Saturday, December 24, 2022

பெரியார் என்னும் அறிவியக்கப் பேராற்றல்

பெரியார் என்னும் அறிவியக்கப் பேராற்றல் 


சென்னை புத்தகக்காட்சியில் அதிகம் விற்றுச் சாதனை செய்துள்ள நூல்களாகப் பெரியார் குறித்து எழுதப்பட்ட நூல்களும் அவருடைய கருத்துகள் தொகுக்கப்பட்ட நூல்களும் இடம் பெறுவது கடந்த சில  ஆண்டுகளில் வாடிக்கையாகிவிட்டது. 


2017ஆம் ஆண்டு நடந்த சென்னை 40ஆவது புத்தகக் காட்சியில் அதிகம் விற்றுச் சாதனை படைத்த நூல், அதிலும் ஒரே புத்தகக்காட்சியில் இரண்டு பதிப்புகளும் விற்றுச் சாதனை படைத்த நூல்  விடியல் பதிப்பகம் வெளியிட்ட ‘பெரியார் இன்றும் என்றும்’ என்ற நூல்தான். மதம், சமுதாயம், கடவுள், சாதி, தத்துவம், பெண், பகுத்தறிவு, பண்டிகைகள், திருமணம், பண்பாடு, கலைகள், கல்வி, தேசியம், இயக்கங்கள், பொருளாதாரம், சமதர்மம், பொது நலம், தன் விளக்கம், ஆதி திராவிடர், நீதி கெட்டது, புராணங்கள் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மறு ஆண்டின் புத்தகக் காட்சியிலும்  இந்த நூல்  வந்த வேகத்தில் விற்றுத் தீர, மீண்டும் அச்சடித்துக் கொண்டு வரும் நிலை என்று இந்து நாளிதழின் செய்தி கூறுகிறது. 

தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு என்ற கருத்தாக்கங்களை,  அன்றைய நாட்களில்  பொதுவாகக் கட்டமைக்கப் பட்டிருந்த சிந்தனை வட்டத்திற்குள்ளேயே  சிந்தித்துக் கொண்டிருக்காமல், பழகிய வட்டத்திற்கு வெளியே வந்து ஏன், எதற்கு என்று கேள்விகளாக எழுப்பி புதிய வழியில் சிந்திக்கத் துவங்கியவர் பெரியார். தனது சிந்தனையில் உருவான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல ஓர் இதழாளராகவும் உரையாளராகவும் அரை நூற்றாண்டிற்கு மேல் சமூக அக்கறையுடன் உழைத்தவர் பெரியார்.  அவர் மறைந்து அரை நூற்றாண்டை எட்டிவிடப் போகும் நிலையிலும்,  அவர் பெயரை நூல்களில் மட்டுமே படித்து வளர்ந்த ஒரு தலைமுறையில் பல இளம் ஆர்வலர்களைத் தனது அரை நூற்றாண்டு எழுத்துப் பணியால்  கவர்ந்துவிட்டிருக்கிறார் என்பதற்குப் பெரியார் குறித்துத் துவக்கப்பட்டுள்ள  எண்ணற்ற யூடியூப் அலைவரிசைகளே சான்று.  


இந்தப் புதிய தலைமுறை, ஒரு முறையான கட்சி கட்டமைப்பிற்குள் இயங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் அல்லர்.  பற்பல நாடுகளிலும் பரவியுள்ள பல பெரியார் கருத்துப் பற்றாளர்கள் என்பது மட்டுமே ஒரு பொது புது அடையாளம்.  பெரியார் குறித்து  சுயமரியாதை இயக்கம் சார்ந்த பெற்றோர்களாலும், குடும்ப முன் மாதிரிகளாலும் உருவாக்கப்பட்ட பற்றாளர்களையும்விட,  இவ்வாறாகப் பெரியார் குறித்துப் பல உரையாடல்களைக் கேட்டும் அறிந்தும் அவரது சிந்தனை வீச்சு தந்த வியப்பால் பற்றாளர்களாகத்  தங்களை மாற்றிக்  கொண்டு, தங்களால் இயன்றவகையில் அவரது கருத்துகளை இணையத்தில் பரப்பிவிட ஏதாவது சிறு பங்காற்றிவிட வேண்டும் துடிப்புடன் செயலாற்றும் ஆர்வலர்கள் பலர். பெரியாரின் மனித நேயம் மற்றும் சமநீதிக் கருத்துகள் காலங்கடந்தும் நாம் சிந்தனைக்கு உரியவையாகவே  இருப்பதுதான் அவற்றின் சிறப்பு.  பெரியார் துவங்கிய அறிவியக்கம் வளரும் இந்தப் புதியமுறையின் செயல்பாடுகளை  அவரே  கூட எண்ணியிருப்பாரா எனத் தெரியவில்லை.  

பெரியார் எழுதியவையும், பெரியார் குறித்து பிறர் எழுதியவையும்: 
•  புனிதம் என்று போற்றப்பட்டவற்றைக் கட்டுடைத்து பெரியாரே எழுதியவை, 
•  சுயமரியாதை, பகுத்தறிவு குறித்து பெரியாரும் அவர் இயக்கத்தினரும் எழுதியவை,  
•  சுயமரியாதை இயக்க வரலாறு, போராட்டங்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியவை,  
•  பெரியாரால் மாறிய தமிழக அரசியல் சூழல்கள், சமூகச் சூழல்கள் குறித்து மானுடவியல் ஆய்வாளர்கள் எழுதியவை,  
•  பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாரும் அவர் இயக்கமும் செய்த சீர்திருத்தங்கள் குறித்து பெண்ணிய எழுத்தாளர்கள் எழுதியவை,  
•  பெரியாரியல் குறித்து  பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாகச் சமர்ப்பிக்கப்பட்டு வரும் ஆய்வேடுகள் என;
பல்வேறு கோணங்களில், பன்முக நோக்கில் பெரியார் குறிப்பிட்டவை, பெரியாரின் சமூகப் பங்களிப்பு  குறித்து பிறர் குறிப்பிடுபவை என எண்ணிறந்த  படைப்புகள் நாளும் வளர்ந்த  வண்ணமே உள்ளன. 

இத்தகைய சிந்தனை அறிவியக்க வீச்சைக் காணுகையில்;  
"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க...." எனப் பேரரசரான ராஜராஜ சோழர், தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் வியப்பிற்குரிய வகையில் தஞ்சை பெரிய கோவிலின் முதல் கல்வெட்டில் ஆவணப் படுத்தி இருப்பதே நினைவிற்கு வருகிறது.  

அந்த வழியில், பெரியார் கொடுத்தனவும், அவர் வளர்த்த திராவிட இயக்கத்தில் அவரது வழியில் பகுத்தறிவுப் பாசறையின் பயிற்சியில் உருவாகிய அண்ணா, கலைஞர், பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஆசிரியர் வீரமணி  துவங்கி இன்றுவரை பகுத்தறிவுச் சுடரை ஏந்திச் சென்று கொண்டிருக்கும் எண்ணற்ற இளைய தலைமுறையினர் வரை பற்பலர்  கொடுத்தனவும் கொடுப்பனவும், என்று பெரியார் என்ற அறிவியக்கப் பேராற்றல் தரும் அறிவொளி  இன்றுவரை மனித நேயத்தையும், சமத்துவம், சமூகநீதி போன்ற கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.   

தான் யார் தன் பணியின் நோக்கமென்ன என்பதைப் பின்வருமாறு அறிவித்தவர் பெரியார்.   
"ஈ. வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை‘ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்."
என்றார் பெரியார்.  அவர் ஏற்றிவைத்த அறிவுச் சுடர் ஒலிம்பிக் சுடர் போல தொடர்ந்து பலர் கைகளுக்கு மாற்றப்பட்டு  மக்கள் வாழ்வில் ஒளிவீசி  வருகிறது. 

பெரியார் என்ற தனி ஒரு  மனிதரின் சிந்தனையின் வீச்சு ஒரு நூற்றாண்டுக்குள் விரைந்து பரவியுள்ளதை எவராலும் மறுக்க முடியாது.  பெரியாரின் அறிவியக்கத்தின் வீச்சு தமிழர் வாழ்வைத் தொடர்ந்து இருளில் விழாமல் வழி நடத்தும் என்பது உறுதி. வாழ்க பெரியார். வளர்க பெரியாரியம். 


நன்றி:  சிறகு 
டிசம்பர் 24, 2022



#சிறகு, #பெரியார், #Themozhi 


Friday, December 23, 2022

செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஓவியங்கள்

செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஓவியங்கள்


அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட கலைப் போட்டியில்,  ஓவியங்களுக்கான பிரிவில் ஜேசன் எம். ஆலன் (Jason M. Allen) என்பவர் செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு உருவாக்கிய "தியேட்டர் டி' ஓபெரா ஸ்பேஷியல்"(Théâtre D’opéra Spatial) என்ற எண்ணிம முறை ஓவியம் பரிசு பெற்றது.  வளர்ந்து வரும் டிஜிட்டல் கலைஞர்களுக்கான வாய்ப்பை இது உருவாக்கினாலும், படைப்பாற்றல் என்றால் என்ன? கலை என்றால் என்ன? என்ற அடிப்படைக் கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க ஓவியம் 'எட்மண்ட் டி பெலமியின் உருவப்படம்' (Portrait of Edmond Belamy) என்ற ஓர் ஓவியம்.  இது 17 ஆம் நூற்றாண்டின் டச்சு ஓவியரான ரெம்ப்ராண்ட் (Rembrandt) வரையும் ஓவிய முறையினை அடிப்படையாகக் கொண்டு  ஐரோப்பியச் செல்வந்தர்  ஒருவரை வரைந்த  முற்றுப்பெறாத ஓவியம் போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டது.   பியர் ஃபாட்ரெல் (Pierre Fautrel) என்ற ஒரு கலைஞர் ஒருவரும், ஹ்யூகோ கேசெல்ஸ்-டுப்ரே (Hugo Caselles-Dupré) என்ற கணினி அறிவியலாளர் ஒருவரும், கௌதியர் வெர்னியர் (Gauthier Vernier) என்ற பொருளாதார வல்லுநர் ஒருவரும் இணைந்த 'ஆப்வியஸ் ஆர்ட்' (Obvious Art) என்ற குழுவின் பிரெஞ்சு கூட்டு முயற்சியாக இந்த ஓவியத்தை உருவாக்கினார்கள்.  இக்குழுவினர் 14 முதல்  20 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வரையப்பட்ட 15,000 படங்களைக்  கணினிக்கு அடிப்படைத் தரவுகளாக அளித்தனர்.  கணினியில்  ஏற்றப்பட்ட  இத்தரவுகளைப் பயன்படுத்திய  செயற்கை நுண்ணறிவு,  குழுவினர் தந்த விதிகளுக்கு ஏற்ப எட்மண்ட் டி பெலமியின் உருவப்படம் என்ற ஓவியத்தை வரைந்து கொடுத்தது.  இந்த ஓவியம் ஏலம் விடும் நியூயார்க் கிறிஸ்டி நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்டு, எதிர்பார்த்ததை விட 45 மடங்கு அதிகமான தொகையாக 432,500 டாலர்கள் கொடுத்து வாங்கப் பட்டது.

