Saturday, December 19, 2020

பெரியார் பெருமை பெரிதே!

பெரியார் பெருமை பெரிதே!

சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த ஆண்டு 1974 ஜனவரியில் நடத்தத் திட்டமிட்ட “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியின் நோக்கம் மற்றும் தேவை என்ன என்பதை விளக்கி, அதில் மக்களின் கடமை என்ன என்று சிந்திக்கச் சொல்லி சமுதாய இழிவு ஒழிப்பு கிளர்ச்சியில் பங்கேற்க அவரது தொண்டர்களை(தோழர்களை) ஆயத்தமாக்குகிறார். தந்தை பெரியாரின் இந்த இறுதிப் பேருரையை, ‘மரண சாசனமாகவே அமைந்துவிட்ட தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை’ என்றே பலரும் குறிப்பிடுவதை அறிய முடிகிறது. பெரியாரின் இறுதி உரையின் வரலாற்றுப் பின்னணி குறித்த அறிமுகம் இங்குத் தேவையாகிறது.


தந்தை பெரியார் 1957 நவம்பர் மாதம் 4-ஆம் நாள் தனது சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு மக்களிடம் அழைப்பு விடுத்தார். அப்பொழுது அவர் 78 வயது முதியவர். “நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும். இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியூட்டி விட்டுச் சாகவேண்டும். இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம் என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம்” என்ற புரட்சிக் குரலை எழுப்பினார். அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார். சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு கூறப்படவில்லை. சாதிகளின் ஏற்றத் தாழ்வு நிலை மதப்பாதுகாப்புப் பிரிவுகளின் உதவியுடன் தொடர்கிறது என்று சுட்டிக் காட்டி இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். அப்பொழுது இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, தொடர்ந்து தேசியச் சின்னங்கள் அவமானப்படுத்துதல் தொடர்பான குற்றத்திற்குத் தண்டனை சட்டமும் இயற்றப்பட்டது.

கடவுள் மறுப்புக் கொள்கை பரப்பிய பெரியார், அதற்கு முற்றிலும் மாறாக, கோவில் நுழைவுப் போராட்டங்களையும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற கோயில் கருவறை நுழைவுப் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தியவர். மனித உரிமை மீறலுக்கு எதிரான பெரியாரின் கலகக்குரல் அது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வழியில்லை என்ற நிலை மாறவேண்டும் என்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களின் அடிப்படை அவரது சாதியொழிப்புக் கொள்கை.

மீண்டும், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தமிழகத்தில் கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தினை அறிவித்தார் பெரியார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கையை ஏற்று சட்டமாக்குவதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்து அப்போராட்டத்தினைக் கைவிடச் செய்தார். பார்ப்பனர் அல்லாதோரும் பயிற்சி பெற்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தினை 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார்.

இச்சட்டத்தினை எதிர்த்து பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். அவர்களில் சேஷம்மாள் என்ற பார்ப்பனரும் ஒருவர், ஆகவே அவர் பெயருடன் ‘சேஷம்மாள் வழக்கு’ என்று அந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது. தந்தை பெரியார் அரசியற் சட்டத்தினைக் கொளுத்தவேண்டும் என்று எந்தச் சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டினாரோ, அதே பிரிவுகளை உதவிக்கு அழைத்திருந்தனர் வழக்குத் தொடுத்தோர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள மதச்சுதந்திரம் மற்றும் வழிபாட்டுரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாகப் பன்னிரண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் மார்ச் 15, 1972 அன்று தீர்ப்பளித்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி திரு. எஸ்.எம்.சிக்ரி மற்றும் திரு. ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெய்க் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமைகோர முடியாது என்றனர். அதாவது அர்ச்சகர் தொழில் பரம்பரைத் தொழில் அல்ல. ஆனால், அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டால், அச்சட்டத்தினை எதிர்த்த பார்ப்பனர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர். தனது விடுதலை இதழில், “ஆபரேஷன் வெற்றி; நோயாளி மரணம்” என்று இந்தத் தீர்ப்பினைப் பற்றி தந்தை பெரியார் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலையங்கத்தை எழுதினார். இதுதான் நான் என் வாழ்க்கையில் சாதிக்காத கடைசி விஷயம் எனப் பெரியார் சொல்லி இருக்கிறார்.

இந்தச் சாதி இழிநிலையை ஒழிக்க மீண்டும் போராட்டத்தில் இறங்கினார் பெரியார். “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியினை 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தத் தொண்டர்களைத் திரட்டினர். அந்த முயற்சியின் ஒரு பகுதிதான் சென்னை தியாகராயர் நகரில், புதன்கிழமை டிசம்பர் 19, 1973 அன்று இரவு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை.

அவரது உரை சமுதாய இழிவு ஒழிப்பு அல்லது சாதி ஒழிப்பை நடைமுறை அளவில் தடை செய்யாத சட்டம் மீது கொண்ட எதிர்ப்பு என்றாலும்; வழக்கமான அவரது கடவுள் மறுப்புக்கொள்கை, சாஸ்திரம், சமயம் இவற்றைக் குறித்து கேள்வி எழுப்புவதும் உரையில் வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக: “நான் கேட்கிறேன், பெரிய மதக்காரனையே கேட்கிறேன். இந்து மதம் என்றால் என்ன அர்த்தம்? எப்ப வந்தது? எவன் அதற்குத் தலைவன்? என்ன அதற்குக் கொள்கை? அதற்கு என்று இருக்கிற சாஸ்திரம் என்ன?” என்று கேட்கும் அவர் தொடர்ந்து, “கடவுள் ரொம்ப அன்பானவர்; கருணையே உருவானவர் அப்படி என்கிறான். கடவுளைப் போய்ப் பார்த்தால், அந்தக் கடவுள் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், ஈட்டி கொலைகாரப் பயல்களுக்கு என்ன வேணுமோ அதுவெல்லாம் கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் கருணையே உடையவர் என்கிறான். எந்தக் கடவுள் மனுஷனைக் கொல்லாதவர். அசுரனைக் கொன்றார், ராட்சசனைக் கொன்றார், மனிதனைக் கொன்றார், மூன்று கோடி பேரைக் கொன்றார், 5 கோடி பேரைக் கொன்றார் என்று கசாப்புக் கடைக்காரன் மாதிரிப் பண்ணிப் போட்டு, அவரைக் கருணை உள்ளவர் என்றால் எப்படி?” என்று கேள்விகளைத் தொடர்கிறார்.

அத்துடன் கடவுள் மறுப்புக் கொள்கை பேசும் பகுத்தறிவாளர்களான நாங்கள் வன்முறையாளர்கள் கிடையாது. சமயச் சார்புள்ளவர்களிடம்தான் வன்முறை அதிகம் என்பதை வரலாறு, இலக்கியங்கள் ஆவணப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டு; கடவுள் இல்லை என்கிறவனைக் கொல்ல வேண்டும் என்பது போன்ற வன்முறைக் கருத்துகளை சம்பந்தர், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியோர் பாடினார்கள். பௌத்தர்களை ஒழித்ததைக் கல்லில் வெட்டி வைத்துள்ளார்கள், சமணர்களைக் கழுவில் ஏற்றினோம் என்று ஒவ்வொரு ஆண்டும் இன்றுவரை விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்; மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள், கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள்; நம்மைவிட மோசமாக.  உதாரணமாகச் சொல்கிறேன். நாலாயிரப் பிரபந்தம் பாடின ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள், இந்தப் பசங்க சொன்னதைவிட நாங்கள் அதிகமாகச் சொல்வதில்லை. அதை மனசிலே வைத்துக் கொள்ளுங்கள். நாம் இவனைத்தான் திட்டுகிறோமே தவிர, இவனுடைய புத்தியைத்தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பசங்க சொன்னதுபோல, அவர்கள் பெண்டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.”

மேலும், மேலைநாடுகளின் கண்டுபிடிப்புகளான செயற்கை முறை கருத்தரிப்பு, விந்து-கருமுட்டை வங்கி, சோதனைக்குமாய் குழந்தை, நிலவிற்குச் சென்று வந்த அறிவியல் வளர்ச்சி, நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளால் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு, விமானம், தொலைப்பேசி போன்ற அறிவியல் வளர்ச்சிகள் பெரியாரைப் பெரிதும் கவர்ந்தன என்பதை அவர் உரையினால் தெளிவாக அறிய முடியும். அது போன்றவற்றில் நம்மவர்கள் பங்களிப்பு இல்லையே என்ற ஏக்கமும்; மாறாகப் புராணக் கதைகளை நம்பிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆற்றாமையும், புராணக் கதைகளை உருவாக்கி மக்களிடம் பரப்பும் கூட்டத்தினர் மீது எரிச்சலும் வெறுப்பும் அவர் உரையில் பன்முறை வெளிப்படுகிறது.

அவரது உரை மிக எளிய சொற்களுடன் சிறு சிறு வாக்கியங்களாகவும் மக்களைச் சென்று அடையும் வண்ணம் அமைந்துள்ளது. சாதாரணப் பேச்சு வழக்கில் மக்களிடம் நேருக்குநேர் பேசும் உரையாடல் முறையில் அமைந்துள்ளது. நடுவண் அரசு குறித்துப் பேசினாலும் ஏதோ ஓர் ஆள் எதிரில் நிற்பது போல உருவகித்துக் கொண்டு கேள்விகள் எழுப்புகிறார்? எடுத்துக்காட்டாக அரசை விமர்சிக்கும் இந்தப் பகுதியைக் குறிப்பிடலாம்: “நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்? எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, தண்ணீர் இல்லையா, மலை இல்லையா, காடு இல்லையா, சமுத்திரம் இல்லையா? இல்லை நெல் விளையவில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உன்னாலே எனக்கு என்ன ஆகுது?” என்கிறார்.

“காங்கிரசு ஒழிந்தது; அது ஒன்றும் உருப்படியாகாது; உருப்படியாகாது” என்று 47 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. உரையின் இடையில் உடல் நலக் குறைவின் காரணமாக வலியால் அவர் வெளியிடும் வேதனை அரற்றலும் உரையின் ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது, உரை நூலிலும் அப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில், 19.12.1973 அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய 5,000 சொற்களுக்கும் மேற்பட்ட இறுதிப் பேருரையிலிருந்து, அவர் போராட்ட முயற்சிக்கான நோக்கம் குறித்த உரையின் பகுதி மட்டும் 1,000 சொற்களுக்கும் குறைவாகச் சுருக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை”

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

இன்றைய தினம் இந்த இடத்திலே “சமுதாய இழிவு ஒழிப்பு” சம்பந்தமாக சென்னையில் 10 நாள்களுக்கு முன்னால் நடந்த மாநாட்டின் தீர்மானத்தை விளக்கவும், மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும், அதன்படி பேரறிஞர்கள் பலர் அத்தீர்மானத்தை விளக்கியும், அது சம்பந்தமான மற்றும் பல அறிவு விஷயங்களை உங்களுக்கு நல்ல வண்ணம் எடுத்து விளக்கினார்கள். எல்லா விஷயங்களையும் நல்ல வண்ணம் விளக்கினார்கள். என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக நீங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதினாலே நானும் சில வார்த்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.[...]

அண்மையில் நடக்கப்போகின்ற கிளர்ச்சியை முன்னிட்டு, சென்னையில் பல பாகங்களிலும் அது விஷயமாகத் தெளிவுபடுத்த பல கூட்டங்கள் போடவேண்டும் என்று தீர்மானித்ததன்படி, பல கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. என்னமோ இது ஒன்று இரண்டுதான் நடந்தது. இன்னமும் நடக்கலாம். ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மற்ற பாகங்களிலும் நடக்கலாம். நடக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.[...]

ஐம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும், எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான்.  இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும். [...]

இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள், நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான். பேசுகிறவனை மாலைப் போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே, நம்முடைய நிலைமை உலகத்திற்கே தெரியும் மானக்கேடான நிலைமை. இரண்டாயிரம் வருஷமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட, இந்த சட்டத்திலே இருக்கிற இந்து லாவிலும் மற்ற அரசியல் சட்டத்திலேயும், அது பெரிய முட்டாள் தனம். அதைவிட, இதைச் சொல்லி மாற்றச் செய்யாமல், இந்த ஆட்சியிலே நாம் குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா மானங்கெட்டத்தனம். [...]

இல்லாவிட்டால், விதி, இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே இருப்பது. இப்படியே இருப்போம் என்பது என்ன நிச்சயம்? நாம் ஒழிந்தால் நாளைக்கு மாற்றிவிடுகிறான். மாற்றினானே! நம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள், “கல்தான், யார் வேண்டுமானாலும் பூஜை பண்ணலாம்; ஆனால், முறைப்படி செய்யணும்” என்று யாருக்குமே அனுமதி கொடுத்தார். [...]

நாதி இல்லையே, சொல்றதற்கு ஆள் இல்லையே; சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே. ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானே. முன்னேற்றக் கழகத்துக்காரனை, மற்றவனை எல்லாம், என்னை எல்லாம் வைவான். இவனுக்கு என்ன கேடு, இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்று. அவனுக்கு ஓட்டுதான் பெரிது. [...]

கோவில் கிட்டே போனதும், டக்கென்று வெளியே நின்றுகொள்கிறானே, வாசற்படிக்கிட்டே! ஏன்டா, அங்கே நிற்கிறாய் என்றால், நான் சூத்திரன், உள்ளே போகலாமா? என்கிறான். எப்போது, 1973 லே. நம்ம நாடு, நம்ம சமுதாயம், நமக்கு மானம், அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது அப்படின்னு சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே, அதற்காக யார் பாடுபடுகிறார்கள். நாங்கள்தானே மூணே முக்கால் பேரு; மற்றவன் எல்லாம் வேற வேற கட்சி. ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றி பேசவேமாட்டான். [...]

இவ்வளவு பண்ணினோம், இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்; இவ்வளவு மாநாடு எல்லாம் நடத்தினோம். எவன் எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே! ஆதரித்தால் ஓட்டுப் போய்விடுமே, ஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ!  அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். [...]

