Friday, October 14, 2016

உதகை வாழ் தோடர் இன மக்கள் - பிரிட்டிஷ் லைப்ரரி படங்கள்

உதகை வாழ் தோடர் இன மக்கள்  - பிரிட்டிஷ் லைப்ரரி படங்கள்


நீலகிரி மலைப்பகுதியின், தோடர் இன மலைவாழ் பழங்குடியினரின்  படங்கள் சில பிரிட்டிஷ் லைப்ரரி சேகரிப்பில் உள்ளன.

இப்படங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 19 ஆம் நூற்றாண்டிலும் (1870களிலும்), சில 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எடுக்கப்பட்டுள்ளன. 1820களில் உதகை பகுதி ஆங்கிலேயர்களின் கோடைக்காலக் குடியிருப்புப் பகுதியாக  மாற்றம் பெறத் துவங்கியது. மேலை   நாட்டு மக்களின் வரவின் தாக்கத்தால்  விரைவில் மாறிவரும் பழங்குடியினரின் பண்பாட்டு நிலையை உணர்ந்து இப்படங்களை எடுத்து அவர்கள் வாழ்வுமுறையை ஆவணப்படுத்த  முடிவு செய்து அதற்கான ஏற்பாடும் செய்திருக்கிறார்  ஆங்கிலேய அதிகாரியான 'ஜேம்ஸ் வில்கின்சன் பிரீக்ஸ்'   (James Wilkinson Breeks, the Commissioner of the Nilgiris). மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸின்  பெயர் குறிப்பிடப்படாத புகைப்படக் கலைஞர் ஒருவர் 1871-72 காலத்தில் சில படங்களை எடுத்துள்ளார். மேலும் சிலரும் படங்களை எடுத்துள்ளனர்.

குழுக்களாக இடையர்கள் வாழ்வு முறையைக் கடைப்பிடித்து, புல்வெளியில் (sholas) எருமை மாடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்துவது தோடர் இன மக்களின் வாழ்வு முறை.   இவர்கள் தாவர உணவை உண்பதை (vegetarian)  வழக்கமாகக் கொண்டவர்கள்.  எருமைகளைப் புனிதத்தன்மையைக் கொண்டதாகக் கருதும் தோடர்களுக்கென தனிப்பட்ட மொழியும் பண்பாடும்  உள்ளது. தோடர்களுக்கு அவர்களது வழிபாட்டிற்கான  கோவில்களும் (Boas and Palthchis) உண்டு. தோடர்களில் ஒருசிலர் அதிகாரமிக்க  சமயத்தலைவர் (Palals) பதவியிலிருந்து அவர்கள் இன  மக்களுக்கு அறிவுரை கூறும் பொறுப்பில் இருப்பார்கள்.


தோடர்கள் சிவப்பு, நீலம், கருப்பு வண்ண வேலைப்பாடமைந்த கரைகளுடைய நீண்ட பருத்தி  ஆடைகளையும் (Puthukuli), வேலைப்பாடமைந்த அணிகலன்களையும்  அணியும் வழக்கம் கொண்டவர்கள். சிறந்த கைவினைக் கலைஞர்களாகவும் திகழ்பவர்கள்.  ஆண்கள் புருவம் வரை கொண்ட முடியைப் படிய வாரிவிட்டுக் கொள்பவர்கள்.


பெண்கள் நடுவகிடு எடுத்து, நீண்டு  சுருண்ட குழல்  கற்றைகள்  முதுகில் தொங்குவது போன்ற  தலையலங்காரம் செய்திருப்பார்கள். ஆண்களைப் போன்றே நீண்ட ஆடை அணிந்து அதனைத்  தோளின் இருபுறத்திலும் சுற்றி முன்புறம் கொண்டுவந்து கைகளில் பிடித்துக் கொண்டு காட்சியளிப்பார்கள். பெண்களில் சிலர் பச்சைகுத்திக் கொள்ளும் வழக்கமும் உண்டு.


தோடர்கள் இருவர்  தங்கள் இசைக்கருவிகளுடன்  (Buguri).  புல்லாங்குழலும் கொம்பும் கொண்ட கலவையான இசைக்கருவி ஒன்றை இசைப்பது தோடர்கள் வழக்கம்.


இருளர், குரும்பர், கோட்டா, பகடா  போன்ற பிற பழங்குடி மக்களுடன் இரு தோடர்கள்.

படத்தில் காணப்படுபவர்கள் தோடர்களின்  சமயத்தலைவர்கள் (Palals)
(படங்கள் : 1871 ஆம் ஆண்டு)

*****

நீலகிரியின் உதகை பகுதியில் தோடர் இன மக்களின் குடியிருப்புகள் (Toda mund) அமைந்துள்ளன.  வீடுகள் மலைச்சரிவுகளில் காடுகள் துவங்கும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும். கூண்டுவண்டியின் கூண்டு அமைப்பில் அவர்கள் வீடுகள் தோற்றமளிக்கும்.  நெருக்கமாகப் பரப்பப்பட்ட மூங்கில்களாலும், புற்களாலும், காற்று  மழைநீர் புகாத வகையில்  கூரை வேயப்பட்டிருக்கும். சுவர்கள் கற்களை அடுக்கி எழுப்பப்பட்டிருக்கும். சுவர்களில் சாளரங்கள் அமைக்கப்படுவதில்லை. நுழைவாயில் தவழ்ந்து உள்நுழையும் வண்ணம் குறுகியதாக இருக்கும்.  உள்ளே பெரிய அறையாக, ஒருபுறம்  படுக்க அமைக்கப்பட்ட மேடைகள் கொண்ட பகுதியாகவும், மறுபுறம் சமைக்கும் பகுதியாகவும் பிரிக்கப்பட்டிருக்கும்.  சுவர்கள் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருக்கும்.  பொதுவாகத் தோடர்களின் வீடுகள் ஐந்து குடில்கள் இணைந்த அமைப்பாக இருக்கும், அவற்றில் மூன்று குடில்கள் வசிப்பதற்காகவும், ஒன்று பால் தொடர்பான பணிகளுக்காகவும், மற்றொன்று கால்நடைகளின் தொழுவமாகவும் பயன்படுத்தப்படும்.



தோடர்களின் குடில் - தோடர்களின் குடியிருப்புப் பகுதி
1880 ஆம் ஆண்டு (Nicholas and Company)



தோடர்களின் கோவில் (Boa)
1871 ஆம் ஆண்டு




1900 ஆம் ஆண்டு (Penn, Albert Thomas Watson)
1870 ஆம் ஆண்டு (Archaeological Survey of India Collections)
1896 (அல்லது 1869) ஆம் ஆண்டு (Bourne, Samuel)


தோடர் குடும்பத் தலைவர் இறந்த பிறகு நடத்தப்படும்  சடங்கில் (Kordzai Kedu), அவரது மந்தையிலிருந்து இரண்டு எருமைகள் பிரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு அவருடன் இறுதிப்பயணம் மேற்கொள்ளும். இறந்த எருமைகளின் கொம்புகளை இறந்த குடும்பத்தலைவரின் கைகள் பற்றியிருப்பது போல இணைக்கப்படும்.  இச்சடங்கு மரணம் நிகழ்ந்த உடனேயே செய்யப்படும். பிறகு மற்ற சடங்குகள் தொடரும்.


1871 ஆம் ஆண்டு


************



நன்றி: மின்தமிழ் மேடை
அக்டோபர் 14, 2016
  
#மின்தமிழ் மேடை, #Themozhi 

Friday, July 15, 2016

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்கலைக்கழகத் தமிழ்க் கல்வியின் நிலை

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்கலைக்கழகத் தமிழ்க் கல்வியின் நிலை


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  'ஆதிரை'  என்ற இதழில் (Vol. 1, 3 - ஆவது இதழ்) வெளியான தமிழ்க் கல்வியின் நிலையைப் பற்றிய  செய்தியைத் தொடர்ந்து  தமிழறிஞர்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள், சர்ச்சைகள் விளைவாக  அன்றைய தமிழகத்தின் தமிழ்க் கல்வியின் நிலை தெரிய வருகிறது.
பண்டிதமணி

உ. வே. சா.

மகிபாலன்பட்டி பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்  அவர்கள் "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில்  செல்வாக்குள்ள நிலையில் இருப்பதாலும்,  அவர்கள் வடமொழிப் பற்று அதிகம் கொண்டிருப்பதாலும் தமிழைத் தலையெடுக்கவிடாது செய்கின்றனர்" என்று கூறிய கருத்தும்;   அதற்கு உ.வே. சா. மற்றும் எஸ். சத்தியமூர்த்தி ஆகியோரின் மறுமொழிகளும்;   உ. வே. சா. தனது கருத்திற்குச் சான்று கொடுத்ததாக  பண்டிதமணியார் அவர்கள் கொடுத்த  மறுமொழி ஆகியவற்றால் அன்றைய தமிழகத்தில்  தமிழ்க் கல்வியின் நிலை பற்றிய ஒரு   வரலாற்றுப் பார்வை நமக்குக் கிடைக்கிறது. 

யாழ்ப்பாணத்தின்  ஆரியத் திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் பதினோராவது  ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்று பண்டிதமணி உரை நிகழ்த்தியுள்ளார்.  ஆதிரை இதழின் ஆசிரியர் என். நாராயணய்யர் என்பவரால்  இந்த உரையின் முழுச்செய்தியும் கொடுக்கப்படாது, உரையின் சிற்சிலப் பகுதிகளை மட்டும் தேர்வு செய்யப்பட்டு, உண்மைக்குப் புறம்பாகத் திரிக்கப்பட்டு, அச்செய்தி தமிழகத்தின் தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மறுமொழி பெறப்பட்டு அவையும்  ஆதிரை பத்திரிக்கையால்  வெளியிட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, இச்செய்திக்கு எதிராக, இந்த உண்மை அல்லாத  திரிப்பு வேலையை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மற்றொரு பத்திரிக்கையான "ஈழகேசரி சீமுக" என்ற பத்திரிக்கை சுட்டிக் காட்டுவதுடன்,   நிகழ்ச்சி நடத்திய யாழ்ப்பாணம் ஆரியத் திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் கண்டனத்தையும் தனது இதழில் (ஜூன் 1933) வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வினையொட்டி தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழ்ப்பொழில்' இதழும் விரிவான  தனது கண்டனத்தை "ஆதிரை" இதழின் மீது பதிவு செய்துள்ளதுடன், இந்நிகழ்விற்காகப்  பண்டிதமணி அவர்களுக்கு  வருத்தமும் தெரிவித்துள்ளது. இக்கண்டனச் செய்தியில் காணப்படும் செய்திகளின்  வழி தெரிய வருவது...
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்குக் கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்குத் தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது. 