இவ்வாறு கலைப்போட்டியில் பரிசு வெல்வதும், ஏலத்தில் அதிகத் தொகை கொடுத்து வாங்கப்படுவதும் என்று செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாகும் ஓவியங்கள் நுண்கலைத் துறையில் புதிய எல்லைகளைத் தாண்டியுள்ளது. இது மனித வரலாற்றில் கலைகள் உருவாக்கத்தில் ஒரு திருப்புமுனை. 

ஆதிகாலத்தில் குகைகளில் வெள்ளை சுண்ணாம்புக் கட்டியையோ அல்லது சிவப்பு இரும்புத் தாது நிறைந்த சிவப்பு நிறக் கற்களையோ  கொண்டு தன் குழுக்களுக்குச் சில செய்திகளைக் கடத்தும் நோக்கில்  குச்சி மனிதர்கள் குச்சி விலங்குகள் என உருவங்களைக் குகைகளின் சுவரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கீறிக் கொண்டிருந்த  மனித இனம், இன்று செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஓவியம் உருவாக்குவது வியக்கத்தக்க ஒரு வளர்ச்சிதான்.  

கணினி உதவியுடன் படங்கள் உருவாக்கும் முறை 1960களில்  முதலில்  துவங்கி விட்டது. ஹரால்ட் கோஹன் (Harold Cohen) என்ற ஓவியர் கணினி உதவியுடன் கோட்டோவியங்களை உருவாக்கி பின்னர் அதற்கு வண்ணம் தீட்டும் முயற்சியில் முதலில் இறங்கினார்.   தற்பொழுது கைபேசி செயலிகள் மூலம் செயற்கை நுண்ணறிவு படம் உருவாக்கும் (AI art Generator/AI-image generator)   சில செயலிகள் வெளிவந்துள்ளன. பெரும்பான்மையான செயற்கை நுண்ணறிவு பட உருவாக்கம் ஆர்வலர்கள் இணையம் வழியாக டால் இ (DALL-E), மிட்ஜர்னி (Midjourney), ஸ்டேபில்  டிஃபியூஷன்(Stable Diffusion),  கூகுள் நிறுவனத்தின் 'கூகுள் ப்ரெய்ன் இமேஜன் மற்றும் பார்ட்டி' (Google Brain Imagen and  Parti) , மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 'நுவா-இன்ஃபினிட்டி' (NUWA-Infinity) போன்றவை குறித்தும் அறிவார்கள். இவற்றில் சில இன்னமும் சோதனை நிலையிலும் தயாரிப்பு நிலையில் உள்ளன, மற்றும் சில பயனாளர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின்  உதவியுடன் சில நொடிகளில் ஆயிரக்கணக்கான படங்களை ஆர்வலர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

கனடா நாட்டின் புகழ் பெற்ற செல்வந்தரும் தொழில் நுட்ப வளர்ச்சிகளில் ஆர்வம் கொண்டவருமான 'எலான் மஸ்க்' (Elon Musk) அவர்களின் கூட்டு முயற்சியில்  'ஓப்பன் ஏ.ஐ.'(OpenAI) என்ற நிறுவனம், டால் இ  என்ற செயற்கை நுண்ணறிவு உதவியால் படம் உருவாக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளது. சோதனை வடிவில் மிகச் சிலரின் பயன்பாட்டிலிருந்த செயற்கை நுண்ணறிவு டால் இ யை, செப்டெம்பர் 2022 இல் ஓப்பன் ஏ.ஐ. நிறுவனம் பொதுமக்கள் அனைவரின்  பயன்பாட்டுக்கும்  கொண்டு வந்தது.  அதன் பிறகு  ஆர்வலர்கள் மில்லியன் கணக்கில் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு 2 மில்லியன் படங்கள் 1.5 மில்லியன் மக்களால் டால் இ மூலம் உருவாக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் கலைப் படைப்புகளை உருவாக்குவது மிகவும் எளிதானது.  செயற்கை நுண்ணறிவு மென்பொருள் துறையின் ஒரு பகுதியான, 'இயந்திர கற்றல்' (machine learning) முறை  இதனைச் செயல்படுத்துகிறது.  நாம் பார்க்க விரும்பும் காட்சியைச் சொன்னால் அது தேவையான புகைப்படம் அல்லது ஓவியம் போலவே உருவாக்கித் தரும். கணினி நிரல்கள் எதுவும் எழுதாமல் வெறும் 'பேச்சு மொழியில்'  (natural language processing) சொன்னாலே படம் கிடைத்துவிடும். இக்கட்டளை  'டெக்ஸ்ட் ப்ராம்ட்' (text prompt) என்று குறிப்பிடப்படுகிறது.  எவ்வளவுக்கு எவ்வளவு விளக்கமாக, விவரிப்புகளுடன் கட்டளை கொடுக்கப்படுகிறதோ, அதற்கு ஏற்ப  உருவாக்கப்படும் படம் பயனாளரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக அமையும்.  கூகுள் இணையத் தேடல்களுக்கு ஏற்ற குறிப்பைக் கொடுத்தால் அது தேவையான படங்களை எடுத்துக் கொடுப்பதற்கு அடுத்த கட்டம் இது எனலாம். இதில் கிடைக்கும்  படங்கள் தனித்துவமாகப் புதிதாக உருவாக்கப்படுபவை என்பதுதான் வேறுபாடு.  

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தரவுகளிலிருந்து படத்தைப் பெறுவது இரு படி முறை கட்டங்களைக் கொண்டது. முதல் கட்டம் 'உருவாக்குதல்' (ஜெனரேட்டர்/Generator), அடுத்த கட்டம் 'தெரிவு செய்தல்' (டிஸ்க்ரிமினேட்டர்/Discriminator). செயல்முறை எடுத்துக் காட்டாக,  செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் "சிறுமிகள் தோட்டத்தில் நடனமாடுவது போல ஒரு படம் வேண்டும்" என்று கட்டளை இட்டால்,  அது ஒரு அரை நிமிடத்தில் சில படங்களை உருவாக்கிக் கொடுக்கும். இது முதல் கட்டம்.  பிறகு, கொடுக்கப்பட்ட  சில படங்களில் நாம் சொன்ன வரையறைக்கு மிக நெருக்கமாக நாம் விரும்பும் வண்ணம் ஏதாவது படம் இருந்தால் அதைத் தேர்வு செய்வது அடுத்த கட்டம்.  பிறகு, மேற்கொண்டு விரும்பினால் அதைப் போல வேறு சில படங்களையும்  காட்டச் சொல்லலாம்.  அடுத்து இவ்வாறு  கிடைக்கும் படங்களை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு நம் கைவண்ணத்தைக் காட்டி, மேலும் நாமே திருத்தி நமக்கு வேண்டுவது போலவும்  செம்மைப் படுத்திக் கொள்ளலாம்.  இது புகைப்படம் போல உருவாக்கப் பட்டிருக்கும்.  மாறாக, ஒரு ஓவியம் போல வேண்டும் என்றால் அதற்கான கட்டளையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி ஓவியப் பாணியிலோ, பப்லோ பிக்காசோ ஓவியப் பாணியிலோ அல்லது ரவிவர்மா ஓவியம் போலவோ படம் இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப ஓவியம் உருவாக்கப் பட்டிருக்கும்.

இதில் கட்டளை கொடுத்தவர் ஓவியரும் அல்லர்,  அவர் ஓவியராக இருக்க வேண்டிய தேவையும் இல்லை.  கணினியின் செயற்கை நுண்ணறிவு அது தான் அறிந்த பல தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு எண்ணிம ஓவியம் ஒன்றைக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்ப உருவாக்கித் தருகிறது. ஆக அதுவும் ஒரு ஓவியரல்ல. ஆனால் இப்பொழுது  ஒரு கலைப்படைப்பு, ஒரு ஓவியம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் இது உண்மையிலேயே ஒரு கலைதானா என்பதும்,   கலைஞர்களின் வாழ்க்கையில் இந்தத் தொழில்நுட்பம் கொடுக்கும் தாக்கம் என்ன  என்பதும்  விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.  அத்துடன் பயனாளரும் செயற்கை நுண்ணறிவும் கூட்டாக உருவாக்கும் படத்தின் காப்புரிமை எத்தகையது என்ற சிக்கல்களும் விவாதத்தில் உள்ளது.  

தற்பொழுது பயனாளர் படத்தின் காப்புரிமையைக்  கொண்டுள்ளார் என்று செயற்கை நுண்ணறிவு படம் உருவாக்க உதவும் நிறுவனங்கள் கூறுகின்றன. எவரும் தனக்கு வேண்டும் வகையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் படங்கள் உருவாக்கிக் கொள்ளலாம் என்றால் பாதிக்கப்படப் போவது தொழில்முறை ஓவியர்கள்.  அவர்களின் ஓவியப்பாணியையே பின்பற்றி அவர்களுடைய ஓவியங்கள் போல  வரைந்து கொள்ளும் பொழுது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகிறது.  ஒருவரின் படைப்பை மற்றவர் பயன்படுத்துவதை மட்டுமே காப்புரிமைச் சட்டம் தடுக்கிறது.  ஆனால் அவர் பாணியைப் பின்பற்றி மற்றவர் வரைவதைக் காப்புரிமை சட்டத்தால் தடுக்க இயலாது.  சட்டத்தை  மீறாமல் காப்புரிமையை  மீறாமல்  செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் படங்களால்  தங்களுக்கு எனத் தனி ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, வரைந்து தங்கள் துறையில் தங்கள் இருப்பை  உறுதிப்படுத்திக் கொண்ட ஓவியர்கள் இப்பொழுது  இக்கட்டிற்கு ஆளாகி  உள்ளார்கள்.  இனி உருவாகும் ஓவியர்களும் ஒரு சில படங்கள் வரைந்து தாங்கள் வரையும் பாணி ஒன்றை உருவாக்கிக் கொண்டாலும், அவையும் இனி செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உடனே பரவலாகிவிடும்.  ஆகவே, வாழும் தொழில்முறை கலைஞர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு  அறப்படி அவர்களின் படைப்புகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும் தேவையும்  உள்ளது.  இந்தத் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் உள்ளதால் இது குறித்த விவாதங்கள் இன்னமும் பரவலாகவில்லை.   ஆனால், புகைப்படச் சேவைகள் தரும் 'கேட்டி இமேஜ்' (Getty Images) போன்ற படத் தொகுப்பு  (stock images) நிறுவனங்கள் எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க விழைந்து, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கிச் சமர்ப்பிக்கப்படும் படங்களை ஏற்பதில்லை என்ற முடிவுடன் உள்ளன.  

செயற்கை நுண்ணறிவு ஓவிய முறையானது  தொழில் நுட்பத்தைக் கையாளும் ஆர்வலர்களின் பிடியில் இன்றைய நிலையில் இருக்கிறது என்பதும், ஆனால் கலைஞர்களின் பயன்பாட்டில் அதிகம் இல்லை என்பதும்தான்  இத்துறை சார்ந்தவர் கணிப்பு.  பயனாளர்கள் ஆபாசமான, அருவருப்பான படங்கள் உருவாக்கிப் பகிர்வதையும்,  அத்துடன்  புகழ்பெற்ற நிலையில் வாழும் பெரிய மனிதர்களை, அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டு  ஓவியங்களை உருவாக்கிப் பகிர்வதையும்  தற்பொழுது  செயற்கை நுண்ணறிவு படம் உருவாக்க உதவும் நிறுவனங்கள் தங்களின்  உறுப்பினருக்கான விதிமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றின் மூலம்  தடை செய்துள்ளன.  

