செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஓவியங்கள்
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலைப் போட்டியில், ஓவியங்களுக்கான பிரிவில் ஜேசன் எம். ஆலன் (Jason M. Allen) என்பவர் செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு உருவாக்கிய "தியேட்டர் டி' ஓபெரா ஸ்பேஷியல்"(Théâtre D’opéra Spatial) என்ற எண்ணிம முறை ஓவியம் பரிசு பெற்றது. வளர்ந்து வரும் டிஜிட்டல் கலைஞர்களுக்கான வாய்ப்பை இது உருவாக்கினாலும், படைப்பாற்றல் என்றால் என்ன? கலை என்றால் என்ன? என்ற அடிப்படைக் கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க ஓவியம் 'எட்மண்ட் டி பெலமியின் உருவப்படம்' (Portrait of Edmond Belamy) என்ற ஓர் ஓவியம். இது 17 ஆம் நூற்றாண்டின் டச்சு ஓவியரான ரெம்ப்ராண்ட் (Rembrandt) வரையும் ஓவிய முறையினை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பியச் செல்வந்தர் ஒருவரை வரைந்த முற்றுப்பெறாத ஓவியம் போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டது. பியர் ஃபாட்ரெல் (Pierre Fautrel) என்ற ஒரு கலைஞர் ஒருவரும், ஹ்யூகோ கேசெல்ஸ்-டுப்ரே (Hugo Caselles-Dupré) என்ற கணினி அறிவியலாளர் ஒருவரும், கௌதியர் வெர்னியர் (Gauthier Vernier) என்ற பொருளாதார வல்லுநர் ஒருவரும் இணைந்த 'ஆப்வியஸ் ஆர்ட்' (Obvious Art) என்ற குழுவின் பிரெஞ்சு கூட்டு முயற்சியாக இந்த ஓவியத்தை உருவாக்கினார்கள். இக்குழுவினர் 14 முதல் 20 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வரையப்பட்ட 15,000 படங்களைக் கணினிக்கு அடிப்படைத் தரவுகளாக அளித்தனர். கணினியில் ஏற்றப்பட்ட இத்தரவுகளைப் பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு, குழுவினர் தந்த விதிகளுக்கு ஏற்ப எட்மண்ட் டி பெலமியின் உருவப்படம் என்ற ஓவியத்தை வரைந்து கொடுத்தது. இந்த ஓவியம் ஏலம் விடும் நியூயார்க் கிறிஸ்டி நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்டு, எதிர்பார்த்ததை விட 45 மடங்கு அதிகமான தொகையாக 432,500 டாலர்கள் கொடுத்து வாங்கப் பட்டது.
இவ்வாறு கலைப்போட்டியில் பரிசு வெல்வதும், ஏலத்தில் அதிகத் தொகை கொடுத்து வாங்கப்படுவதும் என்று செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாகும் ஓவியங்கள் நுண்கலைத் துறையில் புதிய எல்லைகளைத் தாண்டியுள்ளது. இது மனித வரலாற்றில் கலைகள் உருவாக்கத்தில் ஒரு திருப்புமுனை.
ஆதிகாலத்தில் குகைகளில் வெள்ளை சுண்ணாம்புக் கட்டியையோ அல்லது சிவப்பு இரும்புத் தாது நிறைந்த சிவப்பு நிறக் கற்களையோ கொண்டு தன் குழுக்களுக்குச் சில செய்திகளைக் கடத்தும் நோக்கில் குச்சி மனிதர்கள் குச்சி விலங்குகள் என உருவங்களைக் குகைகளின் சுவரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கீறிக் கொண்டிருந்த மனித இனம், இன்று செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஓவியம் உருவாக்குவது வியக்கத்தக்க ஒரு வளர்ச்சிதான்.