வடமொழி பயில்வோருக்குச் சாகித்தியம், வியாகரணம், நியாயம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவற்றில் 'சிரோமணி', 'வித்துவான்'  ஆகிய படிப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும்; ஆனால் தமிழில் இவற்றுக்கு இணையான நூல்கள் இருந்தும், தமிழறிஞர்கள்  வேண்டுகோள் விடுத்தும், தமிழுக்கு 'தமிழ் வித்துவான்' என்ற ஒரேயொரு பாட வாய்ப்பை மட்டும் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள்  வழங்கியுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வடமொழியில் B. A. Honours படிப்பு அனைத்துக் கல்லூரியிலும் இருந்திருக்கிறது.  சிக்கனம் காரணமாக சென்னை அரசர் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) அந்தப் பாடவகுப்பை நீக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த பொழுது பார்ப்பனர்களால் ஊர் தோறும் மறுப்புக் கூட்டங்கள் போடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டன. 

ஆனால், தமிழில் B. A. Honours படிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்பாடம் இருக்கும் பொழுது சென்னையில்  அதற்குத் தேவையில்லை  என்று S. சத்தியமூர்த்தியய்யர் மறுப்புக் கூறியதாகவும் தெரிகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக B. A. Honours படிப்பிற்குத் தேவையான நூல்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. துணையாசிரியர்கள் (Reader) தேவை என்ற நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.  மேலும், பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின்  எண்ணிக்கை பலமடங்கு அதிகமிருந்தும் வடமொழியைவிடக் குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையும், குறைந்த அளவு நிதியும் ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. தமிழில் தேர்ச்சி பெறாதவர்களைத் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்ட நிலையும்  இருந்து  (வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழில் தேர்ச்சி என்பது அவசியமற்றது  என்ற காரணம் காண்பிக்கப்பட்டிருக்கிறது) அதற்கு எதிர்ப்பு தோன்றியதால் ஓர் ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டு அந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது. 

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்  தமிழறிந்தவர்கள் அல்லர். மறைமலையடிகள், உ.வே. சா. போன்ற தமிழறிஞர்களுக்கு  அக்குழுவில் இடமிருந்திருக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ் சிறப்புடன் போற்றப்படவில்லை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆளுகையில் இருந்தோரில் பெரும்பாலோர் தமிழ் ஆர்வலரும் அல்லர்.

எனவே, இக்கருத்தை பண்டிதமணியார் சுட்டிக் காட்டியதில் இழுக்கொன்றுமில்லை, மேலும் இது உ. வே.சா பண்டிதமணியாரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்தே என்பதால் அதில் தவறேதுமில்லை  எனவும்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் குழுவினர் கருதியுள்ளனர்.

மேலும், இது போன்று தமிழ் அறிஞர்களின் எதிரெதிர் கருத்துக்களை வெளியிட்டு,  அவர்களிடையே (பண்டிதமணி, உ. வே. சா. போன்றோரிடையே) தகராறு கிளப்பிவிட எண்ணும்  இலங்கை பத்திரிக்கையின் நோக்கமும்  கண்டிக்கப்பட்டுள்ளது. 

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்."
என்று ஆதிரை இதழின் ஆசிரியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


சான்றாதாரம் :
தமிழ்ப் பொழில்  (1933-1934),  துணர்: 9 - மலர்: 3,  மலரில் காணப்படும் ஒரு தமிழ்ச் செய்தியின் சுருக்கம்


நன்றி : மின்தமிழ்மேடை 
ஜூலை 2016


#இலக்கியம், #உண்மைக்கதை,  #வரலாறு, #மின்தமிழ்மேடை, #Themozhi  



Saturday, July 9, 2016

கோம்பிப் பாட்டு

கோம்பிப் பாட்டு


கவிதை மூலம் – ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) 
மொழிபெயர்ப்பு – தேமொழி

எப்பொழுதும் நான்  குறிப்பிடவிரும்பும் ஒன்று;  
பெருமையும், இறுமாப்பும்,  அரட்டையும் 
உறுதியாகச் சொல்ல உதவாத அரைகுறைப் பார்வையும் 
பேசுபவர்மீது நாம் கொண்ட மதிப்பைக் குலைத்துவிடும்.  
இருப்பினும் உலகையே அவர் சுற்றி வருவார்
பார்ப்பதையெல்லாம் பார்த்து வருவார் 
பயணம் முடித்தே வந்தார் என்றால்
பத்துமடங்கு துணிவும் அதிகரித்துவிடும் 
முயன்றாலும் அவரைப் பேசி நிறுத்தவும் இயலாது 
முட்டாள் பயணியும் உங்கள் வாயை அடைத்துவிடுவார்
"நான் நினைப்பது சரி என்றால், எனக்கு உங்கள் அனுமதியுண்டு 
நான் பார்த்திருக்கிறேன், நிச்சயமாக நான் அறிந்திருப்பேன்" 
என்பவரிடம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை 
அவரின் விருப்பத்தை மறுக்க முடியாமல் உடன்படுவீர். 

நட்புடனே அத்தகைய நண்பர் இருவர் பயணமாகி 
நடந்தார் கடந்தார் அரேபியப் பாலையை  
வழியெல்லாம் தொடர்ந்தது அவர்தம் உரையாடல் 
இதைப்பற்றியும் பேசினர், அதைப்பற்றியும் பேசினர் 
எதைப் பற்றியும் பேசினர், அத்துடன் தாம் கண்ட 
கோம்பியைக் குறித்த விவாதமும்தான் செய்தனர் 

வித்தியாசமான விலங்கென்றே வியந்தார் ஒருவர் 
"விண்ணின் கீழுள்ள இவ்வியனுலகு என்றும் கண்டதுண்டோ! 
பல்லி போன்ற நீண்ட மெலிந்த உடலுடன் 
பாம்பைப் போன்ற நாக்குடன், மீனின் தலையுடன்
பாதத்தில் கூரிய நகத்துடன் பிளவுபட்ட மூன்று விரல்களுடன் 
பின்புறம் மிக நீண்டதொரு  வாலுடன் மெல்ல மெல்ல 
ஊர்ந்த அந்தக் கோம்பி கொண்டதோர் அழகிய  நிறம்!  
யாரேனும் கண்டதுண்டோ அது போலத்தான் ஒரு நீல நிறம்?" 

"நிறுத்து... நிறுத்து" என்றே விரைவில் வந்தது தோழனின் மறுப்பு 
"பார்த்தேன் என்னிரு கண்களால் அதன் அழகிய பச்சை வண்ணம்     
படுத்தே கிடந்தது தனது வாயை அகலத் திறந்த வண்ணம் 
கதிரவனின் ஒளிக்கதிரில் தன்னைச் சூடேற்றிய வண்ணம் 
உடலை நீட்டி ஒய்யாரமாக ஓய்வெடுத்த கோம்பியை   
நான் கண்டபொழுது காற்றைக் குடித்தே அது களித்திருந்தது. 

"தோழா, நீ பார்த்த கோம்பியைத்தானே நானும் பார்த்தேன்  
தோலின் நிறம் நீலம்தான் என்று நானும் உறுதியாகச் சொல்வேன் 
நீண்டு பரவியிருந்த மரத்தின் கீழ் நானும் பார்த்தேன்  
நீண்ட குளிர் நிழலில் ஓய்ந்து கிடந்தது அந்த நீலநிறக் கோம்பி"   

"பச்சை நிறம் ஐயா, அது பச்சை என்றே  உறுதியாய்ச் சொல்வேன்"
"பச்சையா அந்த நிறம்?" பதிலுக்குக் கொதித்தார் தோழர்
"பார்வையற்றவன் நான் என்ற எண்ணமோ உமக்கு?" 
"பாதிப்பில்லை அதனால் உமக்கு", என்றார் நண்பர் 
"பயனற்ற வகையில் பார்க்க உதவும் உமது 
பார்வை இருந்தால்தான் என்ன? போனால்தான்  என்ன?"    

விவாதம் வளர்ந்தது  சச்சரவு முற்றியது 
வார்த்தைகள் வெடித்தன சண்டையில் முடிந்தது 
நல்ல வேளை, வந்தே சேர்ந்தார் மூன்றாமவர் 
அவ்வழி வந்த அவரிடமே வாதத்தை முன்வைத்தனர் 
அறிந்தால் சொல்வீர் அன்பரே என்றே வேண்டினர் 
"அந்தக் கோம்பியின் நிறமென்ன? பச்சையா நீலமா?"

"ஐயன்மீர் நிறுத்துவீர் உமது கூச்சலை" என்றார் வந்தவர்
"ஐயமின்றிச் சொல்வேன் அதன் நிறம் பச்சையோ நீலமோ அல்ல, 
அந்த விலங்கினை நேற்றிரவு  நானும் பிடித்தேன் 
அதன் நிறத்தை விளக்கொளியில் நன்கே பார்த்தேன்  
நான் பார்த்த கோம்பியின் நிறம் கரி போன்றதொரு கருப்பு   
விழிக்காதீர்கள், என்னிடம்தான் இருக்கிறது அது இப்பொழுதும்  
காட்டுவேன் உங்களுக்கு, வெற்றி பெற வேண்டிக் கொள்ளுங்கள்" 
"நான் வாழ்வையே  பணயம் வைப்பேன் அதன் நிறம் நீலமென்று" 
"நானும் சத்தியம் செய்வேன், அதைப் பார்த்தவுடன் 
நீங்களும் ஒப்புக்கொள்வீர் அதன் நிறம் பச்சையென்று"

"ஆகட்டும், உங்கள் ஐயம் அறவே நீங்கட்டும் 
நானும் வெளியே விடுவேன் கோம்பியை" என்றார் வந்தவர் 
"உங்கள் கண்முன் வெளிவரும் கோம்பி கருமையாக மட்டும் 
இல்லையெனில்  கொன்றே நானும் தின்றிடுவேன்" என்றார் 

