காட்டப்பட்டவை எண்குணங்கள் என்பவை ’8′ என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கூறப்படும் உரைகள். இவை தவிர்த்து, மாற்றுக் கோணத்தில் எட்டு குணங்கள் எவை என உறுதியாகத் தெரியாத நிலையில் அல்லது சமய விளக்கங்களை ஏற்காத வழியில் சென்று எண் என்பது ‘எண்ணம்’ என்றோ அல்லது ‘எளிய குணம்’ என்றோ பொருள் கூறும் முறைகளை அடுத்துக் காணலாம்.

V.
எண்குணம் என்பதை எண்ணும் எண்ணம்/சிந்தனை என்று பொருள் வழங்குதல்:-
எண்குணத்தான்- எண்ணப்பட்ட குணங்களையுடையவன் அல்லது சிந்தையில் எண்ணிய குணத்தை உடைய இறைவன் என்ற பொருளும் கூறப்படுகிறது ஒரு சில உரையாசிரியர்களால். மனிதர் தம் உள்ளத்தே எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள் என்பதை,

சாலமன் பாப்பையா: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுள் என்கிறார்.

இவ்வாறாக எண்ணப்பட்ட குணங்கள் கூறும் முறையானது எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவனது தாளினை வணங்கப்பெறாத தலைகள் என்ற ‘காலிங்கர்’ உரை அடிப்படையில் பொருள் கொள்ளும் முறை.

அன்பர்கள் எண்ணும் குணவடிவை ஏற்பவன் என்பதையும், அல்லது எண்ணும் பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் கடவுள் என்பதையும் இவ்விளக்கங்கள் குறிப்பிடுகின்றன.

VI.
எண்குணம் என்ற சொல்லுக்கு பொதுவாக எளிய குணம் என்ற ஒரு விளக்கம் கூறுதல்:-
எண்குணத்தான் என்பது ‘எளிமைக் குணமுடையவன்’ என்று பொருள்தரும் உரைவிளக்கங்களும் காணப்படுகின்றன. திருக்குறளார் வீ. முனிசாமி ‘தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப் போல ‘அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய’ இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்’ என்ற விளக்கம் கூறுகிறார். புலவர் குழந்தை கூறும் ‘எளிமை’ என்ற பொருளும் சற்றொப்ப இந்த உரையை ஒத்தது எனக் கூறலாம்.

மு. கருணாநிதி: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ‘ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை’ வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்பதையும் சற்றே ஏறக்குறைய இதே வகைக்குள் இருத்தலாம்.

இம்முறையில் குறளில் “எண்” என்ற சொல் “எளிய பொருள்” எனக் குறிப்பிடப் படுவது குறள் 424 (எண்பொருள வாகச் செலச்சொல்லி), குறள் 548 (எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன்), குறள் 991 (எண்பதத்தால் எய்தல் எளிதென்ப) போன்ற குறள் தரும் பொருளின் அடிப்படையில் ‘அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன்’ என்று உரையாசிரியர்கள் விளக்கவுரை அமைத்துள்ளார்கள் என அறிய முடிகிறது.

‘இவ்வதிகாரத்திற் கூறிய கடவுட் பெயர் எல்லாம் ஒரு சமயத்தார் கூறும் பெயரன்றி, வேறு வேறாகப்பலசமயத்தார் கூறும் பெயராகத் தோன்றா நின்றது’ என்ற பரிப்பெருமாள் குறிப்புரை மூலமும் எண்குணத்தான் என்பவர் ஏதோ ஒரு சமயத்திற்கு மட்டும் உரியவர் என்பதும் ஏற்கத்தக்கக் கருத்தாக உள்ளது.  இறைவனை எட்டு குணங்கள் மட்டும் உள்ளவராகக் காண இயலாது என்ற நோக்கில் இவ்வகை விளக்கங்கள் ஏற்கக்கூடிய கருத்தாக இல்லை என்பதும் மாற்றுக் கோணங்களாக உள்ளன.

சமயக் கடவுளரை வள்ளுவர் குறளில் எங்கும் கூறவில்லை என்பதை வ.உ.சி. தனது திருக்குறள் பாயிர ஆய்வில் குறிப்பிடுகிறார். “இருள் சேர் இருவினையும் சேரா”, “பொறி வாயில் ஐந்தவித்தான்” ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, “துறவியைக் குறிக்கின்றன” என்பது அவரது முடிவான முடிபு. ஆகவே, எண்குணத்தான் என்பதை முழுமுதற் இறைவனுக்குப் பொருத்தமுடியாது எனக் கொள்ளலாம். அருள்முனி சமண தீர்த்தங்கரர் அருகன், சங்கரன், ஈசன், பரமன் என அழைக்கப்படுவதையும் சிலப்பதிகாரம் (புகார்க் காண்டம்: 10.நாடுகாண் காதை) மூலம் நாம் அறியமுடிகிறது. எனவே திருக்குறள் முதல் அதிகாரம் ஒரு நன்னெறி வழிகாட்டியை, துறவியை, ஆசிரியரைக் குறிப்பிடுகிறது என்பதை மறுக்க இயலாது.