காமராசர் நம்மோடு சேர்ந்ததால், கொஞ்சம் காரியங்களைச் செய்தார். பக்தவத்சலம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. இல்லை, சுப்பிரமணியம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. சொன்னாலும், காங்கிரசில் இருக்க முடியாதே! அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்க; அது இனிமேல் உருப்படியாகுமா? முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், காங்கிரசு ஒழிக என்கிற, ஜாதி ஒழிக என்கிற சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்க [...]

ஆனதினாலே, மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்கொள்ள வேணும். அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும், தெரியாது வெகுப் பேருக்கு. எனவேதான், இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்; மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்து மட்டத்துக்கு வரணும்; அப்புறம் மேலே ஏறணும். இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன? நாலாவது ஜாதி, ஐந்தாவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்; மாறாது மேலே போக முடியுமோ? யாரும் கவனிக்கவில்லை. கவனிக்காமல் போனால், நாங்கள் சும்மா இருக்கலே; ஒன்று போனால் ஒன்று செய்துகிட்டேதான் இருக்கிறோம். நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது. இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும் என்று இருக்கிறது நிலைமை. வேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை. இவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே என்று பார்க்கிறான்; மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே, நாம் மாநாடு போட்டோம். இந்த மாநாடு போட்டதற்குக்கூடக் காரணம் சொன்னாரே! தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப் போட்டான்; எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை என்று சொல்லிவிட்டான். ஆனால், மதத்திற்கு மதம் உண்டு என்று ஒரு அடையாளம் வைத்துவிட்டான்; நிபந்தனை.[...]

இனிமேல் நாம் இழிமகன். எனவேதான், மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டோம்; அவைகளையெல்லாம் பார்த்தோம், மாற்றி ஆகணும். சட்டத்திலேயும், சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே, முதல்லே அதைக் கேட்டோம். சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால், சட்டம் ஒழிந்தால் உண்டு. [...]

நாமதான் அதைப்பற்றிக் கவலைப்படுகிறோம். மாற்றியாகணும் என்கிறோம். நேற்று நடந்த மகாநாட்டுக்கு வேற கட்சிக்காரர்கள் யாரும் ஒண்ணும் வரவில்லையே, வரலாம் அல்லவா? அவனவன் சக்திக்கு, அனுசரணையா எங்களுக்கு வந்து உதவி பண்ணலாமில்லே. ஒருத்தரும் வரவில்லை. எங்கள் ஆட்கள்தான். அவன், டில்லிக்காரன் சி.ஐ.டி.யைப் போட்டுவிட்டான். வேற கட்சிக்காரன் எவனாவது உள்ளே வருகிறானா பார் என்று. அதைப் பார்த்து ஒருத்தனுமே வரவில்லை. மந்திரிகளா, அவனோ, மற்ற கட்சிக்காரனா ஊகும், வரவில்லை. இழிவு ஒழிய வேணும் என்று சொன்னால், இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமே, வந்து உதவிக்கு நிற்க வேணுமே. நாங்கள்தான். ஆனதினாலே, விஷயம் ரொம்ப முக்கியமானது மாறியே ஆகணும், மாறாவிட்டால் சாகணும்; அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான். [...]

ஆகவேதான், எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், இப்போது நாம் ஆரம்பித்துள்ள ‘இழிவு ஒழிவு கிளர்ச்சிக் காரியம்’ மிகவும் நியாயமானது என்பதற்கு என்ன ஒரு உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால், இன்றைக்கு எத்தனை நாளாகிறது? 10 நாளாகிறது. நல்லா கவனிக்கணும். இரகசியமா இல்லை. பத்தாயிரம் பேருக்கு மேலே வந்தார்கள். 30 பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள். எல்லாத் தீர்மானத்தையும் அவரவர் பத்திரிகையில் போட்டார்கள். இந்தியா பூராவும் பரவியது, அடுத்த நாளே பரவியது. நான் கேட்கிறேன், கவனியுங்கள், இந்தப் பத்து நாளா ஒருவனாவது இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினானா? எந்தப் பத்திரிகையிலேயாவது செய்தி வந்ததா? ஏன் சொல்லுகிறேன், நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம். எவனாலேயும் ஆட்சேபிக்க முடியவில்லை. [...]

பண்ணனும், நாளைக்குக் கிளர்ச்சி பண்ணினால் அவன் பிடிப்பான்; பிடிக்கவில்லையானால் பண்ணிக்கொண்டு இருப்போம்; பிடிக்க ஆரம்பித்து விட்டான் என்றால், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று ஜெயிலுக்குப் போவோம். நாம் தயாராய் இருக்கிறோம், காரியம் முடிகிறவரைக்கும் ஜெயிலிலே வேணுமானாலும் இருக்கத் தயாராய் இருக்கிறோம் என்று நாம் காட்டணும். அப்புறம் அவன் பரிகாரத்திற்கு வரணும் [...]

[இந்தப் பகுதியை பேசிக்கொண்டிருக்கும் பொழுது வலியில் அம்மா .. அஆ.. அம்மா .. என்று பெரியார் துடிப்பதும், சிறிது இடைவெளிக்குப் பிறகு உரையைத் தொடர்வதும் ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது]

இது எப்படி அய்யா தப்பாகும். இதனாலே எப்படி நாம் கெட்டவனாவோம்; இதனாலே நாம் எப்படி அரசுக்கு விரோதமாவோம்? கவனியுங்கள், தாய்மார்களே! தோழர்களே! இந்த விஷயங்களையெல்லாம் முதலிலே சொன்னோம். இது நம்ம கடமை. 25 ஆம் தேதி ஆரம்பிப்போம். மளமள மளவென்று வரணும்; என்ன சொல்கிறோமோ அதைச் செய்யணும். சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டு, மறியல் பண்ணுறது முதற்கொண்டு இன்னமும் பல காரியங்கள் திட்டம் போட்டுச் செய்யணும். கலகத்துக்குப் போகமாட்டோம்; எவனையும் கையாலே தொடமாட்டோம். எவனாவது அடித்தாலும், பட்டுக் கொள்வோம், திருப்பி அடிக்கமாட்டோம். ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்! நான், நீ என்று மீசையை முறுக்கக்கூடாது. அடித்தால் பட்டுக்கணும். போலீஸ்காரன் இருப்பான், அதிகமாக அடிக்காமல் பார்த்துக் கொள்வான். அப்புறம் என்னத்துக்கு நாம் ஒருத்தனை அடிக்கப் போகணும்; நாம் யாரோடு சண்டைப் பிடிக்கிறோம்?[...]

ஆனதினாலே, தோழர்களே, பக்குவம் அடையணும் நாம். எதற்காக இங்கே நான் நாத்திகப் பிரச்சாரம் பண்ணவரவில்லை. கடவுள் இல்லை என்று உங்களுக்குச் சொல்வதற்காக வரவில்லை. அது வேறே, நாங்கள் பண்ணிக்கிறோம். அவனவன் நம்பட்டும், ஆராயட்டும், இருக்கட்டும். முட்டாள்தனமான காரியங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்கள், மானத்துக்குக் கேடான காரியங்கள் செய்கிறதற்கு நாம் இடம் கொடுத்துக்கிட்டு, நாம் மனுஷனாக வாழணுமா?[...]

ஆனதினாலே, தயவு செய்து நீங்கள் விஷயங்களைத் தீவிரமாகக் கவனிக்கணும். ரொம்பத் தீவிரமாய்க் கவனிக்கணும். ஜெயித்தே ஆகணும்! நான் சொல்கிறேன், என்று கேலி பண்ணாதீர்கள், நீ என்ன நாளைக்கு சாகப் போறே, துணிந்து வந்திருப்பாய் என்று.  நானே பண்ண வேணும் என்று இல்லை; நீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத்தானே நான் செய்கிறேன். அதனாலே எல்லோரும் துணியணும்; மளமளவென்று கலந்துகொள்ளணும்.

[இதற்குப் பிறகு, இதுவரை பேசிய செய்திகளை, கருத்துகளையே பெரியார் மீண்டும் வேறுவகையில் பேசுகிறார், ஆகவே அவை இங்கு தவிர்க்கப்படுகிறது]

இந்த உரையாற்றிய சில நாட்களில், ஒரு வாரத்திற்குள், உடல் நலக் குறைவின் காரணமாக டிசம்பர் 24, 1973 அன்று தமது 94ஆவது வயதில் பெரியார் மறைந்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று குரல் எழுப்பி கோயில் கருவறையில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற தம் வாழ்நாள் முழுவதும் முயன்று போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார்.

அவரது இறுதிப் பயணத்தில், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இயலவில்லை, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம்’ என்றார் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியற் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையும், நாடாளுமன்றத் தனிநபர் மசோதாவினையும் 1974 இல் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். ஆனால் அதற்குள் அரசியல் களத்தில் பற்பல மாற்றங்கள், எம். ஜி. ஆரால் கட்சியில் பிளவு, இந்தியாவின் இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனம், 1976ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சி கைமாறிப்போனது என்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திராவிடக் கழகம் தொடர்ந்து வற்புறுத்திய காரணத்தால் தொடர்ந்து பதவி ஏற்ற எம். ஜி ஆர். தனது காலத்தில் இதற்காக 1982ஆம் ஆண்டு நீதியரசர் மகாராஜன் குழு என்றொரு குழு அமைத்தார். அக்குழுவினர், வேத, ஆகம பயிற்சிப் பள்ளிகளை நிறுவி அதன்மூலம் அனைத்துச் சாதியினரையும் பயிற்றுவித்து, ஆகம விதிகள் மீறப்படாமல் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்ற பரிந்துரையை அரசுக்கு வழங்கியது.

எம். ஜி ஆர். மறைவிற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணா.தி.மு.க அரசு, ‘வேத பயிற்சிப் பள்ளிகள்’ நிறுவப்படும் என்று அறிவித்தது. அப்பெயர் ஏற்புடையது அல்ல என்று போராடி அவற்றை ‘அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்’ எனப் பெயர்மாற்றம் செய்ய வைத்தது திராவிடர் கழகம். ஆனால் அறிவிப்பைத் தவிர வேறெந்த ஏற்பாட்டையும் ஜெயலலிதாவின் அரசு முன்னெடுக்கவில்லை. மீண்டும், 2006 இல் ஆட்சி அமைத்தார் கலைஞர் கருணாநிதி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கருணாநிதி, ‘பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கைதான் இது’ எனக் கூறினார். மேலும் கலைஞர் கருணாநிதியின் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நிறுவியதுடன் 69% விழுக்காடு அடிப்படையில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அரசாணையையும் வழங்கியது.

இம்முறை இதை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்தியத் திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  முதலில் இவ்வழக்கில் நீதி மன்றம் இடைக்காலத் தடை வழங்கியது. பிறகு 16.12.2015 அன்று, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், நீதியரசர் திரு. ரஞ்சன் கோகாய், நீதியரசர் திரு. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் ‘தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும்’ மதுரை அழகர் கோவிலுக்குட்பட்ட அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக மாரிச்சாமி என்ற பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் பணியமர்த்தப்பட்டார். ஆனால் இந்த ஐயப்பன் கோயில் ஆகமம் இல்லாதது. ஆகமம் உள்ள கோயில்களில் பார்ப்பனர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அர்ச்சகர் பயிற்சி நிலைய திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி பெற்ற 207 பேர்களில் ஒருவரை மட்டும் அர்ச்சகர் பணிக்கு அமர்த்திய அதிமுக அரசு பின்னர் அது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதுதான் இன்றைய நிலை. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. ஆகமம் முறையைக் கடைப்பிடிக்கும் பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படும்போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முழுமையாக அகற்றப்படும் என்பது பெரியாரியக் கொள்கையாளர்களின் கருத்து.

பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் கட்டுப்பாடு அரசின் கையில் உள்ளது என்பது பொருள். இதனை முறியடிக்க விரும்புவோருக்குச் சட்டப்படி நேரடியாக எதிர்க்கவும் வழியில்லை. அதனால், இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளின் மீது குற்றங்கள் பல சுமத்தப்பட்டு வருவது கண்கூடு. இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துக் கட்டும் நோக்கில் சனாதன ஆர்வலர்களின் முயற்சி தற்பொழுது வேகம் பிடித்துள்ளது.

சமநீதிக்காகக் குரல் எழுப்பி, மக்களுக்கு எழுச்சியூட்டி, துடிப்புடன் இறுதி வரை தனது தள்ளாத வயதிலும் சமுதாய இழிவு ஒழிப்புக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு வீரவணக்கம்.



மேலதிகத் தகவலுக்கு உதவக் கூடியவை:
(1) தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை: மரண சாசனம், தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, கிண்டில் பதிப்பு, 2017
(2) தமிழர் தலைவர் தந்தை பெரியார் – ஓர் கையடக்க வரலாறு, பெ. மருதவாணன், பெரியார் இயக்கம் பப்ளிகேஷன்ஸ், 2010, பக்கம் 59-60
(3) பெரியாரின் மரண சாசனம், இறுதி ஊர்வலம் – http://www.madhumathi.com/2012/12/blog-post_7375.html
(4) தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை – காணொளி:  https://youtu.be/xchSEp93RN0
(5) தமிழகத்தில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்: சமூக நீதிக்கான முக்கிய நகர்வு – https://www.hindutamil.in/news/reporters-page/139846-.html
(6) பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா? கருவறை தீண்டாமை ஒழியுமா? – https://www.vinavu.com/2020/09/17/periyar-142-archakar-manavar-sangam-prpc/



நன்றி: சிறகு 
டிசம்பர் 19, 2020



#சிறகு, #பெரியார், #Themozhi 



Saturday, December 5, 2020

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்


திருப்பாவை கூறும் அறிவியல் என்ற கருத்தில் ஆண்டாளின் பாடல் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்பட்டு வருவது வழக்கம். "ஆழிமழைக் கண்ணா", "அறிவியல்" என்ற ஒரு கூகுள் இணையத் தேடலில் 300க்கும் மேற்பட்ட முடிவுகள் கிடைக்கின்றன என்பதே, அது எந்த அளவு பண்டைய தமிழர் கொண்டிருந்த அறிவியல் அறிவிற்குச் சான்றாக,  பரவலாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப் படுகிறது என்பதை அறியலாம். அடுத்து வருவது அது போன்ற ஒரு பதிவில் கொடுக்கப் பட்டிருந்த விளக்கம். 

            ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
            ஆழியுள் புக்கு முகந்து கொடு, ஆர்த்து ஏறி
            ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
            பாழியந்தோள் உடைப் பற்பநாபன் கையில்
            ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
            தாழாதே சாரங்கம் உதைத்த சரமழை போல்
            வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும்
            மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் 
                      (திருப்பாவை-4)

மழைக்குத் தலைவனே! நீ சிறிதும் உன் வள்ளன்மை ஒன்றையும் மறைக்காதே! நீ கடலுள் ஆழப் புகுந்து நீரை முகந்து பெரு முழக்கோடு வானில் ஏற வேண்டும். உலகுக்குக் காரணனான உன் மேனி போல் கறுத்து, வலிய தோள்களையும் உந்தியில் தாமரையையும் உடைய வலக்கையில் உள்ள, சக்ராயுதம் போல் ஒளிவிட்டு இடக்கையிலுள்ள வலம்புரிச் சங்கு போல முழங்கி உலகிலுள்ளார் அனைவரும் வாழும்படி நோன்பு நிற்கும் நாங்களும் நீராடவும் காலம் கடத்தாமல் பெருமான் கையிலுள்ள சாரங்க வில்லில் ஏவிய அம்பு மழை போல் பெய்வாயாக. (உரை-வைணவச் செம்மல் டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்) [1] 

‘திணைமாலை நூற்றைம்பது’ என்ற நூலின் முல்லைத் திணை குறித்த  அகப் பாடல்களிலும் கடல் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மேலெழுந்து மேகமாகி, பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற கருத்து இடம் பெறுகிறது [2].   

திணைமாலை நூற்றைம்பது:
எளிய வழியில் அகப் பாடல்கள் கூறும் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் குறித்து அறிய ‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் பாடல்கள் உதவுகின்றன. மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘ஏலாதி’ நூல் இயற்றிய அதே கணிமேதாவியார் இயற்றிய நூல் இது. இவர் கி.பி.5 - ஆம் நூற்றாண்டினர் [3].  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்ற செய்தியையும் ஏலாதி நூலின் முகவுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்நூலில், அகத்திணை ஒழுக்கம் குறித்த வெண்பாக்கள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தொடுத்துள்ள மையால் ‘திணைமாலை’ என்றும், நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும் இந்நூல் பெயர் பெற்றது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் என மொத்தம் 150 பாடல்கள் இருக்க வேண்டிய நிலைக்கு மாறாக, இந்நூலில் குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளதால் மொத்தம் 153 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியிலே காணப்பெறும் பாயிரச் செய்யுள் ஒன்றையும் கணக்கில் கொண்டால் இந்நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டதாகும். 

முல்லைத் திணைக்குரியதாக இந்த நூலில் இடம்பெறும்  31 பாடல்களின்  7 பாடல்களில் (பாடல் எண்கள்: 93, 95, 100, 104, 105, 109,114) மழை உருவாகும் அறிவியல் உண்மை இடம் பெறுகின்றது.  அதாவது, முல்லைத் திணைக்கான 31 பாடல்களைக் கணக்கில் கொண்டால், சற்றொப்ப ஐந்து பாடல்களுக்கு ஒரு பாடல் என்ற கணக்கில் மழை தோன்றும் அறிவியல் உண்மை விரவிக் கிடக்கக் காணலாம்.  இங்கு அப்பாடல்கள் திணைமாலை நூற்றைம்பது நூலில் இடம் பெரும் அதே வரிசையில் கொடுக்கப்படுகிறது [2]. 

(1)
            கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ
            இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பொருங் கடல்-
            தன்போல் முழங்கி......  (பாடல்:  93) 

விளக்கவுரை: கருமையான கடலிலிருந்து நிறைய நீரினை அருந்திய வெண்மையான தலையைக் கொண்ட முகில்கள், பெரிய கடலினில் புகுந்து மாமர வடிவுகொண்ட சூரபன்மனைக் கொன்ற முருகனின் வேலினைப் போன்று மின்னும் மின்னல்களுடன், அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் பொருமும் கடல்தனைப்  போல இடிகளை முழக்கி ஆரவாரிக்கின்றன. 

(2)
            மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி,
            கான் ஓக்கம் கொண்டு, அழகா-காண், மடவாய்!......  (பாடல்:  95) 

விளக்கவுரை: மேல்முகமாக வெப்பத்தைக் கொண்ட கதிரவன் முகந்து உட்கொண்டதால் நீர் நிறைந்த முகிலானது, கீழுள்ள புவியை நோக்கி மழையாகப் பெய்த படியினாலே, முல்லை நிலத்தின் காடுகளெல்லாம்  தழைத்தோங்கி அழகாக மாறியுள்ளதைக் காண்பாயாக  பெண்ணே!. 

(3)
            ...... ...... ...... ......  மாக் கடல்
            கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும்
            கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது ......  (பாடல்:  100) 

விளக்கவுரை: பெருங்கடலினைக்  கண்டு தன்னை நிரப்பிக் கொள்ளும்படி கடல்நீரைக் குடித்து, மழைபொழியத் தாழ்ந்து, நிறம் கருத்து,  எட்டுத் திக்குகளிலும் முகிற் கூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. கார்காலம் துவங்கிவிட்டது. ஆனால், கொடுத்த உறுதிமொழியின்படி தலைவனின் தேர் இங்கு வரவில்லை. 

(4)
            ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை,
            இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின்
            ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல்.......  (பாடல்:  104) 

விளக்கவுரை: ஐந்து நிறங்களையுடைய வானவில்லை வரைந்து வைத்து, நான்கு திக்குகளுக்கும் கடல் நீரைக் கொண்டு சென்று கொடுக்க விரும்பிய, ஈச்சம் பழத்தின் நிறங்கொண்ட மேகம், நீரை அள்ளிக் குடித்து பெரிய மேகமானது. பழைமையான உருவாகிய வானின் நீல நிறத்தைப் போன்று அதனுடன் ஒன்றாகப் பரவி,  இடிகளைக் கொண்டதாக மழையாகப் பொழிகின்ற வான் வெளியின் தன்மை போல,... 
(குறிப்பு: இப்பாடலில் வானவில்லிற்கு ஐந்து நிறம் என்று கூறுவதைக் காணலாம், ஒரு வேளை புலவர் கணிமேதாவியாருக்கு 'நிறக்குருடு' (Red-green color blindness ) என்று கூறப்படும் பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது) 

(5)
            எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்,
            கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண்........  (பாடல்:  105) 

விளக்கவுரை:  பகற் பொழுதினைத் தரும் கதிரவனின் கதிர்களால் குடிக்கப்பட்ட நீரைக் கொண்ட மேகம் அதை மழையாக வழங்கியதாலே,  முல்லை நிலத்தில் வளர்ந்த நெடிய கொடிகள் மரங்களிற் படர்ந்து கொண்டிருப்பதைக் காண்பாயாக!! 

(6)
            என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார்........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  எனது உயிர் போன்ற இனிய தோழியே! பெரிய கடலின்  நீரை அருந்தி மழை மேகங்கள் உருவாகின. 

(7)
            பாத்துப் படுகடன் மாந்திய பல்கொண்மூக்
            காத்துக் கனை துளி சிந்தாமைப் - பூத்துக்
            குருந்தே!.........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  ஒலிக்கின்ற கடலின் நீரைக்  குடித்துப் பல முகில்களில் பகுத்தெடுத்து, அந்த நீரைப் பாதுகாத்துக் கொண்டு வந்து, செறிவான மழைத்துளிகளை முகில்கள் நன்கு  சிதறி பெய்யாத போதும், செழித்துப் பூத்துள்ள குருந்த மரமே!

முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது கார் என்பதால், திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்திணைப் பாடல்களில் மழைகுறித்து பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும்,  மேற்காட்டிய ஏழு திணைமாலை நூற்றைம்பது பாடல்களில் கடல்நீர் கதிரின் வெப்பத்தால் முகிலாக  மாறி மழையாகப் பொழிவது விளக்கமாகவும், சிலபாடல்களில் அவை நன்கு அறியப்பட்ட உண்மை என்பதால் ஓரிரு வரிகளில் சுருக்கமாகக் கொடுக்கப்படுவதையும் காண முடிகிறது. இதன் மூலம்  கி.பி.5 - ஆம் நூற்றாண்டில்  மழை பொழியும் அறிவியல் அடிப்படையைத் தமிழர் பலர் நன்கு அறிந்திருந்தனர் என்பது இதனால் தெளிவாகிறது.  

"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு" என்று திருப்பாவையில் மழை குறித்து ஆண்டாள் குறிப்பிட்டது  கணிமேதாவியாருக்கும் பிற்பட்ட காலம்.  ஆழ்வார்களின் காலம் என்பது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்தவர்  மு.இராகவையங்கார்.   'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற ஒரு குறிப்பு (திருப்பாவை 13:3-5) கொண்டு, ஆராய்ந்த மு. இராகவையங்கார் கி.பி. 716 ஆம் ஆண்டு திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள் என்று கூறுகின்றார்[4].  ஆகவே அதற்கும் முன்னர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே மழை குறித்த அறிவியல் தமிழகத்தில் அறியப்பட்டிருக்கிறது என்பதைத் திணைமாலை நூற்றைம்பது மூலம் அறிய முடிகிறது.  தமிழிலக்கியங்களைக் கற்றுத் துறைபோகிய  அறிஞர்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும்  மழை அறிவியல் குறித்து மேலும்  பல மேற்கோள்களைக்  காட்ட வாய்ப்பிருக்கலாம். 

எல்லாவற்றுக்கும் மேலாக, மழை தோன்றும் முறையை, அதன் அறிவியல் பின்புலத்தை, ஐந்தாம் நூற்றாண்டிலேயே (அதாவது, இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எனக் கொள்க) அறிந்திருந்த தமிழக மக்களின் வழிவந்தோர்,  இன்று வருணபகவான் மழை தருவார் என்று நீர் நிரம்பிய பெரிய பெரிய அண்டாவிற்குள் அமர்ந்து பஜனை பாடுவதையும்,  கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பதையும், பெண்ணை ஆடையின்றி தீவட்டியுடன்  ஊர்சுற்ற வைக்கும் சடங்கு செய்வதையும், இடி மின்னல் என்றால் அர்ஜுனன் தேர் ஓடுகிறது என்று 'அர்ஜுனா' 'அர்ஜுனா' என்று கன்னத்தில் அடித்துக் கொள்வதைச் செய்யும் மூடநம்பிக்கை கூட்டத்தினராக மாறியதைக் கண்டு நாம் தலைத் தலையாக அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 



உதவிய தளங்கள்: 
[1] ஆண்டாளின் மழை அறிவியல்! – https://minnambalam.com/k/2017/04/26/ad3

[2] கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

[3] தமிழ் இலக்கிய வரலாறு, ரா. சீனிவாசன், 3-சங்கம் மருவிய காலம், எட்டாம் பதிப்பு : 1997
https://ta.wikisource.org/s/99ul

[4] ஆண்டாள், முனைவர் சி. பாலசுப்பிரமணியன், முதற் பதிப்பு : மார்ச், 1994. பக்கம் 34 
https://ta.wikisource.org/s/1321


நன்றி: சிறகு 
 (டிசம்பர் 5, 2020)

மின்தமிழ்மேடை  - 24 [ஜனவரி  - 2021]



#மின்தமிழ்மேடை, #சிறகு, #இலக்கியம், #அறிவியல், #Themozhi 




Wednesday, November 11, 2020

வலியற்ற வாழ்வில்லை

வலியற்ற வாழ்வில்லை 



தன்னைத் தானே செதுக்கினால் 
முன்னேற்றத்திற்குத் தடையுமில்லை 
வலி தரும்  உளி  என்று ஒதுக்கினால் 
உயர்வான உருவம் தோன்றுவதில்லை 

தன் குறை அறிந்து நீக்கினால் 
அது போன்ற ஒரு துணிவுமில்லை 
துணிவோம் என்ற முயற்சியால் 
ஒழியாத  துக்கமுமில்லை 

வலியற்ற வாழ்வு எவருக்கும் இல்லை 
வலிக்கு அஞ்சினால் வாழ்வும் இல்லை 
தன் முயற்சியால் குறைதனை நீக்கிடுவோம்  
தளராது நம் வாழ்வை எதிர் கொள்வோம் 


#கவிதை, #Themozhi 

Saturday, November 7, 2020

அன்பின் ஐந்திணை - பாலை

அன்பின் ஐந்திணை - பாலை 




கணிமேதாவியார் இயற்றிய  திணைமாலை நூற்றைம்பது நூலில் முதலில் இடம் பெறும் குறிஞ்சித் திணை, நெய்தல் திணைப்  பாடல்களைத்  தொடர்ந்து,  மூன்றாவதாகப் பாலைத்திணைப் பாடல்கள்  இடம் பெறுகின்றன. இப்பாடல்களின் மூலம்  பாலை  நிலத்தின் கொடிய தன்மையும்,  அப்பகுதியின் இயற்கைக் காட்சிகளும், அம்மக்களின் வாழ்வியலும் அழகுற விவரிக்கப்படுகிறது. பாலைத்  திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்( அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

தலைவி, தலைவன், தோழி, நற்றாய், செவிலித்தாய் ஆகியோர் படல்களில்  நேரடியாகக் குறிக்கப்படுகிறார்கள். தலைவியின் தந்தையும் தமையன் மாரும் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன, ஆனால் அவர்கள் நேரடியாக இடம் பெறவில்லை.  திணைமாலை நூற்றைம்பதின் குறிஞ்சி நெய்தல் பாடல்களுடன் ஒப்பிடுகையில்  பாங்கனுக்குப் பாலைநிலப் பாடல்களில் பங்களிக்கப்படவில்லை. தலைவனுக்குத் தலைவனைத் தவிர உறவுகள் வேறு யாரும் இல்லை, இருப்பதாகக் காட்டப்படவுமில்லை. 