சொல்லியவண்ணம் நன்கு பார்வையில் படுமாறு விடுவித்தார்  
கோம்பிதனை வெளியே, ஆகா! வெண்மையன்றோ அதன் நிறம்! 
இருவரும் வெறித்து நோக்க, வந்தவரோ வியந்து நோக்கினார். 
திகைத்து பேச்சிழந்த கூட்டத்தில் முதலில் பேசத் துவங்கியதும்  
வெளியே வந்த கோம்பியே, "என் மக்களே!" என அவர்களை அழைத்தது   
"நீங்கள் சொன்ன யாவும் சரிதான், அவையாவும் பிழையும்" என்றே அறிவீர்
"நீங்கள் கண்டதை அடுத்தமுறை பிறரிடம் விவரிக்கும் பொழுது 
உங்களைப் போன்றே பிறரும் கண் உடையவர் எனவும் எண்ணுவீர் 
உங்கள் பார்வையை நம்புவதைக் காட்டிலும் தான் கண்டதையே  
பிறர் நம்ப விரும்பினால் அதில் வியப்பில்லைதான் காண்பீர்"  


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

The Chameleon

– James Merrick (1720–1769)

OFT has it been my lot to mark
A proud, conceited, talking spark,
With eyes that hardly served at most
To guard their master ’gainst a post;
Yet round the world the blade has been,
To see whatever could be seen.
Returning from his finish’d tour,
Grown ten times perter than before,
Whatever word you chance to drop,
The travell’d fool your mouth will stop.
“Sir, if my judgment you’ll allow,
I’ve seen, and sure I ought to know.”
So begs you’d pay a due submission,
And acquiesce in his decision.
Two travellers of such a cast,
As o’er Arabia’s wilds they pass’d,
And on their way, in friendly chat,
Now talk’d of this, and then of that,
Discoursed awhile, ’mongst other matter,
Of the Chameleon’s form and nature.
“A stranger animal,” cries one,
“Sure never lived beneath the sun:
A lizard’s body lean and long,
A fish’s head, a serpent’s tongue,
Its foot with triple claw disjoin’d,
And what a length of tail behind!
How slow its pace! And then its hue!
Who ever saw so fine a blue?”
“Hold, there!” the other quick replies;
“’Tis green; I saw it with these eyes,
As late with open mouth it lay,
And warm’d it in the sunny ray.
Stretch’d at its ease the beast I view’d,
And saw it eat the air for food.”
“I’ve seen it, sir, as well as you,
And must again affirm it blue.
At leisure I the beast survey’d
Extended in the cooling shade.”
“’Tis green, ’tis green, sir, I assure ye.”
“Green!” cries the other in a fury;
“Why, sir, d’ye think I’ve lost my eyes?”
“’Twere no great loss,” the friend replies;
“For if they always serve you thus,
You’ll find them but of little use.”
So high at last the contest rose,
From words they almost came to blows,
When luckily came by a third;
To him the question they referr’d,
And begg’d he’d tell them, if he knew,
Whether the thing was green or blue.
“Sirs,” cries the umpire, “cease your pother;
The creature’s neither one nor t’other.
I caught the animal last night,
And view’d it o’er by candle-light.
I mark’d it well; ’twas black as jet.
You stare! But, sirs, I’ve got it yet,
And can produce it.” “Pray, sir, do;
I’ll lay my life the thing is blue.”
“And I’ll be sworn, that when you’ve seen
The reptile, you’ll pronounce him green.”
“Well, then, at once to ease the doubt,”
Replies the man, “I’ll turn him out;
And when before your eyes I’ve set him,
If you don’t find him black, I’ll eat him.”
He said; and full before their sight
Produced the beast, and lo! ’twas white.
Both stared; the man look’d wondrous wise.
“My children,” the Chameleon cries
(Then first the creature found a tongue),
“You all are right, and all are wrong.
When next you talk of what you view,
Think others see as well as you;
Nor wonder if you find that none
Prefers your eyesight to his own.”


மூலம்:
The Chameleon
By James Merrick (1720–1769)
(http://www.bartleby.com/380/poem/421.html)

தமிழில் இப்பாடலை "கோம்பி விருத்தம் " என்ற தலைப்பில் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் 1897 இல் மொழியாக்கம் செய்துள்ளார்.  வெ. ப. சு. வின்  கோம்பி விருத்தம் பாடலின்  மூலமும் உரையும் மதுரை திட்டத்தின்  கீழ் இணையத்தில்  வெளியிடப்பட்டுள்ளது 
(http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0448.html)



நன்றி: சிறகு
ஜூலை 9, 2016


#கவிதை, #சிறகு, #மொழிபெயர்ப்பு, #Themozhi 



Saturday, June 11, 2016

கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா?

கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா?



அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மற்ற மாநிலங்களைவிடப் பல வகைகளில் வேறுபட்டது. குறிப்பாக, அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் பல்லினப் பின்புலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் நிலை மாநிலத்தின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து, கல்வி, பொருளாதாரம் எனப் பலவற்றையும் நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாநிலம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தாக்கம், இம்மாநிலத்தின் எல்லையையும் தாண்டி அமெரிக்க அளவிலும் பாதிப்புகள், மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் வழக்கம்.

கலிபோர்னியா எந்த அளவு பிற அமெரிக்க மாநிலங்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக விளக்குவதென்றால், அமெரிக்கர் என்றால் பொதுவாக உலக மக்கள் தங்கள் மனதில் உருவகப்படுத்தும் ஐரோப்பாவில் இருந்து குடியேறிய வெள்ளையின மூதாதையர் ஒருவரின்  வழித்தோன்றல், கிறித்துவ மதத்தைச் சார்ந்த, ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ற ஒரு பொதுவான எண்ணத்தை முறியடிக்கும் வகையில் கலிபோர்னியா மாநிலம் வெகு வேகமாக மாறிவருகிறது. சமீபத்திய மக்கள்தொகை புள்ளிவிவரத்தின்படி வெகுவிரைவில் கலிபோர்னியாவில் வாழ்பவர்களில் இனி மூவரில்  ஒருவர் மட்டுமே உலகமக்களின் கணிப்பில் வாழும் அமெரிக்கராக இருக்கப்போகிறார் என்னும் அளவிற்குச் சிறுபான்மையினர் நிலைக்கு வெள்ளையின மக்கள்  தள்ளப்படுகிறார்கள்.

இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் எதிரொலிக்கிறது. தற்பொழுது பள்ளிகளில் பயிலும் 6.2 மில்லியன் மாணவர்களில் பெரும்பான்மையினர், பொதுவாக வழக்கத்தில் அமெரிக்காவின் சிறுபான்மையினர் என்று குறிப்பிடப்படுபவர்களே. அமெரிக்காவில் வாழும்  2.5 மில்லியன் இந்துக்களில் சரிபாதியினர், அதாவது சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் கலிபோர்னியாவில் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும், சிலிக்கான் பள்ளத்தாக்குள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியின் தொழில்நுட்பத்துறைப் பணிகளில் ஈடுபட்டிருப்போரும் ஆவார்கள். மாநில அரசின் கல்வித்துறையின் புள்ளிவிவரப்படி (California State Board of Education; http://www.cde.ca.gov/ds/sd/cb/ceffingertipfacts.asp), கலிபோர்னியா பள்ளி மாணவர்களில் 53% இலத்தீனோ (ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்சிகோ நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோர்) இன மக்கள், 25% வெள்ளையினத்தவர், 12% ஆசியா மக்கள், 6% கறுப்பின மக்கள், இவர்களைத் தவிர்த்த சிறுபான்மையினர் சிலர் தங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட இனம் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள்.

கலிபோர்னியாவில் வசிப்பவர்களில் ஆசியாவில் இருந்து குடியேறியவர்களின் தலைமுறையினர், அதிலும் தெற்காசியப் பகுதியில் இருந்து குடியேறியோர் வெகு வேகமாக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். இதனால்,  பல பின்னணி உள்ள அமெரிக்கர்களைப் பற்றிச் சரியான முறையில் அறிந்து கொள்ளும் வகையில்,  சமூகவியல் மற்றும் உலக வரலாற்றுப் பாடங்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் முறை மாநிலக் கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்லின மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்கலைக்கழகக் கல்வி வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும், பரிந்துரைகள் பெறப்பட்டு, அவை ஒரு குழுவினரின் கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுப் பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும் முறை கலிபோர்னியா மாநில அரசின் பள்ளி பாடத்திட்டக் குழுவினரால் (Instructional Quality Commission of California’s Department of Education) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கலிபோர்னியாவின் கல்வித்திட்டத்தில் கொண்டுவரப்படும் எந்த ஒரு மாற்றமும் அமெரிக்காவின் பிற மாநிலங்களின் கல்வித் திட்டங்களிலும் பின்பற்றப்படும். கலிபோர்னியாவின் மக்கள்தொகையின் தாக்கம் மற்ற மாநிலங்களின் பாடநூல் விற்பனையை நிர்ணயிக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். பாடநூல் பதிப்பகத்தார் கலிபோர்னியா பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டப் பாடநூல்களைப்  பிற மாநில பள்ளிகளுக்கும் விற்கும் வாய்ப்புகள் அதிகம்.

சென்ற ஆண்டின் (2015) இறுதியில் துவங்கி, இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெற்ற கல்விச்சீரமைப்பு கலந்தாய்வு நிகழ்விலும் பல இனத்தைச் சார்ந்தவரும் தங்கள் பரிந்துரைகளை வழங்கினர். ஆனால், மிகப் பெரிய அளவில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிலையில் அமைந்தது இந்தியர்கள் இந்தியாவைப் பற்றிப் புகுத்த நினைத்த வரலாற்று மாற்றங்கள்தான். இந்த வரலாறு பற்றிய விவாதங்களின் அடிப்படை… அமெரிக்கப் பள்ளிகளில் இந்தியாவைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பள்ளிப் பாடங்களின் வழியே மாணவர்களுக்கு எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்கள்?  அமெரிக்காவில் வளரும் தெற்காசிய (இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பங்களின்) மாணவர்கள் தங்கள் மூதாதையர்கள் பற்றியும், அவர்கள் கலாச்சாரம் பற்றியும் சமூகவியல் நோக்கில் எந்த வகையில் கற்பிக்கப்படுகிறார்கள்? என்பதைப் பற்றிச் சுற்றிச் சுழன்றது.