இங்குக் கவனிக்கப்பட வேண்டியது; இதுவரை காணப்பட்ட உரைகளுள் குறிப்பிடப்படாத ஒன்று பௌத்த சமயக் கோணம்.

எண்குணத்தான் பண்புகள் என்பது சமண தீர்த்தங்கரருக்குப் பொருந்துவது போலவே புத்தருக்கும் புத்தரின் போதனைகளுக்கும் பொருந்தும். இருப்பினும் குறளுக்கான புத்த சமய அடிப்படை விளக்கங்கள் எதுவும் நமக்குக் கிடைத்தில. முதல் அதிகாரத்தில் வெளிப்படையாகப் புத்த சமய சாயல்கள் பல தெரிந்தும் குறளுக்குப் புத்த அடிப்படையில் விளக்கம் அளிக்கவோ (சைவ சமயத்தார் போல), உரிமை கொண்டாடவோ முற்பட்ட ஒரு பௌத்த நூல் சென்ற நூற்றாண்டின் அயோத்திதாசர் காலம் வரை இல்லாததற்குக் காரணம் எதுவாக இருக்கலாம் என்பதைத் தற்காலத்தில் நாம் யூகிக்க மட்டுமே முடியும். திருக்குறள் முதல் அதிகாரம் காட்டும் துறவியின் குறிப்புகளான  1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. வேண்டுதல் வேண்டாமை இலான், 5. இருவினையும் சேரா இறைவன், 6. பொறிவாயில் ஐந்தவித்தான் , 7. தனக்குவமை இல்லாதான், 8. அறவாழி அந்தணன், 9. எண்குணத்தான், 10. இறைவன் என்பவை புத்தருக்கும் பொருந்தக் கூடியவை.

பௌத்தம் காட்டும் உயர்ந்த வழியில் நடக்கும் குணங்கள்:
1. நன்மொழி (Right Speech), 2. நற்செயல் (Right Conduct), 3. நன்னெறி (Right Livelihood), 4. நன்முயற்சி (Right Effort), 5. நல்லெண்ணம் (Right Mindfulness), 6. நல்லறம் (Right Intention),  7. நல்நோக்கம் (Right View), 8. நல்லறிவு (Right Insight) ஆகியன.





இதன் அடிப்படையில்; எண்குணத்தான் என்பதற்கான புத்தசமய விளக்கமாக, பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கும் பௌத்த நல்வழிகளான 1. நன்மொழி, 2. நற்செயல், 3. நன்னெறி, 4. நன்முயற்சி, 5. நல்லெண்ணம், 6. நல்லறிவு, 7. நல்நோக்கம், 8. நல்லறம்  என்ற இத்தகைய எட்டு பண்புகளைக் கொண்டவரும், துறவியுமான புத்தர் எண்குணத்தான் என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர். அவரை ஒரு அறவாழி அந்தணனாக, தருமசக்கரத்தைச் சுழற்றும் முத்திரை காட்டுபவராக புத்தரின் சிலை அமைப்புகளும் காட்டும். தர்மசக்கரத்தின் எட்டு ஆரங்களும் இந்த எட்டு பண்புகளையே பௌத்தத்தில் குறிக்கிறது. புத்தர் தாமரை மலரில் நடந்தார், மலர்மிசை ஏகினார் என்ற புத்த தொன்மங்களும் உள்ளன. திருக்குறள் முதல் அதிகாரத்தின் பத்து குறள்கள் காட்டும் பண்புகள், குறிப்பாக எண்குணத்தான் என்பது புத்தரைக் குறிக்கப்படும் ஒரு விளக்கமாகத் தரப்பட்டால், அந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதுடன் மிகப் பொருத்தமாகவும் இருக்கும்.


சான்றாதாரங்கள்:
[1] திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி, வ. உ. சிதம்பரம் பிள்ளை. தமிழ்ப் பொழில் (6/11&12), பக்கம்: 456-462 (https://books.google.com/books?id=r9vbDgAAQBAJ)

[2] எண்குணத்தான், இரா.பானுகுமார் (https://banukumar_r.blogspot.com/2012/07/blog-post_29.html)

[3] குறள் திறன்- குறள் எண் 0009, முழுப்பணிவுடன் கடவுள் வாழ்த்துக் கூறுக (http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0009.aspx)

[4] திருக்குறளின் முதல் அதிகாரம், பூரணச்சந்திரன் (http://www.poornachandran.com/திருக்குறளின்-முதல்-அதிக/)

[5] எண்குணத்தான், செங்கை பொதுவன் (http://vaiyan.blogspot.com/2015/02/9.html)

[6] எண்குணத்தான், விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org/s/1oc4)

[7] உன்னதமான எண்வகை மார்க்கங்கள், விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org/s/6zqy)

[8] The Noble Eightfold Path (https://en.wikipedia.org/wiki/Noble_Eightfold_Path)


நன்றி: 
சிறகு : எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள்
http://siragu.com/எண்குணத்தான்-பொருள்-கொள/

தமிழகத்தில் பௌத்தம், முனைவர் தேமொழி, 2023.  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் 

ஜூன் 15, 2019

#திருக்குறள், #சிறகு, #தமிழகத்தில் பௌத்தம், #Themozhi