நானும் சில ஓவியங்களைத் தீட்டியுள்ள நிலையிலும், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சில படங்களை உருவாக்கிய பட்டறிவின் அடிப்படையிலும் சிந்தித்தால், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்படும் படங்கள் மனதிற்கு  நிறைவு தரவில்லை.  தூரிகை கொண்டு வரைந்த பிறகு,  படத்திலிருந்து பின்னே சில அடிகள் சென்று, வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் பொழுது பெறும் மனநிறைவும், அல்லது சில காலம்  கடந்து நாம் வரைந்த படம் ஒன்றைப் பார்க்கும்பொழுது, அட! நாமா இப்படி ஓர் ஓவியம் தீட்டினோம் என்று வியந்து மகிழும் மனநிறைவும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன்  உருவாக்கும்  படங்களில் என்றும் கிடைக்கப்போவதில்லை.  இதை எந்த ஓவியக் கலைஞரும்  அறுதியிட்டுச் சொல்வார்.  ஆனால் தொழில் முறையில், குறிப்பிட்ட காலநெருக்கடியில் வேலை செய்து கொண்டிருக்கும் வணிக ஓவியர்களின் வேலையைச் செயற்கை நுண்ணறிவு பெருமளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை. 
 

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் படங்கள் உருவாக்க உதவும் சில இணைய தளங்கள்: DALL-E; Midjourney; The Stable Diffusion search engine

டால் இ - செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நான் உருவாக்கிய படங்கள்: தாயின் அன்பு மழையில் மழலை; குளக்கரையில் தாமரையுடன் புத்தர்; தோட்டத்தில் விளையாடும் சிறுமிகள்; மயிலாடும் சோலையில் காதலர்கள்; மயக்கும் மாலைநேரக் கடற்கரை







நன்றி:  "நன்னூல்" (கலை - இலக்கிய மானுடவியல் இரு மாத இதழ்).    
டிசம்பர் - ஜனவரி 2023 

#செய்யறிவு, #நன்னூல், #அறிவியல், #Themozhi, #ஓவியம் 


Thursday, December 15, 2022

பெரியார் பெருமை பெரிதே

 

பெரியார் பெருமை பெரிதே
ஆசிரியர்: தேமொழி
மொழி: தமிழ்
வகை: கட்டுரைகள்
ISBN 978-93-94414-28-0
பக்கங்கள்: 128
விலை: ரூ.150
வெளியீடு:  முதல் பதிப்பு- டிசம்பர்-2022
கிடைக்குமிடம்:
நன்னூல் பதிப்பகம்
தொடர்பு எண்: 99436 24956
nannoolpathippagam@gmail.com





                           உள்ளடக்கம் . . . 

         1. பெரியார் பெருமை பெரிதே! — 31
         2. "நான் யார்?" - பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம் — 46
         3. பெரியார்: நான் யாராயிருந்தாலென்ன? — 52
         4. பெரியார் எப்பொழுது பெரியார் ஆனார்? — 56
         5. பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் — 61
         6. முதலில் அச்சேறிய பெரியாரின் நேர்காணல் — 67
         7. தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் — 74
         8. அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் — 85
         9. பெரியாரின் கணிப்பில் "இனிவரும் உலகம்" — 104
         10. பெரியார் என்னும் அறிவியக்கப் பேராற்றல் — 109

பின்னிணைப்பு:
         தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் — 113



#நூல், #பெரியார் பெருமை பெரிதே, #Themozhi 

Saturday, December 10, 2022

செய்யறிவுடன் ஓர் கலந்துரையாடல்

செய்யறிவுடன் ஓர் கலந்துரையாடல்


செய்யறிவு (அல்லது செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence/AI) துறையின் வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் அடிப்படைத் தேவை முதல் பொழுதுபோக்கு வரை பல வகையில் அன்றாடம் உதவி வருகிறது. செய்யறிவு உதவியாளர் (AI Assistant) இன்று நம் வாழ்வில் ஒரு பகுதி. கணிப்பொறியுடன் பேச்சுமொழியில் (natural language processing /NLP) பேச்சு மூலமோ எழுத்து மூலமோ உரையாடுவதும் இன்று நம் வாடிக்கையாகிவிட்டது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் உதவியாளர் (Google-Google Assistant), ஆமசான் நிறுவனத்தின் அலெக்சா (Amazon-Alexa), ஆப்பிள் நிறுவனத்தின் சிறீ (Apple-Siri), மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கார்ட்டானா (Microsoft-Cortana) போன்ற கணிப்பொறிகள் புகழ்பெற்றவை. இவற்றில் ஏதோ ஒன்றுடனாவது நாம் நாளும் உரையாடிக் கொண்டுதானிருக்கிறோம். அவற்றுக்குக் கட்டளைகள் இட்டுக்கொண்டிருக்கிறோம்.



பெரும்பாலும் ஓர் இணையதளத்தில் நுழைந்தவுடன் விதம்விதமாகப் பலவகையில் தன் பெயரைக் கூறிக்கொள்ளும் ஒரு செய்யறிவு உதவியாளர் படத்துடன் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன் என்று கூறும் அறிவிப்பும் தோன்றும். நாமும் நமக்கு என்ன வேண்டும் என்று சொல்லி நம் தேவையை நிறைவேற்றுக் கொள்ள முயல்வோம். முதலில் உண்மையான உயிருள்ள நபர் என்று நினைத்து உரையாடத் துவங்கினாலும் பிறகு ஏதோ ஒரு பொருத்தமற்ற உளறல் மூலமோ அல்லது நீங்கள் சொல்வது புரியவில்லை, என்னால் உதவ முடியவில்லை போன்ற பதில்கள் வரும்பொழுதுதான் இவ்வளவு நேரம் நாம் உரையாடியது சாட்டர்போட் (Chatterbot/Chatbot) என்று குறிப்பிடப்படும் அரட்டைப் பொறி செய்யறிவு உதவியாளருடனா என்ற வியப்பு தோன்றும்.

சென்ற நூற்றாண்டில், ஜோசப் வீசன்பாம் (Joseph Weizenbaum) 1960களில் உருவாக்கிய எலிசா (Eliza) என்ற அரட்டைப்பொறி கணினி தொழில் நுட்ப வரலாற்றில் அரட்டைப் பொறியின் தொடக்கம். ஆனால் இந்த நூற்றாண்டில் ஐபிஎம்  நிறுவனத்தின் வாட்சன் (IBM Watson chatbot) அறிமுகத்திற்குப் பிறகு அரட்டைப் பொறியின் வளர்ச்சி வேகமெடுத்து இன்றைய நாட்களில் எளிய மக்களும் பேச்சுமொழியில் கணிப்பொறியுடன் தொடர்பு கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. இயல்பான பேச்சு மொழியில் உரையாடக்கூடிய அரட்டைப்பொறி நமக்குத் தகவல் தந்து உதவும். இதற்கு “வாயாடி” என்று தமிழ் விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org/s/41k4) தமிழில் பெயர் சூட்டியிருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை.

தமிழ் மொழியில் ‘பூங்குழலி’ (POONGKUZHALI – An Intelligent Tamil Chatterbot) என்ற தமிழ் அரட்டைப் பொறி 2003 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உத்தமம் 2003 மாநாட்டில் (https://www.infitt.org/ti2003/papers/14_kalaiya.pdf ) அறிமுகப்படுத்தப்பட்டது.

நவம்பர் 30, 2022 அன்று சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் சாட்ஜிபிடி (ChatGPT; GPT = Generative Pretrained Transformer) என்ற செய்யறிவு உதவியுடன் இயங்கும் அரட்டைப் பொறி (conversational AI chatbot) ஒன்றினை முன்மாதிரியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது (https://chat.openai.com/chat). வெளியிட்ட 5 நாட்களில் பயனர் எண்ணிக்கை மில்லியனைத் தாண்டியது. அதனைப் பயன்படுத்தி செய்யறிவுடன் உரையாடிய பயனர் பலர் அதன் செயல்திறனை வியந்து பாராட்டி சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் அதனைக் கணினி நிரல் எழுதச் சொல்லியும் கட்டுரைகள் எழுதச் சொல்லியும் அதன் செயல் திறனைச் சோதித்தனர். எந்த நாட்டினர் ஆபத்தானவர்கள் என்பது போன்ற கேள்வி கேட்ட பொழுது சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், வடகொரியா மக்கள் ஆபத்தானவர்கள் என்பது போன்று இனவெறி தொனிக்கும் பதில்களையும் கொடுத்து அதிரச் செய்தது. அதைச்சொல்லிக் குற்றமில்லை; சட்டியில் இருப்பது அகப்பையில் வந்துவிட்டது. படித்துப் பயிற்சி பெற்று செய்யறிவு அறிந்து கொண்டதில் இவ்வாறான இனவெறி கொண்ட தகவல்களும் இருந்திருக்கின்றன.

இந்தத்தகவல்களால் ஆர்வம் மிகவும் தூண்டப்பட்டு நாமும் சாட்ஜிபிடியுடன் கதைத்து விட்டுவரலாமே என்ற எண்ணம் எழுந்தது. அன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் செய்திகள் படித்த தாக்கத்தில் முதல் கேள்வியாக . .

[1]
இந்தியப் பெண்ணின் வாழ்க்கையை மேம்படுத்த டாக்டர் அம்பேத்கரின் முயற்சிகள் பற்றிய ஒரு சிறு கட்டுரையை வழங்கவும் (Provide a short essay on Dr Ambedkar’s efforts to improve Indian woman’s life) என்ற கோரிக்கையை வைத்தேன். 226 சொற்களில் ஒரு கட்டுரை ஒன்றை உருவாக்கிக் கொடுத்தது. மேலும் முயலலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் மீண்டும் ஒன்றை உருவாக்கு என்று இருமுறை கேட்டுக்கொண்டவுடன் 271, 281 சொற்களிலும் அடுத்தடுத்து 2 கட்டுரைகளைத் தந்தது. இவற்றைக் கட்டுரையின் இறுதியில் பின்னிணைப்பாகப் பார்க்கலாம். இவை இந்தியப் பெண்ணின் வாழ்க்கையை மேம்படுத்த டாக்டர் அம்பேத்கரின் முயற்சிகள் பற்றிய தெளிவான, எளிமையான, சுருக்கமான அறிமுகக் கட்டுரைகள். 

அடுத்து . . .

[2] தமிழ் மொழி பற்றிய அறிக்கை ஒன்று கொடுக்கவும் (Give a report on Tamil Language) என்ற கோரிக்கைக்கு மீண்டும் அருமையான சுருக்கமான தமிழ் குறித்த கட்டுரை ஒன்று கிடைத்தது (பார்க்க : படம்). 


அடுத்து . . .

[3] தாமரை மலர் பற்றி ஒரு கவிதை எழுதுக (Write a poem about lotus) என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க பின்வரும் ஆங்கிலக் கவிதையை எழுதிக் கொடுத்தது.