இந்தப் பாலைத்திணைப் பாடல்களிலும், சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு என்பதற்கு  இணங்க,  தலைவன் தலைவியை மணந்து  கொள்ளத் தோழி உறுதுணையாக இருக்கிறாள். தோழி இடம் பெறாத பாடல்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.  தலைவன் மணந்து கொள்ளக்  காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள 'தோழி வரைவு கடாயது'  என்ற நோக்கில் இடம் பெரும் பாடல்கள் பாலைத்திணைப் பகுதியில் இடம் பெறவில்லை.  அவர்கள் காதல் தடைப்படும் பொழுது உடன்போக்கு செல்ல அவர்களுக்குத் தோழி முன்வந்து உதவுகிறாள். தலைவியை ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்; வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் துவங்கி வளர்ந்து கைகூடுவதில் தோழியின் பங்களிப்பு மிகுதி.

பாடல் 74இல் பாலைத்திணையின் குறிப்புகளுடன் நெய்தலின் இரங்கல் ஒழுக்கமும் இருத்தலைக் காட்டி திணை மயக்கம் காட்டப்படுகிறது. 81ஆம் பாடல்,   தலைவியின் இற்செறிப்புக்காரணமாக தலைவனுடன் உடன் போக்கு சென்றுவிட்ட   தலைவியை  அவள் எங்குச் சென்றாள்  என்ன சொன்னாள் என்று மரங்களையும் கொடிகளையும் பாலைநில வழியே அவளைத்  தேடிச் செல்லும் செவிலித்தாய் கேட்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதே பாடல்,  தலைவியைத்  தேடிச் சென்ற தலைவன் இற்செறிப்புக்காரணமாக  அவளைக் காண இயலாத தனது ஆற்றாமையால், அங்கிருக்கும்  மரம் செடி கொடிகளிடம் அவள் எங்கே போனாள் என்ன சொன்னாள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்று காட்டப்படுவதும் தெரிகிறது. இங்குள்ள கதையில் இப்பாடல் தலைவனது கூற்றாகக் கையாளப் பட்டுள்ளது. 
 
இந்நூலின் பாலைத்திணைப்  பாடல் இடம் பெரும் பகுதி மலைகள் உள்ள இடம்.   கோடையில் பாலையாக மாறும் பகுதி.   இப்பகுதியில் இற்செறிப்பு இடம் பெறுகிறது, குறி  கேட்பதும் இடம் பெறுகிறது. உடன்போக்கும் இடம் பெறுகிறது. தலைவியைச் சந்திக்க இயலாத தலைவன் அதை மரம் செடி கொடிகளிடம்  கூறிப் புலம்புவதும், தலைவனைப் பிரிந்த  தலைவி அதைப் புறாவிடம் சொல்லிப்  புலம்புவதும், செவிலித்தாய் குரா மரத்திடம் தலைவி சென்ற வழி காட்டச் சொல்லி வேண்டுவதும், வழிப்போக்கர்களாக வரும் கணவன் மனைவியாகிய இருவர் தலைவியும் தலைவனும் சென்ற வழி காட்டி உதவுவதும் ஆகிய பாடல்கள் சொல்லும் காட்சிகள்  நயம் மிக்கவை.  
 
திணைமாலை நூற்றைம்பது நூலின் பாலைத்  திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் தோழியும் ஒருவரே என்றோ, அவர்களின் நற்றாயும்,  செவிலித்தாயும்,  தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட பாலை   நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  30  பாலை நிலப்  பாடல்களையும் (பாடல்கள்: 63-92)  ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண்.
 
பிரிதலும், பிரிதல்  நிமித்தமுமாகிய ஒழுக்கம் கொண்ட பாலை  நிலப் பகுதியில் நிகழ்வது இக்கதை.


பாலைநில   வழிகளில்,  கள்ளிச் செடிகள் மிகுந்து வளர்ந்துள்ள காட்டு வழியில் காட்டுப்பசுக்கள் அஞ்சி  ஓடிடும்.  காட்டு எருமைகள் பிரிந்து காணாது போன தங்களது காட்டெருமைப் போத்துக்களை நினைத்துக் கதறி அழுது கொண்டிருக்கும். கற்களும் யானைகள் பரவி நிற்பன போலத் தோற்றமளிக்கும். சிள்வண்டுகள் கொடிய ஒலி எழுப்பியபடி திரிந்து கொண்டிருக்கும்.  பெரிய யானைகள்  தாகத்திற்குத்  தண்ணீர் குடிக்க விரும்பி சுனைகளிடம் சென்று, அங்கு நீர்   கிடைக்கப் பெறாது, மேலும் நடக்க இயலாமல் அந்தச் சுனை அருகிலேயே துவண்டு விழுந்து  கிடக்கும்.   இயலாமல் வருந்தி இறந்து வீழ்ந்த யானைகளை,  தமது பசி மிகுதியினாலே அவ்வழியில் செல்பவர்கள் பார்த்து அவற்றை உண்டு பசியாறிச்  செல்லும் வழக்கமும் உள்ளது. வெப்ப மிக்க ஞாயிறு எரிந்து,  புழுதிகள் சூடேறி மேலே எழுந்து புழுதிப் புயலாக வீசி வானையும் சூடேற்றும்.   தரையிலே,  நடந்து செல்வார் அடிகள் வெந்து கண்களையும் சுடச் செய்வதுமாகி பாலைநில வழியே எவரும் செல்ல விரும்ப மாட்டார்கள். கொள்ளை கொள்ளக் கூடிய  பொருள்  வழிப்போக்கரிடம் இல்லாவிட்டாலும்,  திடீரென்று எதிர்பாராத வகையில் வந்து அவர்கள் மீது அம்பெய்து  கொன்று இரக்கமற்ற வகையில் கொள்ளையடிக்கும் மறவர்கள் எதிர்ப்படும் அந்தப் பாலைநிலத்தின் வழி, பயணம் செய்ய ஏற்ற வழியல்ல.     

தலைவியும், தலைவியின் நற்றாயும் செவிலித்தாயும் தந்தையும் தமையன் மார்களும் மலைகள் கொண்ட பகுதி ஒன்றில்  வசிக்கிறார்கள். கொடிய கோடையில் அப்பகுதி வறட்சி கண்டு பாலைத் தன்மையைக் கொள்கிறது. இத்தகைய  நிலப்பகுதியில் வாழும் மிக அழகியான தலைவி காதுவரை நீண்டும் அகன்றும் உள்ள பெரிய விழிகளைக் கொண்டவள்.   அந்த விழிகள் மானைப் போன்ற மருண்ட பார்வைக் கொண்டனவாய் இருக்கின்றன.  காதில் மகரக்குழைகளையும், இரு கை நிறைய மின்னும் பொன் வளையல்களையும்  அணிந்திருக்கிறாள்.  நறுமணம் கொண்ட  தகரப்பொடியால் செய்த சாந்தை தனது அவிழ்ந்து விரிந்து புரளும் நீண்ட  குழலில் பூசி தனது கூந்தலுக்கு மணமூட்டி இருக்கிறாள். அவளுக்கு ஒரு தோழி.  விற்போரில் வல்லவனான ஓர் இளைஞனுக்கும்  தலைவிக்கும் இடையே அன்பு மலர்கிறது. தலைவியின் தோழி அவர்கள் இருவரின் காதலைப் புரிந்து கொண்டு அவர்களது நல் வாழ்வில் அக்கறை கொண்டவளாக இருக்கிறாள்.  தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து பாலைநிலம் வழியாக வேறு இடத்திற்குச்  செல்ல விரும்பி அதைத் தலைவியிடம் கூறுகிறான்.  அதைக் கேட்டு அவள் அஞ்சுகிறாள்.  அவளைப் பிரிந்து சென்ற பிறகு அவளது துயர் கொண்ட மருண்ட விழிகளே அவனை வாட்டிய வண்ணம் உள்ளன. 

என் நெஞ்சே! பகலவனின் கொடிய வெப்பத்தால்  நெல்லும் பொரியாகப் பொரிந்துவிடக் கூடிய பாலை நிலத்தின் நெடிய வழியில் நான் பொருள் ஈட்டச் செல்ல விருப்பது குறித்து நீ அஞ்சாதே என்று எனது தலைவிக்கு ஆறுதலாகச் சில சொற்கள்  சொல்வதற்குள்,  அவளைப் பிரிவதை எண்ணி என் மனமும் அச்சமுற்றது.  அதனால் எனது முக மாறுதலைக் கண்டு அஞ்சிய அவளது பெரிய நீள் விழிகளில்  கண்ணீர் துளிர்த்தது.  தலைவியும் அஞ்சி கண்கலங்கினாள், அவளை எவ்வாறு  நான்  பிரிவது எனத் தலைவன் கலங்குகிறான்(76).  தலைவனின் இந்த முடிவைக் கேட்டு வருத்தமுற்ற தலைவி அதைத் தனது தோழியிடம் வந்து சொல்கிறாள்.  

தலைவியின் துயரைக் காணச் சகியாத தோழி தலைவனிடம் அவனது எண்ணத்தைக் கைவிடும்படி கூறச் செல்கிறாள். பொருளால் எதையும் அடைந்துவிடலாம் என்று  பொருளுக்கு முதன்மை இடம் கொடுப்பவர் சொல்வதைப் பொன் போல மதித்து,  பொருள் தேடச் செல்கின்றீர்.  உங்களிடம் அன்பு கொண்டுள்ள தலைவியின் மேல் அருள் காட்டுவதை ஒரு பொருட்டாக நீங்கள் கொள்ளவில்லை.  பொருளால் கடந்து சென்ற இளமையைப் பெறமுடியாது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தோழி தலைவனுக்கு  அறிவுரை கூறுகிறாள் (85). ஆனால், தோழியின் சொற்கள் தலைவனிடம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.  தனது முடிவில் தான் உறுதியாக இருப்பாகச் சொல்லும் தலைவன் பொருள் தேடக்  கிளம்பிச் சென்றுவிடுகிறான்.

தலைவன் சென்றுவிட்டான் என்பதைத்  தோழி  தலைவியிடம் சொல்ல அஞ்சினாலும்,  தயங்கியவாறே அவன் பிரிவை ஒருவாறு தலைவியிடம் தெரிவித்துவிடுகிறாள்.  அதைக் கேட்டு மனம் வெதும்புகிறாள் தலைவி. அவள் தனது குரலில் விரக்தி தொனிக்கத்  தோழிக்குப் பதில் கூறுகிறாள்.    தலைவன் பொருள் தேட பாலைநிலம்  வழியே செல்ல உறுதியான முடிவை எடுத்துள்ளான் என்பதை என்னிடம் மறைக்காது சொன்ன நீ ஒரு சிறந்த தோழியே, ஆனால் அதனால் என்ன பயன்? ஆறுதல் வழங்கக் கூடியவர் எவரிடமாவது சென்று சொல் என்று தலைவி மனம் வருந்தி தோழியிடம் சொல்கிறாள் (86).

நல்ல வாழ்வை வாழ விரும்பும் எவரும்  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல.  கள்ளிச்செடிகளும்,  சார் மற்றும்  கரிய மாமரங்களும், நாராகிய பற்றுதலில்லாது பூக்களையுடைய, நீண்டு வளர்ந்த முருங்கை மரங்களும், மிகுந்த  மூங்கிற் புதர்களும் நிறைந்த இடத்திற்கு, நல் வாழ்க்கையை வாழ  விரும்பும் மக்கள் விரும்பிச் செல்வார்களா? புள்ளிகளையுடைய பருந்துகள் மற்றும் கழுகுகள் புதிதாக வரும் வழிப் போக்கர்கள் கொண்டு செல்லும்  பொருளைக் கொள்ளை அடிக்க எதிர்பார்த்து, அவ்விடத்தில்,  தங்கியும்  உறங்கியும்  வீழ்ந்து கிடக்கும் இடமாகிய பாலை நில வழியே எவரும் செல்ல விரும்புவார்களா? என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள் (91).    அத்துடன், தன்னைச் சார்ந்தவரின் நலவாழ்வைக் கருத்தில் கொள்ளும் எவரும் தம்மைச்  சார்ந்து வாழ்பவர் சிறப்பழிந்து வருந்துமாறு  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்(92).  

தலைவிக்கு ஆறுதல் சொல்ல விரும்பும் தோழி உலக நடப்பைக் கூறி அவளை அமைதி அடையச் செய்ய முயல்கிறாள்.   ஆண்களின் கடமை என்ன என்று அவர்களுக்கான நெறியினை ஆராய்ந்து பார்த்தால், ஆண்மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையாகப்  பொருள் தேடுதலைப் பெரியோர் வகுத்து வைத்துள்ளனர்.  எனவே,  தலைவன் தான் மேற் கொள்ள வேண்டிய கடமையாகச் செல்வம் தேடிச் சென்றுள்ளார். ஆதலால், சுருக்கமாக உரையாடும் முறையை மேற்கொண்டு நீ சிறிது காலம் பிரிவால் வருந்துகின்ற உனது நிலையைப் பிறர் அறியாவண்ணம் மறைத்து வைப்பது நல்லது என்று தலைவிக்குத் தோழி கூறினாள்(82).

நல்ல தோழியே! கொடிய பாலைநில வழியே செல்ல விரும்புவார் எவராவது உண்டோ? அப்படி ஒரு செயலை எண்ணிப் பார்க்கவும் இயலாது.  அவ்வாறு நினைத்தாலே நெஞ்சு எரிவது போன்று துன்பம் தரும்.  பொருட்படுத்தாது அப் பாலை நிலவழியே வெற்றிகரமாகச் சென்று மீண்டு வரமுடியமா? தலைவன் அந்த வழியே சென்று பொருள் தேட எண்ணியது நிறைவேறுமா? (83).   கொள்ளையர்கள்  இரக்கமற்று கொலை செய்யக்கூடிய பாலை நில வழியாக, தனக்கென அறிவைக் கொண்டிருப்பவர்கள் எவரும் மறந்தும் செல்ல விரும்புவார்களா? ஆதலால் தலைவன் பொருள் தேடி அந்த வழியில் செல்வது நல்லதல்ல (84), என்று மீண்டும் மீண்டும் வருந்தி தலைவி தோழியிடம் புலம்பிய வண்ணம் இருக்கிறாள்.   அவளுக்கு  எவ்வாறு ஆறுதல் கூறுவது என அறியாது தோழியும் தவிக்கிறாள்.  