இந்தியப்பகுதியைப் பற்றிய கல்வித்துறைகளின் வல்லுநர்களான  பெரும்பான்மையான பல்கலைக்கழகப் பேராசிரியர்களும்; இந்தியாவைத் தவிர்த்த பிற தெற்காசியப்பகுதி நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், அதாவது, இக்கால இந்தியாவின் அரசியல் எல்லைக்குள் பிறக்காதவராக, தங்கள் வேர்கள் இந்தியாவில் இல்லை என்னும் கருத்து கொண்ட பிரிவினரும்; வரலாறு உண்மையைச் சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும்; இந்தியத் துணைக்கண்டத்தைப் பாடங்களில் “தெற்காசியா” என்று குறிப்பதே சரியான முறை என்று பரிந்துரைத்திருந்தனர்.

“இந்தியா” என்பதையே பண்டைய காலம் முதல் இந்தியாவைப் பற்றி உலகத்தினர் அறிந்திருந்த முறை. கொலம்பஸ் இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்கத்தான் கிளம்பினார். அமெரிக்கப் பழங்குடியினரை இந்தியர் எனத் தவறாகக் கருதியே அவர்களை இந்தியர் எனக் குறிப்பிட்டார். இங்கிலாந்தினர், போர்த்துக்கீசியர், பிரெஞ்சுக்காரர், மற்றும் டச்சுக்காரர் ஆகியோர் கிழக்கிந்திய நிறுவனம் போன்ற பெயர்களில்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தைத் துவக்கினார்கள். இந்தியாவின் தெற்கு எல்லை இந்தியப் பெருங்கடல் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இவையனைத்தும் தெற்காசியா என்ற அடிப்படையில் அமையவில்லை. இந்தியா என்பதை நீக்கி தெற்காசியா எனக் குறிப்பிடுவது இந்தியர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என்று மாற்றுக் கருத்துகள் கொண்ட வலதுசாரிகள் பரிந்துரைத்தனர்.

சீனாவை கிழக்காசியா என மாற்றி அழைக்காத பொழுது, இந்தியாவைத் தெற்காசியா என்பது சரியல்ல என்று கருத்துகள் அவர்களால் முன் வைக்கப்பட்டன. வலதுசாரிகள், #DontEraseIndia! என்ற ஹேஷ்டேக் குறிப்புடன் சமூக வலைத்தளங்களிலும் ஆதரவு திரட்டினர். ஐரோப்பிய நாடுகள் என்றால் அந்தக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் யாவும் எனப் புரிந்து கொள்ள இயலும் போது, வரலாற்றில் இந்தியா என்றால் அது தெற்காசியப் பகுதி நாடுகளைக் குறிக்கும் என்று எவராலும் புரிந்து கொள்ள இயலும் என்றும் இவர்களால்   மாற்றுக் கோணம் கொடுக்கப்பட்டது. இவர்கள் கருத்து இக்காலத் தெற்காசியப் பகுதியைச் சரிவரக் குறிப்பதற்கு உதவவில்லை என்று கருதியவர்களும் கூட, இந்தக் கருத்து ஒருவகையில் ஒப்புக்கொள்ளக்கூடியதே என்று நினைத்தனர்.  உண்மையில், வலதுசாரிகளின் கோரிக்கைகள் சரியே என்று எண்ணும் அளவிற்குத்தான் மேம்போக்காக நிகழ்வைக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் #DontEraseIndia! என்ற கோரிக்கை திசைதிருப்பும் முறையில் அமைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தக் கோரிக்கை, இந்திய இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்க இந்திய வலதுசாரி அமைப்பினர் முன்வைத்த 30 மாற்றங்களின் உண்மையான நோக்கத்தை மறைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

எவ்வாறு வலதுசாரிகள் இந்தியா என்றால் அது இந்துக்களின் நாடு மட்டுமே என்று கருதுகிறார்களோ, மதச்சார்பற்ற இந்தியாவை இந்துஸ்தானம் என்று கருதுகிறார்களோ, இஸ்லாமியரை வெறுக்கும் அடிப்படை மனநிலை அவர்களால் வெளிப்படுத்தப்படுகிறதோ, இந்தியாவின் பல்லின மக்களும், மாறுபட்ட பின்னணி கொண்ட சிறுபான்மையினரும் இந்தியர்களே என்று ஏற்றுக் கொள்ள விரும்பாமல் உள்ளார்களோ, எவ்வாறு இந்துமதத்தின் சாதி, வர்ணாசிரமப் பிரிவுகள் நல்ல நோக்கத்தில் உருவானது என்ற நம்பிக்கையில் செயல்படுகிறார்களோ அவையாவும் அமெரிக்காவில் வசிக்கும் இந்து  வலதுசாரிகளின் பரிந்துரைகளிலும் பிரதிபலித்தது. அமெரிக்கர்களின் பார்வையில் உண்மையான இந்துமத வரலாறு, சமூகவியல் மறைக்கப்பட்டு, குறைகள் பூசி மெழுகப்பட்டு இந்து மதம் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணம் உருவாக்கும் வகையில் கருத்துக்கள் இவர்களால் கொடுக்கப்பட்டன.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், அவர்கள் விரும்பும் பொழுது ஒருங்கிணைந்த பண்டைய இந்தியா என்ற கோரிக்கையை வைப்பதும், தங்கள் நோக்கத்திற்கு எதிராகப் பாதகமாக அமையக்கூடிய வகையில் பழமையில் ஊறிப்போன கருத்துக்களை எதிர்கொள்ளும் பொழுது இவையிவை தற்கால இந்தியாவின் கருத்தாக்கங்கள், இவை இந்தியாவின் தொன்மை நிறைந்த உண்மை வரலாற்றைக் காட்டவில்லை என்பது போன்ற மறுப்புக்களை முன்வைக்கும் வகையிலும் வலதுசாரிகளின் பரிந்துரைகள் அமைந்திருந்தன.

வரலாறு என்பது நடந்ததை நடந்தபடியே அறிந்து கொள்வதா? அல்லது தங்களை மற்றவர் பார்வையில் உயர்ந்தவராகத் தோற்றம் அளிக்கும் வகையில் குறைகளைப் பூசி மெழுகி, தங்கள் கலாச்சாரத்தை உருவகப்படுத்துவதா? இரண்டாவது கோணமே சரி என்ற எண்ணத்தில் செயல்பட்டனர் வலதுசாரி இந்துக்கள்.

இந்துமதத்தினர் என்றால் அகிம்சை வழியைக் கடைப்பிடிப்போர், தாவர உணவு உட்கொள்வோர், பக்தி, யோகா, அன்பு, கருணை ஆகியவற்றைப் பின்பற்றுவோர் என்ற கோணத்தில் மட்டுமே இந்துமதத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  இந்துமதத்தின் மற்றொரு கோணமான வர்ணாசிரமத் தர்மம் என்ற நிலை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், பிறப்பின் அடிப்படையில் மக்களிடையே  உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு இன்றுவரை நிகழும் சாதிக் கொலைகள், ஒடுக்கப்பட்ட  பிரிவினர் மீது நடந்துவரும் அடக்குமுறைகள், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், காலம் காலமாகச் சமத்துவமற்ற நிலைமையில் கல்வி, செல்வம் ஆகியன மறுக்கப்பட்டு  ஆணாதிக்கத்தினால் அடிப்படை உரிமையின்றி  வாழ்ந்த பெண்களின் நிலை என்ற இந்தியச் சமூகநிலையின் மற்றொரு கோணமான அடக்குமுறைக்  கலாச்சாரங்களை வலதுசாரிகள் எதிர் கொள்ள விரும்பவில்லை. அவை பாடத்திட்டத்தில் இடம் பெற்று அமெரிக்க மாணவர்கள் அறிந்து கொள்வதையும் அவர்கள் விரும்பவுமில்லை. அத்துடன், இவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley civilization) என்பதையும் “சரஸ்வதி-சிந்து நாகரிகம்” (Sarasvati-Sindhu civilization) குறிப்பிட  வேண்டும்  என்ற கருத்தையும் பரிந்துரைத்தனர்.

சாதிகள் பற்றியும், ஆணாதிக்க விளைவுகளின் நிகழ்வுகளையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அவர்கள் அளிக்கும் விளக்கம்; இதனைத் தெரிந்து கொள்வதால் பள்ளியில் பயிலும் இந்திய வழித்தோன்றல்களான மாணவர்கள் பிற மாணவர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், கேவலமாகப் பார்க்கப்படுகிறார்கள், அவமானப் படுத்தப் படுகிறார்கள். அத்துடன் இந்துமதம் என்பது சாதி, தீண்டாமை ஆகியவற்றை மட்டும் கொண்டதல்ல என்பதாகும்.

ஏன் இந்து மதத்தில் மட்டும்தான் இது போன்ற வர்க்கப் பிரிவுகள், அதன் காரணமாகத் தோன்றிய அடக்குமுறைகள், ஆணாதிக்கம் ஆகியவை இருந்தனவா? பிற மதங்களில்  இவை இருந்ததில்லையா? எதற்காக இந்து மதத்தின் இந்த ஒரு  கோணத்தைப் பெரிதுபடுத்தி  இதுதான் இந்துமதம் என்பது போன்ற கருத்தைப்  பாடமாக வைக்க வேண்டும்?  என்பது  போன்ற கேள்விகளை அடுக்கி, முடிவாக நடுநிலைப்பள்ளி அளவில் (6-7 ஆம்) வகுப்புப் பாடங்களுக்கு இது போன்ற தகவல்கள் பொருத்தமுமல்ல, அவசியமும் கிடையாது  என்ற   கருத்தையும்  தெரிவித்தார்கள்.

குறிப்பாக அவர்கள் வர்ணாசிரமத் தர்மத்தை அறிமுகப்படுத்த விரும்புவது, இந்துமதத்தின் அடிப்படையில் இருந்த இது போன்ற பிரிவுகள் சமூகத்தினர் அவரவர் கடமையைச் செய்ய வழிகாட்டுவதன் மூலம் சீரான ஒரு வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதாகும். அத்துடன் சாதிப்பிரிவினை, அதன் விளைவான உயர்வு தாழ்வு கருத்தியல்கள் இந்தியாவின் இந்து மதத்தினரால் மட்டும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தியப்பகுதியில் வாழும் அனைத்து மதத்தினரிடமும் இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது. ‘தலித்’ என்ற சொல் தற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அது தொன்மையான இந்துமதத்தின் சாரம் அல்ல.  அது பற்றிய குறிப்பு பாடப்புத்தகங்களில் இடம் பெறுவது வரலாற்று நோக்கில் பிழையானது என்பதும் இவர்களது கருத்து.