The lotus flower, so pure and sweet
Blooms in the mud, yet remains discreet
A symbol of growth, and of new beginnings
A reminder that beauty can arise from our sufferings

With delicate petals, and a gentle hue
The lotus captures our hearts, and draws us anew
A symbol of resilience, in a world full of strife
The lotus reminds us to seek joy in life

In the stillness of the pond, it stands alone
A beacon of light, in a world unknown
A symbol of peace, and of serenity
The lotus guides us, to a place of clarity

So let us take a moment, to appreciate
The beauty of the lotus, and all that it represents
A reminder that no matter what may come our way
We too can rise above, and bloom, each and every day.

தொடர்ந்து . . .

[4] செய்யறிவு உதவியுடன் இக்கவிதைக்கு ஓவியம் உருவாக்கும் கட்டளை ஒன்றினை எழுதிக்கொடுக்கவும் (Write a prompt based on this lotus poem to generate a DALL•E AI art painting) என்றவுடன் கட்டளை ஒன்றை எழுதிக் கொடுத்தது. அதை வைத்து டால் இ (DALL-E) தளத்திற்குச் சென்று (https://labs.openai.com/) அந்தச் செய்யறிவைப் படம் ஒன்றை உருவாக்கித் தரச்சொல்லிப் பெற்றுக்கொண்டேன். 


பிறகு . . .

[5] பிறை நிலாவைக் குறித்து தமிழில் ஒரு கவிதை எழுது (Write a poem in Tamil on a crescent moon) என்ற கோரிக்கைக்குக் கீழ் வரும் தமிழ்க்கவிதையை எழுதிக் கொடுத்தது.

கனவில் இரவு பெற்ற
சூரியன், மனதை விட்டு

கனவில் காதல் பெற்ற
சூரியன், கவிதைகளை நீக்கு

கனவில் சாதியில் இரவு
சூரியன், இன்னும் மறைவு

கனவில் பலர்கள் காதல்
சூரியன், அன்பு கொண்டு

கனவில் நிமிர்ந்த
சூரியன், அன்பு தெரிந்து

கனவில் பாதம் என்று சாதியில்
சூரியன், கவிதைகளை நீக்கு.

ஏதோ முயன்றது என்று பாராட்டலாம், அவ்வளவுதான். 

அடுத்ததாக . . .

[6] உனக்குத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கத் தெரியுமா? (Do you know translate from Tamil to English?) என்ற கேள்விக்கு; ‘தெரியும்… ஆனால் தெரியாது’ என்ற பாணியில், ஏதோ செய்யத் தெரியும், சின்ன சின்ன சொற்றொடர்களை மொழிபெயர்ப்பேன், ஆனால் துல்லியமாக மொழிபெயர்க்கத் தொழில்முறை மொழிபெயர்ப்பாளரை அணுகவும் என்ற பதில் கிடைத்தது.  


[7] சரிதான், மொழிபெயர்ப்புத் திறனைச் சோதனை செய்து பார்த்து விடுவோமே என்ற விருப்பத்தில்,
“புத்தியுள்ளமனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை…”
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் என்று சொன்னவுடன், இதுவரை உடனடியாகப் பதில் கொடுத்துக் கொண்டிருந்த அரட்டைப்பொறி சிறிது நேரம் (அதிர்ச்சியில்???) உறைந்து போனது. அதற்கு மொழி பெயர்க்கத் தெரியவில்லையா அல்லது அதை நான் நையாண்டி செய்வதாக நினைத்துக் கொண்டதா என்று எனக்குப் புரியவில்லை. (பார்க்க: படம்).



பிறகு மெதுவே ஏதோ பிழை ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து இவ்வாறு தடங்கல் ஏற்பட்டால் தளத்தின் உதவியாளரை அணுகவும் என்ற செய்தி திரையில் தோன்றியது. சரி, போகிறது என்று நினைத்து, 

அடுத்ததாக . . .

[8] டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றிச்சொல்லுக (Tell me about Delhi Election results) என்றவுடன்;
பல கோரிக்கைகள் வைக்கிறாயே, தயவுசெய்து வேகத்தைக் குறைக்கவும் (Too many requests, please slow down) என்று என்னைக் குறை சொல்வது போன்ற மறுமொழி கிடைத்தது. ஆகவே, மேற்கொண்டு சாட்ஜிபிடிக்கு வெறுப்பேற்றாமல் தளத்தை விட்டு வெளியேறி விட்டேன்.

செய்யறிவு  (Artificial Intelligence), இயந்திரக் கற்றல் (Machine Learning) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) ஆகிய துறைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் புதிய முன்னேற்றங்களினால் அரட்டைப்பொறிகளின் செயல்திறனும் மேம்பட்டுக் கொண்டே வருவது கணினித் தொழில்நுட்பத்தால் நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாக அமைகிறது. இப்பொழுது உருவாக்கப்படுபவற்றை விடப் பிற்காலத்தில் மேம்பட்ட படைப்புகள் உருவாகும் என்பதில் ஐயமில்லை.  

குறிப்பு: இக்கட்டுரையில் இடம் பெறும் படங்கள் செய்யறிவு உதவியுடன் டால் இ (DALL-E) தளத்தில் உருவாக்கப்பட்ட படங்கள்.

_______________________________________

பின்னிணைப்பு:

Provide a short essay on Dr Ambedkar’s efforts to improve Indian woman’s life

(1) Dr. Bhimrao Ramji Ambedkar was a social reformer in India who dedicated his life to fighting for the rights of marginalized communities, including women. He was born into a lower-caste family and faced discrimination throughout his life, which deeply influenced his political and social beliefs.

Ambedkar was a strong advocate for gender equality and worked tirelessly to improve the lives of women in India. He played a crucial role in the drafting of the Indian constitution, which guarantees equality for all citizens regardless of gender. He also worked to pass laws that prohibited discrimination against women, including the Hindu Code Bill, which aimed to improve the legal rights of Hindu women.

In addition to his political efforts, Ambedkar also founded organizations that focused on empowering women. He established the All India Women’s Conference, which aimed to provide a platform for women to discuss issues facing their communities and to work towards their empowerment. He also founded the BharatiyaStree Shakti, an organization that worked to educate and empower women from marginalized communities.

Ambedkar’s efforts to improve the lives of women in India were instrumental in advancing the rights of women in the country. He fought tirelessly against discrimination and worked to pass laws and establish organizations that aimed to empower women. His legacy continues to inspire social and political activism in India and around the world.

(2) Dr. B.R. Ambedkar was a leading figure in the Indian independence movement and the architect of the Indian Constitution. He was also a strong advocate for the rights and equality of women in India.

Dr. Ambedkar believed that women’s rights were fundamental to the development of a just and equal society. He worked tirelessly to promote women’s education and employment opportunities, as well as their participation in politics and public life.

One of the key ways in which Dr. Ambedkar sought to improve the lives of Indian women was through the adoption of the Hindu Code Bills in the 1950s. These laws sought to reform the discriminatory Hindu personal laws that governed marriage, divorce, inheritance, and other areas of family life. The Hindu Code Bills granted women the right to equal property and inheritance, as well as the right to divorce and remarry.

In addition to his work on the Hindu Code Bills, Dr. Ambedkar also fought for the rights of women in other areas of society. He called for the abolition of the oppressive practice of sati, in which a woman was forced to burn herself on her husband’s funeral pyre. He also worked to end the discriminatory practices of child marriage and dowry.

Dr. Ambedkar’s efforts to improve the lives of Indian women had a profound impact on the country. The adoption of the Hindu Code Bills marked a major shift in the status of women in India, and paved the way for further progress in the decades that followed. Today, women in India continue to benefit from the efforts of Dr. Ambedkar and other advocates for women’s rights.

(3) Dr. Bhimrao Ambedkar was an Indian politician, lawyer, and economist who is best known for his efforts to improve the lives of Indian women. Born into a Dalit (formerly known as untouchable) family, Ambedkar faced discrimination and poverty throughout his childhood. Despite this, he was able to obtain a law degree and eventually became the first Dalit to hold the position of Law Minister in India.

Throughout his political career, Ambedkar worked tirelessly to improve the lives of Indian women. He was a strong advocate for women’s education and rights, and worked to pass legislation that would improve the lives of women across the country.

One of the major contributions of Ambedkar to the lives of Indian women was the passing of the Hindu Code Bill in the 1950s. This bill aimed to improve the rights of Hindu women in areas such as marriage, divorce, and property ownership. It was a significant step towards gender equality in India, and helped to lay the groundwork for future legislation on women’s rights.

Additionally, Ambedkar worked to promote women’s education and employment opportunities. He believed that education was the key to empowering women and improving their lives, and worked to ensure that girls had access to quality education. He also pushed for policies that would encourage women’s participation in the workforce, recognizing the important role that women played in the economy.

In conclusion, Dr. Ambedkar’s efforts to improve the lives of Indian women were significant and far-reaching. Through his tireless advocacy for women’s rights, education, and employment opportunities, he helped to pave the way for future generations of women in India. His work continues to inspire and inspire others to work towards gender equality.


நன்றி: சிறகு 
டிசம்பர்  10, 2022


#செய்யறிவு, #சிறகு, #அறிவியல், #Themozhi 





Friday, December 2, 2022

தீபாவளி யாருடைய பண்டிகை?

தீபாவளி  யாருடைய பண்டிகை? என்று இந்தியாவில் உள்ள சமயங்களிடையே எழும் சச்சரவு, மன்னன் சாலமன் அரசவையில், "இது என் குழந்தை"  என்று முறையிட்ட இரு தாய்களின்  கதையையே நினைவுபடுத்தும்.  தீபாவளி  என்பது வாழ்ந்து மறைந்த சமண தீர்த்தங்கரர் மகாவீரரின் மறைவு நாளையொட்டி அவர் அளித்த அறிவொளியைப் பரப்பும் நாளாக சமணர்கள் தொன்று தொட்டுக்  கொண்டாடுகின்றனர் என்ற  'வரலாற்று அடிப்படை'  உள்ளதாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இதற்கு மாறாக, வைதீகச் சமயங்களின் தொன்மங்கள் கூறுபவை பெரும்பாலும்  இயற்கைக்கு  முரணான, நம்ப இயலாத கதைகள் போன்றவற்றின் அடிப்படையில் தீபாவளி நாளின் சிறப்பைக் கட்டமைக்கின்றன.  இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தொன்மக் கதை என்ற அளவிற்குப் பல்வேறு தீபாவளிக் கதைகள் வைதீகப் பின்புலத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

இந்தியாவின் சமணம் மற்றும் வைதீகச் சமயங்கள் தவிர்த்து பௌத்தம், சீக்கியம், பழங்குடியினர் எனப் பல பிரிவினரும்  தீபாவளி குறித்துத் தங்களுக்கு உள்ள தொடர்பு ஒன்றைக் காட்டிக் கொண்டாடி வரும் இந்தியப் பண்டிகைதான் தீபாவளி.  பன்னாட்டு அரங்கில், "தீபாவளி என்பது தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளை இந்தியர்கள் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்" என்ற ஒரு புரிதலே உள்ளது. அவர்களுக்கு இந்தியப் பண்பாடு குறித்தும், பல்வேறு  சமயங்கள் குறித்தும்  விரிவான அறிமுகமோ அவற்றுக்கான  தேவையோ  இல்லை.  இந்தியாவில் எவர் கொண்டாடினாலும் தீபாவளி என்று விளக்கேற்றி வழிபடும்  நாளின் அடிப்படையில் இருப்பது மறைந்த மூதாதையரை வழிபடுவது  என்ற கருத்தே பொதுவாக உள்ளதாகவும் அறிய முடிகிறது.