இதற்கிடையில், கொடிய பாலை நிலம்  வழியே செல்லும் தலைவனையும் தலைவியின் நினைவு துரத்துகிறது.  பொருளினைத்  தேட வேண்டு மென்று தீர்மானித்து;  தலைவியைப் பிரிந்து போக நினைத்தாலும், போகும் வகை விளங்கவில்லையே ? இப் பெரிய இப்பாலை நில வழியே செல்கையில் எதிர்ப்பட்டு,  என்னை நெடுந்தொலைவு தொடர்ந்து வந்து, தலைவியின்  நீண்ட கண்களின் ஏக்கப்  பார்வை என்னை எதிர் கொண்டு துரத்துகிறதே! நெஞ்சே, பொருள் தேட நான் எப்படிச் செல்வேன்? என்று தனக்குத் தானே செல்லுதற்கு வருந்தி எண்ணிக் கொள்கிறான் (68). 

இவ்வாறு பிரிதல் காரணமாகத் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைத்து வருந்திக் கொண்டிருக்கையில், காலம் மெதுவாகக்  கடந்து செல்கின்றது. பருவங்கள் மாறுகின்றன. தலைவன் மீண்டும் வருவேன் என்று குறிப்பிட்டுச் சென்ற வேனிற் காலம் துவங்கியதை  இயற்கையின் அறிகுறிகள் உணர்த்துகின்றன. எரியும் தீ போன்ற நிறத்தோடு  மலர்ந்திருக்கும் நீண்ட அசோக மரத்தின் பூங்கொத்துகளில் எல்லாம்  உடலில் கோடுகள் கொண்ட  அழகிய நீண்ட  வண்டுகள் பாடி மொய்த்துக் கொண்டிருக்கின்றன.  பொன் போன்ற மலர்கள்  கோங்க மரங்களெல்லாம் பூத்துக்  குலுங்குகின்றன. 

தலைவி புறாவிடம்,  சிறிய பெட்டைப் புறாவே!  உனது துணையாகிய  ஆண்புறாவோடு, ஊடல் கொள்வதால் பயன் ஒன்றும் இல்லை. ஏனெனில்,  அன்பு கொண்ட உறவு மனநிலையில் உள்ளவரே என்றாலும், கடினமான இதயம் கொண்டவராக எனது தலைவன் போலப் பிரிந்து சென்று விடுவார்கள்.  தலைவன் தேரோடு வந்து சென்ற சுவடு கொண்ட அகன்ற வழியினைப் பார்த்து, பொன்னிறம் போர்த்தியது போன்று எனது மேனியில் பசலை பூத்தது, அன்பு கொண்டவராயினும் கடின நெஞ்சம் கொண்டு பிரிந்துவிடுவார் என்று தன்னிலைக்கு இரங்கிப் புலம்புகிறாள் (74).  இயற்கையின் மாறுதலையும், தலைவியின் நிலையையும் கண்ட தோழி,  தலைவியே! உனக்குப் பசலை நோய் தோன்றிய காரணம் என்ன?  என்று  வினவி,  வேனிற்பருவம்  என்பதால் தலைவன் வந்துவிடுவான் என்பதைத் தலைவியிடம் வலியுறுத்துகிறாள் (63). பொருள் ஈட்டும் பொருட்டு நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் திரும்பி வரும் நாள் அருகில்தான் உள்ளது. அல்லாமல் உன்னிடம் அன்பு செலுத்திய தலைவர்  விரைவில் வருவேன் என்று சொன்ன சொல்லின் உறுதியை அறியாமல் துயர்  கொள்ளும் தலைவியே, காலம் தாழ்த்தமாட்டார். அவர் வருவேன் என்று சொன்ன பருவகாலம் துவங்கிவிட்டது. வேனிலால் வறண்ட  இம்மலை நாட்டிற்கு வரும்  தலைவரைக் கண்டு மகிழ்வாயாக என்று தோழி  தலைவியிடம் சொன்னாள் (79).  தலைவன் பிரிவைத்  தாங்க மாட்டாளே  தலைவி எனக் கவலையுறும் தோழிக்கு, அவர் எந்த இடரையும் எதிர் கொள்ளாது நல்லவிதமாகத் திரும்புவார் என்று கூறி தலைவியும்  தனது உறுதியை  உணர்த்துகிறாள்(78). 

உன் உணர்வை வெளிக்காட்டாது  உன்னை இத்துன்பத்திலிருந்து காத்துக் கொள்வாய், என்று எத்தனைத்தான் சொன்னாலும் எச்சரிக்கை கொள்ளாது அனைவரும் அறியும் வண்ணம் வருந்தும் வெட்கக் கேடான செயலைச் செய்கிறாய் தலைவியே! நெருப்பினைச் சிதறி விட்டாற் போன்று  குளிர்ந்த முருக்க மரங்கள்  பூத்தன, கனமில்லாத நெற்பொரியினைச் சிதறி விட்டாற்போன்று புங்கைமரத்தின் பூக்கள் மலர்ந்தன(64). செல்வந்தர் வீட்டுச்  சிறுவர்களுக்கு அணிவிப்பதற்காகப்  பொற்கொல்லர் உயர்ந்த பவளத் துண்டத்தினை ஐம்படைத்தாலியில் பதித்து வைத்தாற் போலக்  காணும்படியாக மலர்ந்த மலர்களுடன் மரங்கள் திகழ்வதைக் காண்பாயாக (66),  வேனில் வந்தது; இனி வேந்தனும் வருவான் கவலையற்க தலைவியே! என்று தோழி தலைவியிடம் கூறினாள்.  

வேனிற் பருவமும் வந்து விட்டது, பொருள் தேடிச் சென்ற தலைவனோ சொன்னபடி வேனிலில் வரவில்லை.  வந்துவிடுவார் பொறுத்துக் கொள் என்று நீ  சொல்வதால்  என்னால் பொறுத்துக்  கொள்ள முடியுமா? வருந்தாதே அமைதியாக இரு என்கிறாயே தோழி என்னால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்? என்னை வருத்துவதற்காகவே பொன்னிடத்திலே பொருந்தியுள்ள பவழத்தினைப் போன்று இந்தப் பூக்கள் அடர்ந்து வளர்ந்துள்ள முருக்க மரங்களில் மலர்ந்துள்ளன.  அதைக் காணுகையில் என் நெஞ்சினிலே துன்பம் மிகுந்துள்ளது, என்னால் தாங்க இயலாது (67) என்று தலைவி தோழிக்கு மறுமொழி கூறினாள்.  தலைவியே பொருள் தேடச் சென்ற தலைவர் இன்றே வருவார். இந்த நல்ல செய்தியை உணர்ந்து மிகவும் துடிக்கிறது எனது இடது கண்.   ஆதலால்,  கவலை கொள்ள  வேண்டாம் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள் (80).   வேலை நிறைவேறிய பின்னர் மீண்டும் வாழிடம்  திரும்ப எண்ணும் தலைவன் தன் மனக்கண்ணில் தோன்றிய  தலைவியின் உருவம் கண்டு, பெண்ணே என் எதிரே என்னைச்  செல்லவிடாமல் தடுக்கும் உனது பார்வையுடன் நீ நின்றாய் என்றால், என்னால் உன்னை விட்டுச் செல்ல முடியுமா? என்று  அவளை இனி  பிரியா முடியாத தனது நிலையை மனக்கண்ணில் தோன்றும் உருவத்திடம்  சொல்லி விரைகிறான்(77).  
 
தலைவன் ஊர் திரும்பிவிட்டான்.  தலைவனும் தலைவியும் தனிமையில் கூடிக் களிக்கிறார்கள். உன்னுடைய பார்வையைப்  போன்ற  பார்வையைக் கொண்ட மான் ஒன்று  குளிர்ந்த குராமரத்தினது நிழலில் நிற்பதைப் பார்.  மான் போன்ற பார்வை கொண்ட பெண்ணே இங்கு மணலில் வந்து என்னுடன் விளையாடுவாயாக (70)  என்று தலைவன் அழைக்கிறான். இருவரும் மகிழ்ந்திருந்தாலும் இச்செய்தியை  அறிந்த தலைவியின் குடும்பம் மகிழவில்லை.   தலைவனையும் தலைவியையும் கடிந்து கொள்கிறார்கள்.  தலைவியின் தந்தையும் தமையன் மார்களும் பழிச்சொற்கள் கூறி தலைவியின் மனதை வருத்துகிறார்கள்.  தலைவி வீட்டை விட்டு வெளியேறாத  வண்ணம் வீட்டிலேயே அடைக்கப்படுகிறாள்.   

தலைவனுக்கு  வாக்களித்தவாறு, இற்செறிப்பின் காரணமாகச்  சந்திக்க வேண்டிய புனத்தில் சந்திக்க வேண்டிய வேளையில் தலைவியால் தலைவனைச் சந்திக்க இயலவில்லை.  தலைவியைத்  தேடிச் சென்ற தலைவன் அவளைக் காண இயலாத தனது ஆற்றாமையால், அங்கிருக்கும்  மரம் செடி கொடிகளிடம் அவள் எங்கே போனாள் என்ன சொன்னாள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறான். கொன்றை மரமே!  குருந்தமரமே! கொடிகளாகப் படர்ந்துள்ள முல்லைச் செடியே! நீங்கள் மிகவும் வாட்டமுற்றுக் காணப் படுகின்றீர்களே! உங்கள் எதிரில் நிற்கும் நான், உங்கள் துயரின் காரணம் தலைவியுடன் நீங்கள் கொண்ட உரையாடல் என்று அறிந்து கொண்டேன்.  நீண்ட கண்களையுடைய அவள் இவ்விடத்தை விட்டுச் செல்லும்படி என்ன கூறினீர்கள்?  உங்களிடம் அவள் என்ன கூறினாள்?அதற்கு நீங்கள் அவளுக்கு என்ன மறுமொழி அளித்தீர்கள்? அதற்கு அவள் உங்களிடம் என்ன பதில் சொன்னாள் ?  மின்னும் அணிகலன்களைப் பூண்ட அவள் அவற்றை மிளிரவிட்டுக் கொண்டிருக்க என்ன உரையாடல் இங்கு நடந்தேறியது? என்று பலவாறு புலம்புகிறான் தலைவன் (81).   

தலைவனும் தலைவியும் எதிர்கொள்ளும் இந்தச் சோதனை  நிறைந்த சூழலைத் தோழியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.  தலைவி தலைவனுடன் உடன்போக்கு செய்வதுதான் இதற்கான தீர்வு என்று கருதுகிறாள்.  முன்னர் தலைவி உடன்போக்கு எண்ணத்தைக் கைவிட்டது நினைவு வருகிறது. தலைவனிடம் அது குறித்துப் பேசுகிறாள்.  கழுத்தில் சிவந்த மாலை அணிந்தது போன்ற தோற்றம் கொண்ட கிளியின் சிவந்த வாயினின்றும் வெளிப்படும் கிள்ளை மொழியைக்  கேட்க இயலாமல் போகும்,  குளிர்ந்த குளத்தில் மலர்ந்திருக்கும் கருமையான கண்களையொத்த நீல மலர்களைக் காண இயலாமல் போகும், சிறப்பு மிக்க உறவினரும் சுற்றமும் அலரால் தோன்றக் கூடிய பழிச்சொல் கேட்டு துயர் கொள்வார் என்பனவற்றைக் கருதி வருந்தியதாலும் முன்னர் பேதையாகிய என் தலைவி உடன் போக்கு எண்ணத்தைக்  கைவிட்டாள் (73).  ஆனால் இனி வேறு வழியில்லை.  தலைவியை உங்களுடன் அழைத்துக் கொண்டு வேறிடம் சென்று விடுங்கள் என்று தலைவனிடம் கூறிய தோழி அதற்கான ஏற்பாட்டில் இறங்குகிறாள்.  தலைவியிடமும் சென்று உடன்போக்கிற்குச் சம்மதிக்கச் செய்கிறாள்.  தலைவனுடன் உடன்போக்கு செய்யும்படி தோழி சொன்ன அறிவுரைக்கு உடன்பட்ட தலைவி,  யாவரும் விரும்பும் புகழினைக் கொண்ட  தலைவனைப் பின் தொடர்ந்து உடன் போக்கு செய்தல் ஒழுக்கம் பிறழாத செயலே ஆகும். விற்போரில் வல்லவனாக,   வேலைக்  கையில்  கொண்ட  தலைவன் பக்கத்தே துணையாய் வர செல்லுதற்கரிய தொலைவையும் பாலை நிலவழியையும்  கடப்பது எனக்குக்  கடினமான  செயல் அல்ல என்று தலைவி  தோழியிடம் கூறினாள்(87). 

அத்துடன், தோழியை நோக்கி, பொருத்தமற்ற வெறுப்புச்  சொற்கள் கூறி, எங்களது காதலைப் புரிந்து கொள்ளாது, எங்களைக் கடிந்து கொள்ளும்  தந்தையையும்  தமையன் மார்களையும் விட்டு நான் விலகுகிறேன்.  எங்களது காதலை ஏற்காமல் பொல்லாப்பு கூறும் எங்களது இல்லத்தாரைப் பிரிந்து தலைவனுடன் உடன்போக்குச் செய்கிறேன்.  தோழியே,  எனது பெற்றோரையும் தமையன் மாரையும் சந்திக்கத் துணிவுடன் என் வீட்டிற்கு நீ  செல்வாயானால், நாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை அவர்களுக்கு எடுத்துக் கூறி , உடன்போக்கு செல்லும்  எனது நிலையையும் முடிவையும் அவர்களுக்குக் கூறி, என் மீது கோபம் கொள்ளும்  அவர்களது மனதை மாற்றி,  எம்மேல் அவர்கள் கொண்டுள்ள  குறை நீக்கி, எங்கள் மீது  வீட்டை விட்டுச் செல்லும் பழிச் சொல்லும் கருத்தினையும் அவர்கள் மனத்திலிருந்து நீக்கி, நீ எல்லோருக்கும் நல்லவளாக இரு என்று தலைவி தோழியிடம் கேட்டுக் கொள்கிறாள்(88). 