இதில் வேடிக்கை என்னவென்றால் வலதுசாரிகள் மிகத்தீவிரமாக இந்துமதத்தின் சாதிப்பிரச்சினையைப் பாடத்திட்டத்தில்  இடம்பெறக்கூடாது என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்த அதே வேளையில், உலகின் மறுபக்கத்தில், இந்திய மண்ணில் சாதிப்பிரிவினைக் கொடுமைகள் தொடர்ந்து  அரங்கேறிய வண்ணம் இருந்தது. இந்தியாவில் தலித் பிரிவு மாணவரான ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் ரோஹித் வெமுலா தனது வருங்காலக் கனவுகள் கருகியதால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடிவிட்டு  தற்கொலை செய்து கொண்டார். கலப்பு மணம் செய்து கொண்ட உடுமலை கௌசல்யாவின் கணவர் சங்கர் பட்டப்பகலில் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டார். தற்கொலை, கொலைக்குப் பலியான இருவாலிபர்களும் உயிரிழந்த காரணம் அவர்கள் தலித் சமூகத்தில் பிறந்ததால் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாக இருக்கும் பொழுது, அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பாடத்தில் இந்துமதத்தினரால் கடைப்பிடிக்கப்படும்  சாதிப்பிரிவுகள், தலித் வகுப்பினரிடம் நடத்தப்படும் அடக்குமுறைகள் யாவையும் நீக்கும்படி வலதுசாரிகள் கலிபோர்னியாவின் கல்வித் திட்டத்திற்கான கலந்தாய்வில் பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர்.

இந்தியாவில் வலதுசாரி இந்துத்துவா காவியினர் இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் குஜராத், கர்நாடகா மாநிலப் பாடநூல்களில் குளறுபடி செய்து வருவதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் அதனை நடைமுறைப்படுத்த விரும்பிய நிலைதான் இது. இதையொட்டி  அமெரிக்க இந்தியர்கள் இருபிரிவினராகப் பிரிந்து விவாதங்கள் தொடர்ந்தன.   வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்களைக் கொண்ட குழுவினர்  (Hindu American Foundation – HAF;   Hindu Education Foundation – HEF;  Uberoi Foundation – UF; and the Dharma Civilization Foundation – DCF) செல்வாக்குள்ள பிரிவினர். இவர்கள் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய மாயையை முன் வைக்க முயன்றனர். இவர்கள் இந்திய  இந்துத்துவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.

இந்தப் பழமைவாதிகளின் வாதங்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்பியவர்கள் மதச்சார்பற்றவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், பல்கலைக்கழக  ஆய்வாளர்கள் எனப் பலவகை பின்னணிகளைக் கொண்டவர்கள். இவர்களில் பல்வேறு 24 இந்தியப் பிரிவினர் (The South Asian Histories for All Coalition  – SAHFA; http://www.southasianhistoriesforall.org/)  ஒருங்கிணைந்தனர். இவர்கள் இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் அடிப்படையில் ‘சாதி’ என்ற கருத்தாக்கத்தை இந்திய  வரலாற்றில் இருந்து மறைக்க முயல்வதைச் சுட்டிக்காட்டவும் விவாதம் சூடு பிடித்தது. இந்தியா பற்றிய இந்த விவாதம் அமெரிக்கர்கள் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்துத்துவா ஆதரவு பிரிவினர் மிகத் தீவிரமாகப் போராட்டத்தைச் சமூக வலைத்தளம் மூலம் பரப்புவது; இந்துமதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பாடத்தில் வைத்தால் பிறமாணவர்கள் அக்கருத்துக்களைப் பொதுமைப்படுத்தி எங்களை அவமானப்படுத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பள்ளி மாணவர்களை அழைத்துப்  புலம்ப வைப்பது என்ற முறைகளைக் கையாண்டதுடன், பாடாதிட்டக்குழுவினரை அவமதிக்கும் வகையிலும் தங்கள் வாதங்களை வைத்தனர். இதனைப் பாடத்திட்டக்  குழுவின் உறுப்பினர் ஒருவரும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் ‘தலித்’ என்ற கருத்துக்கு ஆதரவு தருபவர்களை, இந்துமதத்தின் வகுப்பு வாத நம்பிக்கையால் தலித்துகள் மீது நிகழும் ஒடுக்குமுறையைப் பற்றிக் குறிப்பிடுபவர்களை இந்துமதத்தை அழிக்க நினைக்கும் வேற்றுமதத்தினர் என்றோ, அல்லது கிறித்துவ மத போதகர்கள் என்றோ, அல்லது அவர்கள்  கிறித்துவ  மதத்தின் கைக்கூலிகள் என்றோ, அல்லது இனவாதம் பேசுபவர்கள் என்றோ, இந்துக்களை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவர் என்றோ விதம் விதமாகத் தங்கள் மனம் போனபடி குறிப்பிட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கவும் தயங்கவில்லை.

இரு பிரிவுகளின் வாதங்களையும் கருத்தூன்றிக் கவனித்த கலிபோர்னியாவின் பாடத்திட்டக் குழுவினர், வரலாற்றைப் பற்றிப் பலரும் பற்பலக் கோணங்களை முன் வைக்கலாம், ஆனால் பாடத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்கு உண்மையான வரலாற்றை அறியத் தருவது  மட்டுமே என்று தங்கள் நிலையை வலியுறுத்தினர். முடிவாக, தெற்காசியா என்று குறிப்பதைக் கைவிட்டு ‘இந்தியா’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டனர்.  மேலும், சாதி உயர்வு தாழ்வினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளின் தோற்றம் இந்துமதத்தில் வேரூன்றிய ஒரு  கருத்தாக்கம் என்பதால் ‘தலித்’ என்ற சொல், இந்தியாவில் நிலவும் சாதிப் பிரிவினைகள், இந்துமதத்தின் வர்க்கப் பிரிவுகளைப் பற்றிய செய்திகள், அதனால் இந்தியச் சமூகம் எதிர்கொண்ட விளைவுகள் போன்ற வரலாற்றுச் செய்திகள் பாடத்தில் இருந்து  நீக்கப்பட மாட்டாது என்றும் தங்கள் தீர்ப்பை, மே 19, 2016 அன்று முடிவாக வெளியிட்டனர்.

அடுத்த கல்வியாண்டில், வரும் செப்டெம்பரில் பள்ளிகள் துவங்கும் பொழுது, கலிபோர்னியா பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் இந்திய வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களின் நூல்கள் கலிபோர்னியா கல்வித் திட்டத்தின் இந்த முடிவின் அடிப்படையிலேயே வெளியிடப்படும். சாதி பற்றிய குறிப்புக்களை மறைக்கப்பட வேண்டும் என முயன்ற இந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கைகள் இதனால் படுதோல்வியடைந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா மாநிலக் கல்வித்திட்டத்தில் இந்தியாவைப் பற்றிய கருத்துக்களில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் மாற்றம் வேண்டுவது இது முதல்முறையும் அல்ல.  பத்தாண்டுகளுக்கு முன்னரே (2006 இல்) பாடநூல்களில்  இந்தியக் கலாச்சாரம் பற்றிக் கற்பிக்கும் பாடத்தில் இந்துமதக் கலாச்சாரத்தை மட்டுமே பெரும்பான்மையாகக் குறிப்பிடவேண்டும் என்றும், இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பொழுது இந்து மதத்திற்கு முதன்மை நிலை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன, அத்துடன் அவை பாடத்திட்டக் குழுவால் புறக்கணிக்கப்பட்டு, அக்கோரிக்கைகள் நிறைவேறாமலும் போயுள்ளன. மேலும், இம்முறையோடு இந்தப் பிரச்சினை முடியப்போவதும் கிடையாது.

ஒவ்வொரு ஆறாண்டுகளுக்கும் கலிபோர்னியா மாநில அரசின் கல்வித்துறை பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பொழுதும் மீண்டும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், அவர்களில் வலதுசாரிகள் உட்பட தாங்கள் விரும்பும் மாற்றங்களை இந்தியக்  கலாச்சாரப் பாடங்களில் பரிந்துரைக்க  முயல்வர். அமெரிக்க இந்துத்துவா குழுவினர் தாங்கள் விரும்பிய மாற்றங்களை டெக்சாஸ் மாநிலம், ஃபுளோரிடா மற்றும் விர்ஜீனியா மாநிலங்களிலும் ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளனர். அதைப்பற்றிய தகவல் அவர்களது (hafsite.org) தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது (http://www.hafsite.org/sites/default/files/Texas%20Ed%20Infograph.jpg). இருப்பினும், கலிபோர்னியாவில் அவர்களது  முயற்சி (“இம்முறை”) தோல்வி கண்டுள்ளது.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக; அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றிய கல்வியில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழகத்தில் பெரும்பான்மையினர் அறிய வழியில்லாது போனது என்பது வருத்தம் தரும் ஓர் உண்மை. ” * வினவு”,  ” ** விடுதலை” ஆகிய சீர்திருத்தக் கருத்துக்களுக்காக நடத்தப்பெறும் பத்திரிக்கைகள் தவிர மற்ற  எந்தத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இந்த நிகழ்வைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்பது இணையத் தேடலின் மூலம் தெரிய வருகிறது.



சான்றுகள்:
[1]
Erasing Caste: The Battle Over California Textbooks and Caste Apartheid, May 3, 2016, The Huffington Post, http://www.huffingtonpost.com/thenmozhi-soundararajan/erasing-caste-the-battle_b_9817862.html

[2]
Debate Erupts in California Over Curriculum on India’s History, May 4, 2016, The New York Times, http://www.nytimes.com/2016/05/06/us/debate-erupts-over-californias-india-history-curriculum.html?

[3]
South Asian Community Debates 'South Asia,' 'India' Ahead of Textbook Updates, May 16, 2016, NBC News, http://www.nbcnews.com/news/asian-america/south-asian-community-debates-south-asia-india-ahead-textbook-updates-n570671

[4]
California Curriculum Body Acknowledges Reality of Caste System; Hindu American Foundation concedes on word “Dalit”, May 19, 2016, South Asian Histories For All, http://www.southasianhistoriesforall.org/

[5]
Caste Won’t Be Erased from California Textbooks, Says Committee, May 21, 2016, The Wire, http://thewire.in/2016/05/21/caste-wont-be-erased-from-california-textbooks-says-committee-37669/

[6]
Viewpoint: Why Hindu groups are against California textbook change, May 27, 2016, BBC News, http://www.bbc.com/news/world-asia-india-36376110


* கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
http://www.vinavu.com/2016/05/26/rss-deny-caste-discrimination-california-textbooks/

** அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 6, 7ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு பகுதி நீக்கிட முயன்ற இந்துத்துவா சக்திகளுக்குப் படுதோல்வி!
http://viduthalai.in/headline/122778--6-7-.html


நன்றி:  சிறகு
ஜூன்  11, 2016


#அமெரிக்கா, #கல்வி, #சிறகு, #வரலாறு, #Themozhi


Tuesday, May 17, 2016

வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்

வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்


பண்டைக்காலத்தில் “வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாக மேற்குக் கடற்கரையில் தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை, கரூர், திருச்சி நகர்கள் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது என நாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘இராஜகேசரி பெருவழி’ எனவும் அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய வணிகப் பெருவழியே இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″ (NH 67- National Highway 67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சேர நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையே அமைந்த இந்த வணிகப் பெருவழி போன்றே, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக இருந்திருக்கிறது என “தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்” அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது இக்கால ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழியாகக் கொல்லம் வரை அமைந்திருக்கக்கூடிய “தேசிய நெடுஞ்சாலை 744″ (NH – 744)யின் ஒரு பகுதியின் முந்தைய வடிவமாகவும் இருந்திருக்கக் கூடும். இது இக்காலத்தில் தென்காசியையும் கொல்லத்தையும் செங்கோட்டை கணவாய் வழி இணைக்கிறது. இக்கணவாய் பாலக்காட்டுக் கணவாய் போன்ற அகண்ட கணவாயன்று, குறுகிய ஒன்றே. தொடர்ச்சியாக அமைந்து, கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பைத் துண்டிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவை அருகில் அமைந்த பாலக்காட்டுக் கணவாய், தென்காசி அருகில் செங்கோட்டைக் கணவாய் ஆகியவற்றைத் தவிர்த்து தெற்கே தென்குமரிக்கரையை ஒட்டி ஆரல்வாய் மொழிக் கணவாயும் அமைந்துள்ளது. இந்த மூன்று கணவாய்களும் பண்டைக்காலத்திலும் மேற்குக் கடற்கரையை அடைய உதவும் வணிகப் பெருவழியாகவே அமைய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.

தொல்லியல் சான்றுகள்:


பண்டைய வணிகப் பெருவழிகள் இருந்ததையும் அவற்றின் அமைவிடங்களையும், அந்த வணிகப் பெருவழிகளில் இருந்த ஊர்களையும் சான்றுகளுடன் உறுதிப்படுத்த உதவுவது, அத்தடங்களிலும் ஊர்களிலும் அகழாய்வில் கிடைத்த அக்கால நாணயங்கள், வணிகப் பொருட்கள் போன்ற தடயங்களே.

கோயம்புத்தூர் அருகில், பண்டைய வணிகப் பெருவழியில் அமைந்த, வெள்ளலூர் (போத்தனூருக்குச் சமீபத்தில் இருப்பது) என்ற ஊரில் 1843 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1891, 1931 மற்றும் 1939 ஆண்டுகளிலும் அகழ்வாராய்ச்சியின் பொழுது உரோம தேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்து வருவதை “தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி” குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்தில் கொடுமணம், ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ என்று அரிசில்கிழாரால் குறிப்பிடப்பட்டது “கொடுமணல்” என்ற ஊர் நொய்யல் ஆற்றின் கரையின் தென்பகுதியில் அமைந்த ஓர் ஊர். அரிய கல்மணிகள் உற்பத்தி செய்வதில் புகழ் பெற்று சங்க காலத்தில் சிறந்த நகரமாகத் திகழ்ந்துள்ள கொடுமணல் ஈரோட்டில் இருந்து தென்மேற்கில் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் இவ்வூர் சிறப்புற்றிருந்ததற்குக் காரணம், வணிகப் பெருவழியில் அமைந்ததே என்பது “தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ்” அவர்களது கருத்து. கொடுமணல் அமைந்திருப்பது சேரநாட்டையும் சோழ நாட்டின் பூம்புகாரையும் இணைக்கும் முதன்மை வணிகப் பெருவழியிலாகும்.

இது போன்றே, வடக்கு நோக்கிச் செல்லும் பெருவழி ஒன்று, விசயமங்கலம், சத்தியமங்கலம் கடந்து பவானி ஆற்றின் துணை ஆறான மோயாற்றுப் பள்ளத்தாக்கு வழியாக இன்று மைசூர் என அழைக்கப்படும் எருமையூர் என்ற ஊரைச் சென்றடைகிறது என்றும்; தெற்கே செல்லும் பெருவழியொன்று, காங்கேயம், தாராபுரம், அயிரைமலை, பழநி வழியாக மதுரையை அடைகிறது எனவும்   மேலும் சில வணிகப் பெருவழிகளைப் பற்றியும் தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

மதுரையிலிருந்து, கீழ்குயில்குடி, முத்துப்பட்டி பெருமாள்மலை, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் காணப்படும் பெருவழியொன்று மதுரையில் துவங்கி கம்பம் பள்ளத்தாக்கு வரை அமைந்திருந்ததை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மேலும் கம்பம் பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இது குற்றாலம், தென்காசி, செங்கோட்டைக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரையை அடைய உதவிய வணிகப் பெருவழியாகும்.

புதுச்சேரி அருகிலுள்ள அரிக்கமேடு, இராமநாதபுரத்தின் அழகன்குளம் ஆகிய கடற்கரையோரப் பட்டினங்களும் அகழாய்வில் கிடைத்த தடயங்கள் மூலம் வணிகத்தில் பங்குபெற்ற இடங்களாகத் தெரியவருகின்றன. இந்த வணிகப் பெருவழிகள் வழியாக இந்தியாவின் மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பருத்தி ஆடைகள், முத்துகள், தந்தம், சந்தனம், விலையுயர்ந்த மணிகள், மரகதக் கற்கள் போன்றவை கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்குக் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதும், அவர்களிடம் இருந்து பொன்னும், வெள்ளியும், மதுவும் இறக்குமதி செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் அந்நாடுகளின் நாணயங்களும் அகழாய்வுகளில் கிடைத்து வருகின்றன. “தி பெரிப்லஸ் ஆஃப் தி எரித்ரயென் சீ ” (Periplus of the Erythraean Sea) என்ற கி.பி 70 கால வாக்கில் எழுதப்பட்ட கிரேக்க நூலும் யவனர்கள் இந்தியாவுடன் வணிகம் செய்த பாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது.

இலக்கியச் சான்றுகள்:


காங்கேயத்தில் இருந்து பழநி வழியாக மதுரை செல்லும் வணிகப் பெருவழி பற்றிய சான்றை பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்கள் அகநானூற்றுப் பாடலில் இருந்து எடுத்துக் காட்டுகிறார். பழநி வழியே செல்லும் நெடுவழி வணிகர்களைக் கொள்ளையடிக்க வரும் மழவர்களை நெடுவேள் ஆவி விரட்டியடித்தான் என்பது,

“வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடு வேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண் …”
(அகநானூறு – 1, மாமூலனார்)

என்ற இப்பாடலில் காணப்படுகிறது என்றும், பொதினி என்பது இன்றைய பழனி அருகில் உள்ள பொருந்தல் என்பதும் (பொருந்தல் என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் அது வணிகப் பெருநகராக இருந்திருக்கக்கூடிய சான்றுகள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன என்பதும்) அவர் கூறும் தகவல்.

அவ்வாறே, அகநானூறு 25 ஆம் பாடலில் பொருளீட்டும் பொருட்டு தலைவன் செல்லும் வழியைக் குறிப்பிடும் பொழுது அவன் பொதிகை மலைத் தலைவன் திதியன் ஆளும் பகுதி வழி செல்வதைச் சுட்டிக் காட்டுகிறார்.

“… பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன்
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே”
(அகநானூறு – 25, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்)

குற்றால அருவிகள் பொதிகை மலையில் இருக்கின்றன. எனவே, தலைவன் செல்லும் அவ்வழியில் இசைக்கருவிகள் தரும் இசைபோன்ற ஒலியுடன் வீழும் “கல்மிசை அருவியை” குற்றால அருவியாக இருக்கலாம் என்றும், தலைவன் ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழி செல்லும் வணிகப் பெருவழியில் பயணம் செல்கிறான் எனக் கருதலாம் என்றும் கூறுகிறார்.

மேலும், அகநானூறு – 47 ஆம் பாடலில் பொருளீட்டச் செல்லும் தலைவன் பயணிக்கும் வழியை, பாடல் காட்டும் சுற்றுச்சூழல் குறிப்புகளான,

“…ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு
(அகநானூறு – 47, ஆலம்பேரிச் சாத்தனார்)

ஆகியவற்றின் அடிப்படையில் தலைவன் செழித்துவளர்ந்த மூங்கில் காடுகளின் நடுவே சென்றிருக்கிறான் என்பது மேற்கு மலைத் தொடரைக் குறிக்கும் என்றும் எனவே தலைவன் செல்லும் வழியும் செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்லும் வணிகப் பெருவழியாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார் பேராசிரியர் ப. பாண்டியராஜா.

வாணிகச் சாத்தும் அய்யனாரும்:
பண்டைத் தமிழகம் வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு என்ற நூலில் “மயிலை, சீனி. வேங்கடசாமி” அவர்கள், கடைச் சங்க காலத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) ‘சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்பதை ஆராய்ந்து, பண்டைய தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றி விளக்குவார். அதில், சிலப்பதிகார நாயகன் கோவலனின் தந்தை ‘மாசாத்துவன்’ என்பவரையும், கோவலனின் மனைவியான கண்ணகியின் தந்தை ‘மாநாய்கன்’ என்பவரையும் குறிப்பிட்டு அவர்களின் பெயர்களுக்கு விளக்கமும் அளித்திருப்பார்.

கோவலனுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து – வாணிகச் சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அது போன்றே, பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது (நாவிகர் – கப்பலையுடையவர். நாவாய் – கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. ஆகையால், கண்ணகியின் தந்தை ஒரு மாநாவிகன் (மாநாய்கன்) எனக் குறிப்பிட்டு, வணிகர்களான மாசாத்துவனும், மாநாய்கனும் அவ்வாறு அழைக்கப்பட்ட காரணத்தையும் சீனி. வேங்கடசாமி விளக்குவார்.

திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அய்யனார் சிற்பம் ஒன்று சென்ற ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2, 2015 நாளிதழ் செய்தி) “திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல், வரலாற்று ஆய்வு மையத்தின்” தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும் இதே செய்தி மீண்டும் குறிப்பிடப்பட்டது. தொல்லியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் ரவிக்குமார் அவர்கள், “பண்டைய காலத்தில் தரை வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் சாத்துவர் என்றும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். பண்டைய காலத்தில் வணிகம் செய்த வணிகர்கள் தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர். அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்யும் பெரு வழிகளில் அய்யனார் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில் தமிழகத்தின் பண்டைய பெருவழிகளில் முக்கியமானது முசிறியில் இருந்து சோழர் துறைமுகத் தலைநகரான பூம்புகார் வரை உள்ள வழியாகும். அதாவது பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கேயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை இராசகேசரிப் பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த வழித் தடத்தில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

வரைபடத்தில் புவியிடக் குறியீடுகள்:
இச்செய்தியில் காணும் தகவல்படி தமிழகத்தில் சாத்தன் மற்றும் அய்யனார் ஆகியவற்றின் தொடர்பு எவ்வாறு அமைந்திருக்கக் கூடும் என்பதை அறியும் பொருட்டு மேற்கொண்ட ஒரு முயற்சியே இக்கட்டுரை. பண்டைய அய்யனார் சிலைகளின் இருப்பிடங்களும், சாத்தன் என்ற பெயரில் தொடங்கும் ஊர்களும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் காணப்படக்கூடும் என்ற தேடல் துவங்கியது.

1. செய்தித்தாள்களில் கிடைத்த “பண்டைய அய்யனார்” சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் குறிப்புகள் சேகரிக்கப்பட்டன.

2. ‘சாத்தன்’ என்ற பெயர் இடம்பெற்ற ஊர்களின் இருப்பிடங்களைச் சேகரிக்க இந்திய “அஞ்சலக எண்” (Pincode) தரவுகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான தளத்தில் இருந்து பெறப்பட்டன. Pincode Search – All India Pincode Directory என்ற தளத்தில் (http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx) இருந்து ஊர்களின் பெயர்களும் அவற்றின் அஞ்சலக எண்களும் சேகரிக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டன.

இப்பட்டியலில் உள்ள ஊர்களில் ‘சாத்தன்’ என்ற பெயருடன் தொடர்புடையவைதான் என்று உறுதியாகத் தெரிந்த ஊர்கள் மட்டும் (சாத்தனூர், சாத்தமங்கலம், சாத்தன்குளம் போன்றவை) தேர்ந்தெடுக்கப்பட்டன. முழுப்பட்டியலும் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிரீதரன் அவர்களால் பார்வையிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊர்கள் ‘சாத்தன்’ என்ற சொல்லுடன் தொடர்புடையவைதான் என உறுதியளிக்கப்பட்டது. அய்யனார் சிலைகள் கிடைத்த இடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. சாத்தன் என்ற பெயருடன் 44 இடங்களும் கிடைத்தன.

1. இந்த இடங்கள் யாவும் ‘கூகிள் மேப்’ (Google Map) வரைபடத் தளத்தில் குறிக்கப்பட்டன. அதனால், அஞ்சலக எண் தரவுகளில் இடம்பெறாத சாத்தன் என்ற ஊர்கள் இடம் பெற வாய்ப்பிருக்கவில்லை

2. இருப்பினும், கூகுள் வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும்பொழுது மேலும் ‘சாத்தன்’ என்ற பெயருடன் அகப்பட்ட மற்றும் சில ஊர்களும் குறிக்கப்பட்டன

3. கூகுள் வரைபடத்தில் வணிகப் பெருவழிகள் என தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி அவர்களும், பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்களும்
(a.) குறிப்பிட்ட இடங்களும், (b.) வணிகவழித் தடங்களும், (c.) அந்த வரைபடங்களில் கொடுக்கப்பட்ட சில முக்கியமான வணிக ஊர்களும், கணவாய்களும் (சிவப்பு நட்சத்திரங்கள்), துறைமுகங்களும் (பச்சை வட்டங்கள்), அகழாய்வில் வணிக ஊராக அடையாளம் காணப்பட்ட இடங்களும் அடிப்படைக் குறிப்புகளாகக் (basic reference points) குறிக்கப்பட்டன





இடங்களும் தடங்களும் குறிக்கப்பட்ட பிறகு கூகுள் வரைபடம் வழி அறிந்து கொண்டவை:
[ஊர்களின் பட்டியலையும், கூகுள் வரைபடத்தையும் பார்வையிடத் தேவையான சுட்டிகள் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன]
1. சாத்தன் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. தற்கால ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஓரிரு ஊர்கள் அப்பெயரில் இருந்தாலும், சாத்தன் என்பது தமிழ் நாட்டிற்கே உரியது (புத்தரைக் குறிக்கும் ‘சாஸ்தா’ என்பது தமிழில் ‘சாத்தன்’ என வழங்கப்பட்டு பின்னர் புத்தமதத் தொடர்பை அச்சொல் இழந்துவிட்டது என்றும், அக்காலத்தின் பெளத்த சாஸ்தாவின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் பிற்காலத்தில், ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்று மாறிவிட்டன என்பதும்   மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கருத்து. கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்று சங்க நூல்களினின்றும் தெரியவருவதாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார், அதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சான்றுகளாகக் காட்டுகிறார்)

2. மத்திய அரசு வழங்கும் ‘அஞ்சலக எண் தரவுகளில்’ இன்றைய கேரளா பகுதியில் ‘சாத்தன்’ என்ற பெயரில் எந்த ஊரும் கிடைக்கவில்லை. வடமாநிலங்களில் கிடைக்கும் சில ஊர்களின் பெயர்களில் தற்செயலான ஒலிப்பு ஒற்றுமை மட்டுமே இருக்கலாம் என்று அந்த ஊர்கள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை (தவிர்க்கப்பட்ட அந்த ஊர்களின் பெயர்களும், அவற்றின் அஞ்சலக எண்களுடன் பட்டியலில் பார்வைக்குக் கிடைக்கும்)

3. இவ்வாறு குறிக்கப்பட்ட இடங்கள் யாவும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளின் அருகாமையில் அமைந்துள்ளன.

4. அத்துடன், பண்டைய வணிகப் பெருவழிகளாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறித்த தடங்களின் வழியிலேயும் அமைந்துள்ளதும் தெரிய வருகிறது.

5. குறிக்கப்பட்ட இடங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வரையப்பட்ட கோடுகள், இக்காலத் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியிலும் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

வரைபடத்தில் இடங்களைக் குறிப்பதன் மூலம் (Geospatial data – relating to or denoting data that is associated with a particular location) ஒரு செய்தியைப் பற்றிய புதிய கோணம் கிடைக்க வாய்ப்புள்ளது. புவியிடக் குறியீடுகள் மூலம் நம் கவனத்திற்கு வந்திராத சில முக்கியத் தகவலும் பார்வைக்குக் கிடைக்கும். இவ்வாறு அறியும் முறை 1854 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் காலரா நோய் பரவிய பொழுது, நோய் பரவிய இடங்களை வரைபடத்தில் (epidemic on maps) குறிக்கும்பொழுது அறியப்பட்டது. ஜான் ஸ்னோ (Dr. John Snow) என்ற மருத்துவரே நோயறியும் வரைபட முறையை முதன் முதலில் மருத்துவத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர். காலரா நோயாளிகளின் இருப்பிடத்தை லண்டன் மாநகர் வரைபடத்தில் குறிக்கத் தொடங்கிய பொழுது நோய் அதிகம் பரவிய இடம் ஒரு குறிப்பிட்ட குடிநீர்க் குழாய் வழித்தடத்தில் இருப்பதும், குடிநீர் வழி நோய் பரவுவதும் தெரிய வந்து அதற்கு மாற்று வழி கண்டவுடன் நோய் பரவுவது தடுக்கப்பட்டது.

எனவே, அது போலவே தமிழக வரைபடத்தில் ‘சாத்தன்’ என்ற ஊர்கள் அமைந்துள்ள இடங்கள், வணிகப் பெருவழிகளில் அமைந்திருந்த இடத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றனவா? பயணத்தின் பொழுது வணிகர்கள் அவ்வூர்களைத் தங்குமிடங்களாகப் பயன்படுத்த, அவர்களின் தேவைக்கேற்பத் தக்க வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தனவா? அல்லது இந்த அமைவிட அமைப்பு தற்செயலாக அமைந்துவிட்ட ஓர் ஒற்றுமையா? என்பதை மேலும் பல வரலாற்று ஆய்வுகளும் தடயங்களும் இனி வரும் காலத்தில் காட்டக் கூடும். இக்கேள்விகளுக்கு எதிர்காலத்தில் பதில் கிடைக்கக்கூடும்.

______________________________________________________________________

Access to provided information:
Pincode Search – All India Pincode Directory
http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx

Data:
https://docs.google.com/spreadsheets/d/1Uh9Wf8l7xlg6Aii1-PZdBOIzar6C286NedegalRrBP8/edit?usp=sharing

Map:
https://drive.google.com/open?id=1_-IcmZ8k9MAJL26oBqLo2HSzdk4&usp=sharing

______________________________________________________________________

References:
[1] Of commerce and Cupid
Dr. R. Nagaswamy [Dr. R. Nagaswamy, then Director, Tamil Nadu State Department of Archaeology]
January 18, 2013, The Hindu
http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/of-commerce-and-cupid/article4315984.ece
Map: http://www.thehindu.com/multimedia/dynamic/01333/18FR_VELLALUR_eps_1333230g.jpg

[2] Digging up the past
T.S. Subramanian
Volume 29 – Issue 15: Jul. 28-Aug. 10, 2012, Frontline
http://www.frontline.in/static/html/fl2915/stories/20120810291507000.htm

[3] Akananuru – Song 1, 25 & Song 47
Dr. P.Pandiyaraja
http://sangacholai.in/akam01.html
http://sangacholai.in/akam25.html
http://sangacholai.in/akam47.html
Map: http://sangacholai.in/akam01-3.jpg

[4] Travelling down the ages
Shankar Vanavarayar
Dec 03, 2005, The Hindu
http://www.thehindu.com/mp/2005/12/03/stories/2005120302860200.htm

[5] Aiyanar sculpture with Vattezhuthu inscriptions found near Koduvai
http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiyanar-sculpture-with-vattezhuthu-inscriptions-found-near-koduvai/article7935070.ece
8ம் நூற்றாண்டு அய்யனார் சிலை:திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=1400770
http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2015/12/02/1200-ஆண்டுகள்-பழைமையான-அய்யனார/article3157265.ece

[6] பண்டைத் தமிழகம்: வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு, வீ. அரசு
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=81

[7] பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=13

[8] வரலாற்றுக்காலம் – 1. கொடுமணலும் மரக்காணமும்
ச. செல்வராஜ், தொல்லியல் துறை, மண்டல உதவி இயக்குநர், பணி ஓய்வு
http://www.dinamani.com/tholliyalmani/pudhaiyunda-thamizhagam/2016/01/22/வரலாற்றுக்-காலம்—1.-கொடுமணலு/article3238036.ece

Additional Readings:
[1] Book Review: Merchants of Tamilakam
BY Sarath Ramakrishnan, November 25, 2013
The Merchants of Tamilakam: Pioneers of International Trade
by Kanakalatha Mukund
http://centreright.in/2013/11/book-review-merchants-of-tamilakam/#.Vzfa1VQrLIU

[2] Trade through the Palghat gap
http://historicalleys.blogspot.com/2009/06/trade-through-palghat-gap.html

[3] Use of GIS Mapping as a Public Health Tool—From Cholera to Cancer
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4089751/



ஒலிப்பதிவாக இக்கட்டுரை : 



நன்றி : சிறகு - மே 17, 2016
https://siragu.com/வாணிகச்-சாத்தும்-தமிழகத்/

#சிறகு,  #தொல்லியல், #வரலாறு, #இலக்கியம், #கல்வெட்டு,  #Themozhi     

Monday, May 2, 2016

கலைச்சொற்கள் உருவாக்குவோம்

கலைச்சொற்கள் உருவாக்குவோம்


கலைச்சொல் துறையில் ஆங்கிலம் எவ்வளவு பெரிய மொழி அதனுடன் தமிழ் போட்டி போட முடியுமா? இது நடக்கும் காரியமா? என்று நம்மவர்கள் யாரேனும் மலைத்துவிடுவதாகச் சொன்னால்....

இப்படி யாரும் மலைத்துப் போவது என்பது எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
இவர்கள் யாவரும்  ஆங்கிலமும் சரி, அல்லதும் தமிழும் சரி எந்த ஒரு மொழியையும்  ஒரு குறிப்பிட்ட தினசரி நடவடிக்கைத் தேவைக்கு மேல் அறிந்தவர்கள் கிடையாது என்பதும் தெளிவாகிறது.

அதாவது அந்தந்த மொழிகளில் உள்ள நாளிதழ்களை எடுத்துப் படிப்பதில் ஒரு 95% வரை படித்துப்  புரிந்து கொள்ளும் மொழி அறிவு கொண்டவர்கள். அவ்வளவுதான்.

பொதுவாகவே எந்த ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்பவர்களுக்குத் தினசரி புழக்கத்தில் பயன்படும் ஒரு சில ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
இவற்றை வைத்துக் கொண்டு.....
1. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை எப்படிக் குறிக்க வேண்டும்,
2. தன்னிலை, முன்னிலை, படர்க்கையில் அம்மொழியைச்சொற்கள்  மாறும் தன்மை
3. ஒருமை மற்றும் பன்மையில் சொற்கள் பயன்படுத்தப்படும் விதம்
4.ஆண், பெண், பலவின்பால்  ... பொதுமை ... ஆகியவற்றில் குறிப்பிட்ட அந்த ஒரு மொழி அமைந்துள்ள இலக்கணம் மற்றும்
5. மொழியின் கலாச்சாரத்தில் (ஒழுகலாறு) பின்னணியில் கொண்ட சொற்கள் இவை மட்டுமே ஒரு புது மொழி அறிய கற்றுக் கொடுக்கப்படும்.

இந்த அறிவை வைத்துக் கொண்டு மொழிகளைப் பற்றிக் கருத்துரைப்பவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

சாதாரணமாக  உயர்நிலைப்பள்ளி அளவில் உயிரியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல் படித்தவர்களுக்கோ
அல்லது உயர்கல்வி அளவிற்குச்  சட்டம் வரை பயின்றவர்களுக்கோ
தெளிவாகவே தெரியும் .... ஆங்கிலத்தில் இருக்கும் சொற்கள் பெரும்பான்மையும் பிற மொழிகளிடம் இருந்து கடனாக வாங்கப்பட்டவை என்று.

அது புழக்கத்தில் இருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலுமே;
அல்லது மிகவும் நுட்பம் நிறைந்த எந்தத்துறை சார்ந்த கலைச்சொற்களாக இருந்தாலுமே; 
ஆங்கிலம் சொற்களைத் தயக்கமின்றிப் பிறமொழிச் சொற்களை எடுத்தாண்டு  தனது பயன்பாட்டை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. அதன் பரவலுக்கு "அதுவும்" ஒரு காரணம்.

சில சொற்கள் மொழியின் பயன்பாட்டில் ஓர் அடிப்படையைக் குறிக்க வந்துவிட்டால் பிறகு அது மொழியில் ஆழ வேர் ஊன்றிவிடும். 
அதனை மாற்ற இயலாதும் போய் விடும். அதற்குத் துவக்கம் சரியாக இருக்கத்தேவை.

ஆனால் அந்தத் துவக்கமோ சொல் பயன்பாட்டிற்கு வந்த காலத்தின் தாக்கத்தில் இருப்பது.

எடுத்துக்காட்டாக  "மின்" என்ற சொல்லின் அடிப்படை.  அது எதைத்தான் குறிக்கிறது என்பது புரிந்து கொள்ள உதவினால் அதனை எடுத்தாள்வதில் தவறில்லை.

இப்பொழுது 'புகைவண்டி' என்பதற்குப் பதில் 'தொடர்வண்டி' என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது.

மேலும் தமிழில் யானையைக் குறிக்கவே பற்பலச் சொற்கள் என்று எடுத்துக்காட்டு கொடுக்கும்பொழுது அவை எந்தெந்த கோணத்தில் உருவாகி இருக்கக்கூடும் என்றும், அதற்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கக்கூடும் என்றும், அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்றும்  திரும்பிப் பார்த்தோமானால் ....

காலத்திற்கேற்பப் பயன்பாட்டில் வந்த "புகைவண்டி" என்பதையோ, "புகைப்படம்" என்பதையோ நாம் குறை சொல்ல வழியுமில்லை.

ஒரு பொருட் பன்மொழி என்ற தகுதியை அவற்றிற்கு அளித்துவிடலாம்.

சைக்கிளை ... மிதிவண்டி என்றோ இருசக்கர வண்டி என்றோ சொல்வதால் என்னதான்  குறைந்துவிடும்?

அது ஒரு பொருட் பன்மொழி என்று புரிந்து கொள்ளலாம். 

அறிவியலில் மட்டுமே கலைச்சொல் மாறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பொன் என்பதற்கு, வெள்ளி என்பதற்குப் பற்பல சொற்கள்  தெரிந்தாலும், தங்கம் வெள்ளி என்பவற்றைத் தவிரப் பிற சொற்களைத் தவிர்க்க வேண்டும்.  அது அறிவியலின் விதி.

இலக்கியம் எழுதுவோர் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் எடுத்தாள்வதைத் தவிர்க்க, 'தெசாரஸ்' உதவியுடன் மாற்றுச் சொற்களைத் தேடித் தேடி இடத்திற்குத் தக்கப் பொருள் கொடுக்கும் சரியான சொற்களைப் பயன்படுத்துவது இலக்கிய நடையை உயர்த்தும் செயல், மொழியின் அழகை வெளிப்படுத்தும் செயல் என்ற நோக்கில் செய்வதும் வழக்கமே.

நம் தேவை என்னவென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு மொழியில் ஒன்றைச் சுட்ட பல சொற்கள் உருவானால் அங்கு அதன் பயன்பாடு, துல்லியமாகக் குறிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பது தெளிவு.

சில எஸ்கிமோ பழங்குடியில் snow என்பதைக் குறிக்கப் பற்பல சொற்கள் உள்ளன எனக் கேள்விப்பட்டுள்ளேன். 

புவிநடுக்கோட்டிற்கு அருகே வசிக்கும் தமிழருக்கு அந்தத் தேவை இல்லை. அவ்வாறே, எஸ்கிமோக்களுக்கு யானையைப் பலவாறு குறிக்கும் சொற்களுக்குத் தேவையும் கிடையாது.

ஒரு மொழியின் தேவை, அடுத்தவர் அறிய வேண்டிய செய்தியை அவருக்குக்  கடத்துவது  என்றால், பயன்படுத்தும்  சொற்களில் தெளிவும் தேவை.

இன்றுவரை ஏன் நாம் மேஜை, சாவி, ஜன்னல், கலாச்சாரம், சமூகம், கிருமி, விஷம், விஷயம்  போன்று தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களை விட்டுவிடமுடியாமல் பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.

எத்தனைப்பேருக்கு இவற்றைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களைத் தேடிப்  பயன்படுத்தும் ஆர்வமும், பொறுமையும் உள்ளது?

அல்லது இவற்றிற்கேற்ற ... நம்மிடம் இருக்கும்...தக்கத் தமிழ்ச் சொற்களை நாம்  பயன்படுத்தாத நிலைக்குக் காரணம்தான் என்ன?

போர்த்துக்கீசிய,  சமஸ்கிருதச் சொற்கள் கலந்து பயன்படுத்துவது சரி ...ஆனால் ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் வந்தால் ஏன் நமக்கு எதிர்க்கும் மனப்பான்மை?

ஆங்கிலத்திலேயே இன்றைய தொழில்நுட்பப் பிரிவினர் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் சொற்கள் எவ்வாறு உள்ளன ?

windows... mouse.... monitor ..... இவையாவற்றிற்கும்  வெவ்வேறு பொருளும் உள்ளதல்லவா?

கலைச்சொற்கள் உருவாக்குபவர்கள், ஒருபொருட்பன்மொழி  நோக்கில் இது போன்ற சொற்களைத் தேர்வு செய்யும் முறை பிறமொழிகளின் பயன்பாட்டில் இருப்பதையும் கருத்தில் கொள்ளலாம்.


நன்றி : மின்தமிழ்
மே 2,  2016



#கருத்து, #மின்தமிழ், #Themozhi