தமிழரின் புத்தாண்டு எது என்பதற்கு இணையாக ஒவ்வொரு ஆண்டும் உயிர்த்தெழும் விவாதம், யாருடைய பண்டிகை தீபாவளி? என்ற விவாதச் சரவெடிகள். திருக்குறளை  அனைவரும் தங்களுடையது என்று உரிமை கோருவதற்கு இணையானது என்றும் கூட இந்த விவாதங்களைச் சொல்லாம்.  தீபாவளி யார் பண்டிகை என்ற விவாதம் ஒரு பக்கமும், தீபாவளி  வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வது மறுபக்கமும் என ஒவ்வொரு ஆண்டும்  சமூக வலைத்தளங்களில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டுவது வழக்கமாகிவிட்டது.  இவ்விவாதங்களில் செப்பேடுகள், கல்வெட்டுகள்  எனத் தொல்லியல் தரவுகளும், இலக்கியக் குறிப்புகளும் மேற்கோள்களாகக் கொடுக்கப்படும்.

மேலும், தீபாவளி என்பதன் பெயருக்கு ஏற்ப சரவிளக்குகள் கொண்டு விளக்கேற்றுவது, கார்த்திகை என்ற மற்றொரு பண்டிகை நாளாகவும் அதற்கு அடுத்த மாதமே கொண்டாடப்படுவது வழக்கம்.  எனவே இந்த இருவேறு பண்டிகைகளும் வெவ்வேறு பெயரில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையா? அல்லது தனித்தனியான இருவேறு பண்டிகைகளை  ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் முயற்சியாக இந்த விளக்குகளின் அணிவகுப்பு விழா முயல்கிறதா என்ற ஐயங்களும் தானே எழும்புகின்றன.  சரவிளக்குகளும், கார்கால மாதமும், முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றையும்  அடிப்படையாகக்  கொண்டது இருப்பது  இந்த விளக்கேற்றும் பண்டிகை. இதில் அயல் நாட்டவர் கருதும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்ற நாள் என்ற புரிதல் ஒட்டாமல் விலகிவிடுகிறது. மறைந்தவர், கொடியவன் என்பன  போன்றவை புராணக் கற்பிதங்கள் ஆகும்.

 

விளக்கைக் குறிக்கும் 'தீப' என்ற சமஸ்கிருதச் சொல்லின்  அடிப்படையே இப் பண்டிகைக்கும் தமிழருக்கும் தொடர்பு இல்லை என்பதைக் காட்டும்.  விளக்கு, விளக்கேற்றுதல், சரவிளக்குகள் என்ற சொற்களின் [dipa(दीप), dipaka(दीपक), dipavali(दीपावलि) lamp, lightingup, row of lights]   அடிப்படையும் தீபாவளி என்ற சொல்லின் தோற்றம் சமஸ்கிருத அடிப்படை கொண்டவை.  ஆகவே தொன்று தொட்டுவரும்  வழக்கத்தை உள்ளடக்கிய ஒளி தரும் விளக்குகள் அமைக்கும் விழா என்ற விரிவான பார்வையைப் பின்னுக்குத் தள்ளி "தீபாவளி" என்ற சொல்லின் தோற்றம் எப்பொழுது  என்ற குறிப்பினை நோக்கி ஆராய்வது மேலும் தெளிவைக் கொடுக்கலாம்.

தீபாவளி என்ற சொல் எப்பொழுது தோன்றியது?

தமிழர்களால், தமிழகத்தில் கொண்டாடப்படும், தமிழகத்தின் தீபாவளி  குறித்துக் கிடைக்கும் தகவல்கள் பிற்காலத்தவை. கி.பி 1542ஆம் ஆண்டின்  திருமலை திருப்பதி கல்வெட்டைத் தீபாவளிக்கான பழைமையான  ஆதாரமாக, கல்வெட்டு அறிஞரான குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்  குறிப்பிடுவார். தீபாவளி  நாயக்கர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பண்டிகை  என்பதை இது போன்ற பிற்காலத் தரவுகளின் அடிப்படையில்  வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.

எழுநூறாண்டு பழைமையான ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஒன்று தீபாவளித் திருநாள் பற்றி குறிப்பிடுவதாக  ஒரு கருத்தை நீர்வை. தி. மயூரகிரி சர்மா முன்வைக்கிறார்.  அதற்குச் சான்றாக, "சரசோதிமாலை" என்ற நூலில் உள்ள தமிழ்ப் பாடல் ஒன்றையும் காட்டுகிறார். இலங்கையின் தம்பை மாநகரத்தில் (தம்பதெனியா) அரசு புரிந்திருந்த நான்காம் பராக்கிரமவாகு அரசர்  கேட்டுக்கொண்டபடி பிரமகுல திலகராகிய  தேனுவரைப்பெருமாள் என்று வழங்கும் போசராச பண்டிதர் இயற்றிய  நூல்தான் சரசோதிமாலை என்ற குறிப்பு இந் நூலில் உள்ளது. 

இந்த நூலின் காலம் கி.பி. 1310 என்றும்,  இந்த நூல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது  என்ற குறிப்பும் அதே நூலில் உள்ளன.  இப் பண்டிதர் சரசோதி என்பவரின் மைந்தன் ஆவார். அதனால் இந் நூல் இப்பெயர் பெற்றது என்ற வழக்கும், கோள்களின் தாக்கம் மனித வாழ்வில் விளைவிக்கும் மாறுதல்களைக் கூறும் சோதிட நூல் என்பதால் இப்பெயர் பெற்றது  என்ற வழக்கும் நூலிலேயே கொடுக்கப் பட்டுள்ளது.  இந்த நூலை  'நூலகம்' தளத்தில் (https://noolaham.net/project/55/5404/5404.pdf) படிக்கலாம். நூல் கொடுக்கும் காலகட்டம் குறித்து மேலும் ஆய்வது வரலாற்று ஆய்வாக மாறிவிடும் என்று நூல் முன்னுரையில் குறிப்பிடப்படுவதால், நூல் கொடுக்கும் தகவல் அடிப்படையில் 14 ஆம் நூற்றாண்டில், அதாவது இன்றைக்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீபாவளி/தீபாவலி என்ற சொல் வைதீகம் சார்ந்த ஒரு நூலில் தமிழில்  பதிவாகி இருப்பதாகக் கொள்ளலாம்.

சரசோதிமாலை நூலின் ஏழாவது படலமான 'தெய்வ விரதப் படலம்' (பக்கம் 44, பாடல் 17).  குறிப்பு: இந்நூலின் பக்கங்கள் சில பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

                      "தீபாவலி"

           இரவிநற்றுலைசேர்மாதமிராக்கதிர்குறையும் பக்கம்

           வருபதினான்கு வந்தவைகறைப்பொழுதுதன்னி

            லுரியநற்பிதிர்களின்பமுறு தீபாவலியாமெண்ணெய்

          மருவிவெந்நீரின்மூழ்கிமகிழ்ந்துநற்றருமஞ்செய்யே.

தீபாவலி/தீபாவளி குறித்து தகவல் ஒன்றைச் சொல்கிறது.

இப்பாடலைச் சொல் பிரித்துப் படித்தால்;

           இரவி நற்துலை சேர் மாதம் இராக்கதிர் குறையும் பக்கம்

           வரும் பதினான்கு வந்த வைகறைப் பொழுது தன்னில்

           உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய்

           மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே.

கதிரவன் துலா மாதத்தில் இருக்கும் பொழுது, அதாவது ஐப்பசி மாதத்தில்

இரவில் ஒளி குறைந்து வரும் காலமான தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம் என்ற குறைமதி காலத்தில்)

வருகின்ற பதினான்காம் நாளில் ( சதுர்தசி நாளில்) வைகறை நேரத்தில்

மூதாதையர் மகிழும் வண்ணம் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் மூழ்கிக் குளித்து

மகிழ்ச்சியுடன் அறச் செயல்கள் செய்வாயாக  என்று பாடல் கூறுகிறது.

இதைத் தொடர்ந்து வரும் பாடல் இப்பண்டிகையைத் தொடர்ந்து அடுத்த மாதமான கார்த்திகையில் கொண்டாடப்படும் கார்த்திகை  விழாவைக் குறிப்பிடுகிறது.  ஆக இது ஐப்பசி  அமாவாசை (புதுநிலவு அல்லது மறைமதி) நாளில் கொண்டாடப்படும் விளக்கேற்றும் நாளைக் குறிக்கிறது.  கி.பி. 1310 காலத்தின் நூல்  இவ்வாறாகக் குறிப்பிடுவதால் அக்காலத்தில் கொண்டாடாப் பட்டதற்கான எழுத்து வடிவில் உள்ள சான்று என்று இதைக்  கொள்ளலாம்.

இருப்பினும், இவ்வாறு குறிப்பிடப்படும் தேய்பிறை 14 ஆம் நாளில்தான் கார்த்திகை மாதத்தில் சமண தீர்த்தங்கரர் மகாவீரர் இறந்தார் என்று குறிப்பிட்டு, அதனை

           கத்திய-கிண்ஹே சௌதஸிபச்சுஸே ஸாதிணாமனக்கத்தே.

           பவாஏ ணயரியே ஏக்கோ விரேஸரோ ஸித்தோ ..

என்று 4 ஆம் நூற்றாண்டின்  ஆச்சார்யா யதிவ்ருஷபா (Acharya Yativrshabha) என்ற சமணரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட  'திரிலோக் பிரஜாபதி' (Trilok Prajapati) என்ற நூலும்;

            க்ரஷ்ண-கார்திக-பக்ஷஸ்ய சர்துதஷ்யம் நிஷாத்யயே.

           ஸ்வதியோகே த்ரதியேஅத்த-ஷுக்லத்யான-பரயணஹ் ..

என்று 9  நூற்றாண்டின் ஆச்சார்யா குணபத்ரர் ( Acharya Gunabhadra) என்பவரால் எழுதப்பட்ட  உத்தர புராணம் (Uttarapurana) என்ற சமண நூலும்  சொல்கின்றன.

மௌரிய அரசர் சந்திரகுப்தரின்  குருவாக விளங்கியவர் பத்திரபாகு (கி.மு.317-கி.மு.297) என்ற  சமண முனிவர்.   இவர் தமிழ்நாட்டில் சைன சமயம் அறிமுகமாக  முக்கிய காரணமாக இருந்தவராக அறியப்படுகிறார். கர்நாடகத்தின் சிரவண பெலகோலாவில் குரு பத்திரபாகுவின்  வழிகாட்டுதலின் கீழ் மௌரிய அரசர் சந்திரகுப்தர் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இறுதியில் சைன சமயக் கொள்கைப்படி வடக்கிருந்து உயிர்நீத்தார். சமண முனிவர் குரு பத்திரபாகுவினால் எழுதப்பட்ட கல்ப சூத்திரம்  என்ற நூல் மகாவீரர் மறைந்த நாளை முதலில் பதிவு செய்துள்ளது.

 

மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த கிமு 527ஆம் ஆண்டிலிருந்தே சமணர்களிடம் தீபாவளிப் பண்டிகை ஒரு அறிவொளி நாளாக விளக்கேற்றும் முறை வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'தீபாவளி' என்பது  முதன் முதலில்  எழுத்து வடிவில் கிடைப்பது  சமண நூலான ஹரிவம்ச புராணத்தில்தான். சற்றொப்ப 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்,  கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் (Acharya Jinasena)  இயற்றிய நூல் 'ஹரிவம்ச புராணம்'(Harivamsa Purana) ஆகும்.

            ததஸ்துஹ் லோகஹ் ப்ரதிவர்ஷம்-ஆதரத்

           ப்ரஸித்த-தீபலிகய-ஆத்ர பரதே .

           ஸமுத்யதஹ் பூஜயிதும் ஜினேஷ்வரம்

           ஜினேந்த்ர-நிர்வாண விபுதி-பக்திபக்

என்ற வரிகளில்  மகாவீரர் மறைந்த நாளில் பவபுரியில்  'திபாலிகாயா' (dipalikaya) என விளக்குகள் ஏற்றப்பட்டதாக ஆச்சாரியர் ஜினசேனர் தான் எழுதிய ஹரிவம்ச புராணம் நூலில் குறிப்பிடுகிறார்.

இந்த நூலில்தான் சமணர்கள் தீபாவளி  கொண்டாடியதாக 'தீவாளி' அல்லது 'தீபாவளி'  என்ற சொல்  முதன் முதலாக இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி என்ற குறிப்பு முதல் இலக்கியத் தடயமாகச் சமண சமயத்திற்கு எட்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது. வைதீக தமிழ் நூல் தீபாவலி என்று எழுத்தில் கொடுக்கும் சான்றுக்கும் 500 ஆண்டுகளுக்கும் முன்னர் சமண சமஸ்கிருத நூல் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

 

பிறகு 10 ஆம் நூற்றாண்டில், ஜினேந்திரர் (மகாவீரர்) நாளின்  தீப உற்சவத்திற்காக எண்ணெய்  கொடையாகக்  கொடுக்கப்பட்டதை சௌந்தட்டி (Saundatti/ கன்னட மொழியில் சவதட்டி) கல்வெட்டு குறிப்பிடுகிறது.  இது கர்நாடகாவிலுள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள பகுதி.  கல்வெட்டு குறிக்கும் காலத்தில் பெல்காம் பகுதி  குஜராத்தின் இராஷ்டிரகூட அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் சமண சயத்தின் புரவலர்களாகவும் இருந்தனர். இவர்களின் கிருஷ்ணா,  பிருத்விராமன், இலட்சுமி தேவன், கோவிந்தா போன்ற பெயர்கள் யாவும் சமணர்களைக் குறிக்கும்.   நேமிநாதரின் நெருங்கிய உறவினர் கிருஷ்ணர் என்பது சமண ஹரிவம்ச புராணம் கூறும் செய்தி.

இச்சான்றுகள்  பாரசீக பயணியும் வரலாற்று அறிஞருமான அல்-பிருனி (Al Biruni) எழுதிய  11ஆம் நூற்றாண்டு இந்திய வரலாற்று நூல் தரும் தீபாவளி குறிப்பிற்கும் முற்பட்டது. தனது 1017-1030 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்து இந்தியப் பயணத்தில் தான் கண்டதாக,   'தாரிக் அல்-இந்த்' (Tarikh Al-Hind / History of India) என்ற  இந்திய வரலாற்று நூலில் அல்-பிருனி  குறிப்பிட்ட இந்திய 'தீபாலி' (“Dibali”) என்ற பண்டிகை கேரளத்தின் மாபலி மன்னருடன் தொடர்பு கொண்டது. மாபலி மன்னர் பாதாள உலகிலிருந்து பூவுலகம் வருவதற்கு இலக்குமி உதவும் நாளைக் கொண்டாடிடும் முகமாக தீபாலி கொண்டாடப்படுவதாக அவர்  பதிவு செய்துள்ளார்.

கார்த்திகை தேய்பிறையின்  இறுதிநாள், அமாவாசை அதிகாலையில் மறைந்த மகாவீரர்  நினைவு போற்றும் சரவிளக்கேற்றும்  விழா ஐப்பசியிலும் இன்று கொண்டாடப்படுவதன் காரணம் வெவ்வேறு  வகையில் காலத்தைக் கணக்கிடும் வழக்கம் இருந்து வந்ததால் ஏற்பட்ட மாற்றமாகவும் வேறுபாடாகவும் இருக்கக்கூடும்.  வட இந்தியக் காலக்கணக்கில் வைகாசி மாதம் தொடங்கும் பொழுதுதான்  தமிழகத்தில் சித்திரை தொடங்கும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இரண்டு கணக்கிற்கும் ஒரு மாத இடைவெளி உள்ளது. இன்றைய அளவில்  எழுத்து வடிவில் கிடைக்கும் தீபாவளி என்ற சொல்லின் முதல் தோற்றத்தை ஆச்சாரியர் ஜினசேனர் எழுதிய ஹரிவம்ச புராணத்தில் காணமுடிகிறது.  இருப்பினும், தீபாவளி என்ற சொல்லுடன் கூடிய சான்று இதற்கும் முற்பட்ட இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டு போன்ற தொல்லியல் தடயங்களாகக் கிடைக்கையில் தீபாவளி என்பதன் தோற்றம் மேலும் தெளிவு பெறலாம்.

 

சான்றாதாரங்கள்:

Lord Mahavira's Nirvana: Diwali

https://www.cs.colostate.edu/~malaiya/diwali.html

 

JAINA : Federation of Jain Associations in North America

https://www.jaina.org/page/10_19_2017_Newslette

 

Sonduttee Stone with inscription [Saundatti]

The Sanskrit and Kanarese inscription slab of Krishna Rastrakuta, Shaka 797 (c. 875), and Vikramaditya, Shaka 1017 (c. 1095 A.D)

https://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/s/largeimage62711.html

 

Ain- I- Akbari.  Vol- Iii, Page 352.

https://archive.org/details/in.ernet.dli.2015.274807/page/n361/mode/2up

 

போசராச பண்டிதர் இயற்றிய 'சரசோதிமாலை'

https://noolaham.net/project/55/5404/5404.pdf

எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்.   நீர்வை. தி.மயூரகிரி சர்மா, அக்டோபர் 23, 2022.  (https://www.tamilhindu.com/2022/10/எழுநூறாண்டு-பழைய-ஈழத்துத/)

--- 

 

 

 

 

 

Saturday, November 19, 2022

தமிழகத்தின் வரலாற்றுக் காலத்தின் தொடக்கம்

அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது?


தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது?
நம் முன்னோர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்ற ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் இல்லாத பொழுது அவர்களுடைய வாழ்வியல் குறித்து அகழாய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் படிமங்கள், புதைபொருள்கள், எலும்புகள் போன்ற தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் கணிக்கப்படும் காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆகும்.    எழுத்து வடிவில் கிடைக்கும் சான்றுகளின் மூலம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய காலம் வரலாற்றுக் காலம் ஆகும்.  இது நாம் அனைவரும் பள்ளியில் படித்த வரலாறு குறித்த ஓர் அறிமுகமே.  ஆகவே எழுத்தின் தோற்றமே வரலாற்றுக் காலத்தின்  தொடக்கம் எனலாம். 

தொல்பொருட்கள் மூலம் முன்னோர் வாழ்வியலை அறியும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், முன்னோர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு எத்தகைய கருவிகளைப் பயன்படுத்தினார்கள் என்பதன் அடிப்படையில்;  கற்காலம் (பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலம்) என்றும், உலோகக் காலம் (செம்புக் காலம் மற்றும் இரும்புக் காலம்) என்றும் காலத்தைக் கணிக்க உதவியாகப் பிரித்து அறியப் படுகிறது.  வரலாற்றுக்கு முற்பட்ட காலமும் வரலாற்றுக் காலமும் ஆகிய இப்பிரிவுகள் முறையே கற்காலம் → உலோகக் காலம் → வரலாற்றுக் காலம் எனக் காலக்கோட்டில் அமைத்து வரலாறு எழுதப்படுகிறது.  


சங்க கால மக்களின் எழுத்தறிவு: 
சங்ககால இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய செய்திகள் உள்ளன.  "கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து" (அகம் 343) என்றும்,  ''பீடும் பெயரும் எழுதி "; ''எழுத்துடை நடுகல்'' போன்ற தொடர்கள் நடுகற்களில் வீரர்களின் பெயரை மட்டுமன்றி அவர்கள் எதன்பொருட்டு மரணம் எய்தினர் என்பதையும் பொறித்துள்ளனர் என்பதை அறியத் தருகின்றன.  தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்லியல் தடயங்களை அறிவியல் முறையில் கரிமப் பகுப்பாய்வு செய்து அறியப்பட்ட காலக்கணிப்பில் இன்று நாம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் சங்ககால மக்கள் எழுத்தறிவு பெற்று இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

குறியீடுகள், தமிழி எழுத்துகள் - அதன் வளர்ச்சி:
முத்திரைகளில் உருவ எழுத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவை சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்துள்ளன.  இத்தகைய குறியீடுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன.  குறிப்பாக, சிந்துவெளி குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் தென்னிந்தியாவில் 'மட்டும்' கிடைக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 70 விழுக்காடு குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. உருவ எழுத்துகளிலிருந்து குறியீடுகளும், பின்னர் அதிலிருந்து எழுத்து முறையும்  உருவானது.  அகழாய்வு கண்டுபிடிப்புகளும் இதை உறுதிப்படுத்துகிறது.   தமிழக அகழாய்வுகளில் மேலடுக்குகளில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் அதற்குக் கீழே உள்ள அடுக்குகளில் காலத்தால் முந்தைய குறியீடுகளும் கிடைக்கின்றன. 

தமிழகத்தின் தொல்லியல் அகழாய்வுகள்:
ஒரு பண்டைய நாகரிகத்தின் கூறுகளை அறிந்துகொள்ள உதவுவது அகழாய்வு. குறிப்பாக வெவ்வேறு மண்ணடுக்குகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அம்மக்கள் வாழ்ந்த காலத்தினைக் கண்டறிய உதவுகிறது.  அகழாய்வு மூலம் தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்து, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்களைச் சேகரித்து, அவற்றைச் செயல்முறைக்கு உட்படுத்தி(processing), காலக்கணிப்பு செய்து,  பதிவு செய்து, ஆய்வு செய்தல் ஒரு பகுதியின் தொன்மை மற்றும் பண்பாட்டினைக் கண்டறிய உதவுகிறது.  ஓரிடத்தில் எப்போதிலிருந்து மக்கள் வாழத் தொடங்கினர் என்பது முதல் வரலாற்றுப் போக்கில் விடை அறியாத வினாக்களுக்கும்  அகழாய்வின் மூலம் அறிவியல் வழியில்  உரிய விடை கிடைக்க வழியுண்டு.   இன்றைய நாட்களில் தமிழகத்தில் செய்யப்பட்ட பல தொல்லியல் அகழாய்வுகள் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் முன்னோர்கள் வாழ்வை நாம் அறிந்து வருகிறோம். ஆகவே தொல்லியல் ஆய்வுகளும்  தொல்லியல் அகழாய்வுகளும் தமிழர்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்த இன்றியமையாதவையாக அமைகின்றன. 

தமிழ்நாட்டில் அகழாய்வுகள்  மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான இடங்கள்:
இராமநாதபுரம் மாவட்டம்: அழகன்குளம், தேரிருவேலி
ஈரோடு மாவட்டம்: கொடுமணல்
கரூர் மாவட்டம்: கரூர்
காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி மாவட்டம்: மயிலாடும்பாறை
சிவகங்கை மாவட்டம்: கீழடி
தருமபுரி மாவட்டம்: மோதூர்
திருச்சி மாவட்டம்: உறையூர்
திருநெல்வேலி மாவட்டம்: மாங்குடி
திருவள்ளூர் மாவட்டம்: அத்திரம்பாக்கம், பட்டறைபெரும்புதூர்
தூத்துக்குடி மாவட்டம்: ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை
மதுரை மாவட்டம்: மாங்குளம்
மயிலாடுதுறை மாவட்டம்: பூம்புகார்
வேலூர் மாவட்டம்: அப்புக்கல்லு
பாண்டிச்சேரி பகுதியில் -  அரிக்கமேடு

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றது.  
1. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் - சிவகங்கை மாவட்டம் 
2. சிவகளை - தூத்துக்குடி மாவட்டம் 
3. கங்கைகொண்ட சோழபுரம் - அரியலூர் மாவட்டம் 
4. மயிலாடும்பாறை - கிருஷ்ணகிரி மாவட்டம் 
5. வெம்பக்கோட்டை - விருதுநகர் மாவட்டம் 
6. துலுக்கர்பட்டி - திருநெல்வேலி மாவட்டம் 
7. பெரும்பாலை - தர்மபுரி மாவட்டம்

அத்திரம்பாக்கம் அகழாய்வு  (15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்): 
அத்திரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் — 
இந்தியாவில் காலத்தால் முற்பட்டதாகக் கிடைத்திருப்பவை அத்திரம்பாக்கம் தொல்லியல் தடயங்கள். அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் உணவுக்காக விவசாயம் செய்தல், கால்நடை விலங்குகளை  வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில், கொற்றலையாறு பகுதியில் அமைந்துள்ளது அத்திரம்பாக்கம். இப்பகுதி கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கும் பகுதி.  இங்கு வாழ்ந்த மக்கள் அச்சூலியன் கருவி என்றழைக்கப்படும் கைக்கோடரி கருவிகளை ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) கற்களைக் கொண்டு உருவாக்கியுள்ளார்கள். இந்த அச்சூலியன் கருவிகள்  வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும்  முற்கால மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுநர்கள்  19ஆம் நூற்றாண்டில் அத்திரம்பாக்கத்தில் தொல்லியல் தடயங்களாகக் கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்தனர். அண்மையில் சாந்தி பப்பு செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.  அத்திரம்பாக்கம் அகழாய்வின் மூலம்  கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பட்டறைபெரும்புதூர் அகழாய்வு (30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்): 
பட்டறைபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் — 
சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் நடந்த அகழாய்வு தொல்லியல் அகழாய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். பட்டறைபெரும்புதூர் அகழாய்வின் முக்கியத்துவம்; தமிழ்நாட்டில் இந்நாள்வரை அகழாய்வு நடந்த பகுதிகளில்,  இவ்விடத்தில் மட்டும்தான் கற்காலம் முதல் தற்போதைய காலம் வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததற்கான  பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காட்டும்  தடயங்களை  இங்குள்ள அகழாய்வு அடுக்குகளின் வழி  அறியமுடிந்துள்ளது. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பெருங்கற்காலத்தை (Megalithic Period) சேர்ந்த கைக்கோடரி, கத்தி, சுரண்டி (scrapper) போன்ற கற்கருவிகள் போன்றவையும், சங்ககாலச் செங்கற் கிணறு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. 

4200 ஆண்டுகள் பழமையான இரும்பு பயன்பாடு அறிந்திருந்த மயிலாடும்பாறை நாகரிகம் 
மயிலாடும்பாறை அகழாய்வு(கி.மு.2040):
மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் —
தமிழ்நாடு  மாநிலத் தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை பகுதியில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் 4200 ஆண்டுகளுக்கு முன்னர் என்ற மிக முக்கிய தரவு கிடைக்கப் பெற்றது.  இதற்குச்  சான்றாக இரும்புக் கால ஈமப்பொருட்கள், இரும்பால் ஆன நீண்ட வாள் போன்றவை மயிலாடும்பாறையில் கிடைத்துள்ளன.  

3200 ஆண்டுகள் பழமையான பொருநை ஆற்றங்கரை நாகரிகம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு (கி.மு.950):
ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் — 
இந்நாட்களில் தாமிரபரணி என்று அறியப்படும் பொருநை ஆற்றின் தென்கரையில்  ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.  தென்னிந்தியாவின் நாகரிகத் தொட்டில் என்று கூறக்கூடிய சிறப்புப் பெற்றது ஆதிச்சநல்லூர் - பொருநை ஆற்றங்கரையின் நாகரிகம். 

ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் யாகோர் (Dr. Jagor, 1816 — 1900) 1876ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூர் பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் மிகப்பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகளைக் கொண்ட பண்டைய ஈமக்காடு இங்கிருப்பதைக் கண்டறிந்தார்.  ஆதிச்சநல்லூர் ஈமக்காடு 115 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அவர் இப்பகுதியில் சேகரித்த தொல் பொருட்கள் பெர்லின் அருங்காட்சியகத்தின் சேமிப்பில் உள்ளன.  தற்பொழுது  ஜெர்மனியின் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறும் "அகம் புறம்" என்ற தமிழர் பண்பாட்டுக் காட்சியில் இவை  மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

டாக்டர் யாகோர் செய்த ஆய்விற்குப் பின்னர்,  ஆதிச்சநல்லூர் பகுதியில்  பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா (Alexander Rea, 1858 — 1924) 1903-04-ஆம் ஆண்டுகளில் பெரிய அளவில் அகழாய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆய்வில் கிடைக்கப் பெற்ற தொல்லியல் பொருட்கள்  தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்திய ஒன்றிய அரசின் தொல்லியல் துறை 2003 ஆம் ஆண்டு முதல் நிகழ்த்திய தொல்லியல் அகழாய்வில்  பல முதுமக்கள் தாழிகள் வெளிக் கொணரப்பட்டன.  பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டிலும், அதன் அருகில் உள்ள வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகளை மேற்கொண்டது. ஈமத்தாழிகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற பல தொல்பொருட்கள் இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன.  

2021-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் வாழ்விடப்பகுதி முதன்முதலாகக் கண்டறியப்பட்டு ஆதிச்சநல்லூர் வாழ்விடப்பகுதியில்  அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் மூலக்கற்கள் மற்றும் நுண்கருவிகள், மேற்கூரை ஓடுகள், இரும்பு ஆணிகள், இரும்பினாலான தொல்பொருட்கள், கண்ணாடி மணிகள், குறியீடுகள் மற்றும்  தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நுண்கற்காலம் முதல் தொடக்க வரலாற்றுக் காலம் வரை இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த ஈமத்தாழியில் நெற்கதிர், பெண் உருவம், மான், முதலை போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வளமையின் வெளிப்பாடாக வடிக்கப்பட்டுள்ளன. பொன்னால் ஆன நெற்றிப்பட்டங்கள், உயர் ரக வெண்கலப் பாத்திரங்கள் (High tin bronze), வெண்கலத்தினால் ஆன விலங்கு, பறவை கலைப் பொருட்கள், வாள், குறுவாள் போன்ற இரும்பினால் ஆன ஆயுதங்கள், ஈமத்தாழிக்குள் நெல்மணிகள் ஆகியவை ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டு அகழாய்வில் கிடைக்கப் பெற்றன. ஈமத்தாழிக்குள் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு  செய்ததில்,   நெல்மணிகளின் காலம் கி.மு.950 என்று அறியப்பட்டுள்ளது. 

சிவகளை அகழாய்வு (கி.மு. 1155):
சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் — 
சிவகளை பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.  ஆதிச்சநல்லூருக்கும் சிவகளைக்கும் இடையேயான தொலைவு 13 கி.மீ.  சிவகளை பகுதி ஈமக்காடு 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு-சிவப்பு நிறக் கிண்ணம், முதுமக்கள் தாழிகள், உயர் ரக வெண்கலப் பாத்திரங்கள் (High tin bronze),  இரும்பு உளி,  ஈமத்தாழிக்குள் நெல்மணிகள் ஆகியன கிடைக்கப் பெற்றன. 

ஈமத்தாழிக்குள் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு  செய்ததில்,   நெல்மணிகளின் காலம்  கி.மு. 1155 என்று அறியப்பட்டுள்ளது. சிவகளை காலக்கணிப்பின் அடிப்படையில் ஆதிச்சநல்லூருக்கும் முற்பட்டதாக இருப்பதை அறிய முடிகிறது. 

கொற்கை அகழாய்வு (கி.மு. 785): 
கொற்கை, தூத்துக்குடி மாவட்டம் — 
கொற்கை  இடைச் சங்க காலத்தில் பாண்டியர்களின் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் விளங்கியது.  வெண்டேர்ச் செழியன் முதலாக, முடத்திருமாறன் ஈறாக, 79 பாண்டியர்கள் ஆட்சி கொற்கையில் நடைபெற்றுள்ளது.   கொற்கை கோமான், கொற்கைக் கோன், கொற்கை பொருநன், கொற்கை வேந்தன் போன்ற பெயர்களின் மூலம் கொற்கையின் வரலாற்றுச் சிறப்பை அறிய முடிகிறது.   தாலமி, பிளினி, மெகஸ்தனிஸ் போன்ற அயல் நாட்டவர்கள் எழுதிய குறிப்புகளில்  'கொல்சிஸ்', 'கொல்காய்' என்று கொற்கையைக்  குறிப்பிட்டுள்ளனர்.  

கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வழுவழுப்பான வடக்கத்திய கருப்புநிற மட்கல ஓடுகள்(Northern Black Polished ware),  மற்றும் கருப்பு பூச்சுப்பெற்ற மட்கல ஓடுகள் (Black slipped Ware), வட இந்தியக் கருப்புப் பூச்சுப் பெற்ற பானை ஓடு,  9 அடுக்கு கொண்ட துளையிடப்பட்ட குழாய்கள், சங்கு வளையல்கள், வளையல் செய்ய அறுக்கப்பட்ட சங்குகள், அவற்றின் சில்லுகள் ஆகியன கொற்கை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே  தென்னிந்தியா இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடன் வணிகம் மூலம் நன்கு இணைக்கப்பட்டிருந்தது என்பதை இச்சான்றுகள்   தெளிவாகக்காட்டுகின்றன. கரிமப் பகுப்பாய்வு மூலம் கொற்கை கி.மு. 785 என்று காலக்கணக்கீடு பெறப்பட்டுள்ளது.