தலைவனும் தலைவியும் முன்னர் தலைவி மறுதலித்த கொடிய பாலை  நிலம் வழியாகவே வேறிடம் செல்ல முடிவெடுத்து  வீட்டை விட்டு வெளியேறி தங்களது புதிய வாழ்க்கையைத் தொடரச் செல்கிறார்கள்.  கொடுமையான அந்த வெம்மை நிறைந்த பாலை வழியில் அவர்கள் பயணம் தொடர்கிறது. மாலை மயங்குகிறது.  அவர்கள் இருவரும் செல்வதைக் கண்ட வழிப்போக்கர் சிலர்,  தலைவியை அழைத்துக் கொண்டு பாலைவழிச் செல்லும் தலைவனிடம், நீங்கள் செல்கின்ற  இப்பாலை நில வழியும் நீண்டதாக உள்ளது.  நெருப்பினைப் போன்ற கதிர்களைக் கொண்ட பகலவனும் பாதியளவு வரை அந்த பெரிய மலையின் பின்னே மறைந்து விட்டான்.  ஆதலால், அணிகளை  அணிந்துள்ள இந்த அழகிய மங்கையுடன் நீங்களும், எங்களில் ஒருவராக உங்களைக்  கருதிக் கொண்டு எமது சிறிய ஊரில் இரவில் தங்கி,  நாளை அங்கிருந்து செல்வதே நல்லது என்று கூறி தங்களில் ஒருவராக அவர்களது சிற்றூரில் இரவு தங்கிச் செல்லும்படி  அழைக்கிறார்கள்(69). 

தலைவி உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்த செவிலித்தாய் துயர் தாளாமல் தலைவியைத்  தேடி பாலை நிலம் வழியே செல்கிறாள். வழியில் இருக்கும் குரா மரத்தின் கீழ் நின்று மரத்திடம் உதவுமாறு முறையிடுகிறாள். ஒரு தாய் போன்று மன நெகிழ்வுற்றுத்  தாழ்ந்து முலை போன்ற கோங்க மலர்களைக் கொடுத்துப் பாலூட்ட நீ பொம்மை போன்ற பெண் குழந்தையைப் போன்ற காய்கள்  பெற்றெடுத்தாய் குரா மரமே.  அது போலவே  தலைவியும் நான் பராமரிக்கும் எனது மகள்தான்  பெரிய குராமரமே! அவள் உன்னிடம்  சொல்லியவற்றை என்னிடம் சொல்ல முடியாவிட்டாலும்  பரவாயில்லை.  ஆனாலும்,  முள்  போன்ற கூரிய  பற்களைக் கொண்ட என் மகள் தனது தலைவனுடன் சென்ற வழி இதுதான் என்று மனமுவந்து அவள் எந்த வழியில் சென்றாள்  என்பதை எனக்குக் காண்பிப்பாயாக என்று குராவிடம் கூறுகிறாள்(65). 

அவ்வழியே வரும் கணவன் மனைவியாகிய இருவர் செவிலித்தாயின் நிலை கண்டு அவள் மீது கழிவிரக்கம் கொள்கிறார்கள்.   தாங்கள்  அவர்களைப் பார்த்தோம் என்றும், விரைந்து  சென்றால் அவர்களைக் காணலாம் என்றும் கூறுகிறார்கள்.  விரைந்து நீங்கள் செல்வீர்கள் என்றால், நம்மவர்களாகிய  அவ்விருவரையும் காணவேண்டும் என்ற உங்கள் எண்ணம் எளிதில் நிறைவேறும். (பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்டவனாகிய அவன்) வெப்ப மிக்க கதிரவன் போன்ற தலைவனை, நான்  பார்த்தேன் என்றும்,   குளிர்ந்த மதியையொத்த தலைவியை (மற்ற ஆண்மகனை ஏறெடுத்தும்  பார்க்காத) இவள் பார்த்தாளாம் என்று ஆண்மகன் செவிலித்தாயிடம் கூறுகிறான்(89).  அவன் காட்டிய வழியில் விரைகிறாள் செவிலித்தாய். எதிர்ப் பட்டவரிடம் எல்லாம் அவர்களை இந்த வழியில் நீங்கள் பார்த்தீர்களா, பார்த்தீர்களா  என்று கேட்டுக் கொண்டே கவலை தோய்ந்த முகத்துடன் செல்கிறாள். 

நிலவையும் கதிரையும் ஒத்திருந்த தலைவியும் தலைவனும்  அந்தப் பாலை நிலத்தின் வழி சென்றதைக் கண்டதாக வழிப்போக்கர்கள் சிலர் செவிலித்தாயிடம் கூறுகிறார்கள்(71). செவிலித்தாயே, அழகிய தலைவி துன்பம் ஏதுமின்றித்தான் பாலைநில வழியே சென்றாள், எனவே கவலையற்க என வழிப்போக்கர்களில் சிலர்  செவிலித்தாய்க்கு ஆறுதலும் கூறுகிறார்கள் (72). வீட்டில் தலைவி பிரிந்து சென்றுவிட்டதால் நற்றாயும் வருந்தியவாறு உள்ளாள். எரியும் தழல் போலச் சுடுகின்ற பகலவனின் ஒப்பில்லாத  கதிர்களால் வெம்மை சூழ்ந்த பாலை நிலத்தில்,  விரித்து விட்ட கூந்தலையுடைய என்மகள் விருப்பத்தோடு செல்லும் வழியில், முறுக்கி விட்ட கயிற்றினைப் போன்று மலைப்பாம்புகள் புரண்டு இறந்து  கிடக்குமே.   அத்தகைய கொடிய பாலை  நில வழியே தனது தலைவனைப் பின்தொடர்ந்து  சென்றுவிட்டாளே  என் மகள்.  அத்தகைய கொடிய வழி மகளுக்கு அச்சம் தருமோ  என அன்னை தனக்குள் கேட்டு கவலை கொள்கிறாள் (75). மகள் திரும்பி வருவாளா? உடன் போக்கு சென்ற மகளைத் தலைவன் எனது வீட்டிற்கு அழைத்து வருவானா? அல்லது தனது வீட்டிற்கே கொண்டு சென்றுவிடுவானா? என்று நற்றாய்  நிமித்தம் கேட்க முடிவு செய்கிறாள்.  தெய்வத் தன்மையின் அருளால் நிமித்தம் கூறக்கூடிய ஒருத்தியை அழைக்கிறாள்.  நிமித்தம்  கூறும் பலரிலும் நீ வேறுபட்டவள் என்ற கருத்தினால் உன்னைக் கேட்கிறேன்.  உன் தெய்வத்தன்மையின் உதவி கொண்டு கூறுவாயாக. புகழ்ந்து கூறும் நற்பண்பினைக்   கொண்டவனாக  எனது மனைக்கு முறைப்படி மணம் முடித்துத் தர எனது மகளைத் தலைவன்  அழைத்து வருவானா? அல்லது, ஒளி மிக்க வளையலணிந்த என் மகளைத் தனது மனைக்கே அழைத்துச் சென்று விடுவானா ?  என்று நற்றாய் குறி சொல்பவளிடம் கேட்கிறாள்(90).



குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
76. என் நெஞ்சே! பொருள் ஈட்ட நான் பாலை வழி செல்ல இருப்பதை எண்ணி அஞ்சாதே என்று நான் தலைவியை ஆற்றுவிக்கும் முன் அவளது பிரிவை எண்ணி நான் அஞ்சுவதை உணர்ந்து கொண்ட தலைவியும் அஞ்சி கண்கலங்கினாள், அவளை எவ்வாறு பிரிவது எனத் தலைவன் கலங்குகிறான். 
85. பொருளால்  எவற்றையும் அடைந்துவிடலாம் என்று பொருள் தேடி நீங்கள்  செல்ல விரும்புகையில்,  தலைவியின் மீது அருள் காட்ட மறக்கிறீர்கள்.  பொருளால் கடந்து சென்ற இளமையைப் பெறமுடியாது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தோழி தலைவனுக்கு  அறிவுரை கூறுகிறாள்.
86. தலைவன் பொருள் தேட பாலைநிலம்  வழியே செல்ல முடிவெடுத்துள்ளான் என்பதை என்னிடம் மறைக்காது சொன்ன நீ ஒரு சிறந்த தோழியே, ஆனால் அதனால் என்ன பயன், ஆறுதல் வழங்கக் கூடியவர் எவரிடமாவது சென்று சொல்  என்று தலைவி மனம் வருந்தி தோழியிடம் சொல்கிறாள். 
91.  நல்ல வாழ்வை வாழ விரும்பும் எவரும்  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.  
92. தன்னைச் சார்ந்தவரின் நலவாழ்வைக் கருத்தில் கொள்ளும் எவரும்  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.  
82.  தலைவியே ஆண்களின் கடமை பொருள் தேடுதல் என்பதால் தலைவன் பொருள் தேடிச் சென்றுள்ளார்.  பிறர் அறியும் வண்ணம் உனது துயரை  வெளிக்காட்டாதிருக்க வேண்டி  நீ அதிகம் பேசாமல் இருத்தல் நல்லது எனத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள். 
83.  தலைவன் பொருள் தேடி பாலை வழி செல்லவிருக்கிறான் என்று தோழி கூறியது கேட்டு தலைவி அதற்கு உடன்படாது சொல்லியது. 
84. கொள்ளையர்கள்  இரக்கமற்று கொலை செய்யக்கூடிய பாலை நில வழியாக அறிவுடைய எவரும் செல்ல விரும்ப மாட்டார்கள், ஆதலால் தலைவன் பொருள் தேடி அந்த வழியில் செல்வது நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள். 
68. நெஞ்சே, பொருள் தேட எப்படிச் செல்வேன், பாலை வழியிலும் அழகிய என் தலைவியின் நீண்ட கண்களின் ஏக்கப்  பார்வை என்னை எதிர் கொண்டு துரத்துகிறதே என்று தலைவன் வருந்துகிறான். 
74. புறாவே ஊடல் கொள்வதால் பயனில்லை, என்னைவிட்டு நீங்கிய தலைவன் சென்ற சுவட்டைக் கண்டு எனது மேனியில் பசலை பூத்தது, அன்பு கொண்டவராயினும் கடின நெஞ்சம் கொண்டு பிரிந்துவிடுவார் என்று தன்னிலைக்கு இரங்கிப் புலம்புகிறாள் தலைவி.
63. தலைவியே உனக்குப் பசலை நோய் தோன்றிய காரணம் என்ன என்று தோழி தலைவியை வினவினாள்.
79.  தலைவன் விரைவில் வருவேன் என்று சொன்ன சொல்லின் உறுதியை அறியாமல் துயர்  கொள்ளும் தலைவியே, தலைவன் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை, அவர் வருவேன் என்று சொன்ன பருவகாலம் துவங்கிவிட்டது. வரப்போகும் அவரைக் கண்டு களிப்பாயாக என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  
78. தலைவன் பிரிவைத்  தாங்க மாட்டாளே  தலைவி எனக் கவலையுறும் தோழிக்கு, அவர் நல்ல வகையில் திரும்புவார் என்று கூறி தலைவி தனது உறுதியை  உணர்த்துகிறாள். 
64. வேனில் வந்தது; இனி வேந்தனும் வருவான் கவலையற்க தலைவியே! என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். 
66.  வேனிற் காலம் துவங்கி விட்டது, முருங்க மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன, வேனிலில் வருவதாகக் கூறிச் சென்ற  தலைவன் வந்துவிடுவான் தலைவியே!  
67. பொருள் தேடிச் சென்ற தலைவன் சொன்னபடி வேனிலில் வரவில்லை, வருந்தாதே அமைதியாக இரு என்கிறாயே தோழி என்னால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும் என்று தலைவி தோழியிடம் கேட்கிறாள். 
80.  தலைவியே பொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில் வருவார். துடிக்கும் எனது இடது கண் அந்த நல்ல செய்திக்கு அறிகுறியாகும், கவலை வேண்டாம் எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். 
77. பெண்ணே என் எதிரே என்னைச்  செல்லவிடாமல் தடுக்கும் உனது பார்வையுடன் நீ நின்றாய் என்றால், என்னால் உன்னை விட்டுச் செல்ல முடியுமா? என்று தன் மனக்கண்ணில் தோன்றிய தலைவியின் உருவத்துடன் வேலை நிறைவேறிய பின்னர் மீண்டும் வாழிடம்  திரும்ப எண்ணும் தலைவன் கூறுகிறான். 
70. மான் போன்ற பார்வை கொண்ட பெண்ணே இங்கு மணலில் வந்து என்னுடன் விளையாடுவாயாக  என்று தலைவன் அழைக்கிறான். 
81. இற்செறிப்புக் காரணமாகப் புனத்தை விட்டுச் சென்றுவிட்ட தலைவியைத்  தேடிச் சென்ற தலைவன்  தனது ஆற்றாமையால் மரம் செடி கொடிகளிடம் கேள்வி எழுப்பிக்  கொண்டிருந்தான்.
73. முன்னர் தலைவனுடன் உடன் போக்கை மேற்கொள்ள விருந்த தலைவி, பின்னர் அச்செய்கையால் ஏற்படக் கூடிய துயரை எண்ணிக் கைவிட்டாள்  என்று தோழி தலைவனிடம் கூறினாள். 
87. தலைவனுடன் உடன்போக்கு செய்யும்படி தோழி சொன்ன அறிவுரைக்கு உடன்பட்ட தலைவி,  விற்போரில் வல்லவனான அவனுடன் பாலை நில வழியில் செல்வது கடினமான செயல் அல்ல என்கிறாள். 
88. எங்களது காதலை ஏற்காமல் பொல்லாப்பு கூறும் எங்களது இல்லத்தாரைப் பிரிந்து தலைவனுடன் நான் வெளியேறுகிறேன். தோழியே  எனது பெற்றோரையும் தமையன் மாரையும் சந்திக்க என் வீடு சென்றால் எங்களது அன்பைக் கூறி, உடன்போக்கு செல்லும்  எனது நிலையையும் கூறி அவர்களது மனதை மாற்றி எல்லோருக்கும் நல்லவளாக இரு என்று தலைவி தோழியிடம் கேட்டுக் கொள்கிறாள். 
69. தலைவியை அழைத்துக் கொண்டு பாலை வழிச்செல்லும் தலைவனிடம், பொழுது சாயப் போகிறது எங்கள் சிற்றூரில் இரவு தங்கி நாளை செல்க என்று எதிர்ப்பட்ட வழிப்போக்கர்கள் கூறுகிறார்கள். 
65. சுரத்திடை (பாலை நிலவழி) தனது தலைவனுடன்  தலைவி சென்ற வழி எது என்று எனக்குக் காட்டுவாயாக எனச் செவிலித்தாய் குரா மரத்தருகில் நின்று புலம்புகிறாள்.
89.  உடன்போக்கு சென்ற தலைவியையும் தலைவனையும் பாலை நில வழியே தேடிச் செல்லும் செவிலித்தாயிடம், எதிர்ப்படும் கணவன் மனைவியாகிய இருவர், தாங்கள்  அவர்களைப் பார்த்தோம் என்றும், விரைந்து  சென்றால் அவர்களைக் காணலாம் என்று கூறுகிறார்கள்.  
71. நிலவையும் கதிரையும் ஒத்திருந்த தலைவியும் தலைவனும்  அந்தப் பாலை நிலத்தின் வழி சென்றதைக் கண்டதாக வழிப்போக்கர்கள் செவிலித்தாயிடம் கூறுகிறார்கள். 
72. செவிலித்தாயே, அழகிய தலைவி துன்பம் ஏதுமின்றித்தான் பாலைநில வழியே சென்றாள், எனவே கவலையற்க என வழிப்போக்கர் செவிலித்தாய்க்கு ஆறுதல் கூறினர்.
75.  கொடிய பாலை  நில வழியே தனது தலைவனைப் பின்தொடர்ந்து  சென்றுவிட்டாளே  என் மகள், அந்த வழி அவளுக்கு அச்சம் தருவதாக இருக்குமோ  என்று துயர் கொள்கிறாள் தாய். 
90. உடன் போக்கு சென்ற மகளைத் தலைவன் எனது வீட்டிற்கு அழைத்து வருவானா? அல்லது தனது வீட்டிற்கே கொண்டு சென்றுவிடுவானா? என்று நற்றாய்  நிமித்தம் கூறுபவரிடம் குறி கேட்கிறாள்.  



உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html



நன்றி:  சிறகு 
நவம்பர் 7, 2020



#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi 


Saturday, October 24, 2020

அன்பின் ஐந்திணை - நெய்தல்

அன்பின் ஐந்திணை - நெய்தல்
 
 


கணிமேதாவியார் இயற்றிய  திணைமாலை நூற்றைம்பது நூலில் முதலில் இடம் பெறும் குறிஞ்சித் திணைப்பாடல்களை அடுத்து 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்'  ஒழுக்கம் குறித்த  31 வெண்பாக்கள் (பாடல்கள் 32 -62)  நெய்தல்திணைப்  பாடல்களாக இடம் பெறுகின்றன. இப்பாடல்களிலும் நெய்தல் நில இயற்கைக் காட்சிகளும், அம்மக்களின் வாழ்வியலும் அழகுற விவரிக்கப்படுகிறது. நெய்தல் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்( அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 
 
இந்த நெய்தல்திணைப் பாடல்களிலும், சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு என்பதற்கு  இணங்க,  தலைவன் தலைவியை மணந்து (வரைவு) கொள்ளாமல் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள வரைவு கடாதல் என்ற நோக்கில் தலைவியைச் சந்திக்க அவன் வரும் இடர் தரும் வழி, ஊரில் அலர் தொடக்கம், வரைவு வேட்கை,  குறியிடம் மறுப்பது, பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல், ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்; வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் தொடங்கி வளர்ந்து கைகூடுவதில் தோழியின் பங்களிப்பு மிகுதி.
 
இந்நூலின் நெய்தல் பாடல்களைக் குறிஞ்சி நிலப் பாடல்களுடன் ஒப்பிடுகையில் தலைவிக்குக் காவல் மிகுதி, இற்செறிப்பு, வெறியாட்டு ஏற்பாடு,  உடன்போக்கு  போன்ற குறிஞ்சிப் பாடல்களில் காணப்பட்ட கருத்தாக்கங்களை நெய்தல் பாடல்களில்  காண இயலவில்லை.  ஊர் மக்களின் அலர், அதனைத் தவிர்க்கப் பகலில் சந்தித்த காதலர்கள் இரவில் சந்திக்க முற்படுதல், இருப்பினும் அலர் தொடர்தல், அதனால் தோழி  தலைவனிடம் இரவிலும் வரவேண்டாம் என்று கூறி தலைவியை மணக்க ஏற்பாடு செய்யச் சொல்லல் என்ற பாடல்களே மிகுதி.  'கனை இருள் வாரல்!' என்ற கருத்தைத் தொடர்ந்து பல பாடல்களில் தோழி தலைவனிடம் கூறிக்கொண்டே இருக்கிறாள்.
 
தோழி இடம் பெறாத பாடல்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.  தோழி வரைவு கடாயது  என்பது 13 பாடல்களில்  (பாடல்கள்: 34, 35, 36, 37, 43, 46, 50, 52, 53, 54, 55, 57, 59) காட்டப்படுகிறது. அதாவது மொத்த நெய்தல் பாடல் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், 40 விழுக்காட்டுப் பாடல்கள் இந்த வகையில் அமைந்துள்ளன.  தலைவன், தலைவி, தோழன், தோழி, செவிலித்தாய் ஆகியோர் மட்டுமே பாடல்களில்  நேரடியாக இடம் பெறுகிறார்கள். தலைவியின் தந்தை, தமையன் மார் போன்றவர் குறித்துக் குறிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றது. செவிலித்தாயும் இரு பாடல்களில் மட்டுமே காட்டப்படுகிறாள்.  குறிஞ்சி நிலத் தலைவியைவிட நெய்தல் தலைவி கட்டுப்பாடுகள் அதிகம் இன்றி இருக்கிறாள். தலைவியைச் சந்திக்க இயலாத தலைவன் அதைக் கடற்கரை நண்டிடம் கூறிப் புலம்புவதும், தலைவனைச் சந்திக்க இயலாத தலைவி அதைக் கடல் அலைகளிடம் சொல்லிப்  புலம்புவதும் என இரு பாடல்கள் காட்சியில் சிறப்பு மிக்கப் பாடல்களாக அமைந்துள்ளன.
 
திணைமாலை நூற்றைம்பது நூலின் நெய்தல் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் ஒருவரே என்றோ, அவர்களின் தோழியும் தோழனும், செவிலித்தாயும்,  தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட ஒரே நெய்தல்  நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  31 நெய்தல் பாடல்களையும் ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண்.
 
இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய ஒழுக்கமும் கொண்ட நெய்தல் நிலத்தில், கடற்கரையோரப் பகுதியில் நிகழ்வது இக்கதை.
 
அது ஓர் அழகிய நெய்தல் நிலம்.  குளிர்ந்த கடல் நீரும் அதில் தொடர்ந்து ஓர் அலை வந்து கரையில் மோதித் திரும்பும் முன்னர் மேலும் இரு அலைகள் அதை விரட்டிவந்து மோதிச்  செல்லும் வளப்பம் நிறைந்த கடற்கரை.  பகலிலும் இரவிலும் மக்கள் கடற்பகுதியில் அலைந்து அலைகளுக்குப் போட்டியாக ஆரவாரித்துக்  கொண்டு நடமாடியவண்ணம் உள்ளார்கள்.  அலைகளால் அள்ளி வரப்பட்டு கடற்கரையில் ஒதுக்கப்பட்ட சிப்பிகள்  வாய்பிளந்து காட்டுவதால் வெளிப்படும் முத்துக்களின்  ஒளி இரவில் இருளையும் விரட்டக்  கூடியதாக இருக்கிறது. அவற்றை அள்ளிச் செல்ல விரும்பும் மக்களின் நடமாட்டத்தை  இரவிலும் காணக்கூடியதாக உள்ளது.
 
கடற்கரையில் உப்பங்கழிகளும்  அவற்றைச் சுற்றிச் சூழ்ந்துள்ள கடற்கரையின் பசுமை நிறைந்த கானல் சோலைகளும், நீல நிறக் கடலும் இவற்றுக்கு மாற்றாக மிக வெண்மையான மணல் நிரம்பிய கடற்கரை மணலும் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது.  உப்பங்கழிகளில் சுறாமீன்கள் சுழன்று விளையாடி நீந்தியவண்ணம் உள்ளன. கடற்கரை  எங்கும் அன்று பூத்த மலர்களுடன் மணம் மிக்க புன்னை மரங்களும், ஞாழல்  மரங்களும், நெருக்கமாக அடர்ந்து வளர்ந்த தாழை மரங்களும், உயர்ந்து வளர்ந்த பனை மரங்களும் உப்பங்கழிகளைச் சுற்றி அடர்ந்த தில்லை மரங்களும் நீர் முள்ளிச் செடிகளும் வளர்ந்துள்ளன.  கடற்பகுதியில் வீசும் புலால் நாற்றத்தைப் புன்னை மரத்தின் மலர்களின் இனிய நறுமணம் நீக்கிக் கொண்டிருக்கிறது. எங்கும் நெய்தல் மலர்கள் பூத்துள்ளன. அங்கு மீட்டாமலே  மேன்மையான இசையை தேன்வண்டுகள் பொழிந்த வண்ணம் உள்ளன.
 
அவ்வூரின் நுளையர் குடும்பத்தில் அண்ணன்களும் ஓர் தங்கையும் எனச் சிறு குடும்பம் உள்ளது.  அந்த  அண்ணன் மார் படகு செலுத்தி, நுட்பமாகப் பின்னிய வலையை வீசி மீன் பிடிக்கும் தொழிலில் மிக வல்லவர்கள்.   அவர்கள் ஆழ்கடலில்   அமிழ்ந்து  முத்துக்களும்  சங்குகளும் கூட பிடித்து வருவார்கள்.  அவர்கள் அவ்வாறு வலை வீசி கடலில்  இருந்து முகந்து  வரும் மீன்களை வெய்யிலில்  கருவாடாக உலர வைத்து, அவற்றைப் பறவைகள் கொத்திப் போகாமல் காவல் காப்பது தங்கையின் வேலை. இவளே இக்கதையின் தலைவி. இவள்  வேலை ஒத்திருக்கும் மிகப் பெரிய நீண்ட கண்களையும், மருண்ட பார்வையையும், காதில் சிறிய சுறாமீன்கள் வடிவில் வார்க்கப்பட்ட மகரக்குழை  காதணிகளையும், கையில் முத்துக்கள்  பதித்த வளையல்களையும் அணிந்திருக்கிறாள்.  ஆகவே அவளை நாம் முத்தழகி என்றும் பெயர் சூட்டி  அழைக்கலாம். 
 
தலைவியின் அண்ணன்கள் வலைவீசி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று விட்டார்கள். கடற்கரை சோலைப் பகுதியில் மீன்கள் உலர்த்தப் பட்டுள்ளன.  அருகில் அடப்பங் கொடிகளில் முளைப்பாலிகையினைப் போல ஒன்றாகக் கூடி மலர்கள் பூத்திருக்கின்றன.   அவற்றின் மீது உடலில் இருந்து நீக்கிய கவசம் போல மீன் வலைகள் வெய்யிலில் உலர்த்தப் பட்டிருக்கின்றன. அப்பகுதியில் தலைவியும் அவளது  இணைபிரியாத தோழியும் கருவாடுகளை உலர்த்தி அவற்றைக் காவல் காத்த வண்ணமும், அவற்றை வாங்க விரும்புவோருக்கு  விலை  கூறி விற்றவாறும் பகல் பொழுதை ஓட்டிக்  கொண்டிருக்கிறார்கள். 
 
அந்தக் கடற்கரை ஊரின் தலைவனின் படகுக்  கூட்டம் கரையை நோக்கி வருகிறது.  அமைதி என்பதையே அறியாத மன்னவன் ஒருவனின் படை ஒன்று போருக்குச் செல்லுகையில் எவ்வளவு ஆரவாரம் இருக்குமோ அது போல ஆரவாரம் கடற்கரைப் பகுதியில் ஏற்படுகிறது.   அலை ஓசை போரின் பறை ஓசை போல முழங்க, அலைகள் யானைப் பாகனாகவும், நீண்ட தோணிகள் யானைப் படைகள் போலத் தோற்றமளிக்க, வானில் சுற்றும் பருந்துகள் புரவிகள் போல விரைந்து பின் தொடர, அந்த ஓசையில் அச்சமுற்ற  கடற்கரையினை அடுத்துள்ள சோலையில் ஆர்த்தெழும்   பறவைகள்  ஒருசேர அலறலுடன் வானில் எழும்பிட படைவீரர்களுடன் மன்னன் போருக்குச் செல்லும் காட்சி போல இருக்கிறது அது.  அந்தத் தலைவனின் தோற்றத்தால் கவரப்படுகிறாள் தலைவி. 

அவள் பார்வை கருவாடுகளைக் காவல் செய்வதை விட்டு அவன் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து அவனையே காவல் செய்யத் துவங்குகிறது.  தலைவியின் அழகைக் கண்டு மயங்கிய தலைவனும் அவள் பார்வை தன்னை சிறைபிடிப்பதை உணர்கிறான்.  அன்று பூத்த ஞாழல் மலர்களைக் கொத்தாகப்  பறித்து தலைவியின் கையில் திணிக்கிறான்.  இவர்களின் செயல்களைத் தோழியும் நோட்டமிட்டவாறே  எதையும் அறியாதவள் போல உடன் இருக்கிறாள். 
 
தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் தலைவியின் கவர்ந்திழுக்கும் பார்வை தவிர வேறொரு  சிந்தனையும் இன்றி அதில் மூழ்கியிருக்கிறான்.  தலைவனிடம் கண்ட மாறுதலை உணர்ந்து தோழன் அவனிடம்  பேச்சு கொடுக்கிறான்.
 
கடற்கரையில் மீன் உலர்த்திக்  காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான் (32). அவளது வெண்முத்துப்பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில்  மனம் துவண்டு வருந்துகிறேன் என்கிறான் (33).  தலைவியின் ஒரே பார்வையில் கவிழ்ந்துவிட்ட தலைவன் ஒரு பண்பாளனா என்ற எண்ணம் தோழனின் மனதில் தோன்றுகிறது. 
 