கணினி உதவியுடன் படங்கள் உருவாக்கும் முறை 1960களில் முதலில் துவங்கி விட்டது. ஹரால்ட் கோஹன் (Harold Cohen) என்ற ஓவியர் கணினி உதவியுடன் கோட்டோவியங்களை உருவாக்கி பின்னர் அதற்கு வண்ணம் தீட்டும் முயற்சியில் முதலில் இறங்கினார். தற்பொழுது கைபேசி செயலிகள் மூலம் செயற்கை நுண்ணறிவு படம் உருவாக்கும் (AI art Generator/AI-image generator) சில செயலிகள் வெளிவந்துள்ளன. பெரும்பான்மையான செயற்கை நுண்ணறிவு பட உருவாக்கம் ஆர்வலர்கள் இணையம் வழியாக டால் இ (DALL-E), மிட்ஜர்னி (Midjourney), ஸ்டேபில் டிஃபியூஷன்(Stable Diffusion), கூகுள் நிறுவனத்தின் 'கூகுள் ப்ரெய்ன் இமேஜன் மற்றும் பார்ட்டி' (Google Brain Imagen and Parti) , மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 'நுவா-இன்ஃபினிட்டி' (NUWA-Infinity) போன்றவை குறித்தும் அறிவார்கள். இவற்றில் சில இன்னமும் சோதனை நிலையிலும் தயாரிப்பு நிலையில் உள்ளன, மற்றும் சில பயனாளர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் சில நொடிகளில் ஆயிரக்கணக்கான படங்களை ஆர்வலர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
கனடா நாட்டின் புகழ் பெற்ற செல்வந்தரும் தொழில் நுட்ப வளர்ச்சிகளில் ஆர்வம் கொண்டவருமான 'எலான் மஸ்க்' (Elon Musk) அவர்களின் கூட்டு முயற்சியில் 'ஓப்பன் ஏ.ஐ.'(OpenAI) என்ற நிறுவனம், டால் இ என்ற செயற்கை நுண்ணறிவு உதவியால் படம் உருவாக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளது. சோதனை வடிவில் மிகச் சிலரின் பயன்பாட்டிலிருந்த செயற்கை நுண்ணறிவு டால் இ யை, செப்டெம்பர் 2022 இல் ஓப்பன் ஏ.ஐ. நிறுவனம் பொதுமக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தது. அதன் பிறகு ஆர்வலர்கள் மில்லியன் கணக்கில் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு 2 மில்லியன் படங்கள் 1.5 மில்லியன் மக்களால் டால் இ மூலம் உருவாக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் கலைப் படைப்புகளை உருவாக்குவது மிகவும் எளிதானது. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் துறையின் ஒரு பகுதியான, 'இயந்திர கற்றல்' (machine learning) முறை இதனைச் செயல்படுத்துகிறது. நாம் பார்க்க விரும்பும் காட்சியைச் சொன்னால் அது தேவையான புகைப்படம் அல்லது ஓவியம் போலவே உருவாக்கித் தரும். கணினி நிரல்கள் எதுவும் எழுதாமல் வெறும் 'பேச்சு மொழியில்' (natural language processing) சொன்னாலே படம் கிடைத்துவிடும். இக்கட்டளை 'டெக்ஸ்ட் ப்ராம்ட்' (text prompt) என்று குறிப்பிடப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு விளக்கமாக, விவரிப்புகளுடன் கட்டளை கொடுக்கப்படுகிறதோ, அதற்கு ஏற்ப உருவாக்கப்படும் படம் பயனாளரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக அமையும். கூகுள் இணையத் தேடல்களுக்கு ஏற்ற குறிப்பைக் கொடுத்தால் அது தேவையான படங்களை எடுத்துக் கொடுப்பதற்கு அடுத்த கட்டம் இது எனலாம். இதில் கிடைக்கும் படங்கள் தனித்துவமாகப் புதிதாக உருவாக்கப்படுபவை என்பதுதான் வேறுபாடு.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தரவுகளிலிருந்து படத்தைப் பெறுவது இரு படி முறை கட்டங்களைக் கொண்டது. முதல் கட்டம் 'உருவாக்குதல்' (ஜெனரேட்டர்/Generator), அடுத்த கட்டம் 'தெரிவு செய்தல்' (டிஸ்க்ரிமினேட்டர்/Discriminator). செயல்முறை எடுத்துக் காட்டாக, செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் "சிறுமிகள் தோட்டத்தில் நடனமாடுவது போல ஒரு படம் வேண்டும்" என்று கட்டளை இட்டால், அது ஒரு அரை நிமிடத்தில் சில படங்களை உருவாக்கிக் கொடுக்கும். இது முதல் கட்டம். பிறகு, கொடுக்கப்பட்ட சில படங்களில் நாம் சொன்ன வரையறைக்கு மிக நெருக்கமாக நாம் விரும்பும் வண்ணம் ஏதாவது படம் இருந்தால் அதைத் தேர்வு செய்வது அடுத்த கட்டம். பிறகு, மேற்கொண்டு விரும்பினால் அதைப் போல வேறு சில படங்களையும் காட்டச் சொல்லலாம். அடுத்து இவ்வாறு கிடைக்கும் படங்களை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு நம் கைவண்ணத்தைக் காட்டி, மேலும் நாமே திருத்தி நமக்கு வேண்டுவது போலவும் செம்மைப் படுத்திக் கொள்ளலாம். இது புகைப்படம் போல உருவாக்கப் பட்டிருக்கும். மாறாக, ஒரு ஓவியம் போல வேண்டும் என்றால் அதற்கான கட்டளையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி ஓவியப் பாணியிலோ, பப்லோ பிக்காசோ ஓவியப் பாணியிலோ அல்லது ரவிவர்மா ஓவியம் போலவோ படம் இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப ஓவியம் உருவாக்கப் பட்டிருக்கும்.
இதில் கட்டளை கொடுத்தவர் ஓவியரும் அல்லர், அவர் ஓவியராக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. கணினியின் செயற்கை நுண்ணறிவு அது தான் அறிந்த பல தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு எண்ணிம ஓவியம் ஒன்றைக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்ப உருவாக்கித் தருகிறது. ஆக அதுவும் ஒரு ஓவியரல்ல. ஆனால் இப்பொழுது ஒரு கலைப்படைப்பு, ஒரு ஓவியம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் இது உண்மையிலேயே ஒரு கலைதானா என்பதும், கலைஞர்களின் வாழ்க்கையில் இந்தத் தொழில்நுட்பம் கொடுக்கும் தாக்கம் என்ன என்பதும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. அத்துடன் பயனாளரும் செயற்கை நுண்ணறிவும் கூட்டாக உருவாக்கும் படத்தின் காப்புரிமை எத்தகையது என்ற சிக்கல்களும் விவாதத்தில் உள்ளது.
தற்பொழுது பயனாளர் படத்தின் காப்புரிமையைக் கொண்டுள்ளார் என்று செயற்கை நுண்ணறிவு படம் உருவாக்க உதவும் நிறுவனங்கள் கூறுகின்றன. எவரும் தனக்கு வேண்டும் வகையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் படங்கள் உருவாக்கிக் கொள்ளலாம் என்றால் பாதிக்கப்படப் போவது தொழில்முறை ஓவியர்கள். அவர்களின் ஓவியப்பாணியையே பின்பற்றி அவர்களுடைய ஓவியங்கள் போல வரைந்து கொள்ளும் பொழுது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகிறது. ஒருவரின் படைப்பை மற்றவர் பயன்படுத்துவதை மட்டுமே காப்புரிமைச் சட்டம் தடுக்கிறது. ஆனால் அவர் பாணியைப் பின்பற்றி மற்றவர் வரைவதைக் காப்புரிமை சட்டத்தால் தடுக்க இயலாது. சட்டத்தை மீறாமல் காப்புரிமையை மீறாமல் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் படங்களால் தங்களுக்கு எனத் தனி ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, வரைந்து தங்கள் துறையில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்ட ஓவியர்கள் இப்பொழுது இக்கட்டிற்கு ஆளாகி உள்ளார்கள். இனி உருவாகும் ஓவியர்களும் ஒரு சில படங்கள் வரைந்து தாங்கள் வரையும் பாணி ஒன்றை உருவாக்கிக் கொண்டாலும், அவையும் இனி செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உடனே பரவலாகிவிடும். ஆகவே, வாழும் தொழில்முறை கலைஞர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு அறப்படி அவர்களின் படைப்புகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும் தேவையும் உள்ளது. இந்தத் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் உள்ளதால் இது குறித்த விவாதங்கள் இன்னமும் பரவலாகவில்லை. ஆனால், புகைப்படச் சேவைகள் தரும் 'கேட்டி இமேஜ்' (Getty Images) போன்ற படத் தொகுப்பு (stock images) நிறுவனங்கள் எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க விழைந்து, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கிச் சமர்ப்பிக்கப்படும் படங்களை ஏற்பதில்லை என்ற முடிவுடன் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு ஓவிய முறையானது தொழில் நுட்பத்தைக் கையாளும் ஆர்வலர்களின் பிடியில் இன்றைய நிலையில் இருக்கிறது என்பதும், ஆனால் கலைஞர்களின் பயன்பாட்டில் அதிகம் இல்லை என்பதும்தான் இத்துறை சார்ந்தவர் கணிப்பு. பயனாளர்கள் ஆபாசமான, அருவருப்பான படங்கள் உருவாக்கிப் பகிர்வதையும், அத்துடன் புகழ்பெற்ற நிலையில் வாழும் பெரிய மனிதர்களை, அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டு ஓவியங்களை உருவாக்கிப் பகிர்வதையும் தற்பொழுது செயற்கை நுண்ணறிவு படம் உருவாக்க உதவும் நிறுவனங்கள் தங்களின் உறுப்பினருக்கான விதிமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் தடை செய்துள்ளன.
நானும் சில ஓவியங்களைத் தீட்டியுள்ள நிலையிலும், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சில படங்களை உருவாக்கிய பட்டறிவின் அடிப்படையிலும் சிந்தித்தால், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்படும் படங்கள் மனதிற்கு நிறைவு தரவில்லை. தூரிகை கொண்டு வரைந்த பிறகு, படத்திலிருந்து பின்னே சில அடிகள் சென்று, வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் பொழுது பெறும் மனநிறைவும், அல்லது சில காலம் கடந்து நாம் வரைந்த படம் ஒன்றைப் பார்க்கும்பொழுது, அட! நாமா இப்படி ஓர் ஓவியம் தீட்டினோம் என்று வியந்து மகிழும் மனநிறைவும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கும் படங்களில் என்றும் கிடைக்கப்போவதில்லை. இதை எந்த ஓவியக் கலைஞரும் அறுதியிட்டுச் சொல்வார். ஆனால் தொழில் முறையில், குறிப்பிட்ட காலநெருக்கடியில் வேலை செய்து கொண்டிருக்கும் வணிக ஓவியர்களின் வேலையைச் செயற்கை நுண்ணறிவு பெருமளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் படங்கள் உருவாக்க உதவும் சில இணைய தளங்கள்: DALL-E; Midjourney; The Stable Diffusion search engine
டால் இ - செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நான் உருவாக்கிய படங்கள்: தாயின் அன்பு மழையில் மழலை; குளக்கரையில் தாமரையுடன் புத்தர்; தோட்டத்தில் விளையாடும் சிறுமிகள்; மயிலாடும் சோலையில் காதலர்கள்; மயக்கும் மாலைநேரக் கடற்கரை
நன்றி: "நன்னூல்" (கலை - இலக்கிய மானுடவியல் இரு மாத இதழ்).
டிசம்பர் - ஜனவரி 2023
#செய்யறிவு, #நன்னூல், #அறிவியல், #Themozhi, #ஓவியம்
செய்யறிவு உருவாக்கிய
பெரியார் ஓவியம்