கொற்கை - ஆழ்கடல் ஆய்வு:  தற்பொழுது கொற்கை கடலிலிருந்து உட்புறம் சுமார் 7 கிமீ தொலைவில் இருப்பதால், சங்க காலப் பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண   இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ஆகியவற்றுடன் இணைந்து முதற்கட்ட முன்கள ஆய்வு 02.09.2021 முதல் 09.02.2022 வரை மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

2,500 ஆண்டுகள் பழமையான அழகன்குளம் நாகரிகம்
அழகன்குளம் அகழாய்வு (கி.மு. 465): 
அழகன்குளம், இராமநாதபுரம் மாவட்டம் — 
சங்ககாலப் பாண்டியர்களின் துறைமுகங்களில் அழகன்குளம் துறைமுகமும் ஒன்று. வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அழகன்குளம் அமைந்துள்ளது.  இங்கு நடந்த அகழாய்வில் கிடைக்கப் பெற்ற  ரோம் நாட்டுக் காசுகள், ரோம் நாட்டு அம்ஃபோரா  மதுச்சாடிகள் (amphorae), ரோம் நாட்டுப் பானை ஓடுகள்,  ரோம் நாட்டு மட்பாண்டங்கள், வெள்ளி முத்திரைக் காசுகள் ரோம் நாட்டுடன் அழகன்குளம் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கான சான்றுகளாக அமைகின்றன.   மேலும், அழகன்குளத்தில் இருந்த தொன்மக்காலச் சங்கு வளையல் தொழிற்கூடம், கல்மணிகள், கங்கைச் சமவெளி பானை ஓடுகள் போன்ற சான்றுகள் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் இருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக அமைகின்றன.   

2,500 ஆண்டுகள் பழமையான கொடுமணல் நாகரிகம்
கொடுமணல் அகழாய்வு:
கொடுமணல், ஈரோடு மாவட்டம் — 
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது. “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”  (பதிற்றுப்பத்து, 74:5-6) என்னும் சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக  கொடுமணல் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  கொடுமணல் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலகட்டங்களில்  மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.

கொடுமணலின் தொல்லியல் சிறப்பு அதன் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும், அரியவகை வகை மணிகளும் ஆகும்.  இதுகாறும் தமிழ்நாட்டில் மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற தமிழி எழுத்துப்பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் மொத்தம் 1532; இவற்றில் கொடுமணலில் மட்டுமே கிடைக்கப்பெற்ற  தமிழி எழுத்துப்பொறிப்பு கொண்ட பானை ஓடுகளின் எண்ணிக்கை 1146 என்பது கொடுமணல் அகழாய்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும். கொடுமணலில் கற்பதுக்கைகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

தமிழியில் "ஆதன்" என்று பொறிக்கப்பட்ட பானையோடு,   தமிழி எழுத்துக்களில் "ள் அகுர (வன்)" என்று பொறிக்கப்பட்ட பானையோடு ஆகியன இங்குக் கண்டெடுக்கப்பட்டது.மேலும் பண்டைய நாட்களில் கொடுமணல் தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது என்பதற்குச் சான்றுகளாக  இரும்பு உலை தொழிற்கூடம், மணிகள் தொழிற்கூடம்  இருந்த  தடயங்களும் கிடைத்துள்ளன.  

பலவகை பளிங்குக் கற்கள் மணிகள் இங்குக் கிடைத்துள்ளன.  அத்துடன்  இங்குக் கிடைத்த கார்னீலியன் (சூதுபவளம்), அகேட் வகைக் கல் மணிகள் (மூலக்கற்கள்) மராட்டியம், குஜராத் பகுதிகளில் கிடைப்பவை. இவை கொடுமணல்  பகுதிக்கு மூலப் பொருட்களாகக் கொண்டுவரப்பட்டு பட்டை தீட்டப்பட்டு, மெருகேற்றப் பட்டு, துளையிடப்பட்டு  அணிகலன்கள் செய்யும் மணிகளாக மாற்றும் தொழில் கொடுமணலின் மணிகள் தொழிற்கூடத்தில் நடைபெற்று இந்தமையைக் கிடைக்கப் பெற்ற மணிகளின் மூலம் அறிய முடிகிறது.  இது பழங்கால வணிக நடவடிக்கைகளுக்குச் சான்றாகவும் அமைகிறது.  இவ்வாறு மணிகள் தயாரிக்கும் தொழில் இன்றுவரை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருவதும் தொன்மையைப் பறைசாற்றும் சிறப்பு.  

2600 ஆண்டுகள் பழமையான வைகை ஆற்றங்கரை நாகரிகம்
கீழடி அகழாய்வு (கி.மு. 580): 
கீழடி, சிவகங்கை மாவட்டம் — 
அகழாய்வு குறித்துக் கூறினால் அதைக் கீழடி அகழாய்வுடன் இணைத்துக் குறிப்பிடும் அளவிற்கு இன்றைய நாட்களில் கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள் பரவலாக  மக்களிடம்  சென்று சேர்ந்துள்ளது.  அதற்குக் காரணம் தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டிருந்த கருத்துகளை மீள்பார்வை செய்ய வைத்தது கீழடி  அகழாய்வு வெளிக்கொணர்ந்த கண்டுபிடிப்புகள்.  

கீழடி அகழாய்வு முடிவுகளுக்கு முன்னர் இந்திய வரலாற்று ஆசிரியர்களின் கருதுகோள்களாக இருந்தவை; 
தென்னிந்தியாவில் நகர நாகரிகம் இருந்ததில்லை, சிந்துவெளிக்குப் பிறகு இரண்டாவது நகர நாகரிகம் கங்கைச் சமவெளியில் தான் தோன்றியது. தமிழகத்திற்கு எழுத்தறிவு வட இந்தியாவில் இருந்துதான் வந்தது. சங்ககால தமிழகத்தில் கிராமப்புறப் பொருளாதாரம் நிலவவில்லை,  சங்ககால தமிழகத்தில் அரசுருவாக்கம் கிடையாது என்பது போன்ற பல கருதுகோள்கள்.  இக்கருதுகோள்களை   முறியடிக்க அறிவியல் வழியில் கீழடி அகழாய்வுச் சான்றுகள் உதவின. மேலும், சங்க இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் உண்மையே, அவை அக்காலப் புலவர்களின் கற்பனை அல்ல என்று மெய்ப்பிக்கும் வகையில் பல செய்யுள்களின்  வரிகளை அகழாய்வுச் சான்றுகளுடன் பொருத்திப் பார்க்கும் வண்ணமும் கீழடியின் தொல்லியல் சான்றுகள் உதவின. 

கரிமப் பகுப்பாய்வின் மூலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகம் என்று உறுதி செய்யப்படும் கீழடி நாகரிகத்தின் மக்கள் கட்டுமான அமைப்புகள் மற்றும் தொழில் நுட்பத்தில் கொண்ட முதிர்ச்சி பெற்ற நாகரிகமாகவும், எளிய மக்களும் எழுத்தறிவு பெற்ற சமூகமாகவும், கைவினைத் தொழில்களில் சிறந்த தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் வளமையான சமூகத்தினராகவும், திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் விளையாட்டுகள் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும்,  உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருந்ததற்குச் சான்றுகள் பல  கிடைத்துள்ளன. 

கரிமப் பகுப்பாய்வு (AMS Dating) முறைப்படி கீழடி கி.மு. 580 ஆண்டுக் காலப் பழமையானது என்று அறியப்பட்டுள்ளது.  செங்கல் கட்டுமானங்கள்  கீழடியின் தனிச்சிறப்பு.  கட்டிடங்கள், சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள், உறைக் கிணறுகள், செங்கற்சுவர்கள், மண்பாண்டங்கள், தமிழி  எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், குறியீடுகள் கொண்ட மட்பாண்ட ஓடுகள், சிந்துவெளி எழுத்துக்களை ஒத்திருக்கும் குறியீடுகள் வரிவடிவங்கள் சில கொண்ட பானை ஓடுகள்,  தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் உருவ பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. 

கீழடி கட்டுமானங்கள் காட்டும் கட்டடத் தொழில்நுட்பம்;  "செம்பு இயன்றன்ன நெடுஞ்சுவர்" (மதுரைக் காஞ்சி - 455), "நூல் அறி புலவர் நுண்ணிதின கயிறு" (நெடுநல்வாடை- 74) போன்ற அரண்மனையை உருவாக்கிய முறையைக் கூறும் பாடல் வரிகளுக்கு ஒப்ப அமைந்துள்ளன.  

எலும்பினாலான கூர்முனைப் பகுதிகள் (Bone Points), தக்களிகள் (Spindle Whorls) போன்ற நெசவுத் தொழில் கருவிகளும்;  

மட்பாண்டங்கள், குடுவைகள், கிண்ணங்கள், பானைகள், அரவைக் கல், காட்டுப்பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள சூதுபவளம் மணி (கார்னீலியன்), கண்ணாடி மணிகள்,  போன்றவை பண்டைய மக்களின் கைவினைத் தொழில்களுக்குச் சான்றாகவும்  கிடைத்துள்ளன. 

வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு அவர்களின் வாழ்வியல் பகுதியாக இருந்ததைக் காட்டும் வகையில் சிந்துவெளிப் பண்பாட்டை ஒத்திருந்த  திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்ட சான்றுகளும் கிடைத்துள்ளன. 

வளமையை வெளிப்படுத்தும் தங்க அணிகலன்கள், சுடுமண்ணைக் கொண்டு வட்டவடிவில் தட்டையாகக் காது துளையில் பொருத்தும் காதணிகள் பண்டைய மக்களின் வாழ்க்கை முறையில் இருந்ததையும்; 

திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் பகடைக்காய் விளையாட்டுகள், வட்டச் சில்லுகள், ஆட்டக் காய்கள் விளையாட்டு மற்றும் பொழுது போக்குகள் இருந்ததற்கான சான்றுகளும்  கிடைத்துள்ளன.  

கங்கைச் சமவெளி சார்ந்த கி.மு.5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரை நாணயம், பல்வேறு அளவுகளில் கற்களால் ஆன எடைக்கற்கள், ஆமை உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் முத்திரைகள், ரோம் நாட்டு ரௌலட்டட் மட்கலன், இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கக் கூடிய அகேட் மற்றும் கார்னீலியன் மணிகள் உள்நாட்டு அயல்நாட்டு வணிக தொடர்புகளுக்கான சான்றுகளாகக் கிடைத்துள்ளன. 

கீழடி பகுதிக்கு அண்மையில் அகழாய்வு நடத்தப்படும் கொந்தகையில்  ஈமத்தாழிகள், படையல் பொருட்கள் (பெரும்படை) ஆகியன கிடைத்துள்ளன.  

அகழாய்வு சான்றுகளின் காலக்கணிப்பின் அடிப்படையில் மக்கள் வாழ்ந்த காலத்தையும், நாகரிகத்தையும் காலக்கோட்டில்  அறிந்து கொள்வதே வரலாற்றை அறிவதன் தொடக்கப் புள்ளி.  காலத்தில் பின்னோக்கி வரலாற்றை அறிவதன் மூலம் நாம் எங்கிருந்து இந்த நிலையை  எட்டியுள்ளோம் என்று புரிந்து கொண்டாலே நம் எதிர்கால முன்னேற்றம் குறித்துத் தெளிவாகச் சிந்திக்க இயலும். 


நன்றி:   தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை   நவம்பர் 15, 2022 அன்று ஏற்பாடு செய்திருந்த   டாக்டர் பழனி ஜி பெரியசாமி  அறக்கட்டளை உரையில்,  மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் "பின்நகரும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து" என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 



நன்றி: சிறகு 
நவம்பர் 19, 26 - 2022


#தொல்லியல், #சிறகு, #வரலாறு, #Themozhi