அவனது மனதின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தலைவன் தலைவி குறித்து மேலும் அடையாளம் கூறி அவனையே சென்று பார்த்துக் கொள்ளச் சொல்கிறான்.  கடல் அலைகள் ஆர்ப்பரித்துத் திரும்பிச் சென்ற வண்ணம் அலைமோதும் கரையினிடத்தே, கரையில் அலையும் நண்டுகளைக் கால்களினாலே  கண்டு பிடித்தவாறு, கரை அருகே  மலர்ந்துள்ள நெய்தற் பூக்களைக் கொய்தவாறு நிற்கும், மிக நீண்ட கண்களை உடையவள் எனக்குக் காதல் மயக்கத்தை உண்டாக்கியவள். அவள் அந்த பரதவரின் மகளாகிய என் தலைவி (60)  என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான். தலைவனைக் கவர்ந்தவளைத்தான் பார்த்துவிடுவோமே  என்ற எண்ணத்தில் தலைவன் குறிப்பிட்ட அடையாளங்கள் உதவியுடன் கடற்கரைக்கு  வந்து அவளைக் கண்டு வியக்கிறான் தோழன்.
 
ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும், இணையற்ற அவளது இரு பெரிய கண்களைப் பார்த்த பின்னரும் கூட  அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் மன உறுதி கொண்டவன் மட்டுமல்ல  பண்பில் சிறந்தவன்தான் (45) என்று தோழன் மனதில் எண்ணம் ஏற்படுகிறது. மீண்டும் தலைவனிடம் செல்கிறான்.
 
ஒரு பொருட்டாக அக்கறை செலுத்தாதவர்களும் கூட  காண நேர்ந்தால் இயற்கையழகு நிறைந்த தெய்வமாகக்  காட்சி அளிக்கக் கூடியவள் தலைவி. அத்தகையவளைக் கருத்தாகக் காக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான் (47). 
 
மீண்டும் தலைவியைக் காண விரும்பி கடற்கரை பக்கம் புரவி பூட்டிய தனது தேரில் செல்கிறான் தலைவன், அங்குத் தோழியைக் காணுகிறான். தான் தலைவியைச் சந்திக்க விரும்புவதைக் கூறுகிறான்.  தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது  கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான் (42). 
 
அவர்களது  காதல் நாடகத்தை முன்னர் பார்த்துக் கொண்டிருந்த தோழிக்குத் தலைவன் தலைவிக்கு ஏற்றவன்தான் என்ற எண்ணம் வருகிறது. அவனுக்கு உதவ முன் வருகிறாள்.  தலைவனே, உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது (44, 58).  அங்கு இல்லாவிடில், கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை  உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியைப் பகற்பொழுதில்  அங்குக் காணலாம் எனத் தோழி தலைவனுக்குக்  குறிப்பு கொடுக்கிறாள் (51). 
 
தலைவனும் தலைவியும் சந்திக்கத் தொடங்குகிறார்கள்.  நாட்கள் கடக்கின்றன. தலைவன் தலைவியைப் பார்க்க வந்து செல்வது பிறர் கவனத்திற்கு உள்ளாகிறது.  ஊரில் அலர் எழுகிறது. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து,  மழைமேகம் மூளுவது போல எங்கும்  சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக என்னை வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள் (41). இதனால் அவர்கள் சந்திக்க இயலாத நிலை ஏற்படுகிறது. 
 
கடற்கரைக்குச் செல்லும் தோழி அங்குத் தலைவனைச்  சந்திக்கிறாள், தலைவி இனி வரமாட்டாள் என்று சொல்கிறாள்.  நிலையைப் புரிந்து கொள்ளும் தலைவன் தோழியை நோக்கியவாறு, கடற்கரையில்  விளையாடும் நண்டிடம்  பேசுவது போல, துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான்.   தோழிக்கு அவனது நிலை காண்பதற்கு மிகவும்  இரங்கத் தக்கதாக இருக்கிறது.  அதை அவள் தலைவியிடம் வந்து தெரிவிக்கிறாள்.  தனது பெண் துணையோடு இன்புற்று விளையாடும் ஆண் நண்டினையும், என்னையும்  தலைவன் பார்த்து,  என் இனிய துணைவியாகிய தலைவியோடு இவ்வாறு கூடிக் களிக்க  எனக்கும் வாய்ப்பு கிடைக்குமோ?  என்று தனக்குத் தானே பேசிக் கொண்ட தலைவன்;  அந்த ஆண் நண்டினை நோக்கி நீ உனது இனிய துணையாகிய பெட்டை நண்டுடன்  இன்புற்று விளையாடுதலாகிய ஒன்றையே செய்திருப்பாயானால் பிரிவுத்துன்பம்  என்ன என்பதனை அறிந்திருக்கமாட்டாய், என் பிரிவுத்துயரை உன்னிடம் கூறுவதால் என்ன பயன்?   என நண்டிடம்  பேசுவது போலத்  தலைவன்  தனது கருத்தை எனது  கவனத்திற்குச் சொல்லிவிட்டுப் புரிந்து கொண்டவனாய் மனம் வெறுத்து விலகிச் சென்றுவிட்டான் (40) என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள் .
 
தலைவனின் நினைவால் தலைவியும் இரவில் உறக்கமின்றிப்  புலம்புகிறாள். என்னைப் போல உறக்கம் வாராது நீ ஏன் அலைமோதுகிறாய். நான் படும் துன்பத்தைப் போன்ற இந்த உறங்கா நிலையாகிய துன்பத்தை உனக்குக் கொடுத்தவர் யாரென்று சொல்வாயாக என்று தலைவி கடலை நோக்கிக் கேட்கிறாள் (38).
 
இவர்கள் படும் துன்பத்தைக் காணச் சகிக்க முடியாமல்  தோழி இரவில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறாள். தலைவனைக் கண்டு,  தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது  கண்களைக் காண இயலும் (34).  கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில்,  அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக்  கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில்  இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள் (56). 
 
தலைவனும் வருகிறான், இரவில் அவர்கள் சந்திக்கிறார்கள்.  தலைவன் இரவில் வருகையில் அவனது புரவியின் குளம்புத் தடயம் மணலில் அழுந்தி அவன் வந்து சென்றதை அறிவிக்கிறது.  தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காண நேரிட்டால் அலர் உண்டாகும்  என்று அவன் இனி இரவிலும் வந்து தலைவியைக் காண வேண்டாம் என்று தோழி கூறுகிறாள் (48).   பகற் பொழுதில் நீ வந்தாய் எனில்  பழிச் சொற்கள் பல வரும். அப்பழிச்சொற்களைத் தவிர்க்க விரும்பி இரவில் நீ வந்தாய் என்றால் வருவதற்கு  இடையூறுகளும் பல உண்டு (59). அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும்  மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில்  இரவில் தலைவியைக் காண வர வேண்டாம் (49).  உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருக்கிறாள். நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள் (55).  இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும்,    உமக்கு ஒன்று நேருமாயின் தலைவி உயிர் வாழமாட்டாள்.  ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் (61) என்று தலைவனிடம் தோழி கூறுகிறாள். 

தலைவி மீது ஊரார் அலர்  தூற்றாதவாறு இருக்க நீ  இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் (35). இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் (43). தலைவிக்குத்  துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது.  அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு  மணம் செய்து கொள்வாயாக (36, 37).   தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள்  (57).  தூக்கக் கலக்கத்தில் கண்ட கனவு போன்று விளங்கிக் கொள்ள முடியாத, வகையில் வருகின்ற உனது வரவை நிறுத்திவிடு தலைவனே.  முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான  செய்கை (50 ).   களவுப் புணர்ச்சியில் மிகுந்த விருப்பம் கொள்ளாமல் தக்க  நாளொன்றினைத் தேர்வு செய்து தலைவியை  மணம் புரிந்து கொள்வதுதான் உனக்கேற்ற  நன்னெறியாகும் (52).   எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக (53). இது குறித்து எண்ணி ஆய்வு செய்து காலத்தை வீணாக்க வேண்டாம், தக்க நாள் ஒன்றைத் தேர்வு செய்து, காலம் தாழத்தாது பெண் கேட்டு வந்தால்,  நீ தலைவியைத் துணையாக  அடையும்  வாய்ப்பு உமக்குக் கிட்டும் (46). ஆகவே மேலும் ஆராய்ந்து கொண்டிராதே, கோள்கள் குறித்து  ஆராய்தல் தேவையில்லை.  நிமித்தம் அறியும் கணிஞரை  வரவழைத்து, ஓர் மண நாளைக் குறித்துக் கொண்டு வந்து, இவளை விரும்பி  மணம் புரிந்து கொள்ளுதலே நீ தலைவிக்குச் செய்யும் நன்மையாக அமையும் (54) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
 
தலைவியைப் பெண்கேட்டு அயலார் சிலர் வருகிறார்கள்.  தோழி இனி அமைதியாய் இருப்பது சரியல்லவென்று செவிலித்தாயிடம் தலைவியின் காதல் குறித்துத் தெரிவிக்கிறாள். கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினைத் தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை  அடையத் தகுதி உடையவன், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல (39). விற்போரில் வல்ல வீரர்கள் கூடி நடத்தும் வில்விழாக் கூட்டத்திலும், கடலினாலே சூழப் பெற்ற  இவ்வுலகத்தினிடத்தே நல்லவர் பலர் கூடி நடத்தும் மணவிழாக் கூட்டத்திலும், அன்று கடற்கரையினிடத்து தலைவிக்கு  ஒப்பற்ற உதவியினைச் செய்த கடல் துறை முகத்துக்குரியவனை   ஒத்த ஆடவரை நாங்கள் காணவில்லை!! இவரைப் போன்ற அத்தகைய சிறந்தவர் சுவர்க்கத்திலிருந்தாலும் அவரை தலைவிக்குத் தேர்வு செய்து மணமுடிப்பாயாக  நல்ல எமது அன்னையே!   நம் தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நிற்கிறாள் தோழி (62).

 
குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
32. கடற்கரையில் மீன் உலர்த்திக்  காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.
33. தலைவியின் வெண் முத்துப் பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில்  மனம் துவண்டு வருந்துகிறேன் நான் என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.
60. கடற்கரையில் நண்டு பிடித்தவாறு நெய்தல் பூக்களைக் கொய்து கொண்டிருக்கும் நீண்ட கண்களையுடைய தலைவி எனக்குக் காதல் மயக்கம் தந்தாள் என்று  தோழனிடம் கூறுகிறான் தலைவன்.
45. ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும் அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் பண்பில் சிறந்தவன்தான் என்று தோழன் வியக்கிறான்.
47. அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான்.
42. தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது  கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான்.
44. தலைவனே உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது எனத் தோழி குறிப்பு கொடுக்கிறாள்.
58. அலைகடலும் அதனருகே கடற்கரைச் சோலையும், வெண்மணலும் ஞாழலும், தாழையும் புன்னையும் நிரம்பிய இடங்களை விரும்பிப் பார்ப்பாயாக எனத் தோழி  தலைவனுக்குப் பகற்குறி சொன்னாள்.
51. கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை  உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியைப் பகற்பொழுதில்  அங்குக் காணலாம் எனத் தோழி தலைவனுக்குக்  குறிப்பு கொடுக்கிறாள்.
41. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து,  மழைமேகம் மூளுவது போல எங்கும்  சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.
40. துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான் தலைவன்.
38. தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்கும் என் நிலையைப் போல உறங்காமல் அலைமோதும் இத்துன்பத்தை  உனக்குக் கொடுத்தவர் யார் கடலே? என்று தலைவி கடலினை நோக்கிக் கேட்கிறாள்.
34. தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது  கண்களைக் காண இயலும்  என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
56. தலைவனே கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில்,  அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக்  கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில்  இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
48. தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காண நேரிட்டால் அலர் உண்டாகும்  என்று தலைவனை  இரவில் வர  வேண்டாம் என்று தோழி அறிவுறுத்துகிறாள்.
59. பகல் இரவு என்று இரு பொழுதுகளும் தலைவியைச் சந்திக்க  வருதலை விடுத்து  விரைவில் அவளை மணமுடித்துக் கொள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 
49. அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும்  மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில்    இரவில் தலைவியைக் காண வருதல் ஏற்புடையதல்ல  எனத் தோழி தலைமகனிடம் மறுத்துரைக்கிறாள்
55. தலைவனே தலைவியைப் பார்க்க வரவேண்டாம், உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருப்பதைக் காண்பாயாக. நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள்  என்று தலைவனிடம் இரவு வருகையை நிறுத்தச் சொல்கிறாள் தோழி. 
61. இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும், ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
35. தலைவி மீது ஊரார் அலர்  தூற்றாதவாறு இருக்க நீ  இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் என்று தலைமகனிடம் தோழி  கூறுகிறாள்.
43. தலைவனே இரவில் தலைவியைத் தேடி  வாராதே, வந்ததால் அவளை மணமுடிக்கும் நோக்கில் மட்டும் வருவாயாக (கனை இருள் வாரல்!) என்கிறாள் தோழி.
36. உன் நாட்டுப் பறவைகளும் குடியும் குடித்தனமுமாக வாழ முற்படுகையில், அது போல நீயும்  தலைவியை  மணந்து அவளுடன் தங்கிவிடுவாயாக எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
37. தலைவிக்குத்  துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது.  அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு  மணம் செய்து கொள்வாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 
57. தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள் என்கிறாள் தோழி.
50. இரவில் வருவதை நிறுத்தி முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான செய்கை என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.
52. நாள்  கடத்தாது, தக்க நாள் ஒன்றில் தலைவியை மணமுடித்து இல்லறம் மேற்கொள்வதே உன் தகுதிக்கேற்ற நல்லொழுக்கம் எனத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள்.
53. தலைவனே எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக என்று தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.
46. தலைவியைப் பெண்கேட்டு வந்து விரைவில் மணம் முடிப்பாய் தலைவனே, அதை விட்டு இடர் நிறைந்த இரவில் அவளைக் காண வருவதைத் தவிர்ப்பாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
54. தலைவனே இரவில் வாராதே, இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
39. கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினைத் தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை  அடையத் தகுதி உடையவர், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல  என்று தோழி செவிலித் தாயிடம்  தலைவியின் காதல் குறித்துத் தெரிவிக்கிறாள்.
62. தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நின்றாள்.




உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html


நன்றி:  சிறகு 
அக்டோபர் 24, 2020


